சிக்கிமுக்கி 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு கார உணவால் பரிதவிப்பதை பார்த்து சிரித்தாள் அபிநயா. அவளின் கைகளில் இருந்த சிராய்ப்பு காயம் தந்துக் கொண்டிருந்த வலியை கூட மறந்து விட்டாள் அவள்.

அன்பு தன் முன் கழுத்து பகுதியை தடவியபடியே திரும்பி பார்த்தான். அபிநயா வயிற்றை பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளின் கைகளில் இருந்த சிராய்ப்பிலிருந்து ரத்தம் சிறு சிறு துளியாக கசிந்து அவனது பார்வையிலும் பட்டது. ஆனால் அந்த ரத்த துளிகளை விட அவளது சிரிப்பு மட்டும்தான் அவன் மூளையில் முழுதாக பதிவாகியது.

"ஏய் குட்டச்சி.." என்றவன் எழுந்து நின்றான்.

அபிநயா தன் இடுப்பில் கை வைத்து நின்றுக் கொண்டு அவனை பார்த்தாள். "ஏன்டா கோனக்காலா.?" என்றாள் அவனின் அதே கோபத்தோடு இவளும்.

அன்பு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் டிபன் பாக்ஸை கையில் எடுத்தான். அவள் மீது வீசியடித்தான். அபிநயா சட்டென நகர்ந்து நின்றுக் கொண்டாள். பறந்து வந்த டிபன் பாக்ஸ் அவளுக்கு பின்னால் இருந்த மரத்தின் மீது பட்டு கீழே விழுந்தது.

"கோலக்காலனுக்கு கையும் கோனையா போயிடுச்சி போல.. ஒழுங்கா குறி வைக்க கூட தெரியல.." நக்கலாக சொன்னவள் அவன் துரத்த ஆரம்பிப்பது கண்டு உடனே திரும்பி ஓடினாள்.

"நில்லுடி குட்டிச்சி.." என்று கத்திக்கொண்டே துரத்தி வந்தவனை திரும்பி பார்த்து நாக்கை துருத்திக் காட்டி பழித்தாள்.

அன்பு கோபத்தோடு தன் துரத்தலில் வேகத்தை அதிகரித்தான்.

அபிநயா எங்கே ஓடுவது என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகில் இருந்த மாணவிகள் பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

அவளை ஆத்திரத்தோடு பார்த்த அன்பு கையை முறுக்கியபடி திரும்பினான். "இந்த குட்டச்சியை இன்னைக்கு சும்மா விட கூடாது.." என்று கர்ஜித்தான்.

"டேய் அன்பு.." என்று தூரத்திலிருந்து கத்தினான் குணா.

அன்பு நண்பனின் அருகே சென்றான். "ஏன்டா.?" என்றான்.

"சோறு திங்கலையா நீ.?" தன்னுடைய டிஃபன் பாக்ஸை மூடியிட்டு லன்ச் பேக்கில் போட்டுக் கொண்டு கேட்டான் அவன்.

அன்பு தன் டிபன் பாக்ஸை திரும்பி பார்த்தான். மரத்தடியில் கிடந்த டிபன் பாக்ஸ் பாதியாய் ஒடுங்கி போய் இருந்தது. பெருமூச்சோடு சென்றவன் அதை எடுத்து வந்து பேக்கில் வைத்துக் கொண்டான். "எங்கம்மா இன்னைக்கு என்னை எதுல அடிக்க போகுதுன்னே தெரியல.." என்றான் சோகமாக.

குணாவிற்கும் நண்பனை பார்க்கும்போது பாவமாகதான் இருந்தது. ஆனால் நண்பன் இந்த வருடத்தில் மட்டும் முப்பது புது டிபன் பாக்ஸ்களை வாங்கியுள்ளான் என்பதை நினைக்கையில்தான் அவனுக்கு சற்று பொறாமையாகவும் இருந்தது.

"இந்த கொலைக்காரியால இன்னைக்கும் நான் பட்டினி.." என்ற அன்பு எப்போதுதான் புரிந்துக் கொள்வானோ இதேபோல அவளின் பட்டினிக்கு தான்தான் காரணமென்று.?

அடுத்த பாட வேளைக்கான பெல் அடிக்கும் நேரத்தில்தான் அபிநயா வகுப்பறைக்கு வந்தாள். மொத்த மாணவர்களும் வகுப்பில் அமர்ந்திருந்தார்கள். இவள் அன்புவை முறைத்துவிட்டு சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள். அவளின் காலின் கீழே இருந்த லஞ்ச் பேக்கை பார்த்தாள். கீழே விழுகையில் டிபன் பாக்ஸ் கழன்று விழுந்ததில் மொத்த உணவும் சிந்தி போனது. அதனால் உணவு உண்ண முடியவில்லை அவளாலும். பசி வேறு வயிற்றை கிள்ளியது. ஆனால் வாரத்தில் இரண்டு நாட்களோ மூன்று நாட்களோ இப்படிதான் ஏதாவது பிரச்சனை வந்து சேரும் என்பதால் அவனை போல அவளுக்கும் இந்த பசி பழகிப் போய் விட்டது.

மதிய முதல் பாடமே இயற்பியல். பாடத்தின் பெயரை கேட்டாலே உறக்கம் வரும் அவளுக்கு. வேதியியலில் உள்ள ஆர்வத்தில் இந்த பிரிவை தேர்ந்தெடுத்தவளுக்கு இந்த ஒரு பாடம் மட்டும் வேம்பாய் கசந்துக் கொண்டிருந்தது. ஆனால் நேர் மாறாக அன்புவிற்கு இயற்பியல் என்றால் வெல்லமாக இருந்தது.

அவர்களுக்கான கடைசி பரிட்சைக்கே இன்னும் ஆறேழு வாரங்கள்தான் இருக்கிறது என்பதால் ஆசிரியர்கள் தினமும் வகுப்பிலேயே டெஸ்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

இன்றும் ஆசிரியர் வகுப்பிற்கு வந்தவுடன் அனைவரையும் நோட்டை எடுத்து தான் சொல்லும் கேள்விகளுக்கு வரிசையாக பதிலை மட்டும் எழுத சொன்னார். அனைவரும் பரபரப்பாக பதிலை எழுதிக் கொண்டிருந்தனர். அபிநயா அடுத்தடுத்து வந்த கொட்டாவிகளை கை வைத்து மறைத்தபடியும் தலை குனிந்து மறைத்தபடியும் டெஸ்டை எழுதிக் கொண்டிருந்தாள்.

ஐம்பது கேள்விகளை மின்னல் வேகத்தில் சொல்லி முடித்தார் ஆசிரியர். மாணவர்களும் ஆசிரியருக்கு சமமாக எழுதி முடித்திருந்தனர். அபிநயாவின் நோட்டில் மட்டும் இடை இடையே நிறைய துண்டு விழுந்திருந்தது. சில இடங்களில் கேள்வி எண்களை கூட மாற்றி மாற்றி போட்டிருந்தாள்.

"எல்லோரும் நோட்டை வெவ்வேறவங்ககிட்ட கொடுத்து மாத்திக்கங்க.." என்றார் ஆசிரியர். உடனே நோட்டுகள் கை மாறும் சத்தம் இசை போல கேட்டது அந்த வகுப்பறையில்.

அபிநயா அடுத்த கொட்டாவியை விட்டுக்கொண்டே தன் கைக்கு வந்த நோட்டில் இருந்த பதில்களை பார்த்தாள். எல்லா பதில்களும் வரிசையாக குண்டு குண்டு கையெழுத்தில் இருந்தது. கையெழுத்தை பார்த்ததுமே அவளின் தூக்க நினைப்பு மொத்தமாக கலைந்து போனது.

அன்புவை திரும்பி பார்த்தாள். அவன் தன் கையில் இருந்த நோட்டில் பார்வையை செலுத்தியபடி இருந்தான்.

'சிக்குனடா சிங்க குட்டி..' என்று தனக்குள் சிரித்துக் கொண்டவள் அவசரமாக அந்த நோட்டின் தாளை அப்படியே கிழித்து தன் லஞ்ச் பேக்கில் போட்டுக் கொண்டாள். அடுத்த பக்கத்தில் வரிசையாக எண்களை எழுதியவள் தவறான பதில்களை ஆறேழு இடங்களில் எழுதினாள். தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தோளை தட்டியவள் "நோட்டை மாத்திலாமா.?" என்றாள். அவள் சரியென சொல்லும் முன்பே தன் கையில் இருந்த நோட்டை அவளிடம் தந்தாள். அந்த பெண்ணும் தன்னிடம் இருந்த நோட்டை அவளிடம் தந்தாள்.

"எல்லாம் நோட்டை மாத்திக்கிட்டிங்களா.?" என கேட்டார் ஆசிரியர்.

தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் கூட இவ்வளவு வேகமாக செயல்பட்டிருக்க மாட்டாள் அபிநயா. ஆனால் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக இருபதே செகண்டில் அந்த மொத்த பக்கத்தையுமே மாற்றி எழுதிவிட்டாள்.

ஆசிரியர் பதிலை வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தார். அபிநயா தன் கையில் இருந்த நோட்டில் பதிலை கூட சரி பார்க்காமல் அனைத்திற்கும் சரியென டிக் அடித்தாள். வட்டமிட்டு இரண்டாய் பிரித்தவள் ஐம்பதுக்கு ஐம்பது மதிப்பெண்களை வழங்கினாள். சந்தோசத்தில் அப்படியொரு மதிப்பெண்களை வாரி வழங்க சொன்னது அவளின் மனம்.

"நோட்டை அவங்கவங்ககிட்ட திருப்பி கொடுங்க.." ஆசிரியர் மீண்டும் சொன்னதும் நோட்டுகள் படபடவென கை மாறின.

அபிநயாவிற்கும் முன்னால் அமர்ந்திருந்த பெண் தன்னிடமிருந்த நோட்டின் முன் பக்கத்தை திருப்பி பார்த்துவிட்டு "அன்பு உன்னோட நோட்.." என்று அவன் இருந்த திசையில் நீட்டினாள்.

பெஞ்சின் ஆரம்பத்தில் அமர்ந்திருந்த பையன் அவள் நீட்டிய நோட்டை வாங்கி அன்புவிடம் நீட்டினான். அன்பு அந்த பெண்ணை பார்த்து புன்னகைத்தபடியே நோட்டை பெற்றுக் கொண்டான்.

'இடையில வாங்கி தந்த என்னை சும்மாவாவது பார்க்கறானா.?' என்று யோசித்த நடுவில் நின்றிருந்த பையன் அன்புவை கடித்து குதறும்படி பார்த்தது தனிக்கதை.

"யாரெல்லாம் இருபதுக்கும் கீழே மார்க் எடுத்திருக்கிங்க.. எழுந்திருங்க.." ஆசிரியர் இதை சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தன் நோட்டை பிரித்தான் அன்பு.

ஐம்பதுக்கு இரண்டு மதிப்பெண்கள்தான் இருந்தது அதில். பேப்பரை திருப்பி திருப்பி பார்த்தான். ஆனால் அவன் எழுதிய பக்கத்தையே காணவில்லை. "குட்டச்சி.." கடித்த பற்களிடையே சொன்னவன் நிமிர்ந்து அவளை பார்த்தான்.

"இருபதுக்கும் கீழே மார்க் எடுத்தவங்க எழுந்து நில்லுங்க.." ஆசிரியர் மீண்டும் சொன்னார்.

வகுப்பறையில் அமர்ந்திருந்த ஏழெட்டு மாணவர்கள் எழுந்து நின்றார்கள்.

"அன்பு எழுந்து நில்லுடா.." அவனின் வலப்பக்கம் அமர்ந்திருந்த பையன் அனைவருக்கும் கேட்கும்படி சொன்னான்.

அன்பு எழுந்து நின்றான். ஆசிரியரிடம் தன் பக்க கருத்தை சொல்ல நினைத்தான். ஆனால் அதற்குள் ஆசிரியர் "இவ்வளவு ஈஸியான கேள்விகளுக்கு கூட உங்களால பதில் எழுத முடியலையா.? இப்ப கேட்ட கேள்விகளையும் பதிலையும் ஐம்பது முறை இன்போசிசன் எழுதிட்டு வாங்க.." என்றார்.

"சார் நான் கரெக்டாதான் எழுதி இருந்தேன்.." என அன்பு சொன்ன அதே நேரத்தில் அடுத்த வகுப்பு தொடங்குவதற்தான பெல் அடித்தது.

ஆசிரியர் மேஜையில் இருந்த தன் பொருட்களை கையில் எடுத்துக்கொண்டே அன்புவை பார்த்தார்.

"கரெக்டா எழுதியிருந்தது காத்தோடு கரைஞ்சி போச்சா.? நல்லா படிக்கற பையன்னு நாங்க எல்லோரும் பாராட்டவும் தலைக்கால் நிக்காம போயிடுச்சோ.. இன்போசிசனை நாளைக்கு மறக்காம எழுதிட்டு வா.." என்றவர் அன்றைக்கு தனக்கு இருந்த கோபத்தை இவனிடம் காட்டிவிட்டு வெளியே நடந்தார்.

அன்பு பற்களை கடித்தபடி தன் நோட்டின் பக்கத்தை கையால் கசக்கினான். இப்போதுதான் வயிறு நிறைந்ததை போல முகம் மலர்ந்தாள் அபிநயா.

அன்று மாலையில் பள்ளி முடிந்ததும் புன்னகையோடு வெளியே வந்தாள் அபிநயா. அவளின் பின்னால் நடந்து வந்த அன்புவிற்கு அவளை அப்படியே கொண்டு போய் கிணற்றில் தள்ள வேண்டும் போல இருந்தது.

"ஏன்டி என் ஆன்சர் பேப்பரை கிழிச்சிட்டு தப்பான ஆன்சர் எழுதி வச்ச.?" கோபமாக கேட்டு அவளின் ஜடையை பற்றி இழுத்தான் அன்பு.

அபிநயா அவனின் காலில் உதை விட்டபடியே திரும்பினாள். "நீ என்ன சொல்றன்னே எனக்கு தெரியாது.." என்று நாடக பாணியில் சொல்லிவிட்டு விழிகளை சுழற்றினாள்.

"அந்த கோழி கிறுக்கல் உன் கையெழுத்துதான்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உன்னால இன்னைக்கு எனக்கு இரண்டு இன்போசிசன்.." என்றவன் அவளின் தலையில் பட்டென்று தட்டினான். அடி பட்டு விட்டது என்பது அவளின் முகத்தை பார்க்கையிலேயே புரிந்தது அவனுக்கு. அவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

அவள் பதில் சண்டைக்கு தயாரானாள். இவனும் தன் கை விரல்களை முறுக்கியபடி அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் வேட்டையாடிக் கொள்ளும் முன்பு அவர்கள் இருவருக்கும் முன்னால் வந்து நின்ற குணா இருவரையும் விரல் அசைத்து தன் பின்னால் வர சொன்னான்.

பள்ளியின் பின்புறத்தில் குணா சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்த சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருந்தன. உடற்கல்வி ஆசிரியர் தூரத்தில் வந்துக் கொண்டிருந்தார். ஓடிச்சென்று அவரை அழைத்து வந்தான் குணா. சைக்கிள்கள் சரிசெய்யப்பட்டு விட்டதாக ஆசிரியரிடம் சொன்னார்கள் அபிநயாவும் அன்பும். சைக்கிள்களுக்கு சொந்தக்கார பையன்களிடம் சைக்கிள்கள் ஒப்படைக்கப்பட்டது.

"இன்னும் இரண்டே வாரம்தான். அதுக்கப்புறம் ஸ்டடி லீவ் விட்டுடுவாங்க.. அதுவரைக்கும் இரண்டு பேரும் உங்க வாலுகளை சுருடிக்கிட்டு இருங்க.." என எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் ஆசிரியர்.

அபிநயா அன்புவை முறைத்துக் கொண்டே தன் சைக்கிளில் ஏறி அமர்ந்தாள். செருப்பில்லா பாதத்தில் பெடலை மிதிக்கையில் கரடு முரடாக இருப்பது போல இருந்தது.

அன்பு அவளின் சைக்கிள் பின்னாலேயே தானும் கிளம்பினான். இவனின் சைக்கிளை கண்டவள் தனது சைக்கிளின் வேகத்தை அதிகரித்தாள்‌. ஆனால் அன்பு இரண்டே மிதியில் அவளுக்கு சமமாக வந்து விட்டான்.

"என்ன குட்டச்சி.. பெடலுக்கு கால் எட்டலையா.?" என்றான் நக்கலாக.

"ஒருநாள் இல்ல ஒருநாள் உன் கோனக்கால் இரண்டையும் உடைச்சி அடுப்புல வைக்க போறேன்டா நான்.." என்று அவளும் பதிலுக்கு சொன்னாள்.

"எப்படி.. பழைய பேய் படத்துல மோகினி அடுப்புல காலை வச்சி சமைக்குமே.. அப்படியா.? அதுக்கு உன் காலை நீயேதான் வச்சிக்கணும் குட்டச்சி.." என்றவன் வேண்டுமென்றே அவளின் சைக்கிளின் மீது மோதுவது போல வந்தான். அவசரத்தில் சாலையிலிருந்து மண் தரையில் சைக்கிளை விட்டுவிட்டாள் அபிநயா. அவன் அவளை கிண்டல் சிரிப்போடு பார்த்துவிட்டு தன் சைக்கிளை வேகமாக ஓட்டினான். அபிநயா நிலைப்பெற்று மீண்டும் சாலைக்கு சைக்கிளை ஏற்றி ஓட்டினாள். கோபத்தில் சைக்கிளை மிதித்தவள் சீக்கிரத்திலேயே அவனுக்கு சமமாய் வந்து விட்டாள்.

சந்தனக்கொடிக்கால் உங்களை அன்போடு வரவேற்கிறது போர்டின் கீழே பந்தயம் போல வேகமாக கடந்து சென்றது அந்த இரு சைக்கிள்களும்.

இருவரது சைக்கிள்களும் ஒரே சமமாய் ஓடிக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர். பார்வைக்கு புலப்படாத கற்பனை நெருப்பு இருவர் கண்களில் இருந்தும் புறப்பட்டது.

முறைத்துக் கொண்டு வந்தவர்கள் எதிரில் லாரி ஒன்று ஹாரன் அடித்தபிறகே திடுக்கிட்டு நேராய் பார்த்தனர். இருவரையும் இடிக்கும்படி வந்துக் கொண்டிருந்தது அந்த லாரி. தவறு.. அந்த லாரியை இடிக்கும்படி சென்றுக் கொண்டிருந்தது இவர்களின் சைக்கிள்கள்.

"ஓரமாய் போய் தொலைங்க.." லாரி டிரைவர் கத்திய சத்தம் ஹாரனை விட அதிகம் கேட்டது. இருவரும் இருவேறு திசையில் சைக்கிளை திருப்பினர். அந்த பக்கத்து மண் தரையில் அவனது சைக்கிளும் இந்த பக்கத்து மண் தரையில் இவளது சைக்கிளும் பிரேக்கடித்து நின்றது.

லாரி வேகமாக அவர்களை கடந்துச் சென்றது. அன்பு தன் நெஞ்சில் கை வைத்து மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கிக் கொண்டான்.

லாரி கடந்துச் சென்றதும் இருவரும் அவசரமாக அடுத்தவரை பார்த்தனர்.

"உனக்கு ஒன்னும் இல்லையே.." என்று நடுங்கியபடி ஒலித்தது இருவரின் குரலும். அந்த குரல் இரண்டும் அவர்களின் தொண்டையிலிருந்து வந்திருந்தாலும் கூட அது அவர்கள் இருவருக்கும் அந்நியமாகவே பட்டது.

தாங்கள் கேட்ட கேள்விக்கு தாங்களே வியந்தனர். இருவரும் ஒருவரையொருவர் விசித்திரமாக பார்த்துக் கொண்டனர். உடனே முகத்தை பழையபடி கோபமாக மாற்றிக் கொண்டனர். சாலையில் சைக்கிளை ஏற்றி மீண்டும் பயணத்தை ஆரம்பித்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1267

VOTE

COMMENT

SHARE

FOLLOW

குட்டச்சி என்ற வார்த்தை யாரின் மனதையாவது புண்படுத்துவாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கறேன் மக்களே. இது யாரின் மனதையும் புண்படுத்தும் நோக்கோடு எழுதப்படல..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN