1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா தன் முன் இருந்த தனது அண்ணனை பயத்தோடு பார்த்தாள்.

"நீயும் அண்ணியும் பிரிஞ்சதுக்கு நானும் மாமாவும் ஏன் பிரியணும் அண்ணா.?" கண்ணீரை அடக்கியபடி கேட்டாள்.

"அதெல்லாம் அப்படிதான். உனக்கு சொன்னா புரியாது. அவங்க வீட்டோட இனி நமக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்க கூடாது. நீ முகிலை விட்டு பிரிஞ்சிதான் ஆகணும் யதி.." என்று சொன்னான் அவளது அண்ணன்‌ ரூபன். அவள் முடியாதென தலையசைப்பதை கண்டும் காணாதவன் போல அவளது அறையை விட்டு வெளியே நடந்தான்.

யதிரா அண்ணன் வெளியே சென்றதும் அவசரமாக தனது போனை எடுத்தாள். முகிலுக்கு அழைத்தாள். மறுமுனையில் 'ஒருநொடி ஒருகணம் பிரிய கூடாது..' என்று ரிங் ஒலித்தது.
"சீக்கிரம் ஃபோனை எடுங்க மாமா.." என்று கண்ணீரோடு கெஞ்சினாள்.

அந்த ரிங் கட்டாகும் நேரத்தில் ஃபோனின் மறுமுனையில் முகில் "ஹலோ.." என்றான்.

"மாமா எங்க இருக்கிங்க நீங்க.? 'உன் அண்ணனுக்கு ஆறுதல் சொல்லிட்டு இரு'ன்னு சொல்லி இங்கே கொண்டு வந்து விட்டு போனிங்க.. இரண்டு நாளைக்கு மேல ஆச்சி. ஆனா இன்னும் வந்து கூட்டி போகல. உடனே வந்து என்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போங்க.. அண்ணியும் அண்ணனும் பிரிஞ்சதுக்கு என் அண்ணன் நீங்களும் நானும் பிரியணும்ன்னு சொல்றான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சீக்கிரம் இங்கே வாங்க.." என்றாள்.

"அவங்க என்ன சொல்றாங்களோ அதையே செய் யதி.." என்றான் முகில்.

"நீங்களும் இப்படி சொல்லாதிங்க மாமா.. உடனே வந்து என்னை கூட்டிப்போங்க. எதுவா இருந்தாலும் நாம நம்ம வீட்டுல பேசிக்கலாம்.." என்றாள்.

"நான் இனி எப்பவும் அங்கே வர மாட்டேன் யதி. நீயும் இங்கே வர வேண்டிய அவசியம் கிடையாது. உன் அண்ணன் என்ன சொல்றானோ அதையே செய்.." என்றவன் போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

அவன் சொன்னதை நம்ப இயலாதவளாக மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்தாள். அவன் அழைப்பை எடுக்கவே இல்லை. யதி ஓயாமல் ஃபோன் செய்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

யதியின் அண்ணன் ரூபனும் முகிலின் அக்கா சௌந்தர்யாவும் கல்லூரி படிக்கும் போது காதலித்தார்கள். கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்றதும் இரு வீட்டிலும் சம்மதம் வாங்கி பெரிய மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து ஆசி வாங்கி திருமணம் செய்துக் கொண்டனர்.

அதற்கடுத்த வருடத்தில் சௌந்தர்யா வீட்டிலிருந்து முகிலுக்கு யதியை பெண் கேட்டு வந்தார்கள். கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருந்தாள் யதிரா அப்போதுதான். மகளை இன்னும் சில வருடங்கள் படிக்க வைக்க போவதாக சொன்னார் அப்பா. ஆனால் சௌந்தர்யாவும் ரூபனும் தினம் அரைமணி நேரம் அருகில் அமர்ந்து கெஞ்சி கொஞ்சி பேசி அப்பாவின் மனதை மாற்றினர்.

"கல்யாணம் பண்ணி வைங்க. அவளை நாங்க படிக்க வைக்கிறோம்.." என்றாள் சௌந்தர்யா.
அப்பாவும் யோசித்துவிட்டு சரியென தலையசைத்தார். நாள் நட்சத்திரம் பார்த்து யதிக்கும் முகிலுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

ஒரு வருடம் எல்லாமே நல்லபடியாகதான் சென்றது. ஆனால் திடீரென ஒரு மாதத்திற்கு முன்னால் ரூபனும் சௌந்தர்யாவும் மனமொத்து விவாகரத்து வாங்கினர். அதன் காரணம் ஏதும் யதிராவுக்கு தெரியாது.

அவர்கள் பிரிந்ததையே யதிராவால் தாங்கி கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் இப்போது யதிராவுக்கும் முகிலுக்கும் விவாகரத்து வாங்க முடிவு செய்து விட்டனர்.
***

இரு ஊரும் இரு வீட்டு உறவுகளும் அந்த ஊர் கோவிலின் வெளி மண்டபத்தில் கூடியிருந்தது.
முகிலுக்கும் யதிராவுக்கும் இடையில் நடந்த திருமணம் மிக எளிமையான எதிலும் பதிவு செய்யாத திருமணம் என்பதால் அவர்களது விவாகரத்தையும் மிக எளிமையாக ஊர் பெரியவர்கள் முன்னால் பெற்று விட நினைத்து இரு வீட்டாரும் அங்கு கூடியிருந்தனர்.

யதிரா அழுது வீங்கிய கண்களோடு நின்றிருந்தாள். இன்னமும் அழுதுக் கொண்டேதான் இருந்தாள்.

முகிலை நோக்கி நடக்க இருந்தவளை கை பிடித்து நிறுத்தி வைத்திருந்தாள் அவளது அம்மா.
"தாலியை வாங்கிக்க உனக்கு சம்மதமா.?" முகிலை பார்த்து கேட்டார் ஊர் பெரியவர் ஒருவர்.
தரை பார்த்து நின்றிருந்தான் அவன். தன்னெதிரில் நின்றபடி விம்மி அழுதுக் கொண்டிருந்த யதிராவை நொடி நேரம் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்.

"சம்மதம்.." என்றான் தரையை பார்த்தபடியே.

"இப்படி சொல்லாதிங்க மாமா.. நீங்க என்னை நேசிக்கறதா சொன்னிங்களே. என்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொன்னிங்களே.. நீங்க இல்லன்னா இனி நான் எப்படி இருப்பேன்.?" என்றவளுக்கு கண்ணீர் ஆறாக பெருகியது.

அவன் தன் முகத்தை பார்க்க மாட்டானா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவளுக்கு மறுமொழியும் சொல்லவில்லை.

"மாமா என்னை கொஞ்சம் பாருங்களேன்.." என்று கெஞ்சினாள் யதிரா. அவளருகே நின்றிருந்த ரூபன் அவளது கன்னத்தில் ஒரு அறையை தந்தான்.

"பொம்பள புள்ளை மாதிரி நடந்துக்க.. ஊர் பார்த்திருக்க இப்படி ஒருத்தன் முன்னாடி கெஞ்ச உனக்கு வெட்கமா இல்ல.?" பற்களை கடித்தபடி கேட்டான் அவன்.

"என் மாமாகிட்ட நான் கெஞ்சுறேன்.. ஊர் பார்த்திருக்க என் கழுத்துல தாலி கட்டியவர்கிட்ட அதே ஊர் பார்த்திருக்க நான் கெஞ்சினா என்ன தப்பு.?" என கேட்டவள் முகிலை ஏக்கமாக பார்த்தாள். ஒரு வார்த்தை வாய் திறந்து பேச மாட்டானா என்று தவமாய் இருந்தாள். அவன் அசையாத கல் சிலையாக நின்றிருந்தான்.

"அத்தை நீங்க ஏன் பேசவே மாட்டேங்கிறிங்க.? உங்களுக்கு என்னை பிடிக்கவே இல்லையா.?" என விம்மியபடியே கேட்டாள் யதிரா.

முகிலின் அம்மா வானம் பார்த்தாள். பூமி பார்த்தாள். ஆனால் யதிராவை மட்டும் பார்க்கவே இல்லை.

"அண்ணி நீங்களாவது ஏதாவது சொல்லுங்க அண்ணி.." சௌந்தர்யாவை பார்த்து அழுகையோடு கேட்டாள் யதிரா. சௌந்தர்யா முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"யார் உனக்கு அண்ணி.?" என கேட்டு ரூபன் யதிராவின் காதோரம் ஒரு அறையை விட்டான்.

"சரிதான் நிறுத்துப்பா.. ஊர் மனுசங்க இத்தனை பேர் இருக்கோம். நீ எங்க யாரையும் மதிக்காம அந்த பொண்ணை சும்மா அறைஞ்சிக்கிட்டே இருக்க. அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை.? விருப்பம் இல்லாம அந்த பொண்ணை அவ புருசன்கிட்ட இருந்து பிரிக்கிறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா.? ஆனா அத்தனையையும் தாண்டி உன் பேச்சை கேட்டு இந்த பொண்ணையும் அவ புருசனையும் பிரிச்சி விட வந்திருக்கோம். உன் பேச்சை நாங்க எப்படி கேட்டோமோ அதே மாதிரி எங்க பேச்சை கேட்டு நீ கொஞ்சம் சும்மா இருப்பா.." என்றார் ஊர் பெரியவர் ஒருவர்.

"இந்த பாரும்மா யதிரா இது நீங்க நினைக்கிற மாதிரி சின்ன விசயம் கிடையாது. உனக்கும் அவனுக்கும் நடுவுல பிரிச்சி விடலன்னா அப்புறம் நாளை வரும் நாளெல்லாம் உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கும். உனக்கு இன்னும் வயசும் வாலிபமும் இருக்கு. இப்பவே பிரிஞ்சி போயிட்டாதான் உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது.." என்றார் அவரே யதிராவிடம்.

"முடியாது. நான் தாலியை தர மாட்டேன்.. எனக்கு என் மாமாதான் வேணும். நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்.." முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அவள்.

"இந்த புள்ளை போக்குல விட்டா இப்படிதான் கண்ணை கசக்கிட்டு இருக்கும்.. நீங்க சீக்கிரம் இதை முடிச்சி விடுங்க.." என்றான் ரூபன்.

"அந்த தாலியை கழட்டி உன் புருசன்கிட்ட கொடுத்துட்டு திரும்பி பார்க்காம இங்கிருந்து போம்மா.. மீதியை அப்புறம் பேசிக்கலாம்.." என்றார் அரை போதை மனிதர் ஒருவர்.

"நான் கொடுக்க மாட்டேன்.." என கதறியவளின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட முயற்சித்தாள் அம்மா. தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை இறுக்க பிடித்தாள் யதிரா. முடியாதென தலையசைத்தாள்.

"வேண்டாம்மா.. ப்ளீஸ்ம்மா.. உன் காலுல கூட விழறேன். என் தாலியை விட்டுடும்மா.." என்று கதறலோடு கெஞ்சியவளின் கையை விலக்கி தாலியை கழட்டினான் ரூபன்.

"ஐயோ அண்ணா.. இப்படி பண்ணாத.. என் உயிரையே பறிக்கிறியே.." என்று தலையில் அடித்தபடி அழுதவள் அழுதபடியே இருந்த நேரத்தில் எதிரில் இருந்த முகிலிடம் சென்று அவனது கையை பற்றி அவனது கையில் தாலியை தந்தான் ரூபன்.

"வேண்டாம்.. என்னை விட்டுட்டுங்களேன். நான் என் மாமாவோடே இருந்துக்கறேன்.." என்று கதறி அழுதவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு நடந்தான் ரூபன்.

"மாமா.. மாமா.." என்று முகிலை பார்த்து அழுதுக் கொண்டிருந்தவளின் முகத்தை பற்றி மறுபக்கம் திருப்பினான் ரூபன். "தாலி வாங்கிட்ட பிறகு நீ அவனை திரும்பி பார்க்க கூடாது.. நேரா பார்த்து நட.." என்று திட்டினான். ஆனால் அவள் முகிலையே பார்த்தபடிதான் நடந்தாள்.

ஒரு கணம் ஒரு நொடி தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டானா அவன் என்று காத்திருந்தாள். கண் மறையும் வரையிலுமே அவன் தலை நிமிரவில்லை.

வீட்டின் முன் கார் நின்றதும் யதிராவை இழுத்துக் கொண்டு வீட்டு வாசலுக்கு நடந்தான் ரூபன். அழுதுக் கொண்டிருந்தவளின் தலையில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினான். அம்மா அவசரமாக உள்ளே சென்று துண்டு ஒன்றை எடுத்து வந்து மகளின் தலையில் வைத்து துவட்டினாள். கண்ணீர் திரண்டு நிற்க அவளை உள்ளே அழைத்து சென்றாள்.

இரவு சூழ்ந்த வேளையில் முகில் தன் நண்பன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான்.
இறுக்கி பிடித்திருந்த வலது கையில் யதிரா கழுத்தில் இருந்த தாலி இருந்தது. "மாமா.. மாமா.." என்று கதறிய யதிராவின் குரல் இன்னமும் காதில் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது.

"ஏன்டா இப்படி செஞ்ச.? உன் அக்காவும் மாமாவும் பிரிஞ்சா நீங்களும் ஏன்டா பிரியணும்.?" கோபமாக கேட்டான் அவனது நண்பன்.

"வேற என்ன பண்ண சொல்ற.? நான் அவளை விட்டு பிரியாம இருந்தா என் அக்காவும் என் அம்மாவும் அவளை தினம் திட்டி திட்டியே கொன்னுடுவாங்க. அவங்க குணம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும். யதிராவை இவங்க இங்கே நிம்மதியா வாழ விட்டிருக்கவே மாட்டாங்க.." என்றவனுக்கு நிரம்பிய கண்ணீர் கடைக்கண்ணில் வழிந்தது.

"தனிக்குடித்தனம் போயிருக்கலாம் இல்ல.?" என கேட்டவனிடம் தலையசைத்து மறுத்தான் முகில்.
"எனக்குன்னு எந்த வேலையும் இல்லாத இந்த நேரத்துல அவளை தனிக்குடித்தனம் கூட்டிப்போய் கூலி வேலை செஞ்சி கூட அவளை காப்பாத்த நான் தயார்.. ஆனா என்னோட நேரமும் காலமும் என்னோடு சேர்ந்து வரலையே..நான் இன்னும் மூணு நாலு மாசத்துல செத்து போயிடுவேன்டா.." என்றான் நெஞ்சை அடைத்த துக்கத்தோடு.

விசயம் புரியாமல் பதட்டமாக முகிலின் முகத்தை பற்றினான் நண்பன்.

"என்னடா சொல்ற.?"

"எனக்கு ப்ளட் கேன்சர். இன்னும் மூணு மாசத்துல செத்துடுவேன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நான் செத்து அவ விதவை ஆகறதுக்கு பதிலா நான் உயிரோடு இருக்கும்போதே அவ இப்படி பிரிஞ்சி போறது நல்லது.." என்றான் கண்ணீரோடு.

நண்பன் அவனை கட்டி அணைத்துக் கொண்டான்.

சௌந்தர்யா தன் கையில் இருந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை இரண்டாய் நான்காய் கிழித்தாள். "நான் ஆசைப்பட்ட மாதிரியே இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையில் எந்த ஒட்டும் உறவும் இல்லாம போயிடுச்சி. இனி எதுக்கு இந்த பொய்யான மெடிக்கல் ரிப்போர்ட்.?" என கேட்டபடி தான் டாக்டரிடம் சொல்லி தயாரித்திருந்த முகிலின் பொய்யான மெடிக்கல் ரிப்போர்ட்டை நெருப்பில் போட்டு எரித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

Word count 1084
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN