53

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆதாரம் இருந்த பார்சலை தனக்கு யார் அனுப்பி இருப்பார்கள் என்று யோசித்தபடி அமர்ந்திருந்தாள் கே‌.கே.மணி காலை எட்டை கடந்துக் கொண்டிருந்தது. யதிரா தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். அவளின் தந்தை கொலை செய்யப்பட்ட விசயத்தை அவள் அறிந்து இன்றோடு ஆறு நாட்கள் ஆகி விட்டது. எவ்வளவோ அழுது தீர்த்தாகி விட்டது. இந்த ஆறு நாட்களில் பலமுறை கே‌‌.கேவிடம் கோபத்தில் கத்தினாள். தன் மனகுமுறலை அவளிடம் சொல்லி கதறினாள். நாட்கள் கடந்ததில் அவளுக்கே அவளின் அழுகையும் குமுறலும் வெறுப்பை தந்துவிட்டன."நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன் கே‌.கே.." என்றபடி அவள் முன் வந்து நின்றாள் யதிரா.கே‌.கே அவளின் முகத்தை பார்த்தாள். நேற்று இரவு யதிரா சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது."தேங்க்ஸ் கே.கே.. நீ ஒருத்தி என் வாழ்க்கையில் இல்லாம இருந்திருந்தா நான் இன்னும் அதிகமா கஷ்டப்பட்டிருப்பேன்.. நான் என் நீலா அண்ணிக்கிட்ட உங்களுக்கு நான் இருக்கேன்னு சொன்னேன்.. அப்போதுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியத்துவமானவன்னு புரிஞ்சது. உனக்காக நான் இருக்கேன்னு ஒரு நம்பிக்கையை இங்கே யாரும் ஈஸியா தரது இல்ல. ஆனா நீ எனக்கு தந்த.. மாமாவோடு உனக்கு இருந்த நட்புக்காக நீ இதை செஞ்சிருந்தாலும் கூட நீ எனக்கு செஞ்ச உதவியை என்னைக்குமே மறக்க மாட்டேன்.. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.. இதான் உண்மை. ஏதோ ஒரு வகையில் உனக்கு நன்றிக்கடன் செலுத்த டிரை பண்றேன்.." என்றாள் அவள்.அவள் சொன்னதை கே.கே புரிந்து கொள்ளும் முன்பே வழக்கம் போல தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.நேற்றைய நினைவில் இருந்தவள் முன்பு கை விரலை சொடுக்கிட்டாள் யதிரா. "என்னாச்சி கே‌.கே.?" என்றாள்.ஒன்றுமில்லை என தலையசைத்தாள் கே.கே."ஈவினிங் பார்க்கலாம்.." என்றவள் காலணிகளை அணிந்து கொண்டு வெளியே நடந்தாள்.அவள் அலுவலகம் வந்து சேர்ந்தபோது அங்கே முகில் அவளுக்கு முன்னால் வந்திருந்தான். இந்த ஆறு நாட்களாக விடுமுறை எடுத்திருந்தாள் யதிரா. முகிலும் தன்னால் செய்ய முடிந்த அதிகபட்ச உதவியாக அவளது விடுமுறையை பற்றி குறை சொல்லாமல் இருந்தான்.விடுமுறைக்கு பிறகு யதிரா அலுவலகம் வந்ததில் முகிலுக்கு மிகுந்த சந்தோசம். எங்கே அவள் இவன் மீது இருந்த கோபத்தில் எங்கேயாவது ஓடி போய் விடுவாளோ என அதிகமாக பயந்திருந்தான் அவன்.தன்னை பார்த்து புன்னகைத்த முகிலுக்கு பதில் புன்னகை தந்தாள் யதிரா. முகில் நம்ப முடியாமல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்."ஒரு வாரமா லீவ் ஆயிடுச்சி‌.. சாரி சார்.." என்றாள்.அவன் சரியென தலையசைத்தான். யதிரா தன் வழக்கமான வேலைகளை செய்ய தொடங்கினாள்.மதிய உணவு இடைவேளையின் போது யதிராவின் வருகையை சிறு பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள் அவளின் நண்பர்கள்."ஒரு வாரமா உன்னை நான் மிஸ் பண்ணேன்‌.." என்றான் வர்சன்."நானும்தான்.." என்றாள் அவள் உணவை உண்டபடியே. அவள் சொன்னதை நம்ப முடியாமல் அவளை சந்தேகமாக பார்த்தான் வர்சன். ஆனால் அவள் அதன்பிறகு அவளை கண்டுக் கொள்ளவில்லை.மாலையில் அலுவலகம் முடிந்து வெளியேறியவளின் முன்னால் வந்து தன் காரை நிறுத்தினான் முகில்."நான் உன்னை டிராப் பண்றேன்.." என்றான்.யதிரா அமைதியாக வந்து ஏறிக் கொண்டாள். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு சிறு மகிழ்ச்சியை தந்த அதே வேளையில் பயத்தையும் தந்துக் கொண்டுதான் இருந்தது."ஆர் யூ ஓகே.?" என்றான் காரை ஸ்டார்ட் செய்தபடி.யதிரா ஆமென தலையசைத்தாள்."ஆனா எனக்கு பயமா இருக்கு.." என்றான் அவன். அவள் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்து படுத்தாள். "நீங்களும் கே.கேவும் எனக்காக இம்பார்ட்டன்ட் தரிங்க.. இதுதான் எனக்கு பயத்தை தருது.‌. ரொம்ப குழப்புது.." என்றாள் கண்களை மூடியபடியே."புரியல யதி.." என்றான் முகில் வாடிபோன குரலில்.யதிரா கண்களை மூடிய வண்ணமே சிரித்தாள். "எனக்கு மனசு விட்ட பேச கூட உங்களையும் கே‌.கேவையும் தவிர தவிர வேற யாரும் இல்ல.. என்னோட நிலமையை உங்க யாராலயும் புரிஞ்சிக்க முடியல.. சோக கீதம் பாடுறான்னு ஒரு வரியில் சொல்லுறிங்க நீங்க. ஆனா நான் என் மனசுல உள்ளதை வெளியே சொல்லிதானே ஆகணும்.." என்றாள்.முகில் சாலையோரம் காரை நிறுத்தினான். யதிரா கண் விழித்து பார்த்தாள். மீண்டும் இமைகளை மூடிக் கொண்டாள்."என்ன சொல்லணுமோ சொல்லு.. நான் கேட்டுக்கறேன்.." என்றான் அவன்.யதிரா பெருமூச்சு விட்டாள். "நீங்க ஏன் மாமா எனக்கு இம்பார்டன்ட் தரிங்க.? உங்களுக்கு நான் அவ்வளவு முக்கியமானவளா இருந்திருந்தா உங்க பிரச்னைகளை சொல்லி புரிய வச்சிருக்கலாமே.. ரோடு கிராஸ் பண்ண தெரியலன்னா அதுக்கு நாலு முறை கை பிடிச்சி கூட்டி போய் கத்து தரலாமே.. அதை விட்டுட்டு அடுத்த சைட்ல உங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதா நாடகமாடி ஏன் என்னை ஓட வைக்கணும்.? உங்க நாடகத்தால நான் பதறிதானே ஓடி வருவேன். நார்மலாவே கிராஸ் பண்ண தெரியாதவ பதட்டமா ஓடி வரும்போது ஏதோ ஒரு வாகனத்துல அடிப்பட்டு செத்துட மாட்டேனா.?" என்றாள்.முகில் முகத்தில் ரத்த ஓட்டம் குறைந்து போனது. "சாரி.." என்றான். இதை தவிர வேறு என்ன சொல்வதென்று அவனுக்கும் தெரியவில்லை."எனக்கும் வாழணும்ன்னு ஆசையா இருக்கு மாமா.. இறந்த காலத்துக்காக நிகழ்காலத்தையும் எதிர்க்காலத்தையும் நெருப்புல எரிய விட விருப்பம் இல்ல.. ஆனா என் மனசுல இருக்கற வருத்தமும் ஆதங்கமும் தீரவே மாட்டேங்குது.. இப்பவும் எனக்கு கோபமும் ஆத்திரமும் வரலன்னு நீங்க புலம்புவிங்க.. ஆனா நீங்கதான் ஒன்னை புரிஞ்சிக்கல.. எல்லோரும் எல்லார்க்கிட்டயும் கோபப்பட முடியாது.. எவ்வளவு நடந்தாலும் சிலர் கடவுள்கிட்ட அழுது மட்டும்தான் புலம்புவாங்களே தவிர கடவுளை திட்ட மாட்டாங்க.‌. எனக்கு அந்த கடவுள் மாதிரி நீங்களும்.. நான் சொன்னது உங்களுக்கு க்ரீப்பியா தெரியலாம்.. எவ்வளவு நடந்தாலும் சிலர் தன் மேல அந்த பழியை போட்டுக்கவே மாட்டாங்க.. அது பிடிவாதம்ன்னு நினைக்கலாம். ஆனா அது அவங்களுக்கு போட்டுக்கற வேலி. அது போலதான் இதுவும். என்னால உங்களை திட்டவும் முடியாது. உங்களோடு சண்டை போடவும் முடியாது. இந்த ஒரு வாரமா எவ்வளவோ யோசிச்சி பார்த்துட்டேன்.. நான் யாருன்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டேன். என்னோட சுயம் என்னன்னு எடை போட்டு பார்த்தேன். அப்பதான் தெரிஞ்சது. நான் ஒரு சாப்ட் கேரக்டர்ன்னு என்னால யாரையும் வருத்த முடியாது. என்னோட சொல்லால் ஒருத்தரோட மனசை புண்படுத்த முடியாது. நீங்க இல்லன்னாலும் நான் வாழ்வேன். ஆனா நீங்க சொல்ற மாதிரி பகட்டு வாழ்ககையோடு கம்பீரமா வாழ தெரியாது. ஆனாலும் இதே உலகத்துல ஏதோ ஒரு மூலையில உங்க முழு நினைவோடு ரொம்ப ரொம்ப அமைதியா ஒரு வாழ்க்கை வாழ்வேன்‌.. இந்த மூணு வருசம் மாதிரி என் அண்ணன் போல ஒருத்தர்கிட்ட அடிமையா இருக்க மாட்டேன். இதை மட்டும்தான் என்னால உறுதியா சொல்ல முடியும். உங்களுக்கு விருப்பமா இருந்தா என்னை ஏத்துக்கோங்க.. இல்லன்னா கே‌.கே மாதிரி கேரக்டர்ல ஒரு பொண்ணை தேடி கட்டிக்கங்க.. உங்களுக்கு தடையா நான் இருக்கவே மாட்டேன்.." என்றாள்.முகில் கோபத்தோடு தான் அமர்ந்திருந்த சீட்டை குத்தினான். யதிரா சலனமில்லாமல் அமர்ந்திருந்தாள்."நீ லாஸ்டா சொன்னதுதான் எனக்கு சுத்தமா பிடிக்கலன்னு சொல்றேன் யதி‌‌.. இதை நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற‌.. எனக்காக நீ போராடணும்ன்னு ஆசைப்படுறேன். நீயும் நானும் பிரிஞ்சி போற சூழ்நிலை வந்தாலும் அங்கே என்னை நீ கட்டி இழுத்துட்டு போகணும்ன்னு ஆசைப்படுறேன்.." என்றான் தலையை பிடித்தபடி.யதிரா இடம் வலமாக தலையசைத்தாள். "இதையே நான் ஏன் ஆசைப்பட கூடாது.? நான் பிரிஞ்சி போற சூழ்நிலை வரும்போது நீங்க ஏன் போராட கூடாது.?" என்றாள்.முகில் குழப்பமாக அவளை பார்த்தான்."இந்த இடத்துல உங்களுக்கு தடையா இல்லாம நான்தான் பிரிஞ்சி போகறேன்னு சொன்னேன்.. ஆனா நீங்க ஒன்னும் என்னை கட்டி இழுத்துட்டு போகலையே.." என்றாள்.முகில் மொத்தமா குழம்பி விட்டான். "உனக்கே விருப்பம் இல்லன்னுதானே சொல்லுற.." என்றான் தடுமாற்றமாக.யதிரா சிரித்தாள். "இதேதான் இங்கேயும். இது என்ன சின்ன புள்ளைங்க விளையாட்டா பெத்தவங்க வேணாம்னு சொன்னதும் பிரிஞ்சி போக.. உங்களுக்கு விருப்பமா இருந்தா நீங்க வாழ போறிங்க.. எனக்கு விருப்பமா இருந்தா நான் வாழ போறேன். இரண்டு பேருக்குமே பிடிக்கலன்னா பிரிஞ்சி போக போறோம்.. இதுதான் மியூச்சுவல் ஒப்பந்தம். அக்கா சொன்னா.. டாக்டர் பொய் சர்பிகேட் தந்தான்னு பிரிஞ்சி போகறதுக்கு நான் ஒன்னும் உங்களை போல முட்டாள் இல்ல மாமா.. 'எனக்காக போராடணும் எனக்காக போராடணும்'ன்னு நீங்க சொன்னிங்க. அப்கோர்ஸ் நான்தான் போராடினேன் ஒவ்வொரு முறையும். என் அண்ணன் என் கழுத்துல இருந்த தாலியை கழட்டிய போதும் அங்கே நான்தான் போராடினேன். கத்தி எடுத்து சண்டை போட்டாதான் போராட்டமா.? அழுது கெஞ்சி புலம்புறது போராட்டம் இல்லையா என்ன‌.?" என கேட்டவளுக்கு மீண்டும் சிரிப்புதான் வந்தது."நீங்க விட்டுட்டு போன பிறகும் உங்களை தேடி உங்க வீட்டுக்கு வந்து அடிக்கடி அவமானப்பட்டது நான்தான் மாமா.. என் அண்ணன் எனக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க இருந்தபோது அவனோடு அழுதபடியேவாவது போராடியது நான்தான். நீங்களா இருந்திருந்தா அக்கா சொன்னா ஆட்டுக்குட்டி சொன்னதுன்னு சொல்லி இன்னொரு கல்யாணம் பண்ணி இருப்பிங்க.. மூணு வருசமா உங்களுக்காக காத்திருந்தேன் நான். இன்னும் முப்பது வருசம் இல்ல அறுபது வருசம் கூட நான்தான் காத்துட்டு இருந்திருப்பேன். ஏனா இங்கே நம்ம உறவுக்காக போராடியது நான்தான். நீங்க திரும்பி வந்தபோது கூட நான்தான் வந்து உங்களோடு முதல்ல பேசினேன். காரணம் அங்கே தாலியை தாண்டி இருந்த நம்ம பந்தத்தை நான் மனசார மதிச்சதாலதான். நமக்குள்ள இருக்கற காதல் சாகாம இருக்குன்னு நான் நம்பியதாலதான். நீங்க கூப்பிட்ட உடனே பாஸ்ட் எதையும் யோசிக்காம உங்களோடு நான் கிளம்பி வர காரணம் கூட நான் உங்க மேல வச்சிருந்த கண் மூடி தனமான காதல்தான். காதலுக்காக, உங்களுக்காக நான் போராடலன்னு நீங்க சொல்லாதிங்க.. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருது.. அதே போல நான் மூணு வருசம் காணாம போயிட்டு வந்து உங்களை கூப்பிட்டிருந்தா நீங்க வந்திருக்கவே மாட்டிங்க. இதான் சத்தியமான உண்மை. பெண்ணா பிறந்தவ மனசுல இருக்கற கண் மூடித்தனமான காதலுக்கு நீங்க முட்டாள் பட்டம் கட்டாதிங்க.. நீங்க மட்டும் போதும்ன்னு இருக்கறவளுக்கு உதவாக்கரைன்னு சர்டிபிகேட் தராதிங்க.. என் லைப்பை என்னால ஹேண்டில் பண்ணிக்க தெரியும். அழுதுக்கிட்டேவாவது நான் என் லைப்பை வாழ்வேன்.உங்களோட சம்பாதியத்தால வாழுறேன்னு தப்பா எடைப்போடாதிங்க. ஒரு வீட்டுக்கு சமைக்க போனா கூட மாசம் பத்தாயிரம் தருவாங்க. வீட்டு வேலைக்கு போனா கூட பதினைஞ்சாயிரம் வாங்குவேன். ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு வாடகை தாயா போக ப்ளாக்ல பல லட்சம் தராங்க.. ஒரு ஸ்கூல்ல ஆயா வேலைக்கு போனா அங்கே கூட மாசம் தவறாம குறைஞ்சது ஐய்யாயிரம் தருவாங்க.. அவ்வளவு ஏன் ஒருத்தனோடு செக்ஸ் கான்ட்ராக்ட்டுக்கு போனா கூட இதையெல்லாம் விட அதிகமா சம்பாதிக்கலாம். இந்த வேலைகள் எல்லாமே உங்க அந்தஸ்துக்கு கீழ்தரமா தெரியும். ஆனா அதைத்தான் பொண்டாட்டியா உங்களுக்கு நான் செஞ்சிட்டு இருக்கேன். காதலோடு ஒத்தை தாலியை கட்டிட்டு செஞ்சா எல்லாமே பொறுப்பு.. ஆனா அதையே தொழிலா செஞ்சா கேவலம்‌. இதுதான் வித்தியாசம். இந்த வித்தியாசத்தை பார்க்க தெரிஞ்ச நீங்க உங்களோட மனசுல இருக்கற எண்ணத்தைதான் முதல்ல மாத்தணும். மனைவியா கை பிடிச்சவளுக்கு இத்தனை பொறுப்பு இருக்கு. இவ்வளவு வேலை இருக்கு. ஆனா நாம ஏன் அவளை தரை குறைவா எடை போடணும்ன்னு நினைங்க.. வீட்டுலயே இத்தனை வேலைகளை செய்யுறவ அதையே வேலையா செய்ய வேண்டிய சூழல் வரும்போது செய்யாம சோம்பேறி ஆயிடுவான்னு நினைக்கறதை நிறுத்துங்க.நான் வீட்டுல செய்யற வேலைக்கு நீங்க சம்பளம் தர வேண்டிய அவசியம் இல்ல. ஆனா அட்லீஸ்ட் ஒரு மரியாதையாவது கொடுங்க அதே போதும். நான் உங்களுக்கு மெஷின் மாதிரி கூட தெரியலாம். ஆனா உங்க அம்மா அப்படி ஒரு மெஷினா இருந்ததாலதான் உங்க குடும்பம் இத்தனை வருசமா சந்தோசமா இருக்கு. பெண்கள் தன் குடும்பம் இது, இதுலதான் தன் வாழ்வும் சாவும் இருக்குன்னு நம்பும்போது நீங்களே பிரிச்சி விடாதிங்க.." என்றவள் அவன் முகம் கறுத்து அமர்ந்திருப்பதை கண்டு காரிலிருந்து இறங்கினாள்."இந்த ராத்திரியில் மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பஸ் பிடிச்சி வீட்டுக்கு போயிடும் அளவுக்கு எனக்கும் தைரியம் இருக்கு மாமா.. சில சந்தர்ப்பம் சூழ்நிலையை மட்டும் வச்சி மொத்த பெண்களையும் பலவீனமானவர்கள்ன்னு நினைக்காதிங்க.. நான் தெளிவா இருக்கேன். நீங்களும் தெளிவாகிட்டா அப்ப வாங்க.. சேர்ந்து வாழலாம். பழைய நினைவுகளுக்கு முக்கியத்துவம் தராம புது வாழ்க்கைக்கு உயிர் தருவோம்‌.." என்றவள் எதிரில் சாலையை கடந்த மக்கள் கூட்டத்தில் கலந்து நடந்தாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..Word count 1275VOTECOMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN