சிக்கிமுக்கி 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்திமாலை பொழுது சூழ்நிலையை அழகாக்கி கொண்டிருந்தது. வானின் மேகங்கள் ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு படையெடுத்துக் கொண்டிருந்தது.

இளஞ்சிவப்பு வண்ணத்தில் மிதந்துக் கொண்டிருந்த மாலை நேர மேகங்களை பார்த்தபடி ஒரு ஜன்னலின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள் அபிநயா. வானின் மேகங்களை ரசித்துக் கொண்டே அமர்ந்திருப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி அமர்ந்திருக்கையில் நேரம் செல்வதே தெரியாது அவளுக்கு.

"அடுத்து நீங்கதான்.." என்று ஒரு செவிலியை வந்து சொல்லி விட்டு சென்றாள்.

அபிநயாவின் அம்மா ஆனந்தி தன் மகளின் தோளில் தட்டினாள். "எழுந்து வாடி.. டாக்டர் வர சொல்றாங்க.." என்றபடியே எழுந்து நின்றாள்.

அபிநயா வானத்தில் இருந்த பார்வையை திருப்பிக் கொண்டாள். எழுந்து நின்றவள் அம்மாவின் பின்னால் நடந்தாள்.

அந்த பெரிய மருத்துவமனையின் ஒரு அறையில் அமர்ந்திருந்த மருத்துவர் இவள் உள்ளே வந்ததும் ஏற இறங்க பார்த்தார்.

பதினாறு அல்லது பதினேழு வயதை கொண்ட வளர் இளம்பெண் அவள். வட்ட முகம். அழகு பெண். சிரிக்கும் பொழுதுகளில் அந்த அழகு பல மடங்கு அதிகரிக்கும். பள்ளி சீருடையை கூட மாற்றாமல் அப்படியே அழைத்து வந்திருக்கிறார்கள் என்பது அவளது உடைகளை பார்த்தபோதே தெரிந்தது. அவளின் நெற்றியில் இருந்த கர்ச்சீப்பின் கட்டை தாண்டி ரத்தம் இன்னமும் கசிந்துக் கொண்டிருந்தது. கர்ச்சீப்பின் மீது இருந்த ரத்தம் காய்ந்து போயிருந்தது. ஆனால் இன்னமும் ரத்தம் கசிவது நிற்கவில்லை. ஆழமான காயம் என்பது சோதிக்கும் முன்பே புரிந்துப் போனது.

"இந்த வாரத்துல மூணாவது தடவையா வரிங்க.." என்ற மருத்துவர் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார். இவளின் தலையில் இருந்த கட்டை பிரித்தார். கட்டு அவிழ்க்கப்பட்டதும் ரத்தம் அதிகமாக சிந்தியது.

"ஆழமான காயம்.. எதுக்கு இப்படி சண்டை போட்டுக்கற.? குட் கேர்ளா இருக்கலாம் இல்ல.?" என கேட்டுக்கொண்டே அவளின் நெற்றி காயத்தை சுத்தம் செய்தார் மருத்துவர்.

"நானா சண்டை போடுறேன்.? அவன் சரியான செங்கல் சைக்கோ டாக்டர்.. அவனெல்லாம் மனுச பிறவியே இல்ல.. சுத்தமான கட்டெறும்பு வாயன்.." என்றாள் கோபத்தோடு.

அவளின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த அம்மா அவளின் பின்னந்தலையில் ஒரு அடியை விட்டாள். அபிநயா திரும்பி அம்மாவை முறைத்தாள். டாக்டர் அவளது முகத்தை பற்றி தன் பக்கத்திற்கு திருப்பிக் கொண்டார்.

அம்மாவை பார்த்தவர் "நீங்களும் ஏன் அடிக்கிறிங்க.?" என்றார்.

"இவளால எங்க நிம்மதியே போச்சி டாக்டர்.. எப்ப வேணாலும் அடி வாங்கிட்டு வந்துடுறா.. இவங்க அப்பா சம்பாதியத்துல பாதி இவ உடைச்சிட்டு வர கை காலை சரி பண்ணவே சரியா போயிடுது. அதுவாவது பரவால்ல.. இவளால எங்க தெருவே இரண்டா பிரிஞ்சி சண்டை போடுது. ஒருநாள் நிம்மதியா இருக்க முடியல.. பல வருசமா ஒற்றுமையா இருந்த இரண்டு குடும்பம் இன்னைக்கு இரண்டா பிரிஞ்சி சண்டை போட காரணமே இவதான்.." என்றாள் ஆனந்தி கோபமாக.

அபிநயா தன் அம்மாவை முறைத்தாள். "நான் காரணம் இல்ல.. அந்த செங்கல் சைக்கோ கோனக்காலன்தான் காரணம்.." என்றாள் பற்களை கடித்தபடி.

அம்மா மீண்டும் அவளது தலையில் தட்ட முயன்றபோது அம்மாவின் கையை தடுத்தார் மருத்துவர்.

"விடுங்க.. சின்ன பொண்ணு.. பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி கை, கால், நெத்தியெல்லாம் உடைச்சி அனுப்புறான்னா அந்த பையன் மேலதான் தப்பே.." என்றார்.

"ஆமா டாக்டர்.. கரெக்டா சொன்னிங்க.." என்று விரலை சொடுக்கிட்டாள் அபிநயா.

"அந்த பையன் பக்கத்து ரூம்ல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கான் டாக்டர்.." ஆனந்தி இப்படி சொல்லவும் மருத்துவர் கையில் இருந்த கத்தரிக்கோல் கீழே விழுந்தது. அபிநயாவை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டே கீழே விழுந்த கத்தரிக்கோலை எடுத்தார்.

"நீ திருப்பி அடிப்பியா.?" என்றார் காயத்திற்கு மருந்திட்டபடியே.

அம்மாவுக்கு நெற்றியில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "திருப்பி அடிச்சிருக்க மாட்டா.. இவதான் முதல்ல அடிச்சிருப்பா.." என்றாள்.

மருத்துவர் அபிநயாவை சந்தேகமாக பார்த்தபடியே காயத்தின் மீது தையலை போட ஆரம்பித்தார்.

மயக்க மருந்து கூட தராமல் தையல் போட்டுக் கொண்டிருந்தார் அவர். வலியில் கத்துவாளோ என காத்திருந்தவர் அவள் பற்களை கடித்தபடி கோபத்தை மட்டும் காட்டியபடி இருப்பதை கண்டு வியந்தார்.

"தையல் போடுறது வலிக்கலையா பாப்பா.?" என்றார்.

அபிநயா அவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு இல்லையென தலையசைத்தாள்.

"தினமும் அடிதடி பண்ணிட்டு இருந்தா எப்படி டாக்டர் வலிக்கும்‌.? இது சரியான கல் நெஞ்சம். கத்தியை குத்தினா கூட கத்தாம பிடுங்கி எறிஞ்சிட்டு கடப்பாரையை எடுத்து எதிராளியை குத்திட்டு வரும்.." என்றாள் அம்மா.

அவள் பாராட்டுகிறாளா இல்லை குறை சொல்கிறாளா என மருத்துவருக்கே குழப்பமாக இருந்தது.

மருத்துவர் அபிநயாவின் நெற்றி காயத்தின் மீது ஒவ்வொரு தையலை போட்டுக் கொண்டிருந்தார்.

அதே வேளையில் பக்கத்து அறையில் மருத்துவர் முன் அமர்ந்திருந்த அன்பு தன் தாடையோடு சேர்த்து கட்டியிருந்த கர்ச்சீப்பை அவிழ்த்தான்.

மருத்துவர் அவனின் காயத்தை கண்டு விழிகளை விரித்தார். தாடையில் ஆழமாக அதே வேளையில் நீளமாகவும் இருந்தது ஒரு வெட்டுக்காயம்.

"எங்கே போய் இப்படி விழுந்திருக்க நீ.?" என கேட்ட மருத்துவர் அவனை ஆராய்ந்தார்.

பதினேழு பதினெட்டு வயது இளம் வளர் வாலிபன். அரும்பு மீசையும் ஒற்றை முகப்பருவும் அவனின் விடலை பருவத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. பச்சரிசி மாவில் செய்த கொலுக்கட்டை போல சரியாக அளவெடுத்து செய்தது போல இருந்தது அவன் முகம். அடர்ந்த புருவம், ஆழ விழிகள் அவனை சுற்றி இருக்கும் மங்கைகளை மயக்கும் என்று நம்பினார் அந்த மருத்துவர்.

"கீழ விழல டாக்டர்.. ஒரு பொண்ணு இவனை அடிச்சிட்டா.." என்றான் அன்புவிற்கு துணையாக வந்திருந்த அவனது நண்பன் குணா.

"ஒரு பொண்ணு அடிச்சதுலயே இவ்வளவு காயம்.?" என்ற மருத்துவருக்கு அவர்கள் சொல்வதை நம்புவதற்கே மனமே வரவில்லை.

"அவ பொண்ணே இல்ல டாக்டர். ராட்சசி.. பகல் கொலைக்காரி.. அவ சரியான மெண்டல் மண்டை.. குட்டச்சி.." என்றான் அன்பு பற்களை கடித்தபடி.

"அதிகமா பேசாத தம்பி. காயம் வலியெடுத்துடும்.. அப்படியே இரு.. நான் மருந்து போட்டு விடுறேன்.." என்றவர் அவன் மீண்டும் கத்த ஆரம்பித்து விடுவானோ என பயந்து எழுந்து வந்து அவனுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.

"ஆழமா இருக்கு காயம். தையல் போடணும்ப்பா. பரவால்லையா.?" என்று கேட்டார் மருத்துவர்.

"பரவால்ல டாக்டர்.. போட்டு விடுங்க.. என் உடம்புல இருக்கற ஒவ்வொரு தழும்பையும் பார்க்கும்போதுதான் அவளை பழி வாங்கணும்ங்கற நினைப்பு எனக்குள்ள சாகாம இருக்கும்.." என்றான்.

"என்னடா இது.. சின்ன பையனை போல பேசாம ஏதோ தீவிரவாதி ரேஞ்சிக்கு பேசுற.." என கேட்டு சிரித்தபடியே அவனின் காயத்திற்கு மருந்திட்டார் மருத்துவர்.

"இது உங்களுக்கு புரியாது டாக்டர். அந்த குட்டச்சிக்கும் எனக்கும் இடையில் தீரா பகை இருக்கு. அவளை தீர்த்தாதான் அந்த பகையும் தீரும்.." என்றான் அன்பு.

அவனின் காயத்தின் மீது தையலை போட்டு முடித்ததும் மருந்து தடவினார் மருத்துவர்.

"சின்ன பசங்களே ரவுடிங்க ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சிட்டிங்க.. உங்களோட வருங்காலமெல்லாம் எப்படிதான் இருக்குமோ.?" என சலிப்போடு கூறிக் கொண்டே அவனின் கையில் ஊசியை குத்தினார் அவர். "இதுல மாத்திரை எழுதியிருக்கேன். நேரா நேரத்துக்கு சாப்பிடு. மறக்காம காயம் ஆறிய உடனே வா.. தையல் பிரிச்சி விடுறேன்.." என்றார்.

அன்பு அவர் தந்த பேப்பரை கையில் வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே நடந்தான். அவனது பள்ளி பையை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் வந்தான் குணா.

"இன்னைக்கும் நீ இப்படியே வீட்டுக்கு போனா உங்க அம்மா உன்னை பிரிச்சி மேஞ்சிடும்.." என்றான் குணா.

அன்பு தன் தாடையை தொட்டுப் பார்த்துக் கொண்டான். கொஞ்சமாக வலித்தது. உடலின் மற்ற இடத்தில் உண்டான காயமென்றால் கூட மறைத்து விடலாம். ஆனால் முகத்தில் எளிதாக பார்வைக்கு படும்படி இருப்பதை அம்மா பார்த்தால் தன்னை துவைத்து எடுப்பாள் என்று அவனுக்கே உறுதியாக தெரியும்.

"குட்டச்சி.. பகல் கொலைக்காரி.. இப்படி அடிச்சிட்டா.." என்று முனகிக் கொண்டே நடந்தான் அன்பு.

மாலையில் பள்ளி முடிந்து அவன் வெளியே வந்தவுடனே ஆரம்பித்து விட்டது சண்டை.

அபிநயா தன் சைக்கிளை வேப்பமரத்தடி ஒன்றின் கீழ் நிறுத்தி இருந்தாள். பி.இ.டி வகுப்பின் போது விளையாட வந்த மாணவர் கூட்டம் ஒன்று அவளது சைக்கிளை கொண்டு வந்து மற்ற சைக்கிள்களின் வரிசையோரத்தில் நிறுத்தி விட்டது. அதுவும் அவளின் சைக்கிள் அன்புவின் சைக்கிளின் மீது படரும்படி நிறுத்தி வைத்துவிட்டு சென்று விட்டனர்.

பள்ளி முடிந்து வெளியே வந்த அன்பு அவளின் சைக்கிள் தன் சைக்கிள் மீது மோதியிருப்பதை கண்டதும் அதுதான் சாக்கென்று எண்ணி விட்டான். அவளின் சைக்கிளில் இருந்த காற்றை பிடுங்கி விட்டவன் அந்த சைக்கிளின் பிரேக் ஒயரையும் பிடுங்கி விட்டுவிட்டான். அவன் பிரேக் ஒயரை பிடுங்கி கொண்டிருந்த அதே வேளையில் அபிநயாவும் அங்கே வந்து விட்டாள். அவ்வளவுதான் போர் தொடங்கி விட்டது.

"ஏன்டா என் சைக்கிளை தொட்ட.?" என கேட்டு அவன் மீது தன் கையிலிருந்த உணவு பையை எறிந்தாள் அபிநயா. தண்ணீர் பாட்டிலோடு அவள் எறிந்ததில் அந்த பை அவனது நெஞ்சில் பட்டு வலியை தந்துவிட்டது.

அவனும் உடனே தரையில் கிடந்த செங்கல் ஒன்றை எடுத்து அவள் மீது எறிந்தான். செங்கல் பட்டதில் அவளின் நெற்றியிலிருந்து உடனடியாக ரத்தம் கசிந்தது. அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனின் மேல் தன் மறுகையில் வைத்திருந்த பரிட்சை அட்டையை வீசினாள் அவள். இரும்பு அட்டை நேராக வந்து வெட்டியதில் அவனின் தாடையில் ஆழமாகவே வெட்டு விழுந்து விட்டது. அதன் பிறகும் அவர்கள் அந்த சைக்கிள் நிறுத்துமிடத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதில் கேட் தாண்டி சென்ற மாணவர்கள் கூட இவர்களின் சண்டையை பார்க்க வந்து கூடி நின்று விட்டனர்.

கடைசியில் பி.இ.டி சார் வந்து இருவரையும் பிடித்து தனி தனியே நிறுத்தினார். இவர்களின் சண்டையால் அங்கு நின்றிருந்த ஒன்றிரண்டு சைக்கிள்கள் முன் பக்க கூடை இல்லாமல், ஒரு பக்க ஹேண்டில் இல்லாமல், அமரும் இருக்கை இல்லாமல் என சேதாரமாகி இருந்தது. அந்த சைக்கிள்களின் சொந்தக்கார மாணவர்களில் ஒருவன் தன் சைக்கிளை கண்டு விம்மி விம்மி அழுததெல்லாம் தனிக்கதை.

ரத்தம் வழியும் காயத்தோடும் புரண்டதில் உடம்பெல்லாம் மண்ணை நிரப்பிக் கொண்டும் நின்றிருந்த இருவரையும் முறைத்தார் உடற்கல்வி ஆசிரியர்.

"உங்க இரண்டு பேரால இந்த மொத்த ஸ்கூலோட டிசிபிளேனே கெட்டுப் போகுது. ஸ்கூல் முடிய இன்னும் இரண்டு மாசம்தான் இருக்கு. அதுவரை இரண்டு பேரும் அமைதியா இருந்துட்டு போகலன்னா நான் விபரீதத்தை கையில எடுத்துடுவேன்.." என்று தன் வழக்கமான பாணியில் மிரட்டினார் அவர்.

"சார் என் சைக்கிள்.." என்று கண்களை கசக்கி அழுதுக் கொண்டிருந்த மாணவனை பரிதாபமாக பார்த்தவர் இவர்கள் இருவர் புறமும் திரும்பினார். "இந்த சைக்கிள்ஸை நீங்கதான் ரிப்பேர் பண்ணி தரணும்.. அதுவும் ரிப்பேர் பண்ணி என்கிட்ட கொண்டு வந்து காட்டணும்.." என்றவர் அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லி விசிலை ஊதினார்.

ஆசிரியர்கள் இவர்களிடம் பெற்றோரை கூட்டி வாருங்கள் என்று சொல்லுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டன. ஏனெனில் பெற்றோர்களுக்கே பள்ளிகளுக்கு வந்து சென்று சலித்து போய் விட்டார்கள். ஆசியர்கள் கூட அவர்களின் பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்துக் கொண்டார்கள். ஆனால் இந்த சில்லு வண்டுகளின் அலும்பு நிற்கவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1112

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN