செங்கா 50

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்கா மரக்கிளை ஒன்றில் ஏறி அமர்ந்திருந்தாள். நினைவெல்லாம் அதியனே இருந்தான்.

"விட்டு செல்லவா எனக்குள்ள ஒரு துவக்கத்த தந்த.? பிரிஞ்சி போறதுக்கு ஏன்டா என் நேசத்துக்கு உயிர் தந்த.? ஒத்தை நொடியில மறைஞ்சி போறவன் ஏன்டா என் வாழ்க்கைக்கு புது ஒளிய தந்த.?" முகத்தை மூடி அழுதவள் புலம்பலாக கேட்டாள்.

"உனக்கும் எனக்கும் நடுவுல இனி எந்த எதிர்காலமும் இல்ல.. என் இடத்துல இன்னொருத்தியை வச்சி விதி விளையாடுது. ஆனா அந்த இடத்துல நான் எப்புடி நிதானமா இருக்க முடியும்.?" என கேட்டவளுக்கு இன்று வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் கவலையை அளித்தது.

வீட்டுக்கு செல்ல பிடிக்கவில்லை. பொன்னாவின் திருமணத்தில் கலந்துக் கொள்ள விருப்பமில்லை. தனது மன பாரத்தை ஏற்றிக் கொள்ள விரும்பாதவளுக்கு சகோதரியின் மனதை உடைக்கவும் மனம் வரவில்லை.

சூரியன் நடுவானில் இருந்தது. தான் அமர்ந்திருக்கும் கிளையை விட்டு கீழே குதித்தாள் செங்கா. "நடக்கிறது நடக்கட்டும்.. இந்த செங்கா எதுக்கும் அழ மாட்டாங்கிறா.. இந்த அதியனை வச்சிதான் அழ வைக்கணும்ன்னு ஆண்டவன் நெனைச்சா அதுக்கு நானும் ஒத்துக்கிட்டு போகணுமா.? அட போடா பிஸ்கோத்து.. இவ செங்கா.. இந்த காடே முழுசா எனக்கு சொந்தம்.. அந்த வானமும் எனக்கே. இந்த பூமியும் எனக்கே.. அடுத்த அடியை பார்த்து வைக்கணுமே தவிர சறுக்கி வுட்ட எடத்துலயே விழுந்து கெடக்க கூடாது.. இவ காட்டாத்து வெள்ளம்டா.. இவளை அணை போட எவன் உண்டு.?" என கேட்டபடி தனது பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு மலையை விட்டு கீழே இறங்கினாள்.

"ஆரம்பிச்சது அத்தனையும் இத்தோடு முடியட்டும்.." என சொல்லிக் கொண்டு நடந்தவளுக்கு கண்ணோரம் வழிந்த கண்ணீரை எந்த கணக்கில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

புறங்கையால் நொடிக்கொரு முறை கண்ணீரை துடைத்துக் கொண்டாலும் கூட பாதை மங்கலாகவே தெரிந்தது.

"நீ என்ன கண்ணா.? இல்ல காவேரியா..? எதுக்கு இப்படி நிக்காம வழியற.? பொன்னா பார்த்தான்னா மேட்டூர் டேமையே கண்ணுல வச்சிருக்கான்னு கிண்டல் பண்ணுவா.." என்றபடி முகத்தை துடைத்துக் கொண்டாள்.

இரவு வீட்டிற்கு வந்ததும் உறங்கி போனாள் செங்கா. மறுநாள் மதிய நேரத்தில் பொன்னாவின் திட்டல்தான் அவளை தூக்கத்திலிருந்து எழுப்பியது. "அக்கா கல்யாணமாச்சேன்னு உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.? கூட பிறந்தவ விட்டுட்டு போக போறேன்.. உனக்கு அந்த வருத்தமாவது இருக்கா.?" என கேட்டு சலித்துக் கொண்டாள் அவள்.

தூக்கம் ஒட்டிக் கொண்டிருந்த தன் முகத்தை துடைத்துக்கொண்ட செங்கா அக்காவை சலனமின்றி பார்ததாள்.

"நீ எங்கே பிரிஞ்சி போக போற.? இதுக்கு முன்னாடி காலேஜ் போன.. அது மாதிரி இப்ப புகுந்த வூடு போவ போற.. அப்ப மாசத்துக்கு ஒரு வாட்டி வூட்டுக்கு வந்த.. இனி மாமனை தொல்லை பண்ணி இரண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி வர போற.. இதுல பிரியறதுங்கற வார்த்தையே தப்புதான்.." என்றாள் செங்கா

தங்கையின் பதில் தந்த விதத்திற்காக அவளை முறைத்தவள் "இப்ப கிளம்பணுடி.." என்று அவசரப்பட்டாள்.

"அதுக்குதான் நான் குளிக்க போறேன்.." என்று சொல்லி விட்டு உடைகளை எடுத்துக் கொண்டு சென்று குளியலறைக்குள் புகுந்தாள்.

"என் உடம்புல இருந்து காட்டு வாசத்தை நீக்க உதவுற இந்த சாம்பு மாதிரி அந்த மனுசன் நெனைப்பை மனசுல இருந்து தூக்கற ஒன்னு இருந்தா நல்லாருக்கும்.." புலம்பலோடே குளித்து முடித்தாள். மறக்க நினைக்கும் ஒவ்வொரு கணமும் நினைப்பில் தோன்றிக் கொண்டிருந்தது அவனது முகம்.

மாலை வேளையில் மணமகள் வீட்டார் மண்டபம் வந்து சேர்ந்தனர். வெகுதூரம் பயணப்பட்டு வந்ததில் நன்றாக உறங்க வேண்டும் போல இருந்தது செங்காவிற்கு.

கொட்டாவி விட்டபடியே மண்டபத்திற்குள் நுழைந்தாள். யாரையும் நிமிர்ந்தும் கூட பார்க்காமல் நடந்தவள் காலியாக இருந்த அறை ஒன்றில் நுழைந்து கட்டிலில் கவிழ்ந்து படுத்தாள். "நான் காதலிக்க நிச்சயிக்கப்பட்டவன் அவனோடு நிச்சயிக்கப்பட்ட பொண்ணோடு சேர்ந்து கொஞ்சி குலாவுவான்.. அதை பார்த்தா மறுபடியும் காட்டாறாட்டாம் கண்ணு தண்ணி வந்துடும்.. பேசாம நாம இப்போதைக்கு தூங்குவோம்.. அழறதுக்கும் தெம்பு வேணும் இல்ல..?" என்று முனகியபடியே உறங்கி போனாள்.

இருள் சூழ சூழ சொந்தங்களின் வருகை அதிகரித்தது. அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்த சாமிநாதனுக்கு திருமணம் முடியும் வரை அமருவதற்கு கூட நேரம் இருக்காது என புரிந்து போனது. மணமகளை விட அதிகம் கவலை சாமிநாதனுக்குதான் இருந்தது. அழகு மகளின் திருமணம் எந்த குறையும் இன்றி நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே இருந்தார்.

அதியன் மௌன சாமியாராக நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான். செங்கா மண்டபத்திற்குள் நுழைந்த முதல் நொடியிலேயே அவளை பார்த்து விட்டான் அவன். தாவணி அணிந்து தலைகுனிந்தபடி நடந்தவள் அறை ஒன்றினுள் சென்று நுழைந்ததை பார்த்தபடி அமர்ந்திருந்தவன் அவள் நுழைந்த அறையின் வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவள் வெகுநேரம் ஆகியும் வெளியே வராமல் இருப்பதிலேயே அவள் அதற்குள் உறங்கி போய் விட்டாள் என்பதை புரிந்துக் கொண்டான்.

சுவற்றில் முட்டிக் கொள்ள சொன்னது அவனது புத்தி. அமைதியாக அமர்ந்திருக்கவும் இயலவில்லை. எழுந்து சென்று அவளை காணவும் மனம் வரவில்லை.

அதியன் பெற்றோர் ஒன்பது மணியளவில் மண்டபம் வந்து சேர்ந்தனர். மண்டப வாசலில் இருந்த பொன்னாவின் புகைப்படம் கண்டு இருவருமே அதிர்ந்து போய் நின்றனர்.

"இவ நல்ல பொண்ணு இல்லன்னு அன்னைக்கே சொன்னேன்.. அவன் கிடைக்கலன்னு இப்ப இவனை கல்யாணம் பண்ணிக்கிறா.. இவ தப்பானவன்னு உன் மகனுக்கும் தெரிஞ்சிருக்கு.. அந்த விஷ்வாவுக்கும் தெரிஞ்சிருக்கு. இல்லன்னா இப்படி ஊரறிய இவனை கட்டிப்பிடிச்சிட்டு அவனை காதலிக்கிறதா சொல்லி நம்ம வீட்டுக்கே வந்துட்டு மறுபடியும் இவனையே கட்டிப்பாளா.?" என்று கோபமாக கேட்டார் அதியனின் அப்பா.

"ஆமாங்க.. அன்னைக்கு கூட இவளை பத்தி சரியா தெரியல எனக்கு.. இப்போதுதான் தெரியுது.. நல்ல வேளையாக இவ நம்ம வீட்டுக்கு மருமகளா வரல.." என்று சொன்னாள் அதியனின் அம்மா.

"விஷ்வாவுக்குதான் புத்தி இல்ல.. ரக்சனா கூட இதை அப்படியே விட்டுட்டா பார்த்தியா.? மச்சினனை காதலிச்சவளை இப்ப தன் அண்ணனுக்கே கட்டி வைக்கிறா.. இவளை பத்தியும் யோசிக்கணும்ன்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிக் கொண்டே மண்டபத்திற்குள் நுழைந்தார் அவர்.

காயத்ரி இருவரையும் புன்னகையோடு வரவேற்றாள். இருவருக்கும் பன்னீர் தெளித்தாள் பூங்கோதை.

இருவரும் காயத்ரியை ஒரு மாதிரியாக பார்த்தனர். இப்படி ஒருத்தியை தன் மகனுக்கு கட்டி வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று யோசித்தனர். பூங்கோதையின் முகம் பார்த்து இருவருமே புன்னகைத்தனர். செழியன் வாழ்வாவது நல்லபடியாக அமைய வேண்டும் என்று கவலைப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து சென்று அறை ஒன்றினுள் தங்க வைத்தான் விஷ்வா‌. "இருங்க ஆன்டி நான் போய் பொன்னாவை கூட்டி வரேன்.." என்றவன் மணமகள் அறை நோக்கி சென்றான். அலங்காரத்தில் இருந்தவளை அழைத்துக் கொண்டு இவர்களிடம் வந்தான்.

"இவதான் பொன்னா.." என்றவன் பொன்னாவிடம் "இவங்கதான் அதியனோட பேரண்ட்ஸ்.." என்று அறிமுகப்படுத்தி வைத்தான். பொன்னா அவர்கள் இருவருக்கும் வணக்கம் வைத்தாள். இருவரும் அவளை கடுகடுப்போடு பார்த்தனர்.

"எப்படி நடிக்கறா பாரு.. உங்க மகனை நான் கட்டிக்கப்போறேன்னு அன்னைக்கு என்கிட்ட சொல்லிட்டு இன்னைக்கு இன்னொருத்தனை கட்டிக்கிறதுக்கு கூட தப்பில்ல.. ஆனா இப்படி வெட்கமே இல்லாம வந்து வணக்கம் வைக்க இவளுக்கு கூச்சமா இல்ல.?" என்று மனைவியிடம் கிசுகிசுத்தார் அதியனின் அப்பா. அவருக்கு பொன்னாவை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஆத்திரமாக வந்தது.

வெறுப்போடு இருவரும் பதில் வணக்கம் வைத்தனர். அவர்கள் முகத்தில் இருந்த வெறுப்பு கண்டு வருத்தப்பட்டாள் பொன்னா. முக வாட்டத்தோடு வெளியே நடந்தவளோடு இணைந்து நடந்தான் விஷ்வா.

"இவங்க இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா நடந்துக்கறாங்க.." என்றான் குழப்பமாக.

"சரி விடுங்க.. இவங்களுக்காக நம்ப கல்யாணத்தோட நேரத்துளிகளை சோக கணமா மாத்த வேண்டாம்.." என்று சொல்லி புன்னகைத்தாள் அவள். பொன்னா இதை சொன்னதும் விஷ்வாவிற்கும் முகத்தில் மகிழ்ச்சி அரும்பியது.

"ஒவ்வொரு நாளும் சிறப்பு.. இந்த நாள் ரொம்பவும் சிறப்பு. இதை வருத்ததோடு கடக்க வேணாம்.." என்றான் அவனும்.

"இவளையெல்லாம் இப்போதாவது நல்ல கேள்வியா நாலு கேட்டு இருக்கணும்ங்க.." என்று சொன்னாள் அதியனின் அம்மா.

"இவளை கேள்வி கேட்க போய் நாம நம்ம தரத்தை கெடுத்துக்க வேண்டாம்.. இவளுக்கு வேணா கெட்ட புத்தி இருக்கலாம். ஆனா சொந்தம் பந்தம் நிறைஞ்ச சபையில இவ மானத்தை வாங்க எனக்கு மனசு வரல.. இதுதான் நமக்கும் அவளுக்கும் இருக்கற தராதரமே.." என்றார்.

நடு இரவில் உறக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள்‌ செங்கா. கண்களை கசக்கியபடியே உறங்கி போயிருந்த அறையை விட்டு வெளியே வந்தாள். மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

"எங்கே இருக்கோம்.?" என கேட்டுக் கொண்டவள் தூக்க கலக்கத்தோடே சுற்றிலும் பார்த்தாள். "ஓ.. இந்த பொன்னா கழுதைக்கு கல்யாணமா.?" என்று சொல்லியபடி கொட்டாவி விட்டுக் கொண்டாள்.
அதியன் அனைத்து நொடியிலும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கேட்ட கேள்வி அவனுக்கே சிரிப்பை தந்தது. "அரை மெண்டல்.." என்று தனக்குள் திட்டிக் கொண்டான்.

"ஆ.." என்று வயிற்றை பிடித்தாள். "பசிக்குது.. எப்பவும் வேலை செய்ற ஒரே ஆளு வயிறு மட்டும்தான் போல.." என்று சலித்துக் கொண்டவள் சுற்றம் முற்றும் பார்த்தாள். அவளுக்கு நேராக அமர்ந்திருந்த அதியனை பார்த்தவள் சிலையாகி விட்டாள்.

"இவனுக்கு என்ன வந்ததுன்னு இப்ப என்னை இப்புடி வெறிச்சி பாக்கறான்.?" என்று எரிந்து விழுந்தவளுக்கு அவனது பார்வையால் மனதுக்குள் காயம் மட்டுமே உண்டானது.

"யம்மா.." என்றாள். அங்கிருந்த மற்றவர்கள் இவளை திரும்பி பார்த்தனர். அனைவரது பார்வையும் விசித்திரமாகவே இருந்தது.

"முன்ன பின்ன பொட்டப்புள்ளையை பார்த்ததே இல்ல போல.." என்று சலிப்போடு சொன்னவள் அம்மாவை தேடினாள்.

அங்கிருந்த பாதி நாற்காலியில் உறவினர்கள் நிரம்பி இருந்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். தங்களின் வாழ்க்கையை பற்றி சொல்லி கொண்டிருந்தனர். அவர்களின் வாழ்க்கையை பற்றி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கும் இங்கும் பார்வையை அலைபாய விட்டுக் கொண்டிருந்த செங்காவின் அருகே வந்தான் செழியன்.

"தூங்கி எழுந்தாச்சா கும்ப கர்ணன் வாரிசே.?" என்றான் கிண்டலாக.

"பிரபஞ்சத்துல இந்த சின்ன புள்ளை தூங்க கூட உரிமை இல்லையா‌.?" சலிப்பாக கேட்டவள் "உங்கொண்ணன் என்னாத்துக்கு என்னையே பார்த்துட்டு இருக்கான்.?" என்றாள்.

செழியன் அண்ணனை பார்த்து விட்டு இவள் பக்கம் திரும்பினான். "ஏனா அவன் உன்னை லவ் பண்றான்.." தோளை குலுக்கியபடி அவன் சொல்ல செங்கா குழப்பமாக அவனை பார்த்தாள்.

"அந்த பொண்ணை இன்னமும் கண்டுபிடிக்கலையா.?" என்றாள்.

"இல்ல.." என அவன் சொல்ல அவள் அதிர்ச்சியோடு தன் வாய் மீது கை வைத்தாள்.

"இந்த மனுசன் வரலன்னு காத்திருந்து காத்திருந்து கடைசியில அந்த புள்ளை செத்தே போச்சி போல.." என்றாள் அதிர்ச்சியோடு.

"உன் கற்பனை ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு.?" என கேட்ட செழியனுக்கும் மனதுக்குள் இப்படி ஏதும் நடந்திருக்க கூடாது என்ற எண்ணம்தான் தோன்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1066
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN