முன்னுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிக்கிமுக்கி எனும் எனது புதிய தொடருக்கான முன்னுரை இது. கதை பேன்டஸி கிடையாது. கதையின் போக்கை காட்ட மட்டும்தான் கீழே சில விசயங்களை சொல்லி இருக்கேன்.

பிரபஞ்சத்தில் புதிதாக இரு உயிர்கள் பிறந்தன. ஏற்கனவே வரிசையில் நின்றபடி பூமியில் பிறக்க இருக்கும் மற்ற உயிரினங்களோடு இந்த இரு உயிர்களும் சேர்த்து நிறுத்தப்பட்டன.

சண்டைகளின் சக்கரவர்த்தி வரிசையில் நின்றிருந்த சில உயிர்களை தனியே பிரித்தார்‌. அவற்றை இரண்டு இரண்டாக பிரித்து அவைகளின் மீது தன் மந்திரத்தை உச்சரித்தார்.

"இனி நீங்களும் உங்களோடு இணைந்திருக்கும் மற்றொரு உயிரும்தான் ஜென்ம எதிரிகள்.. நீங்கள் ஒரு பிறவியில் பாம்பும் கீரியாகவும், ஒரு பிறவியில் எலியும் பூனையுமாகவும் என இப்படி மாறி மாறி எதிரிகளாக மட்டுமே இருப்பீர்கள்.." என சொல்லி அவர்களை அங்கிருந்த மொத்த கூட்டத்தில் கொண்டு சென்று சேர்த்தது. சண்டை சக்கரவர்த்தியின் மந்திரத்திற்கு உட்பட்ட உயிர்களுக்கு மட்டும் தனியொரு அடையாளமாக அவர்களின் உயிர் ஓரத்தில் சிறு சிகப்பு நிற ஒளி தெரிந்தது.

சண்டை சக்கரவர்த்தி உறங்க சென்று சில மணி நேரங்களுக்கு பிறகு அங்கே வந்து சேர்ந்தார் காதல் கடவுள்.

அங்கிருந்த மொத்த கூட்டத்தையும் பார்த்தார். சிலரை மட்டும் தனியே பிரித்தார். "நீங்கள் ஒற்றை ஜீவராசியாய் வாழும் விதி படைத்தவர்களாகிறீர்கள்.." என்றார்.

மீதி இருக்கும் பெரும் உயிர் கூட்டத்தை பார்த்தவர் கண்களை மூடினார். கைகளை அசைத்தார். உயிர்கள் அனைத்தும் இரண்டு இரண்டாக ஜோடி சேர்ந்தன.

"ஜோடியாக உள்ள உயிர்களை ஆன்ம ஜோடியாக அறிவிக்கிறேன். இனி ஜென்ம ஜென்மத்திற்கும் நீங்கள் சேர்ந்தே வாழ்வீர்கள். ஒருவரின் காயத்தில் மற்றொருவர் வலியை உணர்வீர்.." என்றார்.
பின்னர் அனைத்து உயிர்களும் அடுத்தடுத்த விதிகளை சுமக்க சென்றன. அனைத்து விதிகளும் எழுதப்பட்ட பிறகு பூமியில் பிறப்பெடுக்க புறப்பட்டன.

சற்று நேரம் கழித்து காதல் கடவுளரின் பணியாள் அவரிடம் ஓடி வந்தான். "காதல் கடவுளே சிறு பிழை நடந்து விட்டது.." என்றான்.

"என்ன.?" என்றார் அவர்.

"நீங்கள் உயிர்களை ஜோடி பிரிக்கும் முன்பே சண்டை சக்ரவர்த்தி வந்து இவர்களில் யாரெல்லாம் யாருக்கு ஜென்ம விரோதி என முடிவு செய்து விட்டார். அதில் பிழையென அவர் ஜென்ம விரோதிகளா தேர்ந்தெடுத்த ஒரு ஜோடியையே நீங்களும் ஆன்ம காதலர்களா தேர்ந்தெடுத்து விட்டீர்கள்.." என்றான்.

உயிர்கள் அனைத்தும் அங்கிருந்து சென்று விட்டதை உணர்ந்தார் காதல் கடவுள்.

"தவறு நடந்து விட்டதே.. இனி என்ன செய்வது.? இந்த சண்டை சக்ரவர்த்தி எனக்கு முன்பே ஏன் ஜென்ம விரோதிகளை தேர்ந்தெடுத்தார்.. இவரால்தான் அனைத்து பிரச்சனையும்.." என்றார் அவர். பிறகு சற்று நேரம் யோசித்தார்.

"ஜென்ம விரோதிகளே ஆன்ம காதலர்களாவது புதிய விசயம் ஒன்றுமில்லை.. இரு ஜீவன்களும் பூமியில் பல பல பிறப்பெடுக்கட்டும். அவர்களின் வாழ்க்கையில் விரோதம் ஜெயிக்க வேண்டுமா அல்லது காதல் ஜெயிக்க வேண்டுமா என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.. சண்டை சக்ரவர்த்தியின் விரோதமா இல்லை இந்த காதல் கடவுளின் அன்பா என்பதை விதியே முடிவு செய்யட்டும்.." என்றார்.

பிறவி 1;

அந்த அழகான முயல் குட்டி காடுகளில் தாவி ஓடிக் கொண்டிருந்தது. அதை பாய்ந்து பிடித்து வேட்டையாட முயன்றது ஒரு சிறு சிங்க குட்டி. முயல் குட்டி ஓடியது. சிங்க குட்டி துரத்தியது. மலை சரிவில் ஓடிய முயலின் கால் தடுமாறியதில் அதை துரத்தி வந்த சிங்க குட்டியும் சேர்ந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இரண்டும் பாறையில் மோதி இறந்து போயின.

பிறவி 2;

அழகாய் முளைத்து இருந்த ஜோடியில்லா முள்செடி அது. அதன் முட்கள் மிகவும் கூர்மையானது. அதனாலேயே அதன் அருகே எந்த பிராணியும் வராமல் இருந்தன. ஒரு புலி கூட்டம் துரத்தி வந்ததில் ஓடி வந்த ஜோடியில்லா மான் ஒன்று இந்த முட்செடியின் மீது விழுந்தது. முட்கள் அனைத்தும் உடைந்து போயின. முட்செடியும் சற்று நேரத்தில் வேரோடு காய்ந்து போய் உயிரை விட்டது. முட் செடியின் மீது இருந்து எழுந்துக் கொண்ட மான் தன் உடல் துளைத்த முள்ளால் காயம் பட்டு போனது. அடுத்து பெய்த மழையில் நனைந்த காரணத்தால் காயம் சீழ் பிடித்தது. உடல் நல குறைவு ஏற்பட்டு அந்த மானும் உயிரிழந்து போனது‌.

பிறவி 3;

ஏரியில் நீர் அருந்த வந்த ஜோடியில்லா காட்டெருமை ஒன்றின் காலை கவ்வியது ஜோடியில்லா முதலை ஒன்று. காட்டெருமை தன் கொம்பால் அந்த முதலையை தாக்கியது. முதலையின் பற்கள் காட்டெருமையின் காலை துண்டு செய்து அதன் உடலையும் துண்டாக்க முயன்றது.
காட்டெருமையின் கொம்பு குத்தியதில் முதலைக்கும் பெருங்காயம் உண்டானது. நான்கு மணி நேர போராட்டம் முடிந்தபோது இரண்டுமே அந்த ஏரி கரையில் இறந்து போயிருந்தன.

எல்லா பிறவியையும் எழுத எனக்கும் ஆசைதான். ஆனா நாம சட்டுன்னு எழுபத்தி ஒன்பதாவது பிறவியான மனித பிறவிக்கே போயிடலாம் நட்புக்களே..

கதை எப்படி எழுத போறேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். ஆமாப்பா. நாயகனும் நாயகியும் ஜென்ம விரோதிகள். ஆனா அவங்க ஆன்ம ஜோடிகளும் கூட. அவங்களோட வாழ்க்கையில் இந்த விரோதம் ஜெயிக்குமா அல்லது காதல் ஜெயிக்குமா என்பதை படிச்சி தெரிஞ்சிக்கலாம். கதை எப்ப வரும்ன்னு எனக்குமே தெரியாது. ஏனா காதலின் இழையில் கதை முடிஞ்ச பிறகுதான் இதை ஆரம்பிப்பேன். தளத்தை சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிகங்க. கதையின் எபிசோட் அப்டேட் ஆன உடனே உங்களுக்கு நோட்டிபிகேசன் வரும்.

ஏற்கனவே ஒரு ஆன்டி ஹீரோ கதைக்கே நிறைய வாங்கி கட்டினேன். அதனால நான் இதுல முன்னாடியே சொல்லிடுறேன். இதுல ஹீரோ ஆன்டி ஹீரோ.. ஹீரோயின் ஆன்டி ஹீரோயின்.. ஆமா இரண்டு பேருமே சண்டைன்னு வரும்போது கெட்டவங்கதான்.

அப்புறம் ஒரு விசயம்.. இது ஒரு டீன் பிக்சன்ப்பா..😉

முதல் எபிசோட்... விரைவில்..✌️
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN