62

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
போலிஸார் அந்த ஆடவர் மூவரையும் அழைத்து செல்வதை பார்த்தபடியே கடற்கரையோர பாறை ஒன்றின் மீது ஏறி அமர்ந்தாள் யதிரா.'இவ்வளவு தாமதம் உன்னோட முட்டாள்தனத்தைதான் காட்டுது.. அவங்களை பார்த்த அடுத்த செகண்டே நீ பெப்பர் ஸ்ப்ரேவை கையில் எடுத்திருக்கணும்..' என்று குரல் ஒன்று கேட்டது."முகில் என்னவோ உளறுறான்.." என்று கே.கே சொல்லவும் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து ஓடி வந்தாள் யதிரா.மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த முகிலின் தோளை தொட்டு அசைத்தாள் யதிரா."மாமா.. மாமா.." என்றாள்."நான் காலமெல்லாம் உயிரோடும் புன்னகையோடும் வாழ உங்க நினைவுகள் மட்டுமே போதும் மாமா.." என்றாள் யதிரா."ஐ லவ் யூ யதிரா.. நான் செத்த பிறகும் என் நினைப்புலயே நீ இருக்கறது எனக்கு கர்வத்தை தருது.." என்றான் முகில்."மாமா.. என்னத்தை உளறுறிங்க.. கண்ணை விழிங்க.." என்று அவனை மீண்டும் உலுக்கினாள் யதிரா.கண் இமைகளை சுருக்கிய முகில் சில நொடிகளுக்கு பிறகு கண்களை திறந்தான்."யதி.." என்றான் குழப்பத்தோடு.மருத்துவர் ஒருவர் உள்ளே வந்தார். முகிலின் அருகே வந்து அவனை சோதித்தார். மருத்துவர் என்ன செய்கிறார் என கவனித்தான் முகில்.முகிலின் வயிற்றில் இருந்த காய கட்டோரம் கையை வைத்து அழுத்தினார் மருத்துவர்."வலிக்குதா மிஸ்டர்.." என கேட்டார் அவர்.முகில் இல்லையென தலையசைத்தான்."ஓகே.. யூ ஆர் ஆல்ரைட்.. இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு கிளம்பிடலாம்.." என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் மருத்துவர்."வீட்டுக்கா.? இங்கே என்ன நடக்குது.? நான் செத்து பத்து வருசம் ஆகலையா.?" என குழப்பமாக கேட்டவனின் தலையில் நச்சென கொட்டு ஒன்றை வைத்த கே.கே அவனை எழுப்பி அமர வைத்தாள்."வயித்துல அரை இன்ஜ் கத்தி குத்துனதுக்கு சாகுறதா இருந்தா மனுச இனமே அழிஞ்சிடும்.." என்றாள் அவள். முகில் கே.கேவையும் அந்த அறையில் இருந்தவர்களையும் பார்த்தான். அது ஒரு ஹாஸ்பிடல் அறை. ஒரு பக்கம் நின்று யதிரா அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு ஓரத்தில் அம்மா இருந்தாள். மற்றொரு பக்கத்தில் கே.கே நின்றுக் கொண்டிருந்தாள். அவளின் பின்னால் உள்ள நாற்காலியில் அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த மங்கை ஒருத்தி இவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தன் போனுக்கு பார்வையை திருப்பினாள்.முகில் குழப்பத்தோடு மீண்டும் தன் வயிற்றை பார்த்தான். என்ன நடந்தது என யோசித்தான். போலிஸ் ரத்தினம் கத்தியால் குத்தியதும், அப்போதே தான் மயங்கி விழுந்ததும் அவனுக்கு இப்போதுதான் நினைவிற்கு வந்தது."கனவா அத்தனையும்.." என்று கேட்டவன் பெருமூச்சி விட்டபடி நிமிர அவனை புருவம் உயர்த்தி பார்த்த கே.கே "அப்படி என்ன கனவு.?" என்றாள்.முகில் தான் கண்ட கனவை முழுமையாக சொல்லி முடித்தான். அவனின் தலையில் ஒரு தட்டு தட்டினாள் கே.கே."ஏன் என்னை இப்படி அடிச்சி சாகடிக்கற.?" என கேட்டு தலையை தேய்த்தான் முகில்."பின்ன என்ன‌.? கத்தி குத்தியே அரை மணி நேரம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள நீ பத்து வருசம் கனவு கண்டு முடிச்சிருக்க.. அதுவும் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத கனவு.. முட்டைகோஸ் மண்டையா.. உனக்கு அப்படி ஆனா கூட நான் என் யதிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைச்சிருப்பேன்.." என்றாள் அவள்.தலையை தேய்த்தபடியே தன் மனைவியை திரும்பி பார்த்தான் முகில்."அப்படியா யதி.? நீ என்னை மறந்திருப்பியா.?" என்றான். இந்த கேள்வி இப்ப ரொம்ப முக்கியமா என கேட்டது அவனின் மனசாட்சி."உங்க வயித்துல கத்தி குத்திய உடனே எனக்கு உயிரே போயிடுச்சி மாமா.." என அழுதபடியே வந்து அவனை அணைத்துக் கொண்டாள் யதிரா.தன் சட்டையை கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தவளின் முதுகை வருடி விட்டவன் "எனக்கு ஒன்னும் ஆகல.. அழாதே.." என்றான்.தன்னை சுற்றிலும் மனிதர்கள் உள்ளார்கள் என்பது அப்போதுதான் யதிராவுக்கு நினைவுக்கு வந்தது. அவனை விட்டு சட்டென விலகி நின்றுக் கொண்டாள்."கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே யதிரா.." என்றான் முகில்.குழப்பத்தோடு அவனை பார்த்தவள் "என்ன கேள்வி மாமா.?" என்றாள்."கே.கே சொன்ன மாதிரி என்னை மறந்துட்டு வேற ஒருத்தனை கட்டி இருப்பியா.?" என தயக்கமாக கேட்டான் முகில்."தெரியல மாமா.. கே.கே பேச்சை கேட்டிருந்தாலும் கேட்டிருப்பேன். ஏனா நான்தான் யார் பேச்சை வேணாலும் கண்ணை மூடிக்கிட்டு கேட்பேனே.." என்றவள் அவனை பார்த்து பற்களை காட்டி பொய் சிரிப்பு சிரித்துவிட்டு வெளியே நடந்தாள். தான் சுமத்திய பழிச்சொல்லை தனக்கே திருப்பி சொல்லி பழி வாங்குகிறாளே என்று சலித்துக்கொண்டான் முகில்‌.நடந்தவளையே பார்த்துக் கொண்டிருந்த முகிலின் முகம் வாட தொடங்கியது."லூசு தனமா யோசிக்கறதை முதல்ல நிறுத்து முகி.." என்றபடியே அவன் முன்னால் வந்து அமர்ந்தாள் கே.கே."துணை இறந்தா அவங்களையே நினைச்சி வாழ்றதும், தன் முன்னாடி இருக்கற எதிர்காலத்தின் சவால்களை தனியா சந்திக்க பிடிக்காம இன்னொரு துணை தேடிக்கறதும் அவங்கவங்க இஷ்டம். இரண்டு இடத்திலயுமே நம்மால அவங்களோட மனசையோ அவங்க வருத்தத்தையோ புரிஞ்சிக்க முடியாது. அதனால எது நியாயம்.. எது தார்மீகம்.. எது வாழ்வியலுக்கு விரோதம்ன்னு சிந்திக்கறதை விட்டுட்டு இந்த நிமிசத்துக்கான வாழ்க்கையை வாழ பாரு.. நாளைக்கு நாம இல்லன்னா அவ என்னாகுவான்னு யோசிக்கிறது முக்கியம்தான். ஆனா அதை விட முக்கியம் இருக்கற ஒவ்வொரு செகண்ட்லயும் அவளுக்கு உன் காதலையும் அன்பையும் தருவதுதான். நாளைய நாளுக்காய் ஒரு ரூபாயாவது எடுத்து வை. ஆனா நாளைய நாளுக்கு வேணும்ன்னு சந்தோசத்தையும் சிரிப்பையும் சேர்த்து வைக்காத.." என்றாள்.முகில் சரியென தலையசைத்தான். அவள் சொன்னதில் இருந்த நியாயத்தை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது."படுபாவி பையன். எந்த நேரத்துல வந்து கத்தியால குத்தினானோ.. பையனுக்கு பித்தே பிடிச்சி போச்சி. ஏதாவது ஒரு மந்திரவாதிக்கிட்ட கூட்டிப்போய் மந்திரிச்சிட்டு வரணும்.." என்றாள் அம்மா.முகில் சலிப்போடு அம்மாவை பார்த்தான். அம்மாவிடம் திருப்பி பேச கூட அவனுக்கு மனம் வரவில்லை."அவளை நீதான் சும்மா குறை சொல்ற.. நீ கத்தி குத்து பட்டு விழுந்ததும் நாங்க எல்லோரும் கூட தடுமாறிட்டோம். ஆனா அவதான் சட்டுன்னு பக்கத்துல இருந்த நர்சையும் டாக்டரையும் கூப்பிட்டு உன்னை அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்க்க வச்சா. அத்தனை கலவரத்திலும் எச்சரிக்கையோடு நடந்துக்கிட்டது அவதான்.." என்று நடந்ததை சொன்னாள் கே.கே.யதிராவின் செயல்பாட்டை கேட்டதும் முகிலுக்கு மனம் மகிழாமல் இருக்க முடியவில்லை. யதிராவின் இரு பக்க கன்னங்களையும் பிடித்து கிள்ளி பாராட்ட வேண்டும் போல இருந்தது.முகத்தில் இருந்த புன்னகையை மறைக்க முடியவில்லை அவனால்.அதன் பிறகே அவனுக்கு ரத்தினம் பற்றி நினைவு வந்தது. "ஆமா ரத்தினம் என்ன ஆனான்.?" என்றான் சந்தேகத்தோடு."உன்னை குத்தியவன் என்னையும் குத்த வந்தான்.." என்று சொன்னாள் கே.கே.முகில் அதிர்ச்சியோடு அவளை மேலும் கீழும் பார்த்தான். "உனக்கு ஒன்னும் இல்லையே.?" என்றான்.கே.கே பெருமூச்சோடு தனக்கு பின்னால் அமர்ந்திருந்த நங்கையை கை காட்டினாள். "இவ இருக்கும்வரை என் உயிரை என்கிட்ட இருந்து எடுக்க எமனால் கூட முடியாது.." என்றாள்.அவள் கை காட்டிய பெண்ணை கவனித்து பார்த்தான் முகில். கே.கேவை போலவே அழகாய் இருந்தாள். ஆனால் கே‌.கேவை போல பேண்ட் சர்டில் இல்லாமல் தரை தொடும் சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். இவன் பார்த்ததும் இவனை கண்டு புன்னகைத்தாள்."யார் அது.?" என்றான் அந்த பெண்ணை பார்த்தபடி."என் லைஃப்.." என்ற கே.கேவை அதிர்ச்சியோடு பார்த்தான் முகில்.கே.கே தன் இமைகளை நனைத்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்."இவ என் பிரெண்ட் மைத்தி.. நான் இன்னமும் வாழ ஆசைப்படுறேன்னா அதுக்கு இவதான் காரணம்.." என்றவளின் முதுகின் மீது வந்து விழுந்தது ஒரு செருப்பு.தரையில் விழுந்து கிடந்த செருப்பை எடுத்துக் கொண்டு தோழியிடம் வந்தாள் கே.கே. அவளின் காலடியில் செருப்பை வைத்தாள். முகில் குழப்பத்தோடு இருவரையும் மாறி மாறி பார்த்தான்."இவளை நான் விட்டுட்டு வந்துட்டேன்னு கோபமாம்.. வந்ததிலிருந்து இன்னும் ஒரு வார்த்தை கூட பேசல.. சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கறா.." என்று விளக்கம் சொன்னாள் கே.கே.மைத்ரேயி அவளை கோபம் தீராமல் முறைத்தாள். வெகு நாட்கள் முன்பாகவே கார்த்திகா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டாள் அவள். ஆனால் தோழியே தன்னை தேடாமல் இருக்கும்போது தான் மட்டும் ஏன் சென்று அவளிடம் பேச வேண்டும் என்று வீராப்போடு இருந்தாள். ஆனாலும் கூட தோழியை விட்டு விலகி இருக்க முடியாமல் அவளை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள். ரத்தினம் வீட்டில் இருந்த பைலை எடுத்து கார்த்திகாவுக்கு அனுப்பி வைத்தவளும் கூட அவள்தான். எப்போதும் போல தொலைவில் இருந்து தோழியை பின்தொடர்ந்து கொண்டிருந்தவள் இன்று ஹாஸ்பிட்டலில் நுழைந்த அதே நேரத்தில் ரத்தினம் கே.கேவை நோக்கி கத்தியை ஓங்கி கொண்டு வந்தான். தன் முன் நடப்பதை கண்டதும் பாய்ந்து ஓடி வந்து விட்டாள் மைத்ரேயி. கார்த்திகாவை குத்த முயன்றவனின் கையில் கத்தியையும் இறக்கி விட்டு விட்டாள். அதன் பிறகுதான் கே.கேவும் கூட மைத்ரேயியையே பார்த்தாள். தோழியை பார்த்த சந்தோசத்தில் பாய்ந்து அணைத்தாள் கே.கே. அவளை தள்ளி நிற்க வைத்து கன்னத்திலேயே ஓங்கி ஒரு அறையை விட்ட மைத்ரேயி யதிராவுக்கு துணையாக முகிலை தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்க சென்று விட்டாள். கே.கேவிற்கும் தன் குற்ற உணர்வை மறைக்கும் வழி தெரியவில்லை. மைத்ரேயி தன்னை முறைப்பதை கவனித்தபடியே இன்ஸ்பெக்டர் சக்திக்கு ஃபோன் செய்து ரத்தினத்தை பிடித்து அவரோடு அனுப்பினாள் கே.கே.தோழியை சந்தித்ததில் இருந்து இத்தோடு பன்னிரெண்டு முறை மன்னிப்பு கேட்டு விட்டாள் கே.கே. ஆனால் மைத்ரேயி அவளின் மன்னிப்பை ஏற்கவே இல்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அடித்து நொறுக்க தயங்கவில்லை அவள்."உன் கனவுல லாஜிக் இல்லன்னு சொல்ல காரணமே இவதான். நான் என் லைப்டைம்மை இவளோடுதான் கடக்க போறேனே தவிர யதியோடு இல்ல.." என்றாள் கே.கே.முகில் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். "எங்களை விட்டு போக போறியா நீ.?" என்றான்."ஆமாப்பா.. என்ன செய்ய நீ இந்த ஒரு கதைக்கு மட்டும்தான் ஹீரோ. ஆனா நானும் இவளும் இன்னும் நூறு கதைகளுக்கு ஹீரோயின்ஸ்.. ஆத்து தண்ணிக்கு அணை போட கூடாதுப்பா.." என்றவள் தன் தோழியை திரும்பி பார்த்தாள். அவள் இவள் சொன்னதை காதில் கூட வாங்காதவள் போல அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தாள்."பில் பே பண்ணிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு கிளம்பலாமா.?" என்றபடி அந்த அறைக்குள் வந்தாள் யதிரா."என் யதி நிஜமாவே வளர்ந்துட்டா போல இருக்கு.." மனதில் நினைப்பதாக நினைத்து சத்தமாக சொன்னான் முகில். யதிரா அவனை முறைப்போடு பார்த்துக் கொண்டே மாத்திரைகளை எடுத்து பத்திரப்படுத்த ஆரம்பித்தாள்.அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களேWord count 1060VOTECOMMENTSHAREFOLLOW

காதல் சர்வாதிகாரி மற்றும் எந்தன் நேசம் இரண்டு நாவலையும் இன்னைக்கும் நாளைக்கும் PST டைம் படி (15.2.2021 மற்றும் 16.2.2021) கிண்டில்ல ப்ரீ டவுண்லோட் பண்ணிக்கலாம் நட்புக்களே. கதையை டவுண்லோட் பண்ணி படிக்கறவங்க மறக்காம ஒரு கமெண்ட் பண்ணுங்கப்பா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN