சிக்கிமுக்கி 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பு கல்லூரி பேக்கை ஓரமாக வைத்துவிட்டு தனது படிப்பு மேஜையின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனது கை அனிச்சையாக சென்று பைனாக்குலரை எடுத்தது.

தூரத்தில் தெரிந்த பெண்கள் விடுதியை பைனாக்குலரில் பார்த்தான். தனக்கு நேராக இருந்த அறையின் மூடிய ஜன்னலை எந்த உணர்வும் இல்லாதவனாக வெறித்தான். நிமிடங்கள் கடந்துக் கொண்டிருந்தது. எதற்காக அந்த வெற்று ஜன்னலை பார்க்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் ஜன்னலை தவிர வேறு எங்கும் பார்வையை திருப்ப மனம் வரவில்லை.

நொடிகள் அனைத்தும் பல மடங்கு மெதுவாக நகர்ந்த பிறகு சாத்தியிருந்த ஜன்னல் மெல்ல திறக்கப்பட்டது. பைனாக்குலர் பார்வைக்கு வளையணிந்த கை ஒன்று தென்பட்டது. நான்கு வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டன. அதன் மென்னிசையை கேட்க ஆசைக்கொண்டது இவன் மனம். பைனாக்குலரை சென்டி மீட்டர் சென்டி மீட்டராக உயர்த்தினான். வளையணிந்த அந்த அழகு கரம் ஜன்னலின் கம்பியை மென்மையாக பற்றியது. காற்றில் அசைந்த கழுத்து துப்பட்டா அவளின் உதடுகளின் மீது மோதி பறந்தது. மற்றொரு கையால் துப்பட்டாவை சரிசெய்தவளின் ஆழ விழிகள் இரண்டும் தூரத்தில் இருந்த வெண்மேகங்களை களவாட துடித்தது. அவளின் நீள விழிகளில் தன்னை சிறிது சிறிதாக இழந்துக் கொண்டிருந்தவனுக்கு ஒவ்வொரு நொடியையும் ஆன்மாவே மனதார முழுதாய் வாழ்வது போல ஆனந்தம் உண்டானது. விளக்க இயலாத அந்த சந்தோசம் எப்போதும் நீங்க கூடாது என்று கெஞ்சியது மூளை.

அவளென்ன அதிசயமா.. வெற்று பார்வைக்கே வேர் வரை ஏகாந்தந்தை உணர வைக்கிறாளே என்று குழம்பியது அவன் மனம். சுற்றுப்புறம் மறந்து தான் எங்கு இருக்கிறோம் என்பதே மறந்து அவளின் கண்களில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தான்.

வானம் பார்த்து நின்றிருந்த அபிநயா ஏதோ நினைவோடு தன் மூக்கின் மீது கை வைத்து தடவினாள். வலியில் முகம் சுளித்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அன்புவிற்கு தன் இதயத்தின் லப்டப் ஓசை தெளிவாக கேட்டது.

"அவளுக்கு வலிக்குது.." என்றான் இயந்திர குரலில். அதை சொல்லுகையில் அவனின் இதயம் என்றும் இல்லாத ஒரு வலியை அனுபவித்தது.

நெற்றி தாண்டி பறந்த கூந்தலை காதோரம் சொருகியவள் வானத்திலிருந்த தன் பார்வையை திருப்பினாள். அவளின் பார்வை நேர் எதிரில் வந்ததும் அன்பு அவசரமாக பைனாக்குலரை கீழிறக்கினான். பைனாக்குலரை மேஜையின் அடியில் வைத்துவிட்டு புத்தகம் ஒன்றை எடுத்து வைத்து படிக்க ஆரம்பித்தான்.

அபிநயா தனக்கு முன்னால் தூரத்தில் தெரிந்த ஆண்கள் விடுதியை பார்த்தாள். எதிரே தெரிந்த அறையில் யாரோ தனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது அவளால்‌. ஆனால் நிழலில் தெரிந்த உருவத்தை அவளால் சரியாக கணிக்க முடியவில்லை.

அவள் அந்த நேர் எதிர் அறையின் மீதே பார்வையை வைத்திருந்த நேரத்தில் அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள் மீனா.

"அங்கே என்னத்தை பார்க்கற.?" என கேட்டவள் தனது கல்லூரி பையை ஷெல்பின் மீது வைத்தாள்.

"சும்மா.." என்ற அபிநயா ஜன்னலை விட்டு விலகி வந்து நின்றாள். மீனாவின் அருகே சென்று அவளின் நெற்றியிலும் கழுத்திலும் தன் புறங்கையை வைத்து பரிசோதித்தாள்.

மீனா குழப்பத்தோடு ஓரடி பின்னால் நகர்ந்து நின்றாள்.

"என்ன பண்ற.?" என்றாள்.

"காலையிலிருந்து ஒரு மாதிரியாவே இருந்த.. அதான் காய்ச்சல் ஏதும் வந்துடுச்சோன்னு பார்த்தேன்.. கிளாஸ்ல கூட அதிகம் பேசவே இல்ல. அதுக்குள்ள வீட்டு ஞாபகம் வந்துடுச்சா.? உங்க அப்பா கூட பேசுறியா.. நான் ஃபோன் தரேன்.." என்றவள் தனது சூட்கேஸில் இருந்த ஃபோனை எடுத்து வந்து இவளிடம் நீட்டினாள்.

மீனா அவளையும் போனையும் மாறி மாறி பார்த்தாள். 'அவ ரொம்ப நல்ல புள்ளைங்க..' என குணா சொன்னது நினைவிற்கு வந்தது.

குணா சொன்ன பாதி கதையை கேட்டதும் இவளை தவறாக எண்ணியது எவ்வளவு பெரிய தவறென்று இப்போது புரிந்தது. குணா கீழே விழுந்தது விபத்துதானே தவிர திட்டமிட்ட செயல் இல்லை என்று புரிந்துக் கொண்டாள். தான் மனதில் நினைத்ததை அவள் மனம் சங்கடம் கொள்ளுமே என்று கவலை கொண்டவள் அவள் நீட்டிய ஃபோனை கையில் வாங்கினாள்.

"இரண்டு நாளா எங்க அண்ணா ஞாபகம்.. அஞ்சி நிமிசத்துல பேசிட்டு தந்துடுறேன்.." என்றவள் ஃபோனை வாங்கிக்கொண்டு தனியே சென்றாள்.

"பைத்தியக்கார புள்ளை.. இரண்டு நாளைக்கு முன்னாடியே அண்ணன் கூட பேசியிருக்கலாம்.. ம்ப்ச்.. இவளுக்காவது மிஸ் பண்ண ஒரு அண்ணன் இருக்கான்.. ஆனா எனக்கு யார் அப்படி இருக்காங்க.‌.?" என்று கவலையோடு யோசித்தவளின் முன்னால் 'நீ பண்ண அத்தனை டார்ச்சரையும் தாங்கிட்டு உங்க கூட இத்தனை வருசமா வளர்ந்த என்னை நீ சாதாரணமா மிஸ் பண்ண கூடாது.. கோவில் கட்டியே கும்பிடணும்..' என்று கற்பனை உருவில் வந்து சொல்லி சென்றான் தீபக்.

அபிநயா இடம் வலமாக தலையசைத்தபடி நெற்றியில் அடித்துக் கொண்டாள். "காலேஜ் ஹாஸ்டல்ல கூட இவன் தொல்லைடா.." என்று புலம்பினாள்.

குணா விடுதி அறைக்குள் வந்ததும் அன்பு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து வந்தான்.

"குறுக்கு வழின்னு சொல்லி அந்த புள்ளைய கூட்டி போன.. ஆனா இவ்வளவு லேட்டா வர.?" என்றான் புருவம் உயர்த்தி.

குணா சொதப்பலாக சிரித்தான்.

"அப்படி இல்ல.. நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்.." என்றான் வலது கை விரலால் இடது கை விரல்களை கிள்ளிக் கொண்டே. அவனது செய்கையும் அவனது குரலும் அன்புவிற்கு விசித்திரமாக இருந்தது.

"ஏன்டா இப்படி குழையுற.?" என்றான் தன் தலையை சொறிந்தபடி.

குணா தன் பேக்கை கழட்டி ஓரம் வைத்துவிட்டு இவனருகே வந்து நெருங்கி நின்றான்.

"நண்பா.. நான் ஒரு விசயம் சொல்வேன்.. ஆனா நீ அதை யார்க்கிட்டயும் சொல்ல கூடாது.. சரியா.?" என்றான் தரையை பார்த்து உதட்டை கடித்தபடி.

அன்பு ஓரடி பின்னால் தள்ளி நின்றான்.

"நீ விசயத்தை சொல்லுவதை விட அதுக்கு தர பில்டப்தான்டா எனக்கு பயத்தை தருது.. என்ன விசயம்ன்னு அங்கேயே நின்னு சொல்லு.. நேத்து வரை கழுதை எருமை முதற்கொண்டு எல்லா பட்டபெயரையும் வச்சி கூப்பிட்டுட்டு இன்னைக்கு திடீர்ன்னு வந்து நண்பான்னு கூப்பிடுற.. எனக்கு அதுவே டவுட்டைதான் தருது.." என்றான்.

குணா அவனை முறைத்தான். இருந்தாலும் ஒரே நொடியில் முறைப்பை மாற்றிக் கொண்டான்.

"எனக்கு அந்த புள்ளைய பிடிச்சிருக்குடா.. அந்த புள்ளைய பார்த்ததுல இருந்தே மனசெல்லாம் புல்லரிக்குது.." என்றான்.

அன்பு அதிர்ச்சியோடு நெஞ்சில் கை வைத்தான்.

"அடப்பாவி.. சைல்ட் லவ்வா.?" என்றான்.

குணா அவசரமாக வந்து அவனின் வாயை பொத்தினான்.

"அதுக்கு ஏன்டா இப்படி ஏலம் போடுற.? நீ போடுற சத்தத்துல மொத்த ஹாஸ்டலும் வந்துடும் போல இருக்கு.." என்றவன் அன்பு தன் கையில் இருந்து திமிர முயற்சிப்பது கண்டு அவன் வாயை பொத்திக் கொண்டிருந்த தன் கையை பின்னால் எடுத்தான்.

"சைல்ட் லவ் இல்ல.? நான் என்ன பால் புட்டியை கீழே வைக்காம திரியறனா‌.. இல்ல அவதான் இன்னும் கட்டை விரலை சப்பிட்டு குவா குவான்னு திரியறாளா.?" என்று கடுப்போடு கேட்டான்.

அன்பு பதில் சொல்லாமல் நின்றான்.

"இன்னும் ஒரு வருசம் போனா அவளுக்கு லீகலா மேரேஜே பண்ணலாம் தெரியுமில்ல‌.?" என கேட்டான் புருவம் நெரித்து.

அன்புவிற்கு வாய் நிற்கவில்லை. "ஆனா உனக்கு.." என்று ஆரம்பித்தான். ஆனால் அதற்கு முன் குணாவே பதில் சொல்ல ஆரம்பித்தான்.

"இந்த ஓரவஞ்சனை அரசாங்கம் நமக்கு மூணு வருசம் அதிகமா வச்சிருப்பதுக்கு நான் என்ன பண்ண முடியும்.? அதுவும் இல்லாம நாங்க என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணிக்க போறோம்.? கொஞ்ச நாள் பேசுவோம். அப்புறம் பழகுவோம்.. அதுக்கப்புறம் காதலிப்போம்.. அஞ்சாறு வருசம் கழிச்சிதான் கட்டிப்போம்.. அதனால நீ எங்க லவ்வை சைல்ட் லவ்வுன்னு சொல்லாத.." என்று கடைசி வாக்கியத்தை சீறலாக சொன்னான்.

அன்பு உதட்டை கடித்தபடி சரியென தலையசைத்தான். அவனுக்கு சிரிப்பு வருவது போல இருந்தது. நண்பனின் முகத்தில் இருக்கும் அரும்பு மீசையை மட்டும் எடுத்துவிட்டு எட்டாம் வகுப்பில் கொண்டு சென்று விட்டாலும் எல்லோரும் அவனை எட்டாம் வகுப்பு மாணவன் என்றே நம்புவார்கள். ஆனால் இன்று இவனுக்குள் புதிதாக காதல் மொட்டு விட்டதை நினைக்கையில் சிரிப்பும் வியப்பும் ஒரு சேர வந்தது.

"ஓகே.. நீயும் அந்த புள்ளையும் பேசி பழகி காதலிச்சி கல்யாணம் செய்ய வாழ்த்துக்கள்.." என்றான் தன் சிரிப்பை மறைத்துக் கொண்டு.

"நீ கிண்டல் பண்றன்னு நல்லா தெரியுது.. ஆனா ஓவரா செய்யாத.. நாங்களும் லவ் பேர்ட்ஸ்தான்.‌." என்றவன் ஜன்னலின் முன்னால் இருந்த மேஜையருகே வந்தான்.

"இனி இந்த டேபிளை நான் யூஸ் பண்ணிக்கிறேன்.. நீ என் டேபிளை யூஸ் பண்ணிக்க.." என்றவன் அந்த மேஜையின் டிராயரை திறந்து பார்த்தான். கீழே கிடந்த பைனாக்குலரை கையில் எடுத்தவன் "இந்த பைனாக்குலரையும் நானே யூஸ் பண்ணிக்கிறேன்.. படிக்கிற பையன் உனக்கெதுக்கு பைனாக்குலர்.?" என கேட்டபடியே எதிரே தெரிந்த பெண்கள் விடுதியை பைனாக்குலர் மூலம் நோட்டம் விட ஆரம்பித்தான்.

அவனருகே வந்த அன்பு அவனின் தோளை பற்றி தன் பக்கம் திரும்பினான். "என் டேபிள் இது.. என் பைனாக்குலர் இது.. எதையும் நீ யூஸ் பண்ணாத.. படிக்கிற பையன் எனக்கு எப்படி பைனாக்குலர் தேவையில்லயோ அதே போலதான் உனக்கும்.. நீ என்னவோ பைனாக்குலரை வச்சி பிரபஞ்சவெளி நட்சத்திரத்தை ஆராயுற மாதிரி சீன் போடுற.." என்றான்.

அன்புவின் கையில் இருந்த பைனாக்குலரை பிடுங்கினான் குணா. "என்னடா நண்பன் நீ.. நண்பன்னா உயிரையே தருவாங்க.. நீ பைனாக்குலர் கூட தர மாட்டேங்கிற.. தினமும் சாயங்கால நேரத்துல இந்த இடத்தை நான் யூஸ் பண்ணிக்கிறேன். நீ காலையில் டைம்ல யூஸ் பண்ணிக்க.." என்றான். பைனாக்குலரை மூலம் எதிரில் இருந்த அறையை பார்க்க ஆரம்பித்தான்.

"இந்த பங்கீடே வேணாம்.. நீ என் பைனாக்குலரை கொடு.." என்று பிடுங்க முயற்சித்த அன்புவின் கையை தள்ளி விட்டான் குணா.

"நீ என்னை விரட்டினா அப்புறம் நீ பைனாக்குலரை யூஸ் பண்ணி லேடிஸ் ஹாஸ்டலை நோட்டம் விடுறன்னு வார்டன்கிட்ட போட்டு தந்துடுவேன்.. அதனால கொஞ்ச நேரம் அமைதியா இரு.." பைனாகுலரை விட்டு பார்வையை எடுக்காமலேயே சொன்னான் குணா.

அன்பு பற்களை கடித்தான். தன்னையே மிரட்டுகிறானே என்று நண்பன் மீது கோபமாக வந்தது அவனுக்கு.

மீனா தன் அண்ணனோடு ஃபோன் பேசி முடித்து விட்டு வந்தாள். ஃபோனை அபிநயாவிடம் நீட்டினாள். "தேங்க்ஸ்.." என்றாள்.

"உனக்கு எப்ப வேணாலும் என் ஃபோனை எடுத்து பேசிக்கோ.." என்று புன்னகையோடு சொன்னாள் அபிநயா. மீனா சரியென தலையசைத்தாள்.

"குட்டச்சிக்கிட்ட கூட ஃபோன் இருக்கு.." என்று வெம்பி போய் சொன்னான் குணா. அன்பு அவனை புரியாமல் பார்த்தான்.

"வினோத் மாமா கூட அந்த புள்ளைக்கு ஆன்ட்ராய்ட் ஃபோன் வாங்கி தந்திருக்காரு. ஆனா எங்க அப்பா எனக்கு சாதாரண பட்டன் செல்லு கூட வாங்கி தரலையே.." என்றான் சோகமாக‌.

அன்பு அவனிடம் இருந்த பைனாக்குலரை பிடுங்கினான். அபிநயாவின் அறையை பார்த்தான். அபிநயா ஃபோனை கையில் பிடித்தபடி மீனாவோடு உரையாடிக் கொண்டிருந்தாள். அன்பு நரநரவென்று பற்களை கடித்தான்.

"இவ படிக்கதானே வந்திருக்கா.. இவளுக்கு எதுக்கு ஃபோன்.? நான் போய் இப்பவே அவங்க ஹாஸ்டல் வார்டன்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிட்டு வரேன்.." என்றவன் பைனாக்குலரை கட்டில் மீது எறிந்துவிட்டு வெளியே கிளம்பினான். குணா சட்டென்று அவனை பிடித்து நிறுத்தினான்.

"மெண்டலா நீ.? என்னன்னு போய் சொல்வ.? நாங்க திருட்டுத்தனமா அவங்க ரூமை வாட்ச் பண்ணோம்.. அப்ப அவ கையில ஃபோன் இருந்ததை பார்த்தோம். அதனால கம்ப்ளைண்ட் பண்ண வந்திருக்கோம்ன்னு சொல்வியா.?" என்று கேட்டான்.

குணாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் அன்பு. ஆனாலும் அபிநயா கையில் இருந்த ஃபோன் அவனை உறுத்தியது.

'எதுக்கு அவளுக்கு போன்.? யாரையாவது லவ் பண்றாளா.? லவ் பண்றவங்கதானே ஃபோன் வச்சிருப்பாங்க..!?' என்று யோசித்தான் அவன்.

மேஜையின் மீது ஏறி அமர்ந்து பைனாக்குலர் வழியாக எதிரே பார்க்க ஆரம்பித்தவன் அன்றைய நாள் இரவு வரையிலும் கூட நகரவேயில்லை.

குணா நெற்றியில் அடித்துக் கொண்டான். 'நான் என் ஆளை பார்க்கலாம்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா இவன் அந்த இடத்தையே பட்டா போட்டுட்டான்.‌.' என்று வருத்தப்பட்டான்.

அன்று இரவு உணவு உண்ண வரவும் மறுத்து விட்டான் அன்பு.

"டேய் மெண்டல்.. இப்ப நீ சோறு திங்க வரலன்னா நான் வினோத் மாமாவுக்கு ஃபோன் பண்ணி நீ அவரு பொண்ணை ரகசியமா வாட்ச் பண்றதா போட்டு தந்துடுவேன்.." என்று மிரட்டி அழைத்து போனான்.

அன்று இரவு பேய் பயத்தில் அபிநயா தன் அறையின் ஜன்னலை சாத்தும் வரையிலும் அதே இடத்தில்தான் அமர்ந்திருந்தான் அன்பு. அவனருகே காவலன் போல நின்றிருந்த குணா "அவங்களே ஜன்னலை சாத்திட்டாங்க.. வாடா போய் தூங்கலாம்.." என்று சொல்லி இழுத்து வந்து அவனை கட்டிலில் தள்ளினான்.

அன்று இரவு அன்புவின் கனவெல்லாம் அபிநயாவே வந்தாள். அவள் தன் போனில் எவனோ ஒருவனுக்கு காதல் வசனம் டைப் அடித்து மெஸேஜாக அனுப்பிக் கொண்டிருக்கும் காட்சியே அவனின் கனவை விடாமல் துரத்தியது. ஆபத்து காலத்திற்கு உதவும் என்று அவள் கைபேசியை வைத்திருந்தாள். ஆனால் அதுவே இவனுக்கு ஆபத்தை போல தோன்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1304

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN