முகவரி 22

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காரின் ஒலி பெருக்கியை சீற்றத்தோடு அத்தனை முறை எழுப்பியவன்... மனைவி காரினுள் வந்து அமர்ந்ததும் அவளிடம் கேட்ட முதல் கேள்வி “ஏதாவது சாப்பிட்டாயா?” என்பதாகத் தான் இருந்தது.

அவளின் “உண்டேன்” என்ற பதிலுக்குப் பின்... இருவருக்குள்ளும் வேறு பேச்சு இல்லாமல் போக, மருத்துவமனை வந்தவர்கள் மகளைக் காண... அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்.
“நீ இங்கேயே இரு ஷிதா... நான் போய் டாக்டரைப் பார்த்து பேசிட்டு வரேன்...” என்று மிருடன் நகர…

“நானும் வரேன்...”

மனைவியை நிமிர்ந்து பார்த்தவன்... அவளின் தவிப்பை புரிந்து கொண்டு பின் தன்னுடனே அவளை அழைத்துச் செல்ல, இவன் மகளின் உடல்நிலை பற்றி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மருத்துவர் நல்ல விதமாகவே பதில் தர, அதில் அப்போது தான் அவனுக்குள் இருந்த டென்ஷன் குறைந்தது. பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு மகள் அறைக்கு வந்தவன்...

அவள் எப்போது கண் விழிப்பாள் என்ற ஏக்கத்தில் இவன் அவள் முகம் பார்த்து மகளின் பக்கத்திலேயே அமர்ந்து தவமிருக்க... அவளோ கண் விழித்த பாடு இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தவன் மகள் கையைப் பிடித்து தன் இரு கைகளுக்குள்ளும் பொத்தி வைத்தவன்… அவள் விரல்களுக்கு முத்தமிட்டு,

“பேபி… நான் ஐந்து வருஷமா உன்னை வந்து பார்க்கலன்னு... இந்த அப்பா மேல் உள்ள கோபத்தில் இங்கே வந்து படுத்திட்டியா தங்கம்...” இவன் மகளிடம் பரிதாபமாய் கேட்க

அனுவுக்கே கணவனைக் காண பாவமாக இருந்தது. சற்று நேரத்திற்கு எல்லாம் மகள் கண் விழிக்க, முதலில் தாயைக் கண்டதும்,

“அம்மா!” என்றவள் பின் தன் கை பொத்தி அமர்ந்திருக்கும் மிருடனைக் கண்டு, “friend...” என்று அவள் அழைக்க வந்த நேரம்

“அப்பா சொல்லு டா..” என்று அனுவும்

“நான் அப்பா டா...” என்று மிருடனும் ஒரு சேர மகளுக்கு சொல்லிக் கொடுக்க... மனைவியின் சொல்லில் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தவன் பின் மகளிடம் திரும்ப… முதலில்,

“அப்பா வா...” என்று கேட்டவள்… பின்னே, “ப்பா....” என்று அடுத்த கணமே பாசமாக அவனை அழைத்தது அந்த சின்ன வாண்டு. இத்தனை வருடம் தந்தையின் பாசத்திற்காக அவள் எவ்வளவு ஏங்கியிருக்கிறாள் என்பது அவள் அழைத்த அந்த ஒற்றை வார்த்தையில் இருவருக்கும் புரிந்தது. அந்த ஏக்கமே அவன் தான் தந்தை என்று தெரிந்ததும் அவளை ஏற்றுக்கொள்ளவும் வைத்தது

அந்த சந்தோஷத்தில் இவன், “என் தங்க பாப்பா....” என்று நெகிழ்ச்சியுடன் மகளின் கையைப் பிடித்துக் கொண்டவனின் கண் கலங்கியது.

“ஏன் ப்பா இத்தனை நாள் என்னைப் பார்க்க வரல?” உதட்டைப் பிதுக்கிய படி அவனிடம் மகள் காரணம் கேட்க, ஒரு வினாடி திணறியவன் பின் சமாளித்து

“அப்பா வெளியூரில் இருந்தேன் பட்டு.. அதான் இத்தனை நாள் உன்னைப் பார்க்க வரல டி தங்கம்” என்று சமாதானம் சொல்ல…

“அப்படியா… அப்ப திரும்பி நீ ஊருக்குப் போய்டுவியா?” என்று வெம்ப…

“இல்லை டா என் ராசாத்தி.. இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் தங்கம்” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிடவும்

“அப்போ ஏன் friend னு சொன்ன…” மகள் கேள்வி கேட்கவும்

“அது..” என்று தயங்கியவன்… “நான் என்றைக்கும் உனக்கு நல்ல friend அ இருப்பேன் டா … நீ என்னை friend.. இல்ல அப்பா.. எப்படி வேணா கூப்பிடு தங்கம்?” தன்னுடைய மகள் தன்னை எப்படி அழைத்தாலும் தனக்கு விருப்பம் என்ற நிலையில் மிருடன் இருக்க

மானுவோ மறு நொடி “எனக்கு அப்பா தான் பிடிக்கும்…” என்று சொல்ல…

மகளின் பாசத்தில் இவனுக்கோ விழிகளில் கண்ணீர் உருண்டோட, இதைக் கண்ட அனுவின் கண்களிலும் கண்ணீர் உதித்தது.

தாயின் கண்ணீரைக் காணாத மானு... தந்தையின் கண்ணீரை மட்டும் கண்டு கொண்டவள், “உனக்கும் இங்கே வலிக்குதா ப்பா?” என்று அன்று அவன் நெற்றியில் பந்து பட்ட இடத்தைத் தொட்டுக் காட்டி இவள் கேட்க

“என் அம்மா...” என்ற சொல்லுடன் மகளைத் தூக்கி அணைத்துக் கொண்டான் மிருடன்.

கணவன் எப்போதும் சொல்லும் தன் தாயே மகளாக வந்து பிறக்கப் போவதை... இன்று நிஜத்தில் அனு கண்டு கொண்டவள்... இந்த ஐந்து வருடம் இந்த தாய் மகனைப் பிரித்தோமே என்று அவள் வருந்த…

மான்வியின் தலையில் பெரிய கட்டு இல்லை என்றாலும் சிறியதாய் இருந்த கட்டு தந்தையின் செயலில் அவளுக்கு வலித்து விட, “ஆ... ப்பா... வலிக்குது...” குழந்தை வலியில் முனங்க,

“சாரி... சாரி... சாரி டா... பேபி...” மிருடன் உருக

அந்நேரம், “பரவாயில்லையே... என் தம்பியைக் கூட சாரி கேட்க வைச்சிட்டா... அப்போ என் மருமக கெட்டிக்காரி தான்...” என்றபடி உள்ளே நுழைந்தாள் வெண்பா அவள் கணவனுடன்.

“அக்கா...” என்று மிருடன் பல்லைக் கடிக்க,

“அத்த...” என்று பாசமாய் அவளை அழைத்து மான்வி சிரிக்க...

“என் தங்கம்… என்ன டா இப்படி வந்து படுத்திட்ட... உன் அப்பனையே பயமுறுத்திடியே!” என்றவள்… தன் தம்பியைத் தள்ளி விட்டுட்டு உரிமையாய் மான்வி பக்கத்தில் அமர்ந்தவள், “வண்டியில எப்படிடா இடிச்சி கிட்ட தங்கம்?” என்று இவள் விசாரிக்க

“அதுவா?” என்று யோசித்த சின்ன வாண்டு... “நம்ம குட்டி பைரவா இருக்கான் இல்ல... {அவள் வீட்டில் இருக்கும் இரு நாய்களில் ஒன்று குட்டி போட்டிருக்க, அதன் குட்டியைத் தான் இவள் சொல்கிறாள்} அவனும் நானும் விளையாடினோமா... அப்போ அவன் வெளியே ஓடினானா... அவனப் பிடிக்க நானும் ஓடினனா.... அப்போ ஒரு வண்டி வந்து டொம்னு தள்ளி விட்டுச்சு அத்த... மானு பாப்பா பாவம் தானே?” ரொம்ப சிரமமாகவும் இல்லாமல் அதற்காக சரளமாகவும் இல்லாமல் இவள் திக்கித் திணறி தான் அடி பட்ட கதையைச் சொல்ல

“என் தங்கம்...” மருமகளுக்கு திருஷ்டி கழித்தவள்... “நீ உன் அப்பா, அம்மா மாதிரி அழுத்தமா இல்லாமல் இந்த அத்தை மாதிரி இருக்கீயே டா தங்கம்...” அவள் இன்னும் சின்னவளை சிலாகிக்க....

அனுவின் முகம் வாடியது என்றால் மிருடனுக்கோ கோபம் ஏறியது. ஏற்கனவே மகளிடமிருந்து தன்னைப் பிரித்ததில் கோபத்தில் இருந்தவன் இப்போது ‘உர்’ என்று முகத்தை வைத்திருக்க, அதைக் கண்ட கஜேந்திரன்… மிருடனிடம் நெருங்கியவர்,

“மாப்பிள்ளை... உன் அக்கா உனக்கு மேலே கோபத்தில் இருக்கா. எதையாவது பேசி என்னை உங்க இருவருக்கும் நடுவில் மத்தளமா மாற்றி... வாங்கிக் கட்டிக்க வச்சிடாத...” என்று கெஞ்ச

“முதலில் அக்காவைக் கூட்டிட்டு ஊருக்கு கிளம்புங்க அத்தான். என்னை என் பொண்ணு கிட்ட நெருங்கவே விட மாட்டுது...” இவன் சன்னமாய் சொல்ல

“ஆனாலும் உனக்கு இவ்வளவு தில்லு ஆகாது மாப்பிள்ளை. ஐந்து வருஷமா பொண்டாட்டி பிள்ளையை மறைத்து வைச்சிட்டு இப்போ வாய்க்கு வாய் என் பொண்ணுன்னு சொல்ற பார்த்தீயா... அதுவும் உன் அக்கா கிட்டவே!” அவர் அவனை நேர காலம் தெரியாமல் வார

“நான் என்றைக்குமே என் மனைவி மகளை மறைக்கணும்னு நினைத்தது இல்லை அத்தான்.... ஆனா இது வேற...” மறுபடியும் அவன் சன்னமாக பதில் தர

“ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் இங்கே கூட்டம் போடாதீங்க. சார்.... கொஞ்சம் வெளியே இருங்க...” உள்ளே வந்த நர்ஸ் சொல்ல...

மாமனும் மச்சானும் வெளியே செல்ல எத்தனிக்க... அப்போது நர்சைப் பார்த்ததும் மான்வி, “அத்த… ஊசி வேணாம்… பாப்பாவுக்கு வலிக்கும்...” என்றபடி அவள் உதட்டைப் பிதுக்க

உடனே வெளியே செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொண்ட மிருடன், மகளிடம் வந்தவன்… “நர்ஸ் எதற்கு இன்ஜெக்ஷன் போடறீங்க? சிரப்... டேப்லட் மாதிரி ஏதாவது குழந்தைக்கு கொடுங்க” இவன் அதிகாரம் செய்ய

“சார்... டாக்டர் ஊசி தான் சொல்லி இருக்கார். உங்க இஷ்டத்துக்கு மாற்ற முடியாது” நர்ஸ் விளக்க

“அதெல்லாம் முடியாது… என் மகளுக்குப் பிடிக்காத எதையும் நீங்க செய்ய வேண்டாம். நான் டாக்டர் கிட்ட பேசுறேன். இப்போ டேப்லட் கொடுங்க” இவன் சீறிப் பாய

“சார், அப்படி எல்லாம் செய்ய முடியாது. மேடம், நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க. என் வேலையை செய்ய விடச் சொல்லுங்க...” நர்ஸ், வெண்பாவிடம் பஞ்சாயத்திற்கு செல்ல

“டேய் மிருடா, உன் அக்கப் போருக்கு அளவே இல்லையா? குழந்தைக்கு ஊசி தான் போடணும்னா விடேன் டா...”

அத்தையின் பேச்சில் மான்வி... “ப்பா... ஊசி வேணாம்” என்று தந்தையிடம் கெஞ்ச

“நர்ஸ், சொல்றேன் இல்ல… புரியல? நீங்க இப்பவே உங்க டாக்டரை வரச் சொல்லுங்க நான் பேசிக்கிறேன். என் மகளுக்கு வலியைக் கொடுக்கிற எந்த விஷயமும் அவளை நெருங்கக் கூடாது....” இவன் கட்டளை இட

வெண்பாவுக்கு சுருசுருவென்று ஏற… ‘என்ன அதிகாரம்?’ என்று நினைத்தவள், “ஆமா டா… நீ ஊரில் உள்ள பொண்ணுங்க எல்லோரையும் கொடுமைப் படுத்துவ... அதே உன் மகளுக்கு வந்தா மட்டும் வலி! அப்படி தானே?” இடம் பொருள் இல்லாமல் அவள் வார்த்தையை விட

“அக்கா...” என்று அதட்டியவன், “நர்ஸ், வெளியே போங்க” என்று நர்ஸை வெளியே விரட்டியவன், “எந்த இடத்தில் யாரை வச்சிகிட்டு எப்படி எதைப் பேசணும்னு உனக்கு தெரியாதா அக்கா?” என்று சீறியவன்

பின் மனைவி புறம் திரும்பி, “எல்லாம் உன்னால் தான் டி... உன் பிடிவாதத்தால் தான்! அன்று நான் பெண்களை சீரழிக்க துடிக்கற பொறுக்கின்னு பேர் எடுத்தேன். இன்று… ராட்சஸன், கொடுமைக்காரன் etc etc… நல்லா காது குளிர கேட்டுக்கோ டி....” என்று அவளிடம் பாய்ந்தவன்,

“அத்தான்... அக்காவைக் கூட்டிட்டு ஊருக்குப் போங்க... நான் இங்கே பார்த்துக்கிறேன்” என்று அவன் இறுதியாகத் தன் அத்தானிடம் வந்து முடிக்க

அதற்கும் கோபம் எழ… வெண்பா, “என்ன டா... இப்போ இது உன் குடும்பம்னு பிரித்துப் பேசுற? இதுவரை அக்கா வேணும்… இனி நான் வேண்டாம். அப்படி தானே? சரி டா.. உன் குடும்பத்தில் எனக்கு என்ன வேலை? நான் கிளம்பறேன்... இவனை ஒரு வார்த்தை கேட்கக் கூடாதாம்… என்னமா ரோஷம் வருது!” என்று தம்பிக்கு மேல் சீறியவள்

“இன்னும் ஏன் இங்கேயே நின்றுகிட்டு இருக்கீங்க? அவன் சொன்னது காதில் விழலையா? வாங்க, இப்பவே ஊருக்கு கிளம்பலாம்” என்று கணவனுக்கு கட்டளை இட்டதோடு யாரையும் பார்க்காமல் வெண்பா வெளியேற...

“ஊப்ப்...” ஏதோ புயலில் சிக்கி தப்பித்தது போல் ஆசுவாசமாய் தன் மூச்சை வெளியிட்டான் மிருடன்.

அனுவோ இதில் யாரையும் தடுக்க முடியாமல் பாவமாய் நிற்க... அதைப் பார்த்த கஜேந்திரன் அவளிடம் வந்தவர், “அவ பேசினதை பெருசா எடுத்துக்காதேம்மா... அக்கா தம்பி சண்டையை நான் இவனுக்கு அத்தானா பதவி ஏற்ற காலத்திலிருந்து பார்த்திட்டு வரேன்... எனக்கு பழகிடுச்சு. உனக்கும் கூடிய சீக்கிரம் பழகிடும்... மான்வி வீட்டுக்கு வந்ததும் உண்மையாகவே நாங்க நாளைக்கு ஊருக்குப் போறதா இருந்தோம். என் சித்தி பொண்ணுக்கு... அதாவது என் தங்கைக்கு வளைகாப்பு சேலத்தில் அதற்கு போகிறோம்... அதைத் தான் இன்றே கிளம்புங்கனு சொல்லிட்டுப் போறா. போய்ட்டு நாங்க சீக்கிரமே வந்திடுவோம். நீ பாப்பாவை பார்த்துக்க” அவர் இதமாய் எடுத்துச் சொல்ல

அவள் “சரிங்க...” என்று தலை அசைக்கவும்

“அண்ணான்னு சொல்லு மா” இவர் எடுத்துக் கொடுக்க

அந்த வார்த்தை இவள் மனதிற்கு இதமாய் இருக்க, “சரிங்கண்ணா.... நான் மானுவைப் பார்த்துக்கிறேன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்க” இவள் அன்பாய் சொல்ல

“அத்தான்... ஜீவாவை இங்கேயே விட்டுட்டுப் போங்க” இடை புகுந்தது மிருடனின் குரல்.

“அவன் எதுக்கு மாப்பிள்ளை?” இவர் சாதரணமாய் கேட்க

“அவனும் என் மகன் தான் அத்தான்” இவன் இடக்காய் பதில் தர

“ஸ்ஸ்ஸ்.... ஷப்பா... முடியலடா.... அவன் உன் மகன் தான். யாரு இல்லைன்னு சொன்னா? மான்வியை இப்படி வைச்சிகிட்டு அனு தனியா எப்படி சமாளிக்கும்?” என்றவரிடம்

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீங்க விட்டுட்டுப் போங்க. என் குடும்பத்தை விட்டு நான் பிரிந்து இருந்தது போதும்” இவன் உறுதியாய் சொல்ல

“நாங்களாடா உன்னைக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க சொன்னோம்?” என்றவர் மிருடன் பார்த்த பார்வையில்,

“நீ சொல்லு அனு... ஜீவாவை விட்டுப் போனா உன்னால் இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியுமா?” என்று கேள்வியை அனுவிடம் வைக்க

“அண்ணா... அந்தக் குழந்தை என்னை அப்படியா படுத்தி எடுக்கப் போறான்? நான் பார்த்துக்கிறேன். அதுவும் இல்லாமல் பார்வதி ஆன்ட்டி இருக்காங்க... சமாளிச்சிடுவேன் ணா....” அவளின் பதிலில்

“சரி ம்மா... அப்போ இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கோ... நாங்க போயிட்டு வரோம்” கஜேந்திரன் விடை பெற

“அத்தான்... சொல்றது தான் சொல்றீங்க... அப்படியே அந்த குழந்தைகளோட அப்பனையும் பார்த்துக்க சொல்லிட்டுப் போங்க. இல்லைன்னா என் பொண்டாட்டி எனக்கு சோறு போட மாட்டா!” மிருடன் படு சீரியசாய் சொல்ல

“உனக்கு எல்லாம் சோறு மட்டும் போடாம விடக் கூடாது மாப்ள... தோசை திருப்பியாலே நாலு அடியும் போடச் சொல்லணும். அதையும் செய்திடு தங்கச்சி....” என்றபடி அவர் விலக

இவளோ கணவனை முறைக்க… அவனோ இவ்வளவு கலவரத்திலும் வாய் பேச்சு பேச்சோட இருக்க, அவன் கைகளோ... மகளுக்கு வாங்கி வந்த ஜூஸைப் பிரித்து அவள் குடிக்க எதுவாக அதைப் பிடித்துக் கொண்டிருந்தது.

மான்வி குடித்து முடித்ததும் அசதியில் தூங்கி விட... மகளின் படுக்கையைச் சரி செய்தவன்... இன்னமும் முறைத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, “என்ன டி?” என்று இவன் ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்க

இவளோ, “ஒன்றும் இல்லை” என்ற படி முகத்தைத் திருப்ப

அதில், “ஏதாவது இருந்தா மட்டும் உன்னால் என்ன டி செய்திட முடியும்?” என்று இவன் சவாலாய் கேட்க, கணவனுக்குப் பதில் கொடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போனாள் அனு.
 
இவன் அடங்கவே maataan ah என்ன வாய்.. Ivanuku எல்லாம் பேச்சி மட்டும் இல்லனா ஒருத்தனும் மதிக்க maataan..... Venba avanuku mela pesuraanga 😊 😊 😊 😊..... Chinna kutty அப்பா vu kaaga avvallavu ஏங்கி இருக்கா... Avaluku avvallavu santhosham... Super Super maa... Semma episode... How is your health maa
 
V

Vasumathi

Guest
Wowwww😍😍😍அப்பா பாசம் கடவுள் குடுத்த வரம்😘மிருடன்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இவன் அடங்கவே maataan ah என்ன வாய்.. Ivanuku எல்லாம் பேச்சி மட்டும் இல்லனா ஒருத்தனும் மதிக்க maataan..... Venba avanuku mela pesuraanga 😊 😊 😊 😊..... Chinna kutty அப்பா vu kaaga avvallavu ஏங்கி இருக்கா... Avaluku avvallavu santhosham... Super Super maa... Semma episode... How is your health maa
இப்போ.. fever இல்லைங்க சிஸ்... தினமும் ஒரு ஊசினு... 4 days ஊசி போட்டுகிடன்... என்ன ரொம்ப டயர்டா இருக்கு சிஸ்... மற்றபடி normal sis😘😘😘😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN