செங்கா 49

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
விஷ்வாவும் அதியனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது ரக்சனா அவசரத்தோடு அவர்களை எதிர்நோக்கி வந்தாள்.

"என்ன ஆச்சி..?" என்றாள்.

"அந்த பொண்ணோட பேமிலி வீடு மாத்திட்டு போயிட்டாங்க.. அவங்களை கண்டுபிடிக்கணும்.." என்று சோர்வோடு சொன்னான் விஷ்வா.

அதியனின் கவலை நிறைந்த முகத்தோடு சென்று இருக்கையில் அமர்ந்தான். வீடு அமைதியாக இருந்தது. யாருக்கும் எதுவும் பேச தோணவில்லை.

அரை மணி நேரம் கடந்தபிறகு "நான் எங்கூட்டுக்கு போவுட்டா.?" என்று செங்காவின் குரல் கேட்டது. அதியன் திரும்பி பார்த்தான்.

ரக்சனா அறையின் கதவை பிடித்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் செங்கா.

ஏதோ சொல்ல வாய் திறந்த அதியன் வார்த்தைகள் கிடைக்காமல் வாயை மூடி கொண்டான்.

"இங்கேயே இரு செங்கா.. கல்யாண வேலைகள் இருக்கு.. இந்த வேலைகளுக்கு ரக்சனாவுக்கு நீயும் உதவியா இரு.." என்றான் விஷ்வா.

செங்கா தரையை பார்த்தபடி தயங்கி நின்றாள்.

"நான் வூட்டுக்கே போறேனே.." என்றாள்.

"இது உங்க அக்கா வீடு. உன் வீடும்தானே.?" என்ற விஷ்வாவிற்கு தன் வீட்டிற்கு முதன் முதலாக வந்த மச்சினி உடனடியாக திரும்பி செல்வதில் மனம் வரவில்லை.

"அப்புடி இல்ல மாமா.. கொஞ்சம் வருத்தமா இருக்கு. இந்த மனுசனை பார்த்துக்கிட்டு ஒரே எடத்துல இருக்க மனசு வரல.." என்றாள் அவள்.

அவள் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக சொல்லி விட்டாள். அவள் சொன்னது கேட்டு விஷ்வாவுக்கும் அதியனுக்கும் மனம் வருந்தியது.

'ஏதோ ஒருநாள் காட்டானாக அறிமுகமானவ இன்னைக்கு இப்படி வருத்தப்படுவதை கண்டு உள்ளம் நொந்து போவேன்னு நினைக்கவே இல்ல..' என்று அதியனின் மனம் குமுறியது. பழி போட கூட ஆள் கிடைக்காத ஒரு பிரச்சனையை கண் முன் தந்ததற்கு கடவுளை திட்டி தீர்த்தான்.

செங்காவை சமாதானம் செய்யம் வழி விஷ்வாவிற்கும் கிடைக்கவில்லை. அவளது மன கஷ்டத்தை அவனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

"நாளைக்கு கெளம்பட்டுமா மாமா.?" என்றாள் விஷ்வாவை பார்த்து.

விஷ்வா அதியனை பார்த்தான். அதியனுக்கு அவளை அனுப்ப விருப்பமில்லை. ஆனால் அவளே இப்படி சொன்ன பிறகு அவளை தடுக்கவும் மனம் வரவில்லை.

கண்களை மூடி கவலையோடு நின்றிருந்த அதியனை சோகமாக பார்த்தவன் செங்கா பக்கம் திரும்பினான்.

"கிளம்புவதா இருந்தா கிளம்பு செங்கா.. நான் உன்னை கொண்டு போய் ஊருல விட்டுட்டு வரேன்.." என்றான்.

"இல்ல மாமா.. பஸ் ஏத்தி விடுங்க. நான் போயிடுவேன்.." சிறு குரலில் சொன்னவள் ரக்சனாவின் அறைக்குள் திரும்பிக் கொண்டாள்.

அதியனின் தோளை பற்றினான் விஷ்வா. "சாரிடா.." என்றான்.

"நீ ஏன்டா சாரி கேட்கற.? இது எல்லாம் என் விதி.." கரகரத்த குரலில் சொன்னவன் மாடி படிகளில் ஏறினான்.

"இங்கேயே இருப்பா.." என்று செங்காவிடம் கேட்டாள் ரக்சனா.

"இல்ல.. நான் போறன்.." என்று சொன்ன செங்காவிற்கு எப்போது வேண்டுமானாலும் தனது தைரியம் உடைந்து விழும்போல பயமாக இருந்தது. அவளால் தாங்க முடியாத சோகம் நெஞ்சில் தேங்கி இருந்தது. பசுமை காடுகளின் மடியில் தஞ்சமடைய வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
மறுநாள் மனதின் வலிகளை வெளிக்காட்டிய அதியனின் கண்களை பார்த்தபடியே பேருந்தில் ஏறினாள் செங்கா. அவளை தன்னோடு இழுத்துக்கொண்டு எங்கேயாவது ஓடிப்போக வேண்டும் போல இருந்தது அதியனுக்கு.

வீட்டிற்கு வந்ததும் சாமிநாதனிடம் நடந்ததை சொன்னாள் செங்கா. அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்ட தனக்கு அதியனின் நிச்சயதார்த்தம் பற்றி தெரியாமல் போனது எப்படி என குழம்பினார் அவர்.

பொன்னா சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அனைத்திற்கும் மௌனத்தை மட்டுமே பதிலாக தந்தாள் செங்கா.

"அட விடுடி.. இவன் இல்லன்னா இன்னும் ஆயிரம் மாப்பிள்ளை.." என்றாள் கலையரசி. 'நேசிச்சி கட்டிக்கிட்ட மாதிரியா பேசுற நீ.? உன் நேசத்தை விட என் நேசம் எந்த விதத்துல தாழ்ந்து போச்சி.?' என கேட்க நினைத்த செங்காவிற்கு அவற்றை கேட்க விருப்பமில்லை.

வீட்டிற்கு வந்த மறுநாளே காட்டிற்கு கிளம்பினாள் அவள்.

அதியன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை தேடி அலைந்துக் கொண்டிருந்தான்.
செங்கா பாறாங்கல்லை மனதில் சுமந்ததை போல சோர்வோடு காடுகளில் அலைந்தாள்.
பார்க்கும் இடமெல்லாம் அதியனின் முகம்தான் தோன்றியது. அவனோடு ஓடி பிடித்து விளையாடிய புல்வெளிகள் அவளது கண்களில் ஈரத்தை தந்தது. ஏதேனும் ஒரு மரத்தின் பின்னால் இருந்து ஓடி வந்து தன் கண்களை பொத்தி விளையாட மாட்டானா என்று ஏக்கமா இருந்தது. புரண்டோடும் ஓடையை பார்க்கும் போதெல்லாம் எதிர்நீச்சல் அடிக்கும் அவனது உருவம் கண்களில் வந்து போனது. ஒரே கூடாரத்தில் உறங்கி இருந்தாலும் விரல் தீண்டாமல் ஒதுங்கி படுத்து உறங்கியவன் தனக்கு சொந்தமாக வழியில்லை என்ற எண்ணம் அவளுக்கு அழுகையை தந்தது.

வருடம் முழுக்க காட்டில் சுற்றியவளுக்கு இவனது ஒருவார துணை பெரிய மாற்றத்தை தந்துவிட்டது. காலில் குத்திய எலந்தை முள்ளை பிடுங்கி எறிகையில் போன வாரத்தில் இதே போல் அதியன் இவளின் காலிலிருந்து எடுத்து விட்ட முட்கள் அத்தனையும் இப்போது வந்து வலிகளை தந்து சென்றன.

எங்குமே சுற்ற பிடிக்கவில்லை அவளுக்கு. எந்த இலக்கும் இல்லாமல் காடு சுற்றியவள் இப்போது பாறைகளின் மீதோ மரத்தடி கற்களின் மீதோ மணி கணக்கில் அமர்ந்தாள்.

காடு முழுக்க பரவி இருக்கும் பசுமை வாசத்தை தாண்டி அவனது வாசம் மூக்கை துளைப்பது போல இருந்தது. அவனோடு நடந்து சென்ற அத்தனை இடங்களையும் கலங்கிய கண்களோடே பார்த்தாள்.

கலங்கும் விழிகளோடு புல்வெளி ஒன்றின் மீது நடந்தவள் தன் முன் சரசரவென ஊர்ந்து சென்ற பாம்பை கண்டு நடையை நிறுத்தினாள்.

அன்றொரு நாள் அவனும் அவளும் சேர்ந்து ஓடையில் மீன் பிடித்த வேளையில் இதே போன்றே பாம்பு ஒன்று அவனது காலடியில் ஓடியது. பயந்து துள்ளியவன் இவளை வந்து அணைத்ததில், கரையோரம் நின்றிருந்தவள் இவனோடு சேர்ந்து ஓடையில் விழுந்தது இப்போது நினைவுக்கு வந்தது செங்காவிற்கு. கண்களோரம் துளிர்த்த நீரை துடைத்துக் கொண்டாள்.

தனது உயிரின் பாதியை தொலைத்தது போல வருந்தினாள். நிற்கும் இடமும், நடக்கும் இடமும், அமரும் இடமும் என அனைத்து இடமுமே அவளுக்கு அதியனின் உருவத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

அழுகையை அடக்கியபடி கண்கள் மூடி பாறைகளில் சாய்ந்தாலும் கூட அவளது மூடிய விழிகள் தாண்டி கண்ணீர் வழிந்தது.

அவளுக்கு தான் வேறு ஒரு ஆளாக மாறி போனது போல இருந்தது. அவளது மொத்த இயல்பையும் அவன் மாற்றி சென்றதை இப்போதுதான் அறிந்தாள் அவள். நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்த அவனது முகத்தையும் குரலையும் மறக்க இயலாமல் வாடினாள்.

ஐந்து வருட காதலி அவனை தனக்கே விட்டு தர கூடாதா என்ற எண்ணம் கூட அவளுக்கு வந்து போனது. சுயநலமாய் எண்ணுவதாக நினைத்து அதற்கும் தன்னையே நொந்துக் கொண்டாள்.
"ஒடுவன் தளையை அரைச்சி குடிச்சிட்டு செத்தறலாம் போல இருக்கு.. ஏன்யா இப்புடி பண்ண.? உனுக்குதான் ஒருத்தி அஞ்சி வருசமா காத்திருக்கான்னு தெரியுது இல்ல.. அப்பாறம் ஏன் எனக்கு ஆசைய காட்டின.?" என காற்றிடம் கேட்டு கதறினாள்.

அதிகாலை பொழுதுகளில் எழுந்தமர்ந்து குழலில் சோக கீதம் வாசித்தாள். நேரம் காலமே மறந்து போனது. களைப்பின் மிகுதியில் உறங்கினாள். பசியின் மிகுதியில் பையில் இருந்த உணவை உண்டாள். வருத்ததின் மிகுதியில் நடு இரவாயினும் தன்னை மறந்து அழுதாள்.

அவள் ஒரு வாரம் கழித்து வீடு வந்தபோது அவளின் தோற்றத்தில் இருந்த மெலிவு கண்டு அப்பா வருந்தினார்.

"விடும்மா.. இதுக்காகவெல்லாம் வருத்தப்படலாமா.?" என்று மகளிடம் ஆறுதல் சொல்ல முயன்றார்.

"கொஞ்ச நாள் கண்டுக்காம வுடுப்பா.. சரியா போயிடுவேன்.." என்று தந்தைக்கு பதில் ஆறுதல் சொன்னவளுக்கு தான் சரியாகும் நாள் வருமென்ற நம்பிக்கை இல்லை.

அதியன் இன்னமும் அந்த பெண் வீட்டை கண்டுபிடிக்காமல் அலைவதாக பொன்னா தன் தங்கையிடம் சொன்னாள். அதை காதில் வாங்கி கொள்ளாதவள் போல இருந்து கொண்டாள் செங்கா.

இந்த இடைப்பட்ட நாட்களில் அதியன் இவளுக்கும் கூட ஃபோன் செய்தான். ஆனால் செங்காதான் அவனது நம்பரை கண்டதும் ஃபோனை அணைத்து வைத்து விட்டு அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனது குரலை கேட்டால் அவனிடம் ஓடி விடுவோமோ என பயந்தாள். இதற்கு முன் பார்த்திராத அந்த பெண்ணின் மீது அளவுக்கு அதிகமாக பொறாமை வந்தது.

அதியன் தினமும் பொன்னாவிற்கு ஃபோன் செய்தான். செங்காவின் நலம் விசாரித்தான்.

இதயத்து ரணம் போல அதியனுக்கு அவனது வாழ்க்கை தோன்றியது. செங்கா இந்த நேரத்தில் என்ன செய்துக் கொண்டிருப்பாள், அவள் என்ன உண்டிருப்பாள், அவள் என்ன உடுத்தியிருப்பாள் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அவனது கனவும் நினைவும் அவளாகவே இருந்தாள்.
அதியனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தினமும் தேடி திரிந்தனர் செழியனும் விஷ்வாவும்.
சீமா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனருக்கு சிறை தண்டனை கிடைத்தது. அவர் ஏவி விட்ட அடியாளுக்கும் தண்டனை கிடைத்தது. தன்னை ஜெயிலுக்கு அனுப்பி வைத்த அதியன் விஷ்வா மீது கொலைவெறி கொண்டார் சீமா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர்.

செங்கா மீண்டும் காட்டுக்கு சென்றாள். அதியன் நினைவு வரும்போதெல்லாம் மீண்டும் வீட்டிற்கு திரும்பவே கூடாது என எண்ணினாள். ஆனால் இன்று வந்து நெஞ்சில் தங்கியவனுக்காக தாய் தந்தையருக்கு ஆறா ரணத்தை வழங்க மனம் வரவில்லை அவளுக்கு. அவனை ஏன் சந்தித்தோம் என கேட்டு புலம்பினாள்.

ஒரு மாதம் ஓடி விட்டிருந்தது.

விஷ்வா தனது திருமண அழைப்பிதழை அதியனின் பெற்றோரிடம் தந்து அழைத்தான்.
"கண்டிப்பா இரண்டு பேரும் இரண்டு நாள் முன்னாடியே வீட்டுக்கு வந்துடுங்க.." என்று உரிமையோடு சொல்லி விட்டு வந்தான்.

ஆதியனின் தந்தை 'பொன்னாம்பல்' என்ற மணமகளின் பெயரை வியப்போடு பார்த்தார்.
"அழகான பேரா இருக்கு.." என்று மனைவியிடம் கூறினார்.

திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதிருந்தே பொன்னாவின் வீட்டிற்கு உறவினர்கள் வர ஆரம்பித்து விட்டனர். ஆனால் காட்டிற்கு சென்ற செங்கா வீடு திரும்பவே இல்லை.

பொன்னா தங்கைக்கு ஃபோன் செய்தாள். "சீக்கிரம் வாடி.‌." என்று சலித்துக் கொண்டாள்.

"கல்யாணத்துக்கு கிளம்பற அன்னைக்கு வந்து சேருறேன்.." என சொல்லி விட்டு இணைப்பை துண்டித்து கொண்ட செங்கா வரப்போகும் நாட்களை எப்படி சமாளிப்பது என்று கவலையோடு யோசித்தாள். எவளோ ஒருத்தியோடு கை கோர்த்து திரிய போகும் ஒருத்தனை எப்படி இயல்பாக பார்க்க இயலும் என்று யோசித்தாள்.

அதியனோ அவளது வருகைக்காக இரு வாரங்கள் முன்பிருந்தே காத்திருந்தான்.

சாமிநாதன் தனது உறவினர் அனைவரையுமே திருமணத்திற்கு அழைத்தார். தூரத்து சொந்தங்கள் பலரும் செத்தவன் உயிரோடு வந்ததாக எண்ணி வியந்தனர். அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பிதழ் தந்து அழைத்தவர் கடைசியாக வந்து அழைத்த இடம் அவரது தாய்மாமன் மகன் வீடு. அடையாளம் தெரியாமல் குழம்பி நின்றவர்களிடம் விவரம் சொல்லி அழைப்பிதழை தந்தார். மாமன் மகன் மகிழ்ச்சியோடு அழைப்பிதழை வாங்கி தன் மருமகளிடம் தந்தார். "நம்ம வீட்டு கல்யாணம்.. குடும்பத்தோடு வரோம்.." என்றார். மருமகளை பார்த்தவர் "உன் புருசனை இரண்டு நாள் லீவு போட சொல்லும்மா.. கல்யாணத்துக்கு போகணும்.." என்றார்.

"சரி மாமா.." என்று சொல்லி விட்டு அழைப்பிதழை வாங்கி டிவி மேஜையின் மீது வைத்தாள் அந்த மருமகள்.

அடுத்த அத்தியாயத்தில்
எதையோ விட்டுட்டேன்ப்பா.. அழைப்பிதழ் வாங்கி வைத்த மருமகள்தான் அதியனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.
Word count 1100
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN