செங்கா 55

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செழியனின் அருகே வந்தாள் செங்கா. "அப்படி என்ன ஆச்சி.?" என்றாள்.

"இங்கே வேணாம்.. வா.." என்றவன் அவளை அறை ஒன்றிற்கு அழைத்து போனான்.

"இது என் அண்ணனோட ரூம்.." என்றபடியே அந்த அறையின் கதவை திறந்தான்.

தூசு பறந்த அறையில் ஒட்டடைகள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.

"இது ஏன் பாழடைஞ்ச குட்டிச்செவுரு போல இருக்கு.?" என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் செங்கா.

"ஏனா இந்த ரூமை யாரும் திறக்கறதே இல்ல.." என்றவன் தன் முகத்தில் மோதிய ஒட்டடையை கைகளால் தள்ளி விட்டான்.

"உங்க அம்மா கூட இதை சுத்தம் செய்யலையா.? ஆச்சரியமாக கேட்டாள் செங்கா.

"இந்த ரூமை சுத்தம் செய்ய போய் எங்க அண்ணன் அதுக்கும் சண்டைக்கு வந்துட்டா என்ன செய்றதுன்னு எங்கம்மா அமைதியா இருந்துட்டாங்க." என்றவனை பரிதாபமாக பார்த்தவள், "நீ போய் தொடப்பம் எடுத்துட்டு வா.. நான் இதை சுத்தம் செய்றேன்.." என்றாள்.

"அதுக்கும் முன்னாடி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.." "என்றான் செழியன்.

"அதை அப்பாறம் சொல்லுவ.. இப்ப போய் தொடப்பக்கட்டையை எடுத்துட்டு வா.." என்றாள் அவள்.

அவளிடம் வாதாடுவதை விட அவள் சொல்வதையே செய்து விடலாம் என்றெண்ணிய செழியன் சென்று துடைப்பத்தை எடுத்து வந்தான். துடைப்பத்தை கையில் வாங்கிய செங்கா மொத்த அறையையும் அடித்து பெருக்கினாள். அவளது வேலை செய்யும் வேகம் கண்டு வியந்தான் செழியன். பத்தே நிமிடத்தில் மொத்த அறையையும் சுத்தமாக்கிவிட்டு கட்டிலின் மீது அமர்ந்தாள். "இந்த புடவையும், நகையும் எனக்கு ஒத்து வரல.." என்றவள் அண்ணாந்த பார்த்து விட்டு "அந்த காத்தாடியை போட்டு விடு.." என்றாள்.

செழியன் சீலிங் பேனை இயக்கி விட்டு அவளருகே வந்து அமர்ந்தான்.

"இப்ப சொல்லு.. என்ன ஆச்சி.?" என்றவள் தன் புடவை முந்தானையால் காற்று வீசினாள்.
"என் அண்ணன் சின்ன வயசிலிருந்து ஒரு பொண்ணை லவ் பண்ணான்.." என செழியன் சொல்லவும் செங்கா காற்று வீசுவதை நிறுத்திவிட்டு அவனை பார்த்தாள்.

"இன்னொரு பொண்ணை தேடி பிடிச்சி அவளோடு உன் அண்ணன் கையை சேர்த்து வைக்கணுமா நான்.?" என்றவள் கசப்பாக சிரித்தாள்.

"அந்த பொண்ணோடு எங்க அண்ணனை சேர்த்து வைக்கணும்ன்னா அதுக்கு நீ எங்க அண்ணனை கொல்லணும்." என்றான் செழியன்.

செங்கா புரியாமல் அவனை பார்த்தாள்.

"நான் சொல்ல வருவதை முழுசா கேளு செங்கா.. நீயே எதையாவது கற்பனை பண்ணிக்காத.." என்றவன் கட்டிலின் அருகே இருந்த மேஜையில் கவிழ்ந்து கிடந்த புகைப்படம் ஒன்றை எடுத்து செங்காவிடம் தந்தான்.

புகைப்படத்தில் இருந்த இளம்பெண் அநியாயத்திற்கு அழகாய் இருந்தாள். படைத்தவன் அவளுக்காக நேரம் எடுத்து உருவத்தை செதுக்கி இருக்கிறானோ என எண்ணும் அளவிற்கு லட்சணமாக இருந்தாள். அவளோடு ஒப்பிடுகையில் தான் எந்த விதத்திலும் அழகில்லை என்று புரிந்ததும் செங்காவிற்கு தாழ்வு மனப்பான்மை மீண்டும் வந்து சேர்ந்தது.

"இது எங்க மாமா பொண்ணு.. பேரு வேதா.. இவளும் என் அண்ணனும் சின்ன வயசிலிருந்தே லவ் பண்ணிட்டு இருந்தாங்க.. இவன்னா எங்கண்ணனுக்கு உயிர்.. எங்க மாமாவுக்கும் எங்க அம்மாவுக்கும் நடுவுல வந்த ஒரு சண்டையால எங்க அம்மா அண்ணனுக்கு வேற இடத்துல பொண்ணு பார்த்து அவசர அவசரமா நிச்சயம் பண்ணிட்டாங்க.. அப்ப எங்க அண்ணனுக்கு இருபத்தியோரு வயசுதான் ஆச்சி.. படிச்சிட்டு இருந்தான். அவனுக்குன்னு சொந்தமா வேலை இல்ல.. எதுவுமே இல்ல.. ஆனாலும் அவன் 'எனக்காக வெயிட் பண்ணு.. என் மனசுல நீ மட்டும்தான் இருக்க'ன்னு வேதாகிட்ட சொன்னான்.. ஆனா வேதா இவனை நம்பல.. வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. அவன் சரியான சேடிஸ்ட்.. அவளுக்கும் எங்க அண்ணனுக்கும் இருந்த லவ்வை சொல்லிக்காட்டி சொல்லிக்காட்டி தினமும் அவளை சந்தேகப்பட்டு ஒரு நாள் அவளை கத்தியால குத்தி கொன்னே போட்டுட்டான்.. வேதா சாவுக்கு காரணம் எங்கப்பா அம்மாதான்னு கோபப்பட்டுட்டு எங்க அண்ணன் இந்த வீட்டை விட்டு போயிட்டான்.. வேதாவை மறக்க முடியாம படிச்சி முடிச்சதும் வெளிநாட்டுக்கு ஓடிட்டான்.. அவனுக்கு வேதாவை தவிர வேற உலகமே இல்லன்னு நாங்க நம்பிட்டு இருந்தோம். ஏனா அவன் அந்த மாதிரிதான் பைத்தியமா திரிஞ்சிட்டு இருந்தான். இரண்டரை வருசம் முன்னாடி ஊர் வந்து சேர்ந்தவன் எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கல.. ஆனா அவனோட பாலைவன மனசுல பச்சை மரமா நின்னது உன் காதல்தான். அவனுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் நாங்க எல்லோரும் எவ்வளவு சந்தோசப்பட்டோம் தெரியுமா.? அதனால எங்க அப்பா சொன்னாருன்னு அவனை விட்டு விலகி போயிடாத.. ப்ளீஸ்.." என்றான்.

செங்காவின் கண்கள் ஈரமாக இருந்தது. அந்த புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் மனதில் ஏதேதோ யோசனைகள் ஓடியது.

"என் அண்ணன் ரொம்ப பொறுப்பானவன்.. அவனை யார் நம்பினாலும் அவங்களை பத்திரமா பார்த்துப்பான்.. எனக்கும் விஷ்வாண்ணாவுக்கும் கூட அவன்தான் சீனியர் லீடரே.. அவனை ஏமாத்திடாத.." என்றான் அவன்.

செங்கா அந்த புகைப்படத்தை கட்டிலில் வைத்துவிட்டு எழுந்து நின்றாள்.

"விட்டுட்டு போறதுக்கு என்ன இருக்கு.?" என கேட்டவள் வெளியே நடந்தாள். செழியன் அவளை குழப்பமாக பார்த்தான். வேதாவின் புகைப்படத்தை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு செங்காவின் பின்னால் ஓடினான்.

செங்கா அந்த வீட்டின் கேட்டை தாண்டி வெளியே நடந்தாள். மண்டபத்திற்கு செல்லும் வழி எதுவென குழம்பியவள் சாலையின் இருபக்கமும் திரும்பி பார்த்தாள்.

அந்த வீட்டை விட்டு சற்று தள்ளி நிறுத்தியிருந்த தன் காரின் மீது கையை கட்டியபடி சாய்ந்து நின்றிருந்த அதியன் இவளது பார்வையில் பட்டான். செங்கா ஒரு நொடி மூச்சி விடவும் மறந்து விட்டாள்.

அதியனை நோக்கி நடந்தாள்.

தன்னை நோக்கி நடந்து வருபவளை விழியசைக்காமல் பார்த்தான் அதியன். அவனது முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.

அவன் முன் வந்து நின்றாள் செங்கா. இருவருக்கும் இடையில் அரையடிதான் தூரமென இருந்தது.
"அவர் சொன்ன மாதிரி நான் உன்னை விட்டுட்டு போயிருப்பேன்னு நினைச்சியா.?" என கேட்டான் அவன் நேராக நின்றபடி.

உதட்டை கடித்தபடி தலை குனிந்தவள் மறுநொடியில் நிமிர்ந்து அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

அதியன் சற்று குழம்பிப் போனான். இருந்தாலும் கூட அவன் மனம் நிறைந்து போனது.

"நீ வுட்டுட்டு போனா நான் உன்னை கட்டி இழுத்துட்டு போயிடுவன்.." என்றாள்.

அதியன் சிறு புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டான்.

"தேங்க்ஸ்.."என்றான்.

"எதுக்கு.?" என அவன் முகத்தை பார்த்து கேட்டாள் அவள்.

"என்னை நம்பியதுக்கு.." என்றான் அதியன்.

"நான் உன்னையும் எங்கப்பனையும் நம்பாம வேற யாரை நம்புறதாம்.?" என கேட்டாள் அவள்.
அவளின் கேள்வியில் சிலிர்த்து போனவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

"என்னைய வுடு எரும.." என திணறியபடி அவசரமாக விலகி நின்றாள் செங்கா.

"என்னாச்சி.?" குழப்பமாக கேட்டவனிடம் தன் நெஞ்சத்தை கை காட்டினாள். "நீ கட்டிபிடிச்சதும் இந்த நவையெல்லாம் என்னைய குத்துதுப்பா..இதையெல்லாம் சும்மா போட்டிருக்கும்போதே ஒரு மாதிரியா கசகசன்னு அங்கங்க உறுத்தலா இருக்கும்.. நீ கட்டிப்பிடிச்சதும்.. அய்யய்யே.. சுத்தமா புடிக்கல.." என்று முகம் சுளித்து சொன்னவளை கண்டு கலகலவென சிரித்தவன் அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

"ஐ லவ் யூ.." என்றான். அவளின் இதழை நோக்கி குனிந்தான். அதே நேரத்தில் காரின் ஹாரன் திடீரென ஒலித்தது. இருவரும் அவசரமாக விலகி நின்றனர். செழியன் காரின் ஹாரனை மறுபடியும் அடித்தான்.

"பப்ளிக்ல இவ்வளவு இன்டீசன்டா நடந்துக்க எங்கே கத்துக்கிட்டிங்க அதியன்.?" என்றான் அவன் காரின் கண்ணாடியை இறக்கி விட்டபடியே.

"நீ எப்ப வந்து கார்ல ஏறின.?" குழப்பமாக அதியன் கேட்க அவன் நக்கலாக தன் கண்களை சுழற்றினான்.

"காலம் நேரம் மறந்து இரண்டு பேரும் கட்டிபிடிச்சிட்டு நின்னுட்டு இருந்திங்களே அப்பவே வந்துட்டேன்.." என்ற செழியன் தன் பைக் சாவியை அவனிடம் நீட்டினான்.

"லவ் பேர்ட்ஸ் இரண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சி மீட் பண்ணி இருக்கிங்க.. எங்கேயாவது சுத்துறதா இருந்தா சுத்திட்டு வாங்க.." என்றான்.

அதியன் அவனை ஆச்சரியமாக பார்த்தான். அவனது கையிலிருக்கும் சாவியை பார்த்தவன் செங்காவை திரும்பி பார்த்தான். அவள் இவனது முகத்தை பார்த்தபடி நின்றிருந்தாள்.

"தேங்க்ஸ் ப்ரதர்.. இவங்க அப்பா கேட்டாருன்னா சாயங்காலத்துக்குள்ள மாப்பிள்ளையும் பொண்ணும் வீடு வந்து சேர்ந்திருவாங்கன்னு சொல்லிடு.." என்றவன் பைக் சாவியை அவன் கையில் இருந்து எடுத்துக் கொண்டான்.

"என்னோடு பைக் ரைட் வரியா.?" என்றான் செங்காவிடம். அவள் தன்னையே ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

"ஆனா இந்த சீலையோடயா.?" என்றாள் அஷ்டக்கோணலாக போன முகத்தோடு.

"அதுக்கு ஏதாவது வழி பண்ணலாம் வா.." என்றவன் வீட்டை நோக்கி ஓடினான். அரை நிமிடத்தில் பைக்கோடு அவள் அருகே வந்து நின்றான்.

"வந்து ஏறு.." என்றான்.

செங்கா பைக்கில் ஏறினாள்.

"பத்திரமா வந்து சேருங்க.." என்ற செழியன் அங்கிருந்து காரை ஓட்டிச் சென்றான்.

செழியன் சென்றதின் மறு திசையில் பைக்கை செலுத்தினான் அதியன். செங்கா புடவையை ஒரு கையாலும் வண்டியை ஒரு கையாலும் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

"பைக்ல போற மத்த லேடிஸை பாரு.. எவ்வளவு அழகா குழந்தையை ஒரு கையில் பிடிச்சிக்கிட்டு புருசனை ஒரு கையால அணைச்சிட்டு போறாங்கன்னு.." என்றவன் துணிக்கடை ஒன்றின் முன் பைக்கை நிறுத்தினான்.

பைக்கிலிருந்து இறங்கி நின்ற செங்கா அவனை முறைத்தாள். "அவுங்களுக்கு எத்தனை வருசம் பழக்கம்ன்னு பார்த்தியா.. நான் சீலை கட்டுனதே அதிசயம்.. இதுல நான் உன்னை கட்டிப்பிடிக்கலன்னு கொறை வேற சொல்றியா நீ.,?" என்றாள் கையை ஓங்கியபடி.
அதியன் அவளது கையை பற்றி கீழே போட்டான்.

"கரட்டுல நீ கை ஓங்கினா அது வேற கணக்கு.. ஆனா இங்கே நீ புருசனை பார்த்து கை ஓங்கினா பஜாரின்னு சொல்லிடுவாங்கம்மா.. அதனால பார்த்து இரு.." என்றவன் செழியனின் பைக்கில் மாட்டியிருந்த பேக்கை எடுத்துக் கொண்டு அவளின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

அவனே உடையை தேர்ந்தெடுத்து அவள் கையில் தந்தான். "அதோ அந்த ரூம்ல போய் இந்த டிரெஸ்ஸை மாத்திட்டு வா.. உன் நகையையும் புடவையையும் இந்த பேக்ல வச்சிடு.." என்று பேகை அவனிடம் நீட்டினாள்.

செங்கா அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தாள்.

"இவ்வளவு நேரமா.?" என கேட்டான் அதியன்.

செங்கா அவனது கேள்வியை காதில் வாங்கிக்கொள்ளாமல் அருகிலிருந்த கண்ணாடியில் தன் உருவம் பார்த்தாள்.

"இந்த முக்கா பேண்டும், முழுக்கை சட்டையும் நல்லா பெருசாவும் காத்தோட்டமாவும் இருக்கு.." என்றவள் அதியன் பக்கம் திரும்பினாள். "எப்புடி இருக்கன்.?" என்றாள்.

அதியன் அவளின் அருகே வந்து அவளின் காதோரம் குனிந்தான்.

"வெல்லக்கட்டி மாதிரி இருக்க.." என்றான்.

செங்கா அவனை விசித்திரமாக பார்த்தாள். "இதை ஏன் இப்புடி காதுல வந்து சொல்ற.?" என்றாள்.
அதியன் சிரிப்போடு மீண்டும் அவளின் காதோரம் கிசுகிசுத்தான். "கடிச்சி திங்கற வெல்லக்கட்டி மாதிரி இருக்க.. உன் கன்னத்தை தரியா.?" என்றான்.

செங்கா அவனை பிடித்து தள்ளி விட்டாள். "ஒரு பச்சப்புள்ளைக்கிட்ட பேசுற பேச்சா இது.?" என்றாள் சிவந்த முகத்தோடு.

"வாண்டடா வந்து நீ முத்தம் தந்ததெல்லாம் என்ன கணக்காம்.?" என்று அவனும் பதிலுக்கு கேட்டான்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.
word count 1088
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN