சிக்கிமுக்கி 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தலைமையாசிரியர் சொன்னதையே இரு வீட்டிலும் யோசித்து கொண்டிருந்தார்கள்.

அன்புவும் அபிநயாவும் சண்டை போட்டுக் கொள்வது இவர்களுக்கு எப்போதுமே பிடித்தது இல்லைதான். இதற்காக வீடு மாறி செல்ல கூட பல முறை முயன்றிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடை வந்து சேர்ந்துக் கொண்டிருந்தது.

சிறு பிள்ளைகளில் சண்டையிட்டால் கூட அது ஏதோ ஒரு வகையில் சேர்ந்து விடும். ஆனால் இந்த வளர் இளம் பருவத்திலும் இவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதனால் இவர்களில் வருங்காலம் பாதிக்கப்படுமோ என்று பயந்தனர் இரு வீட்டு பெற்றோரும்.

அபிநயாவும் அன்புவும் அக்கம் பக்கத்து கல்லூரிகளுக்கு சென்று அப்ளிகேஷனை போட்டுவிட்டு வந்தனர். ஆனால் இரு வீட்டு பெற்றோருமே வேறு ஒரு எண்ணத்தில் இருந்தனர்.

அர்ச்சனா மகனை அழைத்து சென்று தூரத்து கல்லூரி ஒன்றில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து விட்டு வந்தாள். வினோத்தும் தன் மகளை தூரத்து கல்லூரி ஒன்றிற்கு அழைத்து சென்று விண்ணபித்தார்.

சந்தனகொடிக்கால் அருகே இருக்கும் கல்லூரியில்தான் படிப்பேன் என்று அடம் பிடித்தாள் அபிநயா. ஆனால் அவளின் பேச்சை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை.

தூரத்து கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காது என்று நம்பிக்கையோடு காத்திருந்தவளுக்கு ஹாஸ்டலிலும் கூட இடம் கிடைத்து விட்டது என்று தகவல் வந்து சேர்ந்தது.

"நான் போக மாட்டேன்.. ஒரு சின்ன புள்ளைய ஹாஸ்டல்ல தங்க விடுறிங்களே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா.?" என கேட்டு மூக்கை உறிஞ்சினாள் அபிநயா.

"யாரு நீ சின்ன புள்ளையா.? உன் வயசுல எனக்கு கல்யாணமே ஆயிடுச்சி தெரியுமா.? என்னை ஏமாத்துவதை விட்டுட்டு ஒழுங்கா காலேஜ் போ.." என்றாள் ஆனந்தி.

"அங்கே பேய் வந்தா நான் என்ன பண்ணுவேன்.?" என கேட்டவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.

அம்மா பெருமூச்சு விட்டாள். "ஏன்டி இப்படி இருக்க‌.? பேயெல்லாம் வராதுடி.. உன்னோடு சேர்ந்து அந்த ஹாஸ்டல்ல இருநூறு பேருக்கும் மேல தங்க போறாங்க.. அவங்களை பிடிக்காத பேயா உன்னை பிடிச்சிட போகுது.?" என்றாள்.

"சொந்த பொண்ணு மேலயே அக்கறை இல்லாத அம்மாவை இப்போதான் பார்க்கறேன்.. அங்கே நானே துணி துவைக்கணும்.. நானே தலை வாரிக்கணும்.. நானே தூங்கி எழுந்து பெட்சீட் மடிச்சி வைக்கணும்.." என அபிநயா பாட்டாய் பாடிக் கொண்டிருக்க இடை புகுந்தான் தீபக்.

"ஆமா.. நீயே சாப்பிட்டுக்கணும்.. நீயே குளிச்சிக்கணும்.. நீயே தூங்கிக்கவும் செய்யணும்.. ரொம்ப கஷ்டமான வேலைதான்.. உன்னை நினைச்சி எனக்கே வேதனையா இருக்கு.." என்றான்.

தீபக் சொல்லியது கேட்டு அம்மா சிரித்தாள். அபிநயா தீபக்கையும் அம்மாவையும் முறைத்தாள்.

"வீட்டை விட்டு துரத்த போறிங்க இல்ல.? நான் காலேஜ் போனவுடனே ஏதாவது ஒரு பையனை பார்த்து இழுத்துட்டு ஓடிடுவேன்‌‌.." என்றாள். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்று கூட அறியாமல் உளறிக் கொண்டிருந்தாள்.

"மெண்டல்.. நீ இப்படி பண்ணா அந்த பையன் வாழ்க்கைதான் நாசமா போகும்.. நீ ஒரு பையனோட லைப்பை ஸ்பாயில் பண்ணா அந்த பாவம் உன்னோடு பிறந்த எனக்குத்தான் வந்து சேரும்.. நீயும் ஒரு தம்பியோடு பிறந்திருக்க.. இதை நல்லா ஞாபகம் வச்சிக்க.. வீணா ஒரு பையனோட வாழ்க்கையை அழிச்சிடாத.." தீபக் இதை வெகு சீரியஸாக சொன்னான். அவன் சொன்னது கேட்டு திருதிருவென விழித்தாள் அபிநயா. அவன் சொன்னது எந்த கணக்கில் சேரும் என்று புரிந்துக் கொள்ளவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது.

"போடா அரை பைத்தியம்.." என்று திட்டியவள் எழுந்து தானும் தம்பியும் பங்கிட்டு கொள்ளும் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே அவளது பெட்டிகள் தயாராக இருந்தது‌. ஏக்கத்தோடு அந்த அறையை சுற்றி பார்த்தாள். "உங்களை விட்டுட்டு நான் போக போறேன்.. என்னை மிஸ் பண்ணுவிங்களா நீங்க.? சுவரே நீ என்னை கேட்பியா.? என் ஆசை அலமாரி கண்ணாடியே என் முகத்தை பார்ககாம நீ சாயம் இழந்துடுவியா.? கூரையில் சுத்தும் விசிறியே இந்த விடலை பெண்ணை காணாம உன் இறக்கையை இழந்துடுவியா நீ.?" என்றாள் மின்விசிறியை பார்த்து.

அவளின் பின்னால் வந்த தீபக் இவளின் கேள்விகளை கண்டு அதிர்ச்சியடைந்தவனாக கதவின் மீது சாய்ந்து நின்றபடி அவளை பார்த்தான்.

"எதுக்கு இவ்வளவு சீன் போடுற நீ.? உன்னையென்ன கட்டியா தராங்க‌.? காலேஜ்தானே போக போற.? நாளைக்கு கிளம்பினா மறுபடியும் வெள்ளி கிழமை நைட்டுக்கு இங்கே வந்துட போற.. ஏதோ கண் காணாத தேசத்துக்கு கடல் தாண்டி அனுப்புற மாதிரி ஒப்பாரி வைக்கிற.." என்றான் ஆச்சரியத்தோடு.

அபிநயா அவனை முறைப்போடு பார்த்துவிட்டு தன் அருகே இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள். "என்னை வீட்டை விட்டு துரத்துறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷம்.. நான் போயிட்டா அம்மா சுடுற எல்லா பலகாரத்தையும் ஒருத்தனே திங்கலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்க.. அப்பா தினம் சாயங்காலம் வாங்கிட்டு வர ஸ்நாக்ஸ் எல்லாத்தையும் ஒண்டி தீனி திங்க போற.." என்றாள் அரை சோகமும் அரை அழுகையுமாக.

தீபக் நெற்றியில் அடித்துக் கொண்டான். "எல்லோரையும் உன்னை மாதிரியே நினைக்காத.. நீ காலேஜ் போக போற.. ஹாஸ்டல் போக போற.. உனக்கு அப்பா நிறைய காசு தருவாரு.. நீ கண்டபடி செலவு பண்ண போற.. இதையெல்லாம் நான் சொன்னேனா.?" என கேட்டான் அவன்.

அபிநயா அவனை குழப்பமாக பார்த்தாள். கை நிறைய பணத்தோடு ஹாஸ்டலில் இருக்கும் காட்சி கற்பனையில் வந்து போனது. ஆனால் அதே வேளையில் தீபக் பலகார தட்டோடு வீட்டில் உலா போகும் காட்சியும் வந்தது.

அன்று மாலையில் வீடு வந்த அப்பா ஐந்தாவது நாளாக அவளுக்கு சமாதானம் சொன்னார். வெறும் அறுபது கிலோமீட்டர் தூரம் அவளை தங்களிடமிருந்து பிரித்து விடாது என்று விளக்கம் சொன்னார்‌. அதையெல்லாம் விட முக்கியமாக அவளிடம் ஃபோன் ஒன்றை தந்தார்.

"உனக்கு என்ன எமர்ஜென்சியா இருந்தாலும் எந்த டைம்ல வேணாலும் போன் பண்ணு.." என்றார்.

அபிநயா ஃபோனை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி திருப்பி பார்த்தாள்.

"இது எனக்கா.?" என்றாள் நம்பிக்கையில்லாமல்.

"ஆமா.. உனக்குதான்.. காலேஜ்ல யூஸ் பண்ண கூடாது.. அங்கே செல்போன் நாட் அலோவ்ட்.. ஆனா நீ ஹாஸ்டல்ல யூஸ் பண்ணிக்கலாம்.. உனக்காக நான் வார்டன்கிட்ட பர்மிசன் வாங்கியிருக்கேன். இது எமர்ஜென்சி யூஸ்க்காக.. நீ நல்ல பொண்ணா நடந்துப்பன்னு நம்புறேன் நான்.." என்றார்.

அபிநயா யோசனையோடு சரியென தலையசைத்தாள். "இதுல நான் கேம் விளையாடலாமா.?" என்றாள்.

"இது புத்தியே இப்படிதான்ப்பா.. மூளையை படிப்புக்காக கொஞ்சம் கூட யூஸ் பண்ண மாட்டா.." என்று சந்தில் சிந்து பாடினான் தீபக்.

அபிநயா அவனை எரிச்சலோடு பார்த்தாள்.

"நீ சும்மா இருடா.. இவ நல்ல பொண்ணு.. நல்லா படிச்சி இந்த குடும்பத்தோட முன்னேற்றத்துக்கு உறுதுணையா இருப்பா.." என்று மகளுக்கு பரிந்து பேசினார் அப்பா.

மறுநாள் காலையில் அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினார் அப்பா. கல்லூரி கிளம்பியவளுக்கு நிறைய அறிவுரைகளை சொன்னாள் அம்மா. எல்லாவற்றிற்கும் சரியென தலையசைத்தாள் அவள்.

"நான் ஹாஸ்டல் போன பிறகு நீங்க பலகாரம் சுட்டு சாப்பிட கூடாது.. நான் வர வரைக்கும் வெயிட் பண்ணனும்.." என்ற ஒரு கோரிக்கையை மட்டும் தன் சார்ப்பாக அவர்களிடம் வைத்தாள்.

"ஆத்தா நீ வரவரைக்கும் நாங்க வெறும் சோத்துல உப்பு போட்டு கஞ்சியா காச்சி குடிச்சிட்டு கூட இருக்கோம்.. நீ அந்த பயம் இல்லாம காலேஜ்க்கு கிளம்பு.." என்றான் தீபக்.

அபிநயா தம்பியை முறைப்போடு பார்த்துவிட்டு அப்பாவோடு கிளம்பினாள்.

கல்லூரியையும் விடுதியையும் சுற்றி பார்த்தாள் அபிநயா. ஏதோ பரவாயில்லை என்றுதான் தோன்றியது.

"இங்கே எந்த பசங்களோடும் சண்டை போட கூடாது சரியா.?" என்றார் அப்பா.

"டன்.." என்றவளின் கையை பற்றியவர் அவளை கவலையோடு பார்த்தார்.

"ஆண் பெண்ணுன்னு கலந்து படிக்கற காலேஜ் இது.. வீட்டுல இருக்கற மாதிரியே இங்கேயும் இருக்காத சரியா‌.? எல்லாத்தையும் உங்க அம்மா சொல்லியிருப்பா.. ஆனா நீ அவ சொன்னதை காதுலயே வாங்கி இருக்க மாட்டன்னு தெரியும்.. ஆம்பள பசங்களோடு பிரெண்டா பழகு.. ஆனா தேவையில்லாத இடத்துல ஒற்றை சிரிப்பு கூட சிரிக்காத.. அர்த்தமில்லாத தேவையில்லாத புன்னகை கூட பெரிய பிரச்சனையை இழுத்து விடும். யாருக்கும் வேண்டாத நம்பிக்கையை தராத.. நான் உன் மேல நம்பிக்கை வச்சிருக்கேன்‌. நீயும் உன் மேல நம்பிக்கை வை.. உனக்கு நீ வேலியா இரு.. கெட்டு கிடக்கற காலத்துல நீ நினைச்சா போதும்‌ பிரச்சனையில் சிக்காம சுலபமா சமாளிச்சி வாழலாம்.. சரியா.?" என்றார்.

அப்பா சொன்னதன் உள் அர்த்தம் அரை குறையாகதான் அவளுக்கு புரிந்தது. ஆனாலும் சரியென தலையசைத்தாள்.

"பத்திரமா இருக்கேன்ப்பா.." என கூறி அவரை அணைத்துக் கொண்டாள்.

அப்பா அவளை விடுதி வாசலில் விட்டுவிட்டு திரும்பி நடந்தார்.

பெரிய கல்லூரி அது. பல மாடி கட்டிடங்களை பார்த்தபடியே தனது பைக் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்தார் வினோத்.

தனது பைக்கில் ஏறி அமர்ந்தவர் அதை ஸ்டார்ட் செய்த வேளையில் அவரருகே வந்து நின்றது ஒரு பைக். பல வருடமாக கேட்டு சலித்த பைக் சத்தம் என்பதால் சட்டென நிமிர்ந்து பார்த்தார்.

ஆறுமுகத்தின் பின்னால் அமர்ந்திருந்த அன்பு தனது பேக்கை மாட்டிக் கொண்டும் ஒரு கையால் ஒரு சூட்கேஸை பிடித்துக் கொண்டும் பைக்கிலிருந்து கீழே இறங்கினான். ஆறுமுகம் தன் முன்னால் பேட்ரோல் டேங்கின் மீது வைத்திருந்த மற்றொரு பேக்கை எடுத்து அவனிடம் தந்தார். அன்பு அவர் தந்த பேக்கை வாங்கி கொண்டு கல்லூரியை திரும்பி பார்த்தான். அதே வேளையில் பைக்கிலிருந்து கீழிறங்கி நின்ற ஆறுமுகம் பைக் ஒன்றின் இன்ஜின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். வினோத் பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருகியபடி அவரை பார்த்துக் கொண்டிருந்தார்.

"இவன் இங்கே என்ன பண்றான்.?" என்று முணுமுணுத்தார் அவர். ஆறுமுகத்தின் முணுமுணுப்பு கேட்டு திரும்பிய அன்பு வினோத்தை கண்டதும் குழம்பி போனான்.

"அப்பா.. நீங்க உங்க ஸ்பெக்ஸை ஹாஸ்டல் ஹால் டேபிள் மேலேயே விட்டுட்டு வந்துட்டிங்க.." என்று கண்ணாடியோடு அங்கே ஓடி வந்தாள் அபிநயா.

தந்தையின் அருகே வந்து கண்ணாடியை நீட்டியபிறகே அந்த பக்கம் நின்றிருந்த இருவரையும் பார்த்தாள் அவள்.

"செங்கல் சைக்கோ இங்கே என்ன பண்றான்.?" என அவள் குழப்பமாக கேட்ட நேரத்தில் "டேய் அன்பு.. ஏன்டா லேட்டு..?" என கேட்டபடி அங்கே ஓடி வந்தான் குணா.

இவர்களின் அருகே வந்த குணா இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"நீயும் இதே காலேஜ்தான் சேர்ந்திருக்கியா அபி.?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான் அவன்.

அபிநயா ஆமென தலையசைத்தாள்.

"வாவ்.. என்னை தூரமா காலேஜ் சேர்த்த போறாங்கன்னு இரண்டு பேருமே என்கிட்ட சொன்னிங்க.. ஆனா இரண்டு பேரும் ஒரே தூரத்துக்குதான் வருவிங்கன்னு சொல்லாம விட்டுட்டிங்க.." என்றான் நாடக பாணியில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1057

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN