முகவரி 19

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மகளின் விபத்து... மிருடனுக்கும் அனுவுக்கும் இடையே மூண்டிருந்த சண்டையைத் தூர நிறுத்தியது… இருவரின் கோபத்தை மறக்க வைத்தது. கணவன் இவ்வளவு நாள் செய்த செயல்களில் இருந்து… வைத்த இக்கட்டுகள் வரை எல்லாவற்றையும் அனுவை நினைக்க விடாமல் செய்தது. அதேபோல் மனைவி பேசிய வார்த்தைகள் எல்லாம் மிருடன் மனதில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. மொத்தத்தில் இவ்வளவு நாள் கணவன், மனைவி இருவரும் வாழ்ந்த தவ வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.

அவனை அழைத்து விட்டு, அனு என்னவென்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் இன்னும் அழவும்... விஷயத்தைப் புரிந்து கொண்டவனாக அவளிடமிருந்து போனை வாங்கிய ஆதி... மான்விக்கு நடந்த விபத்தையும், தற்போது தாங்கள் இருக்கும் மருத்துவமனையையும் சொல்லி... தற்போது அவனின் தேவையையும் சொல்ல... அடுத்த கொஞ்ச நேரத்தில் புயலென மருத்துவமைனை உள்ளே நுழைந்திருந்தான் மிருடன்.

மனைவி தன்னை அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிருடன் எவ்வளவோ விஷயங்களை அவன் செய்து இருந்தாலும்… இப்படி ஒரு சூழ்நிலையில்… “மகளின் உயிரை காப்பாற்ற வாங்க…” என்று மனைவி தன்னை அழைப்பாள் என்று அவன் சிறிதும் எண்ணவில்லை… அதிலும் ஐந்து வருடங்களுக்கு பிறகு காண வந்த மகளுக்கா இந்த நிலை… இப்படி எல்லாம் பலதும் நினைத்தவனின் கண்களிளோ அப்படி ஒரு வலி… முகத்திலோ பரிதவிப்பு… மொத்ததில் தவிப்புடன் மனைவி முன் வந்து நின்றான் மிருடன்

கணவனைக் கண்டதும் இவள், “மிரு...” என்று ஓடிச் சென்று அவனின் கையைப் பிடித்துக் கொள்ள,

அவனும் “ஷிதா...” என்றபடி ஆதரவாகத் தன்னவளை நெருங்கியவன்... “நம்ம மகளுக்கு என்ன ஆச்சு? பாப்பாவை விட்டுட்டு அப்படி நீ எங்கிருந்த? நம் குழந்தை இப்படிப்பட்ட விபத்தை எல்லாம் தாங்கிக்கிற வயசா? எல்லாம் என்னால் தான்....” இவன் மகள் நிலையை நினைத்து... துடித்துப் படபடக்க...

அனு, “பாப்பா... மிரு... நம்ம... மகளுக்கு... தலையெல்லாம் ரத்தம் மிரு...” கோர்வையாக சொல்ல முடியாமல் இவளும் திணற

“அதான் நான் வந்துட்டேன் இல்ல செல்லம்மா... நான் பார்த்துக்கிறேன்....” இவனின் குரல் கேட்டு வெளியே வந்த நர்ஸ்...

“என்ன மேடம் உங்க கணவர் வந்துட்டாரா?” என்று கேட்க

அனு, “இதோ... இவர் தான்...” என்று ஆரம்பித்த நேரம்….

“குழந்தையோட அப்பா நான் தான். என் ரத்தத்தை டெஸ்ட் செய்து பாருங்க...” என்று நர்ஸ்க்கு கட்டளை இட்டவன்... பின் ஆதியின் பக்கம் திரும்பி, “நான் வரும்போது ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட் மதன்ராஜ் கிட்ட பேசிட்டு தான் வந்தேன். Keep in touch with him ஆதி. எவ்வளவு பெரிய டாக்டர் என்றாலும் இங்கே இந்த நிமிடம் வந்து தான் ஆகணும். Even இந்த hospital M.D உள்பட.... be quick” என்றவன் ஆதரவாய் மனைவியின் கை அழுத்தி அவளுக்குத் தைரியம் சொல்லிவிட்டே பரிசோதனை அறைக்குள் நுழைந்தான் மிருடவாமணன்.

ஆனால் இதில் ஒன்று… தன் அக்காவை அவன் மறந்தே போனது தான் பரிதாபம்! வெண்பாவின் கைப்பேசியில் மிருடனுக்குத் தகவல் சொல்லி விட்டு, ஆதி அவளின் கைப்பேசியை அவளிடம் திரும்ப கொடுப்பதற்காக,

“மேம்... மொபைல்” என்று இவன் அவள் முன் கைப்பேசியை நீட்ட... அவளோ அவன் அழைத்ததையோ... அவள் முன் நீட்டிய கைப்பேசியைப் பார்க்காதவளாக... அனு சொன்ன விஷயத்தால், அவள் தன் தம்பியை அழைத்த அழைப்பில் திக் பிரம்மை பிடித்தவளாக அமர்ந்திருந்தாள். பின்னே? அவள் கேட்ட விஷயம் சாதாரணமானதா? எப்படி முடிந்தது கணவன் மனைவி இருவருக்கும்… அன்று தம்பி என் கையால் அடி வாங்கும் போது கூட… இவள் என் மனைவினு சொல்லவில்லையே… அப்போ இவர்கள் உண்மையாகவே கணவன் மனைவி இல்லையா… ஆனால் அப்படி இல்லையே இவளின் உரிமையும்.. அவனின் பரிதவிப்பும்… உண்மை என்று பறைசாற்றுகிறதே… இப்படியாக அவளின் எண்ணங்கள் இருக்க… ஆதியைத் தவிர அனு தற்போது வந்த மிருடன் முதற்கொண்டு அவளின் நிலையை உணரவில்லை. ஏன்... அங்கு அவளொருத்தி இருப்பதாகவே நினைக்கவில்லை அவர்கள்.

மிருடவாமனின் மகள் என்றதும், அங்கிருந்தே பல கட்டளைகள் பறக்க... பெரிய மருத்துவர்களில் இருந்து இன்னும் தேவையான அனைவருமே அங்கு குழுமினர்.

மிருடனின் பிளட் மான்விக்கு ஒத்துப் போகவும், அங்கே... அன்றே.... அப்போதே அதற்கான மருத்துவரை வைத்து மான்வியின் காலுக்கு ஆபரேஷன் நடந்தது. அந்த நேரம் எல்லாம் கணவனின் கை பற்றி... அவன் தோள் சாய்ந்து அமர்ந்தவள் தான் அனு. அதன் பிறகு அவள் எதையும் உணரவில்லை. அவளால் உணரமுடியவில்லை என்பதே உண்மை. மிருடனின் நிலையும் அதுவே தான். ஆனால் இதில் இருவரும் அங்கிருந்த வெண்பாவை மறந்து தான் போனார்கள்.

ஆபரேஷன் முடித்து... மருத்துவர் வெளியே வந்து... “dont worry... Mr. வாமணன். உங்க child safe... நாளைக்கு காலையில் வார்டுக்கு மாற்றிடலாம். அப்போ குழந்தையைப் பாருங்க. அதுவரை பேபிக்கு எதுவும் வரக் கூடாது. நான் இங்கே தான் இருக்கேன்... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்லும் வரை கணவன் மனைவி இருவரும்... உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு தான் இருந்தார்கள். மகளுக்கு ஒன்றும் இல்லை என்பதில் அனு ஒரு படி மேலே போய், தன் தவிப்பை எல்லாம் கணவனின் தோளில் சாய்ந்து கண்ணீராய் வெளிப்படுத்த…

“செல்லம்மா, அழாதடி” என்று மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவனின் கன்னத்தில் விழுந்தது ஒரு அடி... ஆம் தன் தம்பியை அடித்தது வெண்பா தான்!

“இன்னும் என்னவெல்லாம் என் கிட்ட மறைத்திருக்க டா?” அவள் கோபமாய் கேட்க

அவளின் கோபத்தில் அனுவோ விதிர்விதிர்த்து... கணவனை விட்டு விலக... தன்னவளை ஒரு வேகத்தோடு தன் தோளில் இறுக்கிக் கொண்டவனோ...

“அக்கா....” என்று வெண்பாவை அழைக்க

“என்னை அப்படி அழைக்காதடா... நான் உனக்கு அக்காவா… உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா டா? அந்த பிஞ்சு... நல்லா இருக்குன்னு சொல்கிற வரை நான் அமைதியா இருந்ததே அதிகம். இல்லைனா உனக்கு அப்பவே கன்னம் பழுத்திருக்கும். இனி எப்போதும் என்னை அப்படி கூப்பிடாத டா. இன்னும் என்னெல்லாம் மறைத்து கணவன் மனைவி இருவரும் என்ன ஏமாற்றப் போறீங்க?” என்றவள் தம்பியைத் திரும்பியும் பார்க்காமல் சென்று விட, அனு தான் இன்னும் உடைந்து போனாள்.

P.Aவான ஆதிக்கே அனு விஷயம் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றால்... அக்காவான வெண்பாவுக்கு எப்படி இருக்கும்? அவள் சொல்லிச் சென்றது போல்... இவ்வளவு நேரம் அவள் பொறுமையாக இருந்ததே அதிகம் தான்.

வெண்பா சென்ற பிறகு தான் அனுவுக்கே நினைவு வந்தது. தான் இருக்கும் நிலையும்… தங்களுக்குள் நடந்த பிரச்சனையும். உடனே இவள் கணவனிடமிருந்து விலக...
“ச்சு... பேசாம இருடி...” என்று அதட்டியவன் ஆசுவாசத்தோடு கால்களை நீட்டி சேரில் தலை சாய்த்துக் கொண்டான் அவன்.

அவனுக்கு தெரியும், இப்போது வெண்பாவிடம் எதுவும் பேச முடியாது... எதையும் விளக்க முடியாது என்று. இன்னும் சொல்லப் போனால், இவனுக்கு தான் என்றுமே தான் செய்த தவறுக்கு விளக்கம் கொடுப்பது என்பது அகராதியிலேயே இல்லையே! இதற்கு மட்டும் கொடுத்து விடுவானா என்ன?

உடல் சோர்வில் அனு கணவனின் தோளிலிருந்து மயங்கி அவன் மடியிலேயே சரிய... அடுத்த நொடி தன் சிந்தனையிலிருந்து கலைந்தவன்... அவளை நிமிர்த்தி அமர வைத்து... தன் கைக்குட்டையை நனைத்து தன்னவளின் முகம் முழுக்க துடைத்து விட்டவன்... மனைவிக்கு ஒரு அறை தயார் செய்யச் சொல்லி... தன்னவளைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்க... முகத்தில் குளுமையான நீர் பட்டவுடனே விழித்துக் கொண்ட அனு... கணவனின் கையில் தான் இருப்பதை உணர்ந்து...

“என்னை கீழே விடுங்க...” மெல்லிய குரலில் இவள் உரைக்க... அதை எல்லாம் கேட்டால் அவன் மிருடன் அல்லவே! அவளை படுக்கையில் இட்டவன்… ஆதியை அழைத்து, “ஆதி, இப்போதைக்கு மேடம்க்கு குடிக்க லைட்டா ஜூஸ் வாங்கிட்டு வரச் சொல்லு... பிறகு நைட் டின்னர்...”

“எனக்கு எதுவும் வேண்டாம்....” இடை புகுந்தது அனுவின் குரல்.

அப்போதும் “வெளியே இருக்கிற காட்ஸ் கிட்ட ஜூஸை வாங்கிட்டு வரச் சொல்லிட்டு நீ கிளம்பு ஆதி. அத்தான் இங்கே இல்லை. இனி ஃபிரண்டு வீட்டில் அக்கா இருக்க வேண்டாம்…. நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விடு. பசங்களை வைத்துகிட்டு அவங்க தனியா இருக்க வேண்டாம். இவளையும் குழந்தையும் தனியா விட்டு என்னால் வர முடியாது. நீ கூட இருந்து அவங்களைப் பார்த்துக்க. நீ காலையில் வா ஆதி. ஒரு காட்ஸ் மட்டும் இங்கே இருக்கட்டும்... மற்றவங்க எல்லோரையும் அனுப்பிடு” என்க தன் பாஸின் கட்டளையை ஏற்று ஆதி வெளியே சென்று விட

இவன் மனைவியைப் பார்க்க, அவளோ கண்களை மூடி கட்டிலில் படுத்திருந்தாள். இவனோ சுவாதீனமாக கட்டிலை நெருங்கி அவள் அருகில் அமர... அனுவோ கணவனின் அருகாமையை உணர்ந்தவளாக…. கண்களை இன்னும் இறுக்க மூடி கட்டிலில் தன்னை சுருட்டிக் கொள்ள, “எழுந்து இந்த தண்ணியை குடி ஷிதா...” கணவனின் குரல் எட்டினாலும்... கண்ணைத் திறக்காமல் இவள் படுத்த வாக்கிலேயே இருக்க, சட்டென தன்னவளைத் தூக்கி... தோள் மேல் சாய்த்துக்கொண்டவன் நீரை அவளுக்கு புகட்ட... இந்த திடீர் தாக்குதலில் முதலில் அதிர்ந்தவள், பின் கணவனை நோக்க… எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவன் முகம் கல்லாய் இறுகி இருக்கவும்... மேற்கொண்டு எந்த சண்டித் தனமும் செய்யாமல் நீரை குடித்தாள் அனு. ஆனால் மறந்தும் பிறகு கணவன் முகத்தைக் காணவில்லை அவள்.

பின் மனைவியை இவன் படுக்கையில் படுக்க வைக்க... கண்களை மூடியிருந்தாலும் ஏனோ அவன் பார்வை தன்னைக் குத்தீட்டியாய் குத்துவதை உணர்ந்தாள் அனு. அதுவே அவளை மூச்சு முட்டவும் செய்தது. எவ்வளவு நேரம் அவன் காந்தப் பார்வையும் இவள் மூச்சுத் திணறலும் தொடர்ந்ததோ... ஆதி உள்ளே நுழைந்து ஜூஸைக் கொடுத்து விட்டு வெளியேற… தன் நிலையிலிருந்து கலைந்தவன்,

“எழுந்து ஜூஸ் குடி ஷிதா” கணவனின் குரலுக்கு இவள் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து அமர, “ஏய்... மெதுவா டி...” இவன் அதட்ட

அதேநேரம் அவன் கைப்பேசிக்கு அழைப்பு வரவும், எடுத்துப் பார்த்தவன், “ச்சு...” என்றபடி அதை கட் செய்து விட்டு... மனைவிக்கான சேவையில் இறங்க... மறுபடியும் அவனுக்கு அழைப்பு வந்தது. அதை இவன் மறுபடியும் கட் செய்யப் போன நேரம்….

“நீங்க பேசுங்க… நான் சாப்பிட்டுகிறேன்” இப்படி சொன்னது அனு தான்.

அதில் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நேற்று வரை வாடா... போடா.... இன்று ங்கவா...” மூக்கால் அவளைப் போல் சொல்லிக் காட்டி விட்டு தன்னவள் குடிக்க எதுவாக ஜூஸ் கவரைப் பிரித்து ஸ்ட்ரா நுழைத்து இவன் அவளிடம் நீட்ட...

அவன் சொன்ன வார்த்தையைத் தவிர்தவள், “பாப்பா.... வ நாம் இப்போ பார்க்க முடியாதா... பாப்பாவுக்கு பசிக்காதா?” மகள் சாப்பிடாமல் தான் மட்டும் எப்படி சாப்பிடுவது என்ற நிலையில் இவள் அடைத்த தொண்டையைச் சரி செய்த படி கேட்க

குழந்தை ஐ.சி.யூவில் மயக்கத்தில் இருக்கும் தற்போது பசிக்காது என்று அனுவுக்குத் தெரிந்திருந்தாலும்.... ஏனோ பெற்ற தாயாய் அதை ஏற்றுக் கொள்ளத் தான் அவளால் முடியவில்லை. என்பதை உணர்ந்தவன் மனைவியின் கலங்கிய கண்களைப் பார்த்தவன்,

“நாம் இப்போ போய் பார்த்தா பாப்பாவுக்கு இன்பெக்ஷன் ஆகிடும்னு தான் டாக்டர் பார்க்க வேண்டாம்னு சொல்கிறார். அதேமாதிரி பாப்பாவுக்கு இப்போ பசிக்காது... அதான் டிரிப்ஸ் ஏறுது இல்ல?” இதை சொல்லும்போது மட்டும் ஒரு தந்தையாய் இவனுக்குமே தொண்டை அடைத்தது. பின்னே… இன்று இவர்கள் மகள் மான்வி செத்துப் பிழைத்தல்லவா வந்திருக்கிறாள்?

“இந்தா முதலில் இதைக் குடி... இல்லைனா காலையிலிருந்து நீ சாப்பிடாம இருக்கிறதுக்கு உனக்கு தான் டிரிப்ஸ் ஏற்றனும்...” அவன் சொன்ன பதிலில், இவள் அவசரமாய் ஜூசை வாங்கிக் குடித்தவள் பாதி நிலையில் அதை கணவனிடம் நீட்ட... தன் கைப்பேசியில் கவனமாக இருந்தவன்...

“ச்சு... எல்லாத்தையும் முழுசா குடி ஷிதா....” இவன் தலை நிமிர்த்தாமல் கட்டளையிட...

“நீங்க குடிங்க...” அனு சொல்ல

இப்படி சொன்னது தன் மனைவி தானா என்பது போல் ஆச்சரியத்தில் இவன் அவளை நிமிர்ந்து பார்க்க, “பாப்பாவை நீங்க தானே பார்த்துக்கணும்...” தன் பார்வையை எங்கோ சுவற்றில் பதித்த படி அனு சொல்ல... அதாவது என் மகளுக்காகத் தான் என்ற நிலைப்பாட்டில் இவள் சொல்ல... அதன் பிறகு இருவருக்குள்ளும் பேச்சு என்பதே இல்லாமல் போனது.

இரவு உணவு வந்ததும், இவன் மனைவிக்கு அதைப் பிரித்துக் கொடுக்க... அவளோ இருவரும் சேர்ந்து உண்ணும் படி வைத்தாள். பின் இவள் கட்டிலில் தூங்க... அவன் ஒரு நாற்காலியில் அமர்ந்தும், எதிர் நாற்காலியில் கால் நீட்டியும் தூங்கிப் போனவன்... ஆனால் மனைவியின் ஒவ்வொரு சாதாரண அசைவுக்கும் விழித்து எழுந்தான் மிருடன். இடையில் ஒரு முறை அவள் சத்தம் இல்லாமல் இயற்கை உபாதைக்காக எழ...

“என்ன ஷிதா?” என்றபடி சட்டென எழுந்து நின்று இவன் கேட்க

“ரெஸ்ட் ரூம் போகணுங்க...” அனு

இது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும்... நோயாளிகளுக்கு என்று தனி அறையில் குளியல் அறையோடு சேர்ந்த கழிப்பறை வசதி இல்லை என்பதால் தானே மனைவியை அதற்கான இடத்திற்கு அழைத்துச் சென்று... அவளுக்காக வெளிவாசலிலே காவல் இருந்து திரும்ப தன்னவளை அழைத்து வந்தான் மிருடன்.

இரவு முழுக்க தூங்காமல் மனைவியைப் பார்த்துக் கொண்டவன்... காலையில் அசந்து தூங்கி விட... அவனை எழுப்பியது என்னமோ அவன் கைப்பேசியில் வந்த அழைப்பு தான். இவன் விழித்து மனைவியைத் தேட, அவளோ அங்கில்லை. இவன் அவசரமாய் வெளியே வர... ICU அறைக் கதவின் கண்ணாடி வழியே தவிப்புடன் மகளை வெறித்துக் கொண்டிருந்தாள் அனு.

“ஷிதா... பாப்பாவுக்கு என்ன ஆச்சு?” இவன் கவலையாய் பரபரப்புடன் கேட்க

“எதுவும் இல்லை... ஆனா பயமா இருக்கு. அவளுக்கு ஒன்றும் இல்லைனு பாப்பாவை வார்டுக்கு மாற்றுகிற வரைக்கும் எனக்கு தான் என்னமோ செய்து...”

மனைவியின் கவலை படிந்த முகத்தையும், தவிப்பையும் பார்த்தவன்... “நல்லதே நடக்கும்னு நினைப்போமே ஷிதா! நம்ம பேபிக்கு எதுவும் ஆகாது வா” இவன் தைரியம் அளித்த நேரம் மருத்துவர் வந்து மான்வியைப் பரிசோதித்தவர்...

“she is alright now. இப்போ வார்டுக்கு மாத்திடுவோம்... டூ டேஸ்ல நீங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்...” என்க

கணவன் மனைவி இருவருக்குள்ளும் நிம்மதி பெருமூச்சு ஒன்று வெளியேறியது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால்... இருவரும் மகளுக்குப் பதில் இவர்கள் இருவரும் செத்துப் பிழைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மான்வியை வார்டில் மாற்றியதும்... அவள் அனுவை அடையாளம் கண்டு, “ம்மா...” என்று அழைத்த பிறகு தான்... அனுவுக்கு உயிரே வந்தது.

பின் மகளுக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்லவும்... அவளுக்குத் துணையாக ஆதியை வரச் சொல்லி விட்டு கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டிற்க்கு கிளம்பிச் சென்றனர்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN