செங்கா 52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்காவின் உறங்கும் முகத்தை பார்த்தான் அதியன். அவளது மூச்சுக்காற்று இவனது முகத்தில் மோதியது. அவளது மூடிய விழிகளை அதிசயமென பார்த்தான் இவன்.

"தூங்கு மூஞ்சி உங்களையும் சேர்த்து தூங்க வைக்கிறாளா.?" என கேட்டு சிரித்தாள் பொன்னா.

அதியன் சட்டென எழ முயன்றான். ஆனால் செங்காவின் பிடி இரும்பாக இருந்தது. அதியன் எழ முடியாமல் திணறுவதை கண்டு அவர்களின் அருகே வந்தாள் பொன்னா.

"செங்கா.." என்று அழைத்தப்படி தங்கையின் தோளில் ஓங்கி அடித்தாள். செங்கா அதியனை விட்டு விட்டாள். மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள். "என்னை தூங்க வுடு கழுதை.." என்றாள் கண்களை திறக்காமலேயே. பொன்னாவின் அடியால் அவளது தூக்கம் தெளிந்து விட்டது‌. ஆனால் எழுவதற்கு சோம்பல்பட்டு கண்களை மூடியபடி படுத்திருந்தாள்.

அதியன் அவளை விட்டு விலகி எழுந்து நின்றான். "செங்கா.. எழுந்திரு.." என்றான்.

இவனது குரலை கேட்ட செங்கா பட்டென எழுந்து அமர்ந்தாள். தன்னை சுற்றிலும் பார்த்தாள்.
பொன்னா கைகளை கட்டியபடி ஒரு பக்கம் நின்றிருந்தாள். அதியன் தன் சட்டை காலரை சரிசெய்தபடி மறு பக்கம் நின்றுக் கொண்டிருந்தான்.

"இப்ப என்ன ஆச்சி.?" என்றாள் செங்கா தன் உதட்டையும் முகத்தையும் துடைத்துக் கொண்டு.
பொன்னா தன் இடுப்பில் கை வைத்தபடி தங்கையை முறைத்தாள்.

"சோம்பேறி கழுதை.. எழுந்து போய் குளிச்சிட்டு வாடி.. முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சி.." என்று அவசரப்படுத்தினாள்.

செங்கா கொட்டாவி விட்டாள். "நீதான் தயாராகிட்டியே.. இன்னும் என்ன.? வுடு நான் தூங்குறன்.." என்றாள்.

பொன்னா கோபத்தோடு அவள் அருகே வந்து நின்றாள். "இன்னும் அரை மணி நேரத்துல குளிச்சிட்டு வா.. இவங்க உனக்கு புடவை கட்டி மேக்கப் பண்ணி விடுவாங்க.." என்றாள். பொன்னா கை காட்டிய பெண்ணை பார்த்தாள் செங்கா. ரக்சனாவிற்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

செங்கா வியப்போடு அக்காவை பார்த்தாள். "இன்னைக்கு உனக்குதானே கல்யாணம்.? நான் ஏன் மேக்கப்ப போட்டுக்கணும்.. விஷ்வா மாமன் எனக்கும் தாலி கட்ட போவுதா என்ன.?" என்றாள் கிண்டலாக.

அதியன் பற்களை கடித்தபடி அருகிலிருந்த தலையணை ஒன்றை எடுத்து செங்காவின் தலை மீது அடித்தான்.

செங்கா திரும்பி பார்த்து அவனை முறைத்தாள். "சீக்கிரம் ரெடியாகி வா.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

உதடு பிதுக்கி அவனின் முதுகை முறைத்தாள் செங்கா. "என்னைய அடிச்சிப்புட்டான்.." என்றாள் அக்காவிடம் திரும்பி.

"பின்ன உன்னை மாதிரி சோம்பேறி கழுதையை கொஞ்சுவாங்களா.? எழுந்து போய் ரெடியாகி வா.." என்று அவளை விரட்டினாள் பொன்னா‌.

அதியன் நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். "இவ்வளவு பொசசிவ்னெஸை மனசுல வச்சிக்கிட்டு எப்படி நான் இவளை விலகி வாழ முடியும்.?" என கேட்டு தலையை பிடித்தபடி தரையை பார்த்தான்.

"செங்கா.." கடித்த பற்களின் இடையே அவளது பெயரை சொல்லி பார்த்தான். அவளை விட்டு விலகி இருக்க முடியும் என தோன்றவேயில்லை.

ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதியன் தரையை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.
"அண்ணா.." செழியனின் குரல் கேட்ட பிறகே நிமிர்ந்து பார்த்தான்.

"நீ ஏன் புது பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு உட்கார்ந்திருக்க.?" என கேட்டபடி அண்ணனின் அருகே அமர்ந்தான் செழியன்.

செழியனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அதியன். காதில் விழுந்த சத்தங்களை கேட்டு திரும்பி பார்த்தான். அவனை சுற்றிலும் அவனுக்கு பின்னாலும் என உறவினர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.

"முகூர்த்த நேரம் ஆயிடுச்சா.?" என கேட்டபடி தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். மணி அதிகாலை ஐந்து ஆகியிருந்தது.

முகத்தை துடைத்தபடி நிமிர்ந்து அமர்ந்தான். "மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு செழியா.." என்றவன் நாற்காலியில் முதுகு சாய்ந்து அமர்ந்தான்.

"ஏன் அண்ணா.?" என கேட்ட செழியனுக்கு ஏற்கனவே பதில் தெரிந்துதான் இருந்தது
"லவ்வுன்னா மியூச்சுவலா வரணும் இல்லையா.? ஒருத்தி என்னை அஞ்சி வருசமா நினைச்சிட்டு இருக்காங்கற ஒரே காரணத்துக்காக நான் ஏன் என் காதலுக்கு சமாதி கட்டணும்.?" என்றான்.

செழியனை அண்ணனை வியப்போடு பார்த்தான். "அதுக்கு.." என்றான் ஆர்வமாக.

"அந்த நிச்சயதார்த்தம் எனக்கு பிடிக்காத நிச்சயதார்த்தம்.. இது பொண்ணு வீட்டாருக்கு ரொம்ப நல்லா தெரியும்.. எல்லாம் தெரிஞ்சிருந்தும் அந்த பொண்ணு அஞ்சி வருசமா காத்திருந்தா அது அந்த பொண்ணு தப்புதானே தவிர என் தப்பு இல்ல.. நான் செங்காவை காதலிக்கிறேன்.. அவ என் லைஃப் முழுக்க என்னோடு வேணும்.. செங்கா இல்லாம வாழ்க்கையை வாழுறதுல எனக்கு எந்த அர்த்தமும் இல்ல.. அதனால நான் செங்காவை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அந்த பொண்ணை கண்டுபிடிக்கற அன்னைக்கு மனப்பூர்வமா மன்னிப்பு வேணும்ன்னா கேட்கிறேன்.. ஆனா அதுக்காக என் லைப்பை வேஸ்ட் பண்ண மாட்டேன்.." என்றவன் எழுந்து நின்றான்.

செழியனும் அவனோடு எழுந்தான். "நீ ஏன் திடீர்ன்னு குண்டை தூக்கி போடுற.? அப்பா வாக்கு தந்தேன்னு சொல்லி இருக்காரே.. அதுக்கு என்ன பண்றது.?" என்றான்.

ஓரடி எடுத்து வைத்த அதியன் நின்று தம்பி பக்கம் திரும்பி பார்த்தான். "நான் வாக்கு தரல.. எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சிதானே அவர் வாக்கு தந்தாரு.. இனியும் அந்த பொண்ணு வேணும்ன்னா அந்த பொண்ணை அவரே கட்டிக்கட்டும்.." என்று சொல்லி விட்டு நடந்தான்.

செழியன் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அண்ணனை பார்த்தபடி நின்றான்.

மேடையின் ஒரு ஓரத்தில் மேளதாளங்களை மெல்லிய சத்தத்தோடு இசைக்க ஆரம்பித்தனர்.

மணமகள் அறையின் கதவை படீரென திறந்து உள்ளே சென்றான் அதியன். கண்ணாடியின் முன்னால் அமர்ந்திருந்த செங்கா கதவு திறந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அறைக்குள் வந்த அதியன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். செங்காவை கண்கள் சிமிட்டி பார்த்தான். ஊதா வண்ண பட்டுப்புடவையில் இருந்தவளின் பின்னிய கூந்தலில் மல்லிகையும் கனகாம்பரமும் நாலு சரங்கள் சூட்டப்பட்டு இருந்தது. ஒப்பனை செய்யும் பெண் இவளின் உதட்டில் செஞ்சாயத்தை பூசினாள். செங்காவை பார்க்கையில் அதியனுக்கு பறக்க வேண்டும் போல இருந்தது.

செங்கா எழுந்து நின்றாள். அவளது வளையணிகளின் சத்தம் இசையாய் ஒலித்தது அதியனுக்கு.
"அழகா இருக்க நீ.." என்றான் தன்னை மறந்து.

செங்கா உதட்டை கடித்தபடி தலை குனிந்தாள். அவன் சொன்னது கேட்டு ஒரு புறம் வெட்கம் வந்தது. மறுபுறமோ கோபம் வந்தது. எதை வெளிக்காட்டுவது என்று கூட தெரியாமல் குழம்பினாள்.

தன் அருகே யாரோ கனைக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் அதியன். பொன்னாவும் ரக்சனாவும் இவனை புருவம் உயர்த்தி பார்த்தபடி நின்றிருந்தனர்.

"என்ன நடக்குது இங்கே.?" என்றாள் ரக்சனா.

"சரிபடாத இடத்துக்கு திரும்ப திரும்ப வர கூடாது பட்டணம்.." என்றாள் செங்கா. அதியன் அவளை திரும்பி பார்த்தான். செங்காவின் இமைகள் ஈரத்தோடு மின்னின.

அதியன் பெருமூச்சி விட்டான். அவளருகே வந்து அவளின் கையை பற்றினான். "இவளோட அலங்காரம் முடிஞ்சதா.?" என்றான் அருகில் இருந்த பெண்ணிடம். அந்த பெண் முடிந்ததாக தலையசைத்தாள்.

அதியன் செங்காவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்.

"என்ன எங்க கூட்டி போற.? என் கைய வுடு.." என்று திமிறினாள் செங்கா.

அதியன் அவளை ஆழமாக பார்த்தான். "உன்கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும்.." என்றான். செங்கா குழம்பியது அவளது முகத்தில் தெளிவாக தெரிந்தது.

பொன்னாவும் ரக்சனாவும் அவனை ஆச்சரியத்தோடு பார்த்து நின்றனர். அவன் செங்காவை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறியவன் ஐந்தாறு படிகள் ஏறிய பிறகு நின்றான். இவளை திரும்பி பார்த்தான். செங்கா அவனது முகத்தை அண்ணாந்து பார்த்தாள். அவன் மனதில் ஓடுவதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லையே. ஆனால் அவனின் வசீகர முகம் அவளின் மனதை தடுமாற வைத்தது.

"என்னா பேச போற.?" என்றாள் தன் கையை உருவிக்கொண்டு.

"என்னை கல்யாணம் பண்ணிக்க.." என்றான் அவன்.

செங்கா அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். "அந்த பொண்ணு.." என ஆரம்பித்தவளின் முன்னால் தன் கையை காட்டி நிறுத்தினான் அதியன்.

"நான் உன்னை காதலிக்கிறேன்.. நீயும் என்னை காதலிக்கிற.. நீ என்னை கட்டிக்கிறியா இல்லையா இதுதான் இங்கே முக்கியம்.. எந்த பொண்ணோ என்னை விரும்புறது விசயம் இல்ல.." என்றான்.
செங்கா அவனின் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினாள். அவன் அசையாமல் நின்றான்.
"அந்த பொண்ணு உன் மேல ரொம்ப ஆசை வச்சிருக்கா.." என்றாள் தொண்டை அடைக்க.
"சரி இப்ப ஒரு விசயத்தை நீயே எனக்கு கிளியர் பண்ணி விடு.. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுதுன்னு வை.. அப்ப நாலு பொண்ணுங்க என்னை தேடி வராங்க.. என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறதா சொல்றாங்க.. அப்பவும் நீ அந்த நாலு பொண்ணுங்களையும் எனக்கு இரண்டாம் தாரமா நாலாம் தாரமா கட்டி வைப்பியா.?" என்றான்.

செங்கா அவனை கோபத்தோடு முறைத்தாள்.

"அது மாதிரிதான் இதுவும்.. நானும் அவளை காதலிச்சாதான் அது கை சேரும்.. ஒருத்தி எனக்காக அஞ்சி வருசம் காத்திருந்தாலும் சரி ஐம்பது காத்திருந்தாலும் சரி.. என் மனசுல என்ன இருக்குங்கறதுதான் விசயமே.. அந்த நிச்சயதார்த்தம் எனக்கு பிடிக்கலன்னு அந்த பொண்ணுக்கும் ரொம்ப நல்லா தெரியும்.. அப்படி இருந்தும் அந்த பொண்ணு எனக்காக காத்திருந்தா அது அந்த பொண்ணு மேலதான் தப்பு.. என் மேல இல்ல.. அவ அஞ்சி வருசம் காத்துட்டு இருக்கறான்னு இன்னைக்கு நான் அவளை கட்டிக்கிட்டா அப்புறம் நீ ஆயுசுக்கும் காத்துட்டு இருப்ப.. அதுக்கு நான் என்ன பண்ணட்டும்.?" என்று கேட்டான்.

செங்காவின் கண்கள் கலங்கியது. அவன் சொல்வது உண்மைதான். இவளால் அவனை என்றுமே மறக்க முடியாது. ஆயுளுக்கும் அப்படியேதான் காத்திருப்பாள். அதை நினைக்கையில் நெஞ்சத்தில் பாரமாக இருந்தது.

"நான் சுயநலவாதியா இருக்கறதை பத்தி இந்த மொத்த உலகமும் விமர்சனம் பண்ணட்டும் செங்கா.. எனக்கு அதை பத்தி கவலை இல்ல.. ஆனா நான் எனக்கு பிடிச்ச பொண்ணோடுதான் வாழ்க்கையை வாழ்வேன்.. இங்கே முடிவை சொல்ல வேண்டியது நீதான்.. எனக்கு நீ வேணும்.. என்னை விரும்பற எல்லாரையும் எனக்கு கட்டி வைக்க ஆசைப்பட்டா முதல்ல நீ என்னை கட்டிக்க.. ஏனா நீயும்தான் என்னை விரும்புற.. அதுக்கு மேல உனக்கு ரொம்ப ரொம்ப தாராள மனசு இருந்தா என்னை விரும்புற இன்னும் நாலு பேரை கூட எனக்கு கட்டி வை.. எனக்கு அதுல எந்த ஆட்சேபணையும் இல்ல.. ஆனா அவங்களுக்கான எல்லா செலவையும் நீதான் பண்ணனும்.. என்னால உன் ஒருத்திக்குதான் சம்பாதிச்சி தர முடியும்.. ஏனா நான் ஒன்னும் பணம் அச்சடிக்கற வேலையில் இல்ல.. ஆனா எது எப்படியோ எனக்கு நீ வேணும்.. இதான் என் ஒரே முடிவு.. இனி நீதான் உன் முடிவை சொல்லணும்.. இல்லன்னா நான் உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்கவும் தயங்க மாட்டேன்.. ஏனா என்னோட குழப்பம் அந்த அளவுக்கு இருக்கு.. உனக்கு இதை சொன்னாலும் புரியாது.." என்றான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்ட செங்கா சிலையாக நின்றாள். பதில் சொல்ல வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.

Word Count 1073
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN