43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் கே.கேவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டினான்.கே.கே கதவை திறந்து இவனை பார்த்ததும் குழம்பி போனாள். "ஸ்டேசன்தானே போன நீ.?" என்றாள் அவள்.நடந்ததை முழுதும் சொன்னான் அவன். அதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள் கே.கே."சாரி முகி.. உன் திருமணம் கூட அவங்களோட ப்ளானிங்காலதான் நடந்திருக்குன்னு நினைச்சா ரொம்ப கோபமா வருது.." என்றாள். அவள் வருத்தபடுவது முகிலுக்கும் புரிந்தது."என் அக்காவை நான் அடியோடு வெறுக்கறேன் கே.கே.. அவங்களோட சொந்த தேவைக்காக எங்க வாழ்க்கையையே அழிச்சிட்டாங்க.." என்றான்.கே.கேவிற்கும் அவனது வலி புரிந்தது."அவங்களுக்கு நகை தேவைப்பட்டதால இந்த கல்யாணத்தை ஒரு பிராப்பிட்டா நினைச்சி சம்மந்தம் பேசி முடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எங்க கல்யாணம் இடைஞ்சல் வந்த உடனே அதையும் ஃப்ளான் பண்ணி பிரிச்சி விட்டிருக்காங்க.." என்றவனுக்கு தான் அவர்களின் கை பொம்மையாக இருக்கும் அளவுக்கு இருந்ததை எண்ணி மனம் நொந்தான்."யதி எங்கே.?" என்றான் யதிராவின் அறையை பார்த்துவிட்டு."அவ ஆபிஸ் கிளம்பி போயிட்டா.." என்று கே.கே சொன்னதும் முகில் தன் கை கடிகாரத்தை பார்த்தான். மணி ஒன்பது தாண்டி அரைமணி நேரம் ஆகி இருந்தது."நானும் ஆபிஸ்க்கு கிளம்பறேன்.." என்றவனை தடுத்து நிறுத்தினாள் கே.கே."இங்கேயே குளிச்சிக்கோ.. உன் டிரெஸ் கூட இங்கே இரண்டு செட் இருக்கும்.." என்றாள்.முகில் கை கடிகாரத்தை மீண்டும் ஒருதரம் பார்த்தான். கே.கே சொன்னது சரியென்றே தோன்றியது. கே.கே சென்று அவனுடைய மாற்று உடைகளை கொண்டு வந்து தந்தாள்.யதிரா அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். வயிற்று வலியால் நிமிடத்திற்கு ஒருமுறை உயிர் போய் வந்தது. பற்களை கடித்தபடி கம்யூட்டர் ஸ்கீரினை பார்த்தாள். காலையிலிருந்து ஐந்தாறு மாத்திரைகளை உண்டு விட்டாள். ஆனாலும் அவளின் வயிற்று வலி சிறிதும் குணமாகவில்லை.முகில் அவசரமாக அலுவலகம் வந்து சேர்ந்தான். யதிராவை தேடி அறைக்கு வந்தவன் "யதி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றான்.யதிரா தன் வயிற்றை ஒரு கையால் இருக்கி பிடித்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்."என்ன சார்.?" என்றாள்."என் அக்கா ஒரு கொலை செஞ்சிட்டா யதி.." என்றவனின் முன்னால் தன் இடது கையை காட்டினாள் யதிரா."போதும். நான் உங்களோட சொந்த வாழ்க்கையை பத்தி கேட்கறதுக்காக இந்த ஆபிஸ் வரல.." என்றாள்.வயிற்று வலி இன்னும் கடுமையானது. தன் கைப்பையை எடுத்தாள். மாத்திரைகளை தேடி எடுத்தாள். வயிற்று வலி கொடுமையாக இருந்தது‌. தன் முன் ஒரு ஜீவன் இருப்பதையே மறந்து போனவள் அவசரமாக மாத்திரைகளை பிரித்தாள்.முகில் சட்டென அந்த அட்டையை பிடுங்கினான். "என்ன மாத்திரை இது.?" என கேட்டவன் அந்த மாத்திரையை திருப்பி திருப்பி பார்த்தான்.தாள முடியாத வலியால் யதிராவின் கண்களில் சூடாய் கண்ணீர் வழிந்தது. "மாத்திரையை கொடுங்க.." என்றாள். அவனை நோக்கி தன் கையை நீட்டினாள்.முகில் அந்த மாத்திரை அட்டை எதற்கென்று பார்த்தான். திருமணத்திற்கு முன்பு வரை சௌந்தர்யாவிற்கு அவன் வாங்கி வந்து தந்த மாத்திரைதான் அது. அதனால் சுலபமாக மாத்திரையை இனம் கண்டு கொண்டான்."இது பீரியட்ஸ் டைம் வயித்து வலிக்கான மாத்திரை.. இதை ஏன் நீ யூஸ் பண்ற.? அந்த அளவுக்கு வலி இருக்கா இன்னமும்.?" என கேட்டான். அதை கேட்கும்போதே அவன் குரல் வருத்தமாக மாறி இருந்தது.யதிராவால் வயிற்று வலியை தாங்குவதே மிக கடினமாக இருந்தது. அதையும் தாண்டி அவனிடம் பதில் பேச சுத்தமாக முடியவில்லை அவளால்.வயிற்று வலியோடு போராட இயலாதவள் தரையில் மண்டியிட்டு விட்டாள்."யதி.." அவளருகே அவசரமாக மண்டியிட்டான் முகில். அவளது தோளை பற்றினான்.முகிலின் தோளை விலக்கி தள்ள முயன்றாள் யதிரா. ஆனால் அவளால் முடியவில்லை."யதி என்ன ஆச்சின்னு சொல்லு.. ப்ளீஸ்.." என்று கெஞ்சிய முகிலுக்கு அவளின் கண்ணீரை காணுகையில் இதயம் நடுங்குவதை போலிருந்தது."தள்ளி போங்க.." என்றாள்."யதி.. வயித்து வலி அதிகமா இருக்கா.. வா ஹாஸ்பிடல் போகலாம்.." என்று எழுந்து நின்ற முகில் அவளை எழுப்பி நிறுத்தினான்."என்னை விடுங்க.." என்றவளின் கையை இறுக்கமாக பற்றியிருந்த முகிலுக்கு அவளை விட வேண்டும் என்ற எண்ணம் கனவிலும் வரவில்லை."ஹாஸ்பிட்டல் போகலாம் வா‌‌.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்."என்னை விடுங்க.." என்றவளுக்கு கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது. அவளின் வேதனை கண்டவன் அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் அவளை தன் கைகளில் தூக்கி கொண்டான்."என்னை விடுங்க.." என்றவளுக்கு அவனை விலக்க வேண்டுமென்று மனம் முழுக்க வைராக்கியம் இருந்தாலும் அவனை விலக்கி தள்ளும் அளவுக்கு உடம்பில் சக்தி இல்லை.அவனை விட்டு விலகி இருக்க முயன்றவளின் கண்ணீர் முழுக்க அவன் சட்டையில்தான் சிந்தப்பட்டுக் கொண்டிருந்தது."கொஞ்சம் பொறுத்துக்க யதி.." என்றவன் தன் காரின் கதவை திறந்து அவளை பின் இருக்கையில் படுக்க வைத்தான். "என்னை விடுங்க.." என்றாள் யதிரா. அசைய கூட முடியவில்லை அவளால். ஆனாலும் அவனோடு உடன் செல்ல அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.முகில் காரை வேகமாக கிளம்பினான்."உனக்கு என்ன ஆச்சி யதி.? ஏன் உனக்கு இவ்வளவு வலி.?" என்றான் சோகமாக."உங்களுக்கு தேவையில்லாத விசயம் இது.." என்றவளுக்கு வலி நொடிக்கு நொடி அதிகமாவதை போலிருந்தது.மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தியவன் இங்கு வருவதற்குள் மயங்கி விட்ட யதிராவை தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.யதிராவை முழுமையாக சோதித்தார் மருத்துவர். மருத்துவரது தகவல் அறிக்கை வரும்வரை யதிராவின் அருகிலேயே அமர்ந்திருந்தான் முகில்‌. வியர்வையில் நனைந்து காய்ந்திருந்த அவளின் தலை கேசத்தை ஓரமாய் ஒதுக்கி விட்டான். அவளின் கன்னங்களை வருடி விட்டான். யதிராவின் சோர்ந்த முகம் அவன் மனதை வாட்டியது."யதிரா.." என்று கொஞ்சு குரலில் அழைத்தவன் அவளின் கைகளில் முகம் புதைத்தான்.யதிராவின் கரம் அசைந்தது கண்டவன் சட்டென எழுந்து அமர்ந்தான். யதிரா புருவங்களை சுருக்கினாள்‌. இமைகளை சிரமத்தோடு திறந்தாள். முகிலை கண்டவள் அவனின் கையில் இணைந்திருந்த தன் கையை சட்டென பின்னிழுத்துக் கொண்டாள்."இங்கே ஏன் கூட்டி வந்திங்க.?" என கேட்டவள் எழுந்து அமர முயன்றாள். ஆனால் எழுவதற்கு கூட சக்தியில்லாத அளவிற்கு உடம்பு முழுக்க சோர்வு இருந்தது."எழாதிங்கம்மா.. படுத்துக்கங்க.." என்றபடி உள்ளே வந்தார் மருத்துவர் ரேகா.முகிலின் முன்னால் வந்து நின்றவர் தன் கையிலிருந்த யதிராவின் பரிசோதனைகள் அடங்கிய பைலை அவனிடம் தந்தார்."நீங்க இரண்டு பேருமே நல்லா படிச்சவங்க போலதான் இருக்கிங்க. பிறகேன் இப்படி நடந்துக்கிறிங்க.? உங்களுக்கு குழந்தை வேணாம்ன்னு நினைச்சா அதுக்கு சுலபமான வழிகள் எத்தனையோ இருக்கு. அதை விட்டுட்டு போலி மருத்துவர்கிட்ட போய் கருக்கலைப்பு செய்ய கூடாது.." என்றார். அவரின் குரலில் கோபம் இருந்தது.மருத்துவர் சொன்னது முகிலுக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் யதிராவின் கண்களிலிருந்து மட்டும் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது."குடும்பக்கட்டுப்பாட்டுக்கு வேற வழியே இல்லாத ஆதிகாலம் போல நடந்துக்கிறிங்க நீங்க.." என்ற மருத்துவர் இருவரையும் மாறி மாறி பார்த்தார்."அபார்ட் பண்ணி எத்தனை மாசம் ஆகுது.?" என்றார்.முகில் இப்போதும் குழம்பி போய்தான் இருந்தான். யதிரா தன் கண்களை துடைத்துக் கொண்டாள். "மூன்றரை வருசம் டாக்டர்.." என்றாள். அவளின் குரலில் அழுகை இருந்தது. வருத்தம் அதிகமாக இருந்தது. துக்கமும் வேதனையும் இருந்தது.முகில் யதிராவை அதிர்ச்சியோடு பார்த்தான். "மூன்றரை வருசம் முன்னாடி என்ன ஆச்சி யதி.?" என்றான் புரியாதவனாக.யதிரா அவனை ஆத்திரத்தோடு பார்த்தாள். "என்ன ஆகணும்.? எல்லாம் போச்சி.! என் வாழ்க்கையும் போச்சி.! என் குழந்தையும் அத்தோடு அழிஞ்சி போச்சி.!" என்றவள் அதற்கு மேல் தாங்க இயலாமல் முகத்தை மூடிக் கொண்டு கதறியழுதாள்.அவள் சொன்னதை மூளையில் பதிய வைத்துக் கொள்ளவே முகிலுக்கு சில நொடிகள் பிடித்தது. யதிராவின் கதறல் ஒலி அவன் செவிகளில் ஒலித்து உண்மையை உணர்த்தியது."அழாதிங்கம்மா.. சரியான முறையில் அபார்ட் பண்ணாத காரணத்தால உங்க கருப்பையில் நிறைய கிருமிகள் தங்கி இருக்கு. அதனாலதான் பீரியட்ஸ் டைம்ல இந்த வலி வந்திருக்கு. உங்க கருப்பையை நான் சுத்தம் செஞ்சிட்டேன். உங்களுக்கு டேப்ளட்ஸ் எழுதி தந்திருக்கேன். இனி அதிகம் வலி எதுவும் இருக்காது. அதையும் மீறி எதாவது வயித்து வலி வந்தா உடனே என்கிட்ட வாங்க.." என்றார்.யதிரா அழுகையோடு சரியென தலையசைத்தாள்.மருத்துவர் அவளை ஒருதரம் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.முகில் கண்ணீரோடு இருக்கும் யதிராவை பார்த்தான். "மூணு வருசம் முன்னாடி என்ன ஆச்சி.?" என்றான்.யதிரா நிமிர்ந்தாள். அவனை பார்த்து முறைத்தாள். "அதை பத்தி உங்களுக்கென்ன கவலை.?" என்றாள்.முகில் அவளை கோபமாக பார்த்தான். "என்ன நடந்துதுன்னு நீ சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.?" என்றான்.யதிரா கேலியாக அவனை பார்த்தாள். "நான் பிரகென்டா இருக்கேன் மாமான்னு முதல்ல உங்க போனுக்குதான் நான் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.." என்று சொல்லி வேதனையாக சிரித்தாள்."உங்க வீட்டு வாசல்ல வந்துதான் அத்தை, அண்ணி நான் கர்ப்பமாக இருக்கேன். தயவுசெஞ்சி என் மாமாவை என்கிட்ட திரும்பி வர சொல்லுங்கன்னு கெஞ்சினேன்.. ஆனா நீங்கதான் வரலையே.." என்றவள் பழைய நினைவில் இன்றும் வேதனை கொண்டாள்.முகிலுக்கு இந்த செய்தி புது செய்தியாக இருந்தது. அக்காவை நம்பியதற்கு கிடைத்த அடுத்த இழப்பு இது என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு அந்த இழப்பு தந்த வலியைதான் சுத்தமாக தாங்கி கொள்ள முடியவில்லை."ஆனா எப்படி.?" என்றான். அவனால் வேறு எதையும் கேட்க முடியவில்லை."எப்படியா.?" என கேட்டவளுக்கு சிரிப்புதான் வந்தது. "என் குழந்தை என் வாழ்க்கைக்கே இடைஞ்சலா இருக்கும்ன்னு சொல்லி என் அண்ணன் என்னை வலுக்கட்டாயமா கூட்டிப்போய் கருக்கலைப்பு செஞ்சதை எப்படின்னு நான் சொல்றது.? உன் பியான்சியோட அக்கா நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காம என்னை கட்டாயப்படுத்தி என் குழந்தையை அழிச்சதை எப்படின்னு நான் சொல்வேன்.?" என கேட்டாள்.குழந்தை அழிந்தது என்பதை விடவும் அந்த குழந்தை எப்படி அழிந்தது என தெரிந்ததும் என்ற செய்திதான் அவனை அதிகமாக தாக்கி விட்டது.சௌந்தர்யாவும் ரூபனும் தனக்கு இவ்வளவு நாள் செய்த துரோகங்களை தெரிந்து கொண்டிருந்த முகிலுக்கு இந்த துரோகம் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு அடியை தந்து விட்டது. அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று கூட தோன்றியது.யதிராவின் கண்ணீரை கவனிக்க நேரமில்லை அவனுக்கு. அவனது இதயத்தின் ரணமே அதற்கும் மேலான வலியை தந்துக் கொண்டிருந்தது. அவனால் எதையும் சரியாக யோசிக்க கூட முடியவில்லை. யதிராவின் மூன்று வருட வலியை இன்றைய ஒரே நாளில் அனுபவித்தான் முகில்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1053VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN