முகவரி 13

P Bargavi

New member
அனு தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை மிருடனிடம் ஆதி சொல்ல... அதில் மனதிற்குள் இன்னும் வஞ்சம் வளர்ந்தவன்...

ஒரு நாள் அனு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் நிலையில்... ஆள் அரவம் இல்லாத சாலையோரம் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை இவள் கடக்க முயல... அந்நேரம் தீடிரென அந்த காரினுள் இருந்தவன் கார் கதவைத் திறந்து கொண்டு இவளைப் பயம் காட்ட... வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவளோ சற்றே தடுமாறியவள்...

“எவன் டா இது... கண்ணு தெரியாத கபோதி!” என்ற வசைப்பாட்டுடன் இவள் கார் உள்ளே நோக்க

வெகு ஸ்டைலாக கண்ணுக்கு கூலர்ஸ் அணிந்து... வலது காலை வெளியே நீட்டிய படி டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் மிருடவாமணன்.

“ஓஹ்... துரை விதத்துக்கு ஒரு கார் வைத்திருக்கார் போல... அதான் எனக்கு அடையாளம் தெரியல. ஆனா ஒண்ணு… உண்மையிலேயே இவன் கண்ணு தெரியாத கபோதி தான்! போட்டிருக்கிற கண்ணாடியை பாரு… ஸ்டைலாம்… மண்ணாங்கட்டி!” வேண்டும் என்றே அவன் காதில் விழும்படி முணுமுணுத்தவள் தன் வண்டியை அவனை தாண்டி நகர்த்த எத்தனிக்க…

அவள் சொன்ன வார்த்தையில் கோபத்துடன் இறங்கியவன், அதே வேகத்துடன் அவள் வண்டி சாவியைத் தன் கையில் எடுத்திருந்தான் இவன்...

“ஏய்! இதென்ன ரோட்டில் நின்று ரவுடித்தனம் செய்கிற? மரியாதையா சாவியக் கொடுடா...” இவள் பாய

“ம்ம்ம்... மரியாதையா… சரி தான்?” என்ற படி தன் தாடையைச் தடவியவன் “அந்த மரியாதையை நீ தரலையே டி... அப்போ என் கிட்ட மட்டும் அதை கேட்டா எப்படி?”

தான் பேசிய பேச்சாலும், அதற்கு அவன் கொடுத்த பதிலாலும் ஒரு வினாடி அமைதி காத்தவள்.... அடுத்த நொடி தலையை சிலுப்பி கொண்டு நிமிர்ந்தவள், “இப்போ எதுக்கு நடுரோட்டில் வம்பு வளர்க்கிற? உன் கிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. நான் போகணும் சாவியைக் கொடு...” இவள் தன்மையாக கேட்க

“பேச எதுவும் இல்லையா... உன்னை யார் பேச சொன்னா டி? நான் சொல்கிறதை மட்டும் கேள். ஆமா, ஆதி கிட்ட என்ன டி சொன்ன?”

‘நான் ஒரு டா தானே டா போட்டேன்? நீ ஏன் டா வார்த்தைக்கு.. வார்த்தை இத்தனை டி போடுற?’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவளுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது, இவன் எதற்காக தற்போது தன்னை வழி மறித்து நிறுத்துகிறான் என்று. இவள் அதே அமைதியில் நிற்க...

அவனே தொடர்ந்தான், “பெரிய இவளாட்டும் உன் வீட்டிலிருந்து ஒரு சின்ன புல்லைக் கூட என்னால் தொட முடியாதுன்னு சொன்னியாமே! அதென்ன உன் அப்பன் வீட்டு சொத்தா… நீ அனுமதி தர? முடியாதாம் முடியாது… யார் கிட்ட? நான் இப்போ சொல்கிறேன் கேட்டுக்கோ... நாளைக்கு ஒரு நாள் மட்டும் உனக்கு அவகாசம் தரேன். எப்படியாவது உன் வீட்டு மரங்களை நான் வெட்டுவதை தடுக்க முடிந்தா தடுத்துக்க.

அதாவது, என்னை எந்த வகையிலாவது உன்னால் தடுக்க முடிந்தா நான் அடுத்த கணமே விட்டுவிடுகிறேன். ஆனால் அதை மட்டும் உன்னால் செய்ய முடியாமல் போனா, நாளை மறு தினம்... நல்லா கேட்டுக்கோ நாளை மறு தினம் உன் வீட்டில் ஒரு புல் பூண்டு கூட இருக்காது. செய்து காட்டுவான் இந்த பண முதலை. அதுவும் உன் கண்ணெதிரிலேயே தான் அனைத்தும் நடக்கும். நல்லா பார்த்து சந்தோஷப் படு. முடியாதாம் முடியாது... நீ யார் டி அப்படி சொல்ல? அதுவும் இந்த மிருடவாமணன் கிட்ட!” என்று உறுமியவன்

“எனக்கான விஷயத்தில் நான் தான் முடிவு எடுக்கணும். இப்போ எடுத்திட்டேன்... நடத்திக் காட்டுறேன். அதுவரை உனக்கு ஒரு சாய்ஸ்” என்ற படி வண்டி சாவியை அவள் மீது விட்டெறிந்தவன், “உயிரோட இருக்கிற மனிதர்களையே வாழைக்குலையை வெட்டி சாய்க்கிற மாதிரி வெட்டி சாய்ச்சிட்டு போய்கிட்டே இருக்கிறவன் டி நான். இன்றைக்கு ஆப்ட்ரால் ஒரு மரத்துக்கு உன் கிட்ட செக் வைத்து இருக்கேன் டி.

ச்சே! என்ன டா மிருடா இப்படி ஆகிடுச்சு உன் நிலைமை? எல்லாம் நமக்குன்னு வந்து வாய்ச்ச… அதாவது பக்கத்து வீடு சரி இல்ல டா” அவளிடம் ஆரம்பித்து தன்னிடமே முடித்தவன் பின் அவளைத் திரும்பியும் பார்க்காமல் இவன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட, போகும் அவனையே செய்வது அறியாது முறைத்துக் கொண்டு நின்றாள் அனு.

வீட்டிற்கு வந்து முனீஸ்வரனிடம் விஷயத்தை சொல்ல, “இது என்ன அநியாயம் அனும்மா! உனக்காகப் பேச யாரும் இல்லைன்னு நினைத்திடுச்சா அந்த தம்பி? பின்புறத் தோட்டத்தை ஏதோ பார்க்க வராங்கனு தான் அந்த பிள்ளையை அன்று நான் கூட்டிட்டுப் போனேன். இப்போ என்னனா மரத்தை வெட்டியே தீருவேன்னு அதிகாரம் செய்தா எப்படி? நான் போய் அந்த தம்பி கிட்ட பேசுறேன்…. அது எப்படி நாம் விட்டு கொடுப்போம்” என்றபடி இவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு சொன்னபடியே மிருடன் வீட்டுக்குச் செல்ல,

வாசலிலே அவனுடைய காட்ஸ்கள் அவரை உள்ளே விடாமல் தடுத்தவர்கள், ஆதியிடம் விஷயத்தைச் சொல்ல... அவன் தான் மிருடவாமனின் பி.ஏ என்பதை நிருபிப்பது போல் பேசிலேயே எந்த பிடியும் கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அவரை வெளியே அனுப்பி விட்டான் அவன். அதாவது தங்கள் பாஸ் செய்தே தான் தீருவார் என்ற அதிகாரத்துடன்.

மிகவும் நொந்து போய் வேறு வழி இல்லாமல் அனுவிடம் வந்தவர், “அனும்மா, நாமளே குழந்தையை கையில் வச்சிட்டு இங்கு பிழைக்க வந்திருக்கோம். பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கு எதுக்குமா? அதென்ன ஒரு மரம்… அவ்ளோ தானே? வெட்டி சாய்த்து எடுத்துட்டுப் போகட்டுமே! உயிரோட இருக்கிற மனுஷங்களையே வெட்டி சாய்க்கிறாங்க. விட்டுக் கொடுத்து போடா…” இயலாமையில் சொன்னவரிடம்

“எல்லோரும் இப்படியே தான் சொல்றீங்க அங்கிள். அதென்ன ரத்தமும் சதையும் இருந்தா தான் ஓர் உயிருன்னு நினைக்கறீங்க? நாம் உயிர் வாழ உயிர் மூச்சைக் கொடுக்கிறதோட நம்ம பசி போக்கிறதே இந்த மரங்கள் தான். அப்படி பார்த்தா நமக்கு உயிர் கொடுத்து கரு சுமந்த தாயிடம், நம் பசி ஆற உதவியை அவள் அவயங்களை நம்ம தேவை முடிந்ததும் வெட்டி எறிந்திடுவோமா என்ன? பிறகு ஏன் நமக்கு உயிர் கொடுக்கற மரங்களை மட்டும் அப்படி செய்கிறோம்?” தன் ஆதங்கத்தைக் கொட்டியவள்,

“இதை நான் சும்மா விடுறதா இல்லைங்க அங்கிள். பார்க்கிறேன் நானா அவனா என்று!” என்றவளின் பதிலில் என்ன நடக்கப் போகிறதோ என்ற நிலையில் நின்றார் முனீஸ்வரன்.

முனீஸ்வரனிடம் சொன்னது போல் சும்மா இல்லாமல் அனு, பரணிதரனிடம் இவ்விஷயத்திற்காக உதவி கேட்க, “why not... நிச்சயம் உங்களுக்கு நான் இது சம்மந்தமா உதவி செய்றேன். முதலில் அவர் கிட்ட பேசி பார்ப்போம். அதற்கு அவர் பிடி கொடுக்கலைனா, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்னு சொல்லுவோம்” என்ற படி பரணிதரன் உதவி வந்தவன்

அதன்படி மிருடனை சந்திக்க நேரம் வாங்க... அவனை காண வந்தவர்கள் இவர்கள் இருவரையும் மூன்று மணி நேரம் அமர வைத்தான் தி கிரேட் மிருடவாமணன். ஒருவழியாய் இவர்களை உள்ளே அழைத்தவன், கண்ணில் கூர்மையுடன் ஒரு வித தெனாவட்டில் அவன் அமர்ந்திருக்க.... பார்த்த அனுவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. வந்தவர்களை வா என்றும் வரவேற்காமல் அவன் அமர்ந்திருக்கவும்…

“ஹலோ... ஐ யம் பரணிதரன். இந்த ஏரியா S.P” என்றபடி வந்தவன் கை நீட்டி தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ள… அவனோ, நீ யாரக இருந்தால் எனக்கு என்ன டா என்பது போலவே அமர்ந்திருந்தான்.

உடனே பரணி, “நீங்க ஏதோ இவங்க வீட்டில் இருக்கிற மரங்களை வெட்டப் போறதா சொன்னீங்களாம்... நீங்க பெரிய பிசினெஸ் மேனாகவே இருந்தாலும் மரத்தை வெட்டுவது சட்டப்படி குற்றம்.. சோ அந்த தப்பை நீங்க செய்யாதீங்க” என்று இவன் நேரடியாக விஷயத்துக்கு வர,

“செய்யத் தான் போறேன்... மீறி செய்தா… என்ன செய்வ?” மிருடன்

“அதான் சொன்னனே... சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” இவனும் விடாமல் மிரட்ட

“ஐயோ! பயமா இருக்கே... மேடம் பெரிய ஆளா தான் கூட்டி வந்திருக்காங்க. ஏன் மேடம், இந்த டிபார்ட்மெண்ட்டில் இதை விட பெரிய வீச்சருவா எல்லாம் இருக்கு. போயும் போயும்... இந்த பட்டா கத்தியை தான் உங்க துணைக்கு என்ன மிரட்ட கூட்டிட்டு வந்தீங்க? ஐயோ பாவம்! உண்மையாவே பயந்துட்டேன் மேடம்...” மிருடன் பரணீக்கு பதில் சொல்லாமல் அனுவுக்கு போலியாய்… கேலியாய் பாவ்லா காட்ட... அவள் முகம் சிறுத்து விடவும், அதை திருப்தியுடன் ரசித்தவன்

“ஆமாம், முதலில் நீ யார் எங்க விஷயத்தில் தலையிட?”

“அனுவுக்கு உடன்பிறவாத அண்ணன் நான்...” பரணி நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல

“யப்பா! ரொம்ப பாசக்கார அண்ணன் தான் போல நீ... ஆனா பாரு, உன் பாசமலர் ரீல் எல்லாம் இங்க ஓட்ட முடியாது. ஏன்னா நீ பேசிட்டு இருப்பது தி கிரேட் மிருடவாமணன் கிட்ட” என்றவன்

பின், “உன்னால் முடிந்ததை செய்துக்கோ” என்று பரணிக்கு பதில் தர

அவனோ, “இதெல்லாம் சரி இல்லை சார்... இதனால் உங்களுக்குப் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும் சொல்லிட்டேன்” மிரட்ட

“ஹா... ஹா.. ஹா... பின் விளைவுகள் தானே? அதை பிறகு பார்த்துக்கலாம். நான் யாருன்னு தெரியாம பேசுற உனக்கு சின்ன சாம்பிள் சொல்லவா? நான் நினைத்தா என்னுடைய டீ டைம் ஸ்நாக்ஸ்…. நம்ம Prime Minister கூட சாப்பிடுகிறவன். well... இரண்டு பேரும் வாங்களேன், என்னோட join செய்ய… அதாவது டீ சாப்பிட…” இவனின் மறைமுகமான ஆளுமையில் பரணி, அனு இருவரும் முகம் வெளுத்து தான் போனார்கள்.

பரணி என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க, “well… உன் டைம் முடிஞ்சிடுச்சு… u may go now” என்று பரணியை அனுப்பியவன், “நீ மட்டும் இங்கயே இரு என்று அனுவை நிறுத்தி வைக்க

பரணியோ, அனுவை ஒரு வித இயலாத பார்வை பார்த்துக் கொண்டே வெளியேறினான். “well... மேடம் வெறும் வாய்ச் சொல் வீரத் தமிழச்சி என்று இல்லாமல் என்னை எதிர்த்து களத்திலேயும் இறங்கிட்டீங்க போல! காலையில் உங்கள் வீட்டு முனீஸ்வரன், இப்போது S.P. குட்… நான் வேணும்னா D.G.P க்கு போன் செய்து தரவா? என்னை உடனே உள்ள வைக்க மேடமுக்கு சுலபமா இருக்கும்” கையைத் தூக்கி சோம்பல் முறித்தபடி நக்கலாய் சொன்ன அவனின் பதிலில்...

“கொழுப்பைப் பார்த்தியா?” வாய் விட்டே வெகுண்டாள் அனு.

“தினமும் எக்சர்சைஸ் செய்து உடம்பை சிக்ஸ் பேக்கில் வைத்திருக்கேன். அதனால், நோ கொழுப்பு... சந்தேகமா இருந்தா ஷர்ட்டை கழட்டி காட்ட வா?” என்றபடி இவன் கூலாய் தன் சட்டை பட்டனில் கை வைக்க

“ஏய்... ச்சீ!” இவள் அருவருப்பாய் முகத்தைத் திருப்ப

அதில் வெகுண்டவன்… எழுந்து அவள் முன்னே தன் முழு உயரத்திற்கு வந்து நின்றவன், “என்ன டி முகம் திருப்புற? இதில ச்சீ வேறையா? உன்கிட்ட என்ன என்னை இப்படி தொட்டுப் பாருன்னா சொன்னேன்?”

இதை அவன் வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல், ஒரு கையால் தன் சட்டைப் பட்டன்களை விலக்கியவன் மறுகையால் அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் தன் கழுத்து, மார்பு என்று அவள் விரல்களை படர விட...

அதில், உடல் கூசி நடுங்கியவள்… தன் பலம் கொண்ட மட்டும் அவன் கையை உதறி விட்டு, “ச்சீ! என்ன இது அநாகரீகம்?” என்ற வார்த்தையுடன் இவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவன் கன்னத்தில் அறைந்திருக்க…

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றே விட்டான் மிருடன். அடுத்த நொடி ருத்திரமூர்த்தியாய் மாறியவன், ஒன்றுக்கு இரண்டாய் அவளை அறைந்து, “ஏய்... என் மேலேயே கையை வச்சிட்ட இல்ல நீ? இதுக்கு நீ அனுபவிப்ப... ஏண்டா இவனை தொட்டோம்னு நீ தினந்தினம் அழற மாதிரி செய்வேன் டி நான். அப்போ இந்த மிருடவாமணன் யாருன்னு உனக்கு தெரியும் டி!” என்று கர்ஜித்தவன் அவளைத் தூசு என தள்ளி விட்டு இவன் தன் இரண்டு கைகளையும் கோர்த்து தலைக்கு கீழே முட்டுக் கொடுத்தபடி கண்களை மூடி தன் இருக்கையில் சென்று அமர்ந்து விட...

ஏற்கனவே உடல் நடுக்கத்தில் இருந்தவளுக்கு இப்போது மிருடன் சொன்ன வார்த்தையும், அவன் அமர்ந்திருக்கும் தோரணையும், கண்களை மூடி அவன் அமர்ந்திருந்தாலும்... முகத்தில் தீ ஜுவாலை என ஒளிரும் கோபத்தையும் பார்த்தவளுக்கு இன்னும் உடல் நடுங்கியது.

‘ச்ச... நாம இங்கு வந்திருக்கவே கூடாது. என்னவோ மரத்தை வெட்டிக்கோடானு விட்டிருக்கணும்... இப்படி இவன் அநாகரீகமா நடந்து நாமும் அசிங்கப்பட்டிருக்க வேண்டாம்’ ஆத்திரத்துடன் தனக்குள் புலம்பியவள் ஒரு வித வேகத்துடன் அங்கிருந்து விலகப் பார்க்க… கண்களைத் திறவாமலே சொடக்கிட்டு அனுவை நிறுத்தியவன், “well... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் இன்றைய செயலுக்கு நீ பதில் தர தயாரா இரு!” இவன் எச்சரிக்க…

இதுவரை தன் செயலால் ஒரு வித ஆத்திரத்தில் அப்படி சொல்கிறான் என்று நினைத்த அனு... தற்போது அவனுடைய தீவிரத்தைப் பார்த்தவள், ஒரு நிமிடம் கூட அங்கிருக்க பிடிக்காமல் இவள் வெளியேற,

“சாரி அனு... என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை...” என்று வெளியே இருந்த பரணி மன்னிப்பு கேட்க, அப்போது தான் அவளுக்குத் தான் இங்கு வந்த நோக்கம் புரிய வரவும்...

“its ok... வாங்க போகலாம்” என்றபடி அவனுடனே வெளியேறினாள் அனு. இவள் பரணியுடன் வெளியேற, போகும் அவளையே தன் அலுவலக அறையின் ஜன்னல் வழியாக குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் மிருடவாமணன். இனி அனு விஷயத்தில் இவனுடைய செயல்கள் எப்படி இருக்கப் போகிறதோ?

தான் உதவி கேட்ட ஒருவரும் உதவி செய்யாமல் போய் விட... யார் வந்தாலும் இனி வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என்று இவள் இறுதியாக முடிவு செய்திருக்க... மிருடன் சொன்ன நாளும் வந்தது... அவனைத் தவிர அவன் அனுப்பிய ஆட்கள் வேலை செய்ய வர... அனு தான் நினைத்தபடி அவர்களை உள்ளே அனுமதிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. ஏன் என்றால் வந்தது மரம் வெட்டும் கூலியாட்கள் மட்டும் இல்லாமல் ஊர் தலைவரும் வந்திருக்க…

அவரோ “என்னம்மா பெருசா ரூல்ஸ் பேசுறியாம்... உன் அப்பா முன்னாள் M.Pஆக இருக்கலாம். அதுவும் இப்போ அவர் உயிரோட கூட இல்லை... உன் அப்பா அரசாங்கத்தை ஏமாற்றி கொள்ளை அடித்து சொத்து சேர்த்தது போதாதா? ஆனாலும் உன் தாத்தாவும் லேசுப் பட்டவர் இல்லை தெரியுமா? இது உன் தாத்தா வீட்டு சொத்து தான். நாங்களும் அதை ஒத்துக்கிறோம்.

ஆனா உன் தாத்தா அப்பவே இந்த வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கோவில் இடத்தை வளைத்துப் போட்டுட்டார். அந்த இடத்தையும் சேர்த்து தான் நீங்க இவ்வளவு நாள் ஆண்டு வந்தீங்க. இப்போ அந்த இடத்து மரத்தைத் தான் மிருடன் தம்பி கேட்குது... நீ கொடுத்துட்டுப் போக வேண்டியது தானே? இப்படி ஊர் சொத்துக்கு சொந்தம் கொண்டாட்டிட்டு திரியாத ம்மா. நாங்க, நீ வாழ வழி விட்டோம் இல்ல? அதே நாங்க தான் இப்போ அவருக்கு அங்கயிருக்குற மரங்களை வெட்ட சரினு சொல்லி இருக்கோம். ஊர் உத்தரவை மீறாம பேசாமா போ...” வந்தவர் இவளை துச்சமென நினைத்துப் பேசியவர்

“அந்த தம்பி நான் எல்லாம் பார்த்துகிறேன்னு தான் சொல்லியது... நாங்க தான் இந்த ஊருக்கு எவ்வளவோ நல்லது செய்திருக்கீங்க நீங்க... அதனால் நான் பேசுறேன்னு சொல்லி வந்தேன்... பெரிய இடத்து மனிதர்களிடம் இனி எப்படி நடக்கனுமோ அப்படி நடந்துக்க” மேலும் இலவசமாய் அவர் அறிவுரை வழங்க, கூனிக்குறுகிப் போனாள் அனு.

‘நல்லா வாழந்தவர்கள் மட்டும் தாழவே கூடாது! அப்படி தாழ்ந்தவர்கள் சொந்த ஊருக்கு மட்டும் வரவே கூடாது. அப்பா இருக்கும் போது இங்கு வந்தா அவருடைய கம்பீரத்துக்கும், பதவிக்கும் பயந்து இந்த ஊர் தலைகள் எல்லாம் எப்படி மதிப்பு மரியாதை தருவார்கள்? ஆனா இப்போ?’ ஏனோ கடந்த காலத்தை நினைக்காமல் அனுவால் இருக்க முடியவில்லை.

மரத்தை வெட்ட வந்த ஆட்களிலிருந்து... ஊர் தலைவர் பேசியது என்று... கடைசியில் அனுவின் முகபாவம் வரை அனைத்தையும் தன் வீட்டு ஜன்னலின் வழியாக மிருடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். பார்த்த அவன் மனதில் இன்னும் இன்னும் ஏனோ அனு மேல் வன்மம் வளரத் தான் செய்தது.

அனு கண்ணெதிரிலேயே மரங்கள் வெட்டப் பட... இனி மிருடன் பக்கம் எதற்கும் திரும்பக் கூடாது என்ற முடிவை எடுத்தாள் அனு. அதற்கு தகுந்தாற்போல் இவளிடம் கெக்கலி கொட்டி.. சிரித்து சீண்டாமல் ஒதுங்கித் தான் போனான் மிருடன்.

ஆடு பகை.. ஆனால் குட்டி உறவு! என்பது போல் மான்வியின் தாயும், ஜீவாவின் தந்தையும் இப்படி முட்டிக் கொண்டு நிற்க... ஆனால் மான்வியும், ஜீவாவும் முன்பை விட அதிக ஒட்டுதலோடு சுற்றினார்கள். வழமை போல பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதை அனு, மிருடன் இருவரும் செய்து தான் வந்தார்கள். இப்படியே நாட்கள் யாருக்கும் சிரமம் இல்லாமல் செல்ல, ஒரு நாள் வெளியே சென்றிருந்த அனு கடத்தப் பட்டாள். ஆமாம்! யாரோ ஒருவரால் கடத்தத் தான் பட்டாள் அனுதிஷிதா!

காலையில் கடத்தப் பட்டவள் மயக்க மருந்தின் வீரியத்தில்... கண் விழித்த போது மதியம் ஆகியிருக்க... அதிலும் கை கால்கள் ஒரு நாற்காலியில் கட்டப் பட்டு... வாயில் பிளாஸ்திரி ஒட்டிய நிலையில் இருந்தாள் அவள். சிரமப்பட்டு கண் விழித்தவளுக்கு... அந்த இருட்டறை பரிச்சயம் இல்லாமல் போக, பின் கூர்ந்து நோக்கியவளுக்கு... ஏனோ அந்த அறை நாளுக்கு எட்டு என்று பார்க்க, அவளையும் அவள் அமர்ந்திருந்த சேரையும் தவிர வெறுமையாகத் தான் இருந்தது. ஒரு சிறு ஜன்னல் கூட அந்த அறையில் இல்லை. காற்று வசதி இல்லாததால் இவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட... அவள் உடல் வேர்வையில் தொப்பலாக நனைய... மறுபடியும் மயக்கத்துக்குச் சென்றாள் அனு.

திரும்ப அவள் கண் விழிக்கும் போது... இப்போது ஏனோ அவள் கை கால்கள் கட்டப்படாமல் முன்பிருந்த அதே அறை தரையில் படுத்திருந்தாள் அவள். இன்று அவள் பக்கத்தில் குடிக்க தண்ணீர் ஒரு பாட்டிலில் இருக்க, ஏதோ நெடுநேரம் தூங்கி காலையில் கண் விழிப்பது போல் தோன்றிய அவளுக்குள் உடனே அந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று தோன்ற...

எதைப் பற்றியும் யோசிக்காமல் பாட்டிலைத் திறந்து முழுவதுமாக தண்ணீரை பருகியவள் பின் அவளை ஆசுவாசப் படுத்திக் கொள்ள... கால் நீட்டி அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு... முன்பை விட இப்போது உடலில் கொஞ்சம் தெம்பும் தைரியமும் வந்திருப்பதாக இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. பின் அந்த அறையை சுற்றி பார்வையிட்டவளுக்கு… அவளையும் அவள் குடித்த தண்ணீர் பாட்டிலையும் தவிர வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை, இப்போது தான் அவளுக்குத் தெரிந்தது தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்று.

‘கடத்தலா? என்னையவா? யாரு?’ உடனே இவள் ஒரு பரபரப்புடன் தனக்கு ஏதாவது அநீதி நடந்திருக்கிறதா என்று உடலில் காயங்களை சோதித்தவள்... அப்படி எதுவும் இல்லை என்றதும், ஆசுவாச மூச்சுடன் தற்போது இவள் தான் அணிந்திருந்த நகைகளைத் தேட... அதெல்லாம் அவள் அணிந்திருந்த படியே இருக்கவும்... ஒரு பெரு மூச்சுடன் இவள் தான் கட்டியிருந்த கைக் கடிகாரத்தைப் பார்க்க... அதில் நாள் காட்டி, தேதி பதினைத்து என்றும் நேரம் காலை பதினோரு மணி என்று காட்டியது.

“Oh my god! இன்று பதினைந்து... ஆனால், நேற்று நான் கடத்தப்பட்டேன். அப்போ ஒரு நாள் முழுக்க மயக்கத்தில் இங்கே தான் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனா? ஐயோ! என் குழந்தை மானு... என்ன காணாமல் தேடுவாளே...” என்று வாய் விட்டே புலம்பியவள் அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று இவள் தேட...

ஒரு மூடிய கதவைத் தவிர அங்கு வேறு ஒரு வழியும் இல்லாமல் இருக்க... ஓடிச் சென்று இவள் அதனைத் திறக்க, அதுவோ திறந்து கொண்டது. ஆனால் அதற்கு பிறகு இருந்த இரும்பு கேட்டோ பூட்டால் பூட்டி இருந்தது. அந்த இரும்பு கேட்டின் இடை இடையே இருந்த இடைவெளியில் இவள் கைகளை வெளியே விட்டுத் திறக்கப் பார்க்க.. அதுவோ, நான் சாவி கொண்டு முயற்சித்தால் தான் திறப்பேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. அறைக்கு வெளியே நீண்ட வராந்தா இருக்க… அதைப் பார்த்தவள்

“டேய்... யாரு டா நீங்க? உங்களுக்கு என்ன டா வேணும்? எதுக்கு டா என்னைக் கடத்துனீங்க? வந்து சொல்லித் தொலைங்க டா...” இவள் பல முறை கத்த, ம்ஹும்... எந்த வித பலனும் இல்லை.

உடனே இவள் தான் கடத்தப் பட்டதை வைத்து யோசிக்க ஆரம்பித்தாள். “ஒரு பொண்ணு... ஆள் அரவம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தி அட்ரஸ் கேட்டது... அதற்கு பதில் சொல்லிட்டு இருக்கும் போது, அது பக்கத்தில் இருந்த இன்னோர் பொண்ணு, மயக்க மருந்து கர்சீப்பை என் மூக்கில் வைத்தா. அவ்வளவு தான்…. நான் மயங்கும் போது என்னைச் சுற்றி நாலு ஆண்கள் வந்தாங்க. ஆனா அதில் யார் முகமே எனக்குத் தெரிந்த முகம் இல்லையே! அப்போ இந்த நாய்ங்க யாரு?” வாய் விட்டே கேட்டுக் கொண்டவள்

ஒரு வித கோபத்துடன், “டேய் நாய்களா... யாரு டா நீங்க எல்லாம்? ஜோதி ஆளுங்களா? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது டா. நான் எக்ஸ் M.P குணநாதனோட ஒரே பொண்ணு டா... அதுவும் அவரோட செல்ல மகள் டா நான். எனக்கு ஏதாவது ஆச்சு...”

“என்ன டி செய்திடுவான் உன் செத்துப் போன அப்பன்? அவன், பேரில் மட்டும் குணம் வச்சிருக்கற குணம் கெட்ட எக்ஸ் M.P மகள்னு நீன்னு தெரிந்து தான் டி கடத்தினேன். ஆமாம்… நான் தான் டி உன்னைக் கடத்தினேன்” என்ற படி அந்த அறைக்குள் நுழைந்தான் மிருடன். ஆமாம், சாட்சாத் தி கிரேட் மிருடவாமணனே தான்!...
Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN