சிக்கிமுக்கி 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவையும் அபிநயாவையும் மாறி மாறி பார்த்த ஆசிரியர் "என்ன பண்றிங்க இரண்டு பேரும்.?" என்றார்.

"இந்த எருமை எவனோ ஒரு பேய்க்கிட்ட அடி வாங்கிட்டான் சார்.. அதான் கோபத்துல திட்டிட்டு இருக்கேன்.." என்ற அபிநயாவை முறைத்த அன்பு "இந்த குட்டச்சி அழகா இருக்கான்னு ஒரு குருடன் சொல்லிட்டான் சார். அதான் இவளை திட்டிட்டு இருக்கேன் நான்.." என்றான்.

ஆசிரியர் தன் கண்ணாடியை கழட்டி தனது மேஜை மீது வைத்துவிட்டு அந்த மேஜை மீதே ஏறி அமர்ந்தார். குணாவை பார்த்தார் அவர்.

"நீ சொன்ன மாதிரியே காரணமே இல்லாமதான் சண்டை போடுறாங்கடா.." என்றார். பின்னர் இவர்கள் இருவர் பக்கமும் திரும்பினார்.

"உங்களுக்குள்ள தனிப்பட்ட விரோதம் இருந்தா அதை இந்த காலேஜ்க்கும் வெளியே வச்சிகங்க.. உள்ளே இப்படி வன்முறையில் ஈடுபட்டா அப்புறம் நான் மேலிடத்துல சொல்லி உங்க இரண்டு பேரையும் வெளியே அனுப்பிடுவேன். சரியா.?" என்றார்.

இருவரும் மொத்தமாக தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். இருவரும் சென்று அவர்களது இடத்தில் அமர்ந்ததும் குணாவை பார்த்தார் ஆசிரியர்.

"நீ மட்டும் ஏன் நிக்கற.? போய் உட்காரு.." என்று கையை காட்டினார்.

குணாவும் தன் இருக்கையில் சென்று அமர்ந்த பிறகு மேஜை மீதிருந்து எழுந்து நின்றார் ஆசிரியர்.

"மார்னிங் பசங்களா.. நான் அருள் குமரன். உங்களுக்கு ஆங்கில வாத்தியார் நான்.. எங்கடா எங்கே போனாலும் விடாத விடாகண்டனா இந்த தமிழும் ஆங்கிலமும் மொழிகளா நம்மளை பின் தொடருதேன்னு யாரும் பீல் பண்ணாதிங்க.. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு ஆங்கில வகுப்புகளை கலகலப்பா நடத்த முயற்சி பண்றேன்‌.. ஆங்கில வகுப்புல தமிழ்ல பேசுறானேன்னு யாரும் வியந்து போக வேண்டாம்.. உங்களுக்கு தமிழ் விளையாடும் வகுப்பு தமிழ் மட்டும்தான். நானும் பாடம் எடுக்கையில் ஆங்கிலம்தான் நடத்துவேன்.. ஆனா மத்தபடி பேசிக்கும்போதாவது தமிழ்ல உரையாடலாமே என்பது என் எண்ணம். பிடிக்கலன்னா சொல்லுங்க.. ஆங்கிலத்திலயே பேசிட்டு போயிடுறேன்.. ஏனா இங்கே முக்கியம் உங்க எண்ணம்தானே தவிர என்னோடது இல்ல.." என்றவரை ஆச்சரியமாக பார்த்தவர்கள் தங்களை மறந்து கை தட்டினார்கள்.

ஆசிரியர் அவர்களை குறும்பாக பார்த்தார். "கை தட்டியெல்லாம் என்னை உசார் பண்ண முடியாது உங்களால.. படிச்சா மட்டும்தான் உங்களை எனக்கு பிடிக்கும்.." என்றார்.

அவர் சொன்னது கேட்டு மாணவர்கள் முகம் சிறு வெட்கத்தால் சிவந்து போனது.

"நீங்க உங்களை அறிமுகப்படுத்திக்க விரும்பினா எழுந்து நின்னு உங்க பேரையும் உங்க ஆம்பிசனையெல்லாம் சொல்லுங்க.." என்றார்.

மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து நின்று தங்களின் பெயரையும் தங்களின் எதிர்கால லட்சியத்தையும் சொன்னார்கள்.

அபிநயா எழுந்து நின்றாள். "நான் அபிநயா.. என் எதிர்கால லட்சியம் கெமிஸ்ட்ரி டீச்சரா போகணும்ங்கறது.." என்றாள்.

அடுத்ததாக அமர்ந்திருந்த அன்பு அபிநயாவை நக்கல் பார்வை பார்த்தபடியே எழுந்து நின்றான்.

"நான் அன்பு.. எனக்கு கெமிஸ்டிரியை விட பிசிக்ஸ்தான் ரொம்ப பிடிக்கும் சார்.. ஆனா ஏன் இதை எடுத்தேன்னு எனக்கே தெரியல.." என்றான். எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்று யோசித்தபடி அமர்ந்திருந்த நேரத்தை யோசித்தான் அன்பு. இயற்பியல் இயற்பியல் என்று மூளை திரும்ப திரும்ப கூவிக் கொண்டிருந்தது. ஆனால் கல்லூரியில் "என்ன பிரிவு எடுக்கின்றாய்.?" என்று ஒரு ஆசிரியர் கேட்டபோது வேதியியல் என்று இயல்பாய் வந்தது வார்த்தை.

"ஏனா மெண்டல் கேஸெல்லாம் அப்படிதான் நினைக்கிறது ஒன்னு செய்றது ஒன்னுன்னு இருக்கும்.." என்று சிறு குரலில் சொன்னாள் அபிநயா.

"பார்க்க நல்ல பொண்ணு மாதிரி இருக்கு.. ஆனா பேட் கேர்ள் மாதிரி பிகேவ் பண்ற.." அருள் குமரன் அவளை பார்த்து கிண்டலாக சொன்னார்.

"சாரி சார்.." என்றவள் அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.

வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.

"உங்களோட எல்லா பாடத்திலும் ஆங்கிலம் இருக்கு. ஆனா அப்புறம் ஏன் தனி ஆங்கிலம்ன்னு கேட்கலாம் நீங்க. நீங்க மத்த பாடத்தை சுலபமா புரிஞ்சிக்கதான் நான் உங்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க வந்திருக்கேன்.." என்றவர் எழுந்து வந்து போர்டில் இங்கிலீஸ் என்று எழுதினார்.

"நீங்க புரிஞ்சி படிச்சா புரியாத வார்த்தைகள் கூட தங்களை உங்களுக்கு அடையாளப்படுத்தும்.. ஆனா நீங்க புரியாம படிச்சா ஏற்கனவே தெரிஞ்ச வார்த்தைகள் கூட அன்னியமா பயமுறுத்தும். இதுதான் எல்லா மொழிகளுக்குமான அடிப்படை.." என்றவர் பாடப்புத்தகத்தை பிரித்து வகுப்பை நடத்த ஆரம்பித்தார். பாடம் நடத்த ஆரம்பித்ததும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு முழுதாக மாறி விட்டவர் பாதி நேரம் கதைதான் சொன்னார்.

நேரம் சென்றதே யாருக்கும் தெரியவில்லை.

"ஓகே பசங்களா.. நான் கிளம்பறேன்.. நீங்க அடுத்த கிளாஸை கவனிங்க.." என்றபடி வாசலை நோக்கி நடந்தவர் யோசனையோடு நின்றார்.

"இவங்க இரண்டு பேரும் சண்டை போட்டு உங்களை டிஸ்டர்ப் பண்ணா உடனே எனக்கு சொல்லுங்க.. நான் அவங்களை கவனிச்சிக்கறேன்.." என்று அபிநயாவையும் அன்புவையும் குறிப்பிட்டு சொல்லி விட்டு கிளம்பி போனார்‌.

அவர் சென்றதும் அந்த வகுப்பறையே மழை அடித்து ஓய்ந்தார் போல இருந்தது.

"வாவ்.. இந்த சாரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." என்றாள் ஒரு மாணவி.

"உனக்கு மட்டுமில்ல எல்லோருக்குமே பிடிச்சிருக்கு.." என்றான் மாணவன் ஒருவன்.

அடுத்தடுத்து வந்த ஆசிரியர்களும் சலிப்பு ஏற்படா வண்ணம் பாடத்தை நடத்தினர்.

அன்று கல்லூரி முடிந்து ஹாஸ்டலை நோக்கி கிளம்பினர் அபிநயாவும் மீனாவும்.

"ஏய் நில்லு.." என்று அவளின் வகுப்பு இருந்த கல்லூரி கட்டிடத்தின் முகப்பிலேயே நிறுத்தினார்கள் சஞ்சயும் அவனது நண்பர்களும்.

அவனை கண்டதும் அபிநயாவுக்கு எக்கச்சக்கமாக கோபம் வந்தது.

"அமைதியா போயிடலாம் அபி.. காலேஜ் ஆரம்பிச்ச இரண்டாவது நாளே சீனியர்ஸை பகைச்சிக்க வேணாம்.." என்று அபிநயாவின் காதோரம் கிசுகிசுத்த மீனா அவளின் கையை பிடித்து தன்னோடு இழுத்துச் செல்ல முயன்றாள்.

தோழியிடம் மறுப்பாய் தலையசைத்தாள் அபிநயா.

மீனாவின் பிடியிலிருந்து தன் கையை உருவிக்கொண்டவள் "ஏன்டா பொறுக்கி.?" என்று கேட்டபடி சஞ்சயின் அருகில் சென்றாள்.

சஞ்சய் அவளின் வார்த்தையால் ஆச்சரியப்பட்டு போனான். இவர்களை கடந்து சென்றுக் கொண்டிருந்த மாணவர்கள் ஆங்காங்கே நின்றபடி இவர்களை பார்த்தனர்.

"நான் பொறுக்கியா.?" என கிண்டலாக கேட்டபடி தன் நண்பர்களின் முகங்களை பார்த்தான் அவன். அவர்களும் நண்பனோடு சேர்ந்து கிண்டலாக சிரித்தனர்.

அன்புவும் குணாவும் அப்போதுதான் வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர். மாடியிலிருந்து இறங்கியவர்களின் கண்களில் கூட்டமாக நின்றிருந்த மாணவர்கள் தென்பட்டனர்.

"என்ன நடக்குது இங்கே.?" என கேட்டபடியே நண்பனை இழுத்துக் கொண்டு முன்னால் நடந்தான் குணா.

சஞ்சய் சிரிப்பை நிறுத்திவிட்டு தன் முன் நின்றிருந்தவளின் முகத்தை பார்த்தான். அவனின் உயரத்திற்கு இவள் ஓரடி குள்ளமாக இருந்தாள். அவனை அண்ணாந்து பார்க்க இவளுக்கு பிடிக்கவேயில்லை. அன்புவோடு சண்டையிடும்போது குறையாக தெரியாத உயரம் இப்போது இவனை நிமிர்ந்து பார்க்கும்போது பெரும் குறையாக தெரிந்தது.

"பார்க்க லட்சணமா இருந்த.. அதனால்தான் எனக்கு உன்னை பிடிச்சது.. ஆனா ஓவர் வாய் எனக்கு செட்டே ஆகாது.. அதனால நீயே உன்னை சீக்கிரம் மாத்திக்க பாரு.." என்று புருவம் நெரித்து எச்சரிக்கும் குரலில் கூறியவனை வியப்போடு பார்த்தாள் அபிநயா.

'லூசா இவன்‌.?' அவள் மனதில் இயல்பாய் எழுந்தது கேள்வி.

சஞ்சயும் அபிநயாவும் அருகருகே இருப்பது கண்டு அன்பிற்கு அளவில்லா கோபம் வந்தது. ஏன் கோபம் என்பதை அவனால் அறியமுடியவில்லை. ஆனால் நெஞ்சம் தீப்பிடித்ததை போல எரிந்தது. சஞ்சயின் கழுத்தை பற்றி தூர எறிய வேண்டும் போல இருந்தது.

"நான் சஞ்சய்.. பி.எஸ்சி பிசிக்ஸ் தேர்ட் இயர்.." என்றபடி சஞ்சய் அபிநயாவின் முன்னால் கையை நீட்டினான்.

அபிநயா அவனையும் அவனது கையையும் மாறி மாறி பார்த்தாள்.

"இப்ப நான் என்ன பண்ணனும்.? உன்னோடு ஹேண்ட் ஷேக் பண்ணனுமா.?" என்றவளின் மூக்கின் நுனி சிவந்து போனது.

பற்களை கடித்தபடி அவனின் அடிவயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டாள். சஞ்சயின் நண்பர்களும் மீனாவும் அதிர்ச்சியில் உறைந்தனர். குணா அதிர்ச்சியில் தன் நண்பனின் தோளில் முகத்தை புதைத்தான்.

"காலேஜ் முடிஞ்சி போச்சி.. இதுக்கு மேலயாவது ஹாஸ்டலுக்கு போய் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்ன்னு அவசர அவசரமா போய்ட்டு இருந்தவளை நிறுத்துனதும் இல்லாம உனக்கு ஹேண்ட் ஷேக் வேற பண்ணனுமா.?" என கேட்டவள் அவனின் தலைமுடியை பற்றினாள்.

தன் தலைமுடியை பற்றியவளின் கையை பிடித்து வளைத்தான் சஞ்சய். அவளின் பின்னந்தலையை பற்றி அவளை தன்னருகே இழுத்தான்.

அன்பு குணாவை விலக்கி நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி நடந்தான்.

"பொண்ணு மாதிரி நடந்துக்க.." என்றான் சஞ்சய். அவனின் வார்த்தைகள் முடியும் முன்பே அவனின் தாடையில் ஒரு குத்து விட்டு விட்டாள் அபிநயா.

முன்னால் நடந்துக் கொண்டிருந்த அன்புவின் கையை பற்றி நிறுத்தினான் அன்பு.

"நீ ஒருத்தன்தான் குறையா.?" என்று நண்பனிடம் கிண்டலாக கேட்ட குணா "இன்னைக்கு குட்டச்சிக்கிட்ட மாட்டி செத்தான்டா ஒருத்தன்.." என்றான்.

"மண்ணாங்கட்டி.. நான் பொண்ணு மாதிரி நடந்துக்கறேன்.. நடந்துக்காம போறேன்.. உனக்கு என்னடா வருது பொறம்போக்கு.? நான் பாட்டுக்கு என் வழியில போயிட்டு இருக்கேன்.. நீயா வந்து வம்பு பண்ணிட்டு என்னை பொண்ணு மாதிரி நடந்துக்க சொல்ற..?" என கேட்ட அபிநயா சஞ்சயின் மூக்கின் மீது குத்தினாள்.

அவளை நோக்கி நடந்த சஞ்சயின் நண்பர்களை முறைத்தவள் "எவனாவது பக்கத்துல வந்தா சாவடி அடிப்பேன்.. மரியாதையா தூரமா போயிடுங்க.." என்றவள் தன் எதிரில் இருந்தவனின் உச்சி முடியை பற்றினாள். அவனின் தாடையில் விழுந்த குத்து அவனை அரை மயக்கத்திற்கு இழுத்து சென்றிருந்ததால் அவனால் சட்டென யோசித்து செயல்பட முடியவில்லை. அது இவளுக்கு வசதியாகி விட்டது.

"பொண்ணுக்கான வரையறையை கேட்டாலே எனக்கு கொலை காண்டாகும்.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னை பார்த்தே இந்த வார்த்தையை சொல்லி இருப்ப.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்டு தலையாட்டி நடந்தாதான் அவ பொண்ணுங்கன்னா அடேய் ஈரவெங்காயம் எனக்கு அந்த பட்டமே தேவையில்லடா.." என்றவள் அவனின் முடியை இறுக்க பற்றி அவனை ஒரு சுற்று சுற்றினாள். இறுக்க கண்களை மூடியிருந்த சஞ்சய்க்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது.

"ரொம்ப பெரிய தப்பு பண்றடி.." என்றவனின் முன்னால் நின்று அவனை கவனித்து பார்த்தாள்.

"நான் வேணா காலேஜ் கரஸ்க்கிட்ட கம்ப்ளைண்ட் தரட்டா.?" என்றாள் அப்பாவி போல.

சஞ்சய் அவளை முறைத்தான்.

"ஒரு பொண்ணை நிறுத்தி ஈவ்டீசிங் பண்ணி இருக்க.. லவ் டார்ச்சர் செஞ்சி மன ரீதியா கஷ்டம் தந்திருக்க.. தலைமுடியெல்லாம் பிடிச்சி இழுத்து உடல்ரீதியா தாக்கி இருக்க.." என்றவள் அவனின் தொடையில் ஒரு உதையை தந்து விட்டு அவனை தூர தள்ளினாள்.

"நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல.. எப்பவும் ஓரமாவும் தூரமாவும் மட்டும் போ.. என் வழியில் கிராஸ் பண்ணாத.." என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள். பயந்து போய் நின்றிருந்த மீனா தோழியின் பின்னால் ஓடினாள்.

சஞ்சய் தன்னை சுற்றியிருந்த கூட்டத்தை பார்த்தான். அந்த கல்லூரியில் கடந்த ஒரு வருடமாக நாட்டாமை செய்து வருகிறவன் அவன். அவனின் கெத்தை விடும்படி ஒரு சம்பவம் கூட இது வரையிலும் நடந்ததே இல்லை. அவன் தன் வாழ்நாளில் அதுவும் ஒரு பெண்ணிடம் அடி வாங்கியது இன்றுதான். அவனை சுற்றி இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது.

சஞ்சயின் நண்பன் ஒருவன் அவனருகே வந்து அவனின் தோளை பற்றினான். "அவளுக்கு சரியான பாடம் கத்து தரணும்டா.." என்றான்.

ஆமென தலையசைத்தான் சஞ்சய். "அவ மேல அவ்வளவு ஆத்திரம்.. அவளை கொல்லணும் போல இருக்கு. ஆனா.. ஆனா அவளை பார்க்கும்போதெல்லாம் அவளை பிடிச்சிருக்கு எனக்கு.. அவளோட கோபம் எனக்கு கோபம் தர அதே நேரத்துல க்யூட்டாவும் இருக்கு.. என்னோட கெத்துக்கு இவதான் சரியா வருவா.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1148

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN