செங்கா 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த செங்காவின் அருகே அமர்ந்திருந்தான் அதியன்.

"இனியாவது இப்படி கொடுமையா சாப்பிடாதே.." என்றான் மென்மையாக.

"நீ ஏன் இப்புடி கோபப்படுறன்னு தெரியல.. நீங்க எல்லாரும் ருசிக்கு சாப்பிடுறிங்கன்னு தெரியும்.. ஆனா நான் பசிக்காகதான் சாப்பிடுறன்.. பசிக்காக சாப்பிடும்போது எப்புடி ருசி தெரியும்.?" என்றாள் அப்பாவியாக.

அவளது கேள்வி அதியனை குழப்பி விட்டு விட்டது. "பசிக்காக சாப்பிடும்போது ருசியா சாப்பிட கூடாதுன்னு சட்டம் இருக்கா என்ன.?" என்றான்.

செங்கா இல்லையென தலையசைத்தாள். அவளது தோளில் கை போட்டு அவளருகே அமர்ந்தான்.

"நான் உன்னோட இயல்பை மாத்த நினைக்கல.. ஆனா என் காதலி எந்த காரணமுமே இல்லாம இப்படி உப்பில்ல சாப்பாடு சாப்பிட்டு பத்தியம் இருக்கறதை ஏத்துக்க முடியல.." என்றான். செங்கா புரிந்துக் கொண்டவள் போல தலையசைத்தாள்.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து நிலவையும் நட்சத்திரத்தையும் ரசித்தபடியே உறங்க சென்றனர்.

"கல்யாணம் ஆன உடனே நான் நம்ம வீட்டுக்கு ஒரு நல்ல சமையல்காரியை ஏற்பாடு செய்றேன்.." என்று சொல்லிக் கொண்டே உறங்கினான் அதியன்.

மறுநாள் அதியன் ஓடையில் நீச்சலடித்து விட்டு வெகுநேரம் கழித்துதான் பாறைக்கு வந்தான். பாறையின் மேல் உச்சியில் எதையோ கண்டவன் "செங்கா இங்கே ஓடி வா.." என்றான்.

காற்றில் அசைந்த கூந்தலோடு செங்கா ஓடி வந்தாள். "என்னாச்சி..?" என்றாள் அவனது பதட்டமான குரலின் காரணம் தெரியாமல்.

அதியன் உச்சிப்பாறையை கை காட்டினான். உடும்பு ஒன்று படுத்திருந்தது.

"அது உடும்பு.. உன்னைய எதுவும் செய்யாது.. நீ கத்தினா அதுதான் பயந்து ஓடும்.." என்றாள் அவனிடம்.

"ஓகே.." என்றவன் எட்டி நின்று அந்த உடும்பை உற்று பார்த்தான்.

"அது வெயில் காயுது.. அதை தொந்தரவு பண்ணாம வா.. நான் அடை சுட்டு வச்சிருக்கன்.." என்று அழைத்தாள் செங்கா‌.

'மறுபடியும் அதே உப்பில்லாத அடையா?' என்று நொந்துக் கொண்டு வந்தவனின் முன் இலையில் இருந்த அடையை தந்தாள்.

நான்கைந்தாய் துண்டு போடப்பட்டு இருந்த அடையின் மீது தேன் வழிந்துக் கொண்டிருந்தது. அதியன் செங்காவை சந்தேகமாக பார்த்தபடியே எடுத்து உண்ண ஆரம்பித்தான். முதல் வாய் உண்ட உடனே ருசி மயக்கி விட்டது.

செங்கா அவன் எதிரில் அமர்ந்து சாப்பிட்டாள். "எனுக்கு ருசியை பத்தி அதிகம் தெரியாதுதான்.. ஆனா உனுக்கு ருசியா சாப்பிட ரொம்ப புடிக்கும்ன்னு நேத்து ராத்திரிதான் தெரியும்.." என்றவள் தனது புறங்கையில் வழிந்த தேனை சுவைத்தாள்.

"நீ சமையல்காரி வைக்க தேவையில்ல.. எனுக்கும் நல்லாவே சோறு ஆக்க தெரியும்.. ஆனா ஆக்கி திங்க சலுப்பு.. எம்படைய சலுப்புக்கு உம்படைய நாக்கை பலி தர மாட்டேன்.. கவலைப்படாத.." என்றாள். அதியன் பொங்கி வரும் சிரிப்பை மறைத்தபடி அவளை பார்த்தான்.

"சரி.. அதையும்தான் பார்க்கலாம்.." என்றான்.

பகல் வேளைகளில் இருவரும் அந்த வனத்தை வலம் வந்தனர். அதியன் கால் வலியோடு நிற்கும்போது கூட செங்காவிற்கு நிற்க தோணவில்லை. அவளது கால்கள் மரத்து போனது புரிந்து பெருமூச்சி விட்டான் அதியன்.

இருவரும் சேர்ந்து கரட்டு மரங்களில் இருந்த பழங்களை பறித்து தின்றனர். காட்டுக்குள் மறைந்திருந்த அழகான இடங்கள் அனைத்தையும் அவனுக்கு காட்டினாள் செங்கா. இருவரும் புல்வெளிகளில் ஓடி பிடித்து விளையாடினர். காட்டு பன்றியின் உறுமல் சத்தம் கேட்டு அதியனின் கை பிடித்து இழுத்தபடி தூரமாய் ஓடியபடியே தனது பயத்தை செங்கா சொல்ல, அவளை தன்னோடு அணைத்து ஆறுதல் சொன்னான் அவன்.

உயரமான பாறைகளை காணும்போதெல்லாம் இருவரும் உச்சியில் ஏறி நின்று வாய் வலிக்க கத்தினார்கள். முட்களையும் கற்களையும் பாராமல் கண்ணாமூச்சி விளையாடினர். அதியனின் கால் பகுதியில் இன்னும் சில முட்கள் குத்தி சிராய்ப்பாகி இருந்தது. குள்ளநரி ஒன்றை கண்டு அதியன் வியக்க செங்கா கலகலவென சிரித்தாள். காட்டு மல்லிகை ஒன்றை பறித்து வந்து அதியனிடம் தந்தவள் அந்த வாசனையில் அதியன் மயங்கி சொக்கியது கண்டு மகிழ்ந்தாள். இருவரும் நிறைய இடங்களில் எறும்புகளிடம் கடி வாங்கினர். தேன் எடுக்க சென்று சில தேனிக்களிடம் கொட்டு வாங்கினர். பாம்பு ஒன்றை கண்டு இருவருமே பதறியடித்து ஓடினர். காட்டு ஓடைகளை காணும்போதெல்லாம் அதியன் எதிர் நீச்சல் அடித்துப் பார்த்தான். தன் கால் கடித்த மீனை பிடித்து வந்து நெருப்பில் சுட்டு செங்காவோடு பங்கிட்டு உண்டான். பூலாப்பழத்தை பறித்து உதட்டு சாயம் பூசி சிரித்தாள் செங்கா. கரட்டு பூக்களையெல்லாம் பறித்து கோர்த்து கிரீடம் செய்து இருவரும் தங்களின் தலையில் வைத்து மகிழ்ந்தனர்.

ஒரு வாரம் எப்படி சென்றதென்றே அதியனுக்கு தெரியவில்லை. விடிந்த கணமும் தெரியவில்லை. அப்பொழுதுகள் முடிந்த கணமும் தெரியவில்லை.

இருவரும் தங்களது பயண பைகளை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டபோது அதியனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த வனத்தை அவன் மிகவும் நேசித்தான். கடித்த கட்டெறும்பையும், அவன் ஒருநாள் பழம் பறித்து தந்ததற்கே தினம் அவன் தோளில் வந்து அமர்ந்த பச்சை கிளியையும், அவன் முதல் நாளில் மென்று துப்பிய விதையிலிருந்து முளைத்து இரு இலைகளை விட்ட நெல்லி செடியையும் விட்டு செல்ல தயங்கினான்.

கசந்த வேப்ப மரத்தை கூட கட்டியணைத்து கை அசைத்து விட்டு சென்றான் அவன். செங்கா முன்னால் நடக்க அந்த வனத்தை திரும்பி திரும்பி பார்த்தபடியே அவள் பின்னால் நடந்தான் அவன். அங்கிருந்து ஒவ்வொரு மரமும் அவனுக்கு நண்பர்களாகி விட்டதை போல தோன்றியது அவனுக்கு. எதையுமே விட்டு செல்ல மனம் வரவில்லை.

சரிவுகளில் இறங்கினாள் செங்கா. அதியன் இந்த ஒரு வார பழக்கத்தின் காரணமாக எங்கேயும் சறுக்கி விழாமல் இறங்கினான்.

"நீ மறுபடியும் எப்ப காட்டுக்கு வருவ.?" கேட்கவே கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்திருந்த கேள்வியை மனம் பொறுக்க முடியாமல் கேட்டு விட்டான் அதியன்.

செம்பளிச்சான் பழம் ஒன்றை பறித்து வாயில் போட்டுக் கொண்டவள் அதன் இலைகளை கிள்ளி முகர்ந்தாள்.

"நீ ஒருத்தன் குறுக்க வராம இருந்திருந்தா‌ இரண்டு நாளுல மறுபடியும் காட்டுக்கு ஓடி வந்திருப்பேன்.. ஆனா இனி தனியா வருவேன்னு நம்பிக்கையே இல்ல.." என்றவளுக்கு குரல் அதிகம் வருத்தமாகி இருந்தது.

"ஏன்.?" அதியன் எதிரே உள்ள பாதையை பார்த்தபடியே கேட்டான்.

செங்கா தலை கவிழ்ந்து நின்றாள். அதியன் குழம்பி போய் அவளருகே வந்தான். அவளது முகம் பற்றி நிமிர்ந்தினான்.

"என்ன ஆச்சி.?" என்றான்.

செங்காவிற்கு‌ கண்கள் கலங்கியது. "இவ்ளோ நாளும் நானும் அந்த மரங்களோட ஒரு மரமாவோ இல்ல மிருகங்களோடு ஒரு மிருகமாவோ வாழ்ந்த மாதிரிதான் தோணுது.. எல்லாத்தையும் ரசிப்பன்.. ஆனா இப்படி இவ்வளவு சிரிச்சதே இல்ல.. தனியா சுத்தும்போது இருந்ததை விட உன்னோடு சோடியா சுத்தும்போது ரொம்ப சந்தோசமா இருந்தன்.. உயிர்ப்பா இருந்துச்சி இந்த ஒரு வாரமும்.." என்றாள்.

அதியன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். "பீல் பண்ணாத.. நாம மறுபடியும் இங்கே வரலாம்.. எனக்கு எப்போதெல்லாம் டைம் இருக்கோ அப்போதெல்லாம் உன்னை இங்கே கூட்டி வரேன்.." என்றான். செங்கா சரியென்று தலையசைத்தாள்.

அவளது கையை பற்றி அழைத்துக் கொண்டு நடந்தான் அதியன். செங்காவின் மன வருத்தம் அவனுக்கு நன்றாக புரிந்தது. தன்னை திருமணம் செய்துக் கொண்டால் பின்னர் இந்த வனத்திற்கு வராமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று எண்ணியே அவள் அதிகம் பயம் கொள்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.

இந்த வனத்திற்கு மீண்டும் வர அவனுக்கென்று எந்த காரணமும் இல்லை. நிதர்சனத்தில் அதுதான் உண்மை. இந்த வனத்தில் மகிழ்ச்சி இருந்தது. சிறிது பயம் இருந்தாலும் நிறைய சந்தோசம் இருந்தது. காரணம் என்ற ஒன்று இல்லாவிட்டாலும் கூட வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமேனும் இந்த வனத்திற்கு வர வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

வரும்போது இரண்டு மடங்காக தெரிந்த தூரம் திரும்பும்போது ஒரு மடங்காக தோன்றியது அதியனுக்கு. அவன் முள்ளில் மாட்டிய பகுதியை கடந்துச் செல்லும்போது பழைய நினைவில் அவனை கிண்டல் செய்து சிரித்தாள் செங்கா.

சம தளத்திற்கு வந்தபின் மரத்தின் கிளை ஒன்றை உடைக்க ஆரம்பித்தாள் செங்கா.

"மரத்தை ஏன் வெட்டுற.?" என கேட்டவனிடம் இரு துண்டு தண்டுகளை வெட்டியெடுத்துக் கொண்டு திரும்பிய செங்கா "களி கோலுக்குப்பா.. பொன்னா கழுத வெட்டிட்டு வர சொன்னாளே.." என்றாள்.

"அதுக்கா.? ஆமா நீயும் பொன்னாவும் ஏன் இப்படி மாத்தி மாத்தி செல்ல பேர் வச்சிக்கிறிங்க.?" என்று கேட்டான் அதியன்.

செங்கா சிரித்தாள். "ஏனா அவ என் பொறந்தவ.. நாங்க இரண்டு பேரும்தானே அடிச்சிக்க முடியும். அவ படிக்கறாளேன்னு அவ மேல எனுக்கு கொஞ்சம் பொறாம.. நான் படிக்காம சுத்துறனேன்னு என் மேல அவளுக்கு பொறாம.. எதிரியாவுற அளவுக்கு பொறாம இல்லதான். ஆனா இப்படி மாத்தி மாத்தி வாரி வுட்டுக்குற அளவுக்கு செல்ல பொறாம.." என்றாள்.

அதியன் புரிந்து கொண்டவனாக தலையசைத்தான். அவன் செழியனை இப்படி வாரியதே இல்ல. எப்போதும் பொறுப்பான அண்ணன் அதியன். சிறு வயதில் உண்டான பொறுப்பு இன்று வரையிலும் தொடர்கிறது.

அவர்கள் இருவரும் நடந்துக் கொண்டிருக்கும்போது வனத்தினுள் நுழைந்தது ஒரு வாகனம். தொப்பியை கையில் எடுத்தபடி ஜீப்பிலிருந்து இறங்கினான் மாயவன்.

"இவுருதான் இந்த காட்டுக்கு ஆபிசரு.. சரியான முள்ளான் மொகரை.. ஆனா எனுக்கு கூட்டாளிதான்.." என்று அதியனிடம் கிசுகிசுத்தாள் செங்கா.

"செங்கா.. மரம் எதையும் வெட்டாதன்னு சொன்னா உனக்கு புரியாதா.? பச்சை மரத்தை வெட்டுன்னா உன் மேல கேஸ் எழுதலாம்ன்னு தெரியுமில்ல.?" என்றான் மாயவன் அதட்டலாக.

"ஆமா.. இந்த இரண்டு களி கோல்தானே உம்படைய கண்ணுக்கு தெரியும்.? அங்கங்க காட்ட அழிச்சி கட்டடம் கட்டறாங்க.. அதை கேட்கறிங்களா.? இந்த மொத்த நாட்டுலயும் நகரமயமாக்கலுக்காக ஒரு வருசத்துக்கு வெட்டப்படுற மரம் எத்தனைன்னு உமக்கே நல்லா தெரியும்.. நீங்களா செஞ்சா அது வளர்ச்சி.. ஆனா நாங்க எங்கூட்டு தேவைக்காக மட்டும் களி கோலுக்கும், மத்துக்கும் இரண்டு கிளையை வெட்டுனா அது தப்பு.. ஓர வஞ்சனையில் உங்களை மிஞ்ச யாருமில்ல ஆபிசரு.." என்றாள்.

"அரசியல் பேசாத செங்கா.. அது தப்பு.. நான் வேற காட்டுக்கு மாறி போக போறேன்.. வர போற புது ஆபிசர் ஆட்டையும் மாட்டையும் உள்ளே விட கூடாதுன்னு நினைக்கிறவர்.. அவர்க்கிட்ட உன் வாயாடிதனத்தை காட்டாத.. காட்டுக்கும் இனி வராத.." என்றவன் அதியனை யோசனையோடு பார்த்தான்.

"உன்னையவே ஏமாத்த தெரிஞ்ச எனுக்கு அந்த புது ஆபிசரெல்லாம் தூசு மாதிரி.. தட்டி வுடு.." என்றவள் சொன்னதை காதில் வாங்காதவன் "அவர் யாரு.?" என்றான்.

"என்னைய கட்டிக்க போறவரு.." என்று செங்கா சொல்லவும் மாயவன் அருகே வந்து அதியனை மேலும் கீழும் பார்த்தான்.

"உங்களை பார்த்தா சுத்து வட்டார ஆள் மாதிரி தெரியலையே.." என்றான் மாயவன்.

"ஆமா.. இவரு பட்டணம்.. நானும் கட்டிக்கிட்டு பட்டணம்தான் போவ போறன்.. என்ன வுட்டுட்டு இந்த கரடுங்க எப்புடி இருக்கும்ன்னு நெனைச்சிதான் அழுவாச்சா வருது.." என்றவள் தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"இந்த பொண்ணை இனியாவது காட்டுக்குள்ள விடாதிங்கப்பா.." என்றான் மாயவன்.

"இனி வரமாட்டா சார்.." என்ற அதியன் செங்காவை அழைத்துக் கொண்டு நடந்தான்.

"கிளியை பிடிச்சி குரங்கை கையில் தந்த மாதிரின்னு சொல்வாங்க.. ஆனா இங்கே கிளி மாதிரி மாப்பிள்ளைக்கு சுத்தமான குரங்கையே இல்ல தராங்க.." என்றான் சலிப்போடு மாயவன்.

செங்கா கோபத்தில் கண்களை இறுக்க மூடினாள். அதியன் பொங்கி வரும் சிரிப்பை அடக்கிபடி அவளை அழைத்துக் கொண்டு காட்டை விட்டு வெளியே நடந்தான்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


செங்கா கிளியா குரங்கான்னு நீங்களும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க வாசக ஆபிசர்ஸ்..😊
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN