5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நகைக்கடைக்கு செல்ல வேண்டும் என்று முகிலை இழுத்துக் கொண்டு காருக்கு நடந்தாள் சௌந்தர்யா.அவன் காரை ஸ்டார்ட் செய்த நேரத்தில் அதிக பிரசங்கி பெண் ஓடிவந்து காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள்.அவன் அக்காவை திரும்பி பார்த்தான்."இது யார்.?" என்றான்."இவ என் பிரெண்ட் மேக்னாவோட சிஸ்டர். இரண்டு வருசமா என்னோட பாதுகாப்பில்தான் இருக்கா.." என்று அவள் சொன்னதும் முகிலுக்கு மனதுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டது.'மேக்னா.. எங்கேயோ கேள்விப்பட்ட பேரா இருக்கு..' என்று யோசித்தபடியே காரை கிளம்பினான் அவன்.வழிநெடுக்க அந்த அதிக பிரசங்கி பேசிக் கொண்டே வந்தாள்."நான் சுபா.. நீங்க.." என்று அவனுக்கு கை தந்தாள்."நான் டிரைவ் பண்றேன்.." என்று வெடுக்கென சொன்னான் அவன்."கொஞ்சம் சிரிச்ச முகமா பேசினா என்னடா குறைய போற.?" என்று எரிந்து விழுந்தாள் அக்கா.'சிரிச்ச முகமா பேச என்ன இருக்கு.?' என யோசித்தான் அவன். இயல்பை திடீரென மாற்றிக்கொள்ள யாரால் முடியும்.?காரை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கினர். தன் முன் இருந்த நகைக்கடையை நிமிர்ந்து பார்த்தான் முகில். பட்ட பகலிலும் பல்வேறு விளக்குகளை ஒளிர விட்டபடி ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த கடை.சௌந்தர்யாவும் சுபாவும் முன்னால் நடந்தனர். பேண்ட் பாக்கெட்டில் கை இரண்டையும் விட்டபடி நடந்துக் கொண்டிருந்த முகில் கேஷ் கவுண்டரில் நின்றிருந்தவளை கண்டதும் நடையை சட்டென நிறுத்தினான். யதிரா கூட்டம் நிறைந்த அந்த கடையில் தனது வேலையில் கவனமாக இருந்தாள். வாடிக்கையாளர் ஒருவர் தந்த பணத்தை மெஷினில் வைத்து எண்ணிக் கொண்டிருந்தாள்.'யதிரா.. வேலை செய்றாளா.?' என்றுதான் அவனுக்குள் முதல் கேள்வி எழுந்தது. அவள் அந்த வாடிக்கையாளரை பார்த்து நின்ற வேளையில் சௌந்தர்யா சிலையாய் நின்ற தம்பியை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள். யதிரா தலை கவிழ்ந்து பில்லை டைப் செய்துக் கொண்டிருக்க அவளையே பார்த்தபடி கடந்தான் முகில்.சௌந்தர்யா ஒரு இடத்தில் நின்றாள். நகைகளை எடுத்து காட்ட சொல்லி அங்கிருந்த பெண் ஒருத்திக்கு கட்டளையிட்டாள். முகில் யதிராவையே பார்த்தபடி நின்றிருந்தான்."அவளையே ஏன் பார்க்கற.? இந்த நகை நல்லா இருக்கான்னு பாரு.." என்று கடுகடுத்தாள் அக்கா. மூன்று வருடங்களுக்கு முன்னால் என்றால் அவளது வார்த்தைக்கு மரியாதை தந்து திரும்பியிருப்பான் அவன். ஆனால் இன்று அறிவுரை எது வீண் வார்த்தைகள் எதுவென நன்கு புரிந்துக் கொண்ட பின் அக்காவின் வார்த்தையை கேட்டு உடனே திரும்பி விட மனம் வரவில்லை.யதிரா முகில் இருந்த திசையில் பார்க்கவேயில்லை. அடுத்தடுத்து வந்து நின்ற வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தரவும் தன் அருகே அமர்ந்திருந்த கடை முதலாளியின் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலுமே கவனமாக இருந்தாள்."அத்து விட்ட ஒருத்தியை ஏன்டா இப்படி பார்க்கற.?" எரிந்து விழுந்த அக்கா நகை ஒன்றை அவசரமாக தேர்ந்தெடுத்தாள்."இந்த மூதேவி இங்கே இருப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் வேற ஏதாவது கடைக்கு கூட்டி போயிருப்பேன்.." வெறுப்போடு அவள் கூற, அவளின் வார்த்தைகள் முகிலின் நெஞ்சில் நேரடியான பாதிப்பை தந்தது.வார்த்தைகளில் வன்மம் கொண்டு திட்டும் அளவிற்கு யதிரா என்ன தவறு செய்தாள் என்று கோபப்பட்டான்."குடியை கெடுத்தவ இன்னும் ஏன் உயிரோடு இருக்கா.? இவளுக்குன்னு ஒரு முழம் கயிறு கூடவா கிடைக்கல.?" சௌந்தர்யா மெதுவான குரலில் திட்டியது அவன் காதில் தெளிவாக விழுந்தது."வார்த்தையை பார்த்து பேசுக்கா.." என்று ஆத்திரத்தோடு கர்ஜித்தான் முகில். அவனது திடீர் கர்ஜனையில் சௌந்தர்யா பயந்து விட்டாள். அவன் என்றுமே அதிர்ந்து பேசியதில்லை. அப்படி இருக்கையில் இன்று இப்படி கர்ஜித்தது அவளுக்கு இது தன் தம்பிதானா இல்லை வேறு யாரோவா என்ற சந்தேகத்தை தந்தது."இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துற.?" என்று கண்களை கசக்கினாள் அவள். அவன் பற்களை கடித்தபடி பணத்தை எடுத்து அவளது கையில் திணித்தான்."நான் கிளம்பறேன்.." என்று வெளியே நடந்தான். மூன்று வருடங்களுக்கு முன்னால் அக்காவின் அழுகையை கண்டால் மனம் வாடியவன் அவன். இன்று ஏனோ அவளது அழுகை எரிச்சலைதான் தந்தது.பணத்தை எண்ணி முதலாளியிடம் தந்துவிட்டு பில்லையும் நகையையும் வாடிக்கையாளரிடம் தர நிமிர்ந்த யதிரா தன் கண் முன் நடந்து சென்ற முகிலை கண்டாள்.அவசரமாக பில்லையும் நகையையும் வாடிக்கையாளரிடம் தந்தவள் "ஒரு நிமிசம் சார்.." என்று முதலாளியிடம் சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியே ஓடினாள்.கடையின் வெளியே வந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தாள். முகில் சற்று தொலைவில் நடந்துக் கொண்டிருந்தான்."மாமா.." என்று கத்தி அழைத்தாள்.யதிராவின் பார்வையில் படாமல் சென்று விடலாம் என்று நினைத்து நடந்த முகில் அவளது அழைப்பில் சட்டென நின்று விட்டான். உதட்டை கடித்தபடி திரும்பினான்.ஓடிவந்து முகிலின் அருகில் நின்றாள் அவள். "எங்கே மாமா போனிங்க இவ்வளவு நாளா.? நீங்க வருவிங்கன்னு நான் தினம் வாசலை பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா.?" என கேட்டவள் சட்டென வழிந்து விட்ட கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.அவளுக்கு என்ன பதிலை சொல்வதென அவனுக்கு தெரியவில்லை. தன்னை மறந்து விட்டிருப்பாள் என நினைத்த ஒருத்தி தனக்காய் தினம் காத்திருந்தாள் என்ற செய்தி அவனின் இதயதுடிப்பை இரு மடங்காக்கியது. அவளது முகத்தையே பார்த்தபடி சிலையாய் நின்றான். அவளை அருகில் பார்த்தது அவனுக்குள் சிறு வெட்ப சலனத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அவளது கண்ணீர் அவனது இதயத்திற்கு வலியை தந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னால் இருந்த உணர்வுகள் இப்போது பல மடங்காக வளர்ந்து விட்டிருந்தது. அப்போது தனது வலியையே அதிகம் அறியாமல் ஒதுக்கியவனுக்கு இன்று யதிராவின் கண்ணீர் தந்த வலியை தாங்கி கொள்ள கூட முடியாத அளவுக்கு உணர்ந்தான்."உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் ஆயிடுச்சின்னு என் அண்ணா சொன்னான்.. நீங்க என்னை தவிர வேற எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்க மாட்டேன்னு என் தலையில அடிச்சி சத்தியம் பண்ணியிருந்திங்க இல்ல.. அதனால்தான் என் அண்ணன் சொன்னதை நான் நம்பவேயில்ல.. ஆனா ஏன் மாமா என்னை பார்க்க இத்தனை நாளா வரவே இல்ல.?" என்று அவள் கேட்க அவன் உதடுகள் தாண்டி வர மறுத்த வார்த்தைகளோடு போராடியபடி நின்றுக் கொண்டிருந்தான்.'எனக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சின்னு ஏன் அவன் அண்ணன் பொய் சொன்னான்.? எங்க இரண்டு பேர்கிட்டயும் ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்னாங்க இவங்க.? அந்த டாக்டரும் கூட இப்படித்தான்..' அவனது யோசனை சட்டென தடைப்பட்டு நின்றது. 'டாக்டர்.. மேக்னா.. அந்த டாக்டர் பேர் மேக்னா..' ஊருக்கு வந்ததும் மறக்காமல் அந்த மருத்துவரிடம் ஒரு கணக்கு தீர்க்க நினைத்தவன் அந்த மருத்துவரின் பெயர் நினைவு வந்து விடவும் மன குமுறலோடு கையை இறுக்கினான்."அடையாளம் தெரியாத மாதிரி இளைச்சிட்டிங்களே மாமா.. நேரா நேரத்துக்கு சாப்பிட கூட உங்களுக்கு தோணலையா.?" என்று கேட்டவளின் புறம் தன் கவனத்தை திருப்பினான்.அவளது முகத்தில் இருந்த கவலையும் சோகமும் அதே நேரத்தில் தன்னை பார்த்து விட்டதால் உண்டான அளவில்லா மகிழ்ச்சியும் அவனுக்குள் பலவிதமான உணர்வுகளை தந்தது. அவளை கட்டியணைக்க ஆவலாய் இருந்தது‌.சிலையாய் நின்றபடி தன்னை பார்த்திருந்தவனின் முகத்தை நோக்கி தனது வலது கையை உயர்த்தினாள் யதிரா. அவனது கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தாள். அவளின் ஸ்பரிசம் பட்டதில் எச்சில் விழுங்கினான் அவன். அவளது உள்ளங்கை ஜில்லென்று இருந்தது. அவளது கரம் லேசாக நடுங்கியதை அவனும் உணர்ந்தான்.'சாரி யதி.. உன்னை என்னோடு உடனே கடத்திட்டு போக ஆசைதான் எனக்கும். ஆனா ஏன் என் அப்பாவும் உன் அண்ணனும் இப்படியொரு பொய்யை நம்மகிட்ட சொன்னாங்கன்னு தெரிஞ்சிக்காம உன்னை நான் நெருங்க முடியாது.. ஏதோ ஒரு உறுத்தல் எனக்குள்ள இருக்கு. அதை தீர்த்துக்காம உன்கிட்ட நான் வர முடியாது.. உன்னை இப்படியே..' அவனது நினைவிற்கு தடை போடுவது போல யதிரா அவனை விட்டு விலக்கி தள்ளப்பட்டாள்.முகில் அதிர்ச்சியோடு பார்த்தான். யதிராவை முகிலை விட்டு தூர தள்ளி விட்டிருந்த சௌந்தர்யா தன் தள்ளுதலால் கீழே விழுந்து கிடந்த யதிராவை கோபமாக பார்த்தாள்."என் தம்பியை தேடி வராதன்னு எத்தனை முறை சொன்னாலும் உனக்கு புரியாதா.? கொஞ்சமாவது சாப்பாட்டுல உப்பு சேர்த்து சாப்பிடு.." என்று எரிந்து விழுந்தாள்.'எத்தனை முறை யதிரா என்னை தேடி வந்தா.? எத்தனை முறை அக்கா இப்படி சொன்னா.?' என்று குழம்பினான் அவன்.யதிராவை பார்த்து அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் முகிலைதான் தாக்கியது. கீழே விழுந்து கிடந்தவளை அவசரமாக தூக்கி நிறுத்தினான் முகில்."ச்சீ.. அவளை விடு.." என்ற சௌந்தர்யா அவனை தன் பக்கம் இழுத்தாள்.'ச்சீயா.? என் பொண்டாட்டியா.?' என்று அவன் அதிர்ந்து நிற்க அவனை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு காரின் அருகே வந்தாள்.முகில் யதிராவை திரும்பி பார்த்தான். அவளோடு வேலை செய்யும் பெண்ணொருத்தி அவளை அங்கிருந்து அழைத்து சென்றுக் கொண்டேயிருந்தாள்.யதிரா கலங்கும் கண்களோடு இவனையே பார்த்தபடி சென்றாள். அவள் தனது கண்களை துடைத்துக் கொள்ளும்போதுதான் அவளது கை முட்டியில் ரத்தம் கசிவதை பார்த்தான் முகில். சௌந்தர்யா கீழே தள்ளி விட்டதில் உண்டான காயம் அது என்று புரிந்துக் கொண்டான்."அவளை என்ன பார்த்துட்டு இருக்க.? காரை எடு.." என்று கதவை திறந்து அவனை உள்ளே தள்ளிவிட்டாள் சௌந்தர்யா. அவன் தடுமாறி விழுந்தான். சௌந்தர்யா அவனை கண்டுக் கொள்ளாமல் சென்று பின் சீட்டில் ஏறினாள்.தடுமாறி விழுந்தவனுக்கு அந்த நொடியில்தான் தான் யாரென புரிந்தது. தான் இத்தனை வருடங்களும் மற்றவர்கள் கையில் பொம்மை போல் இருந்துள்ளதை புரிந்துக் கொண்டவனுக்கு தனது உண்மையான இடறல் எதுவென்று புரிந்துக் கொண்டான். அதே யோசனையோடு எழுந்து நின்று காரில் ஏறினான்.யதிரா தூரத்தில் கடையில் நின்றபடி இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நொடிக்கொரு முறை கண்களை துடைத்துக் கொண்டாள்."அந்த பிச்சைக்காரியை ஏன் பார்க்கற.?" என்று ஆத்திரமாக அக்கா கேட்கவும் இன்ஜினுக்கு உயிர் தந்தான் முகில். அக்கா யதிராவை திட்டுவதை அவனால் காதால் கேட்க முடியவில்லை.'ஏன் அக்கா அவளை அப்படி திட்டுறா.?' என தன்னிடமே கேட்டுக் கொண்டவனுக்கு அக்கா விவாகரத்து வாங்கி வந்து வீட்டிலிருந்த மூன்று மாதங்களுமே அவளை இப்படிதான் ஏதாவது திட்டிக் கொண்டிருந்தாள் என்பது நினைவுக்கு வந்தது.ஏதோ ஒரு பெரிய சிக்கலில் தனது மனம் சிக்கி கொண்டிருப்பதை உணர்ந்தான்."ஐயோ எதிரில் பஸ் வருது.." சுபா அவனது தொடையை தட்டியதில் நேராக பார்த்து காரை வளைத்து ஓட்டினான் முகில்.மெலிதான இசையில் பாடல் ஒன்றை ஒலிக்க விட்ட சுபா அவனது தொடையில் கை தாளத்தை போட ஆரம்பித்தாள். பற்களை அரைத்தான் முகில். "கையை எடு.." என்றான் எரிச்சலாக. சட்டென கையை எடுத்தவள் முகத்தை மறுபக்கம் திருப்பி கொண்டாள்.வீட்டின் முன் காரை நிறுத்தியவன் அக்காவும் சுபாவும் இறங்கியதும் மீண்டும் எங்கோ கிளம்பினான்."இவனுக்கு இன்னைக்கு திடீர்ன்னு எந்த பேய் பிடிச்சது.?" என எரிச்சலாக கேட்டபடி வீட்டுக்குள் சென்றாள் சௌந்தர்யா. முகில் சென்ற திசையை திரும்பி திரும்பி பார்த்தபடியே சௌந்தர்யா பின்னால் நடந்தாள் சுபா.மருத்துவமனை ஒன்றின் முன்னால் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் முகில்.மருத்துவமனையின் வரவேற்பறையினுள் நுழைந்தவன் "டாக்டர் மேக்னாவை பார்க்கணும்.." என்றான். வரவேற்பு மேஜையில் இருந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள். "அப்படி யாரும் இங்கே இல்லையே.." என்றாள்.முகில் குழம்பினான். 'இந்த பேர்தானே அந்த டாக்டரோடது.?'"எனக்கு தெரியும்.. மேக்னான்னு ஒரு டாக்டர் இங்கே இரண்டு வருசம் முன்னாடி வரைக்கும் வேலை பார்த்துட்டு இருந்தாங்க.." என்றாள் அங்கிருந்த இன்னொரு பெண்."இப்ப அவங்க எங்கேன்னு சொல்ல முடியுமா.?" என்று அவசரமாக கேட்டான் முகில்."அவங்க வேலையை விட்டுட்டு போன பிறகு எனக்கேதும் தெரியாது.." என்றவள் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு "அதோ அந்த நர்ஸ் அவங்களோட பிரெண்ட்தான். அவங்ககிட்ட கேளுங்க.. தகவல் கிடைக்கும்.." என்றாள்.அவள் கைகாட்டிய நர்ஸை நோக்கி நடந்தான் முகில். "ஹலோ சிஸ்டர்.. டாக்டர் மேக்னாவை பார்க்கணும்.. ஒரு பர்சனல் மேட்டர். அட்ரஸ் தரிங்களா.?" என்றான்.அவள் இவனை மேலும் கீழும் பார்த்தாள். "அவங்க மேற்படிப்புக்காக பிரான்ஸ் போயிட்டாங்க.." என்றாள். முகிலுக்கு ஏமாற்றமாக இருந்தது."அவங்க போன் நம்பர் தரிங்களா.?" என்று கேட்டான் கடைசி முயற்சியாக."சாரி சார்.. அவங்க போன் நம்பர் ரொம்ப பர்சனல்.. நான் தர முடியாது.." என்றவள் அவனது வாடிய முகம் கண்டு "அவங்க இன்ஸ்டா ஐடில போய் பேசி பாருங்களேன்.." என்றாள்.முகில் உடனடியாக தனது ஃபோனை எடுத்து இன்ஸ்டாகிராமை டவுண்லோட் செய்து உள்ளே நுழைந்தான். மேக்னாவின் ஐடி எதுவென அந்த நர்ஸ் காட்டினாள்."தேங்க்ஸ்ங்க.." என்றவன் வெளியே நடந்தான்.காரில் அமர்ந்த பிறகு அவளுக்கு "ஹாய்.." என்று ஒரு மெஸேஜை அனுப்பினான்."என் மூணு வருச வாழ்க்கையை அழிச்சிட்டு நீ மேல் படிப்பு படிக்க போயிருக்கியா.?" என கோபத்தோடு அவளது புகைப்படத்தை பார்த்து கேட்டான். அவளது புகைப்பட பட்டியல்களை எதேச்சையாக பார்க்க துவங்கியவன் மேக்னாவோடு சுபா இருக்கும் புகைப்படம் கண்டு அதிர்ந்தான்."அவ இந்த டாக்டரோட தங்கச்சியா.?" என கேட்டவனின் அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது அடுத்ததாக இருந்த புகைப்படம். மேக்னாவும் சௌந்தர்யாவும் கட்டியணைத்தபடி நின்றிருந்த புகைப்படத்தை கண்டவன் அதிர்ச்சியை தாங்க இயலாமல் ஃபோனை கை தவற விட்டான்."அக்கா தன் பிரெண்ட் மேக்னான்னு சொன்னது இந்த டாக்டரைதானா..? அக்காவோட பிரெண்ட் ஏன் ரிப்போர்ட்டை மாத்தி எழுதி தரணும்.? இது எல்லாமே கோ இன்சிடென்டா.?" என கேட்டவனுக்கு சந்தேகம் ஒன்று உதித்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ள மனம் தயங்கியது.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1356VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN