செங்கா 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது அந்த ஆர்ட் கேலரியில்.

பொன்னா தன் முன் இருக்கும் ஓவியங்களை ஆர்வமும் ஆவலுமாக பார்த்தபடியே நடந்தாள். பத்து வருடமாய் தீராத ஆவல் இது. செங்காவின் ஓவியங்கள் அந்த ஹால் முழுக்க வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்னால் முதல் முறையாக இப்படி ஒரு கேலரி வைத்து அதியன் தன் மனைவியின் ஓவியங்களை உலகறிய செய்தபோது அதிகமாக வியந்தவள் பொன்னாதான். ஓவியங்கள் அத்தனையும் அவ்வளவு அழகு. ஆனால் அதை செங்கா எப்படி வரைந்திருப்பாள் என்றுதான் யோசித்தாள் அவள். செங்காவின் மூளையில் இவ்வளவு அழகான ஓவியங்கள் உருவானது எப்படி என வியந்தாள்.

இன்றும் கூட அந்த வியப்பு தீராமல்தான் ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. ஒவ்வொரு ஓவியத்திலும் எதோ ஒரு பேசுப்படுப்பொருள் இருந்தது. ஓவியத்தால் பேச வைக்க முடியும் என்பதை கூட இந்த ஓவியங்களை பார்த்த பிறகுதான் நம்ப ஆரம்பித்தாள் பொன்னாவும்.

"இந்த ஓவியம் செமையா இருக்கு இல்ல.." அதியனின் குரல் கேட்டு திரும்பினாள் பொன்னா.
செங்காவிடம் அவளின் ஓவியத்தையே வியந்து பாராட்டிக் கொண்டிருந்தான்.

"இதுங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா தெரியல.. பொண்டாட்டிக்கு ஐஸ் வைக்கிறது மட்டும்தான் இவருக்கு ஒரே வேலையா.?" என விஷ்வாவிடம் கேட்டாள் பொன்னா.

விஷ்வா நண்பனை பார்த்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பினான். "அவனை பத்தி யோசிக்க என்ன இருக்கு.? எனக்கு என் பொண்டாட்டியை பத்தி யோசிக்கவே நேரம் பத்த மாட்டேங்குது.‌. நம்ம நிறுவனத்துல டீம் மேனேஜிங்கை நீ பார்த்துக்க ஆரம்பிச்சதுல இருந்து நம்ம நிறுவனம் ஜெட் லெவல்ல உயர்ந்துட்டு இருக்கு.." என்றவன் பொன்னாவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவன் சொன்னதும் உண்மைதான். பத்து வருடங்களுக்காக அதியன் விஷ்வா நிறுவனத்தில் பொன்னாவும் இணைந்துதான் வேலை செய்கிறாள். அவள் அந்த நிறுவனத்தில் சேர்ந்த நாளில் இருந்தே நிறுவனம் நல்ல நிலையில் போய் கொண்டிருக்கிறது‌.

அதியன் தன் முன் இருந்த ஓவியத்தை விழியசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு குழந்தையின் ஓவியம் அது. அம்மாவின் அடிக்கு பயந்து ஓடும் குழந்தை அம்மாவை திரும்பி பார்த்து கிண்டலாக முகம் காட்டும்படி அதை வரைந்திருந்தாள் செங்கா‌. நிஜத்தில் நொடியில் மறைந்து விடும் அந்த நிகழ்வை ஓவியத்தில் அழியா ஜனனமாய் மாற்றி இருந்தாள் செங்கா.
ஆர்ட் கேலரிக்கு வந்திருந்த அனைவருமே ஓவியங்களை பாராட்டிவிட்டுதான் சென்றனர். நிறைய ஓவியங்களை நல்ல விலைக்கு வாங்கி சென்றனர்.

அதியன் முகம் செங்காவை நினைக்கும் ஒவ்வொரு முறையும் கர்வத்தால் நிரம்பி இருந்தது.
ஓவியத்தை விரும்புவோர் அனைவருக்குமே செங்காந்தள் என்ற பெயர் தெரிந்து இருந்தது.
சாமிநாதன் தன் மகள் ஒரு ஓவியர் என அனைவரிடமுமே பெருமையாக சொல்லினார்.
செங்காவின் திறமையை உலகறிய செய்ததில் அதியனுக்கு இருக்கும் பங்கு எதுவென அவருக்கும் நன்றாக தெரிந்தே இருந்தது. அதற்காக அவர் அதியனிடம் பலமுறை நன்றி சொல்லி இருக்கிறார்.
ஆர்ட் கேலரியில் பலரின் பாராட்டும் முடிந்த பிறகு தங்களின் வீட்டிற்கு திரும்பினர் அதியனும் செங்காவும்.

இரவு நெருங்கி விட்டது. செழியன் ரக்சனாவின் மகள் தேன்விழியும் பூவழகனும் தாத்தாவின் அருகிலேயே படுத்து உறங்கி விட்டிருந்தனர். பகலெல்லாம் அந்த வனத்தில் ஓடி பிடித்து விளையாடி களைத்தவர்களுக்கு இரவு வரும் முன்பே தினமும் தூக்கம் வந்து விடும்.

இருவரும் தாத்தாவின் அருகில்தான் தினம் உறங்குவதே.

செங்கா வீட்டிற்கு சென்று உடை மாற்றி வந்தாள். அந்த ஆறு முழ புடவையை இரண்டு மணி நேரம் கட்டியிருந்ததே அவளுக்கு பெரும் போராட்டமாக இருந்தது. ஒரு அரைக்கால் பேண்டும் முட்டிவரை இருக்கும் ஒரு டாப்பையும் அணிந்துக் கொண்டு வெளியே வந்தாள்.

"யம்மா.. சோறு போடு.." என்றாள்.

அதியனின் அம்மா உணவை தட்டில் போட்டு எடுத்து வந்து அவளிடம் நீட்டினாள். "நீ ஆக்கற சோறு நல்லாருக்கு.. நீ ஆக்கற சோறு நல்லாருக்குன்னே சொல்லி சொல்லியே என்னையவே சமைக்க சொல்றிங்க நீயும் ரக்சனாவும்.. இரண்டு வயுசு புள்ளைங்க இருந்தும் இந்த கெழவியவே வேலை வாங்குறிங்க.." என்றாள்.

செங்கா உணவை உண்டுக் கொண்டே தன் மாமியாரை பார்த்தாள். "கெழவியா.? நீயா.? உன்னைய வெளிய கூட்டிட்டு போனா உன்னைய எங்களுக்கு அக்காளா தங்கச்சியான்னு கேட்கறாங்க.." என்றாள்.

மாமியார் அவளை செல்லமாக முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

செங்கா தன் மர வீட்டிற்கு வந்தபோது அதியன் தன் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

செங்கா ஏப்பம் விட்டபடியே அவனருகில் வந்து அமர்ந்தாள். "சோறு திங்கலையா மாமா.?" என்றாள்.

"நான் முன்னாடியே சாப்பிட்டேன்.." என்றவன் ஃபோனை தூர வைத்துவிட்டு செங்காவின் தோளில் தன் கையை போட்டான்.

"கம்பெனியில இருந்து ஒன் வீக் லீவ் எடுத்துக்க போறேன்னு விஷ்வாக்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன்.." என்றான்.

செங்கா குழப்பமாக அவனை பார்த்தாள். "எதுக்கு.?" என்றாள்.

அதியன் அவளின் நெற்றியோடு தன் நெற்றியை உரசினான். அவனின் முகத்தில் காதல் கொஞ்சமும் காமம் கொஞ்சமும் உருவாகி இருந்தது.

"நாம செகண்ட் ஹனிமூன் போக போறோம்.." என்றான். அவன் இதை சொன்ன போது அவளுக்கு அவர்களின் முதல் தேனிலவு நினைவுக்கு வந்தது.

திருமணம் முடிந்த அடுத்த வாரத்தில் இருவருமே கரட்டுக்குதான் கிளம்பினர்.

இவர்களை கண்டதும் வனத்தின் வாயிலிலேயே நிறுத்தினார் வனகாவலர்.

"இது ரிசர்வ் பாரஸ்ட்ப்பா.. யாருப்பா நீங்க.? எதுக்கு உள்ளே போறிங்க.? பர்மிசன் லெட்டர் எங்கே.?" என்று கேள்விகளாக அடுக்கினார்.

செங்காவும் அதியனும் என்ன சொல்வதென தெரியாமல் விழித்தனர். "சாரி சார் வழி மாறி வந்துட்டோம்.." என சொன்னவர்கள் வனகாவலர் ஜீப் அங்கிருந்த சென்ற மறுகணமே காட்டுக்குள் நுழைந்து விட்டனர். காட்டுக்குள் இருந்த ஒவ்வொரு நொடியும் அவர்களின் வாழ்வில் எந்தவொரு நொடியிலுமே மறக்க முடியாத அளவிற்கு நெஞ்சில் பதியும்படியாக அமைந்தது. மலைவாசிகள் குடியிருக்கும் கிராமத்திற்கும் சென்றனர். அவர்கள் இவர்களை அன்போடு வரவேற்றனர்.

இவர்களும் அவர்களோடு சில நாட்கள் தங்கி இருந்தனர். ஆக மொத்தத்தில் அவர்களின் தேனிலவை வர்ணித்து எழுதினால் எழுதுபவருக்கும் கூட பொறாமை ஏற்படும் அளவுக்குதான் அமைந்திருந்தது என்றே சொல்லலாம்.

பழைய நினைவில் முகம் மலர்ந்தவளின் கன்னம் கிள்ளினான் அதியன். "நீ என்ன யோசிச்சன்னு எனக்கும் தெரியும்.. முதல் தேனிலவை யோசிச்சதான.?" என்றான் அவன் குறும்பாக.

செங்காவிற்கு முகம் சற்று அதிகமாகவே சிவந்து போனது. "போலாமா.?" என்றாள்.

"போலாம்.. கன்பார்ம்.." என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான் அவன். அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் செங்கா.

"ஆனா இந்த முறை கரட்டுக்கு போகல.. கனடா போறோம்.." என்றான் அவன்.

செங்கா ஆச்சரியமாக அவனை பார்த்தாள். "கனடாவுக்கா.?" என்று யோசித்தாள். காட்டில் வாழ ஆசைப்பட்டவளுக்கு ஒரு செயற்கை காட்டையே உருவாக்கி தந்தவன் இவன். அதனால் மீண்டும் காட்டுக்கே யார்தான் தேனிலவு செல்வார்கள்.?

அவர்கள் அடுத்த நாள் இந்த விசயத்தை வீட்டில் சொன்ன போது அனைவருமே தங்களின் சிரிப்பை அடக்க சிரமப்பட்டனர். பூவழகன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

"என்னையும் கூட்டி போறிங்களா.?" என்றான் சிரிப்பின் இடையே. அவனின் சிரிப்பே சொல்லியது அவனது கேலியை பற்றி.

"சின்ன புள்ளை மாதிரி பேசு பூவழகா.." என்று மிரட்டினாள் செங்கா.

"அதேதான்.. வயசான புள்ளைங்க மாதிரி நீங்க பேசுங்க.. என்னை கூட்டிக்கிட்டு எஜிகேசன் டூர் போக வேண்டிய நேரத்துல நீங்க ஹனிமூன் கொண்டாட போறேன்னு சொன்னா எங்களுக்கு சிரிப்பு வராதா.?" என்றான்.

"அட போடா.. நாங்களும் இன்னும் குழந்தைங்கதான்.. ஆனா என்ன கொஞ்சம் வளந்த புள்ளைங்க.." என்ற அதியன் செங்காவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

இருவரும் மரவீட்டிற்கு வந்து சேர்ந்தனர். செங்கா குழலை இசைத்தாள். அவளின் காதல் அந்த இசையின் மூலம் பரவியது.

மரவீட்டில் அவர்கள் உருண்டு புரண்ட கதையெல்லாம் இனியும் நமக்கு எதுக்குப்பா.? நாம அடுத்த கதையை தேடி போவோம் வாங்கப்பா..

முற்றும்.

வாட்பேட், பிரதிலிபி, சகாப்தம், என்னோட ப்ளாக்ன்னு இதோடு சேர்த்து அஞ்சி இடத்துல கதை எழுதுறேன். ஆனா என் கதைகளுக்கு கமெண்ட், லைக் வராத ஒரே இடம் இந்த தளம் மட்டும்தான் நட்புக்களே.. உங்களோட ஆதரவை எப்படி கணிக்கறதுன்னு கூட எனக்கு தெரியல. எனிவே ரொம்ப நன்றிகள்ப்பா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN