செங்கா 51

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்காவும் செழியனும் தன்னை பார்ப்பதை கண்டு அதியன் அழகாய் புன்னகை பூத்தான்.
செங்கா சட்டென தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

"எனக்கு பசிக்குது.." என்றாள்.

"வா.. நான் உன்னை டைனிங் ஹால் கூட்டிப்போறேன்.." என்று முன்னால் நடந்தான் செழியன். இருக்கையிலிருந்து எழுந்த அதியன் அவர்களை தொடர்ந்து நடந்தான்.

"உங்கொண்ணன் ஏன் நம்ம பின்னாடி வரான்.?" அதியனை திரும்பி பார்த்துவிட்டு கேட்டாள் செங்கா.

செழியன் தனக்கு வர இருந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். "அவன் மேல இருக்கற கோபத்துல இப்படி பேசுறியா.? இல்ல எப்பவுமே அவனை இப்படி அவன் இவன்னுதான் சொல்வியா.?" சந்தேகமாக கேட்டான் அவன்.

செங்கா யோசித்தாள். "எப்பவுமே இப்படித்தான் கூப்புடுறன்.. ஏன்.?" என்றாள்.

"இல்ல.. ஒன்னுமில்ல.." என்றவனுக்கு அவளது பேச்சு சற்று காட்டன்தனமாகவே தெரிந்தது.

செங்கா வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு நிமிர்ந்தபோது அதியன் உணவு கூடத்தின் நுழைவாயில் அருகே உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தான்.

அங்கிருந்து வெளியே நடந்தவள் அவன் முன் வந்து நின்றாள். "ஏன் இப்புடி பொழுதினிக்கும் வெறிச்சி பாக்கற.? யாராவது பார்த்தா என்னைய இல்ல தப்பா நெனைப்பாங்க.?" என கோபமாக கேட்டாள்.

"சாரி.." என்று அவன் சொல்லவும் செங்காவிற்கு வருத்தமாகி விட்டது.

"அந்த புள்ளைய சீக்கிரம் கண்டுபிடிச்சி கட்டிக்க.. எல்லாம் சரியா போயிடும்.." என்றாள்.

அதியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அவள் அவனை கடந்து வந்து ஹாலுக்குள் நுழைந்தபோது சீனு வேட்டி சட்டையோடு அவளை எதிர்நோக்கி நடந்து வந்தான். "மாமோவ்.." என்று அழைத்தவள் அவனருகே ஓடினாள்.

"இந்த வெள்ளை வேட்டி சட்டையில டக்கராதான் இருக்க.. இந்த சொட்டை மட்டும் இல்லாம இருந்தா எல்லா பிள்ளைங்களும் உன்னதான் சுத்தி வந்திருக்கும்ங்க.." என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு சீனுவிற்கு சிரிப்பு வந்தது. "நீயும் இந்த காட்டான் பாசை பேசாம நல்லா பேசினா கூடத்தான் எல்லா பசங்களும் உன்னையே சுத்தி வருவாங்க.." என்றான் அவன் பதிலுக்கு.
செங்கா தன் கன்னத்தில் கையை வைத்தாள். "உன் சொட்டை எப்படி இயல்போ அது போலதான் என் பாசையும் இயல்பு.. இயல்பு மாறிய விசயங்களை தான் எல்லாரும் விரும்புவாங்கன்னா என்னை யாருக்கும் புடிக்கவே வேணாம்.." என்றாள்.

தன் சுட்டுவிரலை கொண்டு அவளது நெற்றியில் சுட்டி விட்டான் சீனு. "அதேதான் இங்கேயும். என் இயல்பு இதுதான். என்னை இப்படியே விரும்பறவங்க யாராவது இருந்தா மட்டும் என்னை விரும்பட்டும்.. எனக்கு பிடிச்சா மாறுவேனே தவிர யாரோ ஒருத்தருக்கு பிடிக்கணும்ன்னு நானும் என் இயல்பை மாத்திகறதா இல்ல.. இதை புரிஞ்சிக்க எனக்கு இத்தனை வருசம் ஆகியிருக்கு.." என்றான் சோம்பலாக.

செங்கா அவனின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள். "நீயும் கூட நல்லா பேச கத்துக்கிட்ட மாமோவ்.." என்றாள்.

சீனு அவளது கையை பற்றினான். அவளின் கை விரல்களை தன் உதட்டருகே கொண்டு வந்து முத்தமிட்டான். "அன்னைக்கு நான் புத்தி இல்லாம இருந்துட்டேன்.. உங்க அப்பா அம்மாவை கடத்தி வந்தது தப்பு.. அதை விட பெரிய தப்பு உன்னை அடிச்சது.. அன்னைக்கு முட்டாள்தனமா உன்னை அடிச்சிட்டேன். அதை நினைச்சி இப்ப தினமும் வருத்தப்படுறேன்.. நீ இரண்டு மூணு மாசமா படுக்கையில் இருக்க நான்தான் காரணம்.. என் தப்புக்கு காலத்துக்கும் நீ என்னை மன்னிக்கவே கூடாது.. ஆனா நீ பழசையெல்லாம் மறந்துட்டு என்னை மன்னிச்சதும் இல்லாம எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட சகஜமா பேசுற.. உன்னை போல ஒருத்தியை சந்திச்சதுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன்.." என்றான்.

சீனுவும் செங்காவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த அதியனுக்கு அவர்களின் நெருக்கம் எரிச்சலை தந்தது. "முட்டாள்.." என்று செங்காவை திட்டினான்.

அவனருகே நின்றிருந்த செழியன் "அவங்க இரண்டு பேரும் கசின்ஸ்.. பேசிக்க கூட அவங்களுக்கு உரிமை இல்லையா.?" என்றான் அண்ணனின் முகம் பார்த்து.

"அன்னைக்கு அவளை அவன் எப்படி அடிச்சான் தெரியுமா.? முதுகுல விழுந்த அடி தலையில் விழுந்திருந்தா இன்னேரம் இவளோட சாம்பல் கூட காணாம போயிருக்கும்.. எப்படி அதையெல்லாம் மறந்துட்டு அவளால இவன்கிட்ட பேச முடியுது.?" என்றான் சிறு கோபத்தோடு.
"மன்னிக்க என்ன இருக்கு மாமா.? நீயும் மனுசன்தான்.. நானும் மனுசிதான்.. தப்பு செய்றது மனுசங்க ரத்தத்தில ஊறி போனதுதானே‌.? தப்பை மட்டுமே சொல்லி காட்டிட்டு இருந்தா இங்கே எவனுமே நல்லவனா இருக்கவே முடியாது.. பாவம்ன்னு எடுத்துக்கிட்டா எறும்பை கொல்றதும் பாவம்தான்.. களை செடியை பிடுங்கி எறியறதும் கூட பாவம்தான்.. ஆனா அந்த களை வயலுக்கு எடைஞ்சல்ன்னு அதை பிடுங்கி எறியறோம்.. அப்புடிதான் மனுசங்களும்.. ஒருத்தங்க நம்ம சந்தோச வாழ்க்கைக்கு எடைஞ்சல்ன்னு தெரிஞ்சதும் அவங்க உயிரை எடுக்க நினைக்கிறோம்.. விலகி போயிட்டா எல்லாமே சரியா போயிடும்ன்னு தெரியறது இல்ல.. அவ்வளவுதான்.." என்று தன்னிடம் சொன்ன செங்காவை வியப்போடு பார்த்தான் சீனு.

"நம்ம பரம்பரையில் தப்பி பிறந்தவ நீ.. எங்கிருந்தாலும் நல்லாரு.. இந்த மாமனோட உதவி வேணும்ன்னாலும் கூப்பிடு.. இல்ல இந்த மாமனே வேணும்னாலும் கூட சொல்லு, தாலியோடு வந்து சேருறேன்.." என்று சீனு சொன்னதில் கடைசி வாக்கியம் கேலி சிரிப்போடு இருந்தது.

"போ மாமா.." அவனின் தோளில் செல்லமாக குத்தியவள் வெட்கத்தில் முகத்தை திருப்பி கொண்டாள்.

"எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல.." என்று கடின குரலில் சொன்னான் அதியன்.

"எனக்கும் கூட பிடிக்கல.." என்று செழியனும் அதையே சொன்னான்.

சீனுவை அழைத்துச் சென்று நாற்காலி ஒன்றில் அமர வைத்தாள் செங்கா‌. திருமணத்திற்கு வந்திருந்த சொந்தக்கார பாட்டி ஒருத்தி சீனுவை கண்டதும் எழுந்து இவனருகே வந்தாள். விடிய விடிய கதை பேச ஒரு ஆள் கிடைத்து விட்டதே என்றொரு நிம்மதி அவளுக்கு. பாட்டியும் சீனுவும் பேச ஆரம்பித்ததும் அங்கிருந்து நழுவிக் கொண்டாள் செங்கா.

அதியனும் செழியனும் செங்காவை பின்தொடர்ந்து சென்றனர். அவள் நாற்காலி ஒன்றில் அமரவும் இவர்களும் அவளின் அருகே சென்று அமர்ந்தனர்.

"இங்கே ஏன் வந்து ஒட்கார்ந்திருக்க.?" என்று அதியனை பார்த்து கேட்டாள் செங்கா.

"கல்யாணம் பண்ணிக்கதான் விதியில்ல.. அட்லீஸ்ட் பிரெண்டா பேச கூட உரிமை இல்லாம போச்சா.?" என்று சோகமாக கேட்டான் அவன். செங்கா முகமும் வாடி போனது.

"இல்ல நான் அப்புடி சொல்லல.." என அவள் ஆரம்பிக்க "ஓடையில வெள்ளம் வந்ததா.?" என்று கேட்டான் இவன் காட்டு நினைவில்.

இல்லையென தலையசைத்தாள் செங்கா. "அந்த பச்சைக்கிளி என்னை தேடி வந்ததா.?" என்றான் யோசனையோடு.

அந்த பச்சைக்கிளி தினமும் இவளை தேடி வந்து இவள் தோளில் சற்று நேரமாயினும் அமர்ந்து சென்றதை பற்றி எப்படி இவனிடம் சொல்வதென தயங்கினாள் செங்கா.

"சரி விடு.. பச்சைக்கிளி அதோட பேமிலியோடு ஹேப்பியா இருக்கட்டும்.." என்றவன் "நீ என்னை மிஸ் பண்ணியா.?" என்றான்.

செங்கா உதட்டை கடித்தாள். எழுந்து நின்று அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தாள். செழியன் சட்டென சற்று ஒதுங்கி அமர்ந்துக் கொண்டான்.

"என்னைய பார்த்தா உனுக்கு அவ்வுளவு எளக்காரமா இருக்கா.? உனுக்குதான் வேற பொண்ணு இருக்கு இல்ல‌.? அப்பாறம் ஏன் என்கிட்ட வந்து இப்புடியெல்லாம் பேசிட்டு இருக்க..?" என்றாள் கலங்கிய கண்களோடு.

அதியன் எரியும் தன் தலையை பலமாக தேய்த்து விட்டுக் கொண்டான். "வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க கூடாதா.?" என்று தன்னையே திட்டிக் கொண்டான். ஆனால் செங்காவின் கலங்கும் விழிகளை கண்ட பிறகே தனது கேள்வி அவளை பாதித்துள்ளது என்பதை புரிந்துக் கொண்டான்.
"சாரி.." என்றான் மெல்லமாக.

"உன் வாழ்க்கை வேற தடத்துல போவுது.. என் வாழ்க்க வேற தடத்துல போவுது.. என் வாழ்க்கைய பத்தி நீ விசாரிக்கிறது தப்பு இல்ல.. ஆனா அதுவே உன் தடத்துல முள்ளா மாறிட வாய்ப்பு இருக்கு.. அதனால என்னை மறந்துட்டு, என்னை மாதிரி ஒரு சீவன் இருக்குன்னு மறந்துட்டு உன் வாழ்க்கைய வாழ பாரு.." என்றாள்.

தன் கன்னத்தை துடைத்துக் கொண்டவள் தன் அக்காவை தேடி போனாள். மணமகள் அறையில் பொன்னாவும் ரக்சனாவும் எதையோ பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

அவர்களை கண்டுக்கொள்ளாமல் சென்று கட்டிலில் குப்புற விழுந்தாள் செங்கா‌. "நான் தூங்க போறன்.. என்னைய யாரும் எழுப்பாதிங்க.. அப்பாறம் கடிச்சி வச்சுடுவன்.." என்றவள் தலையணையில் முகத்தை புதைத்தாள். ரக்சனாவும் பொன்னாவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

"அவ கடக்கறா லூசு.. சரி நீ சொல்லு.. உங்க அண்ணன் அஞ்சாவது படிக்கும்போது என்ன ஆச்சி.?" என்று தாங்கள் இடையில் விட்ட உரையாடலுக்குள் ரக்சனாவை இழுத்தாள் பொன்னா.

அவர்கள் இருவரும் பழைய கதைகளை பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர். செங்கா சற்று நேரத்தில் உறங்கி போனாள். அவளின் மெல்லிய குறட்டை சத்தம் கேட்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள் பொன்னா.

"இவளெல்லாம் மனுசியா.? பகல் முழுசா தூங்குறா.. ராத்திரியும் முழுசா தூங்குறா.. திங்கறதும் தூங்கறதும் தவிர வேற எதுவும் உருப்படி இல்ல.." என்று தங்கையை கடிந்துக் கொண்டாள்.
"விடுப்பா.. இவ ஓவர் க்யூட்.. அவ்வளவுதான்.." என்று புன்னகையோடு சொன்னாள் ரக்சனா. அவளை வியப்போடு பார்த்தாள் பொன்னா.

"இந்த வார்த்தையை கேட்கும்போதுதான் ரொம்ப கடுப்பா இருக்கு.." என்றாள் பொன்னா.

"அது பொறாமையால வருவது.." சிரிப்போடு ரக்சனா சொல்ல அவசரமாக மறுத்து தலையசைத்தாள் பொன்னா.

"இவளை பார்த்து பொறாமையா‌.? அதுவும் நானா.? கிடையவே கிடையாது.." என்றாள் அவள்‌. 'ஆனா இவ படிக்கணும்ங்கற கவலையே இல்லாம காடு சுத்தும்போதுதான் கொஞ்சம் பொறாமையா இருக்கும்.. கை வலிக்க ரெக்கார்ட் எழுதும்போதும், புரியாத பாடங்களை ஓயாம மனப்பாடம் பண்ணும்போதும் இவளை நினைச்சி பொறாமையா இருக்கும்..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

பொன்னாவின் யோசனையை ரக்சனாவால் அறிய முடியவில்லை என்றாலும் கூட அவளது வாடிய முகம் கண்டு எதையோ புரிந்துக் கொண்டாள்.

"அவளை நீ ரொம்ப மிஸ் பண்ணுவ இல்ல.?" என்றாள்.

பொன்னா ஆமென தலையசைத்தாள். சட்டென துளிர்த்து விட்ட கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டாள். "இவளை திட்டாம, இவளை குறை சொல்லாம இனி எப்படி இருக்க போறேனோ.?" என்று கேட்டவள் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டாள்.

ரக்சனா அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். "அண்ணா அடிக்கடி உன்னை ஊருக்கு கூட்டிப்போவான்.. கவலைப்படாத.." என்றாள்.

பொன்னா ஆமோதித்து தலையசைத்தாள்.

விடியற்காலை பொழுதில் பொன்னா தயாராகினாள். ரக்சனாவும் பட்டுப்புடவை கட்டி தயாராகினாள்.

"நெத்திச்சுட்டியை கொஞ்சம் மேலே ஏத்தி வைங்க.." பொன்னா தன்னை அலங்கரித்த பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அறைக்குள் வந்தான் அதியன்.

"நான் எப்படி இருக்கேன் அதியன்.?" என கண்ணாடி பிம்பத்தில் பார்த்துக் கேட்டாள் பொன்னா.
"நல்லாருக்க.." என்ற அதியன் கட்டிலில் உறங்கி கொண்டிருந்த செங்காவை வியப்போடு பார்த்தான்.

"இவ ஏன் இன்னும் ரெடியாகல..?" என்றான்.

"அவளை யாராவது எழுப்பினா கடிச்சி வச்சிடுவேன்னு சொல்லி இருக்கா.. அதனாலதான் எழுப்பல.. முகூர்த்தத்துக்குதான் இன்னும் நிறைய நேரம் இருக்கே.. அப்புறம் எழுப்பிக்கலாம்ன்னு இருந்துட்டேன்.." என்றாள் ரக்சனா.

அவர்கள் இருவரையும் கோபத்தோடு பார்த்தான் அதியன். "நீங்க மட்டும் ரெடியான போதும்ன்னு இருங்கிங்க.." என்று சொன்னவன் செங்காவின் தோளில் தட்டி எழுப்பினான்.

"செங்கா எழு.. நேரம் ஆச்சி.." என்றான்.

"இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வுடு பட்டணம்.." என்றவள் அவனின் கழுத்தில் கை போட்டு அவனை தன் அருகே இழுத்தாள். அவள் இழுத்த வேகத்தில் அவனும் அவளின் அருகிலேயே விழுந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1113
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN