8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யதிரா இரவெல்லாம் உறங்கவே இல்லை. முகில் சொல்லி சென்றது மட்டுமே நினைவில் இருந்தது.

அவன் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக தன்னை தேடி வருவான் என்று இத்தனை நாள் நம்பி காத்திருந்தவள் அவன் வந்ததும் உளமாற மகிழ்ந்தாள்.

ஆனால் மனைவியாக இல்லை காதலியாக வாழ வா என்று அவன் அழைத்ததுதான் குழப்பமாக இருந்தது. அண்ணன் கண்டிப்பாக இங்கிருந்து அப்படி அனுப்ப மாட்டான் என்று அவளுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் முகிலை எதிர்த்து பேச அவளால் முடியாது. அவளின் பதிவிரதம் அந்த அளவுக்குதான் இன்று வரையிலுமே இருந்தது.

மறுநாள் விடியும் முன்பே சீக்கிரத்தில் எழுந்து விட்டாள் யதிரா. அம்மா எழுந்து வரும் முன்பே சென்று சமையலை முடித்து வைத்தாள். கணவனுக்கு காப்பி போட்டு எடுத்து செல்ல வந்த அண்ணி இவளது புது வழக்கத்தை கண்டு ஆச்சரியப்பட்டாள்.

"குட் மார்னிங் யதிரா.." என்றாள்.

"குட் மார்னிங் அண்ணி.." என்றாள் இவளும் சூடான டீயை பருகியபடியே.

அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்த அண்ணி "இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா யதிரா.? அதிசயமா இன்னைக்கு இவ்வளவு காலையில் எழுந்திருக்க.. அதை விட முக்கியமா இன்னைக்கு தான் உன்னை ஹேப்பி மூட்ல பார்க்கறேன்.." என்றாள்.

'ஹேப்பி மூட்லயா.?' என தன்னை கேட்டுக் கொண்ட யதிராவுக்கு தான் கடைசியாக சிரித்த நாள் நினைவிலேயே இல்லை என்பது புரிந்தது.

"அப்படியெல்லாம் ஏதும் இல்லை அண்ணி.. சும்மாதான்.." என்றவளுக்கு தெரியும் தன் முகத்தில் புது மகிழ்ச்சி மின்ன காரணம் முகிலின் வருகைதான் என்று.

அண்ணனும் அம்மாவும் கூட அவளை விசித்திரமாகதான் பார்த்தனர். ரூபன் நாள்காட்டியை பார்த்தான் அவளுக்கு பிறந்த நாள் வந்துள்ளதா என்று. ஆனால் அவள் எந்த காரணமும் இன்றி அன்று மகிழ்ச்சியோடு இருந்தது அவனுக்கு சிறு நிம்மதியை தந்தது. முகிலின் நினைவிலேயே கடைசி வரை இருந்து விடுவாளோ என எண்ணி பயந்து இருந்தவனுக்கு இன்று இவளது முகம் கண்டு புது நம்பிக்கை வந்தது.

ஆனால் அந்த நம்பிக்கையையும் உடைக்கும் விதமாக மதிய நேரத்தில் அவனுக்கு போன் அழைப்பு வந்தது‌. நேற்று மதியம் நகைக்கடை வாசலில் என்ன நடந்தது என்ற செய்தி அந்த அழைப்பில் வந்து சேர்ந்தது. ரூபனுக்கு ஆவேசமாக இருந்தது. முகில் மீது ஆத்திரமாக வந்தது. தேடி போய் பேசியவளை தள்ளி விட்டு சென்ற சௌந்தர்யா மீது கோபம் வந்தது.

அன்று முற்பகல் வேளையில் முகில் புது வீட்டை சுற்றி பார்த்தான். சிறியதாக இருந்தாலும் கூட தங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது புரிந்தது அவனுக்கு. அருகில் இருந்த கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தான்.

மாலையில் யதிரா நடந்து செல்லும் சாலையில் சென்று காத்திருந்தான். இரவு தொடங்கும் வேளையில் யதிரா வந்தாள். அவளது நடையில் லயித்து நின்றவன் அவள் அருகில் வந்ததும் மென்மையாக புன்னகைத்தான்.

"ஹாய் யதி.." என்றான்.

யதிரா அவனது புன்னகையை தனது முகத்தில் பிரதிபலித்தபடி அவனை நெருங்கினாள்.

"மாமா.." என்றாள்.

"என்னோடு வாழ வருவதை பத்தி யோசிச்சியா.?" என்று கேட்டான்.

அவள் தயக்கமாக தலையசைத்தாள். "நீங்க எங்கே கூப்பிட்டாலும் எப்போது கூப்பிட்டாலும் நான் வருவேன் மாமா.." என்றாள். அவனை தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு அவள் சொல்லியதை கேட்டு வருத்தமாக இருந்தது. அவள் அவளின் மீது கொண்ட நம்பிக்கையில் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருந்தால் அவன் மகிழ்ந்திருப்பான். ஆனால் அவள் முழுக்க முழுக்க கணவனை நம்பி மட்டும்தான் வர போகிறாள் என்று புரிந்துக் கொண்டவனுக்கு மனம் பாரமாக இருந்தது. மன பாரம் தந்த பயத்தினால் அவளை சற்று இறுக்கமாகவே அணைத்து கொண்டான். அவனது நெஞ்சில் முகம் புதைந்து நின்றவள் "ஏன் மாமா சோகமா இருக்கிங்க.?" என்றாள்.

"சும்மாதான்.." என்றவனுக்கு அவளை விலக்கி நிறுத்த மனமே வரவில்லை.

"நாளைக்கு காலையில் வீட்டுக்கு வரிங்களா மாமா.?" அவனது நெஞ்சில் புதைந்திருந்த தன் முகத்தை நிமிர்த்தி ஆர்வமாக அவனை பார்த்து கேட்டாள்.

"எனக்கும் ஆசைதான் யதி.. ஆனா நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நாளை மறுநாள் காலையில எட்டு மணிக்கு உன் வீட்டுக்கு வரேன்.. ரெடியா இரு.." என்றவன் தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகி நின்றான்.

"நாளைக்கு இதே நேரத்துல இதே இடத்துல பார்க்கலாம்.." என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே நடந்தாள் அவள். தூரத்தில் சென்று கை அசைத்தாள். இவனும் பதிலுக்கு கை அசைத்தான். அன்று பந்தம் உடைந்து செல்கையில் இப்படி அவள் திரும்பி திரும்பி பார்த்து சென்றது கண்களில் வந்தது. நீங்காத மன பாரத்தோடு வீட்டுக்கு திரும்பினான்.

காலையில் எழுந்ததுமே வீட்டை விட்டு கிளம்பியவன் இப்போதுதான் மீண்டும் வீட்டிற்கு வந்தான். சௌந்தர்யா இருந்த இடத்தில் இருந்து முறைத்தாள். வீடு முழுக்க நிரம்பியிருந்த சொந்தங்களின் மத்தியில் அவனை எதுவும் சொல்ல முடியவில்லை என்று பல்லை கடித்தபடி தனது வேலைகளை பார்த்தாள்.

அப்பா இவன் இருந்த திசை பக்கம் கூட பார்க்கவில்லை. கோபமாக இருப்பதை காட்டுகிறார் என்பதை புரிந்து கொண்டான். ஒரு காலத்தில் பயம் தந்த அவரின் கோபம் இன்று எந்த உணர்வையும் தரவில்லை. இவரின் கோபத்தை விடவும் பயங்கரமான விசயங்களை கடந்து வந்து விட்டதாலோ என்னவோ சிறிய உறுத்தல் கூட இன்று ஏற்படவில்லை.

உறவினர்கள் இவனை கண்டதும் ஏதேதோ கேள்விகள் கேட்டனர். அவன் அவர்களுக்கு பதில் சொல்லிய வேளையில் அம்மா அவனை சாப்பிட வர சொல்லி அழைத்தாள். "வெளியவே சாப்பிட்டு வந்துட்டேன்.." என்று சொல்லி விட்டு மாடிக்கு புறப்பட்டான். இந்த பதில் அம்மாவுக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் கூட ஆச்சரியத்தை தந்திருக்கும் என்பதை அறிவான்.

அறைக்குள் வந்ததும் பெட்சீட்டை எடுத்து தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்தான்.

யதிரா வீட்டுக்குள் வரும்போதே வாசலில் காத்திருந்தான் அவளின் அண்ணன். இவள் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். அவளை பின்தொடர்ந்து வந்தவன் அவளது அறையில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். அவளையே பார்த்தான். அவளுக்கு தன் அறையில் இவன் இருப்பது வருத்தத்தை தந்தது. ஆனால் ஏதும் சொல்ல முடியாததால் அமைதியாக இருந்துக் கொண்டாள்.

"யதிரா இப்படி வந்து உட்காரு.. உன்கிட்ட பேசணும்.." என்றான் அவன்.

அவனோடு பேச அவளுக்கு விருப்பமில்லை. ஆனாலும் அமைதியாக வந்து அவன் முன்னால் அமர்ந்தாள்.

"உனக்கு சூடு சொரணையே இல்லையா.?" என்றான் அதட்டலாக.

யதிராவுக்கு உடனே கண்களில் கண்ணீர்தான் திரண்டது. "உன்னை வேணாம்ன்னு சொல்லி தாலியை வாங்கிட்டு போனவனை மீண்டும் மீண்டும் தேடி போய் காலுல விழுந்தா அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா.?" என எரிச்சலாக அவன் கேட்க அவளது விசும்பல் ஒலித்தது.

"உடனே அழுக ஆரம்பிச்சிடுற.. உனக்கு சுய புத்திதான் இல்ல. அட்லீஸ்ட் சொல் புத்தி கேட்டாவது நடந்துக்கலாம் இல்லையா.?" என கேட்டவன் அவளது கண்களை துடைத்து விட்டான்.

"இங்கே பாரு. நான் சொல்றது உன் நல்லதுக்கு மட்டும்தான். விட்டுட்டு போனவனை மறந்துடு. வைபவ் நல்ல பையன். அவனை கல்யாணம் பண்ணிக்க. அவனுக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றான்.

அவனது கையை ஒதுக்கி தள்ளினாள் யதிரா. "எனக்கு வைபவ் வேணாம். மாமாதான் வேணு.." அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கன்னத்தில் ஒரு அறையை விட்டான் அவன். அவனது விரல்கள் அவளது காதின் மீது பட்டதில் அவள் அணிந்திருந்த தோடு இரண்டாய் உடைந்து விழுந்தது. காதும் கன்னமும் உடனே சிவந்து போனது.

"என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா.? கிளி பிள்ளைக்கு புத்தி சொல்ற மாதிரி சொல்றேன். மறுபடியும் மாமான்னு சொல்ற.. இன்னொரு முறை உன் வாயிலிருந்து மாமான்னு வந்தது அடிச்சே வாயை உடைச்சிடுவேன் பார்த்துக்க.. அந்த வீட்டுல உள்ள எல்லோரும் நம் எதிரிங்க. இதை நல்லா நினைவுல வச்சிக்க.." என்றவன் அவளை முறைப்போடு பார்த்துவிட்டு வெளியே சென்றான்.

வாசற்படியில் நின்றிருந்த அம்மா ஓடி வந்து மகளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். "ஏன்டி இப்படி பண்ற.? உனக்கு என்ன தலையெழுத்தா இப்படி அடி வாங்கணும்ன்னு? உங்க அப்பா இருந்தா இந்த அடி நீ வாங்கறதை பார்த்தே உயிரை விட்டிருப்பாரு.." என்று அழுதாள்.

யதிரா அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள். அப்பா இருந்திருந்தால் இப்படி தான் அடி வாங்கி இருக்க மாட்டோம் என்று நம்பினாள். முகிலின் அருகே இருந்தாலும் இப்படி அடி வாங்க மாட்டோம் என்று நம்பினாள்.

அன்று இரவு உணவு உண்ண கூட மனமில்லாமல் அப்படியே படுத்து உறங்கி போனாள்.

மறுநாள் அதிகாலையில் முகிலை உறக்கத்தில் இருந்து எழுப்பினாள் அம்மா.

"சீக்கிரம் தயாராகுடா.. காது குத்த போகணும்.." என்றாள். அவனும் சென்று குளித்து தயாராகி வந்தான்.

அக்காவின் புகுந்த வீட்டு குலதெய்வ கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். அக்கா வேண்டாவெறுப்பாக அவனை முறைத்தபடியே குழந்தையை தந்தாள். குழந்தைக்கு காது குத்தியதும் குழந்தையை அவனது மடியிலிருந்து வெடுக்கென எடுத்துக் கொண்டாள்.

அவளை முறைத்து பார்த்தபடி எழுந்து நின்றான். "நான் கிளம்பறேன் அம்மா.." என்றவன் அனைவருக்கும் முன்னால் கிளம்பினான்.

"டேய் சாப்பிடுவ வாடா.." என்று அம்மா அழைத்தாள்.

"பசிக்கலம்மா.. எனக்கு வேலை இருக்கு.. அவசரமா போகணும்.." என சொந்தக்காரர்கள் முன்னால் ஒரு பொய்யை சொல்லிவிட்டு தனது காருக்கு நடந்தான்.

தனது புது வீட்டிற்கு வந்தான். வீட்டில் பொருட்கள் ஏதாவது விடுபட்டு போனதா என்று சோதித்தான். பின்னர் சமைத்து சாப்பிட்டு விட்டு உறங்கினான். மாலை பொழுதில் எழுந்து தயாராகி கொண்டு யதிராவுக்காக சாலையில் காத்திருந்தான். நேரம் சென்று கொண்டிருந்தது. ஆனால் அவளை வரவில்லை. நொடிக்கொரு முறை கை கடிகாரத்தையும் அவள் வரும் பாதையையும் மாறி மாறி பார்த்தான். அவள் வர ஏன் தாமதம் என்று யோசித்தபடியே அவள் வேலை செய்யும் கடையை நோக்கி சென்றான். பளிச்சென்று எரியும் விளக்குகளுக்கு மத்தியில் இருந்தது அந்த நகை கடை.

யதிராவோடு வேலை செய்யும் ஒரு பெண் தனது கைப்பையோடு வெளியே வருவதை கண்டு அவளை நெருங்கினான். "யதிரா இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பிட்டாளா.?" என்று விசாரித்தான்.

"இன்னைக்கு அவ வேலைக்கு வரலைங்க.. நீங்க அவ ஹஸ்பண்ட்தானே.?" என்று ஆர்வமாக கேட்டாள் அவள்.

"ஆமா.." என்றவன் அவள் வேலைக்கு வராதது ஏன் என யோசித்தபடியே வந்து காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

"உடம்பு ஏதும் சரியில்லாம போச்சா.?" என குழம்பியவன் அவளது வீடு இருந்த திசையை நோக்கி காரை திருப்பினான்.

அவளது வீடு அதே மாதிரிதான் இருந்தது. வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்று காலிங்பெல்லை அடித்தான்.

யதிராவின் அம்மா வந்து கதவை திறந்தாள். முகிலை கண்டதும் திகைத்து நின்றாள்.

"தம்பி.. நீங்க.." வார்த்தைகள் வர தடுமாறி திணறினாள். நீலா குழந்தையோடு வந்து தூரமாக நின்று இவனை பார்த்தாள். யாரிவன் என்ற யோசனையில் இருந்தாள் அவள்.

"யதிராவை பார்க்கணும்.." என்றான் எந்திர குரலில். நீலாவையும் அவள் கையில் இருந்த குழந்தையையும் மாறி மாறி பார்த்தான்.

யதிராவின் அம்மா தலையை அசைத்து மறுத்தாள். "அவளை ஏன் பார்க்கறிங்க தம்பி.? குளிச்சிட்டு இருக்கற என் பையன் வெளியே வரும் முன்னாடி அமைதியா போயிடுங்க.. அவளையும் நிம்மதியா வாழ விடுங்க.." என்றாள் கெஞ்சலாக.

"நான் அவளைதான் பார்க்க வந்தேன்.. உங்க மகனை இல்ல.." என்றவன் உள்ளே பார்த்து "யதிரா.. யதிரா.." என்று சத்தமாக குரல் கொடுத்தான்.

யதிரா இவனது சத்தத்தில் ஓடி வந்தாள். இவனை கண்டதும் தயங்கி ஹாலில் நின்றாள். அவளது ஒரு பக்க முகம் வீங்கி இருந்தது. காது பகுதி கன்னி போய் இருந்தது. அவளது அம்மா திரும்பி பார்த்து "உள்ளே போடி.." என்றாள்.

யதிரா தயங்கினாள். அவளது முகத்தை கண்டதும் சட்டென வீட்டுக்குள் புகுந்து அவளது அருகே வந்த முகில் அவளது முகத்தை அந்த பக்கமும் இந்த பக்கமும் திருப்பி பார்த்தான்.

"என்ன ஆச்சி.?" என்றான் அவளிடம்.

"முந்தாநாள் அவ நகைக்கடை வாசலில் உங்களோடு பேசிட்டு இருந்தது தெரிஞ்சி என் மகன் அவளை அடிச்சிட்டான்.. இப்ப தயவு செஞ்சி இந்த வீட்டை விட்டு போங்க. இல்லன்னா அதுக்கும் அவன் இவளைதான் அடிப்பான்.. இவ இதுக்கு மேலயாவது நிம்மதியா வாழட்டும். விட்டுட்டு போங்க.." என்று கெஞ்சினாள் யதிராவின் அம்மா.

"உன் பொருட்களை பேக் பண்ணி வச்சிருக்கியா.?" யதிராவை பார்த்து கேட்டான் அவன்.

"ம்.." என தலையசைத்தவளின் தலையை வருடி விட்டவன் "போய் உன் சூட்கேஸை எடுத்துட்டு வா.." என்றான்.

"இப்பவேவா.?" சிறு ஆச்சரியத்தோடு கேட்டவளை கண்டு புன்னகைத்தவன் ஆமென தலையசைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1247

VOTE

COMMENT

SHARE

FOLLOW

நேற்றைய அத்தியாயத்திற்கு கமெண்ட் பண்ணியிருந்த சகோவிற்கு எனது நன்றிகள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN