சிக்கிமுக்கி 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயா வீட்டுக்குள் நுழைந்ததும் தன் பேக்கை ஹாலிலேயே வைத்துவிட்டு சமையலறை நோக்கி ஓடினாள்.

அவளின் பின்னாலேயே வந்த அம்மா "இங்கே என்ன பண்ற.?" என்றாள்.

"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.." என்ற அபிநயா அங்கிருந்த மசாலா டப்பாக்களை ஒவ்வொன்றாக எடுத்து திறந்து பார்த்தாள்.

ஆனந்தி மகளின் அருகே வந்து அவள் கையிலிருந்த மசாலா டப்பாவை பிடுங்கி சமையல் மேடையின் மீது வைத்தாள். "உனக்கு என்னடி வேணும்.?" என்றாள்.

"மிளகா தூள்.. நல்ல காரமான மிளகா தூள் வேணும்.." என்ற அபிநயா மீண்டும் சமையற்கட்டின் செல்ப்களில் தேட ஆரம்பித்தாள்.

"மிளகாய்த்தூள் உனக்கு எதுக்குடி.?" அம்மா கேட்டதை காதிலேயே வாங்கவில்லை அபிநயா. மிளகாய்த்தூள் டப்பாவை திறந்து பார்த்தவளுக்கு வெற்றி பெற்றது போல சந்தோசத்தில் கண்கள் மின்னியது.

"இந்த டப்பாவை அப்புறமா கொண்டு வந்து தரேன்.." என்றவள் அந்த சமையல்கட்டை விட்டு வெளியே ஓடினாள்.

ஆனந்தி அங்கே வரிசையாக தொங்கி கொண்டிருந்த கரண்டிகளை பார்த்தாள். அபிநயா இன்றைக்கு செய்து விட்டு வந்த காரியத்திற்கும் கரண்டியை காய்ச்சி காலிலேயே இழுக்க சொல்லி சொன்னது மனம். ஆனால் சூடு வைத்து சலித்து விட்ட அனுபவம் கரண்டியை கை தீண்ட கூட விரும்பவில்லை.

"இவ மட்டும் ஏன்தான் இப்படி இருக்காளோ.?" என்று எப்போதும் போல புலம்பினாள் அவள்.

அபிநயா மிளகாய்த்தூள் டப்பாவோடு தனது அறைக்கு வந்தாள். அது அவளும் தீபக்கும் பங்கிட்டு கொள்ளும் அறை. அவளுக்கென மாடியில் தனியறை இருந்தது. ஆனால் தனி அறையில் உறங்க பயந்துக் கொண்டு தம்பியின் அறையில் ராஜாங்கம் செய்துக் கொண்டிருந்தாள்.

வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த தீபக் இவள் அறைக்குள் நுழைந்ததும் திரும்பி பார்த்தான். அபிநயா நேராக சென்று கட்டிலின் மீது அமர்ந்தாள். தான் எடுத்து வந்திருந்த ஒரு பாக்ஸில் பாதி மிளகாய்த்தூளை கொட்டி தண்ணீரை ஊற்றி பிசைந்தாள். அதை சிறு சிறு உருண்டையாக பிடித்து ஒரு தட்டில் வரிசைப்படுத்தினாள்.

"என்ன பண்ற நீ.?" குழப்பமாக கேட்டான் தீபக்.

"மிளகாய்த்தூள் உருண்டை செய்ய போறேன். இது கெட்டியான உடனே பத்திரமா எடுத்து வச்சிப்பேன். எனக்கு எங்கே இந்த உருண்டையை கலக்க தோணுதோ அங்கே கலப்பேன்.." என்றவள் தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

"வீட்டுல இருந்த மிளகாய்த்தூள் மொத்தத்தையும் நீ காலி பண்ணிட்ட.." என்றான் தீபக்.

"இன்னும் பாதி இருக்குடா.." என்றவள் மிளகாய்த்தூள் உருண்டைகளை காய்வதற்காக பத்திரப்படுத்தினாள். மிளகாய்த்தூள் டப்பாவை கொண்டு போய் சமையலைறையிலேயே வைத்துவிட்டு வந்தாள்.

அவள் மீண்டும் அறைக்குள் வந்தவள் மிளகாய்த்தூள் உருண்டை எப்படி இருக்கிறது என்று கவனித்தாள்.

"இது காய்ஞ்சிட்டா உடைஞ்சிடுமா.?" என்று தன் தம்பியை பார்த்து கேட்டாள்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா முதல்ல போய் குளிச்சிட்டு வாக்கா.. உன்னை பார்த்தாலே கோரமா இருக்கு.." என்று முகம் சுளித்து சொல்லி விட்டு திரும்பி கொண்டான் தீபக்.

அபிநயா அங்கிருந்த கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள். தலையில் கட்டுப்போட்ட இடத்தை தவிர மீதி அனைத்து இடத்திலும் மண் துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தன. அபிநயா தனது ஜடையை அவிழ்த்தாள். ரிப்பனை கழட்டி பின்னலை அவிழ்த்ததும் தலையில் இருந்த மணல் தரையில் கொட்டியது.

"பைத்தியம்.. உன்னை போய் குளிக்கதானே சொன்னேன்.? ஏன் இப்படி மொத்த ரூமையும் புழுதிக்காடா மாத்துற.?" என கேட்டுக்கொண்டே அவள் மீது ஸ்கேலை எறிந்தான் தீபக்.

"இருடா போறேன்.." என்றவள் தலையை ஒரு உதறு உதறினாள்.

"அம்மா.." என்று தீபக் கத்த தொடங்கினான்.

அபிநயா நக்கல் சிரிப்போடு ஒரு பாலிதீன் கவரை எடுத்து கர்ச்சீப் போல காயக்கட்டின் மீது கட்டினாள். பின்னர் கப்போர்டை திறந்து மாற்று உடை எடுத்துக் கொண்டு குளிக்க கிளம்பினாள்.

அவள் திரும்பி வந்தபோது அந்த அறையை சுத்தம் செய்து வைத்திருந்தான் தீபக். அவனுக்கு எங்கேயும் சிறு தூசு கூட இருக்க கூடாது.

தலையை நன்றாக துவட்டியபிறகு காயத்தின் மீது கட்டியிருந்த பாலிதீன் கவரை கழட்டி எறிந்தாள். தீபக் அவளை முறைப்போடு பார்த்துவிட்டு எழுந்து வந்தான். அவள் தரையில் எறிந்த கவரை எடுத்து டஸ்ட்பின்னில் போட்டான். பின்னர் மீண்டும் சென்று அமர்ந்து படிக்க ஆரம்பித்தான்.

"அம்மா பசிக்குது.." என்று அறையிலிருந்தே கத்தினாள் அபிநயா.

"அக்கா.. நீ படிக்கவே மாட்டியா.?" கவலையோடு கேட்டான் தீபக்.

"சாப்பிட்டு படிக்கறேன்.." என சொல்லிக் கொண்டு வெளியே ஓடியவள் படிக்கவே மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். அபிநயா சிரமப்பட்டு படிப்பதே இல்லை. வகுப்பில் சொல்லி தருவதை கவனிப்பதோடு சரி. அதை அப்படியே பரிட்சையில் எழுதி பாஸாகி விடுவாள். அவள் முயற்சித்து படித்தால் நல்ல மதிப்பெண் பெறுவாள் என்று தீபக்கிற்கு தெரியும். ஆனால் அவளை திருத்த யாரால் முடியும்.?

அன்பு வீட்டிற்குள் வந்தவுடனே குளித்துவிட்டான். அவனது அறை மாடியில் இருந்தது. அந்த அறையிலேயேதான் அதிக நேரத்தை கடத்துவான் அவன். அதிகமாக புத்தகத்திலேயேதான் கண்களை பதித்துக் கொண்டு இருப்பான். அபிநயாவுடனான சண்டை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவன் மாநில அளவில் மதிப்பெண் பெற கூட வாய்ப்பு உண்டு.

அரை மணி நேரம் படித்தான். ஆனால் மூளை படிப்பில் நாட்டத்தை செலுத்த மறுத்து விட்டது. "அந்த குட்டச்சியை ஏதாவது பண்ணனுமே.." என்று சொல்லிபடியே புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"என்ன செய்யலாம்.?" என்று யோசித்தபடி அறையினுள் குறுக்கும் மறுக்குமாக நடந்தான். தாடையின் காயம் வலித்தது.

சென்று தனது அலமாரியின் கீழ் அடுக்கை திறந்தான். அலமாரியில் நிறைய பொருட்கள் இருந்தன. விளையாட்டாக பார்ப்போர்க்கு விளையாட்டு பொம்மைகள் போல உள்ளவைகள்தான் அவை. ஆனால் கையில் கிடைக்கும் அனைத்தையுமே ஆயுதமாக பயன்படுத்த சிலரால் மட்டும்தானே முடியும். ஆனால் இன்று அவன் ஆயுதமாக பயன்படுத்த அங்கிருந்த பொருட்களில் எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை. கடைசியில் பெவிகாலை கையில் எடுத்தான்.

"பகல் கொலைக்காரி.." பற்களை கடித்தபடி அந்த பெவிகாலை பார்த்தவன் இதழில் ஓடும் வெற்றி புன்னகையோடு அந்த பெவிகால் டப்பாவை கொண்டு சென்று தன் பள்ளி பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இரவு உணவின் போது பள்ளியில் உடைந்த நான்கு சைக்கிள்களை சரி செய்ய பணம் வேண்டும் என தந்தையிடம் கேட்டான் அன்பு. அப்பா அவனை ஆத்திரத்தோடு முறைத்து விட்டு பணத்தை எடுத்து அவனிடம் வீசினார்.

அபிநயாவிற்கு வழக்கம்போல நிறைய அறிவுரை கிடைத்தது. அதன்பிறகே சைக்கிளை சரிசெய்ய பணம் கிடைத்தது.

"தேங்க்ஸ் ப்பா.." என்றவள் பணத்தோடு அறைக்கு கிளம்பினாள்.

"நீங்க அவளை கண்டிக்கவே மாட்டேங்கிறிங்க.." சலிப்போடு சொன்னான் தீபக். இது இவன் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை சொல்லும் வாசகம்.

"என்னை என்னடா பண்ண சொல்ற.? நான்தான் தினமும் அவளை திட்டுறேனே.. விவரம் வந்தா தானா திருந்த போறா.." என்று தன் மகள் மீது இருந்த நம்பிக்கையில் பேசினார் வினோத்.

"அவளாவது திருந்தறதாவது.." என்று சலிப்போடு சொல்லிக்கொண்டே தன் அறைக்கு வந்தான் தீபக்.

தலையணையை அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் அபிநயா. தீபக் அவளை கண்டுக்கொள்ளாதது போல சென்று தன் கட்டிலில் ஏறி படுத்தான்.

"தம்பி.." என்றாள் அவள்.

தீபக் அவளை சந்தேகமாக பார்த்தான். ஏனெனில் என்றுமே அவள் காரணமில்லாமல் அவனை தம்பி என்று பாசமாக அழைத்ததே இல்லை.

"என்ன வேணும்.?" என்றான்.

"இன்னைக்கு அமாவாசை.. அதனால இன்னைக்கு ஒருநாள் மட்டும் நான் உன் கட்டிலயே படுத்துக்கறேன்.." என்றவள் அவனது கட்டிலில் தூங்க சென்றாள்.

எழுந்து அமர்ந்த தீபக் அவள் கட்டிலில் ஏறும் முன் தடுத்து நிறுத்தினான்.

"நோ.. நீ உன் கட்டில்லயே தூங்கு. நான் ஒரு கழுதையோடு கூட தூங்குவேனே தவிர உன்னோடு தூங்கமாட்டேன். ஒரே ரூம்ல வெறும் நாலடி தூரத்துல இருக்கற கட்டில்ல தூங்க உனக்கு பயமா இருக்கா.? இதே நீ அன்பு கூட சண்டை போடும்போது பயமா இல்லையா.?" என கேட்டுவிட்டு அவன் மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.

ஒருநொடி தயங்கி நின்ற அபிநயா அவனை பிடித்து உருட்டினாள். உருண்டு அவன் ஓரமாய் போனதும் கட்டிலில் ஏறி படுத்தவள் பெட்சீட்டை தலைமுதல் கால் வரை போற்றிக் கொண்டாள்.

அவள் நெருக்கியதில் சுவரோடு ஒட்டிக் கொண்ட தீபக் பற்களை கடித்தான். இவளால் அவன் அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவனது கட்டிலுக்கும் அவளது கட்டிலுக்கும் இடையில் நான்கடி கூட இடைவெளி இல்லை. ஆனால் அமாவாசை பௌர்ணமி மட்டுமல்ல தூரத்தில் ஏதாவது நாய் குரைத்தால் கூட அன்றும் இவனோடுதான் உறங்குவாள் அவள். அதுவும் அமைதியாக உறங்க மாட்டாள். பேய் வந்து அவளின் காலை தர தரவென இழுத்து செல்வதை போல பயந்துக் கொண்டு அவனின் கழுத்தை இறுக்கி
அணைத்துக் கொண்டுதான் உறங்குவாள். நிறைய வேளைகளில் தீபக்கிற்கே தான் பாவம் என்றுதான் தோன்றும். உடன் பிறந்தவளை விரட்ட வழியில்லையே என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டு பொறுத்து போவான் அவன்.

மறுநாள் பள்ளிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டாள் அபிநயா. ஆனால் அவளுக்கும் முன்னால் வந்து அமர்ந்திருந்தான் அன்பு. மூடியிருந்த வகுப்பறையின் வெளியே இருந்த திண்ணையில் இரு மூலையில் அமர்ந்துக் கொண்டு ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இருந்தனர்.

பத்து நிமிடத்திற்கு பிறகு வகுப்பறை திறக்கப்பட்டது. உள்ளே சென்று தங்களின் பைகளை வைத்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அதே இடத்தில் அமர்ந்து முறைக்க தொடங்கினர்.

அவர்கள் இருவரும் முறைத்து கொண்டிருக்கும் வேளையில் குணா வந்து சேர்ந்தான். இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து அவனிடம் வந்தனர்‌.

குணாவின் இடது கையை பற்றி பணத்தை வைத்தாள் அபிநயா. குணாவின் வலது கையில் பணத்தை தந்தான் அன்பு.

"சைக்கிள்களை சரி பண்ணி கொடுத்துடு.." என சொல்லிவிட்டு இருவருமே வகுப்பறைக்கு சென்றனர்.

இவர்கள் உடைத்த சைக்கிள்களை சரி செய்யும் பொறுப்பு அந்த அப்பாவி நண்பனிடம் போய் சேர்ந்தது. கையில் இருந்த பணத்தையும் வகுப்பறையையும் மாறி மாறி பார்த்தான் குணா.

"உங்களை தலைகீழா கட்டி வச்சி தோலுரிக்க ஒரு வாத்தியார் கூட இல்லையே.." என புலம்பினான் அவன். இவனின் குறை தீர்க்கும் ஆசிரியர் கல்லூரியில் இருந்ததை அப்போது அறியவில்லை இந்த அப்பாவி நண்பன்.

சைக்கிள்களுக்கு சொந்தக்கார பையன்களிடம் சென்று அவர்களிடம் சமாதானம் பேசி அந்த சைக்கிள்களை கொண்டு சென்று மெக்கானிக் கடையில் விட்டுவிட்டு குணா திரும்பி வந்த அதே நேரத்தில் வகுப்பும் ஆரம்பம் ஆனது. மூச்சிரைக்க ஓடிவந்து தனது இருக்கையில் அமர்ந்த அடுத்த வினாடி வகுப்பாசிரியர் உள்ளே நுழைந்தார்.

"சைக்கிள் எப்ப ரெடியாகுமாம்.?" என்று குணாவின் அருகில் அமர்ந்திருந்த அன்பு கேட்டான்.

"டீச்சர் பார்த்தா கொன்னுடுவாங்க. வாயை மூடிக்கிட்டு கிளாஸை கவனிடா எருமை மாடே.." என்று கிசுகிசுத்த குணா ஆசிரியர் முகத்திலேயே பார்வையை வைத்திருந்தான்.

"கிளாஸ் ஆரம்பித்து அஞ்சி நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ள யார் பேசுறது.? தொண்டை தண்ணி வத்த கிளாஸ் எடுக்கற என்னைதான் சொல்லணும்.." என்று ஆசிரியர் திட்ட ஆரம்பித்தார்.

"அன்புதான் பேசினான் டீச்சர்.." என்று பதிலை சொன்னாள் அபிநயா. அவன் பேசியிருந்தால் மட்டுமல்ல யார் பேசியிருந்தாலும் அவள் அவனின் பெயரைத்தான் சொல்லி இருப்பாள். அதுவே குரல் பெண்களுக்கு சொந்தமானது என்றால் அப்போது அபிநயாதான் பேசினாள் என்று அன்பு சொல்லியிருப்பான்.

அபிநயாவை முறைத்தபடியே எழுந்து நின்ற அன்புவை முறைத்த ஆசிரியர் "நான்காம் பாடத்துல இருக்கற டென் மார்க் கொஸ்டின் எல்லாத்தையும் நாளைக்கு அஞ்சி முறை ரிவிசன் எழுதிட்டு வா.." என்றார்.

அன்பு சரியென தலையசைத்துவிட்டு அமர்ந்தான். அபிநயா களுக்கென சிரிக்கும் சத்தம் கேட்டு அவனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது.

ஒவ்வொரு வகுப்பாக நேரம் கடந்தது. மதிய உணவு இடைவெளிக்கான பெல் அடிக்கப்பட்டதும் மாணவர்கள் அனைவரும் மரத்தடி நோக்கி கிளம்பினர். அபிநயாவும் தன் லஞ்ச்பேக்கை கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள். கிளாஸ் வாசலில் இருந்த தன் செருப்பை அணிந்துக் கொண்டாள். மரத்தடி நோக்கி திரும்பியவள் அதே இடத்தில் விழுந்தாள். லஞ்ச் பேக்கும் கீழே விழுந்தது. அவள் விழுந்த கோலம் கண்டு அங்கிருந்த ஒன்றிரண்டு மாணவர்கள் சிரித்தார்கள்.

அபிநயா கோபத்தோடு எழுந்தாள்‌. ஆனால் எழ முடியவில்லை. தன் செருப்பில்தான் பிரச்சனை என அறிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. செருப்பிலிருந்து காலை விடுவித்துக் கொண்டு எழுந்து நின்றாள். சொர சொரப்பான சிமெண்ட் தரையில் குப்புற விழுந்ததில் அவளின் இரு கைகளிலும் சிராய்ப்பு காயங்கள் உண்டாகி இருந்தது.

செருப்பை சோதித்தாள். செருப்பு தரையோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. பெவிகால் வாசமும் நன்றாக வந்தது.

"அன்பு.." என அவள் கத்திய வேளையில் மரத்தடியில் அமர்ந்திருந்த அன்பு உணவை பிசைந்து வாயில் வைத்திருந்தான். ஒரே ஒரு வாய் உணவுதான் வாய்க்கு சென்றிருந்தது. வாயிலிருந்த உணவை துப்பி விட்டு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தவன் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தான்.

"என்னடா ஆச்சி.?" குழப்பமாக கேட்டான் குணா.

"காரம்.. செம காரம்.." என்றவனுக்கு இதை சொல்வதற்குள் காரம் தலையில் ஏறியிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. குணாவின் தண்ணீரையும் குடித்தான். காரம் அடங்கவேயில்லை.

கையிலிருந்த சிராய்ப்புகளை தேய்த்துக்கொண்டே அங்கு வந்த அபிநயா அவனது திணறல் கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.

இரண்டாவது பீரியட் இடைவேளையின் போது அவன் அவளது செருப்பிற்கு பசை தடவிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் உள்ளே அவள் அவனது டிபன் பாக்ஸில் மிளகாய்த்தூள் உருண்டையை கரைத்திருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1305

VOTE

COMMENT

SHARE

FOLLOW

கதை வயலன்ஸ் மாதிரி இருக்கான்னு தெரியல. ஆனா அதுக்காக சாரி. கதைக்கு தேவைப்படுவதால்தான் இந்த மாதிரி சில சீன்ஸ் எழுதுறேன். இந்த கதையின் முதல் பாதியை எண்டர்டெயின்மெண்டாக மட்டுமே பாருங்க நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN