சிக்கிமுக்கி 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்புவின் சட்டை ஒரு இடத்தில் கொஞ்சமாக கிழிந்திருந்தது. இருவரது தலையுமே கலைந்துப் போயிருந்தது. அபிநயாவின் துப்பட்டா தரையில் ஒரு ஓரமாக கிடந்தது.

"இந்த காலேஜ் டிசிப்ளின்க்கு பேர் வாங்கியது. ஆனா உங்களை பாருங்க. ஸ்டூடன்ட்ஸ் மாதிரியா இருக்கிங்க இரண்டு பேரும்.? தெருவுல சுத்திட்டு சண்டை போடுற வெறிநாய்களுக்கும் உங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கு.?" என்றார் அருள் குமரன் கோபமாக. அவர் கேட்டது இருவரையுமே நேரடியாக தாக்கிவிட்டது.

"சார் நீங்க எங்களை ரொம்ப இன்சல் பண்றிங்க.." என்றான் அன்பு.

அருள் குமரன் அவர்களை ஓர பார்வை பார்த்துவிட்டு தங்களின் பின்னால் நின்றிருந்த குணா மீனா பக்கம் திரும்பி அவர்களை அருகே வர சொல்லு சைகை காட்டினார். இருவரும் தயக்கத்தோடு அவரருகே வந்து நின்றனர்.

"இவங்களை பார்த்தா ஸ்டூடன்ட்ஸ் மாதிரி இருக்கா.? இல்ல ஒன்னுக்கொன்னு கடிச்சி வச்சிக்கற தெரு நாய்களை போல இருக்கா.?" என கேட்டார்.

குணா நண்பர்களை பார்த்துவிட்டு இவர் புறம் பார்த்தான். "நாய்ங்க மாதிரிதான் இருக்காங்க சார்.." என்றான் அவன் தயக்கமாக.

அருள் குமரன் இவர்கள் இருவரையும் கோபமாக முறைத்தார். "இரண்டு பேரும் என்னோடு வாங்க.." என்றார். அன்புவும் அபிநயாவும் காரணம் புரியாமல் அவர் பின்னால் நடந்தனர். குணாவும் மீனாவும் நண்பர்களின் கல்லூரி பைகளை எடுத்துக் கொண்டு தங்களின் வகுப்பை நோக்கி நடந்தனர்.

கல்லூரி பேராசிரியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு இருவரையும் அழைத்து வந்தார் அருள் குமரன். அங்கிருந்த கண்ணாடியை பார்த்து கை காட்டினார். "உங்களை நீங்களே அந்த கண்ணாடியில் பாருங்க.." என்றார்.

இருவரும் அந்த நிலைக்கண்ணாடியை பார்த்தனர். முகமும் தலையும் ஆடையும் புழுதியால் நிரம்பி இருந்தது. காது, கன்னம், தாடை, மூக்கு, கழுத்து என நிறைய இடத்தில் நகத்தின் கீறல்களும் அதன் விளைவாய் கசிந்த ரத்த துளிகளும் தென்பட்டன.

அருள் குமரன் அன்புவின் சட்டையின் மீது லத்தியால் தட்டினார். சட்டையில் படிந்திருந்த மணல் துகள்கள் கீழே கொட்டின.

"என்ன இது.? காலேஜா.? இல்ல சண்டை மைதானமா.?" என்றார் அங்கிருந்த மேஜை ஒன்றின் மேல் ஏறி அமர்ந்தபடி.

இருவரும் கண்ணாடியிலிருந்து பார்வையை திருப்பினர்.

"சாரி சார்.." என்றார்கள்.

"உங்க சாரி எனக்கெதுக்கு.? அதனால பத்து பைசா ப்ரயோசனம் கூட கிடையாது.. நீங்க இரண்டு பேரும் இந்த காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்.. உங்களோட வாழ்க்கையின் மீது ஒரு ஆசிரியரா எனக்கு அக்கறை இருக்கு.. உங்களை போல ஆயிரக்கணக்கான பேர் இந்த காலேஜ்ல படிக்கறாங்க. எல்லாருமே பாலர்வாடி புள்ளைங்களை போல சண்டை போட்டுட்டு இருந்தா நாங்கதான் காலேஜை இழுத்து மூடிட்டு போக வேண்டி வரும்.." என்றார்.

"சாரி சார்.." என்றார்கள் மீண்டும். அருள் குமரன் அவர்களை முறைத்தார். "கல்லூரியில் வன்முறையை செயல்படுத்துறிங்கன்னு சொல்லி உங்களை போலிஸ்ல பிடிச்சி கொடுக்க முடியும் எங்களால.. இல்லன்னா நீங்க இந்த காலேஜ்க்கு தேவையில்லன்னு சொல்லி இரண்டு பேரையுமே வெளியே அனுப்ப முடியும்.. ஆனா அது இரண்டுமே உங்களை மாத்தாத்துன்னு எனக்கு தெரியும்.." என்றார் அவர்.

அன்புவும் அபிநயாவும் குனிந்த தலை நிமிராமல் நின்றனர்.

"அன்னைக்கு அந்த பையன் சொன்னான் நீங்க இரண்டு பேரும் காரணமே இல்லாம சண்டை போடுறதுல கில்லின்னு.. நான் பார்த்ததுல ஒரு ஆணும் பெண்ணுமா பிஸிகலா சண்டை போட்டுக்கிட்டது இங்கேதான். அது நீங்கதான்.. உங்களை சுத்தி இருப்பங்களை ஒரு நாளாவது பார்த்து இருக்கிங்களா.? அவங்க எல்லாம் உங்களை போலதான் சண்டை போட்டுட்டு இருக்காங்களா.? நீங்க போடுற சண்டையால இதுவரை உங்களுக்கு கிடைச்ச லாபம் என்ன.?" என்றார் இருவரையும் புருவம் நெரித்து பார்த்தபடி.

"எதுவும் இல்ல சார்.." என்றாள் அபிநயா அமைதியான குரலில்.

"வெத்து சண்டையால மத்த மாணவர்களோட கவனத்தை ஈர்க்கறிங்க.. நீங்க என்ன சீன் பார்ட்டியா.?" என்று கேட்டார் அவர்.

அன்பு மறுத்து தலையசைத்தான். "இல்ல சார்.." என்றான்.

"உங்க சண்டையால உங்களுக்கும் பிரயோசனம் இல்ல.. மத்தவங்களுக்கும் பிரயோசனம் இல்ல.. அப்புறம் ஏன் சண்டை போடுறிங்க.? உங்களுக்கு சண்டை போட இவ்வளவு விருப்பமா இருந்தா நாட்டோட எல்லைக்கு போய் தீவிரவாதிகளோடு சண்டை போடுங்க.. உங்களுக்கு பெஸ்ட் பைட் தெரியும்ன்னா போய் திருடங்களோடும், கொலைக்காரங்களோடும் சண்டை போடுங்களேன்.." என்றார் ஆச்சரியத்தோடு.

இருவரும் மறுப்பாய் தலையசைத்தனர்.

"உங்களை பார்த்து மத்த மாணவர்களும் கெட்டு போவாங்க. இந்த ஊரோட சட்ட ஒழுங்கும் கொஞ்ச நாளுல இந்த நாட்டோட சட்ட ஒழுங்கும் கூட உங்களால கெட்டு போகும்.." என்றார் அவர்.

இருவரும் திகைப்போடு அவரை பார்த்தனர். 'ஓவரா திங் பண்றாரே..' என்ற எண்ணம் இருவருக்கும் வந்தது.

"உங்க சண்டை மொத்தமும் வேஸ்ட்ன்னு நீங்க என்னைக்கு புரிஞ்சிக்கறிங்களோ அன்னைக்குதான் நீங்க உங்க வாழ்க்கையையே வாழ ஆரம்பிப்பிங்க.." என்றவர் தான் அமர்ந்துக் கொண்ட இடத்திலிருந்து எழுந்து நின்றார்.

"இது உங்களுக்கான எக்ஸ்டா லாஸ்ட் வார்னிங்.. இனி ஒருமுறை நீங்க சண்டை போட்டதை பார்த்தேன்னா அப்புறம் ஹெவி பனிஷ்மென்ட் தருவேன்.. ஜாக்கிரதை.." என்று மிரட்டலாக சொல்லி இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

அன்புவும் அபிநயாவும் தங்களின் வகுப்புகளை நோக்கி சென்றனர். வழியில் இருந்த மாணவர்கள் அவர்களின் கோலம் கண்டு தங்களுக்குள் ரகசியமாக பேசி சிரித்தனர். ஆனால் அன்புவும் அபிநயாவும் தங்களின் சொந்த சிந்தனையில் மூழ்கி குழம்பிப் போயிருந்தனர்.

'எப்படி சண்டை போடாம இருக்க முடியும்.? இவளை பார்த்தாலே சண்டை போடணும்ன்னுதானே தோணுது.? இவளை அடிக்காம, உதைக்காம, கிள்ளாம எப்படி நான் வாழ முடியும்.? இவளோடு பைட் பண்ணலனாவே என் லைப் இல்ல. இதை சொன்னா யாருமே என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. இவளோடு சண்டை போடணுங்கற ஒரே காரணத்துக்காகதான் நான் இந்த பூமியிலயே பிறந்த மாதிரி இருக்கு..' என்று யோசித்தபடியே நடந்தான் அன்பு.

'இவனோடு சண்டை போடலன்னா அப்புறம் நான் என்ன செய்வேன்.? இவனோடு சண்டை போடாம இருக்கறதுக்கு பதிலா நான் நேரா போய் கடல்ல குதிச்சிடலாமே..' என்று சோகமாய் சிந்தித்தாள் அபிநயா.

வழியிலிருந்த பாத்ரூமை பார்த்தவர்கள் அவரவர்களுக்கான பகுதியில் நுழைந்தனர். அங்கிருந்த கண்ணாடியை பார்த்தபடி இருவரும் தங்களது தலையை சரி செய்தனர். தண்ணீரை அள்ளியெடுத்து முகத்தை சுத்தம் செய்தனர்.

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்தாள் அபிநயா. பார்வைக்கு கோரமாக இருந்தாள். அன்பு குத்தியதால் மூக்கு சிவந்து போயிருந்தது. கண்ணின் ஓரத்தில் நக கீறல் இருந்தது. இதே போல ஒருநாள் சண்டையிட்டு விட்டு வீடு சென்றபோது அம்மா சொன்னது நினைவிற்கு வந்தது இவளுக்கு. "இமையோரம் பட்ட நகம் கண்ணுல பட்டிருந்தா என்ன ஆகுறது.? பைத்தியமாடி நீ.? ஏன் அவன் கூட சண்டை போட்டுட்டு வர.?" என்று கத்தினாள் அம்மா.

விவரமில்லா பருவத்திலேயே ஆரம்பித்து விட்ட சண்டை இது. விவரம் வந்த பிறகும் நிறுத்த இயலாமல் தொடர்ந்தது. ஓரளவு சிந்தனை வந்த பிறகு பல நாள் யோசித்து இருக்கிறாள் அபிநயா. 'ஏன் சண்டை போடணும்.? இவன்கிட்ட சண்டை போட்ட மாதிரி வேற யார் கூடவும் சண்டை போடுறது கிடையாது.. இவனை வெறுப்பது போலவும் வேற யாரையும் வெறுத்தது கிடையாது.. இதற்கான காரணம் என்ன.?' என்று தன்னையே கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் பதில் இதுவரையிலும் கிடைக்கவேயில்லை.

அவனோடு ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு இருவரையும் சண்டையிட வைக்கிறது என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு அந்த சண்டையை நிறுத்தும் வழிதான் தெரியவேயில்லை.

அன்பு தண்ணீர் சொட்டிய முகத்தோடு கண்களை மூடி ஒன்று இரண்டு என்று எண்ணினான். தன் மனதை சாந்தப்படுத்த முயற்சித்தான். இந்த சண்டையால் இருவருக்குமே பிரயோசனம் இல்லைதான். ஆனால் இந்த சண்டைகள் இல்லாமல் இருந்தால் தான் வாழ்வதில் என்ன பிரயோசனம் என்று யோசித்தது அவனின் சிந்தை.

நிமிடங்கள் கடந்தது. பாத்ரூமை விட்டு ஒரே நேரத்தில் வெளியே வந்தனர் அன்புவும் அபிநயாவும். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

அன்புவின் இமையிலிருந்து சொட்டிய ஒற்றை துளி தண்ணீர் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவை என்னவோ செய்தது. இதுவரை உணராத ஒரு உணர்வு முதன் முறையாக நெஞ்சில் உதயமானது. அவனின் முகத்தை கவனித்தாள். அந்த முகத்தில் எந்த குறையுமே சொல்ல முடியாது. அவனின் உதட்டோரம் இருந்த சிறு காயம் கூட அந்த முகத்திற்கு அழகைதான் கூட்டிக் கொண்டிருந்தது. அவனை பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவிற்கு கண்களை இமைக்க தோன்றவேயில்லை. அவனின் முகம் இன்று தனி அழகாய் தோன்றியது அவளுக்கு. அவனது புருவத்தின் மீது சுட்டு விரலை வைத்து வில்லோவியம் வரையவும், அந்த கன்னத்தை நகத்தால் கிள்ளாமல் செல்லமாக வலிக்காமல் கிள்ள வேண்டும் என்றும், அவனின் உதடுகளின் மென்மையை சோதிக்க வேண்டும் என்றும் குட்டி குட்டி ஆசைகள் அவளுக்குள் உண்டானது.

தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அவளை தாண்டி சென்றான் அன்பு. அவனின் தோள்பட்டை மோதியதில் திரும்பி நின்றவள் அதிர்ந்து விட்டாள்.

'நான் மெண்டல் ஆகிட்டேனா.? எனக்கு ஏன் புதுசு புதுசா என்னென்னவோ தோணுது.? கண்டிப்பா பேய்தான் பிடிச்சிருக்கும்.. வீட்டுக்கு போனதும் சாமியாரை பார்த்து மந்திரிக்கணும்..' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு வகுப்பறை நோக்கி கிளம்பினாள் அபிநயா.

அன்பு வந்து தன்னருகே அமர்ந்ததும் தனது கர்ச்சீப்பை நீட்டினான் குணா. அன்பு முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்தபோது வகுப்பறைக்குள் நுழைந்தாள் அபிநயா.

"குட்டச்சி மூக்கை பஞ்சர் பண்ணிட்டடா.." என்று நண்பனிடம் கிசுகிசுத்தான் குணா.

"இரண்டு தொடையும் பயங்கரமா வலிக்குதுடா.. தெரிஞ்ச மாதிரி ஒரு காயம் அவளுக்கு. தெரியாத மாதிரி பயங்கர காயம் எனக்கு.." என்று சொன்னான் அன்பு.

குணா நண்பனை பரிதாபமாக பார்த்தான். "நாளைக்கு நல்லாயிடும் விடு.." என்று அவனது தொடையில் அழுத்தி சொன்னான்.

"அம்மா.." என்று கீரிச்சிட்டான் அன்பு. வகுப்பிலிருந்த மாணவர்கள் அவனை திரும்பி பார்த்தனர்.

"ஏன்டா கத்துற.?" என்று கேட்டான் குணா.

"கையை எடுடா பாவி.. அவ உதைச்சி உதைச்சி சின்னாபின்னமா மாத்தி வச்ச அதே தொடையில கையை வச்சி இப்படி அழுத்துறியே.. வலிக்குதுடா.." என்று முனகினான் அன்பு.

குணா அவனை விசித்திரமாக பார்த்தபடியே தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான். "உனக்கு வலிக்கும்ன்னே எனக்கு இன்னைக்குதான்டா தெரியும்.." என்றான்.

அன்பு குழப்பமாக அவனை பார்த்தான். ஆமாம் இவ்வளவு நாளும் விளையாட்டு நினைவில் அவ்வளவாக தெரியாத வலி இன்று நன்றாகவே உறைத்தது. 'அவளுக்கும் இப்படிதான் வலிக்குதா.?' என்று அவனுக்கு முதல் நினைவே அவளை பற்றிதான் தோன்றியது.

அபிநயா பக்கம் பார்த்தான். அபிநயா தன் கர்ச்சீப்பால் மூக்கின் மீது ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். சிவந்து வீங்கி போயிருந்தது மூக்கு. அதை பார்க்கும்போது இவனுக்கு வலித்தது.

'ஓ காட்.. எனக்கு என்னவோ ஆயிடுச்சி..' என்று எண்ணியபடியே சட்டென திரும்பிக் கொண்டான்.

அன்றைய நாள் கல்லூரி முடிந்ததும் அபிநயா விடுதி நோக்கி கிளம்பினாள். மீனா குணாவை தேடி வந்தாள்.

"ஹாய்.." என்றாள்.

குணாவோடு சேர்ந்து நடந்துக் கொண்டிருந்த அன்பு அவளையும் நண்பனையும் மாறி மாறி பார்த்தான்.

"ஹாய்.." என்றான் குணா.

"ஹாஸ்டல் போற வரைக்கும் சேர்ந்து பேசிட்டே நடக்கலாமேன்னு வந்தேன்.." என்றபடி நகம் கடித்தாள் மீனா.

குணா அன்புவை விட்டு ஓரடி விலகி அவளருகே சென்றான். "பேசலாமே.." என்றான். அன்புவிற்கு தன் நண்பனின் கன்னங்கள் சிவந்தது போல இருந்தது.

"நாம வேணா அப்புறமா பேசலாமாடா.?" என்று அன்புவிடம் திரும்பி பார்த்துக் கேட்டான் குணா.

"நாம எதையும் பேசவே இல்லடா.." என்று கை விரித்து சொன்னான் அன்பு.

"ஓ.. கொஞ்ச நாளா மைன்ட் டிஸ்டர்பா இருக்குடா.. அதான் இந்த கன்ப்யூசன்.. நீ முன்னாடி போ.. நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.." என்றவன் அன்பு பதில் சொல்லும் முன்பே மீனாவின் அருகே வந்து அவளின் கையை பற்றினான்.

"ஹாஸ்டலுக்கு போற குறுக்கு வழி எனக்கு தெரியும்.. வரிங்களா போகலாம்.?" என்றான்.

மீனா சரியென தலையசைத்ததும் அவளை அழைத்துக் வேறு திசையில் நடந்தான்‌.

அன்பு நண்பனின் முதுகை வெறித்தான். "அந்த புள்ளையை கரெக்ட் பண்ண டிரை பண்றானா.? ஆனா அதுக்கு ஏன் மைன்ட் டிஸ்டர்ப் ஆச்சின்னு என்கிட்ட பொய் சொல்லணும்.?" என்று கேட்டவன் விடுதி இருந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இரு புறமும் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் இடையே இருந்த பாதையில் மீனாவின் கை பிடித்து நடந்தான் குணா. சற்று தூரம் வந்ததும் அவளின் கையை விட்டு விட்டான்.

"சாரிங்க.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சி வரணும்ன்னுதான் உங்க கை பிடிச்சி கூட்டி வந்தேன்.." என்றான் சிறு வெட்கத்தோடு.

"தேங்க்ஸ்ங்க.. நான் கூட உங்களை எப்படி தனியா கூப்பிடுறதுன்னு நினைச்சேன்.. ஆனா நீங்களே நான் சொல்லும் முன்னாடி புரிஞ்சிக்கிட்டு என்னோடு தனியா வந்துட்டிங்க.." என்றாள் அவள்.

குணாவிற்கு உள்ளம் துள்ளியது. பெரியதாக எதையோ சாதித்ததை போல இருந்தது அவள் சொன்னதை கேட்டு.

"காலையில் பேச டைம் கிடைக்கல.. கிளாஸ்லயும் பேசிக்க முடியல.. அதான் இப்ப பேசலாம்ன்னு.." என்று இழுத்தாள் அவள்.

"பேசலாங்க.. எவ்வளவு நேரம் வேணாலும்.." என்றவனுக்கு தான் வழிகிறோமோ என்று சந்தேகமாக இருந்தது.

"உங்களுக்கு அவ்வளவு பெரிய காயம் ஆன பிறகும் கூட நீங்க ஏன் அவங்களோடு பிரெண்ட்ஷிப் மெயிண்டன் பண்றிங்க.? நீங்க சொன்னதை கேட்டதுல இருந்து எனக்கு அபியை சுத்தமா பிடிக்கல.. காலையிலிருந்து நான் அவ கூட பேசவே இல்ல.. இனி அவளோடு பேசவும் மாட்டேன்.." என்றாள் வெறுத்துப்போன குரலில்.

அவள் சொன்னது கேட்டு குணாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

"என்னங்க இப்படி சொல்றிங்க.? அவளுக்கு எங்க ஸ்கூல்ல கூட கேர்ள் பிரெண்ட் இல்லைங்க.. அவளுக்கு முதல் கேர்ள் பிரெண்ட் நீங்கதான். என்னை காரணமா வச்சி அவளை வெறுக்காதிங்க.. அவ ரொம்ப நல்ல பொண்ணு.." என்று அவசரமாக சொன்னான் குணா.

மீனா மறுப்பாக தலையசைத்தாள். "உங்களுக்கு ரியாலிட்டியே புரியல.. அன்னைக்கு சண்டையில் மாடியிலிருந்து விழுந்த நீங்க கொஞ்சம் தள்ளி விழுந்திருந்தாலும் அந்த பனங்கருக்கே உங்களை கொன்னிருக்கும். உங்களையே கொல்ல பார்த்திருக்கா அவ. அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதிங்க நீங்க.. நான் ஹாஸ்டல்ல என் ரூமை மாத்திக்கலாம்ன்னு கூட இருக்கேன்.." என்றாள்.

"அவ ஆபத்தானவ இல்ல.." என்று கிளிப்பிள்ளையின் குரலில் சொன்னான் குணா.

மீனா அவனை கோபமாக பார்த்தாள். அவனை திட்ட முயன்றாள். ஆனால் அதற்கு முன் குணா பேச ஆரம்பித்தான்.

"நான் பனங்கருக்கு மேல விழுந்தது வரைக்கும்தான் உங்களுக்கு தெரியும். ஆனா அதுக்கப்புறம் நடந்ததை உங்கக்கிட்ட சொல்லல நான்.." என்றவன் அதன்பிறகு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

குணா மாடியிலிருந்து விழுந்ததும் சண்டை போட்டுக் கொண்டிருந்த அன்புவும் அபிநயாவும் அதிர்ந்து விட்டனர். கீழே எட்டி பார்த்துவிட்டு "குணா.." என்று கத்திய இருவரும் வேகமாய் அங்கிருந்து இறங்கி அவனிடம் சென்றார்கள்.

அன்பு குணாவை அவசரமாக எழுப்பி அமர வைத்தான். அதன் பிறகே அவனின் இடுப்பில் பதிந்திருந்த பனங்கருக்கை பார்த்தனர் இருவரும்.

"டேய்.. சாரிடா குணா.. நிஜமா நான் உன்னை பார்க்கலடா.." என்று அழுதான் அன்பு.

"நீ என் பக்கத்துல வந்ததே சத்தியமா எனக்கு தெரியாது குணா.. ப்ளீஸ் சாரி‌‌.." என்று கதறிய அபிநயா "யாராவது சீக்கிரம் ஓடி வாங்க.. ப்ளீஸ்.. என் பிரெண்டுக்கு அடி பட்டுடுச்சி.." என்று கத்தியழைத்தாள்.

அன்பு நடுங்கும் கைகளோடு குணாவின் இடுப்பில் இருந்த பனங்கருக்கை பிடுங்கினான். அபிநயா அதை கண்டதும் அவசரமாக தன் துப்பட்டாவை எடுத்து அந்த காயத்தின் மீது வைத்து அழுத்தினாள். கொட்டிய ரத்தம் கண்டு அதிகமாக பயந்து விட்டனர் இருவரும்.

"சீக்கிரம் யாராவது ஓடி வாங்களேன்.." என்று கத்தியவள் தாமதம் செய்ய கூடாது என்றெண்ணி அருகே இருந்த தார் சாலைக்கு ஓடி அங்கு வந்துக் கொண்டிருந்த வாகனங்களை நிறுத்த முயன்றாள். அவளின் கையாட்டலுக்கும் கண்ணீருக்கும் கார் ஒன்று நின்றது.

"சார் என் பிரெண்ட்டுக்கு அடி பட்டுடிச்சி சார்.. ஹாஸ்பிட்டல் வரைக்கும் லிஃப்ட் கொடுங்க சார்.." என அவள் கெஞ்சிய நேரத்தில் குணாவை அங்கு அழைத்து வந்து விட்டிருந்தான் அன்பு.

கார்காரர் மூவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு பின் பக்க கதவை திறந்து விட்டார்.

அந்த கார்காரரிடமே கைபேசியை வாங்கி மூன்று வீட்டுக்கும் தகவலை சொன்னார்கள். குணாவின் அப்பா போனிலேயே ருத்ர தாண்டவம் ஆடினார்.

குணாவின் அப்பா மருத்துவமனைக்குள் நுழைந்ததும் அவரின் கண்களில் முதலில் தென்பட்டது இவர்கள் இருவரும்தான். வேகமாக வந்தவர் அன்புவிற்கு செவிலிலேயே அறையை விட்டார். அவர் நல்ல பலமுள்ள ஆள் என்பதாலும் இவன் சிறு பிள்ளை என்பதாலும் ஒரு அறைக்கே தரையில் சுருண்டு விழுந்தான் அன்பு.

"என் புள்ளையையே ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிருக்கிங்களா.?" என்றவர் அவனை மீண்டும் தாக்க முற்படுகையில் ஓடி வந்து தடுத்தாள் குணாவின் அம்மா.

"வேண்டாங்க.. சின்ன புள்ளை.." என்று அழுதாள் அவள்.

ஆனால் குணாவின் அப்பாவிற்கு கோபம் குறையவேயில்லை. மனைவியை ஓரம் தள்ளிவிட்டு இவனின் அருகே வந்தார். தரையிலிருந்து எழுந்து நின்ற அன்புவை மீண்டும் அறைய முயன்றார். ஆனால் சட்டென குறுக்கே பாய்ந்து விட்டாள் அபிநயா. அவர் தந்த அறை அவளுக்குதான் விழுந்தது.

குணாவின் அப்பா அவளை முறைத்தார். அவர் அறைந்ததில் அன்புவின் மீது சென்று விழுந்தவள் அவசரமாக முன்னால் வந்து நின்று தன் இரு கைகளையும் கோர்த்தாள்.

"நான்தான் மாமா அவனை மாடியிலிருந்து தள்ளி விட்டேன்.. அன்புவை விட்டுடுங்க ப்ளீஸ்.. எவ்வளவு வேணாலும் என்னை அடிங்க.. நான் வாங்கிக்கிறேன்.. ஆனா இவனை விட்டுங்க.." என்று அழுகையோடு கெஞ்சினாள்.

குணாவின் அப்பா இருவரையும் மாறி மாறி பார்த்தார். அவரின் கோபம் அதிகம் ஆனதே தவிர குறையவில்லை.

"உங்க இரண்டு பேரு மேலேயும் போலிஸ் கம்ப்ளைண்ட் தர போறேன்.." என்றார் அவர்.

அதே நேரத்தில் அங்கே அன்பு மற்றும் அபிநயாவின் பெற்றோரும் வந்து விட்டனர். அன்புவிற்கு அர்ச்சனாவிடம் இருந்தும் அபிநயாவிற்கு ஆனந்தியிடம் இருந்தும் தர்ம அடி கிடைத்தது. அவர்கள் அடி வாங்கியதை கண்டு குணாவின் அப்பா மனதில் இருந்த கோபம் சிறிதளவு குறைந்தது.

"அந்த பையனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சின்னா உன்னை கொன்னே போட்டுடுவேன்.." என்று மிரட்டல் விடுத்தனர் இரு வீட்டு பெற்றோரும்.

அன்புவும் அபிநயாவும் பெற்றோர் திட்டை கூட காதில் வாங்காமல் அவர்கள் தந்த அடியை கூட பொருட்படுத்தாமல் நண்பனை நினைத்து அழுதுக் கொண்டிருந்தார்கள்.

அரை மணி நேரத்திற்கு பிறகு ஆபரேசன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் மருத்துவர்.

குணாவின் அப்பா மருத்துவரிடம் ஓடினார். "டாக்டர் என் பையன் இப்ப எப்படி இருக்கான் டாக்டர்.?" என்று கேட்டார் அவர்.

"சின்ன காயம்தான். தாமதிக்காம தூக்கிட்டு வந்ததால பெரிய பிரச்சனை ஆகாம தப்பிச்சிட்டான்.." என்ற மருத்துவர் அன்புவையும் அபிநயாவையும் பார்த்தார்.

"ஏன் புள்ளைங்களே அழறிங்க.. உங்க பிரெண்டை கீழே தள்ளி விட்டதை நினைச்சா.?" என சிரித்தவண்ணம் கேட்டார் அவர்.

"சின்ன புள்ளைங்கள்ல யாரு தன் கூட விளையாடுற பிரெண்ட்ஸ் மண்டையை உடைக்காம விட்டாங்க.? ஆனா கவனமா இல்லாததை நினைச்சி முடிஞ்ச பிறகு அழ கூடாது.. இனி இப்படி எந்த விசயமும் நடக்காத அளவுக்கு கவனமா இருக்க பழகணும். அவ்வளவுதான்.. நீங்க செஞ்சது தப்புதான். ஆனாலும் அவனை இங்கே உடனே கூட்டி வந்தது புத்திசாலிதனமான விசயம். இனியாவது நல்ல புள்ளைங்களா நடந்துக்கங்க.." என அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்.

அன்புவும் அபிநயாவும் ஒரு வாரம் மருத்துவமனையை விட்டு நகரவேயில்லை. குணா முழுதாய் குணமாகி வீடு திரும்பும் வரை அவனின் நிழலாகவே இருந்தனர் இருவரும். அவனுக்கு தேவையான பணிவிடைகளை பார்த்து பார்த்து செய்தனர். குணாவே எரிச்சலாகும் அளவுக்கு அழுது இம்சை செய்தாள் அபிநயா. நிமிடத்திற்கு ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு தொல்லை செய்தான் அன்பு.

"இதுக்கு நான் மயக்கத்துலயே இருந்திருக்கலாம்.." என்று குணாவே புலம்பும் அளவுக்கு இம்சை செய்தனர்.

இவர்கள் நடந்துக் கொண்டதை கவனித்த குணாவின் அப்பாவிற்கே முதல் நாள் தான் அன்புவையும் அபிநயாவையும் அடித்தது தவறோ என்று தோன்றியது. அவர்கள் நண்பன் மேல் கொண்ட பாசம் கண்டவருக்கு போலிஸ் கம்ப்ளைண்ட் என்ற விசயமே நினைவில் இல்லாமல் போய் விட்டது‌.

அவர்களின் அந்த நட்பு அப்படியேதான் இவ்வளவு நாளும் நீடித்து வருகிறது. ஆனால் என்ன அன்புவும் அபிநயாவும் சண்டை போட்டுக் கொள்ளுகையில் தெரியாமல் கூட அவர்களுக்கு இடையில் செல்ல மாட்டான் குணா.

"அதுங்க எவ்வளவு அடிச்சிக்கிட்டாலும் அதுங்களுக்கு வலிக்கவே வலிக்காது‌. குறுக்க நுழைய நாமதான் அதோகதி ஆவோம்.." என்ற விசயத்தை நன்றாக தெரிந்து வைத்திருந்தான் அவன்.

தனக்கு அடிப்பட்ட பிறகு என்ன நடந்தது என்று அனைத்தையும் மீனாவிடம் சொல்லி முடித்தான் குணா.

"சின்ன புள்ளைங்க சண்டை போட்டுக்கும்போது அடி படுறதெல்லாம் சகஜம்தான். ஆனா ஆயிரம் சண்டைக்கு பிறகும் சேர்ந்தே இருப்பதுதான் நட்பு. அன்னைக்கு என்னை அவங்க வேணும்ன்னே தள்ளி விடல.. என் மேல அவங்களும் உயிரா இருக்காங்க. அன்னைக்கு எனக்கு அடிப்பட்ட போது என்னை விட அதிகம் துடிச்சவங்க அவங்கதான். அவங்க சண்டை போட்டுகறது எனக்கும் சுத்தமா பிடிக்காது. ஆனா அதுக்காக அவங்களை விட்டு விலக முடியுமா.? அவங்க சண்டை போட்டுக்கும்போது அவங்களே தன்னிலையில் இல்லன்னா நிறைய முறை சொல்லியிருக்காங்க.. அவங்களுக்கு ஏதோ பிரச்சனைப்பா. அது என்னன்னு சரியா தெரியல. ஆனா மத்தபடி அவங்களும் ப்யூர் கோல்டுதான்ப்பா.. இதுக்கு நான் கேரண்டி.." என்றான்.

குணா சொன்னதை கேட்டபிறகு அபிநயா மேல் இருந்த கோபம் குறைந்ததோ இல்லையோ மீனாவிற்கு குணாவின் மீது புது அன்பு பிறந்தது‌. அவனின் மாறாத தூய நட்பு இவளின் மனதுக்குள் புது மொட்டை மலர செய்தது.

"உங்க மனசு ரொம்ப அழகா இருக்கு.." அவளையும் மீறி வந்தது வார்த்தைகள்.

அவன் அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். கன்னங்கள் இரண்டிலும் செம்மை படர்வதை போல இருந்தது அவனுக்கு. இதயம் இறக்கை கட்டி பறப்பது போல இருந்தது. வெட்கத்தோடு தலை குனிந்தவனின் வலது கால் தரையில் கோலம் வரைய முற்பட்டது.

"தேங்க்ஸ்.." என்றான் சிறு குரலில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN