முகவரி 11

P Bargavi

New member
காலையில் எழும்போதே அனுவுக்குத் தலை பாரமாக கணத்தது. நேற்று தன்னிடம் அனுமதி கேட்காமலே டாட்டா சொல்லி சென்ற மகள், வந்த பிறகும் தான் கண்டதையும்… பேசியதைப் பற்றியே கதை அளக்க... அனுவுக்கு உள்ளுக்குள் ஐயோ என்று ஆனது. தான் எங்கு தவறினோம் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கப் போகுது மட்டும் அவள் மனதிற்குப் பட்டது. அதனாலேயே இரவு சரியாக தூங்காமல் இருந்தவளுக்கு இப்போது தலை வலியை கொடுக்க.

அந்த தலைவலியை இன்னும் அதிகப் படுத்துவது போல் பக்கத்து வீட்டில் மரம் அறுக்கும் மெஷினின் சத்தம் கேட்கவும்... முதலில் தன் சிந்தனைகளில் இருந்தவளுக்கு அது எங்கோ கேட்பது போல் இருக்க... பின் சில மனிதர்களின் குரலும்... மரங்கள் முறிந்து விழும் சலசலப்பின் சத்தம் எல்லாம் அருகில் கேட்கவும்... அப்போது தான் அது பக்கத்து வீட்டில் இருந்து கேட்பதாக உணர்ந்தவள்... தான் செய்து கொண்டிருந்த கை வேலைகளை விட்டுவிட்டு இவள் அங்கு விரைய... அங்கிருந்த ஆட்களோ இன்னும் மும்முரமாக மரங்களை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தனர்.

“ஹலோ... ஹலோ... என்ன செய்றீங்க? முதலில் நிறுத்துங்க… யாரைக் கேட்டு மரத்தை வெட்டுறீங்க? யார் உங்களுக்கு இப்படி செய்ய அனுமதி தந்தது?” எடுத்தவுடன் இவள் சற்று கோபமாவே கேட்க

“இது என்னம்மா வம்பா போச்சு! புருசன் வெட்டச் சொல்றாரு... இப்போ பொண்டாட்டி வந்து யார் சொன்னதுனு கேட்டு நிறுத்தச் சொல்றாங்க. நாங்க யார் பேச்சைத் தான் கேட்க?” மரத்தை வெட்டியவர்களில் ஒருவர் அலுத்துக் கொள்ள…

ஆத்திரத்தில் இன்னும் முகம் சிவந்தவள், “வாட்! யாருக்கு யார் பொண்டாட்டி? இது என்ன வரம்பு மீறிய பேச்சு? நான் இந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கறவ. இப்படி மரத்தை அநியாயமா வெட்டுறீங்களேன்னு கேட்க வந்தேன்” அனுவின் விளக்கத்தில்

“சரி தான்… பக்கத்து வீடா? எதுவா இருந்தாலும் இந்த வீட்டு முதலாளி ஐயா கிட்ட பேசிக்குங்க. நாங்க அவர் சொல்வதை தான் கேட்க முடியும்” என்ற படி அவர்கள் தங்கள் வேலையைத் தொடர...

“இருங்க... இருங்க... நான் அவர் கிட்ட பேசிட்டு வரேன். பிறகு நீங்க வேலையைத் தொடருங்க... அதுவரை எந்த மரத்தையும் வெட்ட கூடாது நிறுத்தி வைங்க” என்றபடி அனு வீட்டிற்குள் நுழைய

எதிர்பட்டது என்னமோ கையில் ஜீவாவோடு இருந்த ஆதி தான். அவன் தான் முதலாளி என்று தவறாக யூகித்தவள், “என்ன சார் இது... நீங்க வீட்டை வாங்கினது ஏதோ குடி இருக்கிறதுக்குனு பார்த்தா... இப்படி இங்கு இருக்கிற மரத்தை எல்லாம் வெட்டிப் போடவா வாங்கிட்டு வந்தீங்க?” இவளின் கேள்வியில்

“அது... வந்துங்க மேடம்...” ஆதி விளக்கம் தர முற்பட

அனுவைக் கண்ட குஷியில் அவனிடம் இருந்த ஜீவா “அனும்மா” என்று இவளிடம் தாவ

“ஹேய்... ஜீவா குட்டி... நீ ஊருக்குப் போகலையா? உன் அத்தை நீயும் வரேன்னு தானே சொன்னாங்க” ஜீவாவைத் தன் கையில் வாங்கியவள் அவனிடம் கேட்க

“மேம்... நான் இந்த வீட்டை வாங்கல... என் பாஸ் தான் வாங்கி இருக்கார். நான் அவரோட பி.ஏ. ஆதி” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஆதி

“ஜீவா, அவங்க அப்பாவை விட்டுப் போக மாட்டேன்னு ஒரே அழுகை. அதான், பாஸ் இங்கயே தங்க வைச்சிக்கிட்டார்” ஜீவா தங்கினதற்கு ஆதி விளக்கம் தர

“ஓ... என்ன ஜீவா குட்டி இது... வர வர நீயும் மானுவும் எதிலும் அழுதே அடம் பிடிக்கறீங்க? இது சரி இல்லை சொல்லிட்டேன்” போலியாய் ஜீவாவை மிரட்டியவள்... ஆதி புறம் திரும்பி, “சார், உங்க பாஸ் எங்க? நான் அவரைப் இப்போது பார்க்கணுமே” இவள் சொல்லிக் கொண்டிருந்த நேரம்

“என்ன ஆதி இங்க சத்தம்?” என்று அங்கு வந்தான் மிருடன்

அவன் குரலில் இவள் மனதிற்குள் மணி அடிக்க… இயல்பாய் திரும்புவது போல் திரும்பி அனு அவனைப் பார்த்தவளின் கண்ணில் பீதி படர... உடல் நடுங்க

“மிருடவாமணன்!” என்ற உச்சரிப்புடன் தன்னை மீறி ஓர் அடி பின்வாங்கினாள் அனு.

“பாஸ்... இவங்க உங்களைப் பார்க்கணுமாம்” ஆதி அனுவை கை காட்ட, அனுவின் வெளுத்த முகத்தைப் பார்த்தவன்,

“எஸ்...” என்று ஒற்றை வார்த்தையில் புருவம் நெரிய… மிருடன் நிதானமாய் கேட்க

சினிமாவில் வருவது போல்.. ஆழி சுழல் காற்று அடிப்பது போல்... எரிமலை வெடிப்பது போல்.... ஏன்... நிலநடுக்கமே ஏற்பட்டு இந்த பூமியே அதிர்வது போல்... ஒரு பிரளயமே ஏற்படுமே! அப்படி தான் ஏதோ ஏற்படுவதாக மிருடனைக் கண்டு அதிர்ந்தாள் அனு.

“இவனா?” அவள் உதடு முணுமுணுக்க...

“டாடி...” இப்போது அனுவிடமிருந்து மிருடனினம் தாவ ஜீவா முற்பட்ட. இதை எதையும் உணராமல் இவள் தன் அதிர்ச்சியிலேயே நிற்க...

“who are u? what do you want?” மிருடனின் அழுத்தமான குரலில் தன் நிலை கலைந்தவள்

“அது... வந்து... அது....” என்று இவள் தடுமாற

“அதான் வந்தாச்சே... பிறகு என்ன? என் மகனை என் கிட்ட தரலாம் தானே” மிருடன் ஏளனமாய் கேட்க

அப்போது தான் ஜீவா தந்தையிடம் தாவ அழுவதை உணர்ந்தவள் ‘என்னது ஜீவா இவன் மகனா? அப்போ....’ தன் எண்ண ஓட்டத்தை நிறுத்தி விட்டு தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து விட்டு ஜீவாவை அவனிடம் கொடுத்தவள் விரைந்து வெளியே வர…

“என்னம்மா.. முதலாளி கிட்ட பேசிட்டீங்க இல்லை.. இனி மரத்தை வெட்டலாம் தானே?” அங்கிருந்த கூலியாள் கேட்கவும்

அப்போது தான் இங்கு தான் வந்ததின் காரணம் புரிய, அவர்களுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் இவள் முழிக்கவும்,

“இங்கே என்ன பஞ்சாயத்து?” என்ற அதிகார கேள்வியுடன் வந்து நின்றான் மிருடன்.

“ஐயா... இவங்க மரத்தை வெட்ட வேண்டாம்னு சொல்றாங்க. ஏதோ உங்க கிட்ட பேசணும்னு சொல்லி உள்ள போனாங்க” ஒருவன் விளக்க

தன் பின்னே வந்த ஆதி பக்கம் திரும்பியவன், “ஓ... என்ன ஆதி இது…. இதில் கேட்க என்ன இருக்கு? இது என் வீடு... என் வசதிக்கு ஏற்ப மரத்தை வெட்டுகிறேன். என்னை அதிகாரம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. என்ன ஆதி இதெல்லாம்? நம்ம பக்கம் எல்லாம் சரியா தானே இருக்கு?

பிறகு எதற்கு இப்படி யாரோ புகுந்து இடையில் பிரச்சனை செய்யணும்? யாருக்கும் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாட்ச்மேன் கிட்ட என்னை கேட்காம இப்படி கண்டவங்க யாரையும் உள்ளே விட வேண்டாம் சொல்லு. என் வீட்டில் இப்படி யாரோ மாதிரி நுழைஞ்சிட்டு... கேள்வி கேட்டுட்டு பதில் சொல்லாமல் போக வேண்டியது! who is this ஆதி?” அடக்கப்பட்ட கோபத்தில் மிருடன் சரமாரியாய் கேட்க

விழிகள் விரிய நின்றவளுக்கு மூச்சடைத்தது. ‘என்ன ஒரு அவமானம்... ஏதோ இவன் வீட்டுக்குள் நாய் நுழைந்த மாதிரி இல்ல பேசுறான்… இவன் என்னை மறந்திட்டானா! மறந்தே போய்விட்டானா! நிஜமாவே என்னைத் தெரியலையா? இது எப்படி சாத்தியம்? என் வாழ்வு இந்நிலைக்கு வர இவன் தானே காரணம்! இவன் எனக்கு செய்த பாவத்தை எப்படி மறந்தான்… என்னையும்?’

“மேம், எங்க பாஸ் தொழிலே இது தான் மேம். மரத்தை வெட்டி… அதில் பல பொருட்கள் செய்வது. பேப்பர்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு. உங்களுக்கு என்ன பிராப்ளம் சொல்லுங்க” அவள் சிந்தனையை இடைவெட்டியது ஆதியின் இப்படியான குரல்.

அதில் “ஆஹ்...”தன்னிலை வந்தவள் அங்கு மிருடன் இல்லை என்பதை உணர்ந்து, “ஒன்றும் இல்லை...” என்ற பதிலுடன் வெளியேறினாள் அனு. ஆனால் அவள் உள்ளம் மட்டும் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

அதையெல்லாம் கஷ்டப்பட்டு தவிர்த்தவள் தன் வேலைகளைப் பார்க்க... மிருடன் வீட்டிலோ மரங்களை வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தார்கள். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று இவள் மனதால் துவண்டிருந்த நேரம், “அனும்மா....” என்று ஓடி வந்து அவள் மடியில் அமர்ந்தான் ஜீவா.

இவள் கேள்வியாய் பார்வதியைப் பார்க்க, “அந்த மிருடன் தம்பி வெளியே போறாங்களாம். இவன், நம்ம பாப்பா கூடத் தான் இருப்பேனு அடம் செய்தானாம். அதான்... இவனை வெளிவாசல் வரை விட்டுப் போகிறார். எதுவும் சாப்பிடலையாம் அனும்மா..... அதுக்கும் பிடிவாதம். நீ ஊட்டி விடுறியா அவனுக்கு?” பார்வதி சொல்லிவிட்டுச் செல்ல… இன்றைய நாளில் இரண்டாம் முறையாக ஸ்தம்பித்துப் போனாள் அனு.

‘மிருடன் எனக்கு செய்த பாவத்திற்கு என்னுடைய எதிரி அவன் அப்படி இருக்க… இவன் மகனை நான் கவனிப்பேன் என்று எப்படி நம்பி இங்கு விட்டுவிட்டுப் போகிறான்? ஒருவேளை, அவனுக்கு தலையில் ஏதாவது அடி பட்டு பழசு எல்லாம் மறந்திருக்குமோ! வாய்ப்பு இருக்கு… இல்லை என்றால் இவன் என்னிடம் இப்படி நடந்துக்கிறவன் இல்லை’ ஆனால்… பாவம்… அனு நினைக்கவில்லை மிருடன் என்னும் புலி பதுங்கி தான் பாயும் என்று….. இப்படி ஏதேதோ அவள் குழம்பினாலும் ஜீவாவை அவளால் வெறுக்க முடியவில்லை.

‘தந்தை செய்த துரோகத்திற்கு அந்த பிஞ்சுக் குழந்தை என்ன செய்யும்? அதிலும், பார்த்த அன்றிலிருந்து அனும்மா... அனும்மா... என்று தன்னையே சுற்றிக் கொண்டிருக்கும் அவனிடம் முகத்தைத் திருப்ப முடியுமா?’ இப்படி நினைக்கும் போதே அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

‘ஒருவேளை, நான் இப்படி நினைக்கணும்… இவன் குடும்பத்தாருடன் நல்ல முறையில் பழகணும் என்று தான் இங்கு வந்து வீடு வாங்கினானா? இந்த நாலு நாளும் இவன் தன் அடையாளத்தைக் என்னிடம் காட்டாமல் இவர்கள் குடும்பத்தோடு பழக விட்டானா? ஆனால் ஏன்? இதனால் இவன் என்ன சாதிக்கப் போகிறான்?’

இப்படியான கேள்விகளுக்கு இடையில்... ‘இல்லையே! அப்படியும் சொல்ல முடியாது. அவனுக்கு தான் என்னை அடையாளமே தெரியலையே! சுத்தமாய் என்னை மறந்தவன்... பிறகு ஏன் இப்படி அவன் குடும்பத்தோடு பழக விடப் போகிறான்? ஜீவாவும் அவன் அப்பாவை பற்றி தான் சொல்லி இருக்கான்... அம்மா பற்றி அவன் பேசியது இல்லையே! அப்போ அவனின் மனைவி எங்கே?’

“அனும்மா.. ஜீவா சாப்பிட கேக்கிறான் பாரு...” பார்வதியின் அதட்டலில் தன் நிலைக்கு வந்தவள், ஜீவாவுக்கு ஊட்டி விட்டு அன்று முழுக்க அவனைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள்.

இரவு பிள்ளைகள் படுத்து தூங்க, அவர்களுடன் படுத்திருந்த அனுவுக்குள்… மறுபடியும் சிந்தனைகள் ‘ஒருவேளை, நான் இனி மான்வியை அங்கே அனுப்ப மாட்டேனு நினைத்து தான் அவன் ஜீவாவை இங்கு அனுப்பி வைத்தானா? மான்வி... மான்வி...’ ஒரு திடுக்களுடன் சட்டென எழுந்து அமர்ந்தவள்,

“ஆமாம்… மான்வியை எப்படி மறந்தேன்?” இவள் வாய் விட்டு கேட்டுக் கொள்ள.. அந்நேரம் அறைக் கதவைத் தட்டினார் முனீஸ்வரன். இவள் சென்று கதவைத் திறந்ததும்...

“அனும்மா, ஜீவா அப்பா வெளியே நின்றுகிட்டு ஜீவாவை கேக்கிறார். இன்று ஒரு நாள் தான் இங்கே விட்டாராம். நாளையிலிருந்து ஜீவாவை டவுனில் இருக்கிற கிரஷ்க்கு அனுப்பப் போகிறாராம்... சொல்லிட்டார்.

மிருடன் சொல்லாத சில தகவல்களையும் அவர் சொல்லி விட்டு ஜீவாவுடன் வெளியேற, யோசனையில் கவிழ்ந்தது அனுவின் முகம்.

மறுநாள் முனீஸ்வரன் சொன்ன படியே ஜீவா இங்கு வரவில்லை. மான்வி தான் அவன் இல்லாமல் சோர்ந்து போய் சுற்றிக் கொண்டிருந்தாள். மனதில் ஒரு திட்டத்துடன்

மதியம் அனு வேலையாய் இருந்த நேரம்… தாய்க்குத் தெரியாமல் மிருடனைக் காண மான்வி வெளிவாசலிலே தவம் இருக்க… அதைப் பொய்யாக்காமல் வந்து சேர்ந்தான் மிருடன். மான்வியை வாசலிலே பார்த்து விட்டு இவன் காரிலிருந்து இறங்கி அவளிடம் வந்தவன்,

“ஹாய் friend! எனக்காக மேடம் வெயிட்டிங் போல”

இவன் கேட்டதும், “ஏன் friend இன்னைக்கு ஜீவா எங்க வீட்டுக்கு வரல?” பெரிய மனுஷியாய் இவள் கேள்வி கேட்க

“அச்சோ! அதான், மேடம் முகம் முழுக்க கோபத்தில் தக்காளி பேஸ்ட்டா இருக்கா... அவன் இனி வர மாட்டானே friend! ஸ்கூல் போகிறான் இல்ல?”

“அவன் எந்த ஸ்கூல் போறான்? நானும் அவனும் ஒரே ஸ்கூல் போறோம்... அவனை என் ஸ்கூலுக்கு வரச் சொல்லு” சின்ன வாண்டு ஐடியா தர

“அது முடியாதே! வேணும்னா நான் ஒரு ஐடியா தரேன். நீயும் ஜீவா படிக்கிற ஸ்கூலிலேயே படிப்பியாம்... நான் அவனை மதியம் அழைச்சிட்டு வரும்போது உன்னையும் அழைச்சிட்டு வருவேனாம். பின் நான் திரும்ப ஆபீஸிலிருந்து வரும் வரை இரண்டு பேரும் மம்மி கூட ஜாலியா இருப்பீங்களாம்.... எப்படி ஐடியா?”

“ஹையா! ஜாலி.... ஜாலி!” மான்வி கை தட்டி ஆர்ப்பரிக்க


“சகிக்கலை.... ரொம்ப கேவலமா இருக்கு. என்ன மிஸ்டர் இது? உங்க தகுதிக்கு இப்படி தான் சின்னப் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறதா?” என்று வெகு உஷ்ணமாக கேள்வி கேட்டது தற்போது அங்கு வந்த அனுவின் குரல்.
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN