செங்கா 60

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோவில் மண்டபத்தில் கூடியிருந்தது கூட்டம்.

"பொண்ணை அழைச்சிட்டு வாங்க.." ஐயரின் அழைப்பு குரல் கேட்டு ஓடிய ரக்சனா செங்காவிடம் வந்தாள்.

செங்கா அவள் ஆசைப்பட்டது போலவே மெரூனில் பச்சை பார்டர் வைத்த புடவையை கட்டி நின்றிருந்தாள். ரக்சனாவும் பொன்னாவும் மிகவும் சிரமப்பட்டு அவளுக்கு அலங்காரம் செய்து விட்டிருந்தனர். இன்னும் சில நிமிடங்களில் திருமணம் என்றாலும் கூட அவளுக்கு திருமணத்தை நினைத்து சிறிது படபடப்பு கூட இல்லை.

ரக்சனா அவளை தேடி வந்தபோது செங்கா தங்களின் காட்டில் விளைந்த வேர்க்கடலைகளை உரித்து தின்றுக் கொண்டு நின்றிருந்தாள்.

"லூசு பொண்ணே.. இந்த நேரத்திலயா வேர்கடலையை தின்னுட்டு இருப்ப.? சீக்கிரம் இந்த மாலையை போட்டுக்கோ.. ஐயர் கூப்பிடுறாரு.." என்றாள் ரக்சனா. பின்னர் அவளே அருகிலிருந்த மாலையை எடுத்து செங்காவின் கழுத்தில் போட்டு விட்டாள்.

வேர் கடலையின் தோலை உரித்து எறிந்தாள் செங்கா. தன் கழுத்தில் மாலையிட்ட ரக்சனாவிற்கு கடலைகளை ஊட்டினாள். ரக்சனா அவளை முறைத்து பார்த்தாள். பின்னர் இதற்கும் ஏன் நேரம் வீணாக்க வேண்டும் என நினைத்து கடலையை வாங்கிக் கொண்டாள்.

"அவசரப்படாத ரக்சனா.. நம்ம கண்ணாலம் நம்மளை வுட்டுட்டா நடக்க போவுது.?" என்றவள் தன் கழுத்திலிருந்த மாலையை பார்த்துவிட்டு ரக்சனாவை பார்த்தாள்.

"என் கழுத்துல நீதான் மாலை போட்டிருக்க.. அதனால நீதான் என் மொத புருசன்.." என்றாள்.

ரக்சனா நெற்றியில் அறைந்துக் கொண்டாள். "இது அதியன் காதுல விழுந்தா நான் செத்தேன்.. உன் அக்கப்போரை பத்தி தெரிஞ்சதாலதான் பொன்னா உன்னை என் தலையில கட்டிட்டு எஸ்கேப் ஆகியிருக்கா.." என்றாள்.

செங்கா அருகே இருந்த சிறு பையிலிருந்து கடலைகளை மீண்டும் ஒரு கை அள்ளினாள்.

"கடவுளே.. இவ என்னை டென்சன் ஆக்கி கொன்னுடுவா போல இருக்கே.." என்ற ரக்சனா அவள் கையிலிருந்த கடலைகளை வாங்கி மீண்டும் பையிலேயே போட்டாள்.

"இன்னைக்கு நீதான் கல்யாண பொண்ணு.. இன்னைக்காவது கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு.." என்றவள் அவளின் கை பிடித்து இழுத்துக் கொண்டு கோவில் மண்டபத்திற்கு ஓடினாள்.

செங்கா கடலைகளை திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றாள்.

"கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்பிடலாமா ரக்சனா.?" என்றாள் செங்கா நடந்துக் கொண்டே.

ரக்சனா அவளை திரும்பி பார்த்தாள்‌. "ஏன் இதை கேட்கற.?" என்றாள்.

"இல்ல.. பச்சை கல்லக்காய் வேச்சி திங்க ஆசையா இருக்கு.." என்றாள் சிறு குரலில்.

ரக்சனா தூரத்தில் அமர்ந்திருந்த அதியனையும் அவனை சுற்றி நின்றிருந்த சொந்த பந்தங்களையும் பார்த்தாள். "இன்னைக்கு உனக்கு கல்யாணம் செங்கா.. அதனால் நான் உன்னை திட்ட மாட்டேன். அதுக்காக ஓவரா பண்ணாத.. உனக்கு கல்யாணம்ன்னு எனக்கு எவ்வளவு டென்சனா இருக்கு தெரியுமா.? ஆனா நீ என்னடான்னா எந்த கவலையும் இல்லாம இருக்க.." என்றாள்.

செங்கா ரக்சனாவை வியப்பாக பார்த்தாள். "இதுல அரக்க பரக்க நடந்துக்க என்ன இருக்கு.? தெனமும் பாத்து பழவுன மனுசன் இன்னைக்கு ஒரு தாலி கயித்தை எடுத்து கழுத்துல கட்ட போறாரு. இதுக்கு நான் வேர்த்து விறுவிறுத்து இருக்கணுமா.?" என்றவள் அக்னியின் பின்னால் அமர்ந்தபடி தன்னை பார்த்த அதியனை பார்த்து புன்னகைத்தாள்.

அதியன் முகம் வெட்கத்தால் சற்று சிவந்து போனது. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அதுவே கொஞ்சம் கூட்டம் சேர்ந்தார் போலதான் இருந்தது.

அதியனின் அருகே வந்து அமர்ந்தாள் செங்கா.

"உனக்கு ஏன் நெத்தியெல்லாம் வேர்த்திருக்கு.?" என்றாள்.

அதியன் தன் நெற்றியை துடைத்துக் கொண்டான். "நெருப்பு பக்கத்துல உட்கார்ந்திருக்கேன் இல்லையா.. அதனாலதான்.." என்றான்.

செங்கா அதியனை கேலியாக பார்த்தாள். "பயப்படுறியா நீ.?" என்றாள்.

"ச்சே.. ச்சே.. இல்லையே.." என்றவனின் குரலில் கூற சிறு பதட்டம் இருந்ததை செங்காவால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

'இப்படி பதட்டப்படுற அளவுக்கு என்ன நடக்குது.? கல்யாணம்தானே நடக்குது.? அதுக்கு ஏன் எல்லோரும் வெட்டு குத்து நடக்கற மாதிரி ஒரே பதட்டமா இருக்காங்க..' என யோசித்தாள்.
"ரொம்ப பயமா இருந்தா சொல்லு.. உனுக்கு பதிலா நானே தாலியை எடுத்து உன் கழுத்துல கட்டிடுறன்.." என்றாள் அதியனிடம் அவள்.

அவளின் பின்னால் இருந்த பொன்னா செங்காவின் கழுத்தில் கிள்ளி வைத்தாள்.

செங்கா சொன்னது கேட்டு அவளை முறைப்பாக பார்த்தான் அதியன். செங்கா தன் முதுகை தடவிக்கொண்டே திரும்பி பார்த்து பொன்னாவை முறைத்தாள்.

"கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் உனக்கு கச்சேரி இருக்கு.." என செங்காவிடம் கிசுகிசுத்தான் அதியன்.

"மாப்பிள்ளை தாலியை கட்டுங்க.." என்று ஐயர் மாங்கல்ய தட்டை நீட்டினார்.

அதியன் தாலியை கையில் எடுத்தான். இந்த கணம் கனவு போல இருந்தது அவனுக்கு. செங்காவின் முகத்தை பார்த்தான். அவள் முகத்தை சாய்த்து அவனை பார்த்து கண்ணடித்தாள். அதியனுக்கு சிரிப்பு வரும்போல இருந்தது. 'கனவா.? இந்த செல்ல ராட்சசி இன்னைக்கு என்னை வாழ்நாள் குத்தகைக்கு எடுத்துட்டா..' என நினைத்து சிரித்தவன் அவளின் கழுத்தில் தாலியை கட்டினான்.
"செந்தூரம் வச்சி விடுங்க மாப்பிள்ளை.." என்று குங்குமத்தை நீட்டினார் ஐயர். அதியன் குங்குமத்தை விரலில் தொட்டு செங்காவின் நெற்றியில் வைத்து விட்டான்.

"என் பொண்டாட்டி.." என்றான் மனநிறைவோடு. செங்கா அவன் சொன்னதை கேட்டு புன்னகைத்தாள்.

அதன் பிறகு அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.

செங்காவிற்கு ஆசிர்வாதம் செய்கையில் சாமிநாதனுக்கு கண்களில் ஈரம் கசிந்தது. "என் பொண்ணு வெகுளித்தனமான குழந்தை மாதிரி மாப்பிள்ளை.. இவ ஏதாவது முரடா நடந்துக்கிட்டா கூட பெருசு பண்ணாம இவளை அனுசரிச்சி போங்க மாப்பிள்ளை.." என்றவர் அதன் பின்னர் தாங்க முடியாமல் குலுங்கி அழ ஆரம்பித்து விட்டார்.

அப்பாவின் கண்ணீரை காணும் வரையிலும் கூட இந்த திருமண பந்தத்தின் அர்த்தத்தை முழுதாக அறியவில்லை செங்கா. இதுவரையிலும் சாமிநாதனின் மகளாய் இருந்தவள் இனி அதியனின் மனைவியும் கூட என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாள். தந்தையிடம் மட்டுமே இத்தனை நாள் கொண்ட தனக்கான பாசமும் உரிமையும் இனி இரண்டாக பிளவுறுவதை அவளால் உணர முடிந்தது. சில நிமிடங்கள் முன்பு இருந்த அதே செங்கா தான் இல்லை என்பதை புரிந்துக் கொண்டாள்.

சாமிநாதனை தன்னோடு அணைத்துக் கொண்டான் அதியன். "நீங்க பயப்படுற மாதிரி எதுவுமே இல்ல மாமா.. நீங்க இவளை பார்த்துக்கிட்ட அதே பாசத்தோடு நானும் பார்த்துப்பேன்.." என்றான்.
"ஒத்தை பையன் பெத்து வச்சா கூட கடைசி காலத்துல கஞ்சி கிடைக்காதுன்னு இரண்டு மூணு ஆம்பள பசங்களை பெத்துக்கற ஊரு தம்பி இது. ஒரு பையனை விட என் பொம்பள புள்ளைங்க எந்த விசயத்துல தாழ்த்தின்னு இந்த இரண்டோடு இருந்துட்டேன். அவளை கட்டி தந்த போதே மனசு வலிச்சது. இப்ப இவளையும் தூர தேசத்துல விட்டுட்டு போற மாதிரி இருக்கு.." என்ற சாமிநாதனுக்கு அழுகை நிற்கவேயில்லை.

அதியனின் அப்பா முன்னால் வந்தார். சாமிநாதனை தன் பக்கம் திருப்பி நிறுத்தினார். "நீங்க இப்படி பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல சம்பந்தி.. பொம்பள புள்ளைய கட்டி தந்துட்டா கடமை முடிஞ்சதுன்னு நினைக்கிற உலகத்துல புள்ளை பிரிஞ்சி போக போகுதேன்னு கவலைப்படுற உங்களை மாதிரி ஒரு அப்பா கிடைக்க இவ கொடுத்து வச்சிருக்கணும்.. இவ உங்களை பிரிஞ்சி போறதா ஒரு போதும் நினைக்காதிங்க. இந்த கல்யாணம் மூலமா இவளுக்கு இன்னொரு அப்பா அம்மா கிடைச்சிருக்காங்க.. அவ்வளவுதான். இவளுக்கு இனி இரண்டு அம்மா இரண்டு அப்பா.. என் பையனுக்கும் இனி அதுதான். இரண்டும் பையனா பெத்தவங்க நாங்க.‌. உங்க பொண்ணுதான் பெண் செல்வமா எங்க வீட்டுக்கு வரணும்ன்னு இருந்திருக்கு.." என்றவர் கண்களை கசக்கியபடி நின்றிருந்த செங்காவை பார்த்தார்.

"நீங்க அழுது பொண்ணையும் அழ வச்சிட்டிங்க சம்பந்தி.." என்றார்.


சாமிநாதன் கண்களை துடைத்துக் கொண்டு செங்காவை பார்த்தார். "அட கிறுக்கு புள்ளை இதுக்கு ஏன் அழற.? பாரு அழுது கண் மையெல்லாம் அழிச்சிக்கிட்ட.." என்றவர் அவளின் அருகே வந்தார். தனது தோளில் இருந்த வெள்ளை துண்டை எடுத்து அவளின் முகத்தை துடைத்து விட்டார்.
"நீ வருத்தப்படதாப்பா.. நான் உன்னைய அடிக்கடி வந்து பாக்கறன்.." என்றாள் செங்கா.

"நானும் அடிக்கடி உன்னை வந்து பார்க்கறேன்.. ரொம்ப துடுக்கு பண்ணாம சமத்து புள்ளையா இரு.." என்றார்.

"பச்சை புள்ளையை பள்ளிக்கூடத்துல விட்டுட்டு போற மாதிரி சொல்றாரு எங்க அப்பா.." என்றாள் பொன்னா தன் அருகில் இருந்த விஷ்வாவிடம்.

"என்ன பண்றது.? எல்லோருக்கும் தெரியற மாதிரி துடுக்குத்தனம் செய்யறதால செங்காவுக்கு இந்த அட்வைஸ்.. ஆனா நீ அப்பாவி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு என்னை ஆட்டி படைக்கிறியே.. இது பாவம் அந்த மனுசனுக்கு தெரியல.." என்றான் விஷ்வா.

பொன்னா அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். "வீட்டுக்கு போன பிறகுதான் இருக்கு உங்களுக்கு வேடிக்கை.." என்றாள்.

அதியனின் பெற்றோர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும். அதியனின் தனி வீட்டை விஷ்வா விலை கொடுத்து வாங்கி கொண்டு விட்டான்.

திருமண விசயம் பேச ஆரம்பிக்கும் முன்பே அதியனின் பெற்றோரிடம் வந்து பேசினாள் செங்கா. பேசினாள் என்பதை விட சண்டை போட்டாள் என்றே சொல்லலாம்.

"உங்களுக்கு உங்க மவன் எப்புடி போனாலும் கவலையே இல்லையா.? ஏதோ ஒரு கோவத்துல வெளியே போறான்னா இரண்டு நாள் கழிச்சி போயாவது 'வாடா மவனே வூட்டுக்கு'ன்னு கூப்புட்டு இருக்கணும். ஆள் ஒன்னு சேந்து இருந்தா அரை கெளாசு அரிசி சேர்த்து செலவாகுமேன்னு நினைச்சி முடுக்கி வுடுறவங்களை போல இருந்திருக்கிங்க நீங்க.." என்றவள் அதியனையும் திட்டி தீர்த்தாள். "உன் லவ்வரு உன்னைய நம்பாம போனதுக்கு நீ ஏன் உங்கொப்பன்ம்மாளை வுட்டுட்டு வெளிய போன.? பெத்தவங்க கூட இருந்தா வயசான செலவு பண்ணணுமேன்னு நெனைச்சி ஓடி போக இருந்தியா நீ..?" என்றாள்.

அதியனையும் அவனது பெற்றோரையும் பேசவே விடவில்லை அவள். "இதுநாள் வரைக்கும் எப்புடி இருந்திங்களோ எனுக்கு அது முக்கியம் கெடையாது. ஆனா இனிமே எல்லாரும் ஒன்னா இருக்கலாம்.. இருக்கற வரைக்கும் வெறுத்துட்டு இருக்கறது. செத்த பெறவு யப்பா யம்மான்னு அழுது பட்டு சேலையும் பட்டு வேட்டியும் கொண்டு போய் பொணத்து மேல போட்டு எரிக்க வேண்டியது.. உசுரோட இருக்கும்போது பத்து ரூவா செலவு பண்ண மனசு வராதவங்க செத்த பெறவு கணக்கு பார்க்காம பொணத்துக்கு செலவு பண்ற மாதிரி இருக்க எனுக்கு சுத்தமா புடிக்காது. வாழுற காலம் வரைக்கும் வெறும் சோத்தல உப்ப போட்டு வெறும் கஞ்சியா குடிச்சாலும் சரி. நம்ம வவுறு ரொம்பனா மாதிரி கூட இருக்கறவங்க வவுறும் ரொம்புதான்னு பாத்து வாழணும். தினம் சண்டை வந்தாலும் அடுத்த சண்டை வரும் முன்னால பேசி சிரிச்சிக்கணும்‌. என் புள்ளைங்க பெருசாவுற வரைக்குமாவது ஒரே வூட்டுல ஒன்னா இருக்கலாம்.." என்றவள் சொன்னதை கேட்டு உடம்பு சிலிர்த்தவர்கள் அப்போது நினைத்திருக்கவே மாட்டார்கள் அவள் சீக்கிரத்தில் தங்களையும் சேர்த்து வனவாசம் கூட்டி செல்ல போகிறாள் என்று.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1069
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN