52

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சௌந்தர்யாவின் கணவனின் அருகே வந்தான் முகில். தன் போனை எடுத்தான்."ஒருத்தரோட பர்சனல் விசயத்துல தலையிடுவது தப்புன்னு எனக்கும் தெரியும் மாமா.. ஆனா அதை விடவும் பெரிய தப்பு நம்பி இருப்பவங்களுக்கு துரோகம் செய்றது.." என்றவன் போனில் இயர்போனை சொருகி அதை மாமனிடம் தந்தான். போனில் இருந்த ஒலிப்பதிவு ஒன்றை இயக்கினான்.ஒலிப்பதிவை கேட்ட சௌந்தர்யாவின் கணவன் முகத்தில் முதலில் தோன்றியது கோபம்தான். ஆனால் சற்று நேரத்திலேயே அந்த கோபத்தை முந்திக்கொண்டு அவனை முழுதாக ஆக்கிரமித்து விட்டது வலி.காதில் இருந்த இயர்போனை கழட்டி முகில் கையிலேயே தந்தான். குழந்தையை இறுக்கமாக அணைத்தபடியே அங்கிருந்து வெளியே நடந்தான்."மாமா நில்லுங்க.. எங்கே போறிங்க.?" என்று அவனது கை பிடித்து நிறுத்தினேன் முகில்."மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு முகில்.. இப்போதைக்கு எதையும் பேசுற மைன்ட் செட்ல இல்ல.. அப்புறமா பேசலாம்.." என்றவன் முகில் திகைத்து நிற்கும்போதே அங்கிருந்து சென்று விட்டான்.யதிராவும் அங்கிருந்து புறப்பட்டாள். அவளை பின்தொடர்ந்து வந்தான் முகில்."யதி சாரி.." என்றான்.யதிரா அவன் சொன்னதை காதில் வாங்காமலேயே அங்கிருந்து கிளம்பினாள்.யதிரா வீட்டிற்கு வந்தபோது அவளுக்கு சுட சுட காப்பி தந்தாள் கே.கே."நீ ஓகே வா.?" என்றாள் சந்தேகமாக.யதிரா காப்பியை ஒரு விழுங்கு குடித்துவிட்டு இல்லையென தலையசைத்தாள்."நான் எப்படி ஓகேவா இருக்க முடியும்.? என் அப்பா கொலை செய்யப்பட்டிருக்காரு.. என் அண்ணன் கொலைக்காரனா இருக்கான். என் கணவன் என்னை ஏமாத்திட்டு போயிட்டார்.. என்னோட தோழி எனக்கு துரோகியா இருக்கா.." என்றாள் சோக குரலில்.அவள் சொன்னது கே.கேவிற்கு சோதனையாக இருந்தது."யதி.. சாரி.. முகில் முன்னால நீ ஒரு வீர பெண்ணா வாழணும்ன்னுதான் ஆசைப்பட்டேன்.. நான் செஞ்சது தப்புன்னு எனக்கே தெரியும்.. என்னோட காரியங்கள் உனக்கு கஷ்டத்தை தந்திருக்கும்ன்னு தெரியும். சாரி.. ஆனா நீ இப்படி உடைஞ்சி போய் பேசுறதைதான் இப்பவும் நான் வெறுக்கறேன். ஒருத்தரை பிடிக்கலன்னா நேரா நின்னு எதிர்த்து கேளேன்.. ஏன் இப்படி சோக கீதம் பாடி உன்னை நீயே வருத்திக்கறன்னுதான் கவலைப்படுறேன்.." என்றாள்.யதிராவுக்கும் அவள் சொல்வது புரிந்துதான் இருந்தது. ஆனால் நாம் நேசிக்கும் ஒருவரிடம் எப்படி எதிர்த்து நிற்பது என அவளுக்கு தெரியவில்லை. தான் பட்ட காயத்தை அவர்களுக்கு தர கூடாது என நினைத்தாள்."என்னோட இடத்துல இருந்து யோசிக்க உங்க யாராலும் முடியாது.." என்ற யதிரா வழக்கம் போல தன் அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டாள்.சற்று நேரத்தில் முகிலும் அங்கு வந்து சேர்ந்தான். ஸ்டேசனில் நடந்த அனைத்தையும் கே‌.கேவிடம் சொன்னான்.யதிராவின் புது அவதாரம் கே‌.கேவிற்கு பிடித்திருந்தது. அங்கே மனம் உடைந்த சௌந்தர்யாவின் கணவனுக்காவும் நீலாவிற்காகவும் வருத்தமும் கொண்டாள்.யதிரா விட்டத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டிருந்தாள். வெளியே தன்னை பாராட்டும் கே.கேவை நினைக்கையில் இவளுக்கு சிரிப்பு வந்தது.இறந்து போன தந்தையையும் அழிந்து போன குழந்தையையும் நினைத்து கண்ணீர் வடித்தபடியே உறங்கி போனாள் அவள்.அவள் நன்றாக உறங்கிய நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தான் முகில். அவளின் கையை பற்றியபடி அவளருகில் அமர்ந்தான்."சாரி யதி.. நான் சொல்ல வருவதை உன்னால புரிஞ்சிக்க கூட முடியலன்னு தெரியும். அதே சமயம் என்னோட பிரிவால் உனக்கு ஏற்பட்ட காயங்களை நானும் சரியான முறையில் புரிஞ்சிக்கல.. நீ என்னை நூறு சதவீதம் நம்புவதை நினைச்சி நான் சந்தோசப்படுறேன். ஆனா அதே சமயம் எனக்கு ஏதாவது ஆனா நீ என்ன செய்வியோன்னு நினைச்சி பயப்படுறேன்‌‌.. மூணு வருசம் முன்னாடி நிஜமாவே நான் செத்திருந்தா இன்னேரம் உன் நிலமை என்னவா இருக்கும்ன்னு நினைச்சி பயப்படுறேன். நான் உன்னை ரொம்ப விரும்புறேன் யதி.. அதனாலதான் இப்படி கிறுக்குதனமா உனக்கு டாஸ்க் வச்சேன். நீயும் என்னை போலவே வலிகளை அனுப்பவிச்சிருக்க.. ஆனா இன்னமும் ஸ்ட்ராங்கா மாறாம அப்படியே இருக்க.. அழற.. உன்னை மாத்த நினைச்ச எனக்கே இப்ப நான் செஞ்சது அத்தனையும் தப்புன்னு தோணுது. பத்தோடு பதினொன்னா நானும் இருந்திருக்கணும். நாலு லட்ச ரூபா இன்சூரன்ஸ் பாலிசி மட்டுமே உன்னை காப்பாத்தி இருக்கும்ன்னு நம்பி இருக்கணும். இல்லன்னா நீ சாகற வரைக்கும் எனக்கும் சாவு வராதுன்னு நம்பி இருக்கணும். நான்தான் முட்டாள் யதி.." என்றவன் அவளின் முகம் பார்த்தான்.அவளின் வீங்கிய கண்களும் மெலிந்த தேகமும் அவனுக்கு வேதனையை அதிகரித்தன. பெருமூச்சோடு எழுந்தவன் அங்கிருந்து சென்றான்.முகில் அந்த அறையின் கதவை சாத்தி சென்ற இரண்டாம் நொடியில் கண்களை திறந்தாள் யதிரா. அவளின் திறந்த விழிகளில் இருந்து சூடான கண்ணீர் கொட்டியது. புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டாள்."எப்பவும் அழ மட்டும் வைப்பாரா இவர்.?" என கேட்டாள்.கே.கேவிடம் சொல்லிக் கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டான் முகில். அப்பா வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருந்தார். இவன் வந்ததும் "அங்கேயே நில்லுடா.." என்றார் சினிமா பாணியில்."எதுக்கு.?" என கேட்டபடியே வீட்டு படியில் ஏறினான் முகில்."என் பொண்ணு தப்பு செஞ்சா அதை என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே.? உன்னை யாருடா போலிசுக்கு போக சொன்னது.?" என கத்தினார்."உங்க பொண்ணோட யோக்கியத்துக்கு நான் இந்த நியூஸை முதல்ல பேப்பர்லதான் போட்டிருக்கணும். அடக்கமா போய் போலிஸ்ல சொன்னது என் தப்புதான்.. ஆனா இதுலயும் இன்னொரு விசயம் இருக்கு. முதல் கம்ப்ளைண்டை மேக்னாதான் தந்திருக்கா.. நான் இரண்டாவதா புகார் தந்துட்டு சாட்சி மட்டும்தான் சொன்னேன்.." என்றான்.அம்மா வீட்டின் ஊஞ்சலில் சிலை போல அமர்ந்திருந்தாள். முகில் தன் அறை நோக்கி கிளம்பினான்."இது என் வீடு.." என்றார் அப்பா.முகில் படிகளில் நின்றபடி அப்பாவை பார்த்தான். "என் வீடுன்னு நானும் சொல்லல.. என் பொருட்களை எடுத்துட்டு போகத்தான் வந்தேன் நான். நீங்க இந்த வீட்டையே கட்டிப்பிடிச்சிட்டு உங்க கொலைக்கார மகளுக்கே வக்காலத்து வாங்கிட்டு இருங்க.. நான் என்ன வேணாம்ன்னா சொன்னேன்.?" என்றவன் படிகளில் ஏறினான்.தனது பொருட்களை எடுத்து பெட்டிகளில் அடுக்கினான். அவன் இரண்டு சூட்கேஸ்களோடு கீழே இறங்கி வந்ததும் அப்பாவுக்கு கோபம் இன்னும் அதிகமானது.அப்பாவின் குணம் என்னவென்று முகிலுக்கு நன்றாக தெரியும். தவறே செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்டு காலில் விழ சொல்பவர் அவர். அவரின் இந்த குணத்தை அடியோடு வெறுத்தான் முகில். கண்களை திறந்துக் கொண்டே இப்படி தவறு இழைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கோபம் கொண்டான்."இந்த வீட்டை விட்டு போனா மறுபடியும் நீ எப்பவும் இந்த பக்கம் வரவே கூடாது.. நான் செத்தா கூட நீ கொள்ளி போட கூடாது.." என்றார்.முகில் அவரை முறைப்பாக பார்த்தான். "உங்க கொலைக்கார மகக்கிட்ட சொல்லுங்க.. பெயில்ல வந்து கொள்ளி வச்சிட்டு போகட்டும்.." என்றவன் சூட்கேஸ்களை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்."முகில் நில்லு.." என்றாள் அம்மா.சலிப்போடு திரும்பினான் முகில். அம்மா என்ன சொல்ல போகிறாளோ என அலுப்பாக இருந்தது அவனுக்கு."என்னையும் உன்னோடு கூட்டிப் போ.." என்றபடி ஊஞ்சலில் இருந்து இறங்கி நின்றாள் அவள்.முகில் அம்மாவை ஆச்சரியமாக பார்த்தான். அதிர்ந்து நின்ற அப்பாவையும் பார்த்தான்."என்னடி ஆச்சி உனக்கு.?" என்றார் அவர்."இது அவர் வீடு.. அவ அவரோட பொண்ணு. நான் இந்த வீட்டை பொறுத்தவரை ஒரு வேலைக்காரி.. நேரத்துக்கு சமைச்சி, சுத்தமா துணியை துவைச்சி, புள்ளைங்களை பெத்து வளர்த்தி விடணும். ஆனா என்னோட மனசு புண்படுறதை பத்தி இங்கே யாரும் யோசிக்க மாட்டாங்க. என்னை பத்தி யோசிக்காதவங்களுக்காக நானும் இனி யோசிக்க விரும்பல.. இங்கே இருக்கறது ஏதோ முள் வேலியில் மாட்டிட்டு இருக்கற மாதிரி இருக்கு.. என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடு.. இரண்டு வேளை சாப்பாடும் வருசத்துக்கு மூணு புடவையும் எடுத்துக் கொடு. அதுவே போதும். இந்த வீட்டுல அடிமையா இருக்கறதை விட உன் வீட்டுல வேலைக்காரியா இருக்கலாம்.." என்றாள்.முகிலுக்கு நெஞ்சத்தின் வலி அதிகமானது. "என்கிட்ட ஏன்ம்மா இப்படி கேட்கற.? நான் உன்னை பார்த்துக்க கூட மாட்டேனே.?" என்றான் வேதனை குரலில்.அம்மா சிரித்தாள். "உன் பொண்டாட்டிக்கு நீயேதான் விவாகரத்து தந்த.. அப்புறம் நீயே காணாம போன.. இப்ப நீயே திரும்பி வந்த.. உன்னை மட்டும் நான் எப்படி முழுசா நம்ப முடியும்.?"முகில் சூட்கேஸ்களை அப்படியே விட்டுவிட்டு அம்மாவின் அருகே வந்தான். பெரிது பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டான்."அம்மா நீயாவது என் நிலமையை புரிஞ்சிப்பன்னு நினைக்கிறேன். நான் நானா விவாகரத்து தரல.. எனக்கு ப்ளட் கேன்சர்ன்னு மேக்னா மூலமா உன் பொண்ணுதான் பொய் ரிப்போர்ட் தர வச்சா.. மூணு மாசத்துல செத்து போக போறேன்னு நினைச்சி குழம்பிப்போய் உட்கார்ந்து அழுதுட்டு இருந்தவனோட மனசை மாத்தி விவாகரத்து தர வச்சவ சௌந்தர்யாதான். சாக போற நேரம் வந்துடுச்சின்னு தெரிஞ்சதும் என்னால எதையும் சரியா யோசிக்க முடியல. நான் விவாகரத்து பண்ணிட்டு பிரிஞ்சி போயிட்டா அப்புறமாவது யதிரா நல்லா இருப்பான்னு அக்காதான் என்னை நம்ப வச்சா.. எனக்கு அந்த சமயத்துல பைத்தியம் பிடிக்காம இருந்ததே பெரிய விசயம்.." என்றான் நெற்றியை தேய்த்தபடி.இவன் சொன்னது கேட்டு அப்பாவிற்கும் முகம் மாறி போனது. அம்மா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்."ப்ளட் கேன்சரா.? ஏன்டா இதை முதல்லயே சொல்லல.?" என்றாள் அழுகை குரலில்."கொடுமை.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டவன் "அது பொய் ரிப்போர்ட்ம்மா.. உன் பொண்ணு பண்ண சூழ்ச்சி.." என்றான்.அம்மாவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. மகனை பரிதாபமாக பார்த்தாள். அப்பாவை முறைத்தாள்."என்னை மன்னிச்சிடுடா.. நானும் உனக்கு நிறைய துரோகம் பண்ணிட்டேன்.. அவளோட பேச்சை கேட்டு யதிராவை ரொம்ப கொடுமை பண்ணிட்டேன்.." என்றாள்.முகிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "சரி விடும்மா.. சரி வா போகலாம்.." என்றான்.முகில் முன்னால் நடக்க அம்மா அப்பாவை பார்த்தாள். "பார்த்துக்கங்க.. உங்க வீட்டுல இருந்து நான் எதையும் எடுத்துட்டு போகல.. அப்புறம் நான்தான் உங்க சொத்தை கொள்ளையடிச்சிட்டு போன மாதிரி சொல்லிடாதிங்க.." என்றவள் மகனின் பின்னால் நடந்தாள்.காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்தார் அப்பா. இப்போதும் கூட மகள் மீது கொண்ட பாசத்தை அவரால் விலக்கி கொள்ள முடியவில்லை. கண் மூடி தனமான பாசம் அவருக்கு நியாயம் அநியாயத்தை பிரித்து காட்ட தவறியது. அதே சமயம் மகன் மீது ஒட்டிக் கொண்டிருந்த சிறு பாசம் அவரை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போய் அமர்ந்திருந்தார் அவர்.முகில் தானும் யதிராவும் வாழ்ந்த வீட்டிற்கு வந்தான். கதவை திறந்தான். "இனி இதுதான் நம்ம வீடும்மா.." என்றான்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1060VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN