சிக்கிமுக்கி 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வெதின்ஸா தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தாள். நடுங்கும் மேனியோடு எழுந்து அமர்ந்தாள். தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அது கழீழிய அரண்மனையில் அவர்கள் தங்கிருக்கும் அறை என்பது பார்த்தவுடனே புரிந்தது.

மனம் முழுக்க பயமும் வேதனையும் மட்டுமே இருந்தது. அவளுக்கு என்ன நடந்தது என்று கூட சட்டென நினைவிற்கு வரவில்லை. மனதின் ஓட்டத்தை ஒருநிலைக்கு கொண்டுவரவே அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தது. அதன் பிறகே நடந்தது என்ன என்று யோசித்தாள்.

தனேசிவ்விடம் தான் தோற்றது ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தது அவளுக்கு. கனவா நிஜமா என்று சட்டென அறியமுடியாத அளவிற்கு நிகழ்ந்து விட்டிருந்ததை நிஜம் என்று அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அன்றைக்கு நடந்ததும் கனவில்லை. இன்றைக்கு நடந்ததும் கனவில்லை என்று தெளிவாக தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

வாழ்வில் மிக பெரிய தோல்வியை சந்தித்ததின் காரணமாய் அவளுக்கே அவள் மீது ஆத்திரமாக வந்தது.‌ படுக்கையை விட்டு எழுந்து நின்றவள் தலையை பிடித்தபடி சோர்ந்து அமர்ந்தாள்.

"கழீழியனே.. தனேசிவ்.. நீ ரொம்ப பெரிய தப்பை பண்ணிட்ட.. இதுக்கான பலனை நீ அனுபவிப்ப.." என்று கடித்த பற்களிடையே சொன்னவள் வீறுகொண்டு எழுந்தாள். தனது இடை பகுதியில் இருந்த கத்தியை உருவ முயன்றாள். கத்தி இல்லை. இடுப்பு பகுதியை பார்த்தாள். கத்தி இருக்கும் இடத்தில் ஆடை கிழிந்திருந்தது. அது அவளின் அழகிய பிறப்பு ஆடை. அது ஹாஸ்விநெட்டர்களுக்கான சிறப்பு. அவர்கள் பிறந்த சில நாட்களில் தோலின் மேல் புது வண்ண மேனி போல உருவாகும் ஆடை அவர்களின் இன்னொரு மேனியாகவே இருக்கும். அதை தாண்டி அவர்களுக்கு உடை தேவைப்பட்டது இல்லை.

அந்த ஆடை சில நாட்களில் சரியாகிவிடும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது அது அல்ல.. கிழிந்த ஆடையின் உள்ளே காயம்பட்டிருந்த மேனிதான். ஆறாத அந்த காயத்தின் வலியை விடவும் தனேசிவ்வின் நாக்கு பட்டதை நினைத்துதான் இப்போதும் அவளுக்கு அதிகமாக வலித்தது.

நடந்ததை நினைக்கையில் வெதின்ஸாவிற்கு கலங்கியது விழிகள் இரண்டும்.

"ஹாஸ்விநெட்டின் இளவரசி அழுகிறாளா.? ஹாஸ்விநெட்டின் இளவரசிகள் என்றும் அழ மாட்டார்கள்.. மாறாக தங்களின் தோல்விக்கு எதிராக போராடவே செய்வார்கள்.." என்று அவளே அவளுக்கு தேறுதலை சொல்லிக் கொண்டாள்.

கண்ணீர் கண்ணுக்குள்ளேயே மறைந்து போனது. அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். அறையின் ஒரு ஓரத்தில் இருந்தது அவளின் வாள். சென்று தன் வாளை கையில் எடுத்தவள் அதை இறுக்கமாக பற்றினாள்.

அவள் தனேசிவ்வை தேடி செல்ல இருந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தாள் வனியேத்.

"செங்கோலை உடைத்து பெறுவேளியை மட்டும் கொண்டு வந்துட்டேன் இளவரசி.." என்றாள்.

வெதின்ஸா அப்போது பெரும் வேதனையில் இருந்ததால் வனியேத் செய்த தவறை அறியவில்லை.

"செங்கோலையே உடைச்சிட்டியா.? நல்லது.. ஓடம் வந்து காத்திருக்கும் இடத்துக்கு போ.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.." என்றாள்.

வெதின்ஸா அங்கிருந்து செல்லும் முன் அவளை நிறுத்தினாள் வனியேத்.

"எங்கே போறிங்க இளவரசி.? ஓடம் வந்துடும்.. நாம கிளம்பலாம்.." என்றாள்.

"இல்ல.. நீ கிளம்பு.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.." என்றவள் வாளோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

மொத்த அரண்மனையும் அமைதியின் பிடியில் இருந்தது‌. அதுவே அவளுக்கு சந்தேகத்தை தந்தது. எதிரே இருந்த அறையை சந்தேகத்தோடு திறந்தாள். அறை காலியாக இருந்தது. அறையின் உள்ளே நுழைந்து அங்கும் இங்கும் தேடினாள். அவனை எங்கேயும் காணவில்லை.

"தனேசிவ்.." என்று அடிகுரலிலிருந்து கத்தினாள். அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தாள் வனியேத்.

"ஓடம் வந்துடும் இளவரசி.. வாங்க நாம போகலாம்.." என்றவள் வெதின்ஸாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள். வெதின்ஸா சிலை போல அவளின் பின்னால் நடந்தாள்.

அவர்கள் அந்த அரண்மனையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே காவலுக்கு நின்றிருந்த ஆசான் இவர்களை கை காட்டி மறித்தான்.

"அரண்மனையை விட்டு வெளியேற உங்களுக்கு அனுமதி இல்ல.." என்றான்‌. அதை அவன் சொல்லி முடிக்கையில் வெதின்ஸா தன் கத்தியை அவனின் கழுத்தில் இறக்கி விட்டிருந்தாள்.

"உன் அனுமதி எனக்கு தேவையில்ல.." என்றவள் அவனை கண்டம் துண்டமாக வெட்ட ஆரம்பித்தாள். ஆனால் அவள் வெட்ட வெட்ட அவன் மீண்டும் மீண்டும் சரியாகி கொண்டிருந்தான். தனேசிவ் மேல் காட்ட முடியாத கோபத்தை அவள் இவன் மீது காட்டிக் கொண்டிருந்தாள். எத்தனை வெட்டுக்கள் எத்தனை கத்தி குத்துகள் என்று அவளுக்கே தெரியவில்லை. அவளின் நொந்து போன உடல் மேலும் நொந்துக் கொண்டிருந்தது இந்த செயலால். ஆனால் மனம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்றது.

ஆசான் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான். அவள் தந்த அத்தனை காயங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான்.

வெகு நேரம் கழித்து கத்தியை கீழே விட்டாள் வெதின்ஸா. தலையை பிடித்தபடி தரையை பார்த்தாள். அவளின் வேதனையை வனியேத்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அதை வெளிகாட்டினால் தனக்குத்தான் ஆபத்து என்பதை புரிந்துக் கொண்டவள் எதுவும் சொல்லாமல் வெதின்ஸாவின் கத்தியை மட்டும் கையில் எடுத்தாள்.

"ஓடம் நிற்கும் இடத்துக்கு போகலாம் இளவரசி.." என்றவள் வெதின்ஸாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்தாள்.

"அரண்மனையை விட்டு செல்ல உங்களுக்கு அனுமதி இல்ல.." என்று சொல்லியபடி பின்னால் ஓடி வந்தான் ஆசான். ஆனால் இருவருமே அவனை கண்டுக்கொள்ளவில்லை.

அவர்கள் வந்து நின்ற அதே நேரத்தில் அங்கே வந்து இறங்கியது ஓடம். வெதின்ஸாவின் முகம் வாடியிருப்பதை கண்டதும் நண்பர்கள் இருவருக்குமே திகைப்பு உண்டானது.

"வெதின்ஸா உனக்கு என்ன ஆச்சி.?" என கேட்டபடி ஓடத்திலிருந்து இறங்கி ஓடி வந்தான் தினவேஸ்.

வெதின்ஸா மறுப்பாக தலையசைத்தாள்.

"இங்கே இருந்தா ஆபத்து.. எதையாவது பேசுவதா இருந்தா ஓடத்துக்கு போன பிறகு பேசிக்கலாம்.." என்று எச்சரித்தாள் வனியேத்.

"பெறுவேளி எடுத்திட்டியா.?" என்று அவளிடம் கேட்டான் அவன். "ம்.. எடுத்துட்டேன்.." என்று தன் கையில் இருந்த சிறு கண்ணாடி பெட்டியை காட்டினாள் வனியேத்.

தினவேஸ் வெதின்ஸாவை அழைத்துக் கொண்டு ஓடத்திற்குள் ஏறினான். வனியேத் ஓடத்திற்குள் ஏற இருந்த நேரத்தில் அங்கு வந்தான் ஆசான்.

"இளவரசி இந்த கழீழியத்தை விட்டு போக கூடாது.." என்றான்.

வனியேத் அவனை ஆத்திரத்தோடு முறைத்தாள். "தூர போ கழீழியனே.." என்றாள்.

அவன் ஓடத்திற்குள் நுழைந்தான். அவனின் பின்னால் ஓடினாள் வனியேத்.

"இவன் அத்துமீறி உள்ளே நுழைஞ்சிட்டான்.." என்றாள்.

"நீ ஓடத்தை இயக்கு சாதேனிவ்.. தாய்னிவாவுல நிறைய சிறைகள் இருக்கு.. அதுல ஒன்னுல இவனும் இருந்துட்டு போகட்டும்.." என்ற வெதின்ஸா தன் வாளை அவன் கழுத்தை நோக்கி எறிந்தாள். கழுத்தில் கத்தி சொருகியபடி ஆசான் மண்டியிட்டு விழுந்த நேரத்தில் அந்த ஓடம் விண்ணில் பாய்ந்தது.

ஓடம் சென்ற திசைக்கு எதிர் திசையில் பறந்துக் கொண்டிருந்தான் தனேசிவ். அவனின் சுயம் என்னவென்று இவர்கள் யாரும் அறியவேயில்லை. பிரபஞ்சத்துக்குள் இவர்களின் ஓடம் நுழைந்த வேளையில் அந்த நட்சத்திர மண்டலத்தின் பாதியை கடந்து போயிருந்தான் தனேசிவ். பிரபஞ்ச வெளியிலும் சர்வ சாதாரணமாக அசுர வேகத்தில் பறக்கும் அவனின் கழீழிய ராஜா சக்தியை ஹாஸ்விநெட்டர்கள் அறியவேயில்லை.

இவன் மட்டுமல்ல மற்ற கழீழியர்களும் இவனின் தகவலை கேட்ட பிறகு அங்கிருந்து கிளம்ப தயாராகி கொண்டிருந்தனர்.

கழீழியத்தின் நட்சத்திர மண்டலத்தின் இறுதியில் இருந்தது ஒரு சிறு கிரகம். பல கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை கழீழியம் அழிந்து பிறக்கும் போதெல்லாம் அவர்கள் அங்கு சென்றுதான் வசிப்பார்கள். இப்போதும் அங்கு செல்லத்தான் தயாராகி கொண்டிருந்தார்கள். தங்களின் சூனியத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொருவரின் வீட்டின் பாதாள தனி அறையிலும் அவர்களின் சூனியத்தால் உருவாக்கப்பட்ட பிரபஞ்ச விமானங்கள் இருந்தன. அதில் ஏறி பயணிக்க இருந்தவர்கள் இப்போது அந்த கிரகத்தில் இருக்கும் தங்களின் முக்கிய பொருட்களை சேகரிக்கும் பணியில் இருந்தனர்.

சாதேனிவ் ஓடத்தை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.

"நாங்க ஓடத்தை திருப்பி கொண்டு வரும்போது கழீழியத்துல இருந்த நெருப்பு முழுசா அணைஞ்சிடுச்சி. இது எப்படின்னு உனக்கு தெரியுமா வனியேத்.?" என கேட்டான் சாதேனிவ்.

"எனக்கு தெரியாது.." என்று சொல்லி விட்டு தலையை அசைத்தாள் வனியேத்.

வெதின்ஸாவின் வேதனை முகத்தை பற்றி நிமிர்த்தினான் தினவேஸ்.

"என்ன ஆச்சி உனக்கு.? ஏன் இப்படி இருக்க.?" என்று கேட்டான் அவன்.

வெதின்ஸா மௌனமாய் தரை பார்த்து அமர்ந்திருந்தாள். சாதேனிவ் ஓடத்தை தானியங்கிக்கு மாற்றிவிட்டு எழுந்து இவளிடம் வந்தான்.

"என்ன ஆச்சி.? பெறுவேளியை எடுக்க போகும்போது யாராவது உன்னை தாக்கிட்டாங்களா.? இந்த கிரகத்தோட ராஜா உன்னை ஏதாவது அவமானப்படுத்திட்டானா.?" என்று கேட்டான் சாதேனிவ்.

வெதின்ஸா மறுப்பாக தலையசைத்தாள்.

'இளவரசி நான். நானே ஒரு கழீழியனிடம் என்னையே தோற்று வந்தேன்னு தெரிஞ்சா கிரகத்து மக்களுக்கு தங்கள் மேல இருக்கற தன்னம்பிக்கை அழிஞ்சிடும். எனக்கு ஏற்பட்ட தோல்விக்கு இந்த கிரகத்தை அழிச்சி வேதனையை தீர்த்துப்பேன்.. ஆனா எனக்கு இப்படி ஒரு தோல்வி ஏற்பட்டதுன்னு தெரிஞ்சா நண்பர்கள் வருந்துவாங்க.. மொத்த கிரகமும் எனக்காக கலங்குவாங்க.. ஹாஸ்விநெட்டர்களை விட எனக்கு என்ன முக்கியம்.? என் நண்பர்களை விட எனக்கு என்ன அவசியம்.?' என நினைத்தவள் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு நண்பர்களை பார்த்தாள்.

"அப்படி எதுவும் நடக்கல.. உறக்கத்தில் தீஞ் கனா ஒன்னு கண்டேன்.. நாம மூணு பேரும் பிரிஞ்சி போற மாதிரி.." என்றாள்.

இளம்தளபதிகள் இருவரும் அவளை சந்தேகமாக பார்த்தனர். பின்னர் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.

வெதின்ஸாவின் நெற்றியில் கை வைத்து பின்னால் தள்ளினாள் தினவேஸ்.

"நாம இளவரசி மற்றும் இளம்தளபதிகள். நம்மளை ஹாஸ்விநெட்டை விட்டு யாராலும் பிரிக்க முடியாது.." என்றான் அவன்.

ஆமென தலையசைத்தாள் வெதின்ஸா. "நான்தான் சொன்னேன் இல்ல அது வெறும் தீஞ்கனான்னு.." என்றாள்.

சாதேனிவ் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். "தீஞ்கனான்னு தெரிஞ்ச பிறகும் ஏன் கவலைப்பட்டுட்டு உட்கார்ந்திருக்க.. நாம ஹாஸ்விநெட்டர்கள்.. கவலைப்படுவது நம்மோட குணத்துலயே கிடையாது.." என்றான்.

வெதின்ஸா ஒரு கையால் தன் இடுப்பு பகுதியை தொட்டாள். காயம் இன்னமும் இருந்தது. மறுகையால் நண்பனை அணைத்துக் கொண்டாள்.

"ஆமா தீஞ் கனா.. அதனால நமக்கு எந்த பயனும் இல்ல. பாதிப்பும் இல்ல.." என்றாள் புதிதாய் பிறந்த நம்பிக்கையோடு.

கழீழியத்தின் நட்சத்திர மண்டலத்தில் பாதியை அவர்கள் கடந்தபோது அவர்களின் ஓடத்திற்கு இயந்திர மனிதனிடமிருந்து செய்தி வந்து சேர்ந்தது.

"இயந்திர மனிதன் வந்துட்டான்.." என்ற தினவேஸ் எழுந்து சென்று ஓடத்தின் புறவழி கதவை திறந்து விட்டான். வட்டவடிவில் இருந்த ஒரு சிறு விண்ணோடம் அந்த ஓடத்தினுள் வந்து இறங்கியது.

கற்களாலும் சில பல உலோகத்தாலும் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த இயந்திர மனிதன் தான் இருந்த ஓடத்தை விட்டு இறங்கி வந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1058

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN