செங்கா 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்காவும் அதியனும் குளித்து விட்டு ஹாலுக்கு வந்தபோது பொன்னா அவர்கள் இருவரையும் விசித்திரமாக பார்த்தாள்.

"இந்த பிள்ளையோடு செட் ஆகிட்டிங்களா.?" என்றாள் அதியனிடம்‌.

அதியன் செங்காவை திரும்பி பார்த்தான். அவள் தூக்கி செருகிய பாவாடையும், அணிகலன் ஏதுமற்ற மங்கையுமாக கொட்டாவி விட்டபடி நின்றுக் கொண்டிருந்தாள்.

அதியன் பொன்னாவின் அருகே வந்தான். "அவளுக்கு என்னை பிடிச்சி போச்சாம்.." என்றான் வெட்கத்தோடு.

பொன்னா அவனது வெட்க முகத்தை விந்தையாக பார்த்தாள். "என்னவோ நல்லா இருந்தா சரிதான்.." என்றாள்.

"சூடா ஒரு டீ போட்டு கொண்டு வா கழுத.." என்றபடி கயிற்று கட்டிலில் சாய்ந்தாள் செங்கா.

பொன்னா இடுப்பில் கை வைத்தபடி சகோதரியை முறைத்தாள். "கரடு கரடா சுத்தும்போது டீ தேவைப்படல.. ஆனா வீட்டுக்கு வந்தவுடனே உன் அதிகாரத்தை காட்டுறியா.?" என்றாள்.

செங்கா எழுந்து அமர்ந்து அவளை பார்த்தாள். "மெண்டல் கேசு.. ஒரு டீ கேட்டா கூட பஞ்சாயத்து வைப்பியா.?" என்றாள்.

பொன்னா நெற்றியில் அடித்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.

அதியன் செங்காவின் அருகில் வந்து அமர்ந்தான். "கால் வலிக்குதா.?" என்றான்.

இல்லையென தலையாட்டினாள் அவள். "உனுக்கு வலிக்குதா.?" என்றாள்.

"ஆமா.. கொஞ்சமா வலிக்குது.. சுத்திட்டு இருந்தவரை தெரியல.. ஆனா இப்ப கால் ரொம்ப வலிக்குது.." என்றான் சோர்வோடு.

பொன்னா டீ கோப்பைகளை கொண்டு வந்து இருவரிடமும் நீட்டினாள்.

"நாங்க வேற வீடு மாத்திட்டு போக போறோம்.." என்றாள் பொன்னா யோசனையோடு.

அதியன் குழப்பமாக அவளை பார்த்தான். "ஏன்.?" என்றான்.

"கல்யாணம் ஆன உடனே நாங்க வேற வீட்டுக்கு மாறிடணும்ன்னு நினைக்கிறேன்.. இல்லன்னா அங்கேயும் இவ அந்த வீட்டு மாடி ரூம்ல உட்கார்ந்துட்டு டீ கொண்டு வா, சோறு கொண்டு வான்னு வேலை வைப்பா.." சோகமாக பொன்னா சொல்ல செங்கா ஆவலோடு அதியனை பார்த்தாள்.

"விஷ்வா மாமா வூட்டுலதான் நீயும் இருக்கியா.?" என்றாள்.

ஆமென தலையசைத்தான் அதியன். வீடு எனக்கு மட்டும் சொந்தமானது என சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு. தனது சொந்த குடும்பத்தை விடவும் அதிகமாக விஷ்வாவின் குடும்பத்தோடு பிணைந்து போயிருந்தான் அவன். அவர்களை வேற்று ஆட்களாக நினைக்க கூட தோணவில்லை அவனுக்கு.

"எனுக்கும் எல்லா வேலையும் செய்ய தெரியும்.. உன்கிட்ட எப்பவும் எதுக்கும் வந்து நிக்க மாட்டா இந்த செங்கா.." என்றாள் வீராப்பாக.

"அப்படியா இருந்தா உனக்கு கும்பிடு போடுவேன் தாயே.." என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பொன்னா‌.

வயலில் இருந்து சாமிநாதன் வீடு திரும்பியதும் அதியன் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றான்.

"தம்பி.. எப்படி போச்சி ஒரு வாரமும்.?" என கேட்டவர் அவனது கையையும் காலையும் முகத்தையும் பார்த்தார். அங்கங்கு கீறலோடு இருந்தவனை கண்டு உள்ளுக்குள் சிரித்தார். உண்மையில் சற்று பரிதாபமும் கூட இருந்தது அவருக்கு.

"செங்காவை என்னோடு நான் ஊருக்கு கூட்டி போகட்டா சார்.? பொன்னா விஷ்வா கல்யாணம் நடக்கற அன்னைக்கே எங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா நல்லாருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்று சிறு தயக்கத்தோடு கேட்டவன் செங்காவை பார்த்தான்.

அவள் தன் தந்தையின் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தாள். சாமிநாதன் செங்காவின் ஆவல் நிறைந்த முகத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

"நீ அவரோடு அவங்க ஊருக்கு போறியாடா.?" என்று மகளிடம் கேட்டார்.

செங்கா யோசித்தாள். "உனுக்கு சம்மதமா இருந்தா போறன்.. இல்லன்னா போவல.." என்றாள் தோள்களை குலுக்கியபடி.

காட்டை விட்டே வெளி வர மாட்டாள் என நினைத்திருந்த மகள் இன்று நகரம் நோக்கி பயணப்பட உள்ளதை கண்டு ஆச்சரியப்பட்டார். மகளின் மாற்றம் உண்மையிலேயே அவருக்கு மகிழ்ச்சியை தந்தது. வயதான காலத்தில் கோலூன்றியபடி கரட்டை நோக்கி நடந்த ஒரு உருவம் இப்போது பேர பிள்ளைகளை ஏந்தியபடி வீட்டில் உலாவுவது போல காட்சியொன்று மாறி தெரிந்தது.

"உனக்கு விருப்பமா இருந்தா போம்மா.. அங்கே உன் விஷ்வா மாமா குடும்பம் இருக்கும்.. அவங்க உன்னை பத்திரமா பார்த்துப்பாங்க.. எத்தனை நாள் இருக்க தோணுதோ இருந்துட்டு வா.." என்றார்.

அதியன் பக்கம் பார்த்தவர் "கல்யாணம் பத்தி உங்க அப்பாவை வந்து பேச சொல்லுங்க தம்பி.. இன்னும் ஒரு மாசம்தான் டைம் இருக்கு. அதுக்குள்ள நல்ல முடிவா எடுக்கலாம்.." என்றார்.

அதியன் சரியென தலையசைத்தான்.

இரவு கலையரசி தந்த வெற்றிலையை வாங்கி வாயில் போட்டு மென்ற சாமிநாதன் "செங்கா மாறிட்டா.." என்றார்.

கலையரசி பெருமூச்சி விட்டாள். "அப்பவே காலை உடைச்சி வீட்டுல வச்சிருந்தா அவளும் இன்னைக்கு பொன்னாவை போல பொறுப்பானவளா இருந்திருப்பா.." என்றாள்.

சாமிநாதன் மறுத்து தலையசைத்தார். "நாமதான் பெத்தோம்.. ஆனா அதுக்காக அவங்களோட வாழ்க்கையை நாம ஆட்சி செய்ய கூடாது.. தவறான வழியில போனா அதை திருத்த உரிமை இருக்கு. ஆனா அவங்களோட மொத்த வாழ்க்கையிலும் நாமளே கை பிடிச்சி அவங்களை கூட்டி போக முடியாது.. அப்படி கூட்டி போகவும் கூடாது.. சரியோ தப்போ.. அவங்களே விழுந்து எழுந்து கத்துக்கணும்.." என்றார்.

கலையரசி அவரை கோபமாக முறைத்தாள். "கரடு கரடா சுத்துற புள்ளை ஏதாவது மிருகம் அடிச்சி கொன்னிருந்தா அப்ப உனக்கு கஷ்டம்ன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும்.." என்றாள் முகத்தை சுளித்தபடி.

சாமிநாதன் சிரித்தார். "கரட்டுல பாதுகாப்பு இல்லதான். ஆனா பொண்ணுங்களுக்கு நாட்டுல மட்டும் பாதுகாப்பு இருக்கா என்ன.? செங்கா காட்டு மிருகத்துக்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு மனசுல வேண்டிக்கிட்ட ஒவ்வொரு முறையும் பொன்னா எந்த மனுச மிருகங்ககிட்டயும் மாட்டிட கூடாதுன்னு வேண்டிட்டுதான் இருந்தேன். கொள்ளையர்கள், கொலைக்காரர்கள், பெண்மையை களவாடும் மிருகர்கள், நட்பு பாராட்டி அப்பாவி பெண்களை கெட்ட வழிக்கு திருப்பி விடும் பெண்ணாய் பிறந்த பிசாசுகள்.. எத்தனை துரோகம் வெளியே இருக்குன்னு உனக்குமே தெரியும்.. அதனால நீ செங்காவோட வாழ்க்கையை மட்டும் குறை சொல்வதை நிறுத்து.. அவங்க இரண்டு பேரும் நம்மோட புள்ளைங்கதான்.. பெரியவ கவர்மெண்ட் ஆபிசராகி வாழ்க்கையை நடத்தினா சின்னவ மாடிதோட்டத்துல பழம் பறிச்சி வித்து கூட வாழ்ந்துடுவா.. தகுதியும் தராதரமும் அவங்களோட எண்ணத்துல இருக்கே தவிர அவங்களோட பேச்சு வழக்குலயும், வாழும் சிறப்புலயும் இல்ல.." என்றான்.

நடு இரவுக்கு அதியனின் ஃபோன் ஒலித்தது. தூக்க கலக்கத்தில் ஃபோனை எடுத்தவன் விஷ்வாவும் செழியனும் போனில் சொன்னதையெல்லாம் தூக்க கலக்கத்திலேயே கேட்டு விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் செங்காவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அதியன். "போன தரம் வந்தப்ப கடத்திட்டு போன.. இப்ப நானா வரன்.." என்று சிரித்தபடி சொன்னாள் செங்கா.

மலை பாதையில் காரை ஓட்டிக் கொண்டிருந்த அதியன் அவள் சொன்னதை கேட்டு சிரித்தான். "ஆவாரம் செடியில வாங்கிய அடி இன்னும் மறக்கல தாயே.." என்றான்.

"இருந்தாலும் பாரேன்.. எங்கப்பனுக்கு என் மேல எம்புட்டு நம்பிக்கைன்னு.. நீ கேட்டவுடனே ஊருக்கு அனுப்பி வுட்டுடாரு.." என்றாள் கன்னத்தில் கை வைத்தபடி.

'நான் என் இரண்டாம் கிளாஸ் ஓவிய போட்டியில் பரிசா வாங்கின சர்டிபிகேட்டோட ஜெராக்ஸ் காப்பி கூட உங்க அப்பாக்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சா நீ இப்படி சொல்ல மாட்டா..' என நினைத்து பெருமூச்சி விட்டவன் சட்டென காரை வேகமாக ஓட்டினான்.

மலைப்பாதை வளைவில் காரை வேகமாக திருப்பியவன் காரின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.

"செமையா இருக்கு.. இன்னும் கொஞ்சம் வேகமா போ.." என்று சொல்லி கை தட்டினாள் அவள்.

"நம்மளை ஒரு லாரி பாலோவ் பண்ணி வருது.." என்று சொன்னவன் அதிக கவனத்தோடு காரை ஓட்டினான்.

"அட ஆமா லாரி.." என்று திரும்பி பார்த்து சொன்னவள் இவன் பக்கம் பார்த்தாள்.

"இதே லாரிதான் விஷ்வாவும், பொன்னாவும் வந்த காரை இடிச்சி தள்ளி இருக்கு.." என்றவன் யோசனையில் ஆழ்ந்தான்.

"பொன்னா காரை லாரி இடிச்சிச்சா.? அதுவும் இந்த லாரியா.? நீ காரை நிறுத்து.. நான் போய் அவன் குடலை உருவி மாலையா போட்டுட்டு வரேன்.." என்றவளின் பக்கம் நொடி நேரம் திரும்பி பார்த்தான் அவன்.

"அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்ப அந்த லாரி நம்ம காரை இடிக்க வருது. அதனால நான் சொல்ற மாதிரி செய்.
முதல்ல நீ உன் சீட் பெல்டை கழட்டு.." என்றான். தனது சீட்டின் பெல்டையும் ஒற்றை கையால் கழட்டினான்.

"இப்ப வளைவு வந்தவுடனே நான் காரை ஸ்லோவ் பண்ணி நிறுத்துறேன்.. நீ சட்டுன்னு கீழே இறங்கிடு.. பிலீவ் யுவர்செல்ப்.." என்றவன் வளைவு வந்தவுடன் சட்டென காரை நிறுத்தினான்.

அதியன் இந்த பக்கம் பாய்ந்து இறங்க, செங்கா குழப்பத்தோடு மறுபக்கம் இறங்கினாள். இவள் பக்கம் ஓடி வந்து, இவளது கையை பற்றிக் கொண்டவன் ஓடிப்போய் அருகேயிருந்த மரங்களின் இடையே நின்றான்.

அவர்கள் முழுதாக மறைந்து நிற்கும் முன்பே அந்த லாரி காரை மோதி தள்ளியது.

"அச்சோ.. கார் போச்சே.." வருத்தமாக சொன்னாள் செங்கா.

"அதை விடு.. இன்ஸ்சூரன்ஸ் இருக்கு.. இந்த லாரி டிரைவரை பிடிக்கணும் வா.." என்றவன் சுற்றும் முற்றும் பார்த்து கட்டை ஒன்றை எடுத்து கொண்டான். அவளை கை பிடித்து அழைத்துக் கொண்டு ஓடிவந்து லாரியின் பின்னால் ஓடினான்.

பள்ளத்தாக்கில் கார் உருண்டு விழுந்ததும் லாரியின் டிரைவர் லாரியை விட்டு கீழே இறங்கி நின்றான். அவனது பாக்கெட்டில் ஒலித்த ஃபோனை எடுத்து காதில் வைத்தான்.

"இந்த முறை துளி மிஸ் ஆகல.. ஆள் ஸ்பாட் அவுட் ஆகியிடுவான்.. அந்த அளவுக்கு இடிச்சி தள்ளியிருக்கேன்.." என்றவனின் தலையில் நச்சென்று கட்டையை அடித்தான் அதியன். அவன் ஃபோனை கீழே விட்டுவிட்டு மயங்கி விழுந்தான். ஃபோனை எடுத்து அழைப்பை துண்டித்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் அதியன்.

பள்ளத்தாக்கை எட்டி பார்த்தான் அதியன். "மை பேவரிட் புஜ்ஜிமா.. இப்படி கவிழ்ந்து போச்சே.." என்று புலம்பினான்.

செங்கா காரை பார்த்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள்தான் தெரிந்தது.‌

அதியன் ஒலித்த தன் ஃபோனை எடுத்தான்.

"அண்ணா.. அந்த லாரி டிரைவர் இன்னைக்கு உன்னை பாலோவ் பண்ணி ஆக்சிடென்ட் பண்ண போறான்.." என்றான் செழியன் அவசர குரலில்.

"டூ லேட்.. அந்த டிரைவர் இப்ப என் காலடியில் மயங்கி கிடக்கறான்.. என் கார் பள்ளத்தாக்குல உருண்டு கிடக்குது.. நானும் செங்காந்தளும் அடிக்கற வெயில்ல சருகா காய்ஞ்சி போய் நின்னுட்டு இருக்கோம்.." என்றான்.

"அண்ணா.. ஆர் யூ ஓகே..?" பதற்றமாக கேட்டான் செழியன்.

அதியன் தன் நெஞ்சின் மீது தடவி விட்டுக் கொண்டான். "நல்லாதான் இருக்கோம்.. நேத்து நைட் நீங்க ஃபோன் பண்ணலன்னா இன்னேரம் நானும் என் காரோடு உருண்டு கிடந்திருப்பேன்.. விஷ்வா பொன்னாக்கு பதிலா அதியன் செங்கான்னு பேரை மட்டும் மாத்திட்டு ஆத்தர் மறுபடியும் அதே கதையை திருப்பி எழுதியிருப்பாங்க.." என்றான்.

"சாரி அண்ணா.. பூங்கோதை ஆன்டி அவங்க ஓட்டி வந்த காரை லாரி இடிச்சதை பத்தி நாலஞ்சி நாள் முன்னாடிதான் சொன்னாங்க.. ஆக்சிடென்ட் பின்னாடி சீமா நிறுவனம் இருக்கிறதை கண்டுபிடிக்க லேட் ஆயிடுச்சி.. கடைசி நேரத்துலதான் உனக்கும் சொல்ல முடிஞ்சது.. இப்ப நீ ஓகேதானே.? எங்கேயாவது காயம் பட்டுடுச்சா.?" என்றான்.

"இல்ல.. லாரி காரை இடிக்கும் முன்னாடியே நாங்க கீழே குதிச்சிட்டோம்.. சேப்பாதான் இருக்கோம்.." என்று சொன்னான் அதியன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1098

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN