செங்கா 41

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்கா எலந்தை மரத்தின் அருகே சென்றாள். கை எட்டும் தூரத்தில் இருந்த சில பழங்களை பறித்து அதியனிடம் தந்தாள். அதியன் அதை கை விரல்களில் உருட்டி பார்த்தான்.

"நல்லாருக்கும் சாப்புடு.." என்றாள் தனது வாயில் ஒரு பழத்தை போட்டுக்கொண்டே.

அதியன் ஒரு பழத்தை உண்டு பார்த்தான். நன்றாகதான் இருந்தது.

இருவரும் கை நிறைய பழங்களை பறித்துக் கொண்டு மேலும் நடந்தனர்.

"நீயும் என்னவென்னவோ பேசுற.. ஆனா எனுக்குதான் பொருந்தா இடத்துல வாழ வர பயமா இருக்கு.." எலந்தை காயை கடித்தபடி சொன்னாள் செங்கா. ஓடையோரம் இருந்த மணலில் தனது பாதத்தை அழுந்த பதித்தபடி நடந்தாள் அவள்.

அவள் காலடியின் அருகிலேயே தனது காலடியையும் பதித்து நடந்த அதியன் "பொருந்தா இடம் எதுன்னு நினைக்கிற.? என் மனசா இல்ல என் வீடா.?" என்றுக் கேட்டான்.

செங்கா யோசித்தாள். "நெசத்தை சொல்லணும்ன்னா இரண்டுமேதான். ஆயிரமாயிரம் பொண்ணுங்களுக்கு மத்தியில நீ ஏன் என் பின்னாடி சுத்தணும்.? இந்த காட்டையும் மலையையும் தாண்டி வந்து நான் எப்படி தாக்கு பிடிப்பேன்.?" என கேட்டவளுக்கு நெஞ்சம் முழுக்க சோகம் நிரம்பியிருந்தது.

நடந்துக் கொண்டிருந்தவளின் கழுத்தில் கை போட்டு நிறுத்தினான் அதியன்.

"நீ என் மேல குருட்டு தனமா நம்பிக்கை வைக்க தேவையில்ல.. நான் உன்னை மனசார நேசிக்கிறேன். உன்னை விட்டுட்டு போய் உன்னை விட சிறப்பா ஒருத்தியை தேட விரும்பல நான். உனக்கு ஓகேவா இருந்தா உன்னை உடனே கல்யாணம் செய்துக்க நான் தயாரா இருக்கேன். உன்னால நிலைச்சி வாழ முடியாத இடம்ன்னு ஏதும் இல்ல.. இந்த காட்டுல வாழ முடிஞ்ச உன்னால நாட்டுல வாழ முடியாதுன்னு சொல்லாத.. எனக்கும் ஒரு வாய்ப்பு கொடு.." என்றான்.

அவன் நெஞ்சில் தன் பின்னந்தலையை சாய்த்தாள் செங்கா. வானம் பார்த்தாள். பெருமூச்சு விட்டாள்.

"உனக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருந்தா. ஆசைப்பட்ட பொருளுக்காக உயிரையே பணயம் வைக்கிற உலகத்துல ஆசைப்பட்ட காதலுக்காக சின்னதா மாற்றமடைய மாட்டியா செங்கா.?" என்றுக் கேட்டான் அவன்.

செங்கா உதட்டை கடித்தபடி கண்களை மூடினாள். அவன் சொன்னதை யோசித்தாள். அதியன் அவளது மூச்சுக்காற்றில் தனது கவனத்தை செலுத்தினான். வெகுநேரம் அப்படியே நின்றிருந்தனர் இருவரும்.

செங்கா அவன் பக்கம் திரும்பினாள். "நான் யூடியூப்பு வீடியால பார்த்தேன்.. உதட்டுல முத்தம் தந்தா சொத்தை பல்லு வரும்ன்னு சொல்லி இருந்தாங்க.." என்றாள் குழப்பம் ஓடிய முகத்தோடு.

அதியன் அவளை சந்தேகமாக பார்த்தான். "இன்னைக்கும் ஏதாவது குடிச்சிட்டியா.?" என்றான்.

அவள் மறுத்து தலையசைத்தாள். "இல்ல.. எனுக்கு அன்னைக்கும் போதையே ஏறல.. நீதான் நம்பல.." என்றாள்.

அதியன் யோசனையோடு அவளை பார்த்தான்.

"அப்படி முத்தம் தந்தா சொத்தை பல் வரும்ன்னா இங்கே மனுசங்களே பிறந்திருக்க முடியாது.. முத்தம் பரிசுத்ததின் பரிசு.. அன்பின் வெளிப்பாடு.. காதலின் செயல்பாடு.. மோகத்தின் ஆரம்பம்.." என்றான்.

செங்கா குழப்பத்தோடு அவனை பார்த்தாள். "அப்படின்னா முத்தம் தந்தா சொத்தைப்பல் வராதா.?" என்றாள்.

"அப்படிலாம் வராது.. சின்ன வயசுல நம்ம கூட பிறந்தவங்களோடு ஒரே தட்டுல சாப்பிடுவோம்.. பிரண்ட்ஸோடு ஒரே மிட்டாயை இரண்டா கடிச்சி பங்கு போட்டுப்போம்.. அப்போதெல்லாம் வராத சொத்தைப்பல் முத்தத்தால் வந்தா அதுக்கு காரணம் முத்தம் கிடையாது.. நாம பல் விளக்காம இருக்கறதாதான் இருக்கும்.." என்றான் சிரிப்போடு.

செங்கா மீண்டும் யோசித்தாள். அதியன் அவளது யோசனையை ஆராய்ந்தான். செங்கா எட்டி நின்று அவனுக்கு முத்தத்தை தந்தாள். அதியன் அதிர்ந்து விட்டான். ஆனால் சிறு மகிழ்ச்சியும் இருந்தது.

"இப்ப முத்தம் தந்தாச்சி. ஒருவேளை எனுக்கு சொத்தைப்பல் வரலன்னா நான் உன்னை கட்டிக்கிறன்.." என்றாள்.

அதியனுக்கு அவளை எண்ணி சிரிப்பாக வந்தது. "அப்படின்னா கல்யாணம் கன்பார்ம்.." என்றான் வானம் பார்த்து துள்ளி குதித்தபடி.

செங்கா அவனது துள்ளலை கண்டு கன்னம் சிவந்தாள். "நான் நெல்லிக்காய் பறிக்க போறேன்.." என கத்தியபடி முன்னால் ஓடினாள்.

"செங்கா நீ ஒரு விசித்திரம்.. எப்ப வெட்கப்படுற.. எப்ப தைரியமா என்னை ஓவர்டேக் பண்றன்னே தெரியல.." என கத்தியபடி அவளை பின்தொடர்ந்து ஓடினான் அதியன்.

செங்கா அவன் பக்கம் திரும்பினாள். பின்னால் எட்டு வைத்து நடந்தபடியே அவனை பார்த்தாள். "நான் முத்தம் தந்தன்னுதான இப்புடி சொல்ற..? நீதானே என்னை கட்டிக்கிறன்னு கேட்ட.. கட்டிக்கறவனுக்கு முத்தம் தர அளவுக்கு எனுக்கும் தைரியம் இருக்கு.. உன்னைய மாதிரி தூங்கும்போது முத்தம் தர மாட்டன் நான்.." என்றாள்.

"கனவுன்னு சொன்ன.." என்று கேட்டவன் அவளை துரத்தி வந்தான்.

செங்கா முன்னால் திரும்பி ஓடினாள்.

"கனவுதான்.. ஆனா உன் முகத்தை வச்சிதான் அது உண்மைன்னு யூகிச்சன்.." என்றவள் சிரித்தபடி ஓடையை விட்டு காட்டுக்குள் ஓடினாள்.

"ஹேய் பிராடு.. நில்லு.." என்றான் அதியன்.

"உனுக்கு கையாலான்னா தொரத்தி வந்து புடி.." என்ற செங்கா மரத்தின் மறைவில் புகுந்து ஓடினாள்.

சற்று தூரத்தில் காட்டு நெல்லி மரம் ஒன்று உயரமாக வளர்ந்திருந்தது. மரத்தின் மீது ஏறி உயர கிளையொன்றின் மீது அமர்ந்தாள். நெல்லிக்காய் ஒன்றை பறித்து வாயில் போட்டுக் கொண்டாள். துவர்ப்பில் கண்களை இறுக்க மூடி தலையை உதறினாள். சற்று நேரத்தில் துவர்ப்பு பழகி விட்டது.

அதியன் அவளை தேடினான். சற்று நேரத்தில் எப்படி காணாமல் போனாள் என்று குழம்பினான். நெல்லிக்காய் மரம் எங்கிருக்கிறது என்று தேடினான். அவன் கண்ணுக்கெட்டிய வரை நெல்லிக்காய் மரமே தென்படவில்லை. நடந்துக் கொண்டிருந்தவன் சுற்றும் பார்த்து நடந்ததில் காலடியில் இருந்த கல்லை கவனிக்க மறந்து விட்டான் அவன். கல்லில் கால் மோதி காலை பிடித்தபடி நின்றவன் தன் தலையில் ஏதோ விழுந்ததை கண்டு நிமிர்ந்தான். செங்கா நெல்லிக்காயை தின்றபடி அமர்ந்திருந்தாள். கிளையில் அமர்ந்தபடி காலை ஆட்டிக் கொண்டிருந்தவள் கீழே இருந்த அதியனை கவனிக்கவில்லை. தண்டெங்கும் சடை பிடித்து தொங்கும் காய்களில் பெரிய பெரிய காய்களை மட்டும் தேடி பறித்து தின்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நெல்லிக்காயை உண்ணும் போது மாறும் அவளது முக பாவத்தை பார்த்தபடி நின்றிருந்தான் அதியன். அவளின் அசைவில் குலுங்கிய மரம் உதிர்த்த காய்கள் அவ்வப்போதூ அவன் மீது பொழிந்தது. அதில் ஒன்றிரண்டை பிடித்தவன் அதை ருசித்தபடி நின்றிருந்தான் அவன். அரை காய் தின்றவுடனே தண்ணீரை தேடியது அவனது சிறு வயது நினைவுகள். சிறு வயதில் பள்ளியில் ஊர்க்கார நண்பன் ஒருவன் மலை நெல்லியை கொண்டு வருவான். ஒரு வாய் கடித்தவுடனே தண்ணீரை குடித்து இனிப்பை தரம் பார்ப்பார்கள் இவனும் விஷ்வாவும். இன்றும் அதே நினைவுதான் வந்தது பல்லில் மென்றுக் கொண்டிருந்த நெல்லிக்காயினால். உமிழ்நீரின் அளவு கூடும்போதெல்லாம் இனிப்பில் நாக்கு சப்புக் கொட்டியது.

நெல்லிக்காயை சுவைத்தபடியே செங்காவை பார்த்திருந்தான். அவள் சற்று நேரம் கடந்ததும் அதியனை தேட ஆரம்பித்தாள். கிளையின் மீது ஏறி நின்று தான் வந்த பாதையை பார்த்தாள். காலின் கீழே பார்க்க தவறி விட்டாள். அதியன் அலைபாயும் அவளது விழிகளை பார்த்தான்.

"ஓய் பட்டணம்.." என்று தான் வந்த வழியை பார்த்து கத்தினாள். அதியன் தனக்கு வரும் சிரிப்பை அடக்கிபடி அந்த மரத்தின் பின்னால் சென்று மறைந்து நின்றான்.

மறுமொழி வராததை கண்டவள் சட்டென பயந்து போனாள். "வழி தெரியாம வேற தெசையில ஏதும் போயிட்டுச்சா.?" என்று கேட்டபடி தான் நின்றிருந்த கிளையில் கையை பதித்து கீழே குதித்தாள்.

"ஓய் பட்டணம்.." அதிகமாக துடிக்கும் இதயத்தோடு முன்னோக்கி ஓடியவளை சட்டென பாய்ந்து அணைத்தான் அதியன்.

"யப்பா.." என பயந்து கத்தியவள் திரும்பி பார்த்தபோது அதியன் கலகலவென சிரித்தபடி அவளை விட்டு விலகி நின்றான்.

"ஏன் இப்படி கத்தின..?" என்றான்.

செங்கா அவனது காலில் ஓங்கி மிதித்தாள். "பைத்தியமா நீ.? எப்புடி பயமா இருந்துச்சி தெரியுமா.?" என்றாள் கோபத்தோடு.

அவனுக்கு சிரிப்பு நிற்கவேயில்லை. ஆனால் அவளது மிதியால் காலும் வேறு வலித்தது. சிரித்தபடியே காலை உதறிக் கொண்டான்.

அவள் அவனை முறைத்து விட்டு புல்வெளியில் நடக்க ஆரம்பித்தாள். அதியன் சிரித்தபடியே அவள் பின்னால் ஓடினான். "ஹேய்.. மெதுவா போ செங்காந்தள்.." என கத்தியபடி ஓடினான்.

நடந்துக் கொண்டிருந்தவளின் தோளை பற்றி நிறுத்தினான். அவளுக்கும் முன்னால் சென்றவன் அவளை பார்த்தபடி பின்னால் நடத்தாள்.

"நீ கோபப்படும் போது க்யூட்டா இருக்க.." என்றான் அவளது கன்னத்தை பிடித்து கிள்ளியபடி.

"ஆமா நான் அழுந்தாலும் உன் கண்ணுக்கு அழவு.. கோபப்பட்டாலும் அழவுதான்.." என்றாள் உதட்டை சுழித்தபடி.

அவள் சொன்னது கேட்டு குழம்பினான் அதியன். "நீ அழுதா எப்படி நான் அழகுன்னு சொல்வேன்.?" என்றான் வருத்தமாக.

அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளினாள் செங்கா. "அன்னைக்கு ஆசுபத்திரியில நான் எங்கப்பனை நெனைச்சி அழுந்தபோது நீ சொல்லல அழவுன்னு.. அந்த முட்டைக்கண்ணு போலிஸ்காரருக்கிட்ட.." என்றாள்.

அதியன் நினைவு வந்ததும் அவளது கன்னத்தை மேலும் கிள்ளினான். "நீ நிஜமாவே க்யூட்டாதான் இருந்த.. அதுவும் செம க்யூட்டா.. உன்னை பத்தி யார் என்ன நினைச்சா என்னன்னு எதையும் யோசிக்காம உனக்கு அழுகை வந்துச்சேன்னு அழுத.. அதுவும் இல்லாம உங்க அப்பாவுக்கு ஒரு கஷ்டம்ன்னா அதை தாங்கிக்க முடியாம துடிச்சி போன.. அப்பா மேலேயே இவ்வளவு பாசம் வச்சிருக்கறவ கட்டிக்கறவன் மேல எவ்வளவு பாசம் வைப்பன்னு ஆச்சரியமா இருந்தது.. தன் மனசோட லவ்வை வெளிக்காட்ட தயங்குற மனிதர்கள் அதிகமாகிட்ட உலகத்துல உன் அன்பை மறைக்காம வெளிக்காட்டுற உன் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றான்.

செங்கா மௌனியானாள்‌. அவன் பிடித்திருப்பதாக சொல்லியது மனதிற்க்குள் இருந்த மகிழ்ச்சியை இரண்டு மடங்காகிக் கொண்டிருந்தது. கன்னத்தில் படரும் வெட்கத்தின் வெம்மையை மறைக்கும் வழி தெரியாமல் தலை குனிந்து நடந்துக் கொண்டிருந்தவள் ஏதோ சத்தம் வரவும் சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

அவர்களுக்கு எதிரே இருந்த புல்வெளியில் முள்ளம்பன்றி ஒன்று செடி ஒன்றின் வேரை பறித்துக் கொண்டிருந்தது. செங்கா தன்னை பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்த அதியனை சட்டென பிடித்து நிறுத்தினாள்.

"என்ன ஆச்சி.?" என கேட்டவன் முள்ளம்பன்றியை குழப்பமாக பார்த்தான்.

"என்ன இது.?" என்றான்.

"முள்ளான்.. முள்ளம்பன்னி.." என்றவள் அவனை இழுத்துக் கொண்டு எதிர் திசையில் நடத்தாள்.

"வாவ்.. இதுதான் முள்ளம்பன்றியா.? நேர்ல பார்க்க சூப்பரா இருக்கு.. இரு நான் ஒரு போட்டோ எடுக்கறேன்.." என்றவன் அதை நோக்கி நடக்க சட்டென அவனை பிடித்து நிறுத்தினாள் செங்கா.

"அதோட முள்ளை பார்த்தியா.? மெரண்டு வந்து உன் மேல மோதுச்சின்னா மவனே நீ காலி.. எந்த போட்டாவும் வேணாம். அமைதியா போவம் வா.." என்றாள்.

"நிஜமாவா.? ஆனா எனக்கு அதோட முள்ளை பக்கத்துல இருந்து தொட்டு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு.." ஆவலோடு திரும்பி முள்ளம்பன்றியை பார்த்தபடி சொன்னான் அவன்.

செங்கா அவனை விசித்திரமாக பார்த்தாள். "அது முள்.. முட்டாய் இல்ல.." என்றாள்.

"அழகா இருக்கே.." என்றவன் அதை நோக்கி நடக்க அவனை மீண்டும் பிடித்து நிறுத்தினாள் அவள்.

"உனுக்கு அதோட முள் வேணும்ன்னா இங்கயே எங்கன்னா தேடி பாரு கெடைக்கும். அதை வுட்டுட்டு அது பக்கத்துல போவாத.. அது முட்டுச்சி உனுக்கு உடம்பெல்லாம் ஊசி குத்தி சல்லடை மாதிரி ஓட்டை ஓட்டையா ஆயிடுவ.." என்றவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மரத்தடி ஒன்றின் கீழிருந்த முள் ஒன்றை கொண்டு வந்து அவனிடம் தந்தாள்.

ஓரடி நீளம் இருந்த முள்ளை கையில் வாங்கியவன் "வாவ்.." என்றான். அதன் முனையில் தன் விரலை வைத்தான். "ஸ்ஸ்.. குத்திடுச்சி.." என்று கையை உதறினான்.

அவனது செய்கை கண்டு செங்கா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1134

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN