செங்கா 42

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூங்கோதையை வீட்டுக்குள் அழைத்து வந்தாள் ரக்சனா. அவள் பயந்து பயந்து அந்த வீட்டிற்குள் வந்தாள். காயத்ரி தைரியத்தை வர வைத்தபடி பூங்கோதையின் அருகே சென்றாள்.

"வாங்க அண்ணி.." என்றாள் தனது பயத்தை மறைத்தபடி. பூங்கோதை காயத்ரியையும் அந்த வீட்டையும் தயக்கம் மாறாமலேயே பார்த்தாள்.

"நான் என் வீட்டுக்கே போயிடுறேன்ம்மா.." என்று சிறுகுரலில் ரக்சனாவிடம் சொன்னாள்.

"இனி இதுதான் உங்க வீடு.." என்று சொல்லியபடி தனது அறையிலிருந்து வெளியே வந்தான் விஷ்வா.

பூங்கோதை அவனை கண்கள் சிமிட்டி பார்த்தாள். குற்ற உணர்வில் தலை கவிழ்ந்தாள்.

விஷ்வா அருகில் வந்து அவளது கை பிடித்து உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான். ரக்சனா சமையலறை சென்று அவளுக்காக தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.

செழியன் பூங்கோதையின் மருந்துகள் அடங்கிய பேக்கை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். இந்த இரண்டு நாட்களில் அவனும் பூங்கோதையும் நல்ல நண்பர்களாகவே ஆகி விட்டனர். பூங்கோதைக்கு செழியனை ரொம்ப பிடித்திருந்தது. அவனுக்கும் ரக்சனாவுக்கும் இடையில் உள்ள காதலை அறிந்ததும் மனதார சந்தோசப்பட்டாள் அவள்.

செழியன் பூங்கோதையின் அருகே வந்து அமர்ந்தான். அவளது கையை பற்றினான். "ஆன்டி.. உங்களுக்கு எந்த மனநல பாதிப்பும் இல்ல. நீங்க நல்லா இருக்கிங்க.. உங்க வீட்டுக்காரர் சொன்னது அத்தனையும் பொய். உங்களால உங்க மனசையும் செயலையும் கட்டுப்படுத்த முடியும். உங்க எண்ணத்திற்கு நீங்கதான் எஜமானி. அதனால நீங்க முதல்ல பயப்படாம இருங்க.." என்றான்.

பூங்கோதை சரியென தலையசைத்தாள். அவளுக்கு கண்கள் கலங்கியது. செழியன் சட்டென துடைத்து விட்டான்.

"நீங்க இனி ஃப்ரீ பேர்ட்.. உங்களுக்கு துணையா நாங்க அத்தனை பேரும் இருக்கோம். உங்க பொண்ணு உங்களோடவே இருப்பா. உங்களுக்கு தேவையான சாக்லேட்ஸ் உங்க பேக்ல எப்போதும் இருக்கும். சரியா.?" என்றான். அவள் மீண்டும் சரியென தலையசைத்தாள்.

சுவரில் சாய்ந்து நின்றபடி பூங்கோதையை பார்த்துக் கொண்டிருந்த ரக்சனா தன் கண்களை துடைத்துக் கொண்டாள். பூங்கோதைக்கு மன நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவளின் செயல்கள் எதிரில் உள்ளவர்களின் செயல்களை பொருத்துதான் இருக்கும் என மருத்துவர் சொன்னதை நினைத்து பார்த்தாள். அவளை கட்டி வைத்தாலோ அடைத்து வைத்தாலோ அவளது பிரச்சனை அதிகமாகுமே தவிர குறையாது என்று சொன்னார்கள் மருத்துவர்கள். மருந்து மாத்திரைகளை சரியான முறையில் உண்டு வந்தாலே அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொல்லி அனுப்பி வைத்தனர் அவர்கள்.

பூங்கோதையின் இயல்பு வாழ்க்கைக்காக காத்திருந்தாள் ரக்சனா. அவளின் கையை பற்றினான் அருகில் இருந்த விஷ்வா.

"ஒன்னும் ஆகாது. ஆன்டி இனி ஹேப்பியா இருப்பாங்க.." என்று ஆறுதல் சொன்னான். ரக்சனா புரிந்துக் கொண்டவளாக தலையசைத்து விட்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

காயத்ரி சென்று காப்பி போட்டு கொண்டு வந்து தந்தாள். பூங்கோதை தயக்கத்தோடு காப்பி கோப்பையையும் காயத்ரியையும் பார்த்தாள். செழியன் கோப்பையை கையில் எடுத்தாள்.

"நீங்க தயங்க வேண்டாம் ஆன்டி.." என்று சொல்லி அவளது கையில் காப்பி கோப்பையை தந்தான்.

"இந்த காப்பிக் கோப்பையை யார் மேலாவது தூக்கி வீசணும்ன்னு தோணினா சட்டுன்னு கீழே வச்சிட்டு உங்க பையில் இருக்கற சாக்லேட்டை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சிடுங்க.." என்றான். பூங்கோதை புன்னகையோடு தலையசைத்தபடி காப்பியை பருக ஆரம்பித்தாள்.

செழியன் டிவியில் கார்ட்டூனை ஓட விட்டான். பூங்கோதை டிவியை ஆவலோடு பார்த்தாள். ஏதோ ஒரு வகையில் குழந்தையை போலதான் இவளும் இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டாள் ரக்சனா.

அரை மணி நேரம் கடந்து சென்றிருந்தது. லாரன்ஸ் எரிமலையாக கொதித்தபடி அந்த வீட்டுக்குள் நுழைந்தார். பூங்கோதை அவரை கண்டதும் சட்டென எழுந்து நின்றாள்.

ரக்சனா அவரை கண்டதும் கிண்டலாக பார்த்தபடி அவரருகே வந்தாள். "ஜாமின் வாங்கிட்டிங்க போல.." என்றாள்.

லாரன்ஸ் பல்லை கடித்தபடி அவளது கன்னத்தில் அறையை தந்தார்.

"திமிரோடு இருக்காத.. கொன்னுடுவேன்.." என்று அவர் விரல் நீட்டி எச்சரிக்க ரக்சனாவை பின்னால் தள்ளி விட்டு முன்னால் வந்து நின்றான் செழியன்.

"இவ என் லவ்வர். இவளை இன்னொரு முறை அடிச்சிங்கன்னா அப்புறம் நீங்க கடுமையான பின்விளைவை சந்திக்க வேண்டி வரும்.." என்றவன் ரக்சனாவை அணைத்தபடி விலகி போனான்.

விஷ்வா கையை கட்டியபடி அவர் முன்னால் வந்தான். "அவ என் தங்கை.. அவளை கொல்ல உங்களுக்கு உரிமை இல்ல.. உங்க வெட்டி சவடாலை வேற எங்கேயாவது காட்டுங்க.. இப்ப இந்த வீட்டை கிளம்புங்க.." என்றான்.

லாரன்ஸ் தன் முன் நின்றவனை நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினார். "என்ன ஆளாளும் படம் காட்டுறிங்களா.? நான் என் பொண்டாட்டியை என்னோடு கூட்டி போக வந்திருக்கேன்.. இதை தடுக்க உங்க யாராலும் முடியாது.." என்றவர் உள்ளே நடந்தார்.

ரக்சனா அவசரமாக பூங்கோதையின் முன்னால் வந்து நின்றாள்.

"இவங்க என் அம்மா.. இவங்களை நான் உங்களோடு அனுப்ப முடியாது.." என்றாள்.

லாரன்ஸ் பற்களை கடித்தார். "என் பொண்டாட்டி உன்னை கருவுல சுமந்த பிறகுதான் பைத்தியமா ஆனாள்.. உன்னால என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சி. உனக்கு இன்னும் என்ன வேணும்ன்னு இப்படி ஒரு டார்ச்சரை தந்துட்டு இருக்க.?" என்று கேட்டார்.

அவர் சொன்னது ரக்சனாவின் இதயத்தில் சிறு வலியை தந்து விட்டது. அவர் தன்னை வெறுக்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டாள். மௌனமாகி விட்டவளை வெறுப்போடு பார்த்தார் லாரன்ஸ்.

"நான் என் பொண்ணை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன்.." என்று பூங்கோதை சொல்லவும் ரக்சனா திரும்பி பார்த்தாள்.

லாரன்ஸ் தன் மனைவியை கோபத்தோடு பார்த்தார். "நீ பைத்தியம் கோதை.. உன்னால உன்னை கண்ட்ரோல் பண்ண முடியாது. இவளோடு இருந்தா நீயே இவளை கொன்னுடுவ.." என்றார் ஆத்திரமாக.

ரக்சனா கண்ணீர் தளும்பும் கண்களை மூடிக் கொண்டாள். லாரன்ஸை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. மனைவி பைத்தியமாக காரணம் என்று மகளை வெறுப்பவர் அதே வேளையில் மகளின் நலனை பற்றி கவலைப்படுகிறார் என்ற இரு வேறுபட்ட நிலையை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

விஷ்வா ரக்சனாவின் அருகே வந்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

செழியன் பூங்கோதையின் அருகே வந்து அவளின் கையை பற்றினான்.

"வார்த்தையால் மனுசங்களை கொல்லுற உங்களை விட இவங்க ரொம்ப புத்தி உள்ளவங்கதான்.. இவங்க ஒரு குழந்தையை போல மனசை உள்ளவங்கன்னு எங்களை விட உங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். இருந்தும் இவங்களை சரியான முறையில் கவனிச்சிக்காம கட்டி போட்டு வச்சி இவங்களோட மனநிலையை இன்னும் அதிகமா மோசமாக்கியது நீங்கதான்.. நீங்க தூரமா விலகி இருந்தாலே இவங்க கொஞ்ச நாளுல சரியாகிடுவாங்க. ஸோ ஜஸ்ட் கெட் அவுட்.." என்றான்.

லாரன்ஸ் அவனை முறைத்தார். பூங்கோதையின் முகம் பார்த்தார். அவள் கலங்கும் விழிகளோடு இருந்தாள். செழியனின் கையை இறுக்கமாக பற்றியிருந்தாள்.

லாரன்ஸ் பெருமூச்சி விட்டார். திரும்பி நடந்தார். அனைவரும் குழப்பத்தோடு அவரை பார்த்தனர். கண்கள் திறந்து அவரை பார்த்த ரக்சனா இவரை புரிந்துக் கொள்ளவே முடியாது என்று எண்ணினாள்.

லாரன்ஸ் சோர்வாக வந்து தனது காரில் ஏறினார். அவரது தினசரி அலுவல்களினாலேயே அவரால் பூங்கோதையை சரியாக கவனித்து கொள்ள முடியவில்லை என்பதை அவரை தவிர வேறு யார் அறிவார்.? பூங்கோதையின் மருத்துவ செலவுக்காக ஆரம்ப நாட்களில் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார் அவர். அந்த கடனை கட்ட ஓயாமல் உழைத்தார். குற்றவாளிகளிகளுக்கு கூட விடுதலை வாங்கி தந்த காரணத்தாலோ என்னவோ அவர் சம்பாதித்த பணம் கொண்டு பூங்கோதையை சரி செய்யவே முடியவில்லை. இனியாவது நல்லதொரு சூழ்நிலையில் வாழ ஆரம்பிக்கும் தன் மனைவி முழுமையாக குணமாகுவாள் என்று நம்பினார். ரக்சனாவை சேர்ந்தோர் தன் மனைவியை கேலி பேசி விடுவார்களோ என்று பயந்திருந்தவர் அவர்கள் இவ்வளவு பாசத்தோடு நடந்துக் கொள்வது இவருக்கு மனநெகிழ்வை தந்து விட்டது. ரக்சனா மீது இருந்த கோபம் கூட மறந்து போனது அவருக்கு.

மேற்கில் மெல்ல மெல்ல மறைந்துக் கொண்டிருந்த சூரியனை செங்காவும் அதியனும் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இதை விட சிறந்த காட்சிகள் எங்கிருக்கும் என்று எண்ணினான் அதியன்.

மேகம் அத்தனையும் ஆரஞ்சி சிவப்பில் காட்சியளித்தது. சூரிய வெளிச்சம் மறைய மறைய காடுகள் நிழல் பூசி மெல்ல மெல்ல இருளாக ஆரம்பித்தது. அதியனின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த செங்கா கவலையில் பெருமூச்சு விட்டாள்.

"உன்னைய கட்டிக்கிட்டு உன் கூட வந்தா இப்புடி எதையும் பாக்க முடியாதில்ல.?" என்றாள் வருத்தமாக.

அதியன் திரும்பி அவளது தலையில் முத்தம் தந்தான். "அங்கேயும் சூரியன் உதிக்கும். தினம் மறையவும் செய்யும். நம்ம வீட்டு மொட்டை மாடியில் நின்னு தினம் இதே மாதிரி பார்க்கலாம்.." என்றான்.

செங்கா அவனை திரும்பி பார்த்தாள். புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டாள். "நீ தேவையில்லாம என்னைய வம்பிழுக்கவே கூடாது.. அப்புறம் நான் காட்டுக்கு ஓடி வந்துடுவன்.." என்றாள் சிரிப்போடு.

"ஓடி வர மாட்டா.. உன் குணத்துக்கு நான் ஏதாவது வம்பு பண்ணா என்னைதான் வீட்டை விட்டு துரத்துவ.." என சொல்லி சிரித்தான் அவன். செங்கா யோசித்து பார்த்தாள். அவன் சொல்வது சரியென்றுதான் தோன்றியது. "ஆமா.." என்று அவளும் சிரித்தாள்.

இரவு கொஞ்சம் கொஞ்சமாக காட்டை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தது.

எரிந்துக் கொண்டிருந்த தணலின் மேல் இருந்த இலையில் வெந்த அடையை எடுத்து அதியனிடம் தந்தாள் செங்கா.

அதியன் தயக்கத்தோடுதான் உண்டான். "இது என்ன மாவு.?" என்றான்.

"கேழ்வரகு மாவுப்பா.. ஏன்..?" என்றபடி அவள் அடையை கடித்து உண்டாள்.

"நீ மாவை சரியா செய்யல.. பாதி இடத்துல உப்பே இல்ல.. பாதி இடத்துல உப்பு கரிக்குது.." என்றான் முகம் சுளித்தபடி.

"கவனிக்கலப்பா.. எப்போதும் போல சும்மா மாவை பெசஞ்சி இலையில் வச்சி உப்பை தூவினேன்.. தூள் உப்பு காலி.. அதான் இன்னைக்கு கல் உப்ப தூவினன்.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

"கொடுமையா இருக்கு உன் அடை.. யாராவது அடை மேல உப்பை தூவுவாங்களா.? அதுவும் கல் உப்பை.?" என்று கேட்டவனுக்கு வருங்காலத்தில் தான் எத்தனை நாட்கள் அரை பட்டினியாக வாட போகிறோமோ என்று எண்ணி இப்போதே கவலையாக இருந்தது.

"சும்மா குத்தம் சொல்லாம தின்னுப்பா.. நானெல்லாம் பாதி நாள் உப்பே இல்லாம அடையை சுட்டு தின்னிருக்கன்.." என்றாள்.

அதியன் நெற்றியில் அறைந்துக் கொண்டான்.

"இதை சாப்பிட்டா எப்படி வயிறு நிறையும்.?" என கேட்டவன் தண்ணீரை குடித்து விட்டு எழுந்து நின்றான்.

"உடனே நீ என் இயல்பை மாத்த பார்க்கறன்னு ஆரம்பிக்காத.. மனுசனா பிறந்ததுல சாகும் வரை நாம சலிக்காம அனுபவிக்கிற ஒன்னுன்னா அது இந்த நாக்கோட ருசிதான்.. அதையும் இப்படி அரைகுறையா சுவைச்சி காலத்தை ஓட்ட என்ன தலையெழுத்து.? கஷ்டப்பட்டு உழைக்கிறதுக்கு ருசியா கூட சாப்பிட முடியலன்னா அப்புறம் வாழ்றதுல கூட பிரயோசனமே இல்ல.." என்றான்.

செங்காவின் முகம் வாடுவது நெருப்பின் ஒளி வெளிச்சத்தில் தெரிந்தது. அதியன் அவளருகே அமர்ந்தான்.

"உனக்கென்ன தலையெழுத்துன்னு இந்த உப்பில்லா ரொட்டியை சாப்பிட்டுட்டு இருக்க.?" என்றான் ஆதங்கமான குரலில். அவள் பதில் பேசவில்லை. அவளை தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டவனுக்கு வாழ்க்கையின் நலம் எத்தனை என்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1109

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN