முகவரி 5

P Bargavi

New member
இதே சாலிகிராமத்தில் இரண்டு வீதி தள்ளி தான் வெண்பாவின் வீடும் மிருடவாமனின் பங்களாவும் உள்ளது. என்னதான் தம்பியும் அவன் மகனும் தன் பொறுப்பு என்று வெண்பா நினைத்திருந்தலும் தம்பி பங்களாவில் தங்க அவள் விரும்பவில்லை. அதனால் இரண்டு வீதி தள்ளி இவர்கள் குடும்பம் இருந்தது. மிருடன் தொழில் விஷயமாக வெளியூர் செல்லும் நேரம் எல்லாம் தன் அத்தை வீட்டில் இருக்கும் ஜீவா, அவன் தந்தை இங்கு இருக்கும்போது எல்லாம் அவன் தந்தை வீட்டில் அவனுடன் தான் இருப்பான்.

ஹோமிலிருந்து கஜேந்திரன் குடும்பம் மிருடன் வீட்டிற்கு வர காலை பதினோரு மணி ஆனது. இவர்கள் கார் உள்ளே நுழையவும்... அதற்கு முன்பே சுஜிதாவின் கார் வாசலில் நின்றிருந்தது. இப்போது தான் அவளும் வந்திருப்பாள் போல. அவள் காரிலிருந்து இறங்கும் நேரம் இவர்களும் இறங்க, அவள் போட்டிருந்த ஆடையைப பார்த்து முகம் சுளித்தார்கள் கணவன் மனைவி இருவரும்.

இவளைப் பார்த்ததும் ஜீவா, “சித்தி!” என்ற கூவலுடன் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் ஓடி வந்து அவளை அணைத்துக் கொள்ள, அவனுக்கு நிகரான மகிழ்ச்சியுடன் இவளும் அவனை வாரி அணைத்துக் கொண்டவள்,

“இன்னைக்கு என் ஜீவா பாய்க்கு பர்த்டே இல்ல... ஹாப்பி பர்த்டே டா தங்கம்” என்ற வாழ்த்துடன் அவள் அவன் கன்னத்தில் முத்தமிட, கோபத்துடன் தன் கன்னத்தில் பதிந்த அவள் லிப்ஸ்டிக் கரையை அழுத்த துடைத்தது அந்த வாண்டு.

“ஏன் சுஜி வெளியவே நின்னுட்ட? வா… உள்ளே வா” வெண்பா அழைக்க, எல்லாரும் உள்ளே வந்தனர்.

உடனே சுஜி, “என் ஜீவா தங்கத்துக்கு மம்மி என்ன கிப்ட் வாங்கி வந்திருக்கேன் பாரு...” என்றவள் ஒரு தங்க பிரேஸ்லேட்டை எடுத்து அவனுக்கு அணிவித்து விட,

சந்தோஷ சாரலுடன், “தாங்க்ஸ் சித்தி...” என்ற ஜீவாவை குரோதத்துடன் முறைத்தவள்,

“உனக்கு எத்தனை தடவை சொல்றது ஜீவா? என்னை சித்தின்னு கூப்பிடாத மம்மின்னு அழைக்கச் சொல்லி...” வந்ததும் அவன் சித்தி என்ற அழைப்பை நினைவில் கொள்ளாதவள் இப்போது கோபப்பட...

அவனோ கொஞ்சம் கூட பயம் இல்லாமல், “உங்களை சித்தின்னு தான் சொல்லணும்னு டாடி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க சித்தி. இனி நான் உங்களை அப்படி தான் சொல்லுவேன்” என்று அழுத்தம் திருத்தமாக உரைத்தான் அந்த பெரிய மனிதன்.

‘ச்சே... இந்த சின்னப் பையன் மனசை எப்படி எல்லாம் கெடுத்து வச்சிருக்கார் இந்த மனுஷன்...’ என்று மனதிற்குள் மிருடனை வறுத்து எடுத்தவள் ஒருவித கேள்விகளுடன் இவள் வெண்பாவைப் பார்க்க…

அவளோ தர்மசங்கடத்துடன், “வந்தவங்களுக்கு ஜூஸ் கொடுக்காமல் இந்த பத்ரி அண்ணா என்ன செய்றார்?” என்றவள் “பத்ரி அண்ணா, நம்ம வீட்டுப் பொண்ணு சுஜி வந்திருக்கா பாருங்க… அவளுக்கு ஜூஸ் கொண்டு வாங்க” என்று தற்போது வெண்பா உள்நோக்கி அந்த வீட்டு சமையல்காரரிடம் குரல் கொடுக்கவும், அவள் சொன்ன ‘நம்ம வீட்டுப் பொண்ணு’ என்ற வார்த்தையில் தானாகவே உள்ளம் குளிந்தாள் சுஜிதா.

பின் வெண்பா, “ஸ்ரீ... என்னமா இங்கேயே நின்னுட்டு அம்மா வாயையே பார்த்திட்டு இருக்க? போ... மேலே உங்க ரூமுக்குப் போய் நீயும் ரவீனாவும் வேறு உடை மாத்துங்க” என்று மகளை விரட்டியவர் பின் கணவன் பக்கம் திரும்பி, “என்னங்க… உங்களுக்கு வேற தனியா சொல்லணுமா? போங்க… நீங்களும் போய் ஜீவாவுக்கும் கமலுக்கும் உடையை மாற்றி விடுங்க. பிறகு எல்லோரும் ரிலாக்ஸா கொஞ்ச நேரம் உட்காருங்க. இதோ நான் சுஜிக்கு ஜூஸ் கொடுத்திட்டு நம்ம அறைக்கு வரேன்” என்று எல்லோருக்கும் கட்டளை இட்டவள், பின் தான் அந்த வீட்டின் மூத்த பெண்மணி என்ற முறையில் வெண்பா சமையலறை பக்கம் நகரவும்… அங்கிருந்த அனைவருமே வெண்பா சொன்ன வேலைகளைப் பார்க்க நகர்ந்தனர்.

பின் கையில் ஜூஸ் உடன் சுஜியிடம் வந்த வெண்பா, “சுஜி... நீயும் ஃபிரெஷ் ஆகிட்டு வா. பின் மதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்போ தான் ஈவினிங் பார்ட்டி அப்போ ஃபிரெஷ்ஷா இருப்ப” என்றபடி ஜூஸை கொடுத்தவள், பின் அங்கிருந்த மேகஸினை எடுத்து, “போர் அடிச்சா இதைப் படிச்சிட்டு இரு சுஜி” என்க

“நான் எப்போதும் ஃபிரெஷ்ஷா தான் இருப்பேன் அண்ணி. சரி.. முதலில் மிருடன் அத்தான் எங்கேன்னு சொல்லுங்க. கடந்த ஒரு மாதமா நான் அவர் கிட்ட பேசணும்னு இருக்கேன். ஆனால் அவரை பார்க்கவே முடியல” இவள் கோபத்தில் சலித்துக் கொள்ள

புத்தகங்களை எடுத்து அவள் முன் நீட்டிய வெண்பாவின் கைகளோ அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே தன்னை சமாளித்தவள், “ஓ… பார்த்துப் பேசலாமே சுஜி. ஈவினிங் பார்ட்டிக்கு வந்திடுவான் உன் அத்தான். அப்போ பார்த்துப் பேசேன்...”

“என்ன அண்ணி பேசுறீங்க? பார்ட்டியில் எப்படி நான் அத்தான் கிட்ட ஃப்ரீயா பேச முடியும்? நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன். அதைப் பற்றி நான் அவர் கிட்ட தனியா தான் பேச முடியும். இப்போ அவர் எங்க இருக்கார்னு மட்டும் சொல்லுங்க அண்ணி நான் பேசிக்கிறேன்” இவள் தன் பிடிவாத்தில் நிற்க

என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்துப் பின் எதையோ சொல்லுவோம் என்ற எண்ணத்தில் வெண்பா வாயைத் திறக்க இருந்த நேரம் அந்த வீட்டை நிர்வாகம் செய்பவர், “மேம்... நீங்க வந்ததும் உங்களைத் தன் அறைக்கு வந்து வாமணன் சார் பார்க்கச் சொன்னாருங்க மேடம்” என்ற தகவலை நேரம் தாழ்த்தி இப்போது சொல்ல… வெண்பாவுக்கோ மனதிற்குள் ஐயோ என்று ஆனது.


“சூப்பர் அண்ணி! அத்தான் அவர் அறையில் தான் இருக்கிறாரா? அப்போ நான் மேல போய் பேசிக்கிறேன்” என்ற சுஜி குதூகலித்த படி மாடிபடி ஏற எத்தனிக்க..


“சுஜி... சுஜி... கொஞ்சம் பொறுமா. அவன் அங்கு உள்ளே என்ன நிலையில் இருக்கானோ... நான் போய் பார்த்துப் பேசிட்டு கூப்பிடறேன் நீ இப்போ போகாத...” வெண்பா கையைப் பிசைந்து கொண்டு கெஞ்ச


“அண்ணி... அத்தான் எப்படி இருந்தா என்ன? அதான் நாங்க இரண்டு பேரும் கல்யாணம் செய்துக்கப் போறோம் இல்ல? நான் அவரை அப்படி பார்க்கிறதோ... இல்லை அவர் என்னை அப்படி பார்க்கிறதோ தப்பு என்ன அண்ணி இருக்கு?” இந்த இருபது வயது மங்கையோ வாழ்க்கையைத் தான் பார்க்கும் கோணத்தில் சொல்லிவிட்டு படி ஏறி சென்று விட


‘நாம் என்ன அர்த்தத்தில் சொன்னோம்... இவள் என்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டாள்’ என்பதை உணர்ந்ததும் வாய் பிளக்க அசந்து போய் நின்று விட்டாள் முப்பத்தி ஆறு வயது வெண்பா.


மேலே என்ன நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் அவளுடைய இதயமோ முரசு கொட்டத் தான் செய்தது. மேலே சென்ற அந்த இளம் மங்கை சும்மா போகாமல் வம்பை விலைக்கு வாங்கியே தீருவேன் என்ற முடிவுடன் ஜீவாவையும் தூக்கிக் கொண்டு மிருடன் அறைக்குச் செல்ல, அங்கே…


“ஏய்... ஏன் டி என்ன விட்டுப் போன? ஏய்... ஏன் டி என்ன விட்டு ஒரேடியா போன?” என்று நாக்கு குழற டேபிள் மேல் சரிந்தபடி பிதற்றி கொண்டிருந்தான் தி கிரேட் மிருடவாமணன்.


வந்த வேகத்தில் அவன் உளறுவதை அறியாமல் மிருடன் முன்பிருந்த மது பாட்டில்களை எல்லாம் ஒரு வித அசூயையில் பார்த்த சுஜி. “ஜீவா தங்கம்... உன் டாடியைக் கூப்பிடுங்க” இவள் சொல்லிக் கொடுக்க, அந்த மழலையும் அச்சு பிசுகாமல் அப்படியே அழைக்க...

அதைத் தன் மனப் பிரம்மை என்று நினைத்த அவனின் தந்தையோ நிமிர்ந்தும் பார்க்காமல், “my son... my sweet heart.... நீ மட்டும் இல்லைனா என் வாழ்வு என்ன டா ஆகி இருக்கும்?” மறுபடியும் போதையில் இவன் உளற


“டாடின்னு சத்தமா கூப்பிடு டா...” சுஜி பல்லை கடித்த படி சொல்லி கொடுக்க


“டாஆஆஆடிஈஈஈஈ....” மகன் குரலில் அடித்துப் பிடித்து நிமிரந்தவன், எதிரில் நின்றிருந்த சுஜியைப் பார்த்ததும் கோபம் தலைக்கு ஏற,


“அக்க்காஆஆஆஆஆஆ.....” கழுத்து நரம்புகள் புடைக்க இவன் போட்ட கூச்சலில் அந்த கட்டிடமே நடுங்கியது.


தம்பியின் குரலில் அடுத்த நொடி மூச்சிறைக்க ஓடி வந்த வெண்பாவைப் பார்த்தவன், “அக்கா... சுஜியையும் ஜீவாவையும் எதுக்கு என் அறைக்கு இப்போ அனுப்பின? நான் இன்றைக்கு யாரையும் பார்க்க மாட்டேன்னு உனக்குத் தெரியும் இல்ல?” கண்கள் கோவைப்பழம் என சிவந்திருக்க, ரௌத்திரத்துடன் இவன் முழங்கவும்,


வெண்பாவுக்கு உள்ளுக்குள் கை கால்கள் வெடவெடத்தாலும் அதை மறைத்தவள், “டேய்... நீ தானே டா நாங்க வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொன்ன? ஒருவேளை ஜீவாவைப் பார்க்கக் கேட்டியோன்னு சுஜி கூட அவனை அனுப்பி வச்சேன்” சுஜி செய்த அதிகப்படி தவறால் இவள் பொய்யாய் இப்படி எல்லாம் சமாளிக்க


“என் மகனை எப்போ பார்க்கணும்னு எனக்கு தெரியாதா? நான் நீங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தாச்சான்னு தெரிந்து கொள்ள தான் உன்னையை மட்டுமே என்னை வந்து பார்த்திட்டுப் போகச் சொன்னேன்” மறுபடியும் இவன் உறும…


‘என்ன தான் குடிச்சாலும் எங்களை பார்க்கிறதில் மட்டும் சரியா இரு டா’ வெண்பா மனதிற்குள் நினைக்க


இவ்வளவு கலவரத்திலும் தந்தையின் கோப முகத்தைப் பார்த்த ஜீவா தன் உதடு துடிக்க, “டாடி...” என்ற சொல்லுடன் தந்தையை நோக்கி கை நீட்டவும்...


சுஜியை ஒரு முறை முறைத்தவன், “my son... டாடிக்கு இப்போ fever தங்கம். இந்த நேரத்திலே டாடி உன்னைத் தூக்க மாட்டேன்னு உனக்கு தெரியும் இல்ல? சோ அத்தை கூட போ. Evening டாடிக்கு fever சரியானதும் டாடி உன்னை வந்து பார்க்கிறேன்” இதமாய் சொன்னவன் அக்காளிடம் கண் ஜாடை காட்ட


ஜீவாவை தன் கையில் வாங்கிய வெண்பா, சுஜியையும் வரச் சொல்லி அழைக்க, அவளோ பிடிவாதத்துடன் அங்கயே நிற்கவும்... பின் தம்பியிடம் ஒரு தலை அசைப்புடன் விலகிச் சென்றாள் அவள். என்ன நடக்க போகிறதோ என்ற பயத்துடன் தான்.


“சுஜிதா, நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்” மிருடன் நிதானமாய் சொல்ல.


“அத்தான்… நான் உங்க கிட்ட பேசணும்” சுஜி பிடிவாதம் பிடிக்க.


“நான் உன் கிட்ட எத்தனையோ முறை சொல்லி இருக்கேன்… என்னை அப்படி கூப்பிடாதேனு. நீ எந்த எண்ணத்தில என்னைத் தொடர்ந்து வரேன்னு எனக்குத் தெரியும். அது நடக்காது... இதை நான் உன்னிடமும், உன்னைப் பெற்றவங்களிடமும் முன்பே சொல்லிட்டேன். So, get out. இதே எண்ணத்தோட மறுபடி இங்கே வராதே. மீறி வந்தா பிறகு நீ என்னை மிருடனா பார்க்க மாட்ட… மிருகமா தான் பார்ப்ப!” அவன் நிறுத்தி நிதானமாகச் சொல்லவும்


அவன் குரலில் இவளுக்கு முதுகு தண்டு சில்லிட்டது. ஆனாலும் தன் பிடிவாதத்திலேயே நின்றவள், “ஜீவா என் அக்கா பையன்... அவனை வந்து பார்த்துப் போக எனக்கு உரிமை இருக்கு”


“அந்த உரிமையை ஒரு எல்லைக்குள்ளே இருக்கனும் தான் சொல்றேன். உன் உறவு எல்லாம் ஜீவாவோட மட்டும் தான்... அதை மீறினா என்ன நடக்கும்னு எனக்கு தெரியாது. நீ எப்படின்னு எனக்கு தெரியும். So, stay away from me!” இவன் குரல் வெடிக்க அப்பட்டமாய் அவன் முகத்தில் அருவருப்பை காணவும்


அவன் வார்த்தைக்கு வார்த்தை தன்னை இழிவு படுத்தியதில் இவளுக்கு கோபம் தலைக்கு ஏற... நிதானத்தை இழந்தவள் அங்கிருந்த மது பாட்டில்களை தள்ளி விட்டு உடைக்க... அதில் ஒரு துண்டு அவன் ரோஜா நிறமான காலைப் பதம் பார்த்துவிடவும்... தன் பாதத்தில் வழிந்த ரத்தத்தை அவன் எந்த சலனமும் இல்லாமல் குனிந்து நோக்கும் நேரம்...


அவன் அமைதியில் நிதானத்திற்கு வந்தவள், அவன் பார்வையைத் தொடர்ந்து இவளும் அவன் பாதத்தைப் பார்க்க... அங்கு கண்ணாடி பதிந்து வழிந்து கொண்டிருந்த ரத்தத்திற்கு பதில் அவன் தன் பெருவிரலில் அணித்திருந்த மெட்டி வளையம் இவள் கண்ணில் பட்டு விட… இன்னும் ரௌத்திரமானாள் இவள்.


ஆமாம்… மிருடன் அவன் திருமணத்தின் போது அணிந்த மெட்டியை இன்னும் கழற்றாமல் தான் அணிந்து இருக்கிறான். அது அவன் விரலோடு ஒட்டி இருப்பதால், எங்கு அவன் வெளியே சென்றாலும் ஷூக்குள் மறைந்து விடும் அவ்வளையம் தற்போது அவன் வீட்டில் சகஜமாக இருக்கவும் தன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது அந்த மெட்டி வளையம்.…


கோபத்துடன் நிமிர்ந்தவள், “இன்னும் நீங்க அந்த பைத்தியக்காரி, அரை லூசைத் தான் நினைத்திட்டு இருக்கீங்களா அத்தான்? முடியாது… முடியவே முடியாது… எனக்கு நான் நினைத்தது தான் நடக்கணும். உங்க மனசிலிருந்து அந்த பைத்தியத்தல தூக்கி எறிய வைக்கிறேனா இல்லையா பாருங்க” என்று இவள் சங்கல்பம் இட


“ஏய்... u pich...” என்ற கூச்சலுடன் அவள் செவிப்பறையை ஓர் அறையில் கிழித்தவன்... கூடவே அவள் குரல்வளையை அழுத்திய படி, “என் வாழ்நாளில் இதுவரை நான் எந்த பெண்ணையும் இவ்வளவு அசிங்கமா திட்டியதும் இல்லை, கை நீட்டி அடித்ததும் இல்லை. ஆனா அதை நீ இன்று செய்ய வைச்சிட்ட! என்ன சொன்ன? என் மனைவியை நான் மறப்பேனா? அதை நீ நடத்துவீயா? அதற்கு நீ உயிரோட இருந்தா தானே?”ஒவ்வோர் வார்த்தைக்கும் இவன் தன் விரல்களால் அவள் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்ட.... அதேநேரம் உள்ளே நுழைந்த வெண்பா கண்ணில் பயத்துடன் தம்பியிடம் சுஜியை விட சொல்லி கெஞ்ச… அவனோ மூர்க்கதனமான கோபத்தில் சுஜியின் கதையை முடிக்கும் வேகத்தில் இருக்க.... அதில் வெண்பா எதிரிலேயே கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவை இழந்து கொண்டு இருந்தாள் சுஜிதா.
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN