சிக்கிமுக்கி 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அபிநயாவை பெரியப்பா வீட்டில் விட்டுவிட்டு அப்பா அவர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார்.

பெரியப்பா வீட்டில் அபிநயாவிற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அவளின் பெரியப்பாவிற்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால் செல்ல பெண் என்று அவள் முன்பே அவளை கொஞ்சினார்கள். அபிநயாவிற்கே வெட்கமாக இருந்தது அவர்களின் புகழ்ச்சியை கண்டு.

"இத்தனை வருசமா வர சொல்றோம்.. ஒருநாள் வந்து தலையை காட்டுனியா.?" என்று செல்லமாக திட்டினாள் பெரியம்மா.

"உனக்கு என்ன வேணும் பாப்பா.?"

"உனக்கு ஏதாவது வேணுமா பாப்பா.?" என்று அண்ணன்மார்கள் இருவரும் நொடிக்கு ஒருதரம் அவளின் தேவையை கேட்டனர்.

'ச்சே.. வருசா வருசம் லீவுக்கு இங்கேயே வந்திருக்கலாம் போல.. எவ்வளவு கொஞ்சுறாங்க..' என்றெண்ணினாள் அவள்.

இவளுக்கு என்ன பிடிக்கும் என கேட்டு வேண்டியதையெல்லாம் சமைத்து தந்தார்கள். அண்ணன்கள் இருவரும் தங்களின் போனையும் லேப்டாப்பையும் அவளிடம் தந்து பிடித்த கேம்மை விளையாடிக் கொள்ள சொன்னார்கள். அவளுக்கே அது கனவோ என்று கூட தோன்றியது.

அன்புவிற்கும் அவனது சித்தி வீட்டில் ஏகபோக உரிமை தரப்பட்டது.

"என் அக்கா மகன்தான்.. வாட்டசாட்டமெல்லாம் எங்க மச்சானை போல.." என்று அக்கம் பக்கத்தாரிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டாள் சித்தி.

சித்தப்பா அவனிடம் நண்பன் போல பழகினார். தன்னோடு அழைத்துச் சென்று அந்த ஊரில் இருந்த அனைத்து இடங்களையும் சுற்றி காட்டினார். அங்கே இருந்த கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்க் கிளாஸ் ஒன்றில் சேர்த்து விட்டார். அவன் கிளாஸுக்கு செல்ல தனது பைக்கை தந்தார்.

சித்தியின் குழந்தை "அண்ணா அண்ணா.." என்று இவனின் காலையே சுற்றி சுற்றி வந்தது. அந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருக்க அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அபிநயாவிற்கும் அன்புவிற்கும் அந்த புது சூழலும் புது கவனிப்பும் பிடித்திருந்தது.

ஆனால் நாட்கள் அப்படியே நிலைக்கவில்லை.

ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாளே தங்களுக்குள் ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தனர் இருவரும். எதிலுமே நாட்டம் செல்லவில்லை. எதையும் கவனிக்க தோணவில்லை. இருவருக்குமே உடல்நிலை சரியில்லையோ என்று எண்ணி அந்தந்த வீடுகளில் இருந்த பெரியவர்கள் அழைத்து சென்று மருத்துவரிடம் காட்டினர். மருத்துவர்களும் சோதித்து விட்டு உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மனம்தான் ஏக்கம் கொண்டு இருக்கிறது என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.

"என்ன ஏக்கம்ன்னு சொல்லு.. நாங்க சரி பண்றோம்.." என்று இரு வீட்டிலுமே சொன்னார்கள். இருவரும் ஒன்றை போல மறுத்து தலையசைத்தனர்.

"எனக்கு ஒன்னும் இல்ல.." என்று சொல்லிவிட்டு இருவருமே அவரவர்கள் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டனர்.

தங்களுக்கு என்ன ஆயிற்று என்று தங்களையே கேட்டுக் கொண்டனர்.

சுவற்றை வெறித்தபடி மணிக்கணக்காய் அமர்ந்திருந்தாள் அபிநயா.

தன் முன் இருந்த கணினி திரையை வெறித்தபடி நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான் அன்பு.

இன்னும் இரண்டு நாட்கள் சென்றதும் அவர்களுக்குள் இருந்த வெறுமையின் அளவு கூடியது. உணவு உண்ண பிடிக்கவில்லை என்று சொல்லி உண்ணுவதை தவிர்த்தனர். யாரிடனும் அதிகம் பேசவேயில்லை. தனி ஒரு கிரகத்தில் இருந்தனர் அவர்கள் மட்டும்.

"உனக்கு ஏதாவது குறை வச்சிட்டோமாடா.?" என்று வருத்தமாக கேட்டாள் அன்புவின் சித்தி.

அன்பு மொத்தமாக மறுத்து தலையசைத்தான். அத்தோடு சரி‌. வேறு பேசிக் கொள்ளவில்லை.

"உனக்கு என்ன ஆச்சின்னு சொல்லு பாப்பா.. அம்மா வேணுமா.? அப்பாகிட்ட ஃபோன் பண்ணி பேசுறியா.? இல்ல நான் புது வீடியோ கேம் ஏத்தி தரட்டா.?" என்று அபிநயாவிடம் கேட்கப்பட்டது கேள்விகள்.

"எனக்கு ஒன்னும் இல்ல.. சும்மா கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்திருக்கேன் அண்ணா.." என்று சொல்லி அவர்களை தவிர்த்தவள் கொஞ்சம் நேரம் அல்ல கொஞ்ச நாட்கள் அளவிற்கு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அவளின் பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் பயம் வந்துவிட்டது. உடனே வினோத்திற்கு ஃபோன் செய்தனர்.

"இவ அப்படியேதான் இருக்கா.. வெறிச்சி பார்த்துட்டு இருக்கா.. நான் கூட்டி வந்து விடட்டா.?" என கேட்டார் பெரியப்பா.

"ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள அவ டிராம பண்ண ஆரம்பிச்சிட்டாளா.?" என்று போனிலேயே திட்டினாள் ஆனந்தி.

"ஏன்ம்மா இப்படி பேசுற.. புள்ளைக்கு நிஜமாவே என்னவோ ஆயிடுச்சி. ஏதாவது நல்ல சாமியார்கிட்ட கூட்டிப்போய் காட்டினா கூட ஆகும்.." என்றாள்.

"பரவால்ல அண்ணி.. நான் வந்து கூட்டிக்கறேன்.. பிறந்ததுல இருந்து வேற இடம் மாறி வளராத பொண்ணு. அதான் ஏதாவது வித்தியாசமா இருக்கோ என்னவோ.." என்றவர் மறுநாளே சென்று தன் மகளை கூட்டி வந்தார்.

அபிநயா ஊருக்குள் வந்த அதே நாளில் அன்புவையும் அவனின் சித்தப்பா அழைத்து வந்து விட்டிருந்தார்.

"என்னடா இது.? பையன் மாதிரியா இருக்க.? ஒரே வாரத்துல பாதியா இளைச்சி போன மாதிரி இருக்கு.." என்று வருத்தப்பட்டாள் அம்மா.

"பித்து பிடிச்ச மாதிரி இருக்கான்.. ஒரே இடத்துல உட்கார்ந்து வெத்து சுவரையே மணிக்கணக்கா பார்த்துட்டு இருக்கான்.." என்று திண்ணையில் இருந்த கண்ணம்மா பாட்டியிடம் விவரித்தார் அன்புவின் சித்தப்பா.

அவர்கள் பேசிக்கொள்வதை தங்கள் வீட்டின் வாசல் படியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த வினோத் பெருமூச்சி விட்டார்.

"சண்டைதான் விடாம போடுறாங்கன்னா.. கஷ்டத்தை கூட ஒரே டைம்லதான் கூப்பிட்டுக்குவாங்க போல.." என்று முனகினார் அவர்.

கழுத்து எலும்பு தெரியும் அளவிற்கு மாறி விட்டிருந்த மகளை பார்த்து நெற்றியில் அடித்துக் கொண்டாள் ஆனந்தி.

"உன்னை பெத்த நாளுல இருந்து இன்னும் நிம்மதி இல்ல.." என்று புலம்பினாள் அவள்.

வெறுமையின் தாக்கத்திலேயே இருந்ததால் அபிநயா அம்மாவை எதிர்த்து பேசவில்லை. அவள் பேசாமல் இருப்பது கண்டு அம்மா முதன் முறையாக பயந்தாள்‌.

"பேய் ஏதும் பிடிச்சிடுச்சா.?" என சந்தேகமாக கேட்டாள் அம்மா.

"எனக்கு ஒன்னும் இல்லம்மா.. கொஞ்ச நேரம் தனியா விடேன்.." என்று அன்பு சத்தமாக கத்துவது இந்த வீட்டிற்கும் கேட்டது.

கண்களை சுருக்கி குழம்பி போனாள் அபிநயா. மனம் துள்ளலுடன் புத்துயிர் பெறுவதை உணர முடிந்தது அவளால். காரணம் காரியம் அறியாவிட்டாலும் கூட மனம் துள்ளி குதிப்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது.

"இரும்மா ஒருநிமிசம்.." என்றவள் வேகமாக மாடி படிகளில் எறினாள். தன் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றாள். ஜன்னலை வேகமாக தாழ் திறந்தாள்.

அன்பு தன் மேஜையின் மீது தலை வைத்து படுத்திருந்தான்.

"டேய் செங்கல் சைக்கோ.. உன் சவுண்டை கம்மி பண்ணுடா.. உன் வீட்டுக்கு கேட்கற மாதிரி பேசுடான்னு ஊருக்கே மைக் வச்சி எல்லார் காதுலயும் ரத்தம் வர வைக்கிற.." என்று கோபமாக திட்டினாள்.

அன்பு பற்களை கடித்தபடி எழுந்தான். அவனின் மனமும் தன் சத்தியாகிரத்தை விட்டுவிட்டு செயல்பட ஆரம்பித்து விட்டது. ஆனால் அதை அறிந்துக் கொள்ளதான் நேரம் இல்லாமல் போனது அவனுக்கு.

"நான் அப்படிதான்டி கத்துவேன் கொலைக்காரி.. உனக்கு வேணும்ன்னா நீ உன் காதுல பஞ்சை வச்சி அடைச்சிக்க.. நீயே ஒரு எப்.எம்.ரேடியோ.. என்னை குறை சொல்ல வந்துட்டியா‌.?" என்று அங்கிருந்து கத்தினான் அவன்.

"அடடடா.. இந்த ஒரு வாரமாதான் அமைதின்னா என்னன்னே தெரிஞ்சது. அதுவும் பொறுக்காம திரும்பி வந்து சண்டையை போட்டு கூட இருக்கிறவங்க உயிரையெல்லாம் வாங்குதுங்க.. புள்ளைங்களா இதுங்கெல்லாம்.?" என்று தீபக் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் இரு வீட்டு பெற்றோருக்கும் இப்போதுதான் தங்களின் வீட்டுக்கு உயிர்ப்பு வந்தது போல இருந்தது. கடந்த பத்து வருடங்களாக தினமும் கேட்டுக் கொண்டிருக்கும் கூச்சல் திடீரென ஒரு வாரம் நின்று போனதில் அவர்களுக்கே விசித்திரமாகதான் இருந்தது. அவர்களின் சண்டைக்கு இவர்களே அடிமையாகி விட்டார்கள் போல.

"ஜே.சி.பி பல்லை வச்சிக்கிட்டு நீ என்னை எப்.எம்.ரேடியோன்னு சொல்றியா.? இந்த ஊருல எங்கயாவது மண்ணை தோண்டுற வேலை இருந்தா ஜே.சி.பியை ஓரம் தள்ளிட்டு நீயே முன்னாடி போ.. உன் கரண்ட பல்லை வச்சி நல்லா பள்ளம் தோண்டலாம்.." என்று பதிலுக்கு இவளும் திருப்பி திட்டினாள்.

"அடிப்போடி பப்பூன்.. உன்கிட்ட அந்த குரங்கு கூட தோத்து போயிடும்.. ஆளையும் அவ தலையையும் பாரு.. சரியான முள்ளுகாடு.. இவ என் பல்லை குறை சொல்ல வந்துட்டா.. உன் தலை முடியெல்லாம் நீயே உன் கையால தொட்டுடாத.. கையெல்லாம் ரத்தம் வந்துற போகுது.." என்றான் அவன்.

"இதுங்க இன்சல் பண்ணிக்கற லட்சணத்தை பார்த்தா இன்னும் ஒரு வாரத்துக்கு இதையேதான் காதுல கேட்கணும் போல.." என்று சலித்துக் கொண்ட தீபக் தன் இரு கைகளாலும் காதுகளை பொத்திக் கொண்டான். ஆனால் அவர்களோ தங்களின் சுற்றுபுறம் சூழ்நிலையை மறந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்புறம் என்ன.? அந்த மொத்த கோடை விடுமுறையும் வழக்கமான விடுமுறையை போலவே அன்பு அபிநயா சண்டையோடே கடந்தது.

பரிட்சை முடிவுகள் வெளிவந்தது. அன்பு அந்த பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். மாநில அளவில் பதினெட்டாவது இடமென்று ஆசிரியர்கள் பேசிக் கொண்டனர்.

அபிநயா எண்பது சதவீத மதிப்பெண்களோடு வெற்றி பெற்றிருந்தாள். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவன் அமைதியாக வீட்டில் கேசரி தின்றுக் கொண்டிருக்க இவளோ தனது எண்பது சதவீத மதிப்பெண்ணுக்காக ஊருக்கே மிட்டாய் வாங்கி தந்து அலப்பரையை செய்துக் கொண்டிருந்தாள்.

பள்ளியில் மாற்று சான்றிதழ் தரும் தேதி அறிவிக்கப்பட்டது. அன்பு பள்ளிக்கு சென்ற அதே நாளில்தான் அபிநயாவும் சென்றாள்.

இருவரும் அடுத்தடுத்து தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்து காத்திருக்க ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு முன்னால் இருந்த இரு மாணவர்கள் சான்றிதழ்களை வாங்கி சென்றதும் இவர்களை பார்த்தார் தலைமையாசிரியர்.

"நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருங்க.." என்றவர் அவர்களின் பெற்றோரிடம் "கொஞ்சம் பேசலாம்.. இப்படி வந்து உட்காருங்க.." என்று தன் முன்னால் இருந்த இருக்கையை கை காட்டினார்.

பெற்றோர்கள் நால்வரும் ஒருவரையொருவர் பார்த்தபடி வந்து தலைமையாசிரியர் முன்னால் அமர்ந்தனர். அன்புவும் அபிநயாவும் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து முறைக்கும் சண்டையை போட்டுக் கொண்டிருந்தனர்.

"சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க.. உங்க பசங்க மார்க் வேணா நல்லா இருக்கலாம்.. ஆனா டிசிபிளின்ல ஜீரோ மார்க் கூட கிடையாது.. நாங்களும் இதுக்கு முன்னால பலமுறை உங்களை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணியிருக்கேன். இவங்களை ஸ்கூல்ல விட்டே எடுக்க போறதா வார்னிங் கூட தந்திருக்கேன்.. ஆனா நீங்களும் என் பேச்சை கேட்ட மாதிரி தெரியல.." என்றவர் அடுத்ததை பேசும் முன் குறுக்கிட்டாள் அர்ச்சனா.

"இல்ல சார்.. நாங்களும் வீட்டுல கண்டிக்கதான் செய்யுறோம்.. ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டு விட்ட பலமுறை அவன் கால்ல நான் சூடு போட்டிருக்கேன்.. ஆனா அவனை எங்களால மாத்தவே முடியல.." என்றாள் அவள்.

தலைமையாசிரியர் தன் மூக்கின் மீது இருந்த கண்ணாடியை கழட்டி மேஜை மீது வைத்தார்‌. அவர்களை பார்த்தார்.

"இதுவரை எப்படியோ.. ஆனா இனி அவங்க தங்களோட வழக்கத்தை மாத்திக்கலன்னா அவங்களோட லைப்பே டோட்டல் டேமேஜ் ஆகிடும்.. எனக்கு தெரிஞ்சி ஒரே ஒரு வழி ஒருத்தரையாவது தூர காலேஜ்ல கொண்டு போய் சேர்க்கறதுதான். இரண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா இப்படிதான் சண்டை போட்டு நம்மளையும் டென்ஷன் ஆக்குவாங்க. அதனால நீங்க காலேஜ்லயாவது அவங்களை பிரிச்சி போடுங்க.. எனக்கு தெரிஞ்சி பெஸ்ட் ஐடியா இதுதான்னு சொல்வேன்.. இல்லன்னா நாளைக்கு காலேஜ்ல யாரும் உங்களை குறை சொல்ல மாட்டாங்க.. எந்த ஸ்கூல்ல படிச்சதுங்களோ.. இவங்களுக்கெல்லாம் யார் பாடம் நடத்தினாங்களோன்னு எங்களைதான் திட்டுவாங்க.. எங்க ஸ்கூல் நேம் இவங்களால ஏற்கனவே நிறைய டேமேஜ் ஆகிடுச்சி. உங்களுக்காக நான் அதையெல்லாம் பொறுத்துட்டேன்.. ஆனா இதுக்கு மேலயும் இந்த ஸ்கூல்லை விட்டு வெளியே போன பிறகும் இதே மாதிரி ஸ்கூல் பேரை டேமே‌ஜ் பண்ணா நல்லாருக்காது சொல்லிட்டேன்.." என்றவர் மாணவர்கள் இருவரையும் அழைத்து சான்றிதழ்களை தந்து அனுப்பினார்.

பள்ளியை தாண்டி செல்லும் இருவரையும் தூரத்தில் இருந்தபடி பார்த்தவர் இனியாவது இந்த பள்ளியில் வம்பு சண்டை இருக்காது என்று நம்பி பெருமூச்சி விட்டார்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1148

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN