61

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒருகணம் ஒருபொழுதும் பிரிய கூடாதே.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே..போனின் அலார சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள் யதிரா. அதிகாலை பொழுது என்று கத்தி சென்றது காகம் ஒன்று.குளித்து முடித்து கிச்சனுக்கு வந்தவள் காப்பியை தயாரித்தாள். உறங்கி கொண்டிருந்த மாமியாரை எழுப்பி காப்பியை தந்தாள். கே.கேவின் அறையை தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவளின் கட்டில் அருகே இருந்த மேஜை மேல் காப்பி கோப்பையை வைத்துவிட்டு அவளின் தோளை உலுக்கினாள்."கே.கே எழுந்து காப்பியை குடி.." என்றாள்."தூக்கமா வருது யதி.." என சிணுங்கியபடியே எழுந்து அமர்ந்தாள் கே.கே."சீக்கிரம் ரெடியாகி வா கே.கே.. ஆபிஸ்க்கு போக டைம் ஆச்சி.." என்ற யதிரா தனது அடுத்த வேலைகளை கவனிக்க சென்றாள்.அவளும், அவளின் மாமியாரும் சமையலை சமைத்து முடித்தபோது கே.கே தயாராகி வந்தாள்.மாமியார் அவர்கள் இருவருக்கும் உணவை பரிமாறினாள்.யதிரா அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது "அத்தை.." என கத்திக் கொண்டே வீட்டுக்குள் ஓடி வந்தார்கள் ஒரு சிறுவனும், சிறுமியும்.யதிரா உணவை மறந்துவிட்டு புன்னகையோடு அவர்கள் பக்கம் திரும்பி கையை நீட்டினாள். இருவரும் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டனர்.வேதா, கரண்.. இருவரும் அவளின் அண்ணன் குழந்தைகள். இப்போது இருவருக்கும் பன்னிரெண்டு வயது தாண்டி விட்டது.குழந்தைகள் உள்ளே ஓடி வந்த சிறிது நேரத்தில் யதிராவின் அம்மா வீட்டுக்குள் வந்தாள்."வாங்க சம்பந்தி சாப்பிடுவிங்க.." என அழைத்தாள் யதிராவின் மாமியார்."அந்த வீட்டுலயே சாப்பிட்டுட்டுதான் வந்தேன் சம்பந்தி.." என்ற அம்மா தன் பையில் இருந்த பூமாலையை கையில் எடுத்தாள். ஹாலின் நடுவே மாட்டியிருந்த முகிலின் புகைப்படத்தின் அருகே சென்றவள் மாலையை அவனது புகைப்படத்திற்கு அணிவித்தாள்.அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்த யதிரா சட்டென தன் பார்வையை மாற்றிக் கொண்டாள். குழந்தைகளை கவனித்தாள்."அத்தை இன்னைக்கு ஒரு புராஜக்ட் விசயமா வெளியூர் போக போறேன்.. அங்கேயிருந்த நான் வரும்போது குட்டீஸ்க்கு என்ன வாங்கிட்டு வரட்டும்.?" என்றாள் சாப்பிட்டபடியே."டெடி பியர் எனக்கு.." என்று சொன்னாள் வேதா."எனக்கு ரோபோ கார் வேணும்.." என்றான் கரண்."ஓகே.. இரண்டு பேருக்கும் நீங்க கேட்டதையே வாங்கிட்டு வரேன்.." என்று புன்னகையோடு எழுந்து நின்றாள் யதிரா."பாட்டிகளை கஷ்டப்படுத்தாம இரண்டு பேரும் சமத்து பிள்ளைகளா ரெடியாகி ஸ்கூலுக்கு கிளம்பணும்.. சரியா.?" என்ற யதிரா தனதி ஆபிஸ் பேக்கை எடுத்து தாளில் மாட்டிக் கொண்டு வெளியே நடந்தாள்."அப்புறமா போன் பண்றேன் ம்மா.." என்று இரு தாய்மார்களிடமும் சொல்லிக் கொண்டு யதிராவின் பின்னால் ஓடினாள் கே.கே.கே.கே காரில் ஏறியதும் காரை கிளப்பினாள் யதிரா."இன்னைக்கு குருவோட பையனுக்கு பிறந்தநாள். இரண்டு பேருமே ட்ரிப் போனா நைட் பார்டிக்கு யார் போறது.?" என குழப்பமாக கே.கே கேட்ட நேரத்தில் ஒரு கடையின் வாசலில் காரை நிறுத்தினாள் யதிரா."ஏதாவத் கிப்ட் வாங்கலாம்.. ஆபிஸ் போகும் போது அவங்க வீட்டுக்கு போயிட்டு போவோம்.." என்ற யதிரா கீழே இறங்கினாள்.இருவரும் சேர்ந்து தேடி கடைசியில் கேரம் செட் ஒன்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.இருவரும் குருவின் வீட்டுக்கு வந்தபோது மொத்த வீடும் வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாலை விழாவிற்கு இப்போது இருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டனர் இருவரும்.இவர்களை கண்டதும் ஓடி வந்து வரவேற்றாள் செல்வி."யதிரா.. கே.கே .." என்றபடி இருவரையும் அணைத்துக் கொண்டாள்."எனக்கு தெரியும் நீங்க இரண்டு பேரும் முன்னாடியே கிளம்பி வருவிங்கன்னு.. பார்ட்டி ஏற்பாடுக்கு எனக்கு உதவி செய்ய நீங்க இரண்டு பேரும் கண்டிப்பா வருவிங்கன்னு குருக்கிட்ட சொல்லியிருந்தேன் நான்.." என்றாள் அவள்.கே.கேவும் யதிராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் செல்வியை பார்த்து மழுப்பலாக சிரித்தனர்."நாங்க இரண்டு பேரும் ஆபிஸ் விசயமா அர்ஜெண்டா மும்பை வரைக்கும் போறோம்.. உனக்கு உதவி செய்ய இன்னைக்கு எங்களால முடியாது.." என்றாள் யதிரா.செல்வி இருவரையும் விட்டு விலகி நின்றாள். அவளின் முகம் வாடி போயிருந்தது."உனக்கு உதவியா குரு அண்ணாவை வச்சிக்க.." என்றாள் கே.கே.செல்வி யோசனையோடு இருவரையும் பார்த்தாள்."ஆனா அவருக்கு இன்னைக்கு வேலை இல்லையா.?" என்றாள் சந்தேகத்தோடு."லீவ் எடுத்துக்க சொல்லு.." என சொல்லி கண்ணடித்தாள் யதிரா."உங்களுக்கு வேற வேலையே இல்லையா.? எனக்கு இன்னைக்கு ஆபிஸ்ல பயங்கர வேலை இருக்கு.." என்றான் ஹாலுக்கு வந்த குரு."முதல்ல பேமிலியை பாரு மேன்.." என்றாள் கே.கே."வீட்டுல வேலை அதிகம்ன்னு ஆபிஸ் சாக்கு சொல்லாதிங்க அண்ணா.. இன்னைக்கு உங்களுக்கு அங்கே அவ்வளவா வேலையே இல்ல.." என்றாள் யதிரா.செல்வி சந்தேகத்தோடு தன் கணவனை பார்த்தாள். பார்வை முறைப்பாக மாறும் நேரத்தில் "நான் இங்கேயே இருந்து உனக்கு உதவி பண்றேன்.." என்றான் குரு."குட் டிசிஸன்.." என்ற கே.கே "ராகுல்.." என்று கத்தி அழைத்தாள்.அறை ஒன்றினுள் இருந்து ஓடி வந்தான் குரு செல்வியின் பத்து வயது மகன் ராகுல்."ஹாய் ஆன்டி.." என்று கே.கேவை பார்த்து கையசைத்தவன் யதிராவை அணைத்துக் கொண்டான்."இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்.." என்று யதிரா சொன்னதும் அவனிடம் கிப்ட் பாக்ஸை தந்தாள் கே.கே."வாவ்.. தேங்க்ஸ் ஆன்டிஸ்.." என்றவனை செல்லமாக முறைத்த கே.கே "எனக்கும் ஹக் கொடு.. அப்போதான் கிப்டை தருவேன்.." என்றாள்.ராகுல் சிரிப்போடு அவளை அணைத்தான். ராகுலின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு கிப்ட் பாக்ஸை தந்தாள் கே.கே.குருவிடமும் செல்வியிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினர் இருவரும்.இருவரும் அலுவலகம் வந்தபோது மணி ஒன்பதை தாண்டி விட்டிருந்தது."லேட்டா ஆபிஸ் வந்தா மாமாவுக்கு கோபம் வரும்.." என்றாள் யதிரா."ஆமா.. நானும் அவனை ரொம்ப மிஸ் பண்றேன்.." என்றாள் கே.கே.அலுவலகம் அதே போலதான் இருந்தது. ஆனால் பணியாட்கள் சிலர் மாறி இருந்தனர். அலுவலக மேலாண்மை யதிரா, குரு, கே.கே மூவரின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிலர் பெண்ணின் கீழே வேலை செய்வதை இந்த காலத்திலும் கூட அவமானமாக கருதுகின்றனர் என்பது இவர்கள் இருவருக்கும் தெரிய வந்த போது சிரிக்கத்தான் செய்தார்களே தவிர சிறிதும் கவலைப்படவில்லை."நம்ம மேலாண்மையை நம்பி அவங்களோட பணி நேரத்தை நம்கிட்ட ஒப்படைச்சிட்டு நமக்கு கீழே வேலை செய்றவங்க மட்டும் நமக்கு போதும்.." என்று முதல் நாளே தெளிவாக சொல்லிவிட்டாள் யதிரா.ஆரம்பத்தில் ஆயிரம் சறுக்கல்கள் வந்தது. முகிலை போல சிந்திக்க மூவராலுமே முடியவில்லை. முதலில் கே.கேவின் மூளை மட்டும்தான் ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஆனால் விரைவிலேயே குருவும் யதிராவும் அலுவலக மேலாண்மை பற்றியும், வியாபார நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து விட்டனர். இப்போது மூவருக்குமே மனம் திருப்தி எனும் அளவுக்கு அலுவலகமும் தொழிற்சாலைகளும் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது.யதிரா தனது அறைக்குள் வந்து அமர்ந்த சற்று நேரத்தில் அங்கே வந்தான் வர்சன். கையில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினாள். யதிரா புன்னகையோடு பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.கடந்த பத்து வருடங்களாக வாரம் தவறாமல் திங்கட்கிழமைகளில் யதிராவிற்கு பூங்கொத்தை தந்து வருகிறான் வர்சன். ஆரம்ப நாளில் தினம் அழுதுக் கொண்டிருந்தாள் யதிரா. அப்போது சிறு புன்னகையையம், ஒரு பூங்கொத்தையும் அவளிடம் பரிசென தந்தான் அவன். ஒரு சிறு மலர்ச்சி மனதில் உண்டானதை அவளால் மறுக்க முடியவில்லை. அப்போதிலிருந்து தொடரும் பரிசு இது. அவன் அலுவலகம் வராத நாட்களில் கூட அவன் மனைவி ஓவியா அந்த பூங்கொத்தையும் புன்னகையையும் கொண்டு வருவாள்."தேங்க் யூ.." என்றாள் யதிரா புன்னகையோடு. பூங்கொத்தை மேஜையின் மீது வைத்தாள்."நானும் கே.கேவும் இன்னும் கொஞ்ச நேரத்துல மும்பை கிளம்ப போறோம்.. இன்னைக்கு குரு அண்ணாவும் ஆபிஸ் வர மாட்டார். அதனால மொத்த ஆபிஸையும் நீதான் பார்த்துகணும்.." என்றாள் யதிரா.அவன் சரியென தலையசைத்தான்.அடுத்த அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து யதிராவும் கே.கேவும் கிளம்பினார்கள். கே.கேதான் காரை ஓட்டினாள். கே.கேவிற்கு லாங் டிரைவ் செல்லுகையில் காரை ஓட்டுவது மிகவும் பிடிக்கும். யதிரா பின் இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழி தெரிந்த மரங்களை பார்த்தபடி இருந்தாள். பின்னோக்கி ஓடும் மரங்கள் தன்னையும் இறந்த காலத்திற்கே கொண்டு சென்று விட்டுவிட கூடாதா என்ற ஆசை வந்தது அவளின் மனதில்.பல நிறுவனங்களின் மேலாண்மையாளார்கள் கலந்துக் கொண்ட அந்த கூட்டத்தில் முகில் பிரைவேட் லிமிடெட் சார்பாக யதிராவும் கே.கேவும் கலந்துக் கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.மாலை வேளையில் ஓட்டலுக்கு வந்ததும் கே.கே "வா.. வெளியே சுத்தி பார்க்க போகலாம்.." என்று யதிராவை இழுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள்.இருவரும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். கே.கே கடலை பார்த்து ஓவென கத்தினாள்."நான் நீச்சலடிக்க போறேன்.. நீயும் வரியா.?" என்றாள் அவள்.யதிரா மறுத்து தலையசைத்தாள். கே.கே கடலை நோக்கி ஓடினாள்.யதிரா கடல் அலையில் கால் நனைத்தபடி கால் போன போக்கில் நடந்தாள்.கடற்கரை மணலில் பலரும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தார்கள். யதிராவின் நினைவில் தானும் முகிலும் ஜோடியாக இருந்த நாட்கள் நினைவில் வந்து போனது. அவனோடு இணைந்து இருளை ரசித்த நிலாக்காலங்களும், அவனின் கையோடு இணைந்திருந்த தன் கையின் விழாக்கோலங்களும் அவளின் சிந்தையில் பளிச்சிட்டன.கால் போன போக்கில் நடந்துக் கொண்டிருந்தவள் தன் பின் சலசலப்பு கேட்டு திரும்பிப் பார்த்தாள. ஆடவர் மூவர் அவளை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தார்கள். இவள் நின்றதும் நெருங்கி வந்து அவளை உரசியபடி நின்றனர்."ஹே பேபி.. கேன் வீ கெட் எ ரூம்.?" என்றனர்.யதிரா சிரித்துக் கொண்டே மறுத்து தலையசைத்தாள். "நோ.." என்றாள் தன் பேக்கின் ஜிப்பை திறந்தபடியே.மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் பார்வையை உணர்ந்தவள் அவர்கள் அடுத்து செயல்படும் முன் தன் கையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேவை அவர்களின் கண்களில் அடித்தாள். மூவரும் கண்களை கசக்கிக் கொண்டிருந்த நேரத்தில் மூவரின் பலவீன பகுதியில் உதைகளை தந்தாள். தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த காவலரை அழைத்தாள். விசயத்தை சொல்லி மூவரையும் போலிசிடம் ஒப்படைத்தாள்.போலிஸார் அந்த ஆடவர் மூவரையும் அழைத்து செல்வதை பார்த்தபடியே கடற்கரையோர பாறை ஒன்றின் மீது ஏறி அமர்ந்தாள்.'இவ்வளவு தாமதம் உன்னோட முட்டாள்தனத்தைதான் காட்டுது.. அவங்களை பார்த்த அடுத்த செகண்டே நீ பெப்பர் ஸ்ப்ரேவை கையில் எடுத்திருக்கணும்..' என்று குரல் ஒன்று கேட்டது."அவங்க டூரிஸ்டா இருக்கலாம். இல்ல என்கிட்ட வேற ஏதாவது உதவி கேட்டு வந்திருக்கலாம். பார்த்த உடனே பெப்பர்ஸ்ப்ரே அடிக்கறது ரொம்ப தப்பு மாமா.. என்னோட மைண்ட்ல தப்புன்னு தோணினா யோசிக்காம ஸ்பிரே பண்ணுவேன்.." என்று காற்றோடு சொன்னாள் யதிரா.கடலில் முன்னும் பின்னும் வந்து வந்து போன அலைகள் முழுவதிலும் முகிலின் முகமே தெரிந்தது யதிராவுக்கு. வெகு நேரம் அதையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்."நான் காலமெல்லாம் உயிரோடும் புன்னகையோடும் வாழ உங்க நினைவுகள் மட்டுமே போதும் மாமா.." என்றாள் சற்று நேரத்திற்கு பின்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.இந்த இடத்துல எண்ட் கார்ட் போடுற அளவுக்கு அவ்வளவு சிறந்த எழுத்தாளரெல்லாம இல்ல நான். சிலருக்கு பிட்டர் கிளைமேக்ஸ் பிடிக்குமாம். அவங்களுக்காக மட்டுமே இந்த எபிசோட். இந்த கிளைமேக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்றவங்க யாராவது இருந்தா மறக்காம கமெண்ட் பண்ணுங்கப்பா..இந்த நாவலுக்கு இன்னொரு கிளைமேக்ஸ் இருக்கு. அது நாளைக்கு அப்டேட் ஆகும்.😊VOTE 1114COMMENTSHAREFOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN