சிக்கிமுக்கி 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவும் அபிநயாவும் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீர் தொட்டியின் அரை பாதியை காலி செய்த பிறகே குளியலறையை விட்டு வெளியே வந்தனர். அப்போதும் கூட அவர்களின் சைக்கிள்களை சுத்தம் செய்ய தனியாக தண்ணீர் தேவைப்பட்டது. பள்ளி முடியும் நாள் என்பதால் இருவருமே அதிகமாக புத்தகங்களை தூக்கி செல்லவில்லை. இருந்த ஒன்றிரண்டு புத்தங்களும் மண் படாமல் பேக்கில் நன்றாக இருந்தது. இல்லையேல் பெற்றோரிடம் இதற்கும் தனியாக செலவு வைத்திருப்பார்கள்.

"ஏழெட்டு புள்ள பெத்தவங்க கூட நிம்மதியா இருக்காங்க.. உன் ஒருத்தனை பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே.. ஆண்டவா உனக்குதான்டா வெளிச்சம்.." என்று புலம்பினாள் அர்ச்சனா. அன்புவோ அம்மா சொன்னது காதிலேயே விழாதது போல அமைதியாக இருந்துக் கொண்டான்.

"ஊருல இருக்கற மத்த புள்ளைகளை பார்த்தாலே கூப்பிட்டு கொஞ்ச தோணுது.. சனியனே நீயெல்லாம் என்ன பொண்ணு.? செருப்பு இல்லாம வாசல்ல நடந்தா கூட தூசு ஒட்டிக்கும்ன்னு சுத்தபத்தமா இருக்குதுங்க எல்லாம்.. ஆனா நீதான்டி இப்படி சேத்துல புரண்டு வந்தாலும் கூட அதை எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நினைச்சி இருந்துக்கற.." என்று ஆனந்தி கத்தினாள்.

காது குடைந்தபடியே அவளை தாண்டி நடந்த அபிநயாவிற்கு காது குடையும் சுகத்தில் அம்மா எதையோ பேசுகிறாள் என்பது மட்டும்தான் புரிந்ததே தவிர அவள் என்ன பேசினாள் என்று தெரியவில்லை.

அன்று இரவு உறக்கத்தில் கூட சேற்றில் சண்டையிடுவதுதான் இருவரின் கனவிலும் வந்தது.

"கோணக்காலா உன்னை கொல்லாம விட மாட்டேன்டா.." என்று அபிநயா கத்தியபடி கை விரல்களை மடக்கி குத்த தீபக் அலறியபடியே தன் மூக்கை பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தான்.

"இந்தா வாங்கிக்கோ.." என்றவள் காலை தூக்கி உதைத்தாள். தீபக் சற்று தாமதித்து இருந்தாலும் உதை அவனது பல்லிற்கு பட்டிருக்கும். அவன் சட்டென விலகி விட்டதால் அந்த உதை அவனது தாடையில் விழுந்தது.

"எருமை மாடு.. இன்னைக்கும் என் கட்டில்ல தூங்கிட்டு என்னையே உதைக்கிறியா.? நான் மட்டும் உனக்கு முன்னாடி பிறந்திருந்தா நீ பிறக்கும்போதே உனக்கு கள்ளிப்பாலை ஊத்தியிருப்பேன்.." என்று தன் தாடையை பிடித்தபடி சொன்னான் அவன்.

அபிநயா திரும்பி படுத்தாள். காற்றை நோக்கி கையை குத்தினாள். "செங்கல் சைக்கோ.. உன்னை இன்னைக்கு நான் கொல்ல போறேன்டா.." என்று கீரிச்சிட்டாள்.

"அக்கா.. எழுந்திரு.." என்று ஒரு அவளது தோளை உலுக்கி தீபக் அவளின் அடுத்த உலறலை கேட்டுவிட்டு சோர்வோடு அந்த கட்டிலை விட்டு இறங்கி நின்றான்.

தன் தலையணையை எடுத்துக் கொண்டான்.

"என் ரூம்ல இருக்கற என் கட்டில்லயே என்னை அராஜகம் பண்ற பார்த்தியா.. நீயெல்லாம் நல்லா வருவ.." என்று முணுமுணுத்தவன் அருகே இருந்த அவளின் கட்டிலின் மீது தன் தலையணையை வைத்தான். அவளது கட்டிலில் உறங்க சென்றவன் யோசனையோடு நின்று அவளை பார்த்தான்.

குத்துப்பட்ட தன் மூக்கையும் உதைப்பட்ட தன் தாடையையும் தடவி விட்டுக் கொண்டவன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். அவளின் உச்சந்தலையருகே கையை ஓங்கிக் கொண்டு சென்றான். "அடிக்கற அடியில நீ காலையில வரைக்கும் தூங்கவே கூடாது.." என்று முனகியவன் அவளை அடிக்க நினைத்து கையை பின்னாலும் முன்னாலும் இழுத்தான். ஆனால் அவனுக்கு மனம்தான் வரவேயில்லை.

சிறுவயதில் இவளும் அன்புவும் சண்டைப் போட்டுக் கொண்டால் அவர்கள் தங்களின் அடிதடியை ஆரம்பிக்கும் முன்பே ஓவென கத்தி அழ ஆரம்பித்து விடுவான் தீபக். அபிநயாவிற்கு அடிப்பட்டு ரத்தம் வந்து விட்டால் இவனுக்கு விடிய விடிய தூக்கமே வராது. அக்கா அக்கா என்று பிதற்றியபடி அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான்.

சிறுவயதிலேயே அவளின் வலியை தாங்காதவன் இவன். இப்போதும் கூட இவள் சண்டைப்போட்டு அடிப்பட்டு வந்தால் உள்ளுக்குள் கலங்குவான். 'சனியன் பிடிச்சவளே.. ஏன் இப்படி அடிப்பட்டு வந்து தொலையுற.?' என கேட்டு அவளை அறைய சொல்லும் மனம். ஆனால் அவன் என்றுமே தன் பாசத்தை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அதனாலயே தன் கோபத்தையும் கூட இன்று வெளிக்காட்டாமல் அவளை சலிப்போடு பார்த்து விட்டு சென்று அவளின் கட்டிலில் ஏறி படுத்து உறங்கினான்.

அபிநயா விடிய விடிய கனவில் அன்புவோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

அன்புவும் தன் வீட்டில் இப்படியேதான் உளறிக் கொண்டிருந்தான். நடுநிசியில் பாத்ரூம் பக்கம் வந்த அர்ச்சனா மாடியில் இவன் உளறும் சத்தம் கேட்டு பெருமூச்சி விட்டபடியே சென்று அவனுக்கு சாமி திருநீறை நெற்றியில் வைத்துவிட்டு அவனின் கட்டில் அடியில் துடைப்பத்தை எறிந்துவிட்டு வந்தாள்.

நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்தது. ஸ்டடி லீவ்வில் தினமும் ஸ்பெசல் கிளாஸ் டெஸ்ட்க்கு செல்வதாக சொல்லி சென்று பள்ளி மரத்தடிகளில் கும்மாளமிட்டனர். இடையில் அன்புவும் அபிநயாவும் இரு முறை சண்டை போட்டுக் கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் அவர்கள் இருவரையும் அழைத்து ஏகப்பட்ட அறிவுரை வழங்கினார். எருமை மாட்டின் மீது மழை பெய்தார் போல அவர் முன்னால் நின்றுவிட்டு வந்தவர்கள் மீண்டும் அடுத்த நாளே சண்டைதான் போட்டார்கள்.

"நாளைக்கு தமிழ்.. சொந்த மொழிதானேன்னு அலட்சியமா இல்லாம கொஞ்சமாவது கவனம் கொடுத்து பரிட்சையை எழுதுங்க.." என்று அறிவுரை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தார் தமிழ் ஐயா.

மறுநாளில் இருந்து பரிட்சை ஆரம்பித்தது. ஒவ்வொரு பரிட்சையையும் கவனத்தோடு எழுதினார்கள்.

கடைசி பரிட்சை எழுதி முடித்த அன்று பள்ளியிலேயே ஒரு சோக கீதம் ஓட்டினார்கள். 'நான் உன்னை மிஸ் பண்ணுவேன்' என்ற வாசகம் ஆங்காங்கே ஒலித்தபடியே இருந்தது. 'என் அப்பா நம்பருக்கு ஃபோன் பண்ணு' என்ற வார்த்தைகளையும் சில இடங்களில் கேட்க முடிந்தது.

அனைவரும் ஆளுக்கொரு மனநிலையில் நின்றுக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் இன்னொருவனை தேடி வந்தான்.

"சாரிடா கோகுல்.. ஏழாவது படிக்கும்போது நான் உன்னை அடிச்சிருக்க கூடாது. ப்ளீஸ் மன்னிச்சிடு.." என்றான் அவனின் கையை பிடித்தபடி.

"பரவால்ல முரளி... நான் அதை அப்பவே மறந்துட்டேன்.. நாம எப்பவுமே பிரெண்ட்ஸ்தான்.." என்றான் இவன்.

இருவரும் ஆனந்த கண்ணீரோடு கட்டியணைத்துக் கொண்டனர். சுற்றி நின்று அவர்களை பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் புதிதான ஒரு சந்தோசத்தின் பிடியில் சிக்கியிருந்தனர்.

அவர்களை கனிவோடு பார்த்தபடி நிமிர்ந்தாள் அபிநயா. பத்தடி தள்ளி அவளுக்கு நேர் எதிரில் நின்றுக் கொண்டிருந்தான் அன்பு.

'நாமளும் சாரி கேட்கலாமா.?' என்று தோன்றியது அவள் மனதில். அவனுக்கும் அதே கேள்விதான் மனதில் தோன்றியிருந்தது.

'இவக்கிட்டயா..? அதுக்கு நான் இந்த ஊரை விட்டு கூட ஓடிடலாம்..' என்று நினைத்தான் அவன்.

'இவன்கிட்ட மன்னிப்பு கேட்கறதா.? அதுவும் நானா.? இதுக்கு நான் நேரா போய் எரிமலைக்குள்ளவே குதிச்சிடலாம்..' என்று நினைத்தது அவளின் மனம்.

இருவரும் ஒரே வேளையில் முகத்தை திருப்பி கொண்டு அங்கிருந்து சென்றனர்.

பிற்பகல் வேளையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் அபிநயா. வீட்டின் நடு கூடத்தில் பயண பை ஒன்று தயாராய் இருந்தது.

"ஏன்ம்மா.. ஊருக்கு போக போறியா.? அப்புறம் யார் எங்களுக்கு சாப்பாட்டு செஞ்சி தருவாங்க.?" என்று அம்மாவை பார்த்து கேட்டாள் அபிநயா.

"ஏன் நீதான் செய்.." என்றாள் ஆனந்தி.

காலையில் பின்னி சென்றிருந்த ஈர தலையின் பின்னலை அவிழ்த்து இப்போது உலர வைத்தாள் அபிநயா.

"எனக்கு சாப்பாடு செய்ய அவ்வளவா வராதும்மா.. நீ பாட்டியை வர சொல்லு.. அவங்க வந்து சமைச்சி தரட்டும்.." என்றவள் பேனை போட்டுக் கொண்டு நடு ஹாலில் அமர்ந்து தன் தலை முடியை காய வைத்தாள்.

"உனக்கு சேவகம் செய்ய எங்கம்மாவுக்கு என்னடி தலையெழுத்து.?" என கேட்ட ஆனந்தி பேக்கை எடுத்து மகளின் முன்னால் வைத்தாள்.

"ஊருக்கு நீதான் போக போற.. பெரியப்பா உன்னை வர சொல்லி இருக்காரு.. போய் இரண்டு மாசம் இருந்துட்டு வா.." என்றாள்.

ஆச்சரியத்தோடு எழுந்து நின்றாள் அபிநயா. "நிஜமாவா.? நான் ஊருக்கு போக போறேனா.? ஐ.. ஜாலி.." என்று துள்ளி குதித்தாள்.

"உன்னை மேய்க்க போற உங்க பெரியம்மாவை நினைச்சாதான் எனக்கு பயமா இருக்கு. அங்கேயாவது கொஞ்சம் அடக்கம் ஒடுக்குமா இருந்துட்டு வா.. அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. நீ அதுக்குள்ள போய் டிரெஸ் மாத்தி தலை வாரிட்டு வா.." என்றாள்.

இங்கே அபிநயாவை ஊருக்கு அனுப்பி வைக்க இருந்த அதே நேரத்தில் அந்த வீட்டில் அன்புவின் உடைகளை மடித்து சூட்கேஸில் வைத்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. மகன் வந்தவுடன் பணத்தை கையில் தந்தாள்.

"உன் சித்திக்கு நீ கண்ணுக்குள்ளயே இருக்கியாம்.. போய் இரண்டு மாசம் இருந்துட்டு வா.." என்றாள்.

அன்பு அம்மாவையும் சூட்கேஸையும் மாறி மாறி பார்த்தான்.

"அம்மா நான் போகல.. நான் கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்க் கிளாஸ் சேர போறேன்.." என்றவனை பார்த்து புன்னகைத்தவள் "உன் சித்தியோட ஊருலயும் கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்க் கிளாஸ் சொல்லி தராங்க.. நீ அங்க சேர்ந்துக்கோ.. இரண்டு மாசம்தானே.. எங்கே படிச்சா என்ன.?" என்றாள்.

அன்பு யோசித்துவிட்டு சரியென தலையசைத்தான்.

"இன்னும் பதினைஞ்சி நிமிசத்துல சித்தி ஊருக்கு போற பஸ் வந்துடும். சீக்கிரம் ரெடியாகி வா.. நான் உனக்கு தேவையான எல்லாத்தையும் இதுல எடுத்து வச்சிட்டேன். நீ டிரெஸ்ஸை மட்டும் மாத்திட்டு வா.." என்ற அர்ச்சனா அவனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சந்தனக்கொடிக்காலின் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர் அபிநயாவும் அவளின் தந்தையும்.

அபிநயாவும் வினோத்தும் கிழக்கிருந்து வந்த பேருந்தில் ஏறினர். அபிநயா ஜன்னல் சீட்டில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் பேருந்தை ஒட்டியபடி வந்து நின்றது மேற்கில் இருந்து வந்த மற்றொரு பேருந்து. மிக அருகருகே இருந்தது இரண்டு பேருந்துகளும்.

அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்த அபிநயா மழை தூறல் ஒவ்வொன்றாக விழுவதை கண்டு ஜன்னல் வழியே கையை விட்டு தூரல்களை கை பிடிக்க முயன்றாள்.

"அபி.. பஸ் ஜன்னல்ல கை நீட்ட கூடாது.. இது கூட உனக்கு சொல்லி தரணுமா‌.?" என்று கேட்டார் அப்பா.

"பஸ் கிளம்ப இன்னும் நேரம் இருக்குப்பா.. பஸ் ஸ்டார்ட் பண்ணா நான் கையை உள்ளே எடுத்துக்கறேன்.." என சொல்லி விட்டு மழை துளி பிடிக்கும் வேலையை தொடர்ந்தாள்.

"நான் பத்திரமா போயிடுவேன்ம்மா.. அங்கே போன உடனே ஃபோன் பண்றேன்.. நீ பஸ்ஸை விட்டு கீழிறங்கு.. மழை வேற வர மாதிரி இருக்கு.. நனையாம வீட்டுக்கு போ.." என்று குரல் ஒன்று கேட்கவும் குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள் அபிநயா.

அருகே இருந்த பேருந்தில் இவளுக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் அன்பு.

அபிநயா அவனை குழப்பமாக பார்த்தாள். அவனும் குழப்பத்தோடுதான் பார்த்தான்.

"செங்கல் சைக்கோ.. எங்கேயோ கிளம்பிட்டான்.." என முணுமுணுத்தாள் இவள்.

அப்பா அவளின் முணுமுணுப்பை கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தார். அன்பு இவளை முறைத்துவிட்டு தன் அருகே இருந்தே ஜன்னலின் ஸ்கீரினை இழுத்து விட்டுக் கொண்டான்.

"உங்க சண்டை இல்லாம இருக்கணும்ன்னுதான் உன்னை நான் வெளியூர் கூட்டி போறேன். அவங்களும் அதேதான் நினைச்சிருப்பாங்க போலிருக்கு.." என்று முணுமுணுத்த அப்பா 'இரண்டு மாசத்துக்காவது உங்க சண்டையும் பழிச்சொல்லும் காதுல விழாம நிம்மதியா இருக்கணும்..' என்று நினைத்தார்.

இரண்டு பேருந்துகளும் ஒரே நேரத்தில் ஸ்டார்ட் ஆனது‌. பேருந்து புறப்பட இருப்பதை உணர்ந்த அபிநயா தன் ஜன்னல் வழி வெளியே பார்த்தாள். அன்பு தன் ஜன்னல் ஸ்கீரினை நீக்கினான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். இருவரும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்துகள் இரண்டும் அங்கிருந்து கிளம்பியது.

பார்வையை விட்டு மறையும் தன் ஜென்ம எதிரிகளை புரியாத ஒரு உணர்வோடு பார்த்தபடியே பயணப்பட்டனர் இருவரும்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1139

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN