சிக்கிமுக்கி 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த அபிநயாவை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயின் மீது யாரோ வேகமாய் மோதிவிட்டு சென்றதில் சஞ்சய் நின்ற இடத்திலேயே தடுமாறி கீழே விழுந்தான்.

கீழே விழுந்த அதே வேகத்தில் எழுந்து நின்றான் சஞ்சய். அவனை தாண்டி சென்றுக் கொண்டிருந்தனர் அன்புவும் குணாவும்.

"டேய் என்னையே தள்ளி விடுற அளவுக்கு.." சஞ்சய் பாதி பேசிக் கொண்டிருக்கும்போதே புயல் போல திரும்பி வந்த அன்பு சஞ்சயின் நெஞ்சில் இரு கைகளையும் பதித்து அவனை அப்படியே பின்னால் தள்ளினான். ஒற்றை நொடியில் நடந்தது இந்த சம்பவம். சுற்றி இருந்தவர்கள் நடந்தது என்னவென்று தங்களின் மனதுக்குள் திரும்ப யோசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்‌.

"அடப்பாவி இப்பதானடா என் பக்கத்துல இருந்த.. எப்படா அங்கே போன.?" என்று குணா குழம்பிக் கொண்டிருந்தான்.

தரையில் விழுந்த சஞ்சய் மீண்டும் எழ முயற்சிக்கும்போது அவனுக்கு நேர் மேலாக குனிந்து அவனின் சட்டை காலரை பற்றினான் அன்பு.

"லாஸ்ட் வார்னிங்.. அவளை டிஸ்டர்ப் பண்ணாத.. அவளை நினைக்காத.. அவளை பத்தி பேசாத.. அவ பேரை கூட சொல்லாத.. இல்லன்னா கொன்னுடுவேன்.." ஒற்றை கையால் அவனின் சட்டை காலரை இறுக்க பற்றியிருந்தவன் மறு கையின் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தான். அவனின் இரு கண்களின் சிவப்பை கண்டு சஞ்சய் வியந்து போனான். அன்புவின் முகத்தில் இருந்த கோபத்தை அவனால் விவரிக்க முடியவில்லை. தன் பொம்மையை விட்டு தராத குழந்தையின் பிடிவாதமும், தன் நாட்டின் எல்லையில் புக முயன்ற தீவிரவாதியின் மீது கொண்ட வெறியும் அவனின் கண்களில் தெரிந்தது. உண்மையில் அவனின் கோபம் சஞ்சயை கொஞ்சமாக பயமுறுத்தி விட்டது.

அவனும் அபிநயாவும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறியவில்லை சஞ்சய். பார்த்தவுடன் பிடித்துவிட்ட பெண்ணாயிற்றே என்று அபிநயா மீது தன் காதலின் முதல் சுவாசத்தை வீச எண்ணினான் அவன். ஆனால் அவளை அன்பு எவ்வளவு ஆழமாக விரும்புகிறான் என்றது புரிந்ததும் தான் செய்தது தவறோ என்ற குற்ற உணர்ச்சி பிடித்துக் கொண்டது சஞ்சய்க்கு.

சஞ்சய் தன் யோசனையில் இருக்கும்போதே அவனை விட்டுவிட்டு எழுந்து நின்றான் அன்பு.

சஞ்சயின் நண்பர்கள் ஓடிவந்து அவனை தூக்கி நிறுத்தியபோது அன்பு அங்கிருந்து வெகுதூரம் சென்று விட்டிருந்தான்.

"இவன் என்னடா இவ்வளவு துள்ளுறான்.? ரொம்ப லவ் பண்றோனோ.. நான்தான் தேவையில்லாம இடையில் புகுந்துட்டேன் போல.." தன் சட்டை காலரை சரி செய்துக் கொண்டே சொன்னான் சஞ்சய்.

"எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.. காலையில நீ அவளை பத்தி வர்ணிச்ச போதுதான் அவன் உன்னை அடிச்சான். நாமதான் காரணத்தை சரியா புரிஞ்சிக்காம போயிட்டோம் போல‌‌. இவனை நாம அடிச்சோம்ன்னுதான் அவளும் உன்னை அடிக்க வந்தா.." என்றான் அருகில் இருந்த நண்பன் ஒருவன்.

மற்றொருவன் சுற்றி இருந்தவர்களை கண்டுவிட்டு அங்கிருந்து செல்ல சொல்லி சைகை காட்டினான். அங்கிருந்தவர்கள் சென்ற பிறகு சஞ்சயை பார்த்தான். "நாமதான் தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணிட்டோம் போல.. ஒரு லவ்வர்ஸை பிரிச்ச பாவம் நமக்கு வேணாம்.. அவ உன்னை அடிச்சது தப்பு. அதுக்கு அவளை பழி வாங்கிக்கலாம்.. ஆனா அவங்களுக்கு இடையில் போகாதே நீ.." என்றான் அவன்.

சஞ்சய் சரியென தலையசைத்தான். ஒற்றை நொடி செய்கையால் கூட ஒருவனது காதலின் ஆழத்தை அறிய முடியும் என்று அன்றுதான் சஞ்சய்யும் உணர்ந்தான்.

"அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா.. இவனை போலதான் பேயா லவ் பண்ணனும்.." என்றான் சஞ்சய்.

நண்பர்களும் ஆமென தலையசைத்தனர்.

ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்ததும் தன் பேக்கை தூர வீசிய அன்புவிற்குள் குறையாத கோபம் இருந்தது. பற்களை இறுக்கமாக கடித்தபடி அருகே இருந்த சுவற்றில் வலது கை விரல்களை மடக்கி ஓங்கி குத்தினான்.

அறைக்குள் நுழைந்த குணா இவனை கண்டுவிட்டு "டேய் மெண்டல்.." என்றான்.

அன்பு இவன் பக்கம் திரும்பினான்.

"அவதான் உனக்கு எதிரியாச்சே.. அவளை எவன் லவ் பண்ணா உனக்கு என்ன போ.." மீதியை அவன் கேட்கும் முன்பே அவனின் அருகே வந்து நின்று விட்டான் அன்பு. அவன் வந்த வேகத்தை கண்டு பயந்த குணா ஓரடி பின்னால் நகர்ந்தான். சாத்தியிருந்த கதவில் மோதியது அவனது முதுகு.

"அவளை எவனும் காதலிக்க கூடாது.. அவளை யாரும் உரிமை கொண்டாட கூடாது.. அவளோட நிழலை கூட எவனும் தொட கூடாது.." என்று கத்தினான் அடிக்குரலில்.

சில நொடிகள் குணாவும் திகைத்து நின்று விட்டான். அன்புவின் கோபத்தை கண்டு சஞ்சயை போலவே இவனும் கொஞ்சமாக பயந்தும் விட்டான். ஆனால் சில நொடிகளிலேயே தெளிந்து விட்டான் இவன். நண்பனை பிடித்து தன் முன்னால் இருந்து தள்ளி நிறுத்தினான்.

"அரை மெண்டல்.. சைத்தானே.. பேய் பிடிச்சவனை போல பேசி ஏன்டா என் உயிரை வாங்குற.?" என கேட்டவன் நண்பனை தாண்டி சென்று இரண்டடி தள்ளி நின்றான்.

"நீ அவளை லவ் பண்ணல.. ஆனா அவளை வேற யாரும் லவ் பண்ண கூடாது.. நான் கூட நீ சண்டை போட்டதை பார்த்துட்டு உனக்கு அவ மேல ரகசிய காதலோன்னு நினைச்சேன்‌. ஆனா நல்லா யோசிச்சி பார்த்தாதானே தெரியுது.. அவளை யாராவது லவ் பண்ணிட்டா அவ ஹேப்பியா இருப்பா. அது உனக்கு பிடிக்காது. அதுக்காகதான் ஆரம்பத்திலேயே வெட்டி விட பார்த்திருக்க.. தன் எதிரி எந்த விதத்திலும் சந்தோசமா இருக்க கூடாதுன்னு நினைக்கிறதுதானே நமக்கெல்லாம் நல்ல எண்ணம்.?" என்று பொய் ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு சென்று தன் படிப்பக மேஜையின் முன் அமர்ந்தான் குணா.

குணாவிற்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்த அன்பு தன் கண்களை மெதுவாக மூடினான். தனக்கு ஏன் இந்த கோபம் என்று குழம்பினான். அவளை யார் காதலித்தால் தனக்கு என்ன என்று யோசித்தான். அபிநயாவோடு சண்டையிட்ட தருணங்கள் வரிசையாக நினைவில் வந்தது. தன் வாழ்வில் அவளோடு தான் சண்டையிட்ட நேரங்கள் மட்டும்தான் தான் வாழ்ந்ததற்கே அடையாளம் என்று தோன்றியது அவனுக்கு.

'அவளோடு ஏன் சண்டையிடுகிறோம்.?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். தான் அவளோடு சண்டையிடும்போது மட்டும்தான் அவளோடு நெருக்கமாக இருக்கிறோம், அவளோடு சண்டையிடும் போது மட்டும்தான் அவளோடு வாழ்கிறோம் என்று சொன்னது அவனின் மனம். இந்த கடைசி பத்து வருடத்தில் அவளை பற்றி யோசிக்காமல் இருந்த நொடிகள் உண்டா என்று யோசித்தான். ஒரு நொடிகள் கூட இல்லை. கனவில் கூட அவளோடுதான் சண்டை போட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நொடியிலும் அவனின் முழு சிந்தையிலும் அவளை பற்றிய யோசனைகள் மட்டும்தான் இடம் பெற்றிருந்தன. அவளின் சிந்தையிலிருந்து அவனது மூளையை தனியே பிரித்து எடுக்க முடியாது. அந்த அளவிற்கு அவனது மூளையில் முழுதாக பதிந்திருந்தது அவளுடைய முகமும் குரலும் வாசமும்.

யோசித்து யோசித்து தலைவலி வந்தது போலிருந்தது அவனுக்கு.

தன் குழப்பத்தை தீர்த்து கொள்ள தோணாமலேயே வந்து தன் கட்டிலில் ஏறி படுத்தான் அன்பு.

"சாரிடா.. தேவையில்லாம உன்னோடு சண்டை போட்டுட்டேன்.." என்று தன் நண்பன் புறம் திரும்பி சொன்னான்.

கோபத்தோடு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த குணா இவனை திரும்பி பார்த்து முறைத்தான். "என்கிட்ட சாரி கேட்டது போல உன்னால அவக்கிட்ட சாரி கேட்க முடியுமா.?" என்றான்.

அன்பு கண்களை மூடினான். இல்லையென மறுத்து தலையசைத்தான்.

"உங்களுக்கு என்னதான் பிரச்சனை‌.? காரணமே இல்லாம எதுக்கு சண்டை போடுறிங்க.?" என்றான் அவன் எரிச்சலோடு.

அன்பு தன் கீழுதட்டை கடித்தபடி மேலே தெரிந்த கூரையை பார்த்தான். "தெரியலடா.." என்றான் தலையை அசைத்தபடி.

"தூரமா இருக்கும்போது கோபம் வரது இல்ல.. ஆன அவளை பக்கத்துல பார்த்தாலே போதும் பயங்கர கோபம் வருது. செம கடுப்பு.. அவ்வளவு எரிச்சல்.." என்றவன் பெருமூச்சோடு தன் தலையை கோதினான்.

"என்னாலயே என்னை புரிஞ்சிக்க முடியலடா.. அவளை பத்தி யோசிக்காம இருக்க முடியல. அவளோடு சண்டை போடாம இருக்க முடியல. அவளை நினைச்சா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு‌. அவளை நினைக்கலன்னா செத்து போன மாதிரி இருக்கு.." என்றான் வேதனை குரலில்.

குணா அதிர்ச்சியோடு நண்பனை பார்த்தான். அவனுக்கே தன் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "என்னடா இப்படி பேசி குழப்பற.." என்றான்.

"உன்னால என்னை புரிஞ்சிக்க முடியாதுடா.." என்ற அன்பு சுவரின் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டான். காலையில் அவளை நெருக்கத்தில் பார்த்தபோது இவனோடு ஒட்டிக் கொண்டு விட்ட அவளின் வாசம் இப்போதும் சுவாசிக்கும் இடமெல்லாம் கலந்து இருப்பது போல தோன்றியது. அவனின் நுரையீரலில் காற்று புகும் ஒவ்வொரு முறையும் அந்த வாசமும் கலந்து உட் செல்வது போல இருந்தது.

"ம்ப்ச்.." நெற்றியை தேய்த்தபடி கண்களை மூடியவன் மீண்டும் நேராய் படுத்தான். அபிநயாவின் பின்னலை பிடித்தபடி சஞ்சய் அவளை மிரட்டியது அவனின் மூடிய விழிகளில் காட்சியாக வந்தது. அந்த நொடியில் அவளின் முகத்தில் தெரிந்த தெரிந்த வலி இவனின் எண்ணத்தில் அழியாத வடுவாக மாறி நின்றது. அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தின் மீது வைத்து மூடிக் கொண்டவன் அந்த இருளில் தன்னையே தொலைக்க வழி தேடினான்.

அபிநயா தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். காலையில் அன்புவின் கைவிரல் நகம் பட்டு உண்டாகிய காயங்கள் முழுதாக ஆறி விட்டிருந்தன. சிறிய வடுக்கள் மட்டும் நாளை வரை இருக்கும் என்று புரிந்துக் கொண்டவள் அந்த வடுக்களின் மீது ஒற்றை விரலை வைத்து தேய்த்தாள்‌.

"காலையிலதான் அவன் உன்னை கிள்ளி வச்சான். அதுக்குள்ள எப்படி அதெல்லாம் சரியாச்சி.?" குழப்பமாக கேட்டாள் மீனா.

"அப்படிதான்ப்பா.. அவன் என்னை எவ்வளவு அடிச்சாலும் சீக்கிரம் சரியா போயிடும்.. அவனுக்கும் அப்படிதான்.. இல்லன்னா இரண்டு பேரும் வருசம் முழுக்க ஹாஸ்பிட்டல்லயே இல்ல குடியிருந்திருக்கணும்.?" அபிநயா நகம் பட்ட வடுக்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொன்னாள்.

"சூப்பர் பவர் இருக்கா உங்களுக்கு.?" ஆச்சரியமாக கேட்ட தோழியை பார்த்து சிரித்தாள் அபிநயா.

"எனக்கு சூப்பர் பவர் இருந்திருந்தா இன்னேரம் அவனை கொன்னிருப்பேன்.." என்றாள் கண்ணடித்தபடி.

அவள் சொன்னது கேட்டு மீனா விழிகளை சுழற்றினாள். "ஓவர் குசும்புதான்.." என்று முனகினாள்.

"இப்படி சண்டை போட்டுக்கறதுக்கு பதிலா இரண்டு பேரும் அன்போடு பழகுங்கப்பா.. அன்பே சிவம்.. கேள்விப்பட்டது இல்லையா.?" என்றாள்.

"வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு.. இதை கேள்விப்பட்டிருக்க இல்ல.? அந்த செங்கல் சைக்கோவை விடவும் எனக்குத்தான் வல்லமை அதிகம். அப்புறம் ஏன் நான் பயந்து அவனுக்கு தாழ்ந்து போகணும்.?" என கேட்டாள் அவள்.

மீனா மானசீகமாக நெற்றியிலும் அடித்துக் கொண்டாள். "அன்பு காட்டுறதுல வல்லமை காட்டினா அது ஓகே.. சண்டை போடுறதுல வல்லமையை காட்டி இரண்டு பேரும் குத்து சண்டை போட்டியிலயா கலந்துக்க போறாங்க.?" என்று முணுமுணுத்த மீனா இனி வரும் நாட்களில் இன்னும் எத்தனை பிரச்சனைகளை பார்க்க வேண்டுமோ என்று சலிப்போடு யோசித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1065

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN