செங்கா 54

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த பெண்ணை எங்கு பார்த்தோம் என்று யோசித்தான் அதியன்.

"இந்த பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு செழியா.." என்றான் தம்பியிடம்.
செழியன் தன் அண்ணன் கை காட்டிய பெண்ணை பார்த்தான். "இது உனக்கு நிச்சயம் பண்ண பொண்ணுண்ணா.." என்றான்.

அதியன் வியந்து போய் அந்த பெண்ணை திரும்பி பார்த்தான். நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, கை விரலை பிடித்தபடி நிற்கும் குழந்தை என்று அவளை கண்டதும் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த பெண் இவனை கண்டதும் மென்னகை புரிந்து விட்டு நகர்ந்து போனாள்.

அதியன் முகத்தில் ஈயாடவில்லை. அந்த பெண் மணமேடையிலிருந்து இறங்கி செல்வதை கண்டவன் ஓடிச்சென்று அவளின் கை பற்றி நிறுத்தினான்.

அந்த பெண் தன் கையை பற்றியிருக்கும் அவனை சிறு குழப்பத்தோடு பார்த்தாள்.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான்.

அந்த பெண் அவனை தயக்கமாக பார்த்தபடி தன் கையை உருவிக்கொண்டாள்.

"என்ன பேசணும்.?" என்றாள்.

"தனியா வாங்க.. ப்ளீஸ்.." கெஞ்சல் குரலில் அதியன் கேட்ட நேரத்தில் அங்கு வந்தார் சாமிநாதன்.

"என்ன ஆச்சி தம்பி.?" என்றவர் அந்த பெண்ணின் பக்கம் பார்த்தார். "மாமா வரலையாம்மா.?" என்றார்.

"அவருக்கு திடீர்ன்னு மூட்டுவலி வந்துடுச்சிங்க.. அதனாலதான் நான் மட்டும் குழந்தையோடு வந்தேன்.." என்றவள் அதியனை பார்த்தாள்.

"இவர் மாப்பிள்ளையோட பிரெண்ட்ம்மா.. இவரை எப்படி உங்களுக்கு தெரியும்.?" என கேட்டார் அவர்.

அவள் இவனை தயக்கமாக பார்த்தாள். சாமிநாதன் பக்கம் திரும்பினாள். "அப்புறம் பேசலாமா.? நான் இங்கேயேதான் இருப்பேன்.?" என்றாள்.

சாமிநாதன் சரியென தலையசைத்தார்‌. அவள் அந்த கூடத்தின் ஒரு மூலைக்கு சென்று நாற்காலியில் அமர்ந்தாள். சாமிநாதன் அதியனை பார்த்தார். "எதுவா இருந்தாலும் அப்புறமா பேசலாம் தம்பி.." என்று தோளில் தட்டி விட்டு மேடைக்கு சென்றார்.

அதியன் மேடைக்கு வந்தபோது செங்கா அவனை யோசனையோடு பார்த்தாள். "யார் அந்த புள்ளை.?" என்றாள் அவன் அருகே வந்தவுடன்.

"எனக்கு நிச்சயம் பண்ண பொண்ணு.." அவன் இரும்பு குரலில் சொல்லவும் அவள் அதிர்ந்து விட்டாள். அந்த பெண்ணை திரும்பி பார்த்தாள்.

"அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆயிடுச்சி போல இருக்கு.." என்றாள்.
அதியன் ஆமெனும் விதமாக தலையசைத்தான்.

"அப்பாறம் ஏன் உங்கப்பன் அப்படி சொன்னுச்சி.?" என்றாள் குழப்பமாக.

அதியன் தெரியாதென தலையசைத்தான். "உனக்கு தெரிஞ்சதுதான் எனக்கும் தெரியும்.." என்றான்‌.

வந்த உறவினர்கள் கூட்டம் மெல்ல கலைய ஆரம்பித்தது. உடனிருந்த அனைவரும் சாப்பிட அழைத்து சென்றும் கூட அதியனுக்கு உணவு தொண்டையில் இறங்கவில்லை.

திருமண மண்டபத்தில் இருந்த கூட்டம் கலைந்து போன பிற்பகல் வேளையில் அதியனுக்கு நிச்சயித்த பெண்ணின் முன்னால் வந்து நின்றாள் செங்கா.

அந்த பெண் இவளை கண்டு புன்னகைத்தாள். "நீங்க டிவின்ஸ்தானே.? அச்சு அசலா ஒரே மாதிரி இருக்கிங்க.." என்றாள்.

செங்கா அவள் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்‌. சாமிநாதனும் விஷ்வாவும் செங்காவும் இந்த பெண்ணும் பேசுவதை கண்டுவிட்டு இவர்களின் அருகே வந்து நின்றனர்.

"நாங்க ரெட்டை பொறவிதான்.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விசியம் பேசணும்.." என்றவள் "உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.?" என்றாள் தயக்கமாக.

எதிரில் இருந்தவள் இவளை விந்தையாக பார்த்தாள். "கல்யாணம் ஆகி நாலு வருசம் ஆச்சி.. ஏன்‌‌.?" என்றாள்.

"நாலு வருசமா.?" செங்கா அதிர்ச்சியோடு கேட்ட அதே நேரத்தில் அவளின் பின்னால் வந்து நின்றான் அதியன். "நாலு வருசமா.?" என்றான் அவனும்.

அந்த பெண் இவனை நிமிர்ந்து பார்த்தாள். "ஏன் இரண்டு பேரும் இவ்வளவு ஆச்சரிப்படுறிங்க.?" என்றாள்.

"ஏனா நீங்க இன்னும் என் அண்ணனை நினைச்சி காத்துட்டு இருப்பதா எங்க அப்பா சொன்னாரு.." என்றபடி வந்து செங்காவின் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான் செழியன்.

அவள் குழம்பி போனாள். "என்ன உளறுறிங்க.? அவர் எதுக்கு அப்படி சொல்லணும்.? என் கல்யாணத்துக்கு அவரும் உங்க அம்மாவும் வந்திருந்தாங்களே.." என்றாள் அவள்.

செழியன் அண்ணனை திரும்பி பார்த்தான். அவனது பார்வையில் பரிதாபம் இருந்தது. அதியன் முகம் பேயறைந்தார் போல் இருந்தது அவள் சொன்னதை கேட்டு‌.

"அப்பா மறுபடியும் என்னை கழுத்தறுத்துட்டாரு.." என்றான் அதியன்.

"எடுத்த உடனே வார்த்தையை விடாதீங்க தம்பி.. அவருக்கு என் பொண்ணை பிடிக்காம இருந்திருக்கலாம். அதனால இப்படி சொல்லி இருக்கலாம்.." என்றார் சாமிநாதன்.

அதியன் அவருக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை. "நான் அப்புறமா ஃபோன் பண்றேன் செங்கா‌‌.." என்றவன் சாமிநாதன் பக்கம் திரும்பினான். "நான் அப்புறமா வந்து உங்ககிட்ட பேசுறேன் மாமா.." என்றவன் வெளியே நடந்தான்.

அண்ணன் செல்வதை கண்டு செழியனும் எழுந்து நின்றான். "அவன் எங்க அப்பாகிட்ட சண்டை போட போறான்னு நினைக்கிறேன்‌. நானும் கிளம்பறேன்.." என்று எழுந்து வெளியே நடந்தான்.

"நில்லு.. நானும் வரேன்.." என்று செழியனின் பின்னால் ஓடினாள் செங்கா.

"யப்பா நான் சீக்கிரமா வந்துடுறேன்.." என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினாள்.

"நீ எதுக்காக வர.?" செழியன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்தபடி கேட்டான்.

"அந்த மனுசன் உங்கப்பனை எதையாவது திட்டி வச்சிட்டா என்னா பண்றது.? அதுக்குதான் வரேன்.." என்றவள் பைக்கின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

அதியன் தன் வீட்டின் முன் காரை நிறுத்தா விட்டு இறங்கிய அதே நொடியில் அங்கே செழியனும் செங்காவும் வந்து சேர்ந்திருந்தனர்.

"நீ இங்கே என்ன பண்ற.?" செங்காவை பார்த்து கேட்டான் அதியன்.

"நியாயம் கேட்க வந்திருக்கேன்.." என்றவள் புடவை தூக்கி பிடித்தபடி வீட்டின் படிகளில் ஏறினாள்.

"இவ என்ன நியாயம் கேட்க போறா.?" குழப்பமாக கேட்டபடி அவளை தொடர்ந்து சென்றனர் அதியனும் செழியனும்.

பலத்த யோசனையில் அமர்ந்திருந்த அதியனின் அப்பா செங்காவின் கொலுசொலி கேட்டு நிமிர்ந்து பார்த்தார்.

செங்கா அவரின் முன்னால் வந்து நின்றாள். உதட்டை கடித்தபடி சில நொடிகள் நின்றவள் சோம்பலாக தலையசைத்தாள். அருகே இருந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்தாள். அதியன் மௌனமாக வந்து சுவர் ஒன்றின் மீது சாய்ந்து நின்றான். செழியனும் அண்ணனின் அருகில் வந்து நின்றான்.

"உங்களுக்கு ஏன் என்னைய புடிக்கல.?" என்று தன் முதல் கேள்வியை கேட்டாள் செங்கா‌.

அப்பா இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவரின் தடுமாற்றத்தை கண்டு கண்களை சுழற்றினான் அதியன்.

"உங்களுக்கு என்னைய புடிக்கலன்னா அதை நேரா என்கிட்டயே சொல்லி இருக்க வேண்டியதுதானே.? எதுக்கு பொய் சொல்லணும்.? அந்த புள்ளைக்கு கல்யாணமாகி நாலு வருசம் ஆகியிருக்கு. ஆனா நான் இத்தனை நாளும் அழுதுட்டு இருக்கேன்.." என்றவள் அதியனின் அம்மாவை பார்த்தாள்.

"உங்களுக்கும் என்னைய புடிக்கலையாம்மா.. ஏன்.? அழவும், அறுவுமா இருக்கற புள்ளைதான் உங்க மவனை கட்டிக்கணுமா.? அவ ஆக்கி போடுற மாதிரிதான் நானும் சோறாக்கி போட போறேன். அவ உங்க மவனை பாத்துக்கற மாதிரிதான் நானும் பாத்துக்க போறேன். ஆனா என்னை மட்டும் ஏன் குறைச்சலா நெனைக்கிறிங்க.?‌" என்றாள் சோகமாக.

"நீ நினைக்கற மாதிரி இல்லடாம்மா.." என்றாள் அம்மா.

"வேற என்னம்மா நெனைக்கட்டும்.? ஊர் உலகத்தை பத்தி யோசிக்காம காட்டுக்குள்ள சன்னாசி மாதிரி திரிஞ்சவ நான். எதை பார்த்தும் ஆசையில்ல. எதை கண்டும் வியப்பு இல்ல. முத முறையா உங்க மவனை பார்த்து ஆசைப்பட்டேன். அப்படியே காட்டுக்குள்ள மரத்தோட ஒரு மரமா வாழ்ந்து சாகட்டும்ன்னு என்னை வுட்டிருக்க வேண்டியதுதானே‌.? ஏன் என் மனசுக்குள்ளவும் ஆசையை தந்து ஏமாத்தணும்.?" என்றவள் தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அதியன் கண்களை மூடி எச்சிலை விழுங்கினான். அவனது மனம் வலித்தது.

அம்மா செங்காவின் அருகில் வந்து அவளின் கையை பற்றினாள். "உன்னை பிடிக்காம ஏதும் இல்ல.. நீங்க டிவின்ஸ்ன்னு தெரியல எங்களுக்கு. அதனால நீ ஒரே சமயத்துல விஷ்வாவையும் என் பையனையும் ஏமாத்துறியோன்னு இவர் நினைச்சிட்டாரு.. இன்னைக்குதான் நீங்க டிவின்ஸ்ன்னே எங்களுக்கு தெரியும்.. நாங்களே உன்னை கூப்பிட்டு பேசலாம்ன்னுதான் இருந்தோம்.. அதுக்குள்ள நீயே வந்துட்ட.." என்றாள்.

செங்கா குழம்பி போன முகத்தோடு அம்மாவை பார்த்தாள். அதியன் கண்களை திறந்து அதிர்ச்சியோடு தன் அப்பாவை பார்த்தான்.

"நாங்க ரெட்டை பொறவின்னு உங்களுக்கு தெரியாதா.?" என்ற செங்கா அதியனை திரும்பி பார்த்தாள். அவன் தன் யோசனையில் இருந்தான்.

அம்மா பக்கம் திரும்பியவள் நம்பிக்கையில்லாமல் அப்பாவை பார்த்தாள். "நாங்க ரெட்டை பொறவின்னு உங்களுக்கும் தெரியாதாப்பா.?" என்று கேட்டாள்.

அப்பா இல்லையென தலையசைத்தார்.

செங்கா எழுந்து நின்றாள். நெற்றியை பிடித்தாள்.‌ "உங்க மவன் இதை கூட உங்ககிட்ட சொல்லலையா.?" என்றாள் சந்தேகம் தீராமல்.

அப்பா தன் நாற்காலியில் இருந்து எழுந்து நின்றார். "இவன் ஒருநாளும் எனக்கு மகனா நடந்துக்கிட்டதே இல்ல.. இவன் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியாது. இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு இவனுக்கும் தெரியாது. இதான் உண்மை. பெத்த கடமைக்காக வந்து கல்யாண சேதி சொன்னானே தவிர மத்த பாசத்தாலோ பந்தத்தாலோ இவன் வரல.. இவனை பொறுத்தவரைக்கும் நாங்க இவனை பெத்தவங்க கிடையாது. ஏதோ மெஷின்ஸ்.. இவ்வளவுதான். சொந்த தாயும் தகப்பனும் உயிரோடுதான் இருக்கோம். ஆனா என்ன பிரயோசனம்.? சின்ன பிரச்னைக்காக எங்களை விலக்கி நிறுத்திட்டு போனவன் இவன். நாளைக்கு உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தாலும் அப்படிதான் விட்டுட்டு ஓடுவான்.‌." என்றார் அவர்.

செங்கா அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள். அம்மா புடவை முந்தானையை வாயில் வைத்துக்கொண்டு விம்மினாள்.

அதியன் சிலையாக நின்று அப்பாவை பார்த்தான்.

அப்பா செங்காவை நோக்கி ஓரடி எடுத்து வைத்தார். "நான் முன்ன செஞ்சது தப்புதான். இல்லன்னு சொல்லல.. ஆனா இந்த தடவை உன் நல்லதுக்காகதான் இதை சொல்றேன். சின்ன சண்டைக்காக பெத்தவங்களை விட்டு போனவன் நாளைக்கு உன்னையும் விட்டு போக தயங்கவே மாட்டான். வாழ வேண்டிய பொண்ணு நீ.. இப்படி ஒருத்தனுக்காக உன் வாழ்க்கையையே தொலைச்சிடாத.." என்றார்.

"நல்லா பேசுறிங்கப்பா.. சின்ன சண்டைன்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது.?" என்று கோபமாக கேட்டான் செழியன்.

செங்கா செழியனின் கோபம் புரியாமல் அவனை பார்த்தாள். அதியனை பார்த்தாள். அவன் முகம் இருளடைந்து இருந்தது. அவன் முகத்தில் வேதனை தெரிந்தது.

கலங்கியிருக்கும் தன் விழிகளை துடைத்துக் கொண்ட அதியன் அங்கிருந்து வெளியே நடந்தான். செங்கா அவனை குழப்பமாக பார்த்தாள்.

அவன் அங்கிருந்து சென்றதும் அப்பாவை பார்த்தாள். அப்பா அவன் சென்ற திசையை கை காட்டினார். "இதுதான் அவன்.. சின்னதா பிரச்சனை வந்தாலும் ஓடிடுவான். எதையும் சமாளிக்க முயற்சி செய்ய மாட்டான்.. நீ அவனுக்காக உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிடாத.." என்றவர் தனது அறைக்குள் சென்று மறைந்தார்.

செங்கா செழியனை பார்த்தாள். அவன் தன் அண்ணன் சென்ற திசையை பார்த்தபடி நின்றிருந்தான்.

"அப்புடி என்ன ஆச்சி.?" என்றாள் செழியனிடம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1050
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN