சிக்கிமுக்கி 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலை நேர அலார சத்தத்தில் கண் விழித்தாள் மீனா.

'நல்ல தூக்கம்..' என நினைத்தபடி எழுந்து அமர முயன்றவளை எழ இயலாதபடி எதுவோ தடுத்தது. அதன் பிறகுதான் பலமான ஏதோ ஒன்று தன்னை அழுத்திக் கொண்டிருப்பதையே உணர்ந்தாள் அவள். பார்வையை திருப்பி பார்த்தாள். மீனாவின் அருகே படுத்திருந்த அபிநயா சிறு குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் பாதி உடல் மீனாவின் மீதுதான் இருந்தது.

"அப்பா.. மூச்சி முட்டுதே.. பார்க்க ஓமகுச்சி மாதிரி இருந்தாளே.! ஆனா இப்படி பாதி ஏறி படுத்ததுக்கே யானையோட காலுக்கடியில் சிக்கின மாதிரி இருக்கே.. எவ்வளவு பாரம்.." என திணறலாக சொன்ன மீனா அபிநயாவின் வயிற்றுக்கடியில் சிக்கியிருந்த தன் கையை மிகவும் சிரமப்பட்டு அரை நிமிட போராட்டத்திற்கு பிறகு உருவினாள்.

"மிஷின்ல சிக்குன கரும்பு சக்கை மாதிரி இருக்கு என் கை.." என்று புலம்பியவள் அபிநயாவின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றாள்.

"அபி எழுந்திரு.." என்றாள்.

அபிநயா உறக்கத்திலேயே இவளின் தலையில் பட்டென்று தட்டினாள். "இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடு தீபக்.." என்றாள் எரிச்சல் குரலில்.

அடிப்பட்ட தன் தலையை தேய்த்துக் கொண்டாள் மீனா. "எந்திரி புள்ளை.." என்று அபிநயாவின் தோளில் வேகமாக ஒரு அடியை விட்டாள். அபிநயா அரக்க பரக்க எழுந்து அமர்ந்தாள்.

"என்ன ஆச்சி.?" என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

"இன்னும் கொஞ்ச நேரம் நீ எழாம இருந்திருந்தா நான் மூச்சி முட்டியே செத்திருப்பேன். இதான் ஆகியிருக்கும்.." என்றாள் மீனா.

அபிநயா அவசரமாக அந்த கட்டிலை விட்டு கீழே இறங்கி நின்றாள்.

"சாரி மீனு.." என்றாள் கொஞ்சல் குரலில். நேற்று நடு இரவில் தூரமாக ஒரு நாய் குரைத்ததை கேட்டு கண் விழித்தவள் பேயை பார்த்துதான் நாய் குரைக்கிறதோ என்று எண்ணி பயந்து அதே வினாடியில் எழுந்து வந்து மீனாவின் அருகே படுத்துக் கொண்டாள்.

மீனா தன் இடுப்பை பிடித்துக் கொண்டே கட்டிலின் மறுபக்கத்தில் இறங்கி நின்றாள். உடம்பெல்லாம் பயங்கரமாக வலித்தது அவளுக்கு.

"நான் என் வீட்டுல எங்க அம்மா பக்கத்துல கூட படுத்து தூங்கியது கிடையாது. எப்பவும் என் கட்டில்ல நான் மட்டும் ஒத்தையா ராஜாங்கம் பண்ணுவேன்.. என்னையே இப்படி லாரி டயர்ல மாட்டின எலி குட்டியை போல கசக்கிட்டியே.." என்றாள் தன் கைகளை பிடித்து விட்டுக்கொண்டே.

அபிநயா சுண்டு விரல் நகத்தை கடித்தபடி அவளை பார்த்தாள். "சாரி.." என்றாள் மீண்டும்.

"முத தடவைங்கறதால இந்த முறை போனா போகுதுன்னு விடுறேன்.. ஆனா இன்னொரு முறை தயவுசெஞ்சி என் கட்டில்ல வந்து படுக்காத.. ப்ளீஸ்.." என்ற மீனா தன் பேஸ்ட் பிரஸை எடுத்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

அபிநயா தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். "இன்னமும் பேய்க்கு பயந்து இப்படி என் மானத்தையே வாங்குறியே அபி.." என்றாள் புலம்பலாக.

அபிநயாவும் மீனாவும் கல்லூரிக்கு சென்றபோது அங்கே அவர்களை கடந்துச் சென்ற அனைவரும் இவர்களை வித்தியாசமாக பார்த்தனர். நேற்று மாலை அபிநயா சஞ்சய்யோடு போட்ட சண்டையும் அன்பு சஞ்சய்யோடு போட்டுக் கொண்ட சண்டையும் இன்று காலையிலேயே அந்த கல்லூரி முழுக்க பரவி விட்டிருந்தது. அதனால்தான் அனைவரும் அவளை வித்தியாசமாக பார்த்தபடி கடந்தனர்.

"எதுக்கு இந்த பார்வை.? என் முகத்துல எதாவது ஒட்டியிருக்கா.?" குழப்பத்தோடு கேட்டாள் அபிநயா. இல்லையென தலையசைத்தாள் மீனா.

'வேற எதுக்கு இவங்க என்னை இப்படி பார்க்கறாங்க.?' என்று அபிநயா குழப்பமாக யோசித்தபோது "ஏய் குள்ள பாப்பா.. இங்கே வா.." என்று அருகே இருந்த கல்லூரி கட்டிடத்தின் அரை ஆள் உயர வராண்டாவின் நுனியில் அமர்ந்தபடி அழைத்தான் சஞ்சயின் நண்பன் ஒருவன். அவனருகே அவனது மற்ற நண்பர்களும் சஞ்சயும் அமர்ந்திருந்தார்கள்.

அபிநயா மீனாவை திரும்பி பார்த்தாள். இருவரது உயரத்தையும் ஒப்பிட்டாள். மீனாவை விடவும் தான் குள்ளமாக இருப்பது உறுத்தலாக தெரிந்தது அபிநயாவிற்கு. அந்த உறுத்தலை கோபமாக மாற்றியவள் அந்த சீனியர்களின் முன்னால் சென்று நின்றாள்.

"ஏன்டா என்னை பார்த்து குள்ளம்ன்னு சொன்ன.?" என்றாள் கோபமாக.

"பின்ன அந்த பொண்ணை பார்த்து குள்ளம்ன்னு சொல்ல முடியுமா.? யார் குள்ளமா இருக்காங்களோ அவங்களைதான் குள்ளம்ன்னு சொல்ல முடியும்.?" என்றான் அவளை அங்கே அழைத்தவன்.

அபிநயாவின் மூச்சுக்காற்று கட்டுண்ட காளையை சீறியது.

"வாடா போடான்னு கூப்பிட்டன்னா பல்லை உடைச்சிடுவேன்.. மரியாதையா அண்ணான்னு கூப்பிடு.." என்றான் இன்னொருவன்.

அபிநயா தன் எதிரில் இருந்தவனை பந்தாட நினைத்த நேரத்தில் "டென்சன் ஆகாத.. உன்னை லவ் பண்ணலாம்ன்னு இருந்த என் எண்ணத்தை நான் வாபஸ் வாங்கிட்டேன்.. ஆனா நேத்து நீ என்னை அடிச்சது ரொம்ப தப்பு.. அதுக்கு மட்டும் சாரி கேட்டுட்டு இங்கிருந்து போ.." என்றான் சஞ்சய் சமாதானம் செய்வது போல.

அபிநயாவிற்கு கொஞ்சம் ஆச்சரியமும் கொஞ்சம் கோபமும் வந்தது.

"உன் எண்ணம் மாறிடுச்சா..?" என்றாள் வியப்பாக.

"அந்த பையனும் நீயும் லவ் பண்ணும்போது நான் குறுக்க வர கூடாதுன்னுதான் ஒதுங்குறேன்.. நீ சும்மா டைம் வேஸ்ட் பண்ணாம சாரி கேட்டுட்டு கிளம்பு.." என்றான் சஞ்சய்.

"நான் எந்த தப்பும் பண்ணல.. அதனால நான் சாரியும் கேட்க மாட்டேன்.. அதே போல நான் எவனையும் லவ் பண்ணவும் இல்ல.. வீணா புரளி கிளப்பி விட்டுட்டு இருக்காம நல்லபடியா படிச்சி முன்னேறுற வழியை பாருங்க.." என்று அங்கிருந்த அனைவருக்கும் சேர்த்து அறிவுரை வழங்கிவிட்டு திரும்பி நடந்தாள் அபிநயா.

சஞ்சயும் நண்பர்களும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

"அவன் ஒன்சைடா லவ் பண்றான் போல.." என்றான் நண்பன் ஒருவன்.

"ஒன்சைடுக்கே இவ்வளவு லவ்வா அவனுக்கு.? அவனை நினைச்சா எனக்கு புல்லரிக்குதுடா.." என்றான் சஞ்சய் நேற்றைய நினைவில்.

நண்பன் ஒருவன் அவனை சந்தேகமாக பார்த்தான். "நீ இந்த புள்ளையதானே லவ் பண்றதா சொன்ன.? ஆனா ஏன்டா அவனை லவ் பண்றவனை மாதிரி ஒரு மாதிரி குரல்ல பேசுற.?" என கேட்டான்.

சஞ்சய் பற்களை கடித்தபடி நண்பனை பார்த்தான். "அவனோட லவ்வுல இருக்கற பீலிங்க்ஸ் உனக்கு கொஞ்சமாவது புரியுதா.? அவனை நேத்துல இருந்து ரொம்ப பிடிச்சி போச்சிடா.. ஒரு காதல் காவிய கதாநாயகனை போல தெரியறான் என் கண்ணுக்கு.." என்று வியப்பு குறையாமல் சொன்னான்.

இவன் சொன்னதில் நண்பர்களுக்கும் குறையாத வியப்புதான் உண்டானது. நேற்று அன்பு தன்னிடம் கோபப்பட்டதையே நினைத்துப் பார்த்தான் சஞ்சய்.

இவன் இதை நினைத்துக் கொண்டிருந்த நேரத்திலேயே கல்லூரி வளாகத்தில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென எங்கோ ஓடினார்கள்.

"எல்லோரும் எங்கே போறாங்க.?" என கேட்டபடி சஞ்சய் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு கீழே இறங்கினான். மாணவர்கள் கூட்டம் சென்ற திசையில் சென்றான். நண்பர்களும் அவனோடு சேர்ந்து கிளம்பினர்.

வட்டமாக கூடியிருந்த மாணவர்களை விலக்கிக்கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான் சஞ்சய்.

"கோணக்காலா.. உன்னை கொல்லாம விட மாட்டேன்டா.." என்று அன்புவின் வயிற்றின் மீது அமர்ந்தபடி அவனின் நெஞ்சின் மீது மாறி மாறி தன் இரு கைகளாலும் குத்திக் கொண்டிருந்தாள் அபிநயா. அவளின் மடங்கிய கை விரல்கள் அன்புவின் நெஞ்சை தொடும் ஒவ்வொரு முறையும் படீர் படீர் என்று சத்தம் கேட்டது.

"அபி எழுந்து வாடி.." என்றபடி சென்று அவளை இழுத்த மீனாவை சிறிதும் கண்டுக்கொள்ளாத அபிநயா அன்புவை அடிப்பதிலேயே கவனமாக இருந்தாள். யாராவது வந்து இவர்களை விலக்குவார்களா என்று சுற்றியிருந்த கூட்டத்தை பார்த்தாள் மீனா. அனைவரும் சண்டையை உன்னிப்பாக கவனித்தார்களே தவிர அவர்களை விலக்கி விட நினைக்கவில்லை.

சஞ்சய் அதிர்ச்சியோடு அபிநயாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அபிநயாவை தூர தள்ளிவிட்டு அவளின் அருகே மண்டியிட்ட அன்பு அவளின் தலைமுடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்தான்.

"குட்டச்சி.. உன் பல்லை உடைக்கறேன் இருடி.." என்று சீறியவன் அவளின் மூக்கின் மீது ஒரு குத்து விட்டான்.

அபிநயா சட்டென தன் காலை மடக்கி எழுந்தாள். அன்புவின் வயிற்றில் ஓங்கி உதைத்தாள். அன்பு அவளை அப்படியே பின்னால் தள்ளினான். இவனும் அவள் மீதே விழுந்தான். அவளின் தோளை பிடித்து கிள்ளினான். மீனா பயந்து போய் இருவரை விட்டும் தூர சென்று கூட்டத்தோடு கூட்டமாக நின்றுக் கொண்டாள். இவர்களின் சண்டையை கண்டு அவளின் கைகளும் கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தன. சில நொடிகள் கடந்தபோது அவளருகே மூச்சிரைக்க வந்து நின்றான் குணா.

"எருமை.. கழுதை.. கோணக்காலா.. பகல் கொலைக்காரி.. செங்கல் சைக்கோ.. குட்டச்சி.." என்ற வார்த்தைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடம் இருந்தும் கேட்டது.

"இவன் காதல் காவியத்தோட கதாநாயகனா.?" சஞ்சயின் நண்பன் ஒருவன் கிண்டலாக கேட்டான். சஞ்சய் அன்புவையும் அபிநயாவையும் விசித்திரமாக பார்த்தான்.

"நீ முன்னாடி போடா.. நான் என் வாட்சை தேடி எடுத்து கட்டிக்கிட்டு அஞ்சி நிமிசத்துல வந்துடறேன்னுதானே சொன்னேன்.? அதுக்குள்ள என்ன சண்டை வந்தது இவங்களுக்குள்ள.?" குழப்பமாக கேட்டபடி அவர்களை பார்த்தான் குணா.

"அது.. இவளும் நானும் கிளாஸ்க்கு போய்ட்டு இருந்தோம். அப்ப அன்பு எங்களை கிராஸ் பண்ணி போனான். 'டேய் செங்கல் சைக்கோ நீ என்னை குட்டச்சின்னு கூப்பிட்டதாலதான் எல்லோரும் என்னை அதே பேரை சொல்லி கூப்பிடுறாங்க'ன்னு சொல்லி தன் பேக்கால் அவன் முதுகுல அடிச்சிட்டா இவ.. 'நீ குட்டச்சிதானடி.?'ன்னு கேட்டு அன்புவும் இவளை திருப்பி அடிச்சான்.. அவ்வளவுதான் இரண்டே செகண்ட்ல இரண்டு பேரும் தரையில புரண்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க.." என்று அவர்களை பார்த்தபடியே சொன்னாள் மீனா.

மீனா இதை சொல்ல சொல்ல அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த குணா எதேச்சையாகதான் அவளின் நடுங்கும் கை விரல்களை கவனித்தான். ஒரு நொடி மூச்சி விட மறந்துவிட்டான் அவன். அவளின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தான். அவளின் அதரங்கள் கூட லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது குணாவிற்கு. தன்னை அறியாமலேயே அவளின் கையை பற்றினான். அவளின் நடுங்கும் கை விரல்களின் இடையே தன் கை விரல்களை கோர்த்தான். மீனா அதிர்ச்சியோடு இவனை திரும்பி பார்த்தாள். இணைந்திருக்கும் கரத்தை பார்த்தாள்.

"அவங்க இப்படித்தான் தினமும் சண்டை போடுவாங்க.. இன்னைக்கு சப்பை கட்டு கட்டவாவது ஒரு காரணம் கிடைச்சிருக்கு. பல நாளா எந்த காரணமுமே இல்லாம சண்டை போட்டிருக்காங்க.." என்றான் குணா.

மீனாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. "அப்படின்னா உடனே போய் அவங்களை விலக்கி விடுங்க.." என்றாள்.

குணா சிரித்துக்கொண்டே தன் கையை மேலே தூக்கி காட்டினான். கை முட்டியிலிருந்து கொஞ்சம் மேலே இருந்த இடத்தில் ஏழெட்டு தையல் தழும்புகள் இருந்தது. மீனா குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

"இவங்க சண்டை போடுறதை பார்க்காம பிரிச்சி விட போனதுக்கு எனக்கு கிடைச்ச சன்மானம் இது. முள் வேலியோரம் சண்டை போட்டுட்டு இருந்தவங்க பிரிச்சி விட போன என்னை பிடிச்சி முள் வேலியில் தள்ளி விட்டுட்டாங்க. சைடா விழுந்ததால ஒரு கை காயத்தோடு போச்சி. நேரா விழுந்திருந்தா முகத்துல எத்தனை ஓட்டை ஆகியிருக்கும்ன்னே தெரியாது.." என்றவன் மீனாவின் கையை விட்டுவிட்டு தன் சட்டையை மேலே தூக்கினான். மீனா அவசரமாக மறுபுறம் திரும்பினாள்.

"நான் ஆபாசம் காட்டலைங்க. நானும் அக்கா தங்கச்சியோடு பிறந்தவன்தான்.." என்று பரிதாப குரலில் குணா சொல்லவும் இவன் பக்கம் திரும்பினாள் அவள். அவனின் இடுப்பில் நான்கு இன்ச் நீளத்திற்கு தழும்பு ஒன்று இருந்தது. 'என்ன ஆச்சி.?' என கேட்க தோன்றியது அவளுக்கு. ஆனால் அவள் கேட்கும் முன்பு அவனே சொல்ல தொடங்கினான்.

"மூணு வருசம் முன்னாடி எங்க ஸ்கூல்ல புதுசா ஒரு கட்டிடம் கட்டிட்டு இருந்தாங்க. எப்படி இவங்க மாடிக்கு போனாங்க. எப்படி சண்டை போட ஆரம்பிச்சாங்கனே தெரியல. பயங்கரமா கட்டி புரண்டுட்டு இருந்தாங்க.. மாடி கைப்பிடி சுவர் கட்ட வச்சிருந்த செங்கலை தூக்கி இவ காலுல அவன் எறியறான்.. அவன் காலுல இவ எறியறா.. பார்க்கவே கஷ்டமா இருந்தது. பிரெண்ட்ஸ்ங்கறதால மனசு வேற கேட்கல.. இடையில புகுந்து விலக்கி விடலாம்ன்னு ஒரு நல்ல எண்ணத்துல பக்கத்துல போனேன்.. இதோ இந்த குட்டச்சிதான் கண்ணு மண்ணு தெரியாம அவனை இடிச்சி தள்ளுறதா நினைச்சி என்னை தள்ளிட்டா.. கைப்பிடி இல்லாத அந்த மாடியில இருந்து கீழே விழுந்தேன் நான்.." என்று அவன் சொல்ல மீனா அதிர்ச்சியில் தன் வாய் மீது கை வைத்தாள்.

"புதுசா கட்டிட்டு இருந்த கட்டிடம்.. கீழே நிறைய மணல் கொட்டி வச்சிருந்தாங்க.. ஆனா என் கெரகம் பக்கத்துல இருந்த மணல் சலிக்கற சல்லடை மேல விழுந்துட்டேன். சாச்சி வச்சிருந்த மணல் சல்லடை மேல யாரோ பன மட்டையை வெட்டி வச்சிருந்திருக்காங்க. சல்லடைக்கு முட்டு தர வச்சிருந்தாங்களாம். ஆனா எனக்கு நேரம் சரியில்லன்னா நேரா போய் அது மேலயேதானே விழுந்தாகணும்.? விழுந்த வேகத்துக்கும் கத்தி மாதிரி இரண்டு பக்க ஓரத்திலயும் இருந்த கருக்குக்கும் அப்படியே ஒன்றரை இன்ச் உள்ளே இறங்கிடுச்சி. ஆபரேசன் பண்ணி, எங்கம்மா பத்து கோவில்ல வேண்டுதல் வச்சி, எங்கப்பா பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி அன்னைக்கு என்னை காப்பாத்தினாங்க.." என்று தன் இடுப்பில் இருக்கும் தழும்பின் வரலாற்றை சொல்லி முடித்தான் குணா.

மீனாவிற்கு சோகமாக இருந்தது அவனின் கதை கேட்டு. அவளுக்கு அபிநயா மீதும் அன்புவின் மீதும் கோபமாக வந்தது.

"நீங்க இவங்களை சும்மா விட்டுட்டிங்களா.?" என கேட்டாள் அவள் அதிர்ச்சி குரலிலேயே.

இல்லையென மறுத்தவன் வாய் திறக்க இருந்த நேரத்தில் அந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தார் அருள் குமரன். மாணவர்களின் சலசலப்பு அவரை கண்டதும் சட்டென அடங்கிப் போனது. கீழே புரண்டு கொண்டிருந்த இருவரையும் பார்த்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். பின்னர் அந்த கூட்டத்தை விட்டு விலகி போனவர் தன் ஃபோனை எடுத்து கல்லூரி வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டியை அழைத்தார்.

சற்று நேரத்தில் லத்தி ஒன்றோடு அங்கு ஓடி வந்தார் செக்யூரிட்டி. "அவசர கால உதவிக்கு வச்சிருக்கும் லத்தி சார்.. இது எதுக்கு உங்களுக்கு‌..?" என்றார் அவர்.

"லத்தி சார்ஜ் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. அதான்.." என்றவர் தன் அருகே திரளாய் நின்றிருந்த கூட்டத்தின் இடையே புகுந்தார்.

அதற்குள் சண்டை நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு இன்னும் இரண்டு ஆசிரியர்கள் வந்து விட்டிருந்தனர். அன்புவையும் அபிநயாவையும் அதிர்ச்சியோடு பார்த்தவர்கள் "யாராவது செக்யூரிட்டியை கூப்பிடுங்க.." என்றனர்.

"வந்துட்டேன்.." என்றபடி முன்னே வந்தார் அருள் குமரன்.

இரு ஆசிரியர்களும் இவரை குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களின் பக்கத்தில் நெருங்கிய அருள் குமரன் இருவரின் கால் பகுதியிலும் பளீரென்று அடிகளை விட்டார்.

சண்டையில் மும்முரமாக மூழ்கி விட்டிருந்த அன்புவும் அபிநயாவும் தங்களின் கால்களில் விழுந்த அடியில் துள்ளி விழுந்து பதறியெழுந்தனர்.

இவர்களுக்கு அடி விழுந்ததை கண்டு கை தட்டல் சத்தம் ஒன்று கூட்டத்திலிருந்து கேட்டது. அன்பு அபிநயாவோடு சேர்த்து அனைவரும் சத்தம் வந்த திசையை திரும்பி பார்த்தனர்‌. குணா உணர்ச்சி வசத்தின் மிகுதியில் தன்னை மறந்து கை தட்டிக் கொண்டிருந்தான். அருள் குமரன் செய்த செயல் அவனுக்குள் இருந்த உற்சாக ஊற்றுக்கு உயிர் தந்து விட்டிருந்தது. ஆனந்தம் தந்த அளவில்லா மகிழ்ச்சியில் கை தட்டிக் கொண்டிருந்தவனின் இடுப்பில் கிள்ளினாள் மீனா. என்னவென்று அவளை திரும்பி பார்த்தவன் அதன் பிறகே அங்கு நின்றிருந்த கூட்டத்தின் மொத்த பார்வையும் தன் மீது இருப்பதையும், அன்புவும் அபிநயாவும் தன்னை முறைப்பதையும் கவனித்தான்.

அருள் குமரன் அன்புவின் தாடையின் கீழ் லத்தியை வைத்து அவன் முகத்தை நிமிர்த்தினார். அபிநயாவும் அன்புவோடு சேர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

"எல்லோரும் இங்கிருந்து போங்க.." அருள் குமரன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு கட்டளையிட்டதில் மத்த மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்த கிளம்பினர். குணாவும் மீனாவும் மட்டும் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றிருந்தனர்.

"என்ன நடக்குது இங்கே.?" என்றார் அவர்.

"இந்த குட்டச்சி என்னை பேக்கால் அடிச்சிட்டா சார்.. படிக்கறதே இல்ல‌. ஆனா வெட்டி சீனுக்காக எல்லா புத்தகத்தையும் பேக்ல வச்சிருந்திருக்கா.. வந்து விழுந்ததுல முதுகே உடைஞ்சி போச்சி.." என்று தன் தரப்பு வாதத்தை சொன்னான் அன்பு.

அவன் சொல்லி முடிக்கும் முன்பே "இந்த கோணக்காலன்தான் சார் குட்டச்சி குட்டச்சின்னு சொல்லி காலேஜ் முழுக்க என் பட்ட பேரை பரப்பி விட்டான்.." என்று இடைபுகுந்து சொன்னாள் அபிநயா.

"நான் சொல்லலன்னாலும் கூட எல்லாருக்கும் தெரியும் நீதான் குட்டச்சின்னு.. ஏனா நீ குட்டச்சிதானே.?" என்று சீறினான் அன்பு.

"சும்மா சும்மா என்கிட்ட வம்பு இழுக்காதடா கோணக்காலா.." என்று மூக்கு சிவக்க சொன்ன அபிநயா அவனின் காலின் மீது ஓங்கி ஒரு உதையை தந்தாள். அன்பு அவளை அடிக்க முயலும் முன் அபிநயாவின் உதைத்த காலில் சுளீரென அடியை விட்டார் அருள் குமரன்.

"என் முன்னாடியே இரண்டு பேரும் சண்டை போடுறிங்களா‌.?" என்று அடிக்குரலில் மிரட்டலாக கேட்டவர் இருவரையும் கோபத்தோடு பார்த்தார். அவரின் கோபப் பார்வை கண்டு குணாவும் மீனாவும் பயந்து விட்டனர். முன்பே இங்கிருந்து சென்றிருக்கலாமோ என்று எண்ணினர் இருவரும்.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஓரடி பின்னால் தள்ளி நின்றான் குணா. மீனாவையும் தன் அருகே இழுத்து நிறுத்திக் கொண்டான். இவர்கள்தான் பயந்தனரே தவிர ஆசிரியரின் முன்னால் நின்றிருந்த அன்புவும் அபிநயாவும் பாறாங்கல்லையே விழுங்கிய மலைப்பாம்பு போல கண் இமைகளை கூட அசைக்காமல் நின்றிருந்தனர்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1707

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN