44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழும் யதிராவை கவனிக்க நேரமில்லாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தான் முகில். அன்றைய நாளில் யதிரா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.பிறவாமல் அழிந்த குழந்தையும், உயிர் பெறாமலேயே முற்று பெற்ற தாய்மையும் அவனின் நெஞ்சில் தீயை தகிக்க செய்தது.அழுபவளின் விசும்பல் சத்தத்தில் தன் சுய நினைவுக்கு வந்தான் முகில். அவளின் தோளில் கை வைத்தான்."அழாத யதி.." என்றான். அவனின் குரல் கரகரத்து போய் இருந்தது.முகிலின் கையை தட்டி விட்டாள் யதிரா. "என்னை தொடாதிங்க.. எனக்கு அருவெறுப்பா இருக்கு.." என்று வெறுப்பாய் சொன்னாள்.முகிலால் அவளின் வெறுப்பை புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளை சமாதானம் செய்ய தன்னால் முடியுமா என யோசித்தான்."யதி சாரி.. எனக்கு நிஜமாவே தெரியாது.." என்றவனை ஆத்திரத்தோடு முறைத்தாள்."உங்களை கட்டிக்கிட்ட போது தெரியாதா இப்படி ஒருநாள் வரும்ன்னு.?" என்றாள் கோபமாக.முகிலால் இக்கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை."என் குழந்தையை அழிக்காம விடுங்கன்னு என் அண்ணன்கிட்டயும் அந்த டாக்டர்க்கிட்டயும் எப்படியெல்லாம் கெஞ்சினேன்னு உங்களுக்கு தெரியாது.. மாமாக்கிட்ட தகவல் சொல்லுங்க அண்ணின்னு உங்க அக்காக்கிட்டயும் உங்க அம்மாக்கிட்டயும் நான் எப்படி கெஞ்சினேன்னு உங்களுக்கு சுத்தமா தெரியாது.. உங்க அப்பாக்கிட்ட கெஞ்சியதும்.. இறந்த குழந்தையை நினைச்சி ஏங்கி ஏங்கி அழுததும் உங்களுக்கு கண்டிப்பா தெரியாது.." என்றாள் கண்ணீரோடு.முகில் அவளின் கையை பற்றினான். "சாரி யதி.." என்றான். தன் கையை வெடுக்கென பின் இழுத்துக் கொண்டாள்."என் கையை விடுங்க.. உங்களை பார்க்க கூட எனக்கு பிடிக்கல.. தயவுசெஞ்சி நீங்க இங்கிருந்து போயிடுங்க.. ப்ளீஸ்.." என்றாள்.முகில் எழுந்து நின்றான். யதிராவை இப்போது சமாதானம் செய்ய இயலாது என உணர்ந்து கொண்டவன் அவளை சோகமாக பார்த்து விட்டு வெளியே நடந்தான்.மருத்துவர் அறை கதவை தட்டினான் முகில். மருத்துவர் அனுமதி தந்ததும் உள்ளே சென்றான்."உங்க வொய்ப்புக்கு இப்பவும் வயிறு வலிக்குதுன்னு சொன்னாங்களா.?" என சந்தேகமாக கேட்டார் மருத்துவர் ரேகா.முகில் மறுப்பாக தலையசைத்தான். "அதெல்லாம் எதுவும் இல்லை டாக்டர்.. இந்த வயித்து வலி இனியும் வராதுதானே.?" சிறு சந்தேகமாக கேட்டான்.மருத்துவர் தன் கைகளை கோர்த்தபடி மேஜை மீது கையை ஊன்றினார். "இனி எந்த பிரச்சனையும் இருக்காது சார்.. நீங்க என்னை நம்பலாம். அவங்க கருவை சரியா க்ளீன் பண்ணாம விட்டிருக்காங்க. அதனால்தான் இவ்வளவு வலியுமே. இனி அப்படி இருக்காது. ஆனா நீங்க இன்னமும் லேட் ஆகி இருந்தா கருப்பையில் பாதிப்பு வந்திருக்கும். அப்புறம் வருங்காலத்துல உங்களுக்கு குழந்தை பிறக்கற வாய்ப்பு கூட இல்லாம போயிருக்கும்.." என்றார் அவர்.அவர் சொன்னது கேட்டு முகிலின் முகம் பேயறைந்தார் போல் ஆகிவிட்டது."நீங்க ரிஸ்க் எடுக்காம சீக்கிரம் வந்தது ரொம்ப நல்லது.. இனி கவலை இல்ல.." என்றார் மருத்துவர்."நன்றி டாக்டர்.. அவளை நான் கூட்டி போகலாமா.?" என்றான் இருக்கையில் இருந்து எழுந்து நின்றபடியே."கூட்டிப் போங்க.. ஆனா இரண்டு மூணு நாளாவது முழு ஓய்வு எடுக்க சொல்லுங்க.. நான் எழுதி தந்திருக்கும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட சொல்லுங்க.." என்றவர் தனது அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.இறந்த குழந்தைக்காய் மீண்டும் ஒரு முறை அழுது சோர்ந்திருந்த யதிராவின் முன்னால் வந்து நின்றான் முகில்."டாக்டர் வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லிட்டாரு. வா போகலாம்.." என்றவன் அவளின் பொருட்களை எடுத்து கவரில் பத்திரப்படுத்த ஆரம்பித்தான்.யதிராவுக்கு அவனோடு செல்ல விருப்பமில்லை. ஆனால் தனியாக செல்லும் அளவுக்கு அவளுக்கு முழு தெம்பும் இல்லை. சிரமத்தோடு எழுந்து நின்றாள்."என்னை வீட்டுல கொண்டு போய் விட்டுட்டுங்க சார்.. இன்னைக்கு என்னால ஆபிஸ்க்கு வர முடியாது.." என்றாள் யதிரா.அவளின் பேச்சை கண்டு முகிலுக்கு வலித்தது. "ஓகே.." என்றான் சிறு குரலில்.யதிரா அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வெளியே நடந்தாள். முகில் அவளை பின்தொடர்ந்து நடந்தான். யதிராவின் தள்ளாட்டத்தை கண்டு அவளை ஒரு கையால் தாங்கி பிடித்தான். ஆனால் அவள் விலகி கொண்டாள். "என்னை தொடாதிங்க.." என்றவள் அருகே இருந்த சுவற்றை பிடித்துக் கொண்டு நடந்தாள்.முகில் காரின் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.சோர்வாக இருந்த காரணத்தால் மறுக்க கூட இயலாமல் காரில் ஏறி அமர்ந்தாள் யதிரா.வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த கே.கே யதிராவையும் முகிலையும் கண்டு குழம்பி போனாள்."நீங்க இரண்டு பேரும் ஒன்னா ஏன் வந்திருக்கிங்க.?" குழப்பமாக கேட்டவளுக்கு பதில் சொல்லாத முகில் யதிராவை அழைத்து சென்று அவளது அறையில் படுக்க வைத்தான்."ரெஸ்ட் எடு.." என்றவன் அவள் மீது போர்வையை போர்த்தி விட்டு வெளியே நடந்தான்."என்னாச்சி அவளுக்கு.?" என கேட்ட கே.கேவின் கேள்வியை காதில் கூட வாங்காதவன் சோபாவின் அப்படியே விழுந்தான். இதுவரை அடக்கி வைத்திருந்த சோகம் நெஞ்சை குப்பென தாக்கியதில் அதன் வேதனையை தாங்க இயலாமல் முகத்தை மூடிக் கொண்டான். கண்களில் கண்ணீர் கசிந்தது."என்ன ஆச்சி முகி.?" முகிலின் இந்த திடீர் வேதனை கண்டு கே.கேவும் அதிர்ந்து போனாள்."எங்க குழந்தை செத்துடுச்சி கே‌.கே.." என்றவன் அதற்கு மேலும் முடியாமல் கதறியழுதான். அவனின் கதறல் கே.கேவையே நிலைகுலைய செய்து விட்டது. முகிலோடு சேர்ந்து மனதின் பல துயரங்களையும் கடந்து வந்தவள் கே‌.கே. ஆனால் இன்று அவன் உடைந்ததை போல ஒரு நிலையில் என்றுமே அவனை பார்த்ததில்லை அவள்.முகிலின் கதறல் யதிராவின் காதிலும் விழுந்தது. அவளது கண்களிலும் கண்ணீர் பெருகி வழிந்தது."புரியல முகி.. என்ன ஆச்சி..?" என பதறியபடி கேட்ட கே.கேவிடம் நடந்ததை விளக்கமாக சொன்னான் முகில்.அவன் சொன்னதை கேட்டு கே.கேவிற்குமே கூட ஏகப்பட்ட கோபம் வந்தது. "ரூபனும் சௌந்தர்யாவும் இன்னும் வேற என்னதான் செய்யாம இருக்காங்க‌. உங்க இரண்டு பேரையுமே ஒரு கேமோட கேரக்டர்ஸ் மாதிரி யூஸ் பண்ணிட்டாங்க.. அவங்களுக்கு என்ன தண்டனை தந்தாலும் நம்ம காயம் ஆறாது‌.." என்று ஆதங்கமாக சொன்னாள் கே.கே.முகில் ஆமென தலையசைத்தான். அவனுக்கு இருந்த கோபம் நொடிக்கு நொடி அதிகமாகி கொண்டிருந்ததே தவிர துளியும் குறையவில்லை."அவனை நான் சும்மா விட போறதில்ல.." என்று ஆத்திரமாக சொன்னவன் தன் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்."யதிராவை பத்திரமா பார்த்துக்க.." என்றவன் வெளியே ஓடினான்.புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கேமிங் கிளப் பற்றிய யோசனையில் அமர்ந்திருந்தான் ரூபன். நீலா அவன் முன் கேசரியால் நிரம்பியிருந்த கின்னத்தை நீட்டினாள்."வாழைப்பழ கேசரி செஞ்சேங்க.. சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.." என்றாள்."இவ ஒருத்தி நேரம் கெட்ட நேரத்துல.." என முனகியவன் அவள் தந்த கேசரியை கையில் எடுத்துக் கொண்டான்."நான் சாப்பிட்டு பார்த்துட்டு அப்புறமா சொல்றேன்ம்மா.. நீ போய் உன்னோட மத்த வேலைகளை பாரு.." என சொன்னான்.அவள் அங்கிருந்து சென்றபிறகு கேசரியை தூரமாய் எடுத்து வைத்தவன் கேம் கிளப் பற்றிய யோசனையில் மீண்டும் ஆழ்ந்தான்.கதவு படபடவென தட்டப்படும் சத்தம் வீட்டில் இருந்த அனைவருக்குமே கேட்டது. ரூபன் கதவை கடுப்போடு பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை பற்றிய யோசனையிலேயே ஆழ்ந்தான்.கதவு மீண்டும் படபடவென தட்டப்பட்டது. ரூபன் எரிச்சலோடு பற்களை கடித்தான்."நீலா.. யாரோ கதவை தட்டுறாங்க பாரு.." என்று மனைவிக்கு வேலை வைத்தான்.நீலா சென்று கதவை திறந்ததும் புயலாக வீட்டுக்குள் புகுந்தான் முகில்."இங்கே என்ன பண்றிங்க நீங்க.?" என கேட்ட நீலாவின் கேள்வியை கண்டுக்கொள்ளாதவன் நேராக ரூபனின் முன்னால் சென்று நின்றான்.தன் சிந்தனை தடைப்பட்ட கோபத்தில் நிமிர்ந்து பார்த்தான் ரூபன். அவனின் சட்டையை பிடித்து அவன் முகத்திலேயே ஓங்கி ஒரு குத்து விட்டான் முகில்."துரோகி." என்றவன் அவனது முகத்தில் இடைவிடாமல் குத்தினான்.முகிலின் அடியால் ரூபன் தடுமாறி பின்னால் சாய்ந்தான்."அவரை அடிக்காதிங்க.. ப்ளீஸ்.. அவரை விடுங்க.." என்று கெஞ்சியபடி முகிலின் கை முட்டியை பற்றினாள் நீலா.முகில் ரூபனின் தொடையில் உதைத்தான். "இன்னைக்கு உன்னை கொல்ல போறேன்டா.." என்றவன் நீலாவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக்கொண்டான். ரூபனின் தாடையில் சராமாரியாக குத்துக்களை விட்டான். எவ்வளவு அடித்தாலும் கூட அவனுக்கு ரூபன் மீது இருந்த ஆத்திரம் குறையவே இல்லை.யதிராவின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் இவனின் ரத்தத்தில் கணக்கு கழிக்க திட்டமிட்டவன் போல அவனை பின்னினான்."என்னை விடுடா.." ரூபன் வலி தாங்காமல் அலறினான். அந்த அலறலும் அவனுக்கு கோபத்தைதான் தந்தது."உன்னை மாதிரி ஒரு பிராணியெல்லாம் உயிரோடவே இருக்க கூடாது.. செத்து தொலைடா‌‌.." என்று ரூபனின் வயிற்றில் குத்தினான் முகில்."பாவம்ங்க அவரு.. தயவுசெஞ்சி அவரை விட்டுடுங்க.." என்று கெஞ்சினாள் நீலா.அவளை திரும்பி பார்த்து முறைத்தான் முகில். "முட்டாள்தனமா நான்தான் இருந்துட்டேன்.. இனி நீங்களும் அப்படி இருக்காதிங்க.. இவன் ஒரு பெரிய பிராடு.. இவனை நம்பறதுக்கு பதிலா கண்ணை கட்டிக்கிட்டு போய் கிணத்துல இறங்கலாம்.." என்றான் ஆத்திரமாக.முகிலின் ஆத்திர பேச்சை கண்டு நீலா பயந்து போனாள். ஆனாலும் கணவனை அப்படியே அடி வாங்க விட மனமில்லை அவளுக்கு.முகிலை ரூபனிடமிருந்து விலக்க முயற்சித்தாள் நீலா. ஆனால் அவளால் முகிலை ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.முகிலிடம் அவள் கெஞ்சிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர் அந்தாறு போலிஸ்கார்கள்.போலிஸ் இன்ஸ்பெக்டர் சக்தி முகிலை கண்டதும் சட்டென பாய்ந்து சென்று அவனை தூர இழுத்து நிறுத்தினாள்."சார்.. என்ன காட்டுமிராண்டிதனம் இது.?" என்றாள் கோபமாக.முகில் தன் சட்டை கையால் தன் கண்களை துடைத்துக் கொண்டான். "உங்களுக்கு தெரியாது மேடம்.. என் மொத்த வாழ்க்கையையுமே இவன் மொத்தமா அழிச்சிட்டான்.. இவன் உயிரோடு இருக்கவே தகுகி இல்லாதவன்.." என்றான் ஆத்திரமாக."கூல் டவுன் முகில்.. நாங்க இங்கே எதுக்காக வந்திருக்கோம்.? எங்களை எங்க வேலையை பார்க்க விடுங்க.‌ சட்டம் எதுக்காக இருக்கு.? எங்களையும் கொஞ்சம் நம்புங்க.. இவருக்கான தண்டனையை நாங்க வாங்கி தருவோம்.." என்றார்.முகில் தன் கை விரல் முட்டியில் இருந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டான். ரூபனை அடங்கா கோபத்தோடு பார்த்தான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1019VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN