முகவரி 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஜீவாவின் தாய் பிரேமியின் கூடப் பிறந்த ஒரே தங்கை தான் இந்த சுஜிதா. தற்போது பிரேமி உயிரோடு இல்லை. இவர்களின் தந்தை பேங்க் ஆபீசர். தாய் வீட்டுத் தலைவி. உயர்தர நடுத்தர வர்க்க குடும்பம் இவர்களுடையது. மூத்தவள் பிரேமி எதிலும் தந்தையைப் போல் வாய் சுத்தம், கை சுத்தம் என்று இருப்பவள். நேர்மை மற்றும் ஒழுக்கத்தின் திருஉருவம்.

ஆனால் சுஜிதா அப்படியில்லாமல் முழுக்க தாயைப் போல பணத்தாசை பிடித்தவளாக இருந்தாள். தாய்க்குத் தன் இரண்டு மகள்களை வைத்து சீக்கிரம் கோடீஸ்வரியாக உயர வேண்டும் என்று ஆசை. அதற்கு தாய்க்கு வளைந்து கொடுத்தவள் சுஜிதா மட்டும் தான். தன் பெரிய மகளின் மரணத்திற்குப் பிறகு முதலில் தன் பேரனான ஜீவாவை வைத்து தன் இளைய மகள் மனதில் மிருடனைப் பற்றி உரு ஏற்றிய போது அப்போது எல்லாம் அசட்டையில் தாய் சொன்னதற்காக அவனிடம் பேசிய சுஜி இப்போது மிருடன் சிறந்த தொழில் அதிபருகான விருதை வாங்கியதும் தற்போது முடிவே செய்து விட்டாள் இந்த ஜென்மத்தில் மிருடவாமணன் தான் அவள் கணவன் என்று.

இத்தனைக்கும் இவளுக்கு பக்கத்திலிருந்து உருபோட தாயும் தற்போது உயிரோடு இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் சுஜியின் தாய் தந்தையர் இருவரும் இறந்து விட்டார்கள். தற்போது சுஜி பெங்களூருவில் தங்கி பொறியியல் படிக்கிறாள். இன்று தன் காதல் மன்னனை சந்திக்க இங்கு வந்து, வாய் வார்த்தைகள் முற்றி இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

வெண்பாவுக்குப் பதட்டம் தொற்றிக் கொள்ள, எவ்வளவு சொல்லியும் தன் தம்பி கொலைவெறியுடன் சுஜியைப் பிடித்திருக்கும் பிடியை தளர்த்தவில்லை என்பதை பார்த்தவள், “டேய் மிருடா... என்மேல் சத்தியம்… அவளை விடுடா” இவள் கட்டளையிட

அடுத்த நொடி தன் கை விரல்களை தளர்த்தி இருந்தான் மிருடன். அப்போதும் ரௌத்திரம் குறையாமல், “என் மனைவியைப் பற்றி பேச இந்த இவளுக்கு என்னக்கா அருகதை இருக்கு? நானும் இவளை பேசாம போ... பேசாம போன்னு சொன்னேன். இவ கேட்டாளா?” என்றவன் சட்டென அவளைக் கீழே தள்ளி விட, தன் கழுத்தைப் பிடித்தபடி இருமிக்கொண்டே தரையில் சரிந்தாள் சுஜி.

அடுத்த கணம் தன் அக்காவின் பக்கம் திரும்பியவன், “நான் சொன்னா கேட்கணும். என்ன சீண்டிப் பார்த்தா யாரா இருந்தாலும் இதான் நடக்கும்” என்று எச்சரித்தவன்... பின் சுஜியியை நோக்கித் தன் ஆள்காட்டி விரலை நீட்டி, “இனி இந்த நாய் ஆயுசுக்கும் என் முகத்தில் முழிக்கக் கூடாது. ஜீவா என் மகன்... அவனை இவ பார்க்கணும்னு நினைத்தா அந்த எல்லையோட தான் இவ இருக்கணும்… சொல்லி வைக்கா. இதைக் கூட பிரேமிக்காகத் தான் செய்றேன்” என்று கட்டளையிட்டவன், கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த நொடி ஒரு சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்த படி தன் அறை பால்கனி பக்கம் சென்று அமர்ந்து விட்டான் மிருடவாமணன்.

அங்கிருந்த வேலையாட்கள் உதவியுடன் சுஜியை விருந்தினர் அறையில் தங்க வைத்து, மருத்துவரை வரவழைத்து, அவளுக்கு வேண்டியதைச் செய்து சுஜியின் உயிருக்கும் உடலுக்கும் ஒன்றும் பாதிப்பு இல்லை என்ற பின் தான் வெண்பாவுக்கு உயிரே வந்தது. எல்லாம் முடிந்ததும் தங்கள் அறைக்கு வந்த வெண்பா கணவனைக் கட்டிக் கொண்டு அழவும்…

“ஷ்ஷ்! வெண்பா, என்ன நடந்தது? ஏன் இப்படி அழற? மிருடன் கத்தின கத்தலில் பிள்ளைகள் பயந்து ஒரே அழுகை. எல்லோரையும் சமாதனம் செய்து சாப்பாடு ஊட்டி தூங்க செய்ததாலே என்னால் அவன் அறைக்கு வர முடியல. என்ன நடந்தது சொல்லும்மா” மனைவியின் தலை வருடி கஜேந்திரன் கனிவாய் கேட்கவும்

மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் விசும்பலுடன் கொட்டி தீர்த்தாள் வெண்பா, “ஒரு நிமிஷம் விட்டிருந்தா என் தம்பி கொலைகாரனா ஆகியிருப்பாங்க. ப்பா! அவன் முகத்தில் என்ன ஒரு கொலை வெறித்தனங்க! என் தம்பியா இப்படின்னு நான் பயந்தே போயிடேன். அவன் வளர்ப்பில் நாங்க எங்கேங்க தப்பு செய்தோம்?”

மனைவியின் தோள் வருடி, “வெண்பா... ஷ்ஷ்! என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி... உன் வீட்டில் உள்ளவங்க யார் மீதும் எந்த தப்பும் இல்ல. அவன் குணமே இது தானே? அதிலும் ஜீவா பிறந்த நாள் அன்று அவன் எப்படி இருப்பான்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்டவர், “அவனை சீண்டினா இப்படி தானே நடந்துப்பான்? அதிலும் இன்று சொல்லவே வேணாம். விடு… எல்லாம் ஒரு நாள் மாறும்” மாறும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றாலும் மனைவிக்காக போலியாய் சமாதானம் செய்தார் அவர்.

“எப்போங்க அவன் மாறுவான்... எனக்கு அந்த நம்பிக்கை இல்லைங்க. சின்ன பொண்ணுங்க சுஜி! அவளைப் போய்... அவளை பெத்தவங்க நம்மை நம்பி தானேங்க விட்டுட்டுப் போய்ட்டாங்க.... ஏதாவது அவளுக்கு நடந்திருந்தா?” சொல்லும்போதே வெண்பாவின் உடல் நடுங்கியது. “அவனுக்கு நான் அக்காங்க... நான் தான் அவனை மிரட்டணும். ஆனா என் மேல் சத்தியம் அவளை விடுடான்னு கெஞ்சிதாங்க சுஜி உயிரைக் காப்பாற்றி இருக்கேன்” இவள் இன்னும் பொங்கி அழ...

“அவனுக்கு உன் மேல அவ்வளவு பாசம் வெண்பா...”

“ஆமாம் பெரிய பாசம்... அந்த பாசம் அவனை ஏங்க மாற்றவில்லை” இவள் ஆதங்கப்பட

“மாறுவான்... நிச்சயம் மாறுவான்... இவனையும் ஒரு பொண்ணு மாற்றுவா பாரு. இந்த உலகத்தில் வல்லவனுக்கு வல்லவன் இருக்கிற மாதிரி இவன் அரக்க குணத்தை அடக்கவும் ஒரு ஒரு பஜாரி வருவா பாரு. அப்போ ஐயா என்னை மாதிரி இதோ எண்ணிக்கோமான்னு சொல்லி தோப்புக்கரணம் போடறானா இல்லையா பாரு....” கஜேந்திரன் தீவிரமாய் சொல்ல…

கோபத்துடன் கணவனை நிமிர்ந்து பார்த்த வெண்பா அவர் முகத்தில் குறும்பைக் காணவும், “என்னங்க இது… சீரியசான நேரத்திலே இப்படி எல்லாம் பேசிட்டு” இவள் ஆதங்கபட

“பின்ன என்ன டி... செய்யிறதை எல்லாம் செய்திட்டு... உன்தம்பி மவராசன் உள்ள குடுத்துவிட்டு நிம்மதியா இருக்கான். இங்கு பசியில் உன் புருஷன் உன் எதிரில் உட்கார்ந்து இருக்கேன். நீ அதை யோசிக்காம அழுதுகிட்டே இருந்தா எப்படி டி?”

மனைவியின் முகத்தைத் தன் இரு கைகளிலும் தாங்கியவர், “எல்லாத்தையும் விட என் மனைவி இப்படி அழுதா எனக்கு தாங்குமா டி?” என்றவர் “வெண்பா, நிச்சயம் ஒரு நாள் உன் தம்பி மாறுவான் டி. பாரு... அவனின் உயிரானவர்களின் யாருக்காவது ஒன்றுனா அதுவே அவனை மாற்றும் டி பாரு...” இவர் காதலோடு உறுதியளிக்க… அதே நேரம் “ததாஸ்து” என்று சில தேவதைகள் அவர் வார்த்தையை வாழ்த்தினர்.

எல்லா வருடம் போல் இந்த வருடமும் மாலை நடக்கவிருக்கும் விழாவிற்கு டிப் டாப்பாய் டிரஸ் செய்து ஒரு ஹாலிவுட் ஹீரோவைப் போல் படி இறங்கி வந்தான் மிருடவாமணன். ஜெல் வைத்து வாரிய முடி அவன் நெற்றியில் புரள... அவனுடைய நிறத்திற்கும் கம்பீரத்திற்கும் சந்தன நிற சட்டையும் அதன் மேல் மெரூன் நிறத்தில் அணிந்திருந்த கோட்டும் அவன் உடலுக்கு கனகச்சிதமாய் பொருந்தியிருக்க... வலது கையில் விலை உயர்ந்த தங்க கடிகாரம் சகிதம் தன் வேக நடையுடன் இறங்கி வந்து கொண்டிருந்த தம்பியைப் பார்த்த வெண்பா

‘அடேய்... காலையிலிருந்து அந்த அக்கப்போர் செய்தது நீ தானா டா?’ என்பது போல் பார்த்து வைத்தவள்.. அதிலும் குடித்ததற்கான அடையாளம் சிறிதும் கண்களிலும், முகத்திலும் இல்லாமல் நன்றாகத் தூங்கி எழுந்து சுறுசுறுப்புடன் இருக்கும் தம்பியைப் பார்த்தவளுக்கு நிச்சயம் மயக்கம் வராத குறை தான்!

டைனிங் டேபிளில் அமர்ந்தவன், “பத்ரி அண்ணா, ஒரு பிளாக் டீ வித் லெமனோட” என்றவன் “என்னக்கா இன்னும் கிச்சன் பக்கம் நின்றுகிட்டு இருக்க? நௌ டைம் இஸ் ஃபைவ் தேர்ட்டி. ஆறு மணிக்கு நாம் பார்ட்டி ஹால்ல இருக்கணும். பி குயிக் க்கா” இவன் வெண்பாவை அவசரப்படுத்த…

அதில் கோபம் எழ, “மாடு மாதிரி நிதானமா தூங்கி எழுந்து வந்து என்னை அவசரப்படுத்திற முகரையப் பாரு” வாய்க்குள் முணுமுணுத்தவள், “ஏங்க… ஜீவாவ அழைச்சிட்டு வந்து அவன் அப்பன் கிட்ட விடுங்க. இவன் ட்ரெஸ் செய்து விடுறானாம்” என்று தம்பியை ஒரு வெட்டும் பார்வையுடன் சொல்லி விட்டு வெண்பா நகர்ந்து விட...

“ஊப்ப்ப்பப்... ஆயிரம் வேலையாட்கள் இருந்தாலும் இந்த அக்காவுக்கும், அத்தானுக்கும் இதே வேலை தங்கள் பிள்ளைகளுக்கு தாங்களே எல்லாம் செய்யணும்னு சொல்ல வேண்டியது” என்று இவன் புலம்பிய நேரம்

“டாடி!” என்று ஓடி வந்தான் ஜீவா.

“மை சன்” என்ற கொஞ்சலுடன் மகனைத் தூக்கி இவன் எதிரில் இருந்த டேபிள் மேல் அமரவைக்கவும்...

“டாடி... ஃபீவர் போச்சா?” அந்த பெரிய மனிதன் அக்கறையாக தந்தையின் கன்னத்தைப் பிடித்தபடி கேட்க...

“அது அப்பவே போச்சே... போயே போச்சே... its gone டா செல்லம்” இவன் விளம்பர பாணியில் சொல்ல, அதில் தன் வாய் பொத்தி களுக்கி சிரித்தான் அவன் மகன்.

எதுவும் நடவாதது போல் சர்வசாதரணமாக நடந்து கொள்ளும் மிருடனைப் பார்த்த கஜேந்திரன்,

“என்ன மிருடா... கிளம்பலாமா?” என்று கேட்க

“இதோ அத்தான்… கிளம்பிட்டோம்” என்ற பதிலுடன் தன் மகனைப் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றவன் சற்று நேரம் சென்று தன் மகனை வெளியே அழைத்து வர ஜீவாவின் கோட்டிலோ ஒரு வெள்ளை நிற ரோஜா குடியேறி இருந்தது.

அதைப் பார்த்த வெண்பா, “இதற்கு எல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை” என்று நொடிக்க… கஜேந்திரனோ, தன் மனைவிக்கு கண்ணாலேயே அணைக்கட்டினார்.

பின் எல்லோரும் கிளம்ப... பார்ட்டி நடக்க இருக்கும் அந்த கிரீன் பார்க் ஹோட்டலோ வண்ண வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தாலும் இவர்களை வரவேற்றது.

தந்தை, மகன் இருவரும் ஒரே நிற ஆடையில் ஜொலிக்க... தன் உயரத்திற்கு மகனைத் தூக்கிக் கொண்டு முகம் கொள்ளா சிரிப்புடன் சந்தோஷமாக கேக்கை வெட்டினான் மிருடவாமணன்.

இவ்விழாவிற்கு பல தொழில் அதிபர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வருகை தந்திருக்க... அந்த இடமே பணமும் பகட்டும் கொண்ட பெரும் தலைகளால் நிறைந்தது.

மிருடன் சிறந்த தொழில் அதிபருக்கான விருதை அவன் பெற்ற பிறகு நடக்கும் விழா என்பதால், அவனை வாழ்த்திப் பாராட்டவும், அது குறித்து தங்களுடன் பேசி மகிழவுமே வந்திருந்தினர் அந்த பெருந் தலைகள்.

சுஜிக்கு இன்னும் உடல்நிலை சரியாகததால் அவள் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பிறந்த நாள் விழாவுடன் சிறு பிள்ளைகளுக்கு ஒரு சில விளையாட்டு மற்றும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சில நிகழ்வுகளையும் அங்கு வைத்திருந்ததால் அந்த இடமே ஆடல், பாடலுடன் களைகட்டியது. குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட், ஐஸ் கிரீம் உடன் பஃபே வகை உணவுகளும் அங்கு அணிவகுக்கவும்… அந்த இடமே திருவிழாவாக மிளிர்ந்தது. வந்தவர்களும் ஜீவாவை மனதார வாழ்த்த, விழா முடியும் வரை சந்தோஷத்தாலும் புன்னகையாலும் வலம் வந்தான் அந்த குட்டி வாண்டு.

இப்படி இருவேறு இடத்தில் பிறந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் தன் மகளுக்கு பிறந்த நாளை அங்கு அப்படி கொண்டாட... இங்கு தந்தையோ தன் மகனைப் பட்டத்து யானையில் உலா அனுப்பாத குறையாக வலம் வர வைத்தான் முடி தரிக்காத மன்னன் மிருடவாமணன்.

பட்டத்து யானை மேலேயே ஏற்றி தன் மகனை அமரவைத்து ஊர்வலம் வர வைத்தாலும் அவனுக்கு வேண்டியது ஒரு தாய் தான் என்பதை உணர்வானா தி கிரேட் மிருடவாமணன்?
 
Last edited:
Oooooo.... Appo அணு இல்லயா அவன் wife vu.... அவன் wife எப்படி இறந்து ponaaga..... Suji oda உயிர் avan akka vaala kaapaaththa pattudichi illana enna aagi இருக்குமோ..... Avvallavu அலப்பறை பண்ணிட்டு evening ஒண்ணுமே நடக்காதது maari party ku vanthutaan romba romba granda party celebrate pannitaanga.... Super Super maa... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Oooooo.... Appo அணு இல்லயா அவன் wife vu.... அவன் wife எப்படி இறந்து ponaaga..... Suji oda உயிர் avan akka vaala kaapaaththa pattudichi illana enna aagi இருக்குமோ..... Avvallavu அலப்பறை பண்ணிட்டு evening ஒண்ணுமே நடக்காதது maari party ku vanthutaan romba romba granda party celebrate pannitaanga.... Super Super maa... Semma episode
நன்றிங்க சித்து சிஸ்.... boy fly kiss boy fly kiss boy fly kiss heart beatheart beatheart beatsmilie 15smilie 15smilie 15
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN