2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
'ஒரு கணம் ஒரு பொழுதும் பிரிய கூடாது.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது..' காலை நேர அலார பாடலின் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் யதிரா. கைப்பேசி மணி எட்டு என நேரத்தை காட்டியது.

சமையலறையில் குக்கர் விசிலடிக்கும் சத்தம் கேட்டது.

கலைந்த கேசத்தை அள்ளி முடிந்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். ஈர தலையில் துணியை சுத்தியபடி வெளியே வந்தவள் துண்டை உருவி கட்டிலின் ஒரு ஓரத்தில் எறிந்தாள். ஈர தலையை உலர விடாமல் அப்படியே பின்னிக் கொண்டாள்‌. சிறு பொட்டை நெற்றியின் நடுவே வைத்து கொண்டாள். புடவையை சரிபார்த்து கட்டிக் கொண்டாள். மேஜையின் மேல் இருந்த கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள்.

அவள் வெளியே வந்தபோது அண்ணி நீலா தன் குழந்தைக்கு காலை உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். இவளை கண்டதும் மெலிதாக புன்முறுவல் பூத்தாள். யதிராவும் கண்கள் தொடாத புன்னகையை தந்தாள்.

அம்மா உணவை சாப்பாட்டு மேஜை மேல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். "யதி.. சாப்பிட வாம்மா.." என்றாள்.

"எனக்கு பசிக்கலம்மா.‌." என்று சின்னதாக குரல் தந்தவள் வெளியே நடந்தாள்.

அவளின் அண்ணன் தனது கார் சாவியை சுட்டு விரலில் சுழற்றியபடி அவளெதிரே வந்தான். அண்ணனை கண்டதும் தலை கவிழ்ந்துக் கொண்டாள் யதிரா. ரூபன் அவளை தாண்டிக் கொண்டு உள்ளே நடந்தான்.

"குட்டிம்மா.. சாப்பாட்டு டேஸ்டா இருக்கா.?" என கேட்டு தன் குழந்தையை எடுத்து கொஞ்சினான். வாசலில் நின்று தனது காலணியை அணிந்துக் கொண்டே அவனது கொஞ்சலை வெறித்து பார்த்தாள் யதிரா. அந்த குழந்தையை கையில் தூக்கி கொஞ்ச அவளுக்கும் ஆசைதான். ஆனால் மனம் வரவேயில்லை. சிறிதும் மனம் வரவில்லை.

அவளுக்கும் முகிலுக்கும் இடையில் இருந்த பந்தம் உடைந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. முகில் தன் வீட்டை விட்டு புறப்பட்டும் மூன்று வருடங்கள் ஆகி விட்டது.

முகிலுக்கும் இவளுக்கும் பந்தம் உடைந்த மறுவாரமே புது திருமணம் செய்து மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தான் ரூபன். தந்தை இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவன் திருமணம் செய்து வந்ததை கண்டு உள்ளம் நொந்தாள் யதிரா.

ஆனால் அதற்கடுத்த வாரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை கண்டாள். ஆனால் அவளின் அண்ணன் அவளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்கையில் முழு மனமும் உடைந்து போனாள். அந்த நாள் இன்னமும் நினைவில் இருந்தது அவளுக்கு.

அன்று விசயம் அறிந்த மறு நொடியே முகிலுக்குதான் ஃபோன் செய்தாள். ஆனால் அவன் பந்தம் உடைந்த மறுநாளே ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு எங்கேயோ சென்று விட்டான். அவன் எங்கோ சென்று விட்ட விசயம் தெரிந்திருந்தாலும் கூட ஏதோ ஒரு நப்பாசையில் ஏதோ ஒரு புது நம்பிக்கையில் அவனுக்கு ஃபோன் செய்தாள். ஆனால் மறுமுனை வழக்கம் போல ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அவனை தேடி அவனது வீடு சென்றாள். அவனின் அம்மாவும் அக்காவும் ஒரு அடிப்பட்ட நாயை பார்க்கும் சில அருவெறுப்பு நிறைந்த கண்களை போல இவளையும் அருவெறுப்பாக பார்த்தனர்.

"அத்தை நான் கன்சீவா இருக்கேன்.." முகமெல்லாம் ஒளிர அவள் சொல்ல முகிலின் அம்மா பதிலேதும் சொல்லாமல் தனது அறையில் ஏதோ ஒரு பொக்கிஷத்தை தேடி செல்வதை போல சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.

"அண்ணி.." என்று சௌந்தர்யாவின் முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.

"மாமாக்கிட்ட சொல்லுங்க அண்ணி.. இல்லன்னா அவர் எங்கே இருக்காருன்னாவது என்கிட்ட சொல்லுங்க அண்ணி.." என்று கெஞ்சினாள்.

"உன் அண்ணனையே வேணாம்ன்னு வந்துட்டேன்.. இனி என்னடி நான் உனக்கு அண்ணி.?" என கேட்டாள்.

கண்ணீர் ததும்பும் கண்களோடு இருந்த யதிராவை பார்த்தவள் "ஊர் உலகத்துல உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா.? எதுக்கு என் தம்பியோட நிழலையே தேடிட்டு இருக்க.? அவன்தான் உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு தாலியை வாங்கிக்கிட்டான் இல்ல.? அப்புறம் என்ன மாமா மாமான்னு வந்துட்டு இருக்க.?" என பாம்பாக சீறிவிட்டு அவளும் வீட்டுக்குள் சென்று விட்டாள்.
அவளின் மாமனார் தயக்கமாக அவளருகே வந்தார். "அவன் எங்கே போனான்னு எங்களுக்கும் தெரியாதும்மா.. உன்னை மாதிரி ஒரு பொண்ணை அத்து விட்டது எங்க குடும்பத்தோட நஷ்டம்தான். ஆனா நீயும் சில விசயத்தை புரிஞ்சிக்கம்மா.. உன்னை நாங்க இந்த வீட்டுல வச்சிருந்தா அப்புறம் உங்க வீட்டு ஆளுங்க இங்கே வருவாங்க. அதை பார்த்து என் பொண்ணு மனசு கஷ்டப்படும் இல்லையா.? நீ இங்கே இருக்கற ஒவ்வொரு செகண்டும் என் பொண்ணு உன் அண்ணனோட முகத்தை உன்கிட்ட பார்ப்பா.. அவ மனசு உடைஞ்சா நல்லா இருக்குமாம்மா.?" என்று கேட்டார்.

"அப்ப என் மனசு கஷ்டப்பட்டா பரவால்லையா மாமா.? உங்க பொண்ணு தான் பிரிஞ்சி வந்த குடும்பத்தை மறுபடி பார்க்கவே கூடாதுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புறிங்களே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா.?" துக்கத்தோடு கேட்டவளை முறைத்தார் அவர். தனது குற்ற உணர்ச்சி தன்னை கொல்வதை அவர் விரும்பவில்லை.

"இதுக்கெல்லாம் காரணம் உன் தலைவிதிதான்.. என் பொண்ணு வாழ்க்கைதான் எனக்கு முக்கியம்.. நீ இங்கிருந்து கிளம்பு.." என்றவர் அந்த வீட்டின் கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றார்.

அந்த கதவையே கண்ணீர் வழிய பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் யதிரா. சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த ரூபன் அவளை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்.

"இன்னொரு முறை அந்த வீட்டு பக்கம் போனதை பார்த்தா நான் உன் காலை உடைச்சிடுவேன். பார்த்துக்க.." என்று சீறினான்.

"அப்பா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா.? என்னோட அப்பா இறந்து போனாரு. என்னோட ராஜா என்னை விட்டு போனாரு. ஆளாளும் என்னை இப்ப அதிகாரம் பண்ணுறிங்க.." என்று முகம் மூடி அழுதாள் யதிரா.

"சும்மா ஒருத்தரை டிபைன் பண்ணி இருக்கிறதை நிறுத்து. நீயும் பொண்ணுதானே.? ஒருத்தரை சார்ந்தே வாழணுங்கற சராசரி நினைப்போடுதான் இருப்பியா.?" என்று எரிச்சலாக கேட்டான் அவன்.

"சிந்திக்க தெரிஞ்ச எனக்கு என்னோட வாழ்க்கைக்கு யார் தேவைன்னு முடிவெடுக்கற உரிமை இல்லையா.?" என்று திருப்பி கேட்டாள்.

"இப்படிப்பட்ட திமிர்தான் உன் வாழ்க்கையை நாசமாக்குது.." என்றவன் அவளை நேராக மருத்துவமனை அழைத்து சென்றான். ஒரு பெண் மருத்துவரிடம் தனியே சென்று எதையோ பேசி வந்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவளை அந்த பெண் மருத்துவரிடம் அனுப்பி வைத்தான்.
அந்த மருத்துவரை பார்த்த நொடியே நடக்க இருக்கும் விபரீதம் அறிந்து கதறி அழுதாள்.

"வேண்டாம்ண்ணா.. என்னை விட்டுட்டுண்ணா.. நீ வேற என்ன சொன்னாலும் கேட்கறேன் அண்ணா.. ஆனா இப்படி மட்டும் எனக்கு துரோகம் செஞ்சிடாதிங்க அண்ணா.." என்று அவள் கதற கதற அந்த மருத்துவமனை அறையின் கதவை சாத்தினான் ரூபன்.

"டாக்டர் நீங்களும் ஒரு பொண்ணுதானே.? தயவுசெஞ்சி எனக்கு இப்படி துரோகம் செய்யாதிங்க.. என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதிங்க.. ப்ளீஸ் டாக்டர்.. வேணாம்.. கெஞ்சி கேட்கிறேன். என்னை விட்டுடுங்க.." என்று கண்ணீரோடு கை கூப்பினாள்.

"இது எல்லாம் உன் நல்லதுக்குதான்மா.. இன்னைக்கு உனக்கு இப்படிதான் இருக்கும். ஆனா வருங்காலத்துல இந்த குழந்தை இல்லாததை நினைச்சி நீ சந்தோசப்படுவ.. நாளைக்கு நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கும்போது இந்த குழந்தை அப்ப தடையா வராம இருக்கதான் இப்படி செய்றோம்.." என்று மருத்துவர் சொல்ல இன்னும் அதிகமாக துடித்தாள் யதிரா‌.

"என் மாமாவை மறந்துட்டு இன்னொருத்தனை கல்யாணம் செய்றதா‌.? கனவுல இப்படி ஒரு நினைப்பு வராதே எனக்கு.. என் குழந்தை இங்கே யாருக்கும் தடையாக இருக்காது டாக்டர்.. என்னை இப்படியே விட்டுடுங்க.. நான் எங்கேயாவது ஓடிப்போய் கூட என் குழந்தையை நல்லபடியா வளர்த்துக்கறேன்.." என்று கெஞ்சினாள்.

"ரியாலிட்டி புரியாம சீன் போடாதம்மா.. ஒரு பொட்டபுள்ளை தனியா குழந்தையோடு என்னன்னு வாழ முடியும்.?" என்று சீறி விட்டு அவளை மருத்துவமனை பெட்டில் படுக்க வைத்தாள் அவள்.
"ஒரு பொண்ணு நினைச்சா நடக்காத ஒன்னு இருக்கா.? ஒரு அம்மாவா இருந்து நினைச்சா இந்த உலகத்துல நடக்காத ஒரு காரியம் இருக்கா.?" என கேட்டு விம்மியழுது திமிறியவளின் கையில் ஊசியை குத்தினாள் அந்த டாக்டர்.

அவள் மயக்கத்திலிருந்து கண் விழித்தபோது எல்லாம் முடிந்து போனதை புரிந்துக் கொண்டாள். முகம் மூடி அழுதுக் கொண்டிருந்தவளின் அருகே வந்து அமர்ந்து அவளது கையை பற்றினான் ரூபன்.

"இது இன்னைக்கு உனக்கெதிரான அநியாயமா தெரியும் யதி. ஆனா இதுல எவ்வளவு நல்லது இருக்குன்னு வருங்காலத்துலதான் உனக்கு புரியும்.. அது மட்டுமில்ல இதை எனக்காக செஞ்ச சின்ன உதவியா நினைச்சிக்க.. இது நீ உன் அண்ணனுக்காக செஞ்ச சின்ன தியாகம்.
அவ்வளவுதான்.. நாளைக்கே அந்த முகிலை விட ஏழு மடங்கு நல்லவனா அழகானவனா அன்பானவனா ஒருத்தனை பார்த்து அண்ணன் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. அவனை மறந்துடு‌. அவனோட நீ வாழ முடியாது.. வாழ கூடாத இடத்துல வாழ கூடாத ஒருத்தனோடு வாழ நினைக்கிறது நம்ம வாழ்க்கைக்கு நாம செய்ற துரோகம்.." என்றான் அவன்‌.

யதிரா புரிந்துக் கொண்டாள். அண்ணனின் சொற்கள் மட்டுமல்ல அவளை சுற்றியிருந்த யாருடைய வார்த்தைகளிலும் நியாயமே இல்லை என்பதை நன்றாக அறிந்து கொண்டாள் அவள்.
இப்படிப்பட்ட அநியாயங்களுக்கு தன்னை பலி தந்துவிட்டு சென்ற முகில் இந்த நொடி தன் முன் வந்து நிற்க மாட்டானா என்ற எண்ணம் மட்டும் நினைப்பை விட்டு அகலவே இல்லை. காலங்கள் மட்டும் நகர்ந்தது. ஆனால் அவளது எண்ணியபடி அவன் மட்டும் வரவேயில்லை.

தன் குழந்தையை கொஞ்சும் அண்ணனை வெறித்து பார்த்தபடி வெளியே நடந்தாள். அவளது வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகைக்கடை ஒன்றில் கேஷியராக இருக்கிறாள் யதிரா. சரசரவென செல்லும் வாகனங்களை பார்த்தபடி சாலையில் நடந்துக் கொண்டிருந்தாள். நிமிடத்திற்கு ஒரு முறை கடக்கும் பேருந்துகளில் ஏற மனம் வருவதே இல்லை அவளுக்கு.

செல்லும் வாகனங்களில் ஒன்று திசைமாறி வந்து தன் மீது ஏறி செல்ல கூடாதா என்று எண்ணம் வந்ததே தவிர அந்த வாகனத்தின் முன் சென்று நிற்க தைரியம் வந்ததில்லை ஒருநாளும். பார்க்கும் முகமெல்லாம் முகிலை போலவே அவளுக்கு பிரமையை தந்தாலும் ஒரு நாள் கூட முகில் வந்து அவளிடம் தன் முகம் காட்டவில்லை.

இன்றும் அப்படிதான் தன்னை கடந்து செல்லும் கார் ஒன்றின் ஜன்னல் வழி தெரிந்த உருவமும் முகிலாக அவளின் எண்ணத்தில் தோன்றியது.

அவளை கடந்து சென்ற அந்த கார் சற்று தொலைவில் நின்றது. ஜன்னல் வழியே எட்டி பார்த்தான் முகில்.

"யதி.." என்று மனதுக்குள் அழைத்தவனுக்கு அவளை பார்க்கும்போது இதயம் இரண்டாய் துண்டு பட்டது போல இருந்தது. மூன்று வருடங்களில் அரையாய் கரைந்திருந்தாள் அவள். அவளது முகம் பார்த்த கணமே துணுக்குற்று போனான் முகில். எலும்பாக தெரிந்த அவளது கழுத்தில் தாலி ஏதும் இல்லை. இரண்டாய் உடைந்த இதயம் நான்காய் உடைந்தது.

"யதிராவுக்கு நேத்து கல்யாணம் முடிஞ்சிடுச்சி.." இரண்டே முக்கால் வருடங்களுக்கு முன்னால் தனது அப்பா தன்னிடம் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது. நெஞ்சை விட்டு அகலாத அந்த வார்த்தைகள் அன்று தந்த ரணத்தை விட இன்று அதிகமான ரணத்தை தருவதை உணர்ந்தான் முகில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1119
VOTE
COMMENT
SHARE
FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN