முகவரி 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குணநாதன், கௌசல்யா தம்பதிகளின் ஒரே அரும் தவப் புதல்விதான் இந்த அனுதிஷிதா. அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தாய் கௌசல்யா இவளின் பதினான்காவது வயதில் இறந்து விட, பதினேழு வயதில் இவள் வாழ்வில் நடக்கக் கூடாத சம்பவம் சிலது நடக்கப் பெற்று அதைப் பார்த்த அதிர்ச்சியில் அன்றே விண்ணுலகம் சென்று விட்டார் தந்தை குணநாதன்.

அவரின் பூர்விகம் புதுக்கோட்டையில் உள்ள இந்த நெடுவாசல் கிராமம் என்பதாகும். அனுதிஷிதா வாழ்வில் நடந்த சில பல பிரச்சனைகளால் பிறந்த ஒரு நாள் குழந்தையான மான்வியைத் தூக்கிக் கொண்டு அவளுடைய தாத்தாவுக்கு சொந்தமான இந்த பண்ணை வீட்டிற்கு குடி வந்து விட்டாள் அனு. அவளுக்குத் துணையாக அவளின் தந்தை வீட்டில் தோட்ட வேலை செய்த முனீஸ்வரனும் அவர் மனைவி பார்வதியும் இவளுடனே பிடிவாதத்துடன் இங்கு வந்து விட்டார்கள். அவர்களுக்குப் பிள்ளை இல்லாததால் அனுதான் இருவருக்கும் மகள். மான்வி அவர்களின் செல்லப் பேத்தி. அதுமட்டுமில்லாமல் தங்கள் முதலாளியின் பேத்தி என்பதால் அந்த வீட்டு இளவரசியும் அவள் தான். அதிலும் மிகவும் பூஞ்சை மனம் கொண்ட பார்வதிக்கு மான்வி தான் உலகமே. இங்கு ஒரே ஒரு ஓட்டு வீடு மட்டும் இருந்ததால். தம்பதிகள் இருவரும் சுதந்திரமாக தங்கிப் புழங்க ஒரு சிறு அறையுடன் கூடிய புழக்கடையை முன்பக்கம் அவர்களுக்குக் கட்டி கொடுத்தது அனு தான். அவர்கள் இருவரும் தனியாகத் தங்கினாலும் இருவரின் உணவுப் பழக்கங்கள் எல்லாம் அனுவின் ஓட்டு வீட்டில் அவளுடன் தான்.

பின் அனு குளித்து முடித்து வந்தவள் மகளுக்குப் பிடித்த இளநீர் பாயாசம், தினை மாவு லட்டு, வடை, இட்லி, சட்னி, சாம்பார் என்று எல்லாம் தயார் செய்து டேபிள் மேல் வைக்கும்போது அவள் கைகளோ இதை எல்லாம் விட மகளுக்கு மிகவும் பிடித்த ரசகுல்லாவை நேற்றே இவள் செய்து பிரிஜ்ஜில் வைத்த அதனிடம் சென்றது. அப்போது, ‘ஷிதா செல்லம், ரசகுல்லா நம்ம மகளுக்கு மட்டுமா பிடிக்கும்? அப்போ உன் மாமனுக்கு இல்லையா செல்லம்மா?’ கணவனின் குரல் எதிர்பார்ப்புடன் அவளை வருடவும், அதில் உடலில் மின்சாரம் பாய கண்கள் மூடி தன்னை சமன் செய்தவள், “திருடா... காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா?” என்ற செல்ல சிணுங்கலுடன் மகளை நாடிச் சென்றாள் அனு.

“மான் குட்டி எழுந்திருங்க... இன்னைக்கு என் செல்லத்துக்கு பிறந்தநாள் ஆச்சே! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் செல்லம்மா” இவள் மகளை வருடி வாழ்த்து சொல்லி எழுப்ப

‘ஷிதா, உனக்கு நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன்? செல்லம்மா என்பவ என் வாழ்வில் ஒருத்தி தான். அது நீ மட்டும் தான்! நம்ம மகளை மான் குட்டின்னு கொஞ்சி கூப்பிடு’ என்ற கணவனின் குரலை உள்வாங்கியவள், “அச்சோ! ரொம்பத் தான்...” என்றவள்

“மான் குட்டி எழுந்திரு டா... இன்னைக்கு நாம் கோவிலுக்கு போகணும். என் முயல் குட்டி தானே நீங்க? எழுத்திரு டா....” என்ற படி இவள் மகளை மறுபடியும் எழுப்ப

அவளோ, “ம்மா...” என்ற சிணுங்கலுடன் தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தது கொண்டது அந்த வாண்டு.

“அப்படியே அப்பா மாதிரி” என்று மகளின் செயலைக் கண்டு முணுமுணுத்தவள், “மான் குட்டி எழுந்திரு...” என்று குரலை உயர்த்த மகளோ சிணுங்கலுடன் அவளிடம் இன்னும் ஒன்றவும், தன் ஐந்து வயது மகளை அலேக்காக கைகளில் தூக்கிக் கொண்டு பின் கட்டு சென்றவள் அங்கு பார்வதி ஆன்ட்டி மகளுக்காக போட்டு வைத்திருந்த வெந்நீரில் மகளைக் குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து இளநீர் பாயசத்தையும் வடையையும் அவளுக்கு ஊட்டி முடித்து சந்தன நிற காட்டன் புடவையில் இவள் கிளம்பி வெளியே வர, தோட்டத்தில் பூத்த கனகாம்பரத்தைக் தொடுத்து எடுத்துக் கொண்டு கைவசம் இன்னும் சில பட்டன் ரோஸ் பூக்களுடன் அவள் முன்னே நின்ற பார்வதி, அனுவின் அழகை போற்றுபவராக, “அப்படியே அம்மன் உற்சவ சிலை மாதிரி இருக்க அனும்மா” என்ற படி அவளிடம் பூக்களைக் கொடுக்க

சின்ன சிரிப்புடன் அவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டாள் நம் கருப்பு நிறத்தழகி. ஆமாம்… அனுதிஷிதா கருப்பு தான். கோவில் கர்ப்ப கிரகத்தில் இருக்கும் அம்மன் சிலையின் நிறம் தான் இவள். அழகும் அந்த அம்மனுக்கு ஈடான அழகு தான்.

முன்பெல்லாம் வாய் ஓயாமல் கொஞ்சும் கிளியாய் மிழற்றியவள் இப்போதெல்லாம் கடிகாரத்திற்குள் அடை பட்டிருக்கும் குயிலாய் எண்ணி எண்ணி தான் பேசுகிறாள். பேச்சு மட்டுமா? கார்கால மின்னலாய் அவள் முகத்தில் ஒளிர்ந்த சிரிப்பு என்னும் மின்னல் கூட மறைந்து இப்போதெல்லாம் அவள் முகத்தில் கார்கால மேகமே குடி கொண்டிருக்கிறது.

கோவிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய பூக்களை மட்டும் எடுத்து தனியே வைத்தவள் அடுத்து ரோஸ் கலர் பட்டன் ரோஸை இவள் கையில் எடுத்த நேரம் ‘ம்ஹும்... நீங்க மட்டும் எப்படி தான் இப்படி ரோஸ் கலர் பட்ரோஸ் மாதிரி நிறத்திலும் அதன் மேன்மையிலும் இருக்கீங்களோ!' பொறாமையுடன் ஒரு நாள் கணவனிடம் சண்டை போட்டதை நினைத்துப் பார்த்தவளின் விரல்களோ அதன் மென்மையை வருடி விட, அன்றைய நினைவில் அவள் கண்கள் கலங்கியது. உடனே அவளுக்குள் இருக்கும் திருடன், ‘செல்லம்மா…’ காதலோடு அழைத்து சமாதானத்திற்கு வர

அப்போது அவள் மகள் “ம்மா…” என்ற அழைப்புடன் அவளின் காலைக் கட்டிக் கொள்ளவும்,

நிஜத்திற்கு வந்தவள் மகளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு “என்ன டா?” என்று கேட்க,

“ம்மா... ட்ரூ போகல?” அங்கு நிறுத்தியிருந்த கைனடிக் ஹோண்டாவைக் காட்டி அவள் கேட்க

“இதோ டா... அம்மாவும் ரெடி... என் மான் குட்டியும் ரெடி. ஜாலியா வண்டியில் போகலாமா?” மகளுக்கு கிச்சு கிச்சு மூட்டி பதில் சொன்னவள், பின் தன் கையிலிருந்த ஒரு துண்டு மல்லிகை சரத்தை பார்வதியின் கொண்டையில் வைத்து விடவும்

“அனும்மா... நீயும் ஒரு துண்டு பூ வையேன்” பார்வதி எதிர்பார்ப்புடன் நைந்த குரலில் சொல்ல

அதேநேரம் அவளுக்குள் இருக்கும் திருடனோ, ‘ஆமா டி ஷிதா... பூ வச்சிக்கோ டி. நீ உன் தலைக்குப் பூ வச்சி ஆறு வருஷம் ஆகுது டி’ என்று அவனும் கெஞ்ச, அதைத் தவிர்த்தவள்


“புருஷன் இல்லேனுனு ஆன பிறகு மனைவி பூ பொட்டு வைக்க கூடாது ஆன்ட்டி” அவளுக்குள் இருக்கும் கணவனுக்கும் சேர்த்து இவள் பதில் தர

“அனும்மா... நீ எந்த காலத்தில் இருக்க? புருஷன் இறந்தா உடனே ஒரு பெண் பிறந்ததிலிருந்து வைத்துதிருந்த பூ பொட்டு எடுத்துடணுமா? அதை எடுத்து தான் புருஷன் மேலுள்ள அன்பு பாசத்தை வெளிப்படுத்தணுமா என்ன? உனக்கு சின்ன வயசு... நீ வெளி உலகம் போற பொண்ணு…” மேற்கொண்டு என்ன சொல்லி இருப்பாரோ

“அடி ஏய் பாரு... நல்ல நாள் அதுவுமா அனு புள்ளையை எதுக்கு அழ வைக்கிற? அது மனசுக்குப் பிடிச்சிருக்கறதை அது செய்யட்டும். அதுக்கு காவலாகவும், துணையாவும் இருக்கறது தான் நம்ம வேலை புரிந்ததா.. ”என்று மனைவியிடம் ஒரு அதட்டல் போட்ட முனீஸ்வரன்

“அனும்மா... உனக்கு எது சரின்னு படுதோ அதை செய் ம்மா...” அனுவின் தலை வருடி அவர் ஆறுதல் படுத்த
‘என் அப்பா ஏன் இப்படி இல்லாமல் போனார்?’ என்ற எண்ணத்தில் பழைய நினைவில் அனுவுக்கு மறுபடியும் கண்கள் கலங்கியது.

அப்போது “அனும்மா... மான்வி பாப்பா ஏதோ கேட்கிறாங்க பார்” பார்வதியின் உலுக்கலில் தன் சுயத்துக்கு வந்தவள்

“ம்மா... கோயில் போகலையா?” என்ற மகளின் மறுபடி கேள்விக்கு

“இதோ டா..” என்றவள், மகளுக்கு சில பட் ரோஸை வைத்து விட்டவள் கூடவே அவள் ஆடைக்கு நிறத்திற்கு ஏற்ற நிறமான கனகாம்பரத்தையும் மகளுக்கு வைத்து விட

பார்வதியோ அனுவைத் தான் கண்கள் நிறைய பார்த்துக் கொண்டிருந்தார். படிய வாரி தழைய பின்னிய ஜடை. நெற்றியில் சின்னதாய் ஒரு சந்தன கீற்று. ஆமாம் கருப்பு பொட்டு கூட வைத்துக் கொள்ள மாட்டாள் இவள். காதில் சின்னதாய் வைரக் கம்மல். கழுத்தை ஒற்றி மெல்லிய சங்கிலி. இரண்டு கையிலும் ஒற்றைத் தங்க வளையல். ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் அழகான காட்டன் புடவை. காலில் கொலுசு கூட இல்லை. ஏன்… எந்த வித ஒப்பனையும் இருந்தது இல்லை. ஆனால் என்ன அழகு இந்த பெண்! என்று பார்வதி புதிதாய் அவளைப் பார்ப்பது போல் பார்த்து வைக்க, அவள் மகளுக்கு வேண்டிய தண்ணீர் பாட்டிலிலிருந்து மற்ற பொருட்களை எல்லாம் எடுத்துத் கொண்டு மகளுடன் வண்டியில் அமர்ந்தபடி இருவரிடமும் தலை அசைத்து அனு விடை பெற்றுச் செல்லவும்

‘எப்படி எல்லாம் வாழ்ந்த பொண்ணு... எப்படி எல்லாம் வாழ வேண்டிய பொண்ணு? இப்படி இருக்கே! இதற்கு பிறகாவது இந்தப் பெண் வாழ்வில் நல்லது நடத்திக் கொடுப்பா ஆண்டவா!’ என்று அனுவுக்காக வேண்டாமல் இருக்க முடியவில்லை அந்த முதிர்ந்த தம்பதிகளுக்கு.

மகளை வண்டியின் முன்புறம் நிற்கவைத்து சற்று தூரம் வீட்டைத் தாண்டி ஓட்டி வந்தவளின் கண்ணில் அந்த காலி மைதானம் பட... அங்கு ஒரு பக்க இரும்பு கேட்டில் மத்திய தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. குணநாதன் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது என்பதை தேதி, மாதம், வருடம் என அனைத்தையும் அங்கு பொறித்திருக்க, வண்டியை நிறுத்தி விட்டு அதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.

‘டாடி... நான் 1st மார்க் வாங்கி இருக்கேன் பாருங்களேன்...’ பதினைந்து வயது அனு ஓடி வந்து முகம் கொள்ளா சிரிப்புடனும் பெருமையுடனும் புரோகிரஸ் கார்டை குணநாதன் முன் நீட்ட...

‘ப்ச்சு... என்ன பாப்பா இது? கொஞ்சம் கூட மேனர்சே இல்லாமா நடந்துக்கிற? நான் எவ்வளவு முக்கியமானா ஃபைல் பார்த்துட்டு இருக்கேன் தெரியுமா? இப்போ வந்து அதை இதைன்னு நீட்டுற...’ தந்தை கண்டன குரலில் அதட்ட அனுவின் முகமோ வாடி விட்டது.

அதைக் கண்டவர், ‘பாப்பா... இப்போ நான் எடுத்திருக்கிற விஷயம் ரொம்ப பெரிசு. இப்படி ஒரு தொழிற்சாலை நான் பிறந்த ஊரில் வரணும் என்பது என் கனவு, லட்சியம் எல்லாம். அதற்கான வேலையைப் பார்க்கும் போது இப்படி இடையில் வந்து சிரமப் படுத்திறீயே! அதனால் தான் அப்பா கோபப் பட்டேன் பாப்பா’ குணநாதன் தன் செல்ல மகளுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க

“இப்படி ஒரு தொழிற்சாலை உங்க மூலமா வந்தா… அதுவும் உங்க சொந்த ஊரில் வந்தா தானே பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். அந்த பணம் எல்லாம் யாருக்கு உங்க மகளுக்கு தானே? முதலில் அதைச் சொல்லுங்க” என்று பொடி வைத்து பேசிய படி அங்கே வந்தார் குணநாதனின் இரண்டாவது மனைவி. அதாவது அனுதிஷிதாவின் சித்தி சுமதி.

அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவளுக்கு ‘தந்தை சம்பாரித்த பணம் மட்டும் இல்லை சித்தி… அவர் செய்த பாவத்திற்கான தண்டனையும் எனக்கு தானே இப்போது வந்து சேர்ந்து இருக்கிறது’ என்று எண்ணாமல் அனுவால் இருக்க முடியவில்லை.

தாய் ரொம்ப நேரமாக அந்த மைதானத்தையே வெறித்துப் பார்க்கவும், “ம்மா... போலாம்...” என்று மகள் அவள் பார்த்த இடத்தைச் சுட்டிக் காட்ட ஒரு முடிவுடன் மகளைத் தூக்கிக் கொண்டு முதல் முறையாக அந்த மைதனதிற்குள் நுழைந்தாள் அவள். ஆமாம் இந்த ஐந்து ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக அவளுடைய பாதம் இந்த மண்ணைத் தொடுகிறது.

தந்தை செய்த ஊழல்கள், பாவங்கள் அனைத்துக்கும் மகளான இவளுக்குத் தண்டனை கிடைத்த பிறகு அவருடைய சம்பந்தப்பட்டது எல்லாவற்றையும் விட்டு விட்டு கடந்த ஐந்து வருடமாக விலகி இருந்தவள், தந்தையுடைய கனவு லட்சியமான இந்த இடத்தில் தான் அவருடைய ஆத்மா இருக்கும் என்பதால் ஐந்து வயதான தன் மகள் மான்வி பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட தன் தந்தையிடம் இன்றைய பிறந்தநாளில் மகளை காட்ட வந்திருக்கிறாள்.

“அப்பா, நீங்க என்ன ராணி மாதிரி வளர்த்தீங்க. அதெல்லாம் உங்களை நம்பின மக்களை ஏமாற்றி ஊழல் செய்து சேர்த்த பணத்தில் கிடைத்ததுன்னு எனக்குப் பிறகு தான் தெரிந்தது. அன்று நான் ஆனந்தமா இருந்தேன் ப்பா. ஆனா இன்று நான் நிம்மதியா இருக்கேன் ப்பா. அப்போது நான் பெரும் செல்வாக்கு படைத்த மத்திய அமைச்சர் குணநாதனின் மகள் அனுதிஷிதா.

ஆனா இன்று நான் சின்னதாய் நர்சரி வைத்து அதில் தினமும் உழைத்து வாழ்க்கையை வாழும் உழைப்பாளி ப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் கணவர் சொன்ன மாதிரி எனக்கும் என் மகளுக்கும் அது போதும் ப்பா” என்று உறுதியுடன் சொன்னவளின் கால்களோ அந்த இடத்தை விட்டு நகர ஓர் அடி முன்னே எடுத்து வைத்ததையும் மீறி அப்படியே நின்றது.

அடுத்த நொடி, “நீங்கள் செய்த பாவக் கணக்கினால் நான் அனுபவித்த துன்பம் எல்லாம் போதும் ப்பா. இனி உங்க மகள் என்ற அடையாளம் இல்லாமல் பாவத்திற்கான சுவடு இல்லாமல் சாகிற வரை வாழ்வேன் ப்பா...” உறுதியுடன் தன் வாழ்வின் சங்கல்பமே அது தான் என்பது போல் அந்த இடத்தை விட்டு வீறு கொண்டு நகர்ந்தாள் அனுதிஷிதா.

ஆனால் பாவம்! அவளுக்குத் தெரியவில்லை… அவள் தந்தை செய்த பாவம் மகளான இவளுக்கு இந்த பிறவியில் இவள் சாகும் வரை தொடரும் என்று...
 
Oooooo... Iva அப்பா மந்திரி ah.... Enna aachi iva life la.... அந்த அதிர்ச்சி தாங்காமல் ava அப்பா இறந்து poitaara.... Maanvi piranthu ஒரே நாள் இருக்கும் pothe இங்க Vanthutu இருக்கா.... Ava husband இப்போ uyiroda இல்லையா.... Ava அப்பா பண்ணினா பாவத்துல இருந்து விலகி இருக்கனும் nu ninaikira.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Oooooo... Iva அப்பா மந்திரி ah.... Enna aachi iva life la.... அந்த அதிர்ச்சி தாங்காமல் ava அப்பா இறந்து poitaara.... Maanvi piranthu ஒரே நாள் இருக்கும் pothe இங்க Vanthutu இருக்கா.... Ava husband இப்போ uyiroda இல்லையா.... Ava அப்பா பண்ணினா பாவத்துல இருந்து விலகி இருக்கனும் nu ninaikira.... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
wowwww.... boy fly kissboy fly kissboy fly kisssmilie 13smilie 13smilie 13smilie 13nanringa sis... heart beat heart beat heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN