செங்கா 56

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்காவும் அதியனும் துணிக்கடையை விட்டு வெளியே வந்தனர். "போலாமா.?" என கேட்டான் அதியன்.

செங்கா தன் கையில் இருந்த பேக்கை அவனிடம் தந்துவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்தாள். "நாம எங்க போறோம்.?" என்றாள்.

"எங்கயாவது போலாம்.." என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

"பேசாம நாம இரண்டு பேரும் எங்கயாவது ஓடிப்போலாமா.?" என்றவள் பைக்கின் வேகம் கூடவும் அவனை கட்டியணைத்துக் கொண்டாள்.

"ஏன் ஓடி போகணும்.?" சந்தேகமாக கேட்டான் அதியன்.

"நம்மக்கிட்ட நிறைய நகை இருக்கு. அதனாலதான்.. எங்கம்மா அந்த கழுதைக்கு மட்டும் இவ்வளவு நவை பண்ணி வச்சிருக்கு. நான் கரடு சுத்துற கழுதைன்னு எனக்கு எந்த நவையும் போட மாட்டாங்க. அதனால நமக்கு இதான் நல்ல சந்தர்ப்பம்.." என்றாள்.,

அதியன் சிரித்தான். "உனக்கு நகை வேணும்ன்னா நான் வாங்கி தரேன் விடு.." என்றான்.

"இல்ல.. எனக்கு அந்த கழுதையோட நவைதான் வேணும்.." என அடம்பிடித்தாள்.

அதியன் பைக்கை நிறுத்தினான். செங்கா இறங்கி நின்றாள்.

"டிவின்ஸா இருப்பதால உனக்கும் அவளுக்கும் நடுவுல இந்த சண்டை ஓடுதா.? இல்ல அக்கா தங்கச்சின்னாவே இப்படிதானா.?" சிரிப்போடு கேட்டான் அவன்.

"அதெல்லாம் ரகசியம். யாருக்கிட்டயும் சொல்றதுக்கு இல்ல.." என்றவள் தன் முன் இருந்த கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

"என்னா இது.? படம் பாக்கற இடமா.?" என்றாள்.

"இல்ல.. உள்ளே வா.." என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனான்.
"அட ஷாப்பிங் மாலு.." என்றவள் அந்த இடத்தை சுற்றி பார்த்தாள். "போன்ல பார்த்ததை வுடவும் நேர்ல நல்லா இருக்கு.." என்றவள் உயர்ந்து இருந்த தளங்களை அண்ணாந்து பார்த்தாள்.

"நாம அந்த கடைசியில இருந்து இந்த கடைசி வரை சுத்தி பார்க்கலாம்.." என்றவனை சந்தேகமாக பார்த்தவள் "எனுக்கு நீ காசு செலவு பண்ண போறியா.? ஆனா ஏன்.?" என்றாள்.

அவளின் கன்னம் பிடித்து கிள்ளியவன் "ஏனா நீ என் பொண்டாட்டி.." என்றான்.

செங்கா கண்களை மூடி திறந்தாள். "நீயேதான் சொன்ன‌‌.. அப்பாறம் ரொம்பா காசு செலவு ஆனா என்னைய கொறை சொல்லக்கூடாது.." என்றாள்.

அருகில் இருந்த துணிக்கடையில் நுழைந்தாள். "அங்கே போகமா நேரா இங்கேயே வந்திருக்கலாம்.." என்றவள் அங்கு வரிசையில் மாட்டி வைத்திருந்த உடைகளை கைகளால் வருடியபடி நகர்ந்தாள்.

"நீதான் புடவையோடு பைக்ல உட்கார பிடிக்கலன்னு சொன்ன.." என்றான்.

அவள் கண்கள் பளிச்சிட அவனை இழுத்துக் கொண்டு முன்னால் ஓடினாள்.

"இந்த துணி நல்லா இருக்கு இல்ல.?" என்றாள் ஒரு உடையை கையில் எடுத்து அவன் முன் காட்டியபடி.

அதியன் அவளை முறைத்தான். அவள் கையிலிருந்த உடையை பார்த்தான். குழந்தைகள் அணியும் சின்ன கவுன் அது.

"இதை நீ போட்டுக்க போறியா.?" என்றான்.

இல்லையென தலையசைத்தாள். "இதை பொன்னா கழுதைக்கு கல்யாண பரிசா தர போறேன்.." என்றவளை ஆச்சரியமாக பார்த்தான் அவன்.

"இதையா‌.?" என்றவன் அவள் கையிலிருந்த உடையை தன் கைக்கு வாங்கினான்.

"இதை ஒரு பொட்டியில போட்டு நல்லா கலரு காயிதத்துல சுத்தி மேல பூ போட்ட அட்டை பேப்பர் ஒட்டி மாமன் கையில தரணும்.." என்று விவரித்தாள்.

அதியன் இன்னமும் அந்த உடையை விந்தையாகதான் பார்த்துக் கொண்டிருந்தான். "இதை தந்தா விஷ்வாவும் பொன்னாவும் சிரிப்பாங்க.." என்றான்.

"சிரிச்சா சிரிக்கட்டும். ஆனா அவுங்களுக்கு பயன்படுறா மாதிரி ஒரு உடை இதுதானே.?" என்றாள் புருவம் உயர்த்தி.

அதியன் அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான். "உன் மூளையை பொருட்காட்சியலதான் வைக்கணும்.." என்றான்.

அந்த உடையை வாங்கி கொண்டு இருவரும் வெளியே வந்தனர். அருகிலிருந்த அடுத்த கடைக்குள் நுழைந்தாள் செங்கா. சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படங்களை குழப்பமாக பார்த்தவள் "இது என்ன கடை.?" என்றாள்.

"ஆர்ட் கேலரி.." என்றவன் அங்கிருந்த புகைப்படங்களை வியப்போடு பார்த்தான். "இது செமையா இருக்கு.." என்றான் ஒரு புகைப்படம் முன்னால் நின்று.

செங்கா அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு முகம் சுளித்தாள். "உனுக்கு நெசமாவே இந்த போட்டோவ புடிச்சி இருக்கா.?" என்றாள். வண்ணத்தால் நிரம்பிய அப்புகைப்படத்தில் அவளால் அர்த்தம் ஏதும் கண்டுபிடிக்க முடியவில்லை‌.

"ஆமா.." என்றவன் அந்த புகைப்படத்தை விட்டு விழியெடுக்காமல் இருந்தான்.

"இத நானே வரைஞ்சி தருவேனே.‌" என்றவளை ஆச்சரியமாக பார்த்தவன் "நிஜமாவா.? இன்னைக்கு வரைஞ்சி தரியா.?" என்றான் யோசனையோடு.

அவன் உடனடியாக கேட்கவும் செங்கா தடுமாறி போனாள். "வரையறேன்‌‌.. ஆனா இன்னைக்கா.?" என்று தயங்கியவளை வெளியே இழுத்து வந்தவன் நேராக சென்று கேன்வாஸும் பிரஸ்ஸும் பெயின்டும் வாங்கினான்.

"வா போகலாம்.." என்று அவளை அழைத்துக் கொண்டு நடந்தான்.

செங்கா அந்த இடத்தை திரும்பி பார்த்தாள். "சுத்தி காட்ட கூட்டி வந்தேன்னு நினைச்சேன்.." என்றாள் சோகமாக.

அவளின் அருகே வந்தவன் அவளின் தோளில் கை போட்டு வெளியே அழைத்து சென்றான். "இன்னொரு நாளைக்கு வந்து சுத்தி பார்க்கலாம்.." என்றான்.

அரை மணி நேரத்திற்கு பிறகு பைக் ஒரு கட்டிடம் முன்பு வந்து நின்றது. "ஏன் இங்கே வந்திருக்கோம்.?" என கேட்டபடி இறங்கினாள் அவள்.

"இது நம்ம ஆபிஸ்.. விஷ்வாவுக்கு கல்யாணம்ன்னு இன்னைக்கு லீவ்.. யாரும் இருக்க மாட்டாங்க.. நீ வா.." என்றவன் கதவை திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்‌.

இருட்டாய் இருந்தது அலுவலகம். ஸ்விட்சை தட்டி விட்டான். பளிச்சென விளக்குகள் எரிந்ததும் செங்கா கூசும் கண்களை புறங்கையால் மறைத்துக் கொண்டாள்.

"இந்த பக்கம் வா.." என்றவன் அவளுக்காக அறை ஒன்றின் கதவை திறந்து விட்டான்.
செங்கா உள்ளே நுழைந்தாள்.

"இது என் ரூம்.." என்றவன் சென்று ஜன்னல்களை திறந்து விட்டான்.

"இரு நான் கேன்வாஸை செட் பண்ணி தரேன்.." என்றவன் அவனே அதை பொறுத்தி தந்தான்.
அவனது ஆர்வத்தை கண்டு குழம்பி போனாள் செங்கா. "செட் பண்ணிட்டேன்.. நீ வரை.." என்றவன் தனது நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

செங்கா அவனை பார்த்தபடி கேன்வாஸின் அருகே சென்றாள். "அந்த போட்டாவுல இருந்த மாதிரியே வரையட்டா.?" என்றாள் யோசனையோடு.

"இல்ல.." என தலையசைத்தவன் "உனக்கு என்ன தோணுதோ அதை வரை.. உனக்கு பிடிச்சதை வரை.." என்றான்.

செங்கா அவனையும் கேன்வாஸையும் மாறி மாறி பார்த்தாள். "சரி நீ அந்த பக்கம் திரும்பிக்கோ.." என்றவள் பிரெஷை கையில் எடுத்து கேன்வாஸில் வண்ணம் தீட்ட ஆரம்பித்தாள்.

அவள் என்ன வரைவாள் என யோசனையில் இருந்தான் அதியன். செங்கா அடிக்கடி அவனை திரும்பி பார்த்துக் கொண்டே வரைந்தாள்‌.

"என் உருவத்தை வரையறியா செங்கா.?" அவன் சந்தேகமாக கேட்டான்.

"ரொம்ப ஆசைப்படதா.." என்றவள் வரைவதில் கவனமாக இருந்தாள்.

நேரங்கள் கடந்துக் கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் ஓடிய பிறகு பிரெஷை கீழே வைத்துவிட்டு அவனருகே வந்தாள் அவள்‌. "முடிஞ்சது.." என்றாள். அவளின் கையில் இருந்த வண்ணங்களை பார்த்தவன் "கையில் பெயிண்டை பண்ணியா‌.?" என்றான் சந்தேகமாக.

அவள் பதில் சொல்லாமல் தோளை உலுக்கினாள். அதியன் சந்தேகத்தோடு எழுந்து சென்று ஓவியத்தை பார்த்தான். அதிர்ச்சியில் உறைந்தவன் செங்காவை கோபமாக முறைத்தான்.

"என்னத்துக்கு இவனை வரைஞ்சி வச்சிருக்க.?" என்றான் கேன்வாஸில் இருந்த விஷ்வாவின் உருவத்தை கை காட்டியபடி.

"ஏன்ப்பா.? இதை மாமனுக்கு காட்டுனா சந்தோசப்படும்.." என்றாள்.

அதியனால் அவளை முறைக்காமல் இருக்க முடியவில்லை.

"என்னை வரைவ நீன்னு ஆசையா நான் இருக்கேன்.. ஆனா நீ இவனை வரைஞ்சி வச்சிருக்க.." என்றான் கோபத்தோடு.

"அட இதுல என்ன இருக்கு பட்டணம்.? அக்கா வூட்டுகாரரை வரைய கூடாதுன்னு சட்டம் ஏதும் இருக்கா என்ன.?" என்றாள். அவனது நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தாள்.

"இந்த சேரு நல்லாருக்கு.." என்றாள்.

அதியன் ஒரு நொடி கண்களை மூடி திறந்தான். "உனக்கு ரொமான்ஸ் சென்ஸ் கொஞ்சமாவாவது இருக்கா.?" என்றான். விஷ்வாவின் புகைப்படத்தை பொறாமையோடு பார்த்தான்.

"அட கூறு கெட்ட குப்பா.. ஊரை சுத்தி காட்டுறேன்னு கூட்டி போயிட்டு கடைசியில கையில பெயிண்டு பிரசை தந்தவன் நீதான். இதுல என்ன கொறை சொல்றியா நீ.?" என்றாள் தன் இரு கால்களையும் எடுத்து டேபிளின் மீது வைத்தபடி.

அவள் சொன்னது கேட்டு வியந்து போனவன் "இந்த கதை வேணாம்.. வந்து உருப்படியா வேற எதையாவது வரைஞ்சி வை.." என்றான்.

"அட லூசு பயலே.. இன்னைக்கு உனுக்கு என்னதான் வந்துச்சி.?" என கேட்டவள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

"இரண்டு பேரும் சேர்ந்து வரையலாம்.." என்றவள் மாட்டியிருந்த கேன்வாஸை எடுத்து பத்திரப்படுத்தி விட்டு புதிதான ஒன்றை பொருத்தினாள்.

"உனக்கு இதை செட் பண்ண தெரியுமா.?" என்றான் அதியன்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ செய்யும் போது கத்துக்கிட்டன்.." என்றவள் அவனது கையில் பிரஷை நீட்டினாள்.

"சேர்ந்து வரையலாம்ன்னு நீ சொன்னது உண்மையா.?" என வியந்திருந்தவனை கண்டு கொள்ளாதவள் அவனின் கை பிடித்து பிரஷை பெயிண்டில் நனைத்து எடுத்தாள். அவனது கையிலிருந்த பிரஷை கேன்வாஸின் மீது ஓட விட்டாள்‌.

"நீ கேன்வாஸை வேஸ்ட் பண்ணிட்ட.." என்றான் அவன். அவள் அதை காதில் வாங்கி கொள்ளாமல் வண்ணங்களை தீட்ட ஆரம்பித்தாள். செங்காவின் கையில் சிக்கிய சிறகு போல படர்ந்தோடிக் கொண்டிருந்தது அதியனின் கரமும் அவனின் கரத்தில் இருந்த தூரிகையும்.

ஏதேதோ வண்ணங்களை அந்த வரை தாளின் மீது சிதற விட்டாள் செங்கா. அப்படி என்னதான் வரைகிறாள் என குழம்பி போயிருந்தான் அதியன்.

"கையை இறுக்கி பிடிக்காத.." என்றவளின் கண்கள் கேன்வாஸ் மீது பதிந்து இருந்தது.

அரை மணி நேரம் தாண்டிய பிறகும் உருப்படியாக எதையும் கணிக்க முடியவில்லை அதியனால்.

"இந்த பெயிண்ட் பிரசை கீழ வச்சிட்டு அந்த நல்ல பிரசை கையில எடு.." என்றாள்.

அதியனும் அவள் சொன்னது போலவே செய்தான். புது தூரிகையை அந்த பல வண்ண கலவை மீது அழுத்தி தேய்த்து அங்கும் இங்கும் இழுத்தாள். அவள் செய்வதை குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் அதியன்.

ஓவியம் முடிந்ததும் அதியனை விட்டு விலகி நின்றவள் "இது எப்படி இருக்கு.?" என்றாள்.

அதியன் ஆச்சரியத்தோடு அந்த ஓவியத்தை பார்த்தான். ஓவியத்தில் காட்டு மரங்களின் இடையே அவளை துரத்தி கொண்டு ஓடி வந்தான் அவன்.

"வாவ்.. அழகா இருக்கு.." என்றவன் ஓவியத்தை காதலோடு பார்த்தான்.

"ஆமா.. அழவாதான் இருக்கும். ஏனா இதுல இந்த செங்கா இருக்காளே.." என்றவள் அவனின் கன்னத்தில் தன் கையை பதிய வைத்தாள். அவனின் முகத்தில் வண்ண கலவை புது ஓவியமாக ஆரம்பித்தது. அதியன் தான் ஏமாந்து போனதை அறிந்தான் அவனும் தன் கை விரல்களில் சிறிது வண்ணத்தை தொட்டு அவளின் முகத்தில் பூசினான்.

"இந்த ரூம்ல ஹோலி கொண்டாடுறமா நாம.?" சிரிப்போடு கேட்டபடி அவளின் மூக்கின் மீது தன் சுட்டு விரலில் இருந்த வண்ணத்தை தடவினான் அவன்.

"அப்படிதான் வச்சிகயேன்.." என்றவள் அவனின் கன்னத்தில் சுட்டு விரலால் கோலம் வரைந்தாள்.

"உன் காதலியை இன்னமும் விரும்புறியா.?" என்றாள் திடீரென ஒரு வித சோக குரலில்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்கள
Word count 1078
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN