செங்கா 62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
செங்கா மாங்காயை கடித்தபடி அதியனின் அருகே வந்தாள். "யார் வந்திருக்காங்க.?" என்றாள்.

அதியன் மரங்களின் இடையே இருக்கும் ஒற்றையடி வழி பாதையை கை காட்டினான்.

"என் மாமா பொண்ணு மைவிழி குடும்பமும் உன் இனியன் மாமா பேமிலியும் நம்மள பார்க்க வந்திருக்காங்க.." என்றான்.

"மைவிழியக்காவும் சந்தியாக்காவும் வந்திருக்காங்களா.?" என கேட்டவள் மாங்காயை முழுதாக கடித்து எறிந்துவிட்டு ஒற்றையடி பாதையை நோக்கி ஓடினாள்.

பத்து பன்னிரெண்டு வயதையுடைய குழந்தைகள் நால்வர் முன்னால் ஓடி வந்தனர்.

"அத்தை.." என்றோடி வந்தவர்களை ஆசையாக பார்த்துவிட்டு ஓடி சென்று அவர்களை அணைத்துக் கொண்டாள் செங்கா.

கதிர் மைவிழி ஜோடியும் இனியன் சந்தியா ஜோடியும் அந்த குழந்தைகள் ஓடி வந்த பாதையில் நடந்து வந்தனர்.

"இந்த மாதிரி ஒரு இடத்துல வாழ குடுத்து வச்சிருக்கணும்.." என்று சொல்லி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடியே முன்னே நடந்து வந்தாள் மைவிழி.

"இதெல்லாம் உங்க மாமன் ஐடியா.." என்றாள் செங்கா. அவளின் கால்களை சுற்றி நின்றுக் கொண்டிருந்த குழந்தைகள் நால்வரும் விலகி நின்றனர்‌.

"நான் பூவழகனோடு விளையாட போறேன்.." என்று விட்டு ஓடினாள் மைவிழியின் பெண்.

"நாங்களும் வரோம்.." என்று கத்திக்கொண்டே மீதி மூவரும் அவளின் பின்னால் ஓடினர்.

அதியன் செங்காவின் அருகில் வந்தான். அவளின் தோளில் கை போட்டுக்கொண்டு மற்ற ஜோடியை பார்த்தான்.

"இவளுக்காக நான் எது வேணாலும் செய்வேன்.." என்றான்.

சந்தியா அங்கிருந்த இடத்தை சுற்றி பார்த்தாள். கண்ணுக்கெட்டும் வரை மரங்கள் மட்டுமே இருந்தன.

ஐந்து ஏக்கர் நிலப்பரப்பை சுற்றி காம்பவுண்ட் அமைத்து இருந்தனர். உள்ளே வீடு இருந்த இருபது சென்ட் நிலத்தை தவிர மீது அனைத்திலும் மரங்கள் மட்டுமே இருந்தன. அந்த இடமே நெருக்கமான மரங்களால் நிறைந்திருந்தது. செங்காவிற்காக அதியன் செயற்கையாய் ஒரு காட்டையே உருவாக்கி விட்டிருந்தான். அப்பா அம்மாவையும், செழியன் ஜோடியையும் இங்கேயே அழைத்து வந்து விட்டார்கள். அவர்களுக்கும் இந்த இயற்கை சூழல் மிகவும் பிடித்து போய் விட்டது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அனைவரும் இந்த இடத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்தையும் இவர்களே நட்டு தண்ணீர் விட்டு வளர்த்தியுள்ளார்கள். இந்த மொத்த காடும் இவர்களின் வியர்வையாலேயே உருப்பெற்று இருந்தது. காட்டின் இடையே சிறு குளமும் கூட இருந்தது. குளத்தில் நிறைய தாமரைகளும் அழகாய் பூத்திருந்தது.

"வீட்டுக்கு போகலாம் வாங்க அக்கா.." என்று மைவிழியையும் சந்தியாவையும் அழைத்த செங்கா முன்னால் நடந்தாள்.

"இவளையும் வச்சி சமாளிக்கற உங்க திறமையை பாராட்டியே ஆகணும் பாஸ்.." என்றான் இனியன்.

"உன்னையும் வூட்டுல வச்சிருக்கே எங்க சந்தியாக்கா.. அவுங்களை வுடவுமா இவுரு நெலமை மோசமா இருக்கு.?" என்றாள் செங்கா நக்கலாக.

இனியன் தன் மனைவியை சிரிப்போடு பார்த்தான். "இவளை கட்டி மேய்க்க நான்தான் பாடா படுறேன்.." என்றான்.

அடர்ந்த மரங்களை தாண்டி நடந்தனர் அனைவரும். பார்வைக்கு வந்த வீட்டை பார்த்தனர்.

அழகான வீடு அது. எளிமையான அதே வேளையில் அனைவருக்கும் போதுமான வீடு அது.
மிக பெரிய வாசலும், மிக பெரிய திண்ணையையும் உடைய வீடு அது. வீட்டு திண்ணையில் ஐந்தாறு கயிற்று கட்டில்கள் அங்கும் இங்குமாக இருந்தன.

அதியனின் அப்பாவின் தோளில் சாய்ந்து படுத்திருந்தான் பூவழகன்.

மற்ற குழந்தைகள் அனைவரும் ரக்சனா தந்த பலகாரத்தை தின்றுக் கொண்டு இருந்தார்கள்.

ரக்சனாவுக்கும் செழியனுக்கும் தேவாலயத்தில் கிருஸ்துவ முறைப்படி ஒரு முறையும், சிவன் கோவிலில் இந்து முறைப்படி ஒருமுறையும் திருமணம் நடைப்பெற்றது. அவர்களின் திருமணத்தை பூங்கோதையும், லாரன்ஸும்தான் முன் எடுத்து நடத்தினர். காயத்ரிக்கும் மிகுந்த சந்தோசம் ரக்சனாவுக்கு திருமணம் நடந்ததில்.

ரக்சனாவின் சுண்டுவிரலில் தன் மொத்த வாழ்க்கையையும் முடிந்து விட்டிருந்தான் செழியன்.
இருவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று ஆறு வயதில் இருக்கிறது‌. பூவழகனின் ஒரே செல்லம் செழியனின் மகள்தான். இருவரும் தினமும் சொந்த வீட்டிலேயே பாசமலர் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

செழியனையும் அதியனையும் அவர்களின் பெற்றோருக்கு இன்று வரையிலும் கூட பிடிக்கவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் அவர்களது உயிராக இருந்தனர்.

மைவிழியின் குழந்தைகளுக்கும் இனியனின் குழந்தைகளுக்கும் பலகாரத்தை தந்துக் கொண்டிருந்த ரக்சனா வீட்டிற்கு வந்தவர்களை கண்டு முக மலர்ச்சியோடு எழுந்து நின்றாள்.
"வாங்க.." என்றாள். "வாங்க மைவிழியக்கா.. வாங்க சந்தியாக்கா.." என்று அருகில் சென்று இருவரையும் அழைத்தாள்.

பெரியவர்கள் இருவரும் வந்திருந்த இரு ஜோடிகளையும் கண்டு புன்னகைத்தனர்.
"வாங்கப்பா.." என்றாள் அதியனின் அம்மா.

அதியனின் அப்பா செங்காவை முறைத்தார். "பையன் மாங்காயை எதுக்கு பிச்சி தின்ன.?" என்றார் கோபமாக. அவளோடு தினம் பழகியதில் அவரும் இவளின் பாசைக்கு மாறிவிட்ட கதையை என்னவென்று சொல்வது.?

செங்கா அப்பாவை முறைத்தாள். "நீ ஏன் எப்பவும் அவனுக்கே செல்லம் தார.? முதல்ல புள்ள.. அப்பாறம்தான் பேரபுள்ள.." என்றாள்.

அதியனின் அப்பா குழந்தையின் முதுகில் வருடி விட்டபடி அவளை பார்த்தார். "சின்ன புள்ளைய பாப்பாங்களா.? இல்ல உன்னைய தூக்கி வச்சிட்டு கொஞ்சுவாங்களா.?" என்றார்.

செங்கா முகம் வாடி போனது. அதியன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். "விடும்மா.. உனக்கு நான் இருக்கேன்.." என்றான்.

"உங்கொப்பனுக்கு என் மேல பாசமே இல்ல.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவளின் சிறு பிள்ளைதனமான குற்றச்சாட்டை யாரும் காதில் வாங்கி கொள்ளவில்லை.
செழியனின் பைக் சத்தத்தோடு வாசலில் வந்து நின்றது.

"மைவிழி.." என்ற கூக்குரலோடே கீழே இறங்கி ஓடி வந்தான் அவன்.

"மை டியர் பிரெண்ட்.. ஐ மிஸ் யூ.‌." என்று சொல்லியபடி அவளை அணைத்துக் கொண்டான்.
"இவங்க அலப்பறை தாங்க முடியல.." என்றான் கதிர். "அதேதான் அண்ணா.." என்று அவனுக்கு வழி மொழிந்தாள் ரக்சனா.

ரக்சனா அனைவருக்கும் காப்பி கொடுத்து முடித்த நேரத்தில் விஷ்வாவும் பொன்னாவும் அங்கு வந்து சேர்ந்தனர். பொன்னாவிற்கும் விஷ்வாவிற்கும் இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டை பிறவிகள். ஏற்கனவே விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டத்தோடு இவர்களும் சென்று சேர்ந்துக் கொண்டனர்.

"செங்கா கழுத.. வீட்டுக்கு வரவங்களுக்கு டீ காபி தர மாட்டியா.?" என வம்பிழுத்தபடியே வந்து திண்ணையிலிருந்த கட்டில் ஒன்றில் அமர்ந்தாள் பொன்னா.

"உன் வூட்டை வுட நீ இந்தூட்டுலதான் அதிகமா இருக்க.. இதுல உன்னைய விருந்தாளியா நினைச்சி உனுக்கு டீ காபி வேற தாரணுமா.?" என செங்கா கேட்டு முடித்த நேரத்தில் ரக்சனா தன் அண்ணன் அண்ணிக்கு காப்பியை தந்தாள்.

"புள்ளன்னா இது புள்ள.." என்றாள் பொன்னா.

செங்கா உதடு சுழித்தாள். அவளது முகம் வாடி போனது‌. "எல்லாரும் என்னைய கெட்ட புள்ளன்னு சொல்றாங்க.." என்றாள் வருத்தமாக.

அதியன் அவளது கன்னத்தை வருடினான். "விடும்மா.." என்றான்.

"போ.. நான் என்னூட்டுக்கு போறன்.." என்றவள் அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

இனியன் செங்காவை கவலையோடு பார்த்தான். "பாவம் அவ.." என்றான்.

"அவ போனா போறா வுடுங்க.. நாம நம்ம வேலையை பார்க்கலாம்.." என்றார் அதியனின் அப்பா. அவருக்கு தெரியும் தன் செல்ல மருமகளின் கோபம் எத்தனை மணி நேரத்திற்கு மட்டும் இருக்குமென்று.

செங்காவை தொடர்ந்து ஓடினான் அதியன்.

"எங்க அதியன் மாமா பொண்டாட்டியோட நிழலை விட்டு கூட பிரிய கூடாதுன்னு நினைப்பார் போலிருக்கே.." என்றாள் மைவிழி சிரிப்போடு.

"ஆமாம்மா.. அவங்களுக்கு பையன் கூட முக்கியம் இல்ல. ஜோடி போட்டு சுத்திட்டு இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறாங்க.." என்று சொன்னாள் அதியனின் அம்மா.

"வுடிடி.. இந்த வயசுல சோடி போட்டு சுத்தாம பின்ன நம்ம வயசுலயா அதுங்க இப்புடி திரிய முடியும்.?" என்று கேட்டார் அதியனின் அப்பா. பூவழகன் தன் தாத்தாவை நிமிர்ந்து பார்த்தான்.

"தாத்தா நீயும் ஒரு சீட்டர்.. அம்மாவுக்கே சப்போர்ட் பண்ற.." என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவன்.

தாத்தா தன் பேரனின் முகத்தை தன் பக்கம் திருப்பி அவன் கன்னம் கிள்ளி கொஞ்சினார். "எனுக்கு எப்பவுமே நீதான்டா கண்ணா முக்கியம்.." என்றார்.

"உங்க பாசை நல்லாவே இல்ல தாத்தா.." என்றவனின் நெற்றியில் முத்தமிட்டார் அவர்.
"இந்த பாசை எனுக்கு புடிச்சிருக்குடா கண்ணா.. யாருன்னே தெரியாம வூட்டுக்கு வந்தா.. பல வருசமா பேசாம இருந்த என் மவனை எங்கூட சேத்து வச்சா.. பொட்டபுள்ள இல்லையேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தவனுக்கு மவளாவே வந்து சேந்தா. இது அவ பேசுன பாசைட.. அதான் அவ பாசையும் எனுக்கு புடிச்சி போச்சி.." என்றார் அவர்.

அதியன் செங்காவை தேடி ஓடினான். செங்கா மரத்தின் மீது தொங்கி கொண்டிருந்த ஏணியில் ஏறிக் கொண்டிருந்தாள். அதியன் சிரிப்போடு அவளை பார்த்தான். அவனும் ஏணியில் ஏறினான்.
மர வீட்டின் உள்ளே இருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தாள் செங்கா.

அதியன் கட்டிலில் சென்று அமர்ந்தான். செங்கா அவன் அருகே இருப்பதை உணர்ந்து மறுபக்கம் திரும்பி படுத்தாள்.

"எல்லாரும் என்னைய ஓட்டறாங்க. நீயும் அவங்களோட சேர்ந்துக்க வேண்டியதுதானே.?" என்றாள்.

அதியன் அவளருகே தலை சாய்த்தான். எதிர் திசையில் ஜன்னல் வழி தெரியும் காட்டை பார்த்தான். அந்த இடத்தில் இருந்து பார்த்தால் அந்த மொத்த வனமும் முழு பார்வைக்கு வசப்படும்.
அதனாலேயே இந்த மரத்தின் மீது ஒரு மர வீடு அமைத்தான் அதியன். இருவரும் செங்கல் கட்டிட வீட்டில் இருந்த நேரத்தை விட இங்கு மர வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம். இங்கே அவர்களுக்கு என்று ஒரு கட்டில் உண்டு. சில அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே கொண்ட அந்த வீடு அவர்களுக்கு மிகவும் தாராளமாகவே இருந்தது‌.

"எனக்கு உன்னை தவிர உலகமே இல்ல செங்கா. இது உனக்கும் தெரியும்.." என்றவன் அவளை தன் பக்கமாக திருப்பினான்.

செங்கா வாடிய முகத்தோடு அவன் பக்கம் பார்த்தாள். அவனின் நெஞ்சில் தன் முகத்தை புதைத்தாள். அவனை அணைத்துக் கொண்டாள்.

"எங்கக்காளுக்கு என் மேல கடுப்பு மாமா.." என்றாள்.

"ஆமா.. தேவகுமாரன் மாதிரி உனக்கு ஒரு புருசன் கிடைச்சிருக்கானே.. அதனாலதான்.." என்றான் அதியன்.

செங்கா நிமிர்ந்து பார்த்தாள். அவனை முறைத்தாள். ஆனால் தொடர்ந்து முறைக்க முடியவில்லை. அவன் சொன்னதை அவளால் மறுக்கவும் முடியவில்லை. அவன் தாடையில் முத்தமிட்டாள்.

"ஆமா.. அப்புடிதான் இருக்க.." என்றவள் வெட்கத்தில் சிவந்த முகத்தோடு அவன் கழுத்தில் முகம் பதித்தாள்.

"சொந்தக்காரங்க வந்திருக்கும்போது கூட தனியா வந்து ரொமான்ஸ் பண்றவங்க நாமாதான் இருப்போம்.." ஒன்று சொல்லி சிரித்தான் அதியன்.

செங்கா அவனின் நெஞ்சில் குத்தினாள். "வாரத்துக்கு ஏழு முறை வராங்க.‌. அவுங்க என்ன சொந்தக்காரங்க.?" என்றாள். அவளின் தொனி கண்டு மீண்டும் சிரித்தான் அதியன். அவள் சொல்வதும் உண்மைதான். ஓய்வு வேண்டுமென்று நினைத்தாலும் சரி, இல்லை இயற்கை சூழல் வேண்டுமென்று நினைத்தாலும் சரி அவர்கள் அனைவரும் தேடி வரும் ஒரே இடம் இதுதான். செங்காவின் கனவு இந்த இடம். ஆனால் அவர்கள் அனைவருமே அவளின் கனவில் அதிகமாய் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1074
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN