சிக்கிமுக்கி 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தனக்கொடிக்கால் வளர்ந்து வரும் கிராமம். பச்சை வாசனை மாறாத வயல்வெளிகளும் அதே வேளையில் நாகரீக நகரத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஊர் அது.

சந்தனக்கொடிக்கால் கிராமத்தின் மக்கள் தொகை ஏழாயிரம் என கடைசி கணக்கெடுப்பின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. கூகுள் மேப்பில் தேடினால் கூட மிகவும் அழகாய் தெரியும் கிராமம் அது.

கிராமத்தின் வடக்கு மூலையில் உள்ளது ஒரு சிறிய தெரு. நடுவில் ஒரு சிமெண்ட் சாலையும் அதன் இரு புறமும் வரிசையாக பல வீடுகளும் இருக்கும். சந்தனக்கொடிக்கால் கிராமத்தின் இரு முக்கிய புள்ளிகள் வசிக்கும் தெரு அது.

அட ஆமாங்க. முக்கிய புள்ளிகள். நம்ம அன்புவும், அபிநயாவும் இருக்கற தெருதான் அது.

சாலையின் தெற்கு ஓரத்தில் கிழக்கு பார்த்து இரண்டு வீடுகள் ஒன்றின் அருகே ஒன்றென இருக்கும். அதில் முதலாவது வீடு அன்புவின் வீடு. அடுத்த வீடு அபிநயாவினுடையது.

அதிகம் சண்டைகளுக்கு பிரசித்தி பெற்றது அந்த தெரு. அபிநயாவும் அன்புவும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அவர்கள் சண்டையிட்டதும் அவர்கள் இரு வீட்டுக்கும் இடையில் சண்டை தொடங்கும். இரு வீட்டாருக்கும் பரிந்து பேசிக் கொண்டு மொத்த தெருவும் இரண்டாக பிரியும். கடந்த பத்து ஆண்டுகளாக அப்படிதான் அங்கே சண்டை நடந்து வருகிறது.

அபிநயாவின் அம்மா ஆனந்தி ஆரம்ப பள்ளி ஆசிரியை. அப்பா வினோத் விவசாய தோட்டங்களின் நீர்பாசனத்திற்கு தேவைப்படும் பைப்புகள், மோட்டார்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். தம்பி தீபக் பத்தாம் வகுப்பு மாணவன். வீட்டின் செல்லப்பிள்ளை அபிநயாதான். அப்பாவிற்கு தன் மகள் மீது அவ்வளவு பாசம். தன் உயிரே அவள்தான் என்று சினிமா வசனம் பேசும் அளவிற்கு அன்பை கொட்டி வளர்த்துக் கொண்டிருந்தார்.

அன்புவின் அம்மா அர்ச்சனா வீட்டை கவனித்துக் கொள்கிறாள். அப்பா ஆறுமுகம் தனியார் நிறுவன ஊழியர். அன்புவின் பாட்டி கண்ணம்மா வீட்டு திண்ணையில் அமர்ந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் ஜீவன். அன்புவின் மீது பாட்டிக்குதான் கொள்ளை பிரியம். பேரனின் காலில் கூட தூசு படக்கூடாது என நினைக்கும் பேராசைக்காரி. ஆனால் பக்கத்து வீட்டு அபிநயா இருக்கும்வரை அவளின் பேரனின் கண்களில் கூட தூசு குறையாது என்பது அவளுக்கே தெரியும்.

அன்புவும் அபிநயாவும் இந்த வருடம் பள்ளி இறுதியாண்டு மாணவர்கள். இருவரும் ஒரே வகுப்பும் கூட. படிப்பில் அன்பு சுட்டி. அபிநயா சராசரிக்கும் மேல்தான் மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக அவளும் முதல் மதிப்பெண் மாணவியாக இல்லாமல் போனாள்‌. இல்லையேல் அவர்களுக்குள் சண்டையிட இன்னும் ஒரு காரணம் வேறு கிடைத்திருக்கும்.

அன்புவிற்கும் அபிநயாவிற்கும் இடையில் நடந்த சண்டைகள் அவர்கள் தெருவுக்கே வரலாற்று நினைவாக மாறிக் கொண்டிருப்பவை.

அர்ச்சனா குடும்பமும் ஆனந்தி குடும்பமும் முந்தைய தலைமுறையிலிருந்தே அங்குதான் வசித்து வருகிறார்கள். ஆனந்தி திருமணமாகி புகுந்த வீடு வந்தபோது அவளுக்கு நல்ல தோழியாக அறிமுகமானவள் அர்ச்சனா. இருவரும் சேர்ந்து மணிக்கணக்கில் அரட்டை அடித்து உள்ளனர். ஆனந்தி கண்ணம்மா பாட்டியின் வளர்ப்பு மகள் என்று ஊர் பேசிக் கொள்ளும் அளவுக்கு இரு குடும்பமும் நெருங்க பழகி இருந்தது.

ஆறுமுகமும் வினோத்தும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். நாலாம் கால் வகையறாவில் அத்தை மகன் மாமன் மகன் முறையாம் அவர்களுக்குள். அதனால் சொந்தத்திலும் அவர்களின் உறவு நெருங்கிதான் இருந்தது.

போண்டா பஜ்ஜி சுட்டால் கூட அந்த வீட்டிற்கும் பகிர்ந்தளித்து விட்டுதான் உண்பார்கள் இரு வீட்டாரும். அரசாங்கம் இரு வீட்டுக்கு ஒரு தண்ணீர் பைப் என்று அமைத்து தந்து விட்டு சென்றபோது ஒருவரின் வீட்டில் ஆள் இல்லா விட்டால் கூட தங்களிடம் தந்து சென்ற சாவியை வைத்து மற்றவர் அந்த வீட்டையும் திறந்து தண்ணீரை பிடித்து வைப்பார்கள். தெருவே பொறாமைபடும் அளவிற்கு இருந்த உறவுதான் இரு வீட்டு பழக்கமும்.

ஆனந்தம் மட்டுமே ஒரே சீராக சென்றுக் கொண்டிருக்குமா என்ன.?

அர்ச்சனாவுக்கு அன்பு பிறந்தான். அன்பு பிறக்கும்போதே அர்ச்சனாவுக்கு பிரசவம் சிக்கல்தான். இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று சொல்லித்தான் மருத்துவர் அவளை குழந்தையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஒரே மகனாக இருந்தாலும் நல்ல ஆரோக்கியமாக இருந்ததால் இன்னொரு குழந்தை எதற்கு என நினைத்து இருந்து விட்டார்கள் அவர்களும்.

அன்பு பிறந்த அடுத்த எட்டாம் மாதத்தில் அபிநயா பிறந்தாள். பிறக்கும்போதே துருதுருவென இருந்த அந்த குழந்தையை இரு வீட்டுக்குமே ரொம்ப பிடித்து விட்டது.

அன்புவும் அபிநயாவும் ஒன்றாகவேதான் வளர்ந்தார்கள். வீட்டின் பின்பக்க வாசலில் இரு வீட்டுக்கும் சேர்ந்தார் போல இருந்த வேப்பமரத்தில் அருகருகே தொட்டில் கட்டி இருவரையும் விளையாட விட்டனர்.

கண்ணம்மா பாட்டி கதை சொல்லிக் கொண்டே இருவருக்கும் உணவு ஊட்டுவாள்.

அன்பு பள்ளியில் சேர்ந்த அதே வருடத்தில் அவனோடுதான் நானும் பள்ளிக்கு செல்வேன் என அடம்பிடித்து பள்ளிக்கு சென்றாள் அபிநயா. ஆசிரியர் பாடம் நடத்துகையில் உறங்கி விழுவாள் அபிநயா. அதனால் அவளுக்கு அ ஆ எழுத படிக்க கற்று தந்ததே அன்புதான்.

ஆறுமுகம் வெளியூர் சென்று வந்தால் அபிநயாவுக்கும் பொம்மைகள் வாங்கி வருவார். வினோத் தன் கடைக்கு சரக்கு வாங்க செல்லும்போதெல்லாம் அன்புவிற்கும் நோட்டு பேனாக்கள் வாங்கி வருவார்.

அன்புவும் அபிநயாவும் ஏழெட்டு வருடங்கள் வரை நன்றாகதான் நட்பு கொண்டிருந்தனர். ஆனால் ஒருநாள் விளையாட்டில் ஆரம்பித்தது ஒரு சண்டை.

இரண்டாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் இருவரும் சேர்ந்து மண் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தொந்தரவு தராமல் சிறுவன் தீபக் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

மண் வீட்டின் மீது அலங்கரிக்க பூக்கள் பறித்து வர ஓடினார்கள் இந்த இரண்டு சில்லு வண்டுகளும். அபிநயா தங்கள் தோட்டத்து மல்லிகைகளை பறித்துக் கொண்டு ஓடி வந்தாள். அன்பு தங்கள் தோட்டத்து கனகாம்பரத்தை பறித்து கொண்டு ஓடி வந்தான்.

அபிநயா தன் கையில் இருந்த பூவை கொட்டியபோது "அது நல்லா இல்ல.. கனகாம்பரத்தை மேலே வைக்கலாம்.." என்று அதை தள்ளி விட்டான் அன்பு.

தனது கனகாம்பரத்தை அவன் வீட்டின் மீது அலங்கரிக்க முயன்றபோது மொத்த வீட்டையும் மிதித்து கலைத்தாள் அபிநயா.

"உன் வீடும் நல்லா இல்ல.." என்றாள்.

இடிந்த வீட்டின் மண்ணை அள்ளி அவள் மீது எறிந்தான் அன்பு. "ஏன் என் வீட்டை கலைச்ச.?" என கேட்டு அவளை தரையில் தள்ளினான்.

தலையெல்லாம் மண்ணால் நிரம்பி எழுந்து நின்றாள் அபிநயா. அருகில் இருந்த கருங்கல் ஜல்லியை எடுத்து அவன் மீது வீசினாள். ஜல்லிக்கல் வந்து நேராக அவனின் தலையில் பட்டது. ரத்தமும் உடனே கொட கொடவென கொட்டியது. அவன் அடுத்த சேதாரம் செய்யும் முன் பாட்டி ஓடி வந்து விட்டாள்.

பேரனின் தலையில் காயம் பட்டதை கண்டவள் அபிநயாவிற்கு ஒரு அடியை தந்துவிட்டு இவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

சிறு பிள்ளைகள் சண்டை என நினைத்து முதல் தடவை அமைதியாக இருந்து விட்டனர் இரு வீட்டாரும். ஆனால் அவர்கள் அந்த முதல் சண்டையை மறக்கவே இல்லை. அந்த சண்டையை காரணமாக வைத்தே மீண்டும் மீண்டும் சண்டைகளை போட்டுக் கொண்டனர்.

கொஞ்ச நாளில் சரியாகி விடுவார்கள் என பெற்றோர்கள் நினைத்தனர். வாரம் இரு முறை மருத்துவமனைக்கு நடக்க வைத்தனரே தவிர இவர்கள் திருந்திய பாடில்லை.

பொறுத்திருந்து பார்த்துவிட்டு இரு வீட்டாரும் ஒருவர் குழந்தை மேல் ஒருவர் பழி போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

அபிநயா அன்புவின் காலில் உதைத்து விட்டு வந்தால் அவளின் காலில் சூடு வைத்தாள் ஆனந்தி. அபிநயாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அவளை தொல்லை செய்து விட்டு வந்தால் அன்புவின் கையில் சூடு வைத்தாள் அர்ச்சனா. ஆனால் என்ன பிரயோசனம்.? எல்லா கரண்டிகளையும் அடுப்பில் வைத்ததில் கரண்டி காம்புகள்தான் கரியானதே தவிர இவர்களின் அழிச்சாட்டியம் குறைந்த பாடில்லை.

எங்கேயோ போய் தொலையுதுங்க கழுதைங்க என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் கூட இவர்களால் இரு வீட்டு பெற்றோரும் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பதை போல உணர்ந்தனர். முதல் சண்டையிலேயே மனஸ்தாபத்தோடு விலகி நின்ற இரு குடும்பமும் அடுத்தடுத்து வந்த சண்டைகளில் பரம்பரை விரோதியை போல முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.

"பழசெல்லாம் எதுக்குங்க.? முந்தாநேத்து கூட அவளை கை காட்டி இவன் தன் பிரெண்ஸ்கிட்ட என்னவோ சொல்லி சிரிச்சிட்டானாம். அவ்வளவுதான் ஆத்தா பத்ரகாளி வந்த மாதிரி நின்ன இடத்துல இருந்தே கவராய கம்பியை தூக்கி வீசிட்டா அவ. அவ என்ன நேரத்துல வீசினாளோ.. அது நேரா வந்து அவன் தொடையிலயே குத்தி கிழிச்சிடுச்சி.. இவனை கேட்டா அவ பின்னாடி இருந்த லைப்ரரியை கை காட்டிதான் பேசிட்டு இருந்தேன்னு சொல்றான். அவதான் அப்படி பண்ணிட்டான்னு இவனாவது அமைதியா வந்தான்னா அதுவும் இல்ல.. தன்னை குத்திய கவராயத்தை எடுத்துட்டு போய் அவளோட தோளுல நச்சுன்னு இறக்கிட்டு வந்துட்டான். குழந்தைங்க மேல கேஸ் தரலாம்ன்னு சட்டம் போட்டிருந்து, இரண்டு குடும்பமும் போலிஸ்ல கேஸ் தரதா இருந்திருந்தா இன்னேரம் இரண்டு பேர் மேலயும் இருநூறு முன்னூறு கேஸ் இருந்திருக்கும்.." என்று தன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

அவளுக்கு எதிரே நின்று இதை கேட்டுக் கொண்டிருந்த விவேகா அந்த தெருவுக்கு புதிதாக குடி வந்திருக்கும் கட்டிட பொறியாளர். புது வீட்டிற்கு வந்து பால் காய்ச்சியவள் காய்ச்சிய பாலை அக்கம் பக்கத்து வீட்டாருக்கு தரலாமே என்று எண்ணி அனைவரிடமும் தந்துவிட்டு கடைசியாக வந்து அர்ச்சனாவிடமும் தந்தாள். மணி மூன்றுக்கும் முன்பே வந்தவள். இப்போது கடிகாரம் ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. தான் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்ல நினைத்தாள் விவேகா. ஆனால் எங்கே.? இவளை பேச கூட விடாமல் அவளே அறுவை போட்டுக் கொண்டிருந்தாள். பாவம் அவள் மட்டும் என்ன செய்வாள்.? தோழி ஆனந்தி இல்லாத குறையை இப்படி மற்ற வீட்டு பெண்களிடம்தானே தீர்த்துக் கொண்டாக வேண்டும்.?

"அக்கா.. மீதியை நாம நாளைக்கு பேசலாமா.?" பொறுக்க முடியாமல் கடைசியாக கேட்டே விட்டாள் விவேகா.

அர்ச்சனா வீட்டை திரும்பி பார்த்தாள். மணி எவ்வளவு என கண்டவள் சலிப்போடு எழுந்து நின்றாள். "சரிம்மா.. நீயும் போய் உன் வேலையை பாரு.. நாம நாளைக்கே பேசலாம்.." என்றாள்.

விட்டால் போதுமென்று அங்கிருந்து ஓடி விட்டாள் விவேகா.

"இருக்கற வீட்டு வேலையையாவது பார்க்கலாம்.." என்றபடி வீட்டுக்குள் செல்ல அவள் திரும்பிய அதே நேரத்தில் சைக்கிள் பெல் சத்தம் ஒன்று கேட்டது.

அர்ச்சனா திரும்பி பார்த்தாள். குணாவின் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்தபடி வந்து கொண்டிருந்தான் அன்பு. அவளின் பார்வையில் அவன் தென்பட்டானோ இல்லையோ அவனின் தாடையில் இருந்த காய கட்டுதான் பூதாகரமாக தென்பட்டது.

வீட்டின் முன்னால் சைக்கிள் வந்து நின்றதும் அன்பு தன் பேக்கை இறுக்கமாக பிடித்தபடி கீழே இறங்கினான். வாசல் திண்ணையில் இருந்த தென்னங்கீத்து துடைப்பத்தை பார்த்த அர்ச்சனா மகன் அருகே வந்ததும் அவனை ஒரு கையால் பிடித்தாள். மறுகையால் துடைப்பத்தை எடுத்து விட்டாள்.

அர்ச்சனா கையில் அன்பு சிக்கிய அடுத்த நொடியே விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டான் குணா.

"அம்மா.. என்னைய விடும்மா.." அம்மா தன்னை அடிக்கும் முன்பே தப்பி விலகி வந்து விட்டான் அன்பு.

சாலையின் மறு ஓரத்திற்கு சென்று நின்றவன் "நீ துடைப்பத்தை கீழ போடலன்னா நான் வீட்டுக்கே வர மாட்டேன்.." என்றான்.

"நீ வீட்டுக்கு வா.. நான் துடைப்பத்தை எறிஞ்சிடுறேன்.." என்று அம்மாவும் பதில் சொன்னாள்.

"அப்பா வரும் வரைக்கும் நான் இங்கேயே நிக்கிறேன்.." என்றவன் கையை கட்டியபடி மறுபக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.

"எப்படியோ போ.." என்ற அர்ச்சனா துடைப்பத்தை எறிந்துவிட்டு வீட்டுக்குள் புகுந்தாள்.

அன்பு தன் சட்டை காலரை ஸ்டைலாக ஏற்றி விட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்த அதே நேரத்தில் அவனை தாண்டிக் கொண்டு சென்ற ஸ்கூட்டி அபிநயாவின் வீட்டு வாசலில் நின்றது. ஆனந்தி ஸ்கூட்டியை நிறுத்தியதும் கீழே இறங்கிய அபிநயா திரும்பி நின்று அன்புவை முறைத்தாள். அவன் இவளை ஆத்திரத்தோடு பார்த்தான்.

"மறுபடியும் சிக்குவ இல்ல.. செத்தடி அப்ப.." என்று உதடு அசைத்தான்.

"யாரு கையில் சிக்கி யார் சாகறாங்கன்னு பார்க்கலான்டா.." என்று இவளும் உதடு அசைத்து விட்டு தன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1211

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN