காதலின் இழையில் 63

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முகில் வயிற்றில் இருக்கும் காயத்தின் கட்டை ஒரு கையால் பிடித்தபடியே தான் அமர்ந்திருக்கும் கட்டிலை விட்டு இறங்கி நின்றான். அவனின் செயல்பாடுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் கே.கே. நோயாளி ஒருவன் தயங்கி தயங்கி அடியெடுத்து வைப்பது போல நொடிக்கு நூறு தரம் தயங்கி நின்றுக் கொண்டிருந்தாள் அவன்."அரை இன்ச்தான் கத்தி இறங்கியிருக்குப்பா.. அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடுற.? நார்மலாவே நடந்து வா.." என்றாள் கே.கே.முகில் அவளை முறைத்து பார்த்தான். "ஒரு பேஷண்டுக்கு தர வேண்டிய உரிமையை கூட தர மறுக்கிறிங்க நீங்க.." என்றான்.தன் மகனுக்கு ஏதோ காத்து கருப்புதான் பிடித்து விட்டது போல என நம்பிய அம்மா அவனை பயத்தோடு பார்த்தபடியே வெளியே நடந்தாள்.யதிரா அவனருகே வந்து அவனின் இடுப்பை சுற்றி கையை போட்டுக் கொண்டாள். "என் தோளை பிடிச்சிக்கங்க மாமா.." என்று அடிப்படாத தோளை கை காட்டினாள்."இதுதான் உரிமைங்கறது. உனக்கு ஒன்னுன்னா நான் உன்னை தூக்கிட்டு போவேன். எனக்கு ஒன்னுன்னா நீ உன் தோளாவது தரணும்.." என்ற முகில் அவளின் தோளை பற்றிக் கொண்டு வெளியே நடந்தான்.கே.கே அவனை விசித்திரமாக பார்த்துவிட்டு தன் தோழியின் புறம் திரும்பினாள். "மைத்தி கிளம்பலாமா.?" என்றாள்.போனிலிருந்து கண்களை எடுக்காத மைத்ரேயி எழுந்து நின்றாள். கே.கேவை பார்க்காமலேயே அங்கிருந்து வெளியே நடந்தாள். அவள் அந்த அறையை தாண்டும் முன் ஓடிவந்து அவளை மறித்து நின்றாள் கே.கே."ஏன் என்னோடு இவ்வளவு கோபமா இருக்க.?" என்றாள் சோகத்தோடு.மைத்ரேயி கே.கேவை நேராக கூட பார்க்கவில்லை. காதில் எதுவுமே விழாதது போல நின்றுக் கொண்டிருந்தவள் அங்கிருந்து கிளம்ப முயன்றாள். ஆனால் கே.கே சட்டென கதவை சாத்தி உள்பக்கம் தாளிட்டாள்."நீ என்னோடு பேசாம நான் உன்னை வெளியே அனுப்ப மாட்டேன்.." என்றாள் கே.கே பிடிவாதத்தோடு.மைத்ரேயி ஃபோனை அணைத்தாள். கைகளை கட்டியபடி அந்த அறையின் ஒவ்வொரு மூலையையும் பார்க்க ஆரம்பித்தாள். கே.கேவை தவிர்க்க முயல்வதாக காட்டிக் கொண்டிருந்தாள்.மைத்ரேயியை கெஞ்சலோடு சில நிமிடங்கள் பார்த்த கே.கே பெருமூச்சோடு அவளின் முன்னால் மண்டியிட்டாள். தன் இருகாதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டவள் "சாரி.. உன்னை விட்டுட்டு நான் வந்திருக்க கூடாது. உன் வீட்டை விட்டும் நான் வந்திருக்க கூடாது. ஒரு டிரக் அடிக்டுக்கு பிரெண்டா இருக்க உனக்கு பிடிக்காதோன்னு நினைச்சிதான் ஓடி வந்துட்டேன். சாரி. நான் அப்படி நினைச்சிருக்க கூடாது. நான் எப்படி இருந்தாலும் நான் உனக்கு பிரெண்ட்தான். நீ எப்படி இருந்தாலும் நீ எனக்கு பிரெண்ட்தான். நான்தான் அதை மறந்துட்டு தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சிடு. இதே பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்.. இனி இந்த மாதிரி தப்பு பண்ணமாட்டேன்.." என்றாள் கெஞ்சல் குரலில்.மைத்ரேயி அவளை யோசனையோடு பார்த்தாள். "என்னை விட்டுட்டு எங்கேயாவது ஓடி போவியா.?" என்றாள் புருவம் நெரித்து.கே.கே உடனடியாக இல்லையென தலையசைத்தாள்."நம்முடைய கொள்கை என்ன.?" என்றாள் அவள்.கே.கே ஒவ்வொரு விரலாக உயர்த்தினாள். "ஒன்னு யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம எல்லா பசங்களையும் சைட் அடிக்க உரிமை உண்டு. ஆனா லவ் மட்டும் கூடாது. இரண்டு நம்மோட நட்பை தப்பா யார் பார்த்தாலும் அவங்ககிட்ட ஆமான்னும் சொல்லாம இல்லன்னும் சொல்லாம அவங்களை தூசு துரும்பா கூட மதிக்காம போயிட்டே இருக்கணும். மூணு நம்மோட லைஃப் ஆக்சன் அட்வென்ஜர் அன்ட் திரில்லிங்காக மட்டுமே. நாட் லவ் பெயிலியர் அழுகாச்சிகள்.. நாம நாயகிகள்.. சூப்பர் வுமென்.. நாட் சின்டரெல்லாஸ்‌. நாம டூ வுமென் ஆர்மி.. நாட் பேமிலி டிராமா கேரக்டர்ஸ்.." என்றாள் தன் முன் நின்றிருந்த மைத்ரேயியிடம்."ஓகே. கரெக்ட். இந்த முறை உன்னை மன்னிச்சி விடுறேன்.." என்றவள் கே.கேவை காதை பிடித்து திருகியபடி மேலே எழுப்பி விட்டாள். "இனி நான் இல்லாம எந்த கதையிலாவது தனியா போய் வாசகர் மனசுல இடம் பிடிச்சா உன்னை முட்டை போண்டாவா மாத்தி எண்ணெயில் பொறிச்சிடுவேன்.." என்றாள் எச்சரிக்கையோடு."நோ.. இல்ல.. நீயும் நானும் இரண்டு.. நம்மளை பிரிக்க யாராலும் முடியாது.." என்று சொன்ன கே.கேவிற்கு தோழி தன்னை மன்னித்ததில் சந்தோசம்."போகலாம் நட.." என்றாள் மைத்ரேயி.கே.கே கதவை திறந்து விட்டாள். மைத்ரேயியையே முதலில் செல்லுமாறு சைகை காட்டினாள். மைத்ரேயி முன்னால் நடக்க அவளின் பின்னால் நடந்தாள் கே.கே.முகில் யதிராவின் தோளை பற்றியபடியே நடந்தான். அந்த மாலை வேளையில் மருத்துவமனையில் கூட்டமாக இருந்தது. வரிசையாக இருந்த மருத்துவர்கள் அறையை தாண்டி சென்றுக் கொண்டிருந்தனர் இருவரும்."தலை காயம் வலிக்குதா யதி.?" என்றான் முகில்."இல்ல மாமா.." என்றாள் அவள்."அவன் சரியான செங்கல் சைக்கோ டாக்டர்.. அவனெல்லாம் மனுச பிறவியே இல்ல.. சுத்தமான கட்டெறும்பு வாயன்.." என்று யாரோ யாரையோ திட்டும் குரல் கேட்டு சுற்றும் முற்றும் பார்த்தான் முகில். அவனின் அருகே இருக்கும் மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்த பள்ளி மாணவி ஒருத்திதான் அடிப்பட்ட தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டே யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள்."ஏதோ அடுத்த தொடர்கதை போல.. சரி வா நாம டிஸ்டர்ப் பண்ணாம நேரா கிளம்புவோம்.." என்ற முகில் யதிராவோடு இணைந்தபடியே முன்னேறி நடந்தான்.முகில் வீட்டிற்கு வந்தபோது அந்த வீடே அலங்கோலமாகதான் இருந்தது. அம்மா அந்த மொத்த வீட்டையும் சுத்தம் செய்தாள். "இதுவும் இழவு வீடு போலதான். இரண்டு துரோகிகளை தலைமுழுகியிருக்கோமே.." என்ற அம்மா எரிந்து கிடந்த கதவை கவலையோடு பார்த்தாள்."புது கதவு மாத்திக்கலாம் அம்மா.. இல்லன்னா புது வீடு கட்டிடலாம்.." என்று ஆறுதல் சொன்னான் முகில்."ஆனா உன் அப்பாவை போலவோ உன் அக்காவை போலவோ புது சுயநலவாதிகள் மட்டும் வேண்டாம்.." என்றாள் அம்மா. அவளுக்கு இந்த துரோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளின் மனம் எல்லாம் துரோகம் தந்த காயங்கள் மட்டுமே இருந்தது. கணவனும் மகளும் ஜெயிலை விட்டு என்றுமே வெளிவர கூடாது என்று மனதுக்குள் சாபம் வைத்தாள். ஆனால் அதே வேளையில் தன் மகளின் இன்றைய மன முதிர்வுக்கு ஏதோ ஒரு வகையில் தன் வளர்ப்பும்தான் காரணம் என்பதை மறுக்க முடியவில்லை அவளால்.நாட்கள் சென்றது.முகிலின் வயிற்றில் இருந்த மொத்த காயமும் ஆறி போனது.கே.கே தனது பயண பையை எடுத்துக்கொண்டு முகில் யதிராவிடம் வந்தாள். "நாங்க இங்கிருந்து கிளம்பறோம்.." என்றாள்.முகில் அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். "அதுக்குள்ளயா.?" என்றான்.தன் அருகே நின்றுக் கொண்டிருந்த மைத்ரேயியை பார்த்தாள் கே.கே. "எங்களுக்கு நிறைய வேலை இருக்கு முகில்.." என்றாள்."அப்படி என்ன வேலை.?" கோபமாக கேட்ட யதிராவை பார்த்து மென்னகை பூத்தாள் மைத்ரேயி."லைஃப் ரொம்ப போரடிக்குது சிஸ். அதனால்தான் அட்வென்ஜர் தேடி போறோம்.. மேக்னாவோடு சம்பந்தப்பட்ட தீவிரவாத கும்பலை பற்றி தகவல் கண்டுபிடிக்க போறோம். மண்ணுக்கு அடியில் புதைஞ்சி போன புதையல்களை தேடி எடுக்க போறோம். தெரியாத ரகசியங்களை தேடி போய் அனுபவம் எப்படின்னு பார்க்க போறோம்.." என்றாள் மைத்ரேயி.யதிரா அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டாள். "பீ சேப்.." என்றாள்."நீயும். இந்த முகில் உன்னை இனி தொல்லை பண்ணா உடனே எனக்கு சொல்லு. ஓடி வந்துடுறேன்.." என்றாள் கே.கே.இருவரும் அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினர். (இங்கே பல பெண்களோட மனசுலயுமே ஆக்சன் அட்வென்ஜரை தேடி போய் அனுபவத்தை உணரணும்ன்னு ஆசையா இருக்கும். ஆனா பலருக்கும் சமையல்கட்டையே தாண்டாததுதானே பொறப்பு விதியே. நிஜத்துல வாழ இயலாத நிறைய விசயத்தை கதைகளை படிக்கும்போது அந்த கேரக்டர்களோடு இணைஞ்சிதான் வாழுறோம் நாம. அதனால்தான் இந்த கார்த்திகா மைத்ரேயி. மூணு வருசம் முன்னாடியே இவங்களோட ஒரு அட்வென்ஜர் பத்தி ஒரு நாவல் எழுதியிருந்தேன். வார இதழ் ஒன்னுக்கும் அனுப்பி வச்சேன். ஆனா அந்த கதையை அவங்க பப்ளிஷ் பண்ணாம ரிஜக்ட் பண்ணிட்டாங்க. (கிரேஸினஸ் அதிகமா இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.😂)நீங்க சுஜாதா சார் கதைகளை படிச்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன். அதுல கணேஷ் வசந்த்ன்னு இரண்டு கேரக்டர்ஸ் வருவாங்க. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி இரண்டு மெயின் கேரக்டர்ஸ் இருப்பாங்க. அவங்களோட பல திரில்லர் கதைகளுக்கு இந்த கேரக்டர்ஸ் கண்டிப்பா இருப்பாங்க. பி.கே.பி சார், ராஜேஷ்குமார் சார், சுபா சார்ஸ்ன்னு நான் நிறைய பேரோட கதைகளில் இந்த மாதிரி இரண்டு அல்லது மூன்று கதாபாத்திரங்களை படிச்சி இருக்கேன்‌. அதனால் கார்த்திகா மைத்ரேயி ஏதோ ஒரு வகையில் சாயல்தான். ஆனா காப்பி கிடையாது. இரு பெண்களின் வுமென் ஆர்மி. அவங்களோட கதைகளில் இருந்து கண்டிப்பா வித்தியாசமாதான் இருக்கும். ஏனா நான்தான் கிரேஸி ரைட்டர் ஆச்சே. அவங்களோட பர்பெக்டுக்கும் என் கிரேஸினசுக்கும் இடையில் சம்பந்தமே இல்லன்னு கூட சொல்லலாம். காதல், கல்யாணம், குடும்பம்ன்னு வாழ இன்னும் பல கதாப்பாத்திரங்களை உங்களுக்காக உருவாக்கி தரேன் நான். ஆனா இவங்க இரண்டு பேரும் சிங்கிள்ஸ்தான். எத்தனை வருசத்துக்குன்னு எனக்கே தெரியாது. ஆனா இவங்களோட வயசு ஏறாது. எப்பவும் இளமை‌. இன்னும் அம்பது வருசம் ஆன பிறகும் கார்த்திகா மைத்ரேயி கதை வெளியாகும்போது பேர பசங்களை கூப்பிட்டு 'இங்கே பாருங்க.. இந்த கார்த்திகா மைத்ரேயிதான் எங்க ஹீரோயின்ஸ்'ன்னு சொல்லணும். ஆனா அது எப்படி முடியும்.? நீங்க தர ஆதரவால்தான் முடியும் 😊) சரி வாங்க நாம இந்த கதைக்கு போவோம். கனவு முகில் கண்டவை விடவும் ஓவரா போகுது..குருவின் மனைவி புதிதாக பேக்கரி ஒன்றை தொடங்கி இருந்தாள். முகிலும் யதிராவும் கடையின் திறப்பு விழாவுக்கு சென்றனர். வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த இனிப்பு கடை.செல்வியிடம் கை குலுக்கினாள் யதிரா. "வாழ்த்துக்கள்.." என்றாள்."பத்து மனுசங்க சேர்ந்தா மாதிரி வந்தா பயத்துல கால் நடுங்குதுன்னு சொல்வா.. ஆனா இன்னைக்கு இந்த திறப்பு விழாவுக்கே ஆயிரம் பேரை கூப்பிட்டு இருக்கா.." என்று தன் மனைவியை பற்றி நண்பனிடம் சொன்னான் குரு."அவங்களாலயும் எல்லாம் முடியும்டா.. கொஞ்சமா சொல்லி தந்தா போதும்.." என்றான் முகில். யதிராவிற்கு இப்படி ஒரு பரிட்சை வைக்காமல் சொல்லி தந்தே சரி செய்திருக்கலாம் என்ற எண்ணம் தாமதமாகதானே வந்தது அவனுக்கும்."உன் அக்கா கேஸ்ல என்னைக்கு தீர்ப்பு.?" என்று கேட்டான் குரு."நாளைக்கு.." என்றான் முகில். வெளிவரவே முடியாது என்று அறிந்ததும் அவள் தன்னிடம் கெஞ்சிய கெஞ்சல்கள் நினைவிற்கு வந்தது முகிலுக்கு. "டேய் தம்பி.. என்னை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடுடா.. ப்ளீஸ்டா.." என்று அவள் கெஞ்சியது இன்னமும் காதோரம் ஒலித்துக் கொண்டிருப்பது போல இருந்தது.தூரத்தில் நின்று செல்வியோடு பேசிக் கொண்டிருந்த யதிராவை பார்த்தான் முகில். அவளின் முழு மாற்றம் என்னவென்று இரண்டு நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான் அவன்.நீலாவை அழைத்துக் கொண்டு ஜெயிலுக்கு சென்றவள் ரூபனின் கண் முன்னாலேயே நீலாவின் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து கொண்டு வந்து அவன் முகத்தில் விட்டெறிந்தாள்."புருசன் வேணும்ன்னு அழுத என் கழுத்துல இருந்த தாலியை அறுத்து எறிஞ்ச நீ.. ஆனா நான் இன்னைக்கு உன்னை வேணாம்னு சொல்ற இவங்களோட கழுத்துல இருந்த தாலியை கழட்டி தரேன். இனியாவது இவங்க வாழ்க்கை நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." என்றாள்.ரூபன் நீலாவை ஆத்திரத்தோடு பார்த்தான். "நான் கட்டின தாலி வேணாம். ஆனா எனக்கு பிறந்த குழந்தை மட்டும் வேணுமாடி உனக்கு.?" என கேட்டான் அவன் இளக்காரமாக.நீலா அவனை கண்டு சிரித்தாள். "அந்த குழந்தை நான் பெத்தது. சட்டபடி பார்த்தாலும் சரி நியாயப்படி பார்த்தாலும் சரி. குழந்தை உங்களுக்கு சேராது. நீங்க கேஸே போட்டா கூட குழந்தையை உங்ககிட்ட தர மாட்டாங்க. மனுசங்க மனசை புண்படுத்தணும்ங்கறதுக்காகவே சும்மா வார்த்தைகளை அள்ளி தெளிக்காதிங்க.. இனி உங்க முகத்துல கூட விழிக்க மாட்டேன்னு நம்புறேன்.." என்று விட்டு யதிராவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.அவள் செய்ததை குருவிடம் சொன்னான் முகில். "அவ கழுத்துல இருந்து தாலியை பிடுங்கியது அவளுக்கும் கோபத்தைதானே தந்திருக்கும். அதனால்தான் இப்படி பண்ணியிருக்கா. நீ ஏன் தள்ளி போட்டுட்டே இருக்க.? அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே.? பார்க்கறவங்ககிட்ட எல்லாம் இவ என் கேர்ள் பிரெண்டுன்னு சொல்லதான் பிடிச்சிருக்கா.?" என்று கேட்டான் குரு."அதுக்கென்ன அவசரம்.? மெதுவா கட்டிக்கலாம்.." என்றான் முகில்.பேக்கரி திறப்புவிழா முடிந்து வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்."உடம்பெல்லாம் வலிக்குது மாமா.." என்றாள் யதிரா."நான் வேணா பிடிச்சி விடட்டா.?" என கேட்டவனிடம் சிரிப்போடு மறுத்து தலையசைத்தாள்."இது உனக்காக.." என்று பத்திரம் ஒன்றை நீட்டினான் முகில். குழப்பத்தோடு வாங்கி பார்த்தாள் யதிரா."அன்னைக்கு ஒருநாள் ஒரு பூந்தோட்டம் போனோமே. அதை நான் வாங்கிட்டேன் உனக்காக.." என்றான்.பத்திரத்தை திருப்பி அவனிடம் தந்தாள் யதிரா. "எனக்கு வேணாம்.." என்றாள்."ஏன்.?" என்றவனை முறைத்தாள்."லைஃப் பார்ட்னர்ன்னா எல்லாத்தையும் கலந்து ஆலோசிச்சிட்டுதான் ஒரு முடிவை எடுக்கணும்.. உங்க இஷ்டத்துக்கு நீங்களா முடிவெடுக்க இங்கே நான் ஏன் வெட்டியா இருக்கணும்.?" என்றாள்.முகில் அசந்துப் போய் அவளை பார்த்தான். "லவ் யூ யதி.." என்று அவளை கட்டிக் கொண்டான்."ஆவூன்னா இது ஒன்னு.. சரியான விளக்கம் தர முடியாத இடத்துல கொஞ்சியே சமாளிக்கறது.." என்று முணுமுணுத்தவளை தன் அணைப்பிலிருந்து விடவே இல்லை அவன்.மறுநாள் நீதிமன்றம் சென்றனர் இருவரும்.முகிலின் தந்தைக்கும், ரத்தினத்திற்கும் கொலை முயற்சி வழக்கின் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.சௌந்தர்யா, ரூபன், மேக்னா மூவருக்கும் வாழ்நாள் முழுக்க கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் செய்த கொலைகள் கூட அவர்களுக்கு இந்த தண்டனையை வாங்கி தரவில்லை. தீவிரவாதிகளோடு சம்பந்தம் வைத்திருந்ததே நாடு முழுக்க சலசலப்பை தந்துவிட்டது. அதனால்தான் நீதிமன்றமும் இந்த தண்டனையை அவர்களுக்கு தந்தது.விலங்கிட்ட கையோடு அவர்களை ஜீப்பில் ஏற்றுவதை பார்த்தபடி நின்றிருந்த யதிராவின் தோளை தொட்டான் முகில்."என்னாச்சு யதி.?" என்றான்."இவங்களை போல ஏன் வாழணும் மாமா.? கூட இருப்பவங்களையே அடிமைப்படுத்தி, பணத்துக்காக யாரை வேணாலும் கொலை பண்ணி, அந்த பயத்துல இன்னும் பல தப்புகளை செஞ்சி, சின்ன தப்பும் பெரிய தண்டனைக்கு வழிநடத்துங்கற மாதிரி சாதாரண சூதாட்ட விளையாட்டுல ஆரம்பிச்சி கொலைகளா தொடர்ந்து இனி ஆயுளுக்கும் ஜெயில்ல தனியா அடைஞ்சி கிடக்கணுங்கற தண்டனையை வாங்கி தன் வாழ்க்கையை தாங்களே அழிச்சிக்கிட்டாங்க.." என்றவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்."இனியும் இவங்களை நினைச்சி கவலைப்படாம நம்ம லைப்பை பார்க்கலாம்மா.." என்றவன் அவளை அணைத்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.வீட்டில் இவர்களுக்காக காத்திருந்தனர் இரு தாய்மார்களும். இவர்கள் வீட்டிற்கு வந்ததும் வழக்கு பற்றி கேட்டு அறிந்துக் கொண்டனர்.யதிராவின் அம்மா "அவர் ஆன்மா இனிதான் சாந்தியடையும்.." என்றாள் தன் கணவனை நினைத்து.வீட்டில் ஓடி விளையாடி கொண்டிருந்த ரூபனின் இரு குழந்தைகளையும் சோகத்தோடு பார்த்தாள் யதிரா. அவர்களின் தவறுக்கு இந்த சிறு குழந்தைகளும் சேர்ந்து தண்டனையை அனுபவிக்கிறார்களே என்று மனம் வருந்தினாள்.ஆனால் மறுநாளே நீலா வந்து தன் குழந்தையை எடுத்து சென்று விட்டாள். ஒரு வாரம் கழிந்து அங்கு வந்த சௌந்தர்யாவின் கணவன் "யாருக்கு பிறந்தாலென்ன சட்டபடி சான்றிதழின்படி இது என் குழந்தை.." என்று சொல்லி தன் குழந்தையை தூக்கி சென்று விட்டான்.நீலாவின் அம்மா தன் மகளுக்காக பல வரன்களை பார்த்தாள். எதுவுமே நீலாவிற்கு பிடிக்கவில்லை. ஆறு மாதங்கள் அப்படியே சென்றது. வாரத்திற்கு ஒரு மாப்பிள்ளை வீட்டிற்கு வருவதும் பிறகு வேண்டாம் என்பதும் அவளுக்கே சலிப்பை தந்து விட்டன. அடுத்ததாக பார்க்க வரும் மாப்பிள்ளையை காப்பி ஷாப்பில் பார்த்துவிட்டு தன் முடிவை சொல்வதாக சொல்லி விட்டு காப்பி ஷாப்பிற்கு கிளம்பினாள்.தன்னை பெண் பார்க்க வருபவனுக்காக காத்திருந்தவள் இரண்டு காப்பிகளை அருந்தி விட்டு நிமிர்ந்தபோது தூரத்து மேஜையில் அமர்ந்திருந்தான் சௌந்தர்யாவின் கணவன். ஆர்வ மிகுதியால் அவன் முன் சென்று அமர்ந்தாள் நீலா."ஹாய்.. இங்கே என்ன பண்றிங்க‌ பத்மன்.?" என்றாள்.அவன் இவளை கண்டதும் புன்னகைத்தான். "செகண்ட் மேரேஜ் பண்ணிக்க சொல்லி எங்க அம்மாவோட தொல்லைங்க.. அதனால்தான் வந்திருக்கேன். எந்த பொண்ணும் என் கன்டிசனுக்கு ஒத்து வர மாட்டேங்கிறா.. எவனுக்கோ பிறந்த குழந்தைக்கு நான் ஏன் அம்மாவா இருக்கணும்ன்னு கேட்டுட்டு போறாங்க.. இன்னைக்கு வந்த பொண்ணும் அதையே சொல்லிட்டு போயிட்டா.. அதான் சின்ன சோகத்தோடு உட்கார்ந்து காப்பியை குடிச்சிட்டு இருக்கேன்.. நீங்க இங்கே என்ன பண்றிங்க.?" என்றான் காப்பியை குடித்தபடியே."சேம் ப்ராப்ளங்க.. குழந்தையை விட்டுட்டு வந்தா கட்டிக்கறேன்னு சொல்றாங்க.. குழந்தையோடு வருவதா இருந்தா மொத்த சொத்தையும் எழுதி வைக்கணும்ன்னு ஸ்ட்ரெயிட்டாவே கேட்கறாங்க.." என்றாள் சோகத்தோடு.அவன் அவளுக்கும் காப்பியை வரவழைத்து தந்தான். இருவரும் காப்பியை குடித்தனர். தங்களின் குழந்தைகள் மீது தாங்கள் வைத்துள்ள பாசத்தை பற்றி சொல்லிக் கொண்டனர். பல மணி நேரம் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.காப்பி ஷாப் வாசலில் அவனை நிறுத்தினாள் நீலா. "கேட்கறனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.. நான் ஒருத்தருக்கு ஏற்கனவே செகண்ட் வொய்ப்பா இருந்தேன். நீங்க ஒருத்திக்கு ஏற்கனவே செகண்ட் ஹஸ்பண்டா இருந்திங்க. வர அலையன்ஸும் செகண்ட் மேரேஜ்க்குதான் கேட்டு வராங்க.. யாரையோ கட்டிக்கறதை விட உங்களுக்கு விருப்பமா இருந்தா சொல்லுங்களேன்.. பேசி பார்ப்போம். பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசுவோம். அந்த குழந்தையையே உங்க குழந்தையா ஏத்துக்கிட்டிங்க. என் குழந்தையையும் ஏத்துப்பிங்கன்னுதான் நம்புறேன்.." என்றாள்.அவன் இவளை பார்த்து புன்னகைத்தான். "ஆக்சுவலா இதை ரொம்ப நாள் முன்னாடியே நான் உங்ககிட்ட கேட்கலாம்ன்னு இருந்தேன். ஆனா தயக்கத்துல இருந்துட்டேன்.." என்றான்.நீலா அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். "என் வீடு இங்கே பக்கம்தான். வரிங்களா.. காப்பி சாப்பிட்டுட்டு போகலாம்.." என்றாள்.அவன் தங்களின் பின்னால் இருந்த காப்பி ஷாப்பை திரும்பி பார்த்தான். தனக்குள் சிரித்துக் கொண்டான். "தாராளமா.." என்றபடி அவளோடு இணைந்து நடந்தான்."ஆனா ஒரு கன்டிசன்.." என்றாள் நீலா நடந்துக்கொண்டே."சொல்லுங்க.." என்றான் அவன்."எனக்கு எக்ஸ் ஹஸ்பண்டுன்னு ஒரு கேரக்டரே இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்.. ஆனா இந்த நாத்தனாரை என்னால மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. கணவனே இல்ல நாத்தனாரான்னு கேள்வி கேட்காம யதிராவை என் நாத்தனாரா ஏத்துப்பிங்களா.?" என்றாள்.அவன் சரியென தலையசைத்தான். "இங்கேயும் அதேதான். எக்ஸ் வொப்ய் கிடையாது. ஆனா மச்சானை மறக்க முடியல. முகில் என் மச்சான்‌. அவனை வெறுக்காம ஏத்துக்க முடியுமான்னு உங்ககிட்ட கேட்க இருந்தேன் நான்‌‌.." என்றான்."எனக்கு ஓகேங்க.. முகில் மாதிரி ஒருத்தனை யார்தான் பிரதரா ஏத்துக்க மாட்டாங்க.?" என்றாள்.சிறிது நேரம் மௌனமாக நடந்தார்கள் இருவரும்."இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கறோம்.." இருவரும் ஒரே நேரத்தில் சொல்லிவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.புன்னகையை தவிர சிறந்த பதில் அவர்களுக்கு இடையில் இல்லையென்பதை போல புன்னகை இருவரின் முகத்திலும் இருந்தது.யதிரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துக் கொண்டிருந்தது.நாட்கள் வருடங்களாக நகர்ந்துக் கொண்டே இருந்தது.ஒருநாள் நீலாவின் கைபேசி ஒலித்தது. மேஜையின் மேலிருந்து கத்திக் கொண்டிருந்த ஃபோனை எடுத்து காதில் வைத்தான் அவளின் கணவன் பத்மன்."ஹலோ.." என்றான் தூக்க கலக்கத்திலேயே."மாமா.. எனக்கும் யதிக்கும் நாளைக்கு காலையில் கல்யாணம்.. நீங்களும் நீலா அக்காவும் வந்துடுங்க.." என்றான் முகில்.பத்மன் மொத்த தூக்கமும் கலைந்து எழுந்து அமர்ந்தான். அவனின் அருகே உறங்கிக் கொண்டிருந்த இரு சிறுவர்களையும் பார்த்தவன் சத்தமிடாமல் அறையை விட்டு வெளியே வந்தான்."கல்யாணமா.? அதுவும் நாளைக்கா.? இத்தனை நாளா நாங்க சொல்லும்போது கேட்காதவன் இன்னைக்கு என்ன திடீர்ன்னு முடிவு எடுத்திருக்க.?" என கேட்டான் குழப்பமாக."இந்தாங்க காப்பி.." என்று காப்பி கோப்பையை கொண்டு வந்து நீட்டினாள் நீலா."இவ்வளவு நாளா வராத அவசியம் இப்ப வந்துடுச்சி மாமா.. நீங்க நாளைக்கு வந்துடுங்க.." என்றவன் போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.பத்மன் காப்பியை குடித்துவிட்டு மனைவியை பார்த்தான். முகில் போனில் சொன்னதை அவளிடம் சொன்னான். நீலாவும் முதலில் வியந்தாள். பின்னர் இப்போதாவது அவனுக்கு புத்தி வந்ததே என்று எண்ணி மகிழ்ந்தாள்.சமையலறையை நோக்கி நடந்த நீலாவை நிறுத்தினான் பத்மன். "நம்ம ஹோட்டலுக்கு அடுத்த ப்ராஞ்ச் ஓபன் பண்ணலாம்ன்னு இருக்கேன் நான்.." என்றான்.நீலா யோசித்தாள். "ஓகே.." என்றாள். அவளின் திறமையை அவன் சரியாக புரிந்து வைத்திருந்தான். அதனால்தான் அவனே உணவகம் ஆரம்பித்தான். இவளின் மேற்பார்வையில் சில பல சமையல்காரர்களையும் வேலைக்கு சேர்த்தான். நீலா சொல்லி தந்ததை போல சமைத்தார்கள் சமையல்காரர்கள். அவளின் புது புது உணவுகள் வாடிக்கையாளரிடம் நல்ல வரவேற்பை பெற்றன. ஏற்கனவே மூன்று இடங்களில் அவர்களின் ஹோட்டல் இருந்தது. இப்போது நான்காவது இடத்தில் ஹோட்டலை திறக்கவும் முடிவெடுத்து விட்டான் பத்மன்.இவர்களால் 'பொன்னாக இருந்தாலும் கூட கிடைப்போரிடம் கிடைத்தால்தான் பொக்கிஷமாக பார்ப்பார்கள்' என்று நீலாவின் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.மாலையும் கழுத்துமாக நின்றுக் கொண்டிருந்தாள் யதிரா. அவளை மணப்பந்தலுக்கு அழைத்து சென்றாள் செல்வி."இவ்வளவு நாளா நாங்க சொல்லி கேட்காதவங்க இன்னைக்கு என்ன திடீர் புத்தி வந்த மாதிரி கல்யாணம் பண்றிங்க.?" என கேட்டாள் அவள்.யதிரா பதில் சொல்லவில்லை. குனிந்த தலையும் நிமிரவில்லை.சில சொந்த பந்தங்கள் மட்டுமே இருந்தனர் அந்த மணப்பந்தலில்.முகில் யதிராவின் வருகைக்காக காத்திருந்தான். ஒவ்வொரு நொடியும் யுகமாக கடப்பது போல இருந்தது அவனுக்கு.தன் அருகே வந்து நின்றவளை கனிவோடு பார்த்தான். உறவினர்கள் ஆசியோடு அவள் கழுத்தில் தாலியை கட்டினான். பற்றிய அவளின் கையை விடவே இல்லை அவன்.உறவினர்களிடமிருந்து விடைபெற்று வீட்டிற்கு வந்ததும் யதிராவுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தான் முகில். யதிரா வேண்டாமென தலையசைத்தாள். "பால் கொண்டு வரட்டா.?" என்றான்."நமக்கு என்ன பர்ஸ்ட் நைட்டா நடக்குது.?" என கேட்டு எரிந்து விழுந்தாள் யதிரா."சாரி.. வேற ஏதாவது பழம் கொண்டு வரட்டா‌.?" என்றான்."வேணாம்.. எனக்கு தூக்கம் வருது.. இந்த மாலை வாசம் வருது.. வாமிட் வர மாதிரியே இருக்கு.." என்று குழந்தையை போல சிணுங்கினாள்."ஓகே ஓகே.. நீ எழுந்து நில்லு.. நான் இந்த அலங்காரத்தை கலைச்சி விடுறேன்.." என்றவன் அவளை எழுப்பி நிறுத்தினான். அவளின் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூர வைத்தான். தலையில் இருந்த பூக்களையும் கழுத்தில் இருந்த நகைகளையும் கழட்டினான். இடுப்பில் இருந்த ஒட்டியாணத்தை கழட்டியவன் அவளின் வயிற்றில் தன் உள்ளங்கை பதித்தான்.வயிற்றில் காதை வைத்தவன் "குட்டிப்பாப்பாக்கு பசிக்குதாடா.?" என்றான்."எனக்கு கால் வலிக்குது மாமா.." என்றாள் யதிரா. முகில் சட்டென நேராக எழுந்து நின்றான். அவளின் காதுகளில் தொங்கி கொண்டிருந்த கம்மல்களை கழட்டினான்."இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஏன் கல்யாணம் பண்றன்னு எல்லோரும் கேட்டாங்க யதி.." என்றான் முகில்."என்கிட்டயும்தான் கேட்டாங்க. வயித்துல குட்டிப்பாப்பா இருக்குன்னு சொல்ல வெட்கமா இருந்துச்சி. அதனால எதுவுமே சொல்லல நான்.." என்று கன்னங்கள் சிவக்க சொன்னவள் கட்டிலில் அமர்ந்தாள். அவனை யோசனையோடு பார்த்தாள்."ஏன் யதி.?" என்றவனிடம் "பசிக்கற மாதிரி இருக்கு மாமா‌‌.." என்றாள்."நான் உடனே கொண்டு வரேன்‌.." என்று வெளியே நடந்தான் முகில்.'ஒருகணம் ஒருபொழுதும் பிரிய கூடாது.. நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாது..' போனின் ரிங் சத்தம் கேட்டது யதிராவுக்கு. எழுந்து சென்று போனை எடுக்கலாமா என அவள் நினைத்தபோது உணவு தட்டோடு அறைக்குள் நுழைந்தான் முகில். அவனின் முகத்தை கண்டவள் ஃபோனை மறந்து விட்டாள். அவளின் மொத்த உலகத்தையும் அவன்தான் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தான். அவன் மறுத்தாலும் கூட அவளின் உலகம் அவன்தான்.உணவை பிசைந்தபடி வந்தவன் அவளருகே வந்து அமர்ந்து உணவை ஊட்டி விட்டான்.ஃபோன் மீண்டும் ரிங் ஆனது."கே.கே மைத்தியா இருக்கும். எவரெஸ்ட் ஏறி முடிச்சிட்டோம்.. அடுத்து கடல்ல குதிக்க போறோம்ன்னு சொல்ல ஃபோன் பண்ணி இருப்பாங்க.. அவங்ககிட்ட அப்புறமா பேசிக்கலாம்.. நீ இப்ப சாப்பிடு.." என்ற முகில் அவளுக்கு உணவை ஊட்டுவதில் கவனமாக இருந்தான்.அவளின் உயிரோடு தன் உயிரும் பிணைக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருந்தான் அவனும். அவள் வாழ்வின் இழையோடு கலந்து வாழும் தன் காதலை தனியாக பிரிக்க அவனால் எப்போதும் இயலாது. மாற்றாறின் பேச்சை கேட்டு பிரிந்து செல்ல இனியும் தாங்கள் முட்டாள்கள் இல்லை என்று தினமும் மனதில் கூறி கொண்டு இருந்தார்கள். ஏனெனில் இருவருக்குமே தங்களின் வாழ்க்கையின் சாரம் என்னவென்று புரிந்து விட்டிருந்தது.முற்றும் மக்களே..அடுத்த கதையில் சந்திக்கலாம். அதான்ப்பா சிக்கிமுக்கி.. எல்லாரும் நாளைக்கு இதே நேரம் அந்த கதைக்கு வந்து சேர்ந்துடுங்க. செங்கல் சைக்கோவை பத்தி பார்க்கலாம்...கார்த்திகா மைத்ரேயி கதைகளை வருசத்துக்கு நாலாவது தரணும்ன்னுதான் எனக்கும் ஆசை. பார்க்கலாம் முடியுதான்னு.இந்த கதை எப்படி இருந்தது, எங்கலாம் சொதப்பல் இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க.சைலண்ட் ரீடர்ஸ்க்கும் சைலன்டாக எனது நன்றிகள். இங்கே எல்லாருமே சைலண்ட் ரீடர்ஸ்தான்னு நினைக்கிறேன்.இன்னைக்காவது யாருக்காவது கமெண்ட் பண்ண தோணினா மறக்காம அந்த கமெண்ட் செக்சனை உங்களின் பொன்னான கருத்துக்களால் நிரப்பிட்டு போங்க நட்புக்களே

 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN