சிக்கிமுக்கி 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவும் அபிநயாவும் லாரி வந்த பாதையிலிருந்து தப்பி தங்களின் வீடு நோக்கி பயணப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்த வயதானவர் ஒருவர் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"போங்க.. போங்க.. நல்லா சண்டை போடுங்க.. உங்களுக்கு எமன் நீங்களேதான். வேற யாரல உங்களை கொல்ல முடியும்.? காதலின் மகத்துவம் புரியும் வரைக்கும் நல்லா சண்டை போடுங்க.." என காற்றோடு சொல்லியவர் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.

வீட்டிற்கு வந்த அபிநயாவிற்கு சாலையில் நடந்த நிகழ்வே நினைவில் இருந்தது. 'அவன் மேல லாரி ஏறினா எனக்கு என்ன போகுது.? எதுக்கு நான் அவ்வளவு பீல் ஆகுறேன்.?' என தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.

இதையேதான் அன்புவும் தனது அறையில் இருந்த கண்ணாடியை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தான்‌. "அவ என்ன ஆனா உனக்கு என்ன.? அவ உன் எதிரி மறந்துட்டியா.? உன் கேள்வியால அவ உன்னை பார்த்து சிரிக்க போறா.. லூசா நீ.?" என்று தன்னையே திட்டிக் கொண்டான்.

தான் எதிராளியை கேட்டது மட்டுமே இவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்ததே தவிர தங்களிடம் கேட்க பட்ட கேள்வியின் அர்த்தத்தினை பற்றி யோசிக்க மறந்து விட்டனர்‌.

தான் ஏன் இந்த அக்கறை கொண்டோம் என கேட்டுக் கொண்டவர்கள் எதிராளிக்கு ஏன் தன் மேல் இந்த அக்கறை என்று எப்போது யோசிப்பார்களோ தெரியவில்லை.

அபிநயா அதிசயத்திலும் அதிசயமாக அன்று புத்தகத்தை கையில் எடுத்தாள். தான் கேட்ட கேள்வியே அவளை குழப்பி விட்டது போலும். அதனால்தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு கிளம்பினாள். மாடிக்கு செல்கையில் படியோரத்தில் இருந்த அவளது அறையின் கதவை பார்த்தவள் கதவின் மீது ஒரு அடியை தந்தாள்.

"நானே சின்ன பொண்ணு.. என்னை போய் தனியா படுத்து தூங்க சொல்றாங்களே.. தீபக் இருக்கும் வரைக்கும் எனக்கு என்ன கவலை.?" என்று எண்ணி சிரித்தவள் புத்தகத்தோடு வந்து மாடியின் கைப்பிடியின் மீது அமர்ந்தாள்.

புத்தகத்தின் பக்கத்தை புரட்டினாள். படிக்க ஆரம்பித்தாள். அனைத்துமே பழக்கப்பட்டது போலதான் இருந்தது. ஆனால் எழுத்தாய் பார்க்கையில் சில விசயங்கள் புதிது போல தோன்றியது.

ஒரு பாடத்தை வாசித்து முடித்தாள். வாசித்து மட்டும் முடித்தாள். அடுத்த பாடத்திற்கு தாவ இருந்த நேரத்தில் எதேச்சையாக நிமிர்ந்தாள். அன்பு தன் அறையில் அமர்ந்து படிப்பது அரை குறை கோணத்தில் தெரிந்தது.

"இந்த கோணக்காலனால மட்டும் எப்படிதான் இவ்வளவு சின்சியரா படிக்க முடியுதோ.?" என கேட்டுக்கொண்டே தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு இறங்கி நின்றாள். அவனை முழுதாக பார்க்க எண்ணி நகர்ந்தாள். ஆனால் அப்போதும் அவன் அறையின் கோணம் சரியாக தென்படவில்லை. யோசனையோடு தன் அறையை பார்த்தவள் படிகளில் இறங்கினாள். தன் அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். அறை காலியாக இருந்தது. நேர் எதிரில் இருந்த ஜன்னலை திறந்தாள். அன்புவின் அறை மொத்தமும் அப்படியே தெரிந்தது.

இவ்வளவு நாளும் அவனது அறையை இந்த கோணத்தில் இருந்து பார்க்கலாம் என்று அவளுக்கு தெரியாது. அவனின் அறையை ஆராய்ந்தாள். ஒரு கட்டில், ஒரு அலமாரி, ஒரு மேஜை, ஒற்றை நாற்காலி என்று அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே இருந்தது. அபிநயா வியப்போடு தன் அறையை பார்த்தாள். இந்த அறைக்கு தான் வந்தால் இந்த அறை எப்படி தாறுமாறாக இருக்கும் என்று அவளால் கற்பனை செய்ய முடிந்தது.

"கோணக்காலன் செம நீட்டுப்பா.." என்று கிண்டலாக சொல்லியவள் தனக்கு முதுகு காட்டி அமர்ந்தபடி படித்துக் கொண்டிருந்தவனை வெறித்தாள்.

"செங்கல் சைக்கோ.." என்று எரிச்சலோடு சொன்னவள் படீரென ஜன்னலை சாத்திவிட்டு அந்த அறையை விட்டும் வெளியேறினாள்.

அமைதியாக படித்துக் கொண்டிருந்த அன்பு படீரென ஜன்னல் சாத்தும் சத்தத்தில் கவனம் சிதறி படிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தான். எப்போதும் சாத்தி இருக்கும் எதிர் வீட்டு ஜன்னல் இப்போதும் அப்படியேதான் இருந்தது. தனக்குதான் ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டவன் மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு இரண்டு இன்போசிசனையும் எழுதி முடிக்கவே அவனுக்கு நடுநிசி ஆகி விட்டது. "பகல் கொலைக்காரி.." என்று திட்டிவிட்டு உறங்க சென்றான் அவன்.

அடுத்த நாளில் இருந்து பள்ளியில் ஒவ்வொரு வகுப்பும் சிறப்பாக சென்றது. பள்ளியை விட்டு செல்ல போகும் மாணவர்கள் என்று அவர்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார்கள் ஒவ்வொரு ஆசிரியர்களும்.

ஆசிரியர்களை விட்டு பிரியும் காலம் வந்தது என்று மாணவர்களுக்கும் அப்போதுதான் புரிந்தது. "ஐ வில் மிஸ் யூ டீச்சர்.." என்று இப்போதிருந்தே ஆரம்பித்து விட்டனர் சிலர்.

"இந்த ஸ்கூலுக்கு நீங்க வந்ததிலிருந்தே உங்களை படி படின்னு சொல்லி நாங்க தொல்லை பண்ணினது போலதான் தோணும் உங்களுக்கு. ஆனா இங்கே நீங்க உங்களோட நண்பர்களை சந்திச்சி இருக்கிங்க. மாசுபடாத குழந்தை பருவத்தின் கடைசி கட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிச்சி இருங்கிங்க. காலம் முழுக்க நினைவு வச்சிக்கும்படியான ஒரு லைப்பை இங்கே நீங்க வாழ்ந்து இருக்கிங்க.. உங்களுக்கு நீங்களே கீழ்படிதல் மட்டும்தான் உங்களோட வாழ்க்கையை உயர்த்தும்.." என்றார் வகுப்பாசிரியர்.

மாணவர்கள் கைகளை தட்டினர்.

அடுத்தடுத்த பாட வகுப்புகளிலும் அடுத்தடுத்த நாட்களிலும் இதே போன்று அறிவுரைகள்தான் தொடர்ந்தது.

"நீங்க எல்லோரும் குழந்தைகள். உங்களோட மனசு கள்ளம் கபடம் இல்லாத தூய்மையை உடையது. வருங்காலத்திலும் உங்களை இதே போல தூய்மையான மனசா வச்சிருக்க உதவுதான் அன்பு.. உங்க மனசுல அப்பப்ப வெறுப்பு வரும். கோபம் வரும். ஆனா வெறுப்பும் கோபமும் எப்போதுமே நிரந்தரம் கிடையாது. இந்த உலகத்துல நிரந்தரமானது அன்புதான். நீங்களும் உங்க வெறுப்பை ஒதுக்கிட்டு அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழுங்க. வாழ்க்கை நல்லா இருக்கும்.." என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார் ஓவிய ஆசிரியர். அவர்தான் அவர்களுக்கு சுய ஒழுக்க வகுப்பும் எடுத்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் அவர்களுக்கு பள்ளியில் கடைசி நாள். அதன்பிறகு பரிட்சைக்காக பள்ளிக்கு வந்தால் போதும் என்று சொல்லி விட்டார் தலைமை ஆசிரியர். ஆனால் பாட ஆசிரியர்கள் ஸ்பெசல் கிளாஸிற்கான அட்டவணையை அதற்கு முன்பே தந்து விட்டார்கள் அவர்களிடம். அந்த ஸ்பெஷல் கிளாஸை கட் அடிக்க போகும் மாணவர்களும் இப்போதே தங்களின் அறிவிப்பை சக மாணவர்களிடம் சொல்லி விட்டிருந்தனர்.

ஆசிரியர் வராத பாடவேளை ஒன்றின் போது மாணவன் ஒருவன் நோட்டு ஒன்றை எடுத்து அனைவரிடமும் ஆட்டோகிராப் வாங்க ஆரம்பித்தான். அவ்வளவுதான்.. அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் மொத்த வகுப்பும் நோட்டும் பேனாவுமாகதான் இருந்தது.

"என்னை மறந்துடுவியாடா நீ.?" என்ற கேள்வியும் "அடுத்த வருசம் எந்த காலேஜ் சேர போற.?" என்ற கேள்வியும் அதிகமாக கேட்கப்பட்டது. அனைவரும் அனைவரிடமும் கையெழுத்தை வாங்கினர். ஆனால் அன்பு அபிநயாவிடம் கையெழுத்து வாங்கவில்லை. அபிநயாவும் அன்புவிடம் கையெழுத்து வாங்கவில்லை.

அந்த வகுப்பில் ஒருவனுக்கு மட்டும் அந்த கடைசி நாளிலும் மூளை கோளாறாக வேலை செய்தது. தனது நோட்டுகளில் இருந்த கையெழுத்துகளோடு விளையாட ஆரம்பித்தான். ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்தவன் அதற்கு எதிர் திசை பக்கத்திற்கும் சேர்த்து ஹார்ட்டினை வரைந்து இரண்டு பெயர்களையும் இதய சின்னத்திற்குள் கொண்டு வந்தான். அவர்களுக்கு பிளேம்ஸ் கணக்கு போட்டு அதை எழுதியும் வைத்தான்.

"நான் உங்களோட பிளேம்ஸ் ஜோடியெல்லாம் கண்டுபிடிச்சிட்டேன்.." என்று டேபிள் மீது எழுந்து நின்று கத்தியவன் "ஆகாஷும் ரம்யாவும் மேரேஜ்.. ரோகிணியும் ஆஷாவும்.." என்று ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி அவர்களின் பிளேம்ஸ் உறவை சொல்ல ஆரம்பித்தான். அதில் காதலர்கள், மேரேஜ் என்று வந்திருந்த ஜோடிகள் மட்டும் அவனை திட்டி தீர்த்தனர். சிப்ளிங்க்ஸ் என்று வந்தவர்களும் நண்பர்கள் என்று வந்தவர்களும் தங்களது பெயர் ஜோடிகளை கண்டு புன்னகையை பரிமாறி கொண்டனர். எனிமியென வந்தவர்கள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். சிலர் அவன் சொன்னதை நம்பாமல் தாங்களும் தங்களது நோட்டுகளில் பிளேம்ஸ் கணக்கிட்டு சரி பார்க்க ஆரம்பித்தனர்.

பக்கங்களை புரட்டியபடி பெயர்களின் கூட்டணியை சொல்லிக் கொண்டு வந்த பையன் சட்டென நின்றான்.

"மக்கா.. இந்த பிளேம்ஸ் பொய்யுடா.." என்றான்.

அவனை சுற்றி இருந்தவர்கள் புரியாமல் பார்த்தனர். தன் கையில் இருந்த நோட்டை அவர்கள் பக்கம் திருப்பினான் அவன். ஒரு பக்கத்தில் ஆதியின் அந்தம் அழியும் வரை சேர்ந்திருப்போம் நட்பாக என்று எழுதி கையெழுத்திட்டு இருந்தான் அன்பு. அதன் எதிரே இருந்த பக்கத்தில் அந்தத்தின் ஆதி தீரும்வரை இணைந்திருப்போம் நட்பாக என்று எழுதி அபிநயா கையெழுத்து போட்டிருந்தாள். அவர்கள் பெயரில் கணக்கிட்ட பிளேம்ஸில் பிரெண்ட்ஷிப் என்று வந்திருந்தது.

"இவங்க பிரெண்ட்ஸா.?" என்று கேட்டு ஒருவன் அதிர்ச்சியோடு தன் நெஞ்சில் கை வைத்தான்.

"பிளேம்ஸ் பொய்யுதான்.." என்றாள் ஒருத்தி.

அன்புவும் அபிநயாவும் நோட்டை பார்த்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சாரி. முறைத்துக் கொண்டனர். அதெல்லாம் ஏற்கனவே பல ஆயிரம் முறை அவர்களே தங்களின் நோட்டில் போட்டு பார்த்து கொண்ட கணக்குதான். எத்தனை முறை கூட்டினாலும் அதே கணக்குதான் என்று அறிந்திருந்தும் கூட எனிமி வந்துவிட கூடாதா என்று எதிர்ப்பார்த்து பல முறை கணக்கு போட்டு பார்த்திருக்கிறார்கள் அவர்கள். அதில் வரும் பிரெண்ட்ஷிப் என்ற லெட்டரின் மேல் பேனா முனையால் குத்தி அந்த பேப்பரையும் கிழித்து எறிந்திருக்கிறார்கள். ஒரு சில நாட்களிலெல்லாம் பிளேம்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே வெறுத்து போய் இருக்கிறார்கள்.

"அடுத்த ஜென்மத்துல இவங்க பிரெண்ட்ஸா இருப்பாங்க போல.." என்று சொல்லி சிரித்தான் ஒருவன்.

அபிநயா பற்களை கடித்தாள். "ஜென்ம ஜென்மத்துக்கும் எதிரிங்க மட்டும்தான்.." என்று அவள் சொன்ன நேரத்தில் அவள் சொன்ன அதே வார்த்தைகளை அன்புவும் சொல்லியிருந்தான். அவனை திரும்பி பார்த்து முறைத்தவள் தன் எதிரில் இருந்த மேஜையின் மீது ஏறினாள். பிளேம்ஸ் கணக்கு போட்டிருந்த பையனின் நோட்டில் தன் பெயர் இருந்த பேப்பரை கிழித்து கசக்கி எறிந்தாள். தான் செய்ய வேண்டியதை அவள் செய்ததை எண்ணி பெருமூச்சு விட்டான் அன்பு. ஆனால் மொத்த வகுப்பறையும் அவர்கள் ஒரே நேரத்தில் தங்களை எதிரி என சொல்லிக் கொண்டதையே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வார்த்தைகளிலேயே அந்த நொடிகளிலேயே உறைந்து விட்டிருந்தனர் அவர்கள்.

"அதெப்படிடா எதிரிங்க ஒரே விசயத்தை ஒரே டைம்ல சொல்ல முடியும்.? அதுவும் ஆட்டோகிராப்ல கூட ஒரே மாதிரி வார்த்தைகளைதான் எழுதியிருக்காங்க. இது எப்படி முடியும்.?" என ஒருவருக்கொருவர் கேட்டு வியந்துக் கொண்டனர்.

அந்த வகுப்பறையின் சலசலப்பு அடுத்த பாடவேளைக்கான ஆசிரியர் வரும்வரையிலுமே இருந்தது.

அபிநயாவும் அன்புவும் நெருப்பில் வேகும் மனதை கொண்டிருந்தனர். அவர்களின் கோபம் அந்த அளவிற்கு இருந்தது. அது பள்ளி முடிந்ததும் அப்படியே வெளிப்பட்டது. அன்புவின் சைக்கிள் ஸ்கூல் காம்பவுண்டை தாண்டி சற்று தொலைவு வந்ததும் அவன் மீது வந்து மோதியது ஒரு குச்சி. அன்புவின் வயிற்றிலேயே வந்து பலமாக மோதி விட்டது அந்த குச்சி. பற்களை இறுக்க கடித்தபடி சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினான். அதே நேரத்தில் ஒரு புதரின் சந்திலிருந்து புறப்பட்டது அபிநயாவின் சைக்கிள்.

"பகல் கொலைக்காரி.." என்று கத்தியவன் சைக்கிளில் ஏறி வேகமாக பெடலை மிதித்தான். இருவரும் அன்று போல இன்றும் வாகனம் வரும் சாலையில் ரேஸ் சென்றுக் கொண்டிருந்தனர். இடையில் சில பழிச்சொற்கள் வேறு காற்றில் புறப்பட்டது. அவர்களின் பழிச்சொற்கள் கேட்டு தங்களைதான் திட்டுகிறார்களோ என்று எண்ணி சாலை பயணிகள் சிலர் நின்று பார்த்துவிட்டு சென்றனர்.

பள்ளிக்கும் சந்தனக்கொடிக்காலுக்கும் இடையில் இருந்த முக்கிய ரோட்டை கடந்துக் கொண்டிருந்தவர்கள் அதே வேகத்தில் செல்ல அவர்கள் இருவரையும் கை காட்டி நிறுத்தினார் டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.

இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே காவலரின் முன்னால் வந்து நின்றனர்.

"உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் அறிவே வராதா.? மெயின் ரோட்டுல இவ்வளவு வேகமா போகாதிங்கன்னு இதோடு ஆயிரத்தெட்டாவது தடவை சொல்றேன். நீங்க பிழைச்சிருந்தா எனக்கா லாபம்.? உங்களையெல்லாம் வீட்டுல வச்சிருக்கும் பெத்தவங்கதான் பாவம்.." என்று திட்டினார் அவர்.

இருவரும் அவர் முன் தலைகுனிந்து நின்றனர். "இரண்டு பேருக்கும் இன்னைக்கும் அரை மணி நேரம் பனிஷ்மெண்ட். இந்த சாலையோரம் இருக்கற புற்களையெல்லாம் பிடுங்கி போடுங்க.." என்றார்.

இருவரும் சலிப்போடு சாலையோரம் இருந்த புற்களை பிடுங்க சென்றனர்.

"என்னங்க இது.. இன்னும் பழங்காலமா தண்டனை தரிங்க.. லேட்டஸ்டா இவங்களையே டிராஃபிக் கிளியர் பண்ண சொல்லி பொறுப்பை தந்து இருக்கலாம் இல்ல.. அவங்களுக்கும் இதோட கஷ்டம் தெரிஞ்சிருக்குமே.." என்றார் அந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டரின் அருகே இருந்தவர்.

பாதையோரம் அமர்ந்த வண்ணம் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டிருந்த அன்புவையும் அபிநயாவையும் பார்த்துவிட்டு தன்னை கேள்வி கேட்டவர் பக்கம் திரும்பினார் அந்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.

"இப்படிதான் நினைச்சி நானும் ஒரு முறை டிராபிக் கிளியர் பண்ற வேலையை பனிஷ்மெண்டா தந்தேன்‌. இவன் ஒரு பக்கமும் அவ ஒரு பக்கமும் நின்னுக்கிட்டு வண்டிகளை போக வர வச்சிட்டு இருந்தாங்க. அஞ்சி நிமிசம்தான். என் சைட் இருக்கற வெய்க்கிள்ஸ்தான் முதல்ல போகணும்ன்னு இவளும், என் சைட்ல இருக்கற வாகனங்கள்தான் முதல்ல போகணும் அவனும் ஒரே டைம்ல கையை காட்டிட்டாங்க.. அவ்வளவுதான். இந்த பக்கி பய புள்ளைங்களுக்கு அரை மணி நேரம் பனிஷ்மெண்ட் கொடுக்க போய் கடைசியில நான் மூணு மணி நேரமா போராடி டிராப்பிக்கை கிளியர் பண்ணேன்.." என்று சோகமாக சொன்னார் அவர். கேள்வியை கேட்டவர் அடுத்து வாயே திறக்கவில்லை.

அன்புவும் அபிநயாவும் கடமைக்காக நான்கு புற்களை பிடுங்கி எறிந்துவிட்டு எழுந்தனர்.

"இனி சிக்னல் ஏரியாவுல நீங்க ஸ்பீடா போனா நான் உங்க மேல கேஸ் போட்டுடுவேன் பார்த்துகங்க.." என்று எச்சரித்து அனுப்பினார் டிராஃபிக் இன்ஸ்பெக்டர்.

இருவரும் பூம் பூம் மாடு போல தலையசைத்துவிட்டு தங்களின் சைக்கிள்களில் ஏறினர்.

சிக்னலில் இருந்து நூறு மீட்டர் தள்ளி வந்ததும் மீண்டும் தொடர்ந்தது இவர்களின் ரேஸ்.

ஒருவரையொருவர் முந்தும் முயற்சியில் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்றும் தங்களின் முன்னால் வந்த லாரியை பார்க்கவில்லை. "பாம்.. பாம்.." என்று லாரியின் ஹாரன் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்கள் இருவரும். இடது கை பக்கம் செல்லாமல் சாலையின் மறு பக்கத்தின் கடை ஓரத்தில் ஒரு சைக்கிளை மற்றொரு சைக்கிள் உரசியபடி பந்தயமாய் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் லாரியை கண்டதும் பயந்து சைக்கிள்களை வலது கை பக்கமே ஒடித்து திருப்பினர்.

இடது கை பக்கம் திருப்பி இருந்தால் லாரியின் டயரில் மாட்டி இருப்பார்கள் இருவரும். மயிரிழையில் உயிர் தப்பித்தாலும் கூட அவர்கள் இந்த பக்கம் சரியாக கவனிக்காமல் சைக்கிளை திருப்பியதில் சாலையின் ஓரத்தில் இருந்த மடுவில் சறுக்கி விழுந்தனர். அந்த மடுவானது ஒன்றிரண்டு நாட்கள் முன்பு வற்றி போன ஏரியின் கரை. மடுவில் சருக்கியவர்கள் தண்ணீர் வற்றிய, ஆனால் ஈரம் காயாத செஞ்சேற்றில் விழுந்து வாரிக் கொண்டு எழுந்து நின்றனர். நல்லவேளையாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் கூட சேற்றிலேயே உருண்டதில் ஓரளவுக்கு உடலில் சேறு நிறைந்து விட்டது. அத்தோடு வீட்டுக்கு சென்றிருந்தால் கூட நலம்தான். ஆனால் இவர்கள் மீண்டும் தங்களின் சண்டையை ஆரம்பித்தார்கள்.

"உன்னாலதான்டி நான் இதுல விழுந்தேன்.." என்று எழுந்து வந்த அன்பு அவளை அதே சேற்றில் தள்ளினான்‌. விழுந்தவள் அவனின் காலை உதைத்து அவனையும் கீழே விழ வைத்தாள். அவன் மீண்டும் எழுந்து வரும் முன்பு இவளே எழுந்து சென்று அவனின் வயிற்றின் மீது அமர்ந்தாள். இரு கைகளிலும் சேற்றை அள்ளி அவனின் அழகு முகத்தில் பூசி விட்டாள். அவனும் அவளை தள்ளி விட்டுவிட்டு சேற்றையெல்லாம் அள்ளி அவளின் தலையிலும் உடலிலும் பூசி விட்டான். பத்து நிமிடத்திற்கு மேலாக சென்றது இவர்களின் சண்டை.

"ஏய்.. யாருடா அது.." என்ற குரலில் இருவரும் திரும்பி பார்த்தனர். ஏரி கரையின் மேலே நின்றபடி இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

"பன்னி மேய்க்க வந்தா அதை மட்டும் பார்க்காம எதுக்குடா பன்னியோடு சேர்ந்து நீங்களும் புரளுறிங்க.?" என்று கேட்டார் அவர்.

இருவரும் புரியாமல் அவரை பார்த்தனர். அவர்கள் நின்றிருந்த இடத்தின் பின்னால் ஏதோ சத்தம் வரவும் திரும்பி பார்த்தனர். சற்று தூரத்தில் ஐந்தாறு பன்றிகள் அதே ஏரியின் சேற்றில் அப்படியும் இப்படியுமாக புரண்டு கொண்டு இருந்தன.

அபிநயா பற்களை கடித்தாள். அவள் தன் நெற்றியில் அடித்துக் கொள்ள நினைத்த போதுதான் தன் கையில் இருந்த சேற்றை பார்த்தாள். அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். அவன் உடல் முழுவதும் சேற்றில் நனைந்து போய் இருந்தது. இவளும் அப்படிதான் இருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் சேற்றை சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீர் கிடைக்காமல் தங்களின் சைக்கிள்களை தள்ளிக்கொண்டே ஊருக்குள் நுழைந்தபோது மொத்த பேரும் பார்த்து சிரித்து ஊராருக்கு வயிறு வலி வந்தது பெரும் கதை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1631(பெரிய யூடி மக்களே..)

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN