முகவரி 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இப்பிறந்த நாள் விழா பிள்ளைகளுக்கானது என்பதால் பெரியவர்களுக்கான மதுபானங்களை விழாவில் வைக்க அறவே மறுத்து விட்டாள் வெண்பா. சிறு குழந்தைகள் எல்லோரும் சோர்ந்து விடுவார்கள் என்பதால் இரவு ஒன்பது அல்லது பத்துக்கு மணிக்கு எல்லாம் விழாவை முடித்துக் கொண்டு எல்லோரும் வீடு வந்து சேர்ந்த பின், நான்கு குழந்தைகளோடு குழந்தையாக தன் தம்பியையும் நிற்க வைத்து ஆலம் சுற்றிய பின் தான் அனைவரையும் உள்ளே விட்டார் வெண்பா.

உள்ளே வந்ததும் மிருடன் கால்களை ஆசுவாசமாக நீட்டி ஷோஃபாவில் அமரவும்... உடனே தந்தை மேல் ஏறி தன் கால்கள் இரண்டையும் அவன் வயிற்றின் இருபக்கமும் படர விட்டு அவனின் வயிற்றில் தலை சாய்த்து ஜீவா அமரவும்... “நானு.. நானு…” என்ற குதூகலத்துடன் அவனைப் பின் பற்றி ஜீவாவின் முதுகை ஒட்டிய படி கமல் அமர, “என் தங்கங்கள் இரண்டும் ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்க போல” என்றபடி மிருடன் குழந்தைகள் இருவரையும் அணைத்துக் கொண்டவன்,

“அக்கா எனக்கும் பசங்களுக்கும் சூடா ஒரு டம்ளர் பால் கொடு க்கா” என்க

தம்பியை முறைத்தவள், “ஏங்க... அவனுக்கு வேண்டியதை அவனையே எடுத்து சூடு செய்து குடிக்க சொல்லுங்க. குழந்தைங்களுக்கு இப்போ எதுவும் வேண்டாம். அவனுங்க நிறைய சாப்பிட்டானுங்க. அதே மாதிரி கமல் நம்ப கூட படுக்கட்டும்… அவனைத் தூக்கிட்டு உள்ள வாங்க” என்று சிடுசிடுத்தபடி வெண்பா தங்கள் அறைக்குச் சென்று விட

அக்காவின் பதிலில் இவன் தன் அத்தானைப் நோக்க… அவரோ, “மிருடா... அவளுக்கு உடம்பு டயர்டா இருக்குன்னு வரும்போதே சொல்லிகிட்டே வந்தா. அதான் இப்படி சொல்லிட்டுப் போறா. இரு… நான் பால் எடுத்துகிட்டு வரேன்” என்ற படி இவர் உள்ளே போக எத்தனிக்க

“அத்தான்... நீங்களும் தான் டயர்டா வந்திருப்பீங்க. நீங்க கமலைத் தூக்கிட்டு உங்க அறைக்கு போங்க. நான் பார்த்துக்கிறேன்” இவன் பதிலில் அவர் தயங்க, “அத்தான் நீங்க போங்கனு சொல்றேன் இல்லை” என்று அழுத்திச் சொன்னவன் மகனைத் தூக்கிக் கொண்டு கிச்சன் சென்று தானே பாலைச் சூடு செய்ய ஆரம்பித்தான் அவன்.

மகனின் பிறந்தநாளுக்காக வீட்டு வேலையாட்களுக்கு லீவ் கொடுத்திருந்ததால் தற்போது கிச்சனில் நிற்கிறான் மிருடன்.

மிருடனுக்குத் தெரியும்… காலையில் இவன் நடந்து கொண்ட முறையால் தான் தற்போது அக்கா இப்படி நடந்து கொள்கிறாள் என்று. விழாவில் முகம் திருப்பாமல் சுமூகமாகப் பேசியவள் அதே இங்கு வந்ததும் பழையபடியே நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள் என்று. ஆனால் அதற்கு எல்லாம் அசருபவன் மிருடன் இல்லையே! தமக்கைக்கு பதிலாக ஒரு தோள் குலுக்கலுடன் அனைத்தும் செய்து முடித்து விட்டு படுக்கச் சென்று விட்டான் இவன்.

எப்படி எல்லாமோ தன் மகனுக்கு வேண்டியதை செய்து அவனை மகிழ்வித்திருந்தாலும் இதோ விழா முடிந்து இரவின் தனிமையில்... ஜீவா தூங்காமல் தன் தந்தையின் மார்பின் மேல் ஏறி படுத்துக் கொண்டவன், “டாடி... நாளைக்கு மம்மியைப் பார்க்க போறோமா?” என்று ஏக்கத்துடன் கேட்கவும், இன்றைய நிஜம் உரைக்க... நிதர்சனம் புரிய... அதனால் கண்கள் கலங்க தன் மகனை இருக்க அணைத்துக் கொண்டான் மிருடவாமணன.

காலையில் வழக்கம் போல் இவன் எழுந்து வந்து உணவை முடித்து தன் வேலைகளைப் பார்க்கச் செல்ல... அதில் கடுப்பான வெண்பா, “டேய்... நாங்க உன் கிட்ட பேசணும்… டா” என்று தம்பியை நிறுத்த… பிள்ளைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதால், தன் அத்தானை ஒரு பார்வை பார்த்தவன், ஆபீஸ் அறைக்கு இருவரையும் வரச் சொல்லி விட்டு செல்ல…

உள்ளே நுழைந்ததும் வெண்பா, “உன் மனசுல நீ என்ன தான் டா நினைத்து இருக்க? எங்களுக்கு வேலை வெட்டி இல்லாம இங்கே உன் வீட்டில் உட்கார்ந்து இருக்கோம்னா?” இவள் கோபப் பட

அவனிடம் பதில் இல்லை. நிதானத்துடன் ‘எல்லாத்தையும் பேசி முடி’ என்ற பார்வையுடன் அமர்ந்திருந்தான் அவன்.

அதில் இன்னும் வெகுண்டவள், “நான் மட்டும் வரலைனா நேற்று அந்தப் பெண்ணைக் கொலை செய்திருப்ப டா நீ! ஏன் டா… இப்படி ஒரு எமனா மாறின நீ? எப்போதிலிருந்து டா இப்படி மாறின நீ? போதும் டா.... நீ இன்னைக்கு மாறுவ.. நாளைக்கு மாறுவேனு நான் காத்து இருந்தது எல்லாம் போதும் டா. நான் ஜீவாவைக் கூட்டிட்டு என் புருஷனுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வடநாடு பக்கம் போயிடுறேன்… பார்”

“ஜீவா என் மகன்” அவனின் பதிலில் தம்பியை நிமிர்ந்து பார்த்தவள்,

“அப்போ நாங்க மட்டும் போறோம்”

“எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வேணும்னு சொல்லு க்கா… வாங்கித் தரேன். அதற்கு தானே உன் தம்பி இருக்கேன்?” இவனின் அழுத்தமான பதிலில்

“பார்த்தீங்களா… பார்த்தீங்களா? போகாதே அக்கான்னு சொல்லாம எந்த ஊருக்கு போஸ்ட்டிங் வேணும்னு கேட்கிறான் பாருங்க” வெண்பா ஆதங்கப் பட

“ஷ்ஷ்! வெண்பா, அவன் அந்த அர்த்தத்தில் கேட்கலை. நீங்க எங்கே போக நினைத்தாலும் உங்களுக்கு போஸ்டிங் கிடைக்காது... அதைத் தடுக்க தான் நான் இங்கே இருக்கனே என்ற அர்த்தத்தில் சொல்கிறான்” மிருடனின் மனதைப் படித்தவர் போல் கஜேந்திரன் சொல்ல

ஒரு மெச்சுதல் பார்வையைத் தன் அத்தானை நோக்கி வீசிய மிருடன், தன் அக்கா ‘பே’ என முழிப்பதை பார்த்து... உதடு வளைய, அவனை மீறி வரும் புன்னகையை இதழ்களுக்குள் அடக்கவும்.

அதில் இன்னும் ரௌத்திரம் ஆனவள், “ஏன் டா... உனக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? ம்ஹும்… நீ சரிப்பட்டு வர மாட்ட! ஏதோ உன் மகன் கிட்ட இன்று அம்மாவைப் பார்க்க அழைச்சிட்டு போறேன்னு சொன்னியாமே! யாரு டா அது? புதுசா உன் மகனுக்கு அம்மா? ஜீவா கிட்ட சொல்லத் தெரிந்த உனக்கு உன் அக்காவான என் கிட்ட சொல்லத் தெரியலையா டா? யாரு டா அந்தப் பொண்ணு? இப்பவே சொல்லு டா..” பழைய விஷயத்தை விட்டு விட்டு இப்போது வெண்பா புது விஷயத்துக்குத் தாவ…

தன் அக்காவை ஆழ்ந்து பார்த்தவன், “அது ஜீவாவை சமாதானம் செய்வதற்காக சொன்னது க்கா. என் வாழ்வில் என் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை க்கா...” இவன் உறுதியாய் மறுக்க

“பாருங்க பாருங்க... மறுபடியும் என்னை முட்டாள் ஆக்குகிறான். இதை நான் நம்பணுமா? ஏன் டா இப்படி ஒரு அழுத்தக் காரனாகவே இருக்க! உன் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது? நீ ஏதேதோ எங்க கிட்ட இருந்து பெருசா மறைக்கிற மாதிரி இருக்கு டா... என்னடா அது?”

“அக்கா, எதுவும் நடக்கலை… நம்பு! அதான் சுஜிக்கு ஒன்றும் ஆகல இல்ல? ஊருக்கும் அவ போய்ட்டா தானே! விடு...” இவன் அசட்டையாக பதில் தர

“இப்பவும் இனி இது போல நடக்காதுன்னு சொல்ல மாட்ட? அவளுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றது தான் இப்போ உனக்கு தெரியுது. நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீ பதில் தர மாட்ட. சரி டா... நீ இப்படியே இரு. ஆனால் நான் இப்படியே இருக்க மாட்டேன். ஜீவாவை சரளா கிட்ட அழைச்சிட்டுப் போய் இவ தான் உன் அம்மான்னு சொல்லப் போறேன் பாரு....” இவள் கோபமும் ஆதங்கமுமாய் தம்பிக்கு செக் வைக்க…

“வெண்பா…!”
“அக்கா…!” ஒரே சமயத்தில் மாமன் மச்சான் இருவரும் அதிர்ந்து கத்த…

“வெண்பா, புரிந்து தான் பேசுறியா? இந்த இடத்தில் எதுக்கு சரளா பேச்சு?” கஜேந்திரன் கண்டிக்க

“ஓ... நீங்க அப்படி வரீங்களா அக்கா! சரி, அதை ஏன் நீங்க செய்திட்டு... நானே ஜீவாவை அங்கே அழைச்சிட்டுப் போறேன். உங்களுக்கு எதற்கு அந்த சிரமம் எல்லாம் வேண்டாம்” சொன்ன அடுத்த நொடி மிருடன் போனை எடுத்து, வீட்டு உரிமையாளரிடம் ஜீவாவை கிளம்பி அழைத்து வரச் சொல்லவும்... அதிர்ந்தே போனாள் வெண்பா.

கஜேந்திரன் “டேய்... என்ன டா நினைத்து இருக்க? ஏதோ ஆதங்கத்தில் உன் அக்கா தான் முட்டாள் தனமா செய்கிறாள்னா நீயும் அதே முட்டாள் ததனத்தை செய்யறேனு சொல்ற!”

“அத்தான் இது முட்டாள் தனம் இல்ல. எப்போ இந்த விஷயத்தை வைத்து என் அக்காவே என்னை ப்ளாக் மெயில் செய்ய ஆரம்பிச்சிட்டாங்களோ... பிறகும் அதற்கான சந்தர்ப்பத்தை நான் திரும்பவும் அவங்களுக்கு கொடுத்தா பின் நான் என்ன மிருடவாமணன்? அதனால் என் மகனை நானே அழைச்சிட்டுப் போகிறேன்… அந்த இடத்திற்கு” இவன் அதிலே உறுதியுடன் நிற்க

“அந்த பிஞ்சுக் குழந்தையை இரண்டு பேரும் சேர்ந்து பாடாப் படுத்துறீங்க… அது நல்லா தெரியுது இது எதுவும் சரி இல்ல சொல்லிட்டேன்” இவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம், உள்ளே வந்தான் ஜீவா.

“டாடி...” என்று உள்ளே நுழைந்த மகனை வாரி அணைத்தவன்,

“மம்மியைப் பார்க்கப் போலாமா ஜீவா?” என்று இவன் தன் அக்காவை தீர்க்கமாய் பார்த்து கொண்டே கேட்க,

“ம்ம்ம்... ஹே ஜாலி!” ஜீவா குதூகலிக்க, வெண்பாவோ முகம் மூடி ஒரு கேவலை வெளியிட்டாள்.

“நான் போய்ட்டு வரேன் அத்தான்” என்றவன் அடுத்த நொடி மகனைத் தூக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான் மிருடன்.

“பாருங்க... அவன் எப்படி செய்றான் பாருங்க...” இவள் வெடிக்க

“நீ பேசினது தான் வெண்பா தப்பு. அவன் குணம் தான் உனக்கு தெரியும் இல்ல? நாம் மனசில் நினைக்கிறதை அடுத்த நொடி அவன் செய்திட்டு வந்து நிற்கறவன்! அப்படிப் பட்டவன் கிட்ட நீ இப்படி ஒரு வார்த்தையை விட்டா, அவன் சும்மா இருப்பானா?”

“நான் வேண்டுமென்று சொல்லலைங்க. அவனை மிரட்ட வாய் தவறி வந்திடுச்சிங்க”

“எந்த வயசிலே அவனை மிரட்டற வெண்பா? மிரட்டி வளர்க்க வேண்டிய வயசில் அவனை விட்டுட்டு இப்போதா? அதிலும் நீ சொன்ன வார்த்தைக்கு எனக்கே கோபம் வந்தது. சரளா விஷயம் வேறு… நீ ஏன் ஜீவாவை அதிலே இழுத்த… உன் தம்பி வாழ்க்கையில் ஏதோ நடந்திருக்கு. அது உண்மை தான்... அது எப்போ தெரிய வருதோ அப்போ தெரிய வரட்டும்”

மனைவி கேள்வியாய் அவரைப் பார்க்க, “ஆமாம் வெண்பா, விடு... அவன் நம்ம மேல் வைத்திருக்கிற பாசம் உண்மை. எல்லாவற்றுக்கும் மேல் அவன் கிட்ட நேர்மை இருக்கு. அது எனக்குத் தெரியுது. அதனால் அவன் கிட்ட பழைய மாதிரி இரு” இவர் கண்டிப்புடன் சொல்லவும்

“எப்படிங்க?... நேற்று நீங்க அவனைப் பார்த்து இருந்தீங்கனா...”

“இருந்து தான் ஆகணும். நாம் இப்படி இருக்கிறது தான் அவன் வாழ்க்கைக்கும் ஜீவா வாழ்க்கைக்கும் செய்கிற நல்லது. அதனால் இப்போ எழுந்து வந்து பிள்ளைகளைப் பாரு...”

“ஆனா ஜீவா... மிருடன் கிட்ட அவனைத் திரும்ப அழைச்சிட்டு வந்திடச் சொல்லுங்க. அங்கே எல்லாம் அந்த குழந்தை போக வேண்டாங்க”

“இனி யார் சொன்னாலும் உன் தம்பி கேட்க மாட்டான். அவன் பிடிவாத குணம் தான் உனக்கு தெரியுமே! விடு… ஜீவா அங்கே போய் வரட்டும்… பிறகு என்ன நடக்கிறதுனு பார்க்கலாம்…” இவரும் துயரத்துடன் சொல்ல

“ஐயோ! என் நாக்கிலே இன்றைக்கு சனி இருந்தது போல! அந்த பிஞ்சு அங்கே போய் என்ன பாடு படப்போகுதுனே தெரியலையே!” இவள் தேம்ப, மனைவியை அணைத்து ஆறுதல் படுத்தினார் கஜேந்திரன்.

வெளியே வந்த மிருடனின் உடலோ, நாண் ஏறிய வில்லாய் முறுக்கேறி இருந்தது. “ஏன் க்கா ஏன்? எப்படி க்கா உனக்கு இப்படி சொல்ல மனசு வந்தது? என் மேல் உனக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும் நீ இதை சொல்லலாமா? அந்த இடத்திற்கு போகிறவன் அக்கா நம்ம ஜீவா?” இவன் வாய் விட்டு புலம்ப

தனக்கு சீட் பெல்ட்டைப் போட்ட பிறகும் இன்னும் காரை கிளப்பாமல் இருக்கும் தன் தந்தையைப் பார்த்த ஜீவா, “டாடி மம்மிகிட்ட போல?” என்று ஆர்வமாய் கேட்க

தன்னைச் சமாளித்தவன், “இதோ டா....” என்ற சொல்லுடன் காரை கிளப்பியிருந்தான் மிருடன்.

சற்று நேரத்திற்கு எல்லாம் அவன் கார் வந்து நின்ற இடம்... தமிழ்நாட்டிலே புகழ் பெற்ற நம்பர் ஒன் மனநல மருத்துவமனை வாசலில்! எதையும் சட்டேன முடிவெடுத்து செயலில் நடத்திக் காட்டிடும் மிருடனால் கூட இப்போது அந்த காரை விட்டு இந்த இடத்தில் இறங்க முடியாத அளவுக்கு அவன் உடலில் ஒரு நடுக்கம் ஓடியது. பின்னே? அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட இடம் அல்லவா இந்த மருத்துவமனை! அவன் வாழ்வை மட்டுமா?...
 
Yaaru athu சரளா..... Avanga மனநல hospital ah இருக்காங்க la அங்க போய் ஜீவா va kutikitu varaan..... ஜீவா romba romba ஆசை ah avan அம்மா va paakka varaan enna aaga pooguthoo.... அவன் அக்கா எதோ ஒரு kovathula sollitaanga athuku kuzhanthai ah போய் அங்க kutikitu pogalaamal ah........ Romba romba பிடிவாதம் maa avanuku.... Super Super maa
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Yaaru athu சரளா..... Avanga மனநல hospital ah இருக்காங்க la அங்க போய் ஜீவா va kutikitu varaan..... ஜீவா romba romba ஆசை ah avan அம்மா va paakka varaan enna aaga pooguthoo.... அவன் அக்கா எதோ ஒரு kovathula sollitaanga athuku kuzhanthai ah போய் அங்க kutikitu pogalaamal ah........ Romba romba பிடிவாதம் maa avanuku.... Super Super maa
நன்றிங்க சித்து சிஸ் kiss heart kiss heart kiss heart smilie 13 smilie 13 smilie 13 heart beatheart beatsmilie 13smilie 13:love::love:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN