முகவரி 9

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நெடுவாசல்...

“ஒரு வாரமாகவே வாகனங்கள் எல்லாம் இங்கிட்டும் அங்கிட்டும் போய்ட்டு வந்திட்டு இருக்கு. முன்னே எல்லாம் இங்கே பறவைகளின் ஓசைகள் மட்டும் தான் கேட்கும்... வேற எதுவும் கேட்காது. ஆனா இப்ப எல்லாம் மிஷின் சத்தமும், மக்கள் நடமாட்டமும் அதிகமா இருக்கு” காய்கறிகளை வெட்டிக் கொண்டே பார்வதி குறைபட

“ஆன்ட்டி, சாமுவேல் அங்கிள் கிட்டயிருந்து வேறு ஒருவர் வீட்டை வாங்கி இருங்கிறாங்க. அப்போ அவங்களுக்குப் பிடித்த மாதிரி வீட்டை மாற்றும் வரை யாராவது வந்து போக தானே இருப்பாங்க? அப்போ சத்தம் வரத் தானே செய்யும்?” அனு எதார்த்தத்தைச் சொல்ல

“அது என்னமோ சரி தான் அனும்மா. ஆனா உனக்கு ஒரு செய்தி தெரியுமா அனும்மா? நம்ம பக்கத்து வீட்டை வாங்கி இருக்கிவர் பெரிய தொழிலதிபராம். விலை உசந்த தேக்கு, சந்தனம்… இன்னும் இப்படி எதெல்லாம் எந்த நாட்டிலே இருந்தாலும் அதையெல்லாம் விலைக்கு வாங்கி பெரிய கட்டிலிருந்து சாதாரண வெற்றிலை பொட்டி வரையிலே செஞ்சிடுவாராம்” பார்வதி இன்னும் அடுக்கிக் கொண்டே போக

“உங்களுக்கு எப்படி தெரியும் ஆன்ட்டி?” அனு கேட்க

“அவர்கிட்ட வேலை செய்கிற தம்பி இல்ல... அதான் எப்போதும் வெளியவே நின்று வேலை ஒழுங்கா நடக்குதான்னு பார்க்குமே... அந்த தம்பி சொன்னது”

“ஓஹ்... ஆனா இதில் என்ன இருக்கு ஆன்ட்டி?”

“உனக்கு புரியலையா அனும்மா? செய்யற தொழிலு மரத்தை வெட்டுறது... ஆனா அவர் தங்கறது மட்டும் சுத்தி மரங்களோட நிழலும் குளுமையுமா ஒரு வீடு. இதென்ன குணம் முன்னுக்கு பின் முரணா இல்லையா?” இவர் அங்கலாய்க்க

“அது அப்படி தான் ஆன்ட்டி. பணத்தை, பேரு, புகழை சம்பாதிக்க எப்படி வேணா வாழலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அதற்காக இயந்திரத்தனமான வாழ்க்கை பின்னால் ஓடறாங்க. ஆனா ஓட்டம் முடிந்து நம்ம ஆயுட்காலம் முடியும் தருவாயில், இயற்கையை நேசிக்கிறேன்… பஞ்ச பூதங்கள நேசிக்கிறேன்னு இப்படி ஒரு கிராமத்திலே வந்து கால்மேலே கால் போட்டு ஹாயா உட்கார்ந்திடுவாங்க.

ஆனா நாம் இந்த இயற்கையை அழிக்காம இருந்தா தானே நமக்கு பிறகு வருகிற நம்ம சந்ததிகளுக்கு இந்த இயற்கை நிலையா கிடைக்கும்னு யாரும் நினைக்கிறது இல்லை. எல்லாம் சுயநலம் தான்.

இயற்கையை நேசிக்கிற நாம் இந்த இயற்கைக்கு என்ன செய்தோம்னு யோசிக்கிறது இல்லை…. குறைந்தபட்சம்… இப்போது நம்மிடம் இருக்கும் மரங்களையாவது வெட்டாம பாதுகாக்கலாம்…

இவங்க தலைமுறை இப்படின்னா... பிறகு வர போகிற இவங்க பேரன் பேத்திகள் எல்லாம் நாளைக்கு இப்படி அமைதியா இருக்க கிராமத்தையும் அழித்து... நாசம் செய்ய வந்திடுவாங்க. இது நல்லதற்கு இல்ல என்பது இவங்களுக்கு எல்லாம் எப்போ புரியப் போகுதோ தெரியலை ஆன்ட்டி” வாய் பேச்சு வார்த்தையாக இருக்க, அனுவின் கைகளோ சமையலில் மும்முரமாக இருந்தது.

“ஆன்ட்டி, நாளைக்கு நானும் அங்கிளும் காலையிலேயே வெளியே போய்டுவோம். வர மதியம் இல்லனா... மாலை ஆகிடும். மான்வியைப் பார்த்துக்கங்க...”

“இதை நீ சொல்லணுமா அனும்மா? பாப்பாவை நான் பத்திரமா பார்த்துக்கிறேன். நீங்க போய் வாங்க” பார்வதி உறுதி அளிக்க

அதன்படியே மறுநாள் காலை அனு கிளம்பும் போது மகளிடம், “மான் குட்டி! அம்மா சீக்கிரம் வந்திடுவேனாம்... என்னை படுத்துற மாதிரி பாட்டியை படுத்தாம பந்து வைத்து விளையாடிட்டு சமர்த்தா நல்ல பிள்ளையா இருக்கணும்… சரியா?” என்றவள் மூனீஸ்வரனுடன் காரில் ஏறி கிளம்ப... இவர்கள் கார் வீதியைக் கடக்கவும் சற்று நேரத்திற்கு எல்லாம் மிருடனின் கார் இவர்கள் வீதிக்குள் நுழைந்தது.

நெடுவாசலுக்கு இவன் வருவது இது தான் முதல் முறை என்பதால்... வீட்டில் தான் சொன்ன வேலைகள் அனைத்தும் நடந்திருக்கிறதா என்று பார்வை இட்டவன்.... பின் அங்கிருந்த தோட்டங்களை சுற்றிப் பார்த்து விட்டு இவன் வெளிவாசலுக்கு தன் கைப்பேசியை பார்வை இட்ட படி, அனு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி இவன் செல்ல…

அதே நேரம் அனு வீட்டின் உள்ளேயிருந்து ஒரு சின்ன பிளாஸ்டிக் பந்து பறந்து வந்து மிருடன் நெற்றியைப் பதம் பார்த்தது... முதலில் சாதாரண பந்து தானே என்ற அசட்டையில் விலக நினைத்தவனின் கவனத்தைக் கவர்ந்தது என்னமோ “ஜல்... ஜல்...” தன் பிஞ்சு கால்களின் சலங்கைகள் ஒலிக்க.... அழகான குட்டி ஃபிராக்கில் தேவதை என கண்களில் பீதியுடன் பந்தைத் தேடி அங்கு வந்த மான்வி தான்!

அந்த குட்டி தேவைதையின் கண்ணில் பீதியைப் பார்த்ததும் மிருடனுக்குள் சுவாரசியம் பிறக்க… உடனே இவன், “ஐயோ! அம்மா...” என்று வலிக்காத தன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு இவன் அலற...

அதில் பீதியுடன் விழித்த அந்த தேவதையின் விழிகளோ... இப்போது மான் விழி போல் மருண்டு விழித்தபடி ஓர் அடி இவள் பின்னே நகர…

அதையெல்லாம் தன் ஓரக் கண் பார்வையில் கண்டு கொண்டவன் சின்னதாய் உதடு வளைத்து, ‘விடுவேனா?’ என்று மனதிற்குள் எண்ணிய படி நெற்றியிலிருந்து கையை விலக்கிப் பார்ப்பது போல் பார்த்து, “அச்சோ! ரத்தம்…” என்று அலறிய படி கைக்குட்டை எடுத்து தன் நெற்றியில் தானே கட்டுப் போட்டு கொண்டவன், பின் சோக முகத்துடன் மான்வியைப் பார்த்து, “என் மண்டையை உடைச்சிட்ட இல்லை? நான் பாவம் தானே?” என்று இவன் பாவமாய் சோகமாய் கேட்க

அதில் உண்மையாவே முகம் தெரியாத ஒருவனின் மண்டையை உடைத்து விட்டோமோ என்ற பயத்தில் உதடு துடிக்க, அழுகையின் சாயலோடு… பீதியோடு உள்ளே ஓடி விட்டாள் மான்வி. அவளிடம் பேச்சை வளர்க்கத் தான் மிருடன் இப்படி இல்லாத வலியையும் வராத ரத்தத்தையும் சொன்னது. ஆனால் அவள் உள்ளே ஓடி விடவும்... இவனுக்கு உள்ளுக்குள் சொத்தென்று ஆகிவிட...

“ஓவர் ஆக்டிங்லே சொதப்பிட்டியே டா... மடையா!” என்று தன்னைத் தானே திட்டி கொண்டு காரை எட்டி உதைத்தவன்... பின் அந்த குட்டி தேவதை திரும்ப வருவாளா என்ற எதிர்பார்ப்பில் அனு வீட்டை நோட்டம் விட்டவன் அவள் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் தன் காரில் ஏறி கிளம்பிச் சென்றான் மிருடன்.

காலையில் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டோமே என்று இவன் வருந்த... கொஞ்ச நேரத்திற்குள் அதேபோல் வேறு ஒரு சந்தர்ப்பத்தை மிருடனுக்கு மறுபடியும் கொடுத்தாள் மான்வி.

இப்போதும் வழக்கம் போல் இவள் பந்து விளையாட… தற்போது மேடம் பெரிய பந்தை வைத்து விளையாட... முன்பு மாதிரியே அனு வீட்டு வாசலில் காரை நிறுத்தி விட்டு, தன் வீடு சென்று பார்த்து விட்டு மதியம் நேரம் இவன் தன் கைப்பேசியை நோக்கிய படியே வெளியே வரவும்

அதேநேரம் மான்வி போட்ட பந்து வெளிவாசலுக்கு உருண்டோடி வந்து மிருடனின் காலைத் தொட்டு விட்டு நிற்க... இவன் தன் கவனத்திலிருந்து சிதறுவது போல் நடித்தவன் ஒரு வித டென்ஷன் உடனே யார் இதை போட்டது என்பதாக சுற்றும் முற்றும் தேடுபவன் போல் தேடி பார்க்க... அப்போது நிஜ மான் குட்டியாய் பந்தைத் தேடி வாசலுக்கு ஓடி வந்தாள் மான்வி.

வாசலில் தான் நெற்றியில் அடித்தவனையே திரும்ப இவள் பார்க்கவும், மான்வி அவன் முகத்தை நோட்டம் விட்டபடி தயங்கி நிற்கவும்… அவனும் அந்த வாண்டைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் பந்து இவர்கள் இருவருக்கும் இடையில் உருண்டு நிற்கவும்... இவள் அவனிடமிருந்து தன் பார்வையை விலக்காமலே பந்தை எடுக்க முன்னேற... அதே நேரம் அவனும் அவளைப்போலவே எதிர்புறம் இருந்து பந்தை நோக்கி முன்னேறவும்... உடனே சின்னவள் உஷாராகி நிற்க.... அவனும் அதேபோல் நிற்க.... உடனே இப்போது மான்வியின் பாதங்களோ பின் நோக்கி சென்றது.

அவளைப் பின் பற்றி இவனும் பின்னோக்கி தன் பாத சுவடை வைக்க... பந்தை எடுக்க விடாமல் தன்னை போலவே அந்த புதியவன் செய்யும் செயலில் கடுப்பான இந்த வாண்டு, வேண்டுமென்றே இவள் தன் இடது... வலது என்று உள்ள இரு புறமும் அவனுக்கு இவள் நடந்து காட்ட... அதையே அவளோடு சேர்ந்து இவனும் நடை போட... அதில் தற்போது சிறு குழந்தைகளுக்கே உள்ள கோபம் அவளுக்குள் எழ... அதில் பெரிய மனிதர்களைப் போல் இவள் தன் கைகளைக் கட்டிக் கொண்டு மிருடனை முறைக்க...

மான்வியின் செயலில் தன்னை மீறி புன்னைகை வர, அதை அடக்கியவனோ அவளைப் பின்பற்றி போலியான கோபத்துடன் இவனும் கைகளைத் தன் மார்பில் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்து முறைக்க, இப்போது சின்னவளுக்கு பாதங்கள் வலித்ததோ? உடனே இவள் தன் வீட்டு கேட்டின் மீது சாய்ந்து நிற்க... அவளைப் பின்பற்றி இவனும் தன் காரின் மீது சாய்ந்து நிற்கவும்...

ஜாலியானவள் அந்த புதியவனிடம் விளையாடிப் பார்க்க ஆசைப்பட்டு, அங்கிருந்த சிறு கல்லில் அமர... இவனுக்கோ அவளை போல் அமர இடம் இல்லாமல் முதலில் முழித்தவன்... பின் வேறு வழி இல்லாமல் சற்றே கீழே அமர்வது போல் பாசாங்கு செய்யவும்... எங்கே அவன் தரையில் தான் அமர்ந்து விடுவானோ என்ற எண்ணத்தில் இவள் கிளுக் என்று சிரிக்கவும்...

அந்நேரம் தாவிச் சென்று அங்கிருந்த பந்தை எடுத்து விட்டான் மிருடன். அதில் உடனே, அந்த சின்னஞ் சிறு பூவின் புன்னைகை முகம் வாடி விடவும்... இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் மவுன நாடகம் நடத்தியவன், “பந்து வேணுமா?” என்று இவன் கேட்க

அவள் ‘ஆமாம்’ என்று தலை அசைக்கவும், “அப்போ… friends?” இவன் டீல் பேசியபடி கை நீட்ட, ஒரு நிமிடம் தன் தாடையைத் தட்டி அவன் டீலுக்கு சம்மதிக்கலாமா வேண்டாமா என்று பலமாய் யோசித்தவள் மறு நொடி ஓடி வந்து,

“friends!” என்ற குதூகலத்துடன் அவன் கையைத் தட்டினாள் இவள்.

அதில் அவளைத் தன் கைகளில் ஏந்தி கொண்டவன், “உன் பெயர் என்ன friend?” இவன் கேட்க

“மான்வி... உன் பேர் என்ன friend?” அவள் திரும்ப கேட்க

“friend தான் friend”

ஓ… உங்க அம்மா உனக்கு friendனு தான் பேர் வைத்திருக்கங்களா?” இவள் அதிமுக்கியமான கேள்வியை கேட்க

“எனக்கு அம்மா இல்ல friend...” இவன் சோகமாய் சொல்ல

“அச்சோ! அதான் உனக்கு யாரும் பந்து வாங்கித் தரலையா friend? சரி, இனி இங்கே வா… நாம் இரண்டு பேரும் சேர்ந்து பந்து விளையாடலாம். எங்க அம்மா எனக்கு நிறைய பொம்மை வாங்கித் தந்திருக்காங்க...” மிருடனுக்கு யாரும் இல்லை அவன் பந்துக்கு தான் விசனப்படுகிறான் என்று உணர்ந்த வாண்டு, அவன் சோகத்தைப் போக்க இப்படியாக வழி சொல்ல

அவனோ, கண்கள் கலங்க... நெஞ்சம் நெகிழ மான்வியை இறுக்க அணைத்து கன்னத்தில் முத்தமிடவும்… அப்போது, “friend, வலி போச்சா?” என்று இவள் அவன் நெற்றியைத் தொட்டுக் காட்டி கேட்டவள், “சாரி friend....” என்று குழந்தைக்கே உள்ள தாஜா குரலில் மன்னிப்பு கேட்க…

அதேநேரம், “பாப்பா... இந்தா இங்கே வந்து இந்த பழத்தை சாப்பிடு” பார்வதி அழைத்த படி வெளியே வந்தார்

“friend... உனக்கும் பசிக்கும் இல்ல? வா வந்து சாப்டு...” இந்த சின்ன வாண்டு அவனுக்கு தாயாய் மாறி மிருடனை சாப்பிட அழைக்க

அதற்குள் வெளியே வந்த பார்வதி “நீ இங்க தான் இருக்கீயா பாப்பா? வாங்க தம்பி! பக்கத்து வீட்டை வாங்கி இருக்கிறவங்க நீங்க தானே?” இயல்பாய் கேட்க

“ஆமாங்க...”

“நான் கூட வயதானவர் யாரோ வீட்டை வங்கியிருக்கார் போல... வேலை கால ஓய்வுக்குப் பிறகு இங்க தங்குவார்னு நினத்தேன்... உங்க தொழில் எல்லாம் பெரிசாமே!” என்று அவனைக் பல கேள்வி கேட்டவர் அவனின் பதிலை எதிர்ப்பார்க்காமல், “பாப்பா வா... இப்போ நீ பழம் சாப்பிடற நேரம்... அம்மா போன் செய்வாங்க வா” மான்வியிடம் முடிக்க

“பாட்டி... என் friendக்கும் பழம் தா” இப்படி அதிகாரம் செய்த மான்வி மிருடனை விட்டு இறங்காமல் அவனிடமே இருக்க

“அடி ஆத்தி! அதுக்குள்ளே பிரண்டா? உள்ளே வாங்க தம்பி. பக்கத்திலே இருக்கப் போறோம்... உங்களை தெரிந்திக்கவில்லைனா எப்படி?” பார்வதி இவனையும் அழைக்க

“இல்லை… எனக்கு கொஞ்சம் வேலை... நான் பிறகு வரேன்” அவன் மறுக்க

“pls... friend வா...” மான்வி கெஞ்ச

“சும்மா வாங்க தம்பி... இவ அம்மாவும் என் வீட்டுக்காரரும் எப்போதும் போல வெளியே வேலையாய் போய் இருக்காங்க. அப்போ எல்லாம் நானும் பாப்பாவும் தனியா தான் இருப்போம். இப்போ இந்த ஒரு வாரமா தான் நீங்க எல்லாம் வந்து போறீங்க. அதைப் பார்க்கவோ தான் பாப்பா உங்க கிட்ட ஒட்டிகிட்டு உங்களை கூப்பிடுறா. வாங்க வாங்க உள்ள வாங்க...” தனக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அழைத்தவர்,

“பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை மாதிரி இருக்கீங்க... எங்க வீட்டில் சாப்பிடத் தயங்காதீங்க. பழம் எல்லாம் எங்க தோட்டத்துப் பழம். இப்போ தான் பறித்தது. வாங்க… வந்து சாப்பிட்டுப் பாருங்க” ஊர்க் காரர்களுக்கே உள்ள உபசரிப்பில் பார்வதி இறங்கவும்... அதிலும் மான்வி அவன் கழுத்தை வேறு கட்டிக் கொண்டு இருக்கவும்... ஒருவித சலிப்புடன் வேறு வழி இல்லாமல் வீட்டினுள்ளே சென்றான் மிருடன்.

அப்போதும் வாசலில் இவன் கால் பதிக்கும் நேரம்... மனதிற்குள், ‘பார்த்தீயா? உன் வீட்டுக் குள்ளயே நுழைஞ்சிட்டேன்...’ இவன் அனுவிடம் சவால் விட்ட நேரம்… அங்கு அவள் குடித்துக் கொண்டிருந்த தண்ணீர், தொண்டை சிக்க... கண்ணில் நீர் மல்க இருமிக் கொண்டிருந்தாள்... விரோதியே என்றாலும் அவளை நினைத்தது மிருடவாமணன் அல்லவா?

ஏதோ சற்று நேரம் என்று நினைத்து உள்ளே வந்தவனை மான்வியும், பார்வதியும் அவனை மதியம் வரை போக விடாமல் பிடித்து கொள்ள. மான்வி அவனைப் பந்தால் தாக்கியதில்... அவன் எதுவும் அவளை திட்டாததால் இன்னும் அவன் செயல்கள் பிடித்துப் போக, மிருடனை விடவே இல்லை அவள்...

ஆதியைப் போல் இவனும் பேச்சுத் துணைக்கு கிடைத்ததாக நினைத்து பார்வதியும் அவனை விடவில்லை. மதியம் மான்வி தூங்கும் நேரம் இவனுக்கு அழைப்பு வர, அதை சாக்காய் வைத்து வெளியே வந்தவன்... பின் மான்வி விழிக்கும் நேரம் அறிந்து அவள் முன் மறுபடியும் இருந்தான் மிருடன். அதிலும் கையில் அவளுக்குப் பிடித்த பொம்மைகள், சாக்லேட்களுடன்.

அவை அனைத்தையும் மான்வியிடம் கொடுத்தவன்... பின், “இன்னும் பத்து நாளில் வீட்டுக்கு பால் காய்ச்சு இங்கேயே குடி வந்திடுவேன். பத்திரிகை அடித்து பெரிதா செய்யலை. அதான்…. குடும்பத்துடன் வந்திடுங்க” என்று முறையாய் பார்வதியை அழைத்துவிட்டே பின் சென்றான் அவன்.

காலை நேரம் போலவே சரியாய் இவன் கார் வெளியே செல்ல... அனுவின் கார் உள்ளே நுழைந்தது.

தன்னைக் கண்டதும் ஓடி வந்து காலைக் கட்டிய மகளை இவள் தூக்கிக் கொள்ளவும், “வந்திட்டியா அனும்மா… கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே நீ வந்திருக்க கூடாதா? இப்போ தான் பக்கத்து வீட்டுக்கு குடி வர இருக்கிற தம்பி அவர் வீட்டு விழாவுக்கு நம்மளை அழைச்சிட்டுப் போறார்...” என்ற பார்வதிக்கு

“நான் எந்த விழாவுக்குப் போய் இருக்கேன் ஆன்ட்டி? நீங்க போயிட்டு வந்திடுங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நைட் எதுவும் வேணாம் ஆன்ட்டி” அசட்டையாய் சோர்ந்த முகத்துடன் இவள் நகரப் போக, அப்போது அவள் கண்ணில் பட்டது மிருடன் வாங்கிக் கொடுத்த பொருட்கள். உடனே இவள் கேள்வியாய் பார்வதியை நோக்க...

“அது…. விழாவுக்கு சொல்ல வந்து சும்மா சொல்லக் கூடாதே! அதான்… பாப்பாவுக்கு பிடித்ததை கேட்டு வாங்கி வந்து கொடுத்தது அந்த தம்பி” பார்வதி விளக்கவும்

“ம்மா... என் friend தந்ததது...” மகளும் எடுத்து சொல்ல

இவள் எதுவும் மறுத்து சொல்லாமல் அந்த தட்டில் இருந்த இனிப்புகளில் ஒன்றான சாக்கோ லாவா கேக்கையே இவள் கண் இமைக்காமல் நோக்கவும்... “உனக்கு பிடித்த கேக் தான் அனும்மா... வேணுமா?” பார்வதி இயல்பாய் கேட்கவும்

தன்னிலைக்கு வந்தவள், “நான் அதை சாப்பிடுறதை விட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு ஆன்ட்டி. மான்விக்கு கொடுங்க” என்றபடி மகளுடன் தன் அறைக்குள் நுழைந்தாள் அனு.
 
Last edited:

UMAMOUNI

Member
என்ன நடக்க போகிறதோ , ஷிதா எப்படி சமாளிப்பாளோ பார்க்கலாம்
 
Enna plan பண்றான் nu theriyalaye இந்த kedi பையன் maanvi kita friend aaitaan rendu peroda அந்த sequence romba நல்லா irunthuthu..... Appadiyo avala friend aakkitaan.... Ivanuku avala theriji இருக்கு avaluku இவன தெரியுமா..... பால் kaacharathuku sollitu kalambitaan.... Super Super maa.... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன நடக்க போகிறதோ , ஷிதா எப்படி சமாளிப்பாளோ பார்க்கலாம்
நன்றிங்க சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Enna plan பண்றான் nu theriyalaye இந்த kedi பையன் maanvi kita friend aaitaan rendu peroda அந்த sequence romba நல்லா irunthuthu..... Appadiyo avala friend aakkitaan.... Ivanuku avala theriji இருக்கு avaluku இவன தெரியுமா..... பால் kaacharathuku sollitu kalambitaan.... Super Super maa.... Semma episode
நன்றிங்க சித்து சிஸ்😍😍😍😍💜💜💜💜💜💜🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝 kiss heart kiss heart boy fly kissboy fly kissboy fly kiss
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN