முகவரி 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஏற்கனவே நேற்று மிருடன் பேசிய பேச்சால் கோபத்தில் இருந்த அனு, இன்று அவன் இப்படி ஒரு ஐடியா என்று மகளிடம் சொல்லவும்... இடம், பொருள், ஏவல் என்று எதையும் பாராமல் இவள் வார்த்தையை விட்டு விட...

அதில் அனுவை உறுத்து விழித்த மிருடன், “மானு பேபி, உன் ஃபிரெண்டுக்கு இப்போ செம்ம பசி. உள்ளே போய் பாரு பாட்டி கிட்ட எனக்கு ஜுஸ் கேட்டு வாங்கிட்டு வரீயா தங்கம்?” என்று கேட்டு மானுவை உள்ளே அனுப்பியவன்

“ஏய்... என்ன பேசுறோம்னு தெரிந்து தான் பேசுறீயா? அதுவும் குழந்தை முன்னாடி... குழந்தைக்கு ஒரு நல்ல தாயா முன் உதாரணமா இருக்கப் பாரு. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு கேவலமா இருந்தது? அப்படி நான் சொன்னது கேவலமா இருந்தாலும் அதை சுட்டிக் காட்ட உனக்கு எந்த தகுதியும் உரிமையும் இல்லை. குழந்தைங்க முன்னாடி இப்படி பேசுறது இது தான் உனக்கு முதலும் கடைசியுமா இருக்கணும். மீறின... இப்படி மாதிரி பேசிட்டு இருக்க மாட்டேன் ஜாக்கிரதை! என்ன புரிந்ததா?” சத்தம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக இவன் பேசிய குரலுக்கு அனுவின் உடலோ சில்லிட்டுப் போனது.

அதற்குள் மான்வி வந்து விட, அவள் கொடுத்த ஜூசை வாங்கிக் குடித்தவன், “மானு பேபி... உன் friend செம்ம ஹேப்பி. வயிறு டோம்... எனக்கு இப்போ பசி போயே போச்சே...” அவன் தன் வயிற்றைத் தடவி ராகம் இழுத்த படி குதூகலமாய் சொல்லவும்

“நானு... நானு...” என்று இவளும் குதூகலிக்க

மான்வியைத் தூக்கி காரின் பேனட்டில் இவன் அமர வைக்க... தன் இரண்டு கையாளும் அவன் வயிற்றைத் தடவியவள், “பசி போயிந்தே!” என்று சொல்லி குனிந்து மிருடன் சிக்ஸ் பேக் வயிறுக்கு இவள் முத்தமிடவும்… அதிர்ந்தே போனாள் அனு.

அதில் ‘இவர்களுக்குள் எத்தனை நாளாக இப்படி ஒரு பழக்கம் எப்படி ஏற்பட்டது?’ என்ற கேள்வி அவள் மண்டைக்குள் ஓடியது.

பின் மானுவைக் கையில் ஏந்திய படி அனுவிடம் வந்தவன், “ம்... நான் சொன்னதில் என்ன சரி வராது இப்போ சொல்லு...” எதுவும் நடவாதது போல் மிக இயல்பாய் அவன் கேட்க

இவளோ பேய் முழி முழித்துக் கொண்டு நின்றாள். அதில் கடுப்பானவன், “கேட்டது காதில் விழலையா?” என்று இவன் சற்றே குரலை உயர்த்திக் கேட்கவும்

“அது... அது வந்து... அஹ்... முதல் விஷயம் உங்க வசதி அளவுக்கு என் வசதி வராது. அதனால ஜீவா படிக்கிற ஸ்கூலில் எல்லாம் மானுவை சேர்க்க முடியாது. இரண்டாவது... அது என்ன மம்மி கூட இரண்டு பேரும் இருங்க நான் ஆபீஸ் முடிந்து வருவேன்னு சொல்றது…. இது தப்பு இல்லையா?”

அவள் பதிலில் அனுவைக் கூர்ந்து நோக்கியவன், “பேபி, உன் மம்மியை ஜீவா எப்படி அழைப்பான்?” மான்வியிடம் இவன் கேள்வி கேட்க

“அனும்மா... தான் friend...” மான்வி பதில் தர

“அப்போ இரண்டு பிள்ளைகளுக்கும் பொதுவா மம்மின்னு தானே சொல்ல முடியும்? இதில் என்ன தப்பு இருக்கு? என் மனசில் என் மனைவியைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை. ஆனா அங்க எப்படி?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவன் அவள் பதில் அளிக்க இடம் தராமலே

“ஜீவா பபடிக்கிறஸ்கூல் அப்படி ஒன்னும் பெரிய ஸ்கூல் இல்லை. அதுவும் இந்த ஊரில் எந்த அளவுக்கு பள்ளிகளில் வசதிகள் இருக்கும்னு நீயே யோசிச்சிக்க” என்றவன்“
பேபி ஜீவா ஸ்கூலில் நீ படிக்க உனக்கு ஓகே தானே?” மான்வியிடம் இவன் இறுதியாக கேட்க

“ம்ம்ம்... படிப்பனே... எனக்கு ரொம்ப பிடிக்குமே!”

“அப்போ மம்மி கிட்ட சொல்லு” மிருடன்

“ம்மா.. நானுமே ஜீவா ஸ்கூல் போறேன்” கிளிப் பிள்ளையாய் இவள் அதே சொல்ல

அவன் பேசிய பேச்சில் அனுவுக்கு இருந்த கோபத்திற்கு இவள் மகள் முதுகில் ஓங்கி ஒரு அடி வைக்கவும், அதிர்ந்தே விட்டான் மிருடன். நிச்சயம் இதை அனுவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை அவன்.

அனு மறுபடியும் மகளை அடிக்க கை ஓங்கவும், “ஏய்...” அவள் கையைப் பிடித்து தடுத்தவன், “எதுக்கு இப்போ பேபியை அடிக்கிற? பெற்றவங்களா இருந்தாலும் பிள்ளைங்களை அடிக்கக் கூடாதுனு சட்டம் இருக்கு உனக்கு தெரியுமா? மீறி அடிச்ச.. உன்னை போலீஸில் பிடித்துக் கொடுக்கவும் நான் தயங்க மாட்டேன்” கடித்த பற்களுக்கு இடையில் இவன் எச்சரிக்கவும்

‘அடப் பாவி! ஏதோ என்னை தீவிரவாதி மாதிரி பிடித்துக் கொடுக்கிறவரை போறானே! இப்போ இருக்கற கோபத்திற்கு உண்மையா செய்தாலும் செய்வான்’ என்று நினைத்தவள்…

“மானு, உள்ள வா...” என்று இவள் மகளை அதட்டி அழைக்க, தாயிடம் அடிவாங்கிய கோபத்தில் மான்வி மிருடனின் கழுத்தைக் கட்டிக் கொள்ளவும்...

“ஹய்... பேபி... நாம் காரில் ஒரு ரவுண்ட் போலாமா?” என்றவன் அனுவைத் திரும்பியும் பார்க்காமல் ஒரு மிடுக்குடன் அந்த இடத்தை விட்டு மானுவுடன் அகன்றிருந்தான் மிருடன்.

அப்போது மட்டும் இல்லை… அதன் பிறகும் மானு, ஜீவா பள்ளியில் தான் படிப்பேன் என்று அடம் பிடிக்க... அனுவோ கொஞ்சமும் மகளுக்கு விட்டுக் கொடுக்க வில்லை. ஆனால் மறுநாள் வழக்கம் தான் செல்லும் பள்ளிக்கு செல்ல விரும்பாமல் ஜீவாவின் பள்ளிக்குப் போக அழுது அடம் பிடித்து ஒப்பாரியே வைத்தாள் மான்வி. ம்ஹும்... நீ என்ன வேணா செய்துக்கோ என்ற பிடிவாதத்தில் மகளின் செயலில் எதற்கும் அசரவில்லை அனு. விஷயம் மிருடனுக்குப் போக, அவனோ வெண்பாவிடம் சொல்ல… அடுத்த நொடி அனுவுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன அனு இது! மானுவை நீ ஜீவா ஸ்கூலில் சேர்த்தா தான் என்ன? ஜீவா பிறந்ததிலிருந்து அவனுக்கு ஒரு தாயா இருந்து நான் தான் அவனை வளர்த்திட்டு வறேன். அப்படி என் கையிலேயே இருந்த பிள்ளையை இன்று அங்கு விட்டுட்டு வந்து இருக்கேன்னா... அது உன்னை நம்பித் தான். அது ஏனோ நாம பழகினது மூன்று நாட்கள் தான் என்றாலும் உன்னிடம் எனக்கு அப்படி ஒரு ஒட்டுதல் வந்துடுச்சு”

“அக்கா, கொஞ்சம் மூச்சு விட்டுக்கேங்க....” இவள் இடை புகுந்து சொல்ல

அதையெல்லாம் காதில் வாங்காமல், “மானு அங்கே படிக்கிறதால அப்படி என்ன செலவு வந்திடப் போகுது? அப்படியே என்றாலும் அந்த செலவை நாங்க பார்த்துக மாட்டோமா. எங்களுக்கு ஜீவாவும், மானுவும் ஒன்று தான்”

‘அது எப்படி ஜீவாவும் மான்வியும் ஒன்று ஆக முடியும்?’ இப்படியாக அனுவால் நினைக்கத் தான் முடிந்தது. வாய் விட்டுச் அவரிடம் கேட்க முடியவில்லை இவளால்.

“ஜீவாவை நீ பார்த்துக்கும் போது மானுவை நாங்க பார்த்துக்க மாட்டோமா? அதெல்லாம் மிருடன் எல்லா ஏற்பாடும் செய்துட்டான். நீ மானுவை ஜீவா பள்ளிக்கு அனுப்பி வை அனு” அந்நேரம் கமல் அழைக்கவும், “இதோ வரேன் டா. சரி அனு… நான் வைக்கிறேன்... கமல் எழுந்துட்டான்” என்றபடி வெண்பா அழைப்பைத் துண்டித்து கொள்ள

அனுவுக்கு விஷயம் புரிந்தது. மிருடன் தான் இதற்கு எல்லாம் காரணம் என்று. “இவன் யார் என் குடும்ப விஷயத்தில் முடிவு எடுக்க… தலையிட? வரட்டும் பேசிக்கிறேன்” இவள் புலம்பல் அவனுக்கு எட்டியதோ! அழுத்தமான காலடி சத்தங்கள் அப்போது அனுவை நெருங்கியது. வந்தவன் யார் என்று தெரிந்தும் இவள் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருக்க...

சிறிது நேரத்தில் “அனும்மா...” என்ற அழைப்புடன் தாவி வந்து ஜீவா இவளின் கழுத்தைக் கட்டிக் கொள்ள... இவன் குரல் கேட்டு வெளியே ஓடி வந்த மான்வி, “friend...” என்ற அழைப்புடன் மிருடன் காலைக் கட்டிக் கொள்ள, அவளைத் தூக்கிக் கொண்டவன்

“அழுதீயா பேபி?” என்று இவன் கேட்க

“ம்ம்ம்... ம்மா... bad mummy ஆகிட்டா.. ஜீவா ஸ்கூலுக்கு நோ சொல்றா” உதட்டைப் பிதுக்கி இவள் புகார் படிக்க

“அப்படி எல்லாம் யார் சொல்லுவா என் பேபியை போகவேண்டாம்னு? இப்படி எல்லாம் அதிகாரம் செய்ய தான் உன் friend விட்டுவிடுவேனா? என் பேபி ஜீவா கூடத் தான் ஸ்கூல் போவா. அதுவும் நானே காலையில் அழைச்சிட்டுப் போய்... மதியம் ஜீவா கூடவே அழைச்சிட்டு வருவேன். எப்படி நம்ம டீல்?” இவன் மறைமுகமாய் அனுவுக்கு செய்தி சொல்ல

“ஹேய்... ஜாலி ஜாலி! இப்போ போறோமா friend?”

“இப்போ இல்ல பேபி... எனக்கு four days சென்னையில் வேலை இருக்கு. சோ, நான் சென்னை போயிட்டு வந்த பிறகு போகலாம் பேபி”

“அப்போ ஜீவா?” மறுபடியும் இவள் உதட்டைப் பிதுக்க

“எதுக்கு பேபி இப்போ அழற? என் பேபி எதுக்கும் அழக் கூடாது. நான் மட்டும் தான் ஊருக்குப் போறேன். ஜீவா இங்கே உன் கூடத் தான் இருப்பான். நீ தான் ஜீவாவைப் பார்த்துக்கணும்” இவ்வாக்கியத்தை சொல்லும் போது மட்டும் அவன் பார்வை அனுவிடம் இருக்க... அவளும் அதே நேரம் நிமிர... இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டு பின் விலகியது. இவ்வளவு நேரம் அவனை வெட்டுவேன் குத்துவேன் என்று இருந்தவள் அவன் பார்வையில் தற்போது ஏனோ பேச்சற்று தான் போனாள் அனு.

‘இதென்ன புதுப் பழக்கம்... எப்போதும் வாசலிலே நின்று விட்டு போய்டுவான்... இன்று உள்ளே வரை வந்திருக்கான்....’ என்ற அனுவின் எண்ணத்தைத் தடை செய்தது…

“வாங்க தம்பி... வந்து ரொம்ப நேரம் ஆச்சா? வாங்க வாங்க, பின்புறம் போய் பேசலாம்” முனீஸ்வரன் அவனை அழைக்க... அவருடன் சென்றான் மிருடன்.

மிருடன் தான் சொல்லிச் சென்றதை விட... இன்னும் இரண்டு தினத்திற்கு பிறகு தான் வந்தான் மிருடன். அதுவரை ஜீவா, மான்வியுடன் அனுவின் உலகம் ஆட்டம், பாட்டம், குதூகலம் என்று வேறு மாதிரி சுழன்றது. ஆனால் அவள் வாழ்வில் இனி சந்தோஷம் என்பதே இருக்கக் கூடாது என்ற முடிவில் இம்முறை ஒரு திட்டத்துடன் வந்து சேர்ந்தான் மிருடன்.

மான்வியிடம் சொன்ன மாதிரியே இரண்டு தினங்கள் இவன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வர... மூன்றாம் நாள் தன் தோட்டத்தில் வேலையாக இருந்த அனு முன் தோன்றினான் ஆதி.

“Excuse me mam… உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” அவனின் மரியாதையான பீடிகையில் இவள் என்ன என்பது போல் பார்க்க...

“உங்களுக்கே தெரியும்... எங்க பாஸ் தமிழ் நாடு முழுக்க பெரிய பர்னிச்சர் ஷோ ரூம் வைத்திருக்கார்னு. அதிலே இருக்கிற பர்னிச்சர் எல்லாமே நாங்க தான் செய்கிறோம். மரங்கள் நிறைய இருக்கும் இடத்தை எல்லாம் என் பாஸ் வாங்கிடுவார். அப்படி வாங்கினது தான் உங்க பக்கத்து இடமும்… அதாவது சாமுவேல் சார் வீடு.”

“இப்போ எதுக்கு எனக்கு உங்க பாஸ் புராணம்? வந்த விஷயம் என்னனு நேரடியா சொல்லுங்க” இவள் பொறுமை இழந்து கோபப் பட

“அது வந்து… அந்த இடத்தை வாங்கி அதிலிருந்த மரங்களை எல்லாம் வெட்டியாச்சு...”

“அந்த நாசமா போன செயலைத் தான் நான் என் இரண்டு கண்ணால் தினந்தினம் பார்த்திட்டு இருக்கேனே! பிறகு என்ன?” அனு வெடிக்க

“ம்ம்ம்... கூடுமான வரை வெட்டிய அந்த மரங்களில் பர்னிச்சர் செய்யிற வேலை நடந்துகிட்டு இருக்கு...” என்று பழையபடி இழுத்தவனை இவள் முறைக்க

“இப்போ எங்களுக்கு உங்க வீட்டில் பின்புறம் இருக்க மரங்கள் வேணும். அதை வெட்ட ஆட்கள் வராங்க… அதில் இன்னும் பர்னிச்சர் செய்ய எங்களுக்கு சுலபமா இருக்கும். இதை பாஸ் உங்க கிட்ட சொல்லச் சொன்னார்...” அவள் முறைப்பில் இவன் பட்டென்று போட்டு உடைத்து விட...

“டேய்... என்னங்க டா நினைத்திட்டு இருக்கீங்க? ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசியில் மனுஷனை கடித்த கதையா இப்போ என் இடத்திற்க்கே வரீங்களா? உன் பாஸ் நொன்னைக்கு இது தான் வேலைனா அதுக்கு என் கிட்டயே எங்கள் வீட்டு மரத்தையே கேட்பானா? போடா வெளியே....”

“மேம்... மரம் தரேன் இல்லை தரலைன்னு இப்படி எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. அதை விட்டுட்டு எதுக்கு இப்போ அனாவசியமா பேசுறீங்க?” ஆதியும் கோபப் பட

“டேய்.. போடான்னு வார்த்தையால் சொன்னா நீ போக மாட்டியா டா?” என்றபடி அங்கிருந்த மண் வெட்டியை கையில் எடுத்தவள், “என்ன ஒரு அதிகாரம்! அதுவும் யாரு கிட்ட? உன் பண முதலை கிட்ட போய் சொல்லு... இந்த அனுதிஷிதா வீட்டிலிருந்து ஒரு சின்ன புல்லைக் கூட அவனால் கை வைக்க முடியாதுன்னு” என்ற படி இவள் கையிலிருந்த மண்வெட்டியை வந்தவனை நோக்கி வீச எத்தனிக்க...

வந்தவன் விட்டால் போதும் என்ற நிலையில் ஓடியே விட்டான். இவன் ஓடி விட்டான்… ஆனால் மிருடன் விடுபவனா?...
 
Last edited:
V

Vasumathi

Guest
Super dr 😘 அம்மாகிட்ட மகன் அப்பா கூட மகள் 😍😍 ni enama seiya pora anu🤣
 

அனிதா கண்ணன்

Guest
மிருடனுக்கும் அனுவுக்கும் என்ன சம்மந்தம் ..ஐயோ! சஸ்பென்ஸ் தாங்க முடியல
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN